கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

தெலங்கானாவில் முன்னகரும் காங்கிரஸ்

ஆசிம் அலி
03 Nov 2023, 5:00 am
0

தெலங்கானா மாநிலம் உருவாகி பத்தாண்டுகளை எட்டும் நிலையில், மாநிலத்தின் அரசியல் களமும் அப்படியே ஒரு வட்டம் அடித்து மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாகிக்கொண்டிருக்கிறது.

மாநிலத்தை ஆளும் ‘பாரத் ராஷ்ட்ர சமிதி’ (பிஆர்எஸ்) கட்சிக்கு மிகப் பெரிய போட்டியாளர் என்று கருதப்பட்ட பாரதிய ஜனதா கட்சி அப்படியே கீழிறங்கி மூன்றாம் இடத்துக்குப் போய்விட்டது. பிஆர்எஸ் கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கிவிடும் அளவுக்குக் காங்கிரஸுக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஓராண்டுக்குள் இந்த மாறுதல் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவைப் பெருக்கிக்கொண்டுவிட்ட காங்கிரஸின் வெற்றியைத் தடுக்க முடியாத நிலையில் தவிப்பதைப் போல இருக்கிறது பிஆர்எஸ்.

மூன்று மாதங்களுக்கு முன்னால் மக்களுடைய கருத்தறிய நடத்திய வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியைவிட பிஆர்எஸ் கட்சி 9% அதிக ஆதரவில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் ‘ஏபிபி - சி வோட்டர்’ நடத்திய வாக்கெடுப்பில் அந்த இடைவெளியை காங்கிரஸ் இட்டு நிரப்பி மேலும் முன்னேறிவிட்டது.

இப்போது தெலங்கானா வாக்காளர்களில் 39% காங்கிரஸையும், 38% பிஆர்எஸ் கட்சியையும், 16% பாஜகவையும் ஆதரிக்கின்றனர். 2018 பொதுத் தேர்தலின்போது பெற்ற மொத்த வாக்குகளில் 10% அளவுக்கு பிஆர்எஸ் இழந்துவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி களத்தில் தெரிகிறதா என்ற கேள்விக்கே இடமில்லை, காரணம் கடந்த இரண்டாண்டுகளில் நடந்த இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி தோல்விதான் கண்டிருக்கிறது.

இந்தச் சரிவைப் பிஆர்எஸ் கட்சியால் தடுத்து நிறுத்த முடியுமா, கருத்தறியும் வாக்கெடுப்பில் ஆதரிப்பவர்களின் வாக்குகளை அப்படியே தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் பெற்றுவிட முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை - பிஆர்எஸ் கட்சிக்கு எதிரான அலையாக இனி காங்கிரஸ்தான் மாற்ற வேண்டும்.

பிஆர்எஸ், காங்கிரஸ் என்ற இரண்டு பெரிய அரசியல் கட்சிகளின் வியூகங்களைக் கவனித்துப் பார்த்தால் தேர்தல் களம் எப்படியிருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுவிடலாம். பிஆர்எஸ் கட்சி தன்னுடைய தலைமையின் வலுவையும், சமூகங்களுக்கு இடையில் தனக்கிருக்கும் செல்வாக்கைக் கூர்மைப்படுத்தியும் செயல்பட்டால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுவிடலாம். மாநிலத்தின் செல்வாக்கு மிக்க, பண பலம் படைத்த சமூகங்களுக்குப் போட்டியிட கணிசமான இடங்களைக் கொடுத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் அது இறங்கியிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்

ப.சிதம்பரம் 16 Oct 2023

பிஆர்எஸ் உத்தி

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைப் பிரிவினருக்கு அவரவர் சமூகத்துக்கேற்ப அரவணைப்பு நடவடிக்கைகளை அறிவித்து ஆதரவைத் தக்கவைக்கும் முயற்சியில் பிஆர்எஸ் இறங்கியிருக்கிறது. பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டை 6% என்பதிலிருந்து 10%ஆக அதிகரித்திருக்கிறது. அவர்கள் வனப் பகுதிகளில் சாகுபடி செய்வதற்கான நிலப்பரப்பை அதிகரித்து விநியோகித்துள்ளது.

தலித் பந்து என்ற திட்டத்தின் மூலம் பட்டியல் இனக் குடும்பங்களுக்கு, சிறப்பு திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் மானிய உதவியை அறிவித்திருக்கிறது. ஏழைகளாக இருக்கும் சில வகை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மைச் சமூகத்தவருக்கும் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயை அறிவித்திருக்கிறது.

