கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்

வ.ரங்காசாரி
17 Nov 2023, 5:00 am
0

முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முக்கிய நாயகர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. தினம் ஒரு தலைவரைப் பற்றி அடுத்த ஒரு வாரத்துக்கு எழுதுகிறார் மூத்த பத்திரிகையாளர் வ.ரங்காசாரி.

ந்திய அரசியல் வானில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்து அதைத் தக்கவைத்துக்கொண்ட சிலரில் முக்கியமான ஒருவர் கே.சந்திரசேகர ராவ் (கேசிஆர்). தெலங்கானாவை ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதியின் (பழைய பெயர் – தெலங்கானா ராஷ்ட்ர சமிதி) தலைவர். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் பிரதமர் பதவி தன்னை நோக்கியும் வரக்கூடும் என்ற கணக்கில் இருப்பவர்.

ஹைதராபாத் பிராந்தியத்தின் சிந்தமாடக கிராமத்தில் ராகவ ராவ் – வேங்கடம்மா இணையருக்கு மகனாக 17.02.1954இல் பிறந்தார் கேசிஆர். இவர் சார்ந்த பத்மநாயக வெலமா சமூகமானது, எண்ணிக்கைரீதியாக சிறுபான்மையானது என்றாலும், நிலவுடைமைச் செல்வாக்கு கொண்ட முற்பட்ட சாதிகளில் ஒன்று. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, உருது என நான்கு மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர் கேசிஆர்.

காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளிலும் இருந்திருக்கிறார். தனித் தெலங்கானா கோரி தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன் தனிக் கட்சியைத் தொடங்கியதால் மக்களுடைய ஆதரவைப் பெற்று 2014 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வலுவுடன் ஆள்கிறார்.

காங்கிரஸில் தொடக்கம்

இளைஞராக காங்கிரஸில்தான் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் கேசிஆர். என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்த பிறகு 1983இல் அதில் சேர்ந்தார். சட்டமன்றத்துக்குச் செல்லும் முதல் தேர்தல் தோல்வி என்றாலும், பிறகு நான்கு முறை அடுத்தடுத்து வென்றார். 1987-88இல் என்டிஆர். அரசில் வறட்சி, நிவாரணத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

என்டிஆர் வசமிருந்த கட்சி சந்திரபாபு நாயுடு வசம் வந்த பிறகு, அவரால் நம்பிக்கைக்குரிய ஒருவராகப் பார்க்கப்பட்டவர் கேசிஆர். 1990இல் மேடக், நிஜாமாபாத், அடிலாபாத் மாவட்டங்களுக்கான தெலுங்கு தேசம் கட்சியின் அமைப்பாளராக கேசிஆரை நியமித்தார் சந்திரபாபு நாயுடு.

இன்றைய தெலங்கானா மாநிலத்துக்குள் பின்னாளில் வந்துவிட்ட இந்தப் பகுதியில் கட்சிக்காரர்களுடனும் மக்களுடனும் நெருக்கமாகப் பழகி, பணியாற்றிய காலகட்டம்தான் கேசிஆர் ‘தெலங்கானா’ எனும் பண்பாட்டு அடையாளம் மக்கள் மத்தியில் இன்னமும் எவ்வளவு உயிர்ப்பாக இருக்கிறது என்று உணர உதவியது.

சந்திரபாபு நாயுடு 1996இல் ஆட்சி அமைத்தபோது அந்த அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சரானார் கேசிஆர். 2000-2001இல் ஆந்திர சட்டமன்றத் துணை சபாநாயகர் பதவியை வகித்தார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஈர்த்தது தெலங்கானா

ஆந்திரத் தலைநகராக அன்று இருந்த ஹைதராபாத்தைச் சுற்றி இருந்த தெலங்கானா பிராந்தியம் தனக்கென்று பிரத்யேகமான பண்பாட்டைக் கொண்டிருந்தது. தவிர, ஒன்றுபட்ட ஆந்திராவுக்குள் புறக்கணிக்கப்படும் பகுதியாக இருந்தது. மாநிலத்தின் வருவாயில் பெரும் பகுதியைத் தந்தும் இங்குள்ள மக்கள் அதற்கேற்ற பலன்களைப் பெற முடியவில்லை.