இவை அனைத்தும் கடந்த ஓராண்டில் அறிவிக்கப்பட்டுப் படிப்படியாக வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் திட்டங்களுக்கு மூலக் காரணம் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் என்று கூறி அவருக்கு ஆதரவைப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

காங்கிரஸ் வியூகம்

காங்கிரஸ் கட்சி சித்தாந்தரீதியாக (கொள்கை) பல அறிவிப்புகளை வெளியிட்டு ஆதரவைப் பெருக்கிக்கொண்டுவருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், பட்டியல் இனத்தவர், முஸ்லிம்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்காக ஆறு வாக்குறுதிகளை, ‘நிச்சயம் நிறைவேற்றுவோம்’ என்று ‘உத்தரவாதம்’ அளித்துள்ளது. (குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் மகாலட்சுமி திட்டம், ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா சேவை, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 மானியம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000, நெல் கொள்முதல் விலைக்கும் கூடுதலாக குவிண்டாலுக்கு ரூ.500 போனஸ், ஏழைக் குடும்பங்கள் வீடு கட்ட இந்திரம்மா திட்டத்தில் வீட்டுமனை, ரூ.5 லட்சம் நிதி, தியாகிகளுக்கு 250 சதுர கெஜத்தில் வீட்டுமனை, அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம், ரூ.10 லட்சம் வரையிலாகும் மருத்துவச் செலவுக்கு இலவச காப்பீடு, ஏழைகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.4,000, ஏழைக் குடும்ப மாணவர்கள் உயர்கல்வி பெற ரூ.5 லட்சம் வரை நிதியுதவி, தெலங்கானாவின் ஒவ்வொரு வட்டத்திலும் சர்வதேசப் பள்ளிக்கூடம் ஆகியவை வாக்குறுதிகள்).

மாநில மக்கள்தொகையில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுடைய எண்ணிக்கைதான் அதிகம். (பட்டியல் இனம் 16%, பழங்குடிகள் 9%, முஸ்லிம்கள் 13%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50%). எஞ்சிய 10% மக்களில் ரெட்டியார்களும், வெலமாக்களும் கணிசமாக உள்ளனர். பிராமணர் உள்ளிட்ட இதர முற்பட்ட சாதியினர் குறைவு.

தனித் தெலங்கானா மாநிலம் கோரி நடந்த போராட்டத்தில் (2009-2014) ஒடுக்கப்பட்டவர்களும் விளிம்புநிலை மக்களும் முக்கியப் பங்கு வகித்தனர். மாநிலத்தின் கிராமப்புறங்களில் நிலவிய வறுமை காரணமாக தங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பில்லை என்று அவர்கள் அச்சப்பட்டனர்.

சமூகத்திலும் அரசியலிலும் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்திவந்த மேல்தட்டு மக்களுக்கு எதிராக இதர பிரிவினரிடையே அதிருப்தி நிலவியது. அது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. இப்போது ‘புதிய மேட்டுக்குடிகள்’ உருவாகியுள்ளனர். இவர்களுக்கு எதிராக மக்களிடம் அதிகரித்துவரும் அதிருப்தியை அறுவடை செய்ய, காங்கிரஸ் வலிமையான வியூகம் வகுத்திருக்கிறது. பிஆர்எஸ் ஆட்சியில் ரெட்டியார்களும், வெலமாக்களும்தான் வாரிசு அரசியல் மூலம் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தனித் தெலங்கானா போராட்டத்தின்போது எவையெல்லாம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதோ அவை எதுவும் நிறைவேற்றப்படாமல் தங்களுடைய வாழ்க்கை அதே நிலையில் இருப்பதைப் பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளனர். விவசாயிகளுக்கு ரொக்க மானிய திட்டத்தை ‘ரயது பரோசா’ என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இதையே பிஆர்எஸ் ஆட்சியும் இப்போது வழங்குகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சுவாரஸ்யமான தேர்தல் களம் தயார்

ப.சிதம்பரம் 09 Oct 2023

காங்கிரஸ் திட்டத்தில் புதியது எதுவென்றால், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.12,000 அறிவிக்கப்பட்டிருக்கிறது. சொந்த நிலம் இல்லாமல் குத்தகைக்குப் பயிரிடுவோர், நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் ஹைதராபாத் – கர்நாடக பிரதேசத்தைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்புகளை வெளியிட்டது பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களிடையே ஆதரவைப் பெறுவதற்குத்தான். “பிஆர்எஸ் அரசின் விவசாயத்துக்கான மின்சார மானியத்தில் பெரும்பகுதி பெரிய நிலச்சுவான்தாரர்களுக்குத்தான் கிடைக்கிறது” என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் பேசியது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. பிஆர்எஸ் கட்சியைவிட காங்கிரஸ்தான் அதிக ஏழைப்பங்காளன் என்று காட்ட ரெட்டி அப்படிப் பேசியிருக்கிறார் என்ற கருத்தும் நிலவியது.