அரசியல்ரீதியாகவும் அதிகார வர்க்கத்திலும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தெலுங்கு மொழியின் பெயரால் இந்த ஆதிக்கத்தை எல்லாம் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை எனும் உணர்வு இந்தப் பகுதி மக்கள் மத்தியில் கனன்றுகொண்டிருந்தது.

தெலங்கானா போராட்டங்கள் மெல்லத் தீப்பற்றலான காலகட்டத்தில் தனி மாநிலமாக அது உருவெடுத்துத் தீருவது காலக் கட்டாயம் என்று எண்ணினார் சந்திரசேகர ராவ். ஆனால், ஆந்திராவின் அன்றைய பிரதான கட்சிகளான  காங்கிரஸும் தெலுங்கு தேசமும் ஆந்திரப் பிரிவை விரும்பவில்லை. தெலங்கானாவுக்கு என்று தனி அரசியல் இயக்கம் கண்டாலே தவிர இவர்கள் அதற்கான வேலைகளில் இறங்க அனுமதிக்க மாட்டார்கள் என்றுணர்ந்த அவர் துணை சபாநாயகர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகியதோடு, 2001 ஏப்ரலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். ‘தெலங்கானா தனி மாநிலம்’ அதன் மைய லட்சியம் ஆயிற்று.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி

வ.ரங்காசாரி 16 Nov 2023

தேர்தல் ஏற்ற இறக்கங்கள்

உத்வேகமான போராட்டங்களில் பங்கெடுத்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 2004 தேர்தல்களில் காங்கிரஸோடு இணைந்து போட்டியிட்டது. சட்டமன்றத்தில் 26 இடங்களையும் மக்களவையில் 6 இடங்களையும் பெற்றது. தனி மாநிலம் உருவாக்கப்படும் என்று அப்போது வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ். ஐமுகூ ஆட்சி அமைந்தபோது, அதில் அமைச்சராக இணைந்தார் கேசிஆர். சேர்ந்துகொண்டார்.

தெலங்கானா உருவாக்கத்தில் காங்கிரஸ் காலத்தை இழுத்தடித்தபோது, கூட்டணியிலிருந்து விலகினார் கேசிஆர்; மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார். அடுத்து வந்த இடைத்தேர்தலில் அவர் வென்றார் என்றாலும், இதோடு வந்த தேர்தல்களில் முந்தைய வெற்றியைக் கட்சியால் பெற முடியவில்லை. பாஜகவோடும் தெலுங்கு தேசத்தோடும் அவர் அமைத்த கூட்டணிகள் பெரும் பலனைத் தரவில்லை.

தெலங்கானா மாநில அறிவிப்பு கோரி 2009 நவம்பரில் கேசிஆர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தபோது அந்தப் பிராந்தியமே கொந்தளிப்பில் ஆழ்ந்தது. 11வது நாள் தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தது மன்மோகன் சிங் அரசு. ஆயினும் காரியம் இழுத்தது. போராட்டங்கள் தொடர்ந்தன. ஒருவழியாக 2013இல் தெலங்கானா உருவாக்கம் நிகழ்ந்தது.

2014 தேர்தலில் தனி மாநிலம் அமைந்த தெம்போடு மக்களைச் சந்தித்தார் கேசிஆர். கடும் உழைப்பு. ஒருநாளைக்கு 10 கூட்டங்கள் வரை பேசுவார்; ஏனென்றால், அப்போதெல்லாம் அவருடைய கட்சியில் அவர் மட்டுமே நட்சத்திரப் பேச்சாளர். தெலங்கானாவின் 17 மக்களவைத் தொகுதிகளில் 11; 119 சட்டமன்றத் தொகுதிகளில் 63 கேசிஆர் கட்சியின் கைகளுக்கு வந்தது. தெலங்கானாவின் முதல் முதல்வராக 2014இல் பதவியேற்றார்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தெலங்கானாவில் முன்னகரும் காங்கிரஸ்

ஆசிம் அலி 03 Nov 2023

தனக்கென்று ஒரு பாதை

மாநிலங்களுக்கான உறுதியான குரல் என்று கேசிஆரைக் குறிப்பிடலாம். சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர். அதேசமயம், கடவுள் பக்தி மிக்கவர். ஜோதிடத்தில் அவருக்குப் பெரும் நம்பிக்கை உண்டு. அவருடைய அதிருஷ்ட எண் 6 வரும் வகையில், எல்லாவற்றையும் தீர்மானிப்பார். மக்களுடைய மனங்களைக் கணிப்பதில் வல்லவர்.

பதவிக்காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன என்றபோதிலும், உடனே தேர்தல் நடந்தால் வெற்றி நிச்சயம் என்று கணித்து, 2018 செப்டம்பரில் மாநிலப் பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்து இரண்டாம் முறையாகவும் பெரும்பான்மை வலிமையுடன் மீண்டும் முதல்வரானார்.

சமூக நல்வாழ்வுத் திட்டங்கள்

மாநிலத்தின் கிராமப் பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு பல திட்டங்களை அமல்படுத்தினார். அவர் நடத்திய ‘சமாக்ர குடும்பக் கணக்கெடுப்பு’ (எஸ்கேஎஸ்) இந்திய அரசியலில் அதுவரை கேள்விப்பட்டிராத நிகழ்வாகும். ‘ஒரே நாளில்’ (மாநிலத்தின் 1.14 கோடி குடும்பங்களிடமிருந்தும் 94 அம்சங்கள் தொடர்பாக கேள்வி கேட்டு, பதில் பெற்று ஆவணங்களாக்கினார். நல உதவிகளைத் திட்டமிடவும் வழங்கவும் இது பயன்படுகிறது. மாநில விவசாய நிலங்களை முழுக்க அளந்து பதிவேற்ற வைத்தார். விவசாய நிலங்களை சர்வே செய்யவும் பட்டா வழங்கவும் பாசன வசதிகளைத் தீர்மானிக்கவும் பயிர் காப்பீடு, மானிய உதவி போன்றவற்றை வழங்கவும் இந்தப் பதிவு பயன்படுகிறது.

ஆரோக்ய லட்சுமி திட்டம் மூலம் மாநிலத்தின் 35,000 அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அன்றாடம் ஒரு வேளை சத்துள்ள முழு உணவு வழங்கப்படுகிறது. இது பசியிலிருந்தும் நோயிலிருந்தும் அவர்களைக் காக்கிறது. கல்யாண லட்சுமி திட்டம் இந்துக்களுக்கும் ஷாதி முபாரக் திட்டம் முஸ்லிம் பெண்களுக்கும் அமலாகிறது. இதன்படி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடைய திருமணத்துக்கு ரூ.1,00,116 தரப்படுகிறது. ரபி, காரிஃப் என்ற இரண்டு பருவங்களின்போதும் விவசாயிகளுக்கு ரயது பந்து திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஆண்டுக்கு ரூ.10,000 தரப்படுகிறது.  2021இல் தொடங்கப்பட்ட ‘தலித் பந்து திட்ட’மும் ஒரு முன்னோடியான திட்டம். தலித்துகள் சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்க ஒரு முறை மானியமாக ரூ.10 லட்சம் இத்திட்டத்தின் கீழ் தரப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியிலும் தெலங்கானாவை முன்னகர்த்தினார். நீர் பாசனத் துறை தொடங்கி தகவல் தொழில்நுட்பத் துறை வரை புதிய மாநிலத்தின் செயல்பாடுகளில் கனவுகள் வெளிப்பட்டன. தெலங்கானாவில் தன்னை வேறு எந்தக் கட்சியாலும் வெல்ல முடியாது என்ற நிலையில், அடுத்தகட்டமாக தேசிய அரசியல் நோக்கி நகர முற்பட்டார். பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்க (ஃபெடரல் ஃபிரன்ட்) முயன்றார். ஆனால், தொடர் ஆட்சி மக்களிடம் உண்டாக்கும் அயர்வு இன்று மாநிலத்திலேயே அவருக்கு எதிரான அலைக்கு வழிவகுத்திருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்

ப.சிதம்பரம் 16 Oct 2023

சூழும் அதிருப்திகள்

கேசிஆருடைய மகன், மகள், இன்னொரு உறவுக்காரர் என்று மூவருடைய அதிகாரம் கட்சியிலும் ஆட்சியிலும் கோலோச்சுகிறது. மகன் கே.டி.ராமராவ் சிர்சில்லா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், மாநில தகவல் தொழில்நுட்பம், நகர்ப்புற வளர்ச்சி, நகர மன்ற நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கிறார். மகள் கவிதா சட்ட மேலவை உறுப்பினர். கேசிஆரின் உறவினர் ஹரீஷ் ராவ் மாநில நிதியமைச்சர். எதிர்க்கட்சிகள் குடும்ப ஆட்சி என்று விமர்சித்தாலும், மக்களுக்கு அது பிரச்சினையாகத் தெரியவில்லை; ஆனால், குடும்பத்தை முன்னிறுத்திப் பேசப்படும் ஊழல்களை மக்கள் வெறுக்கிறார்கள். பின்தங்கிய மாநிலமான தெலங்கானாவைப் பெரிய அளவில் முன்னேற்றியிருந்தாலும், மக்களிடம் சலிப்பு வெளிப்படுகிறது.

கேசிஆர் முதல்வரானது முதலாக மாநிலத்தில் வகுப்பு மோதல்கள் பெரிய அளவில் நடக்கவில்லை என்றாலும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4% என்பதிலிருந்து 12% ஆக உயர்த்துவேன் என்ற அவருடைய வாக்குறுதி நிறைவேறவில்லை. பாஜகவுடன் அவர் நெருக்கமாகச் செயல்பட்டதும் அவர் மீதான சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. ஆகையால், முஸ்லிம்கள் மெல்ல அவரிடமிருந்து நகர்கிறார்கள். இப்படி ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வோர் அதிருப்தி.

கேசிஆர் இம்முறை இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கஜ்வெல்லில் 44 பேர், காமாரெட்டியில் 39 பேர் பட்டதாரி ஆசிரியர்கள் அவரை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். ஏன்? ‘தேர்வாணையத்தை முடக்கிவிட்டார், புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கவில்லை, தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிவது போன்ற முறைகேடுகளைத் தடுக்கத் தவறிவிட்டார்’ என்பது அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர்களுடைய குற்றச்சாட்டு. இப்படி பல தரப்பு அதிருப்தி சூழ்ந்திருக்கிறது. என்றாலும், கேசிஆர் இன்னமும் செல்வாக்கோடு திகழ்கிறார்.

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, தெலங்கானாவின் முதல் முதல்வர் எனும் பெருமையோடு, தெலங்கானாவைப் பெரிய அளவில் முன்னேற்றியவர் எனும் பெருமையும் அவருக்கு என்றும் இருக்கும். மகள் கவிதா செல்வாக்கு மிக்க பேச்சாளர். தேசிய அளவில் அவர் கவனம் ஈர்க்கிறார். ஆகையால், தெலங்கானாவின் முக்கியமான அரசியல் சக்திகளில் ஒன்றாக இன்னும் பல ஆண்டுகளுக்கு கேசிஆர் குடும்பம் திகழும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி
தெலங்கானாவில் முன்னகரும் காங்கிரஸ்
ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


2






சௌஹான்தொழிலாளர் பற்றாக்குறைகொரோனா பெருந்தொற்றுதடுப்பூசிகள்இந்தியாவை துண்டாடும் திட்டம்வருமான வரித் துறைஅடிப்படைவியம்சமஸ் அண்ணாபோதைப்பொருள்தூயன்வாய்நாற்றம்தேவை கூட்டாட்சிக்காகப் பணியாற்றும் ஓர் ஒன்றியப் பிஹெர்மிட்அம்ருத் மகோத்சவ்ஆண் பெண் உறவுபொதுத் துறை வங்கிகள்ரோஹித் குமார் கட்டுரைமாநில வருவாய்குரியன் வரலாறுமோதானிதாமஸ் பெய்ன்நாத்திகர்மாவட்டங்கள்மன்னார்குடி புரோட்டாவெற்றி எளிதா?ஆல்பாஃபோல்ட்நீதிபதி ரஞ்சன் பி.கோகோய்சிஆர்ஏமஞ்சள்சாதியும் நானும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!