மாநிலத் தலைமை

கட்சிகளின் வியூகத்தையும் அறிவிப்புகளையும் பார்த்துவிட்டோம், மாநிலக் கட்சித் தலைமை தொடர்பாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் பார்ப்போம். சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு 2018இல் மக்களிடம் நடத்திய கருத்தறியும் வாக்கெடுப்பில் எந்த அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டது. 42% வாக்காளர்கள், உள்ளூர் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம் என்றனர். 26% பேர் வேட்பாளர் யாராக இருந்தாலும் கட்சி அடிப்படையில்தான் வாக்களிப்போம் என்றனர். 20% வாக்காளர்கள் மட்டுமே முதல்வராக யார் வருவார்கள் என்று பார்த்து வாக்களிப்போம் என்றனர்.

பிஆர்எஸ் கட்சி இன்றைக்கு இருக்கும் நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது. எனவே, வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிட்டுவிட்டது. (வழக்கம்போல காங்கிரஸ் இதில் பின்தங்கியது). பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர்களில் கணிசமானவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே ரெட்டி, வெலமா சமூகத்தவர்கள். அவர்களுடைய சமுதாய மக்கள்தொகைக்குப் பொருத்தமில்லாத வகையில் அதிகம் என்றுகூட கருத வேண்டியிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, ‘தேர்தல் செலவுகளை ஏற்கும் வசதி இருப்பவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது’ என்ற பதில் கிடைத்தது. இப்போது பதவி வகிக்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ‘சி வோட்டர்’ நடத்திய வாக்கெடுப்பில், இப்போதுள்ள பிஆர்எஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான அதிருப்தியும் குறைவாகவே இருக்கிறது. (27% வாக்காளர்கள் மட்டுமே, இப்போதுள்ள எம்எல்ஏக்கள் சரியில்லை என்று கூறியுள்ளனர்).

ஆனால், மக்களுடைய கோபம் மாநில முதல்வர் கே.சந்திரசகேர ராவ் மீது அதிகமாகியிருக்கிறது. 50.2% வாக்காளர்கள் அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர். இப்போது தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் மக்களுடைய கோபத்துக்கு அதிகம் ஆளானவர் இவர்தான். கட்சியிலும் ஆட்சியிலும் குடும்ப ஆதிக்கம் அதிகமாகிவிட்டது, மாநில நிர்வாகம் பண்ணையார்களுடைய காலத்தை நினைவுபடுத்துகிறது என்றே பலரும் சாடியுள்ளனர்.

பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் கடந்த சில காலமாக பொது மேடைகளில் கூறிவரும் குற்றச்சாட்டுகளையே மக்களும் எதிரொலித்துள்ளனர். தன்னுடைய சொந்த செல்வாக்கால் அசைக்க முடியாத இருந்த இடத்தில் இருந்த முதல்வர் ராவ் இப்போது பெருத்த பின்னடைவாக மாறிவிட்டார்.

தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர், ஆகிய இரண்டுக்குப் பிறகு வாக்காளர்கள் தேர்வு செய்வது கட்சியை. அந்த வகையிலும் பிஆர்எஸ் இப்போது பின்னடைவைச் சந்தித்துவருகிறது. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் கட்சி அமைப்பு சரியாக இல்லை. மக்களால் ஏற்கும்படியான நல்ல தலைவர்கள் கட்சியில் அதிகம் இல்லை. அதேசமயம், காங்கிரஸ் கட்சி ஏராளமான தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான்: இரு பக்கக் காற்று

ஆசிம் அலி 02 Nov 2023

கர்நாடகத்தில் தேர்தல் வெற்றிக்குக் காரணமான அம்சங்களை அப்படியே தெலங்கானாவிலும் நகல் எடுத்திருக்கிறது. 2018 தேர்தல் தோல்விக்குப் பிறகு தெலங்கானாவில் அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்தவர்களைக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நியமித்திருக்கிறது. கட்சி வெற்றிபெற்றால் வழக்கம்போல ரெட்டி சமூகத்திலிருந்து மட்டும்தான் முதல்வர் வருவார் என்ற நிலையை மாற்றி, பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் பிரிவிலும் பட்டி விக்ரமார்க்கா, மாவோயிஸ்டாக இருந்து பிரதான அரசியலுக்கு வந்த டி.சீதாக்கா என்று பலரைச் சொல்லும்படி கட்சியை வலுப்படுத்தியுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இப்போது மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன, அதில் முக்கியமானது பிஆர்எஸ் கட்சியும் பாஜகவும் ரகசிய கூட்டணி அமைத்துள்ளன என்று காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டு. இது பாஜகவின் ஆதரவை வேகமாக சரித்துவிட்டது. மாநில அரசியலில் செல்வாக்குப் பெற்ற சில சாதிகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும்கூட பாஜகவிடமிருந்து விலகிவிட்டனர்.

இவர்கள் அனைவரும் காங்கிரஸை ஆதரிப்பதால் காங்கிரஸுக்கு பலம் கூடிவிட்டது. பிஆர்எஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், பாஜக தன்னை வலுப்படுத்திக்கொண்டு இதை மும்முனைப் போட்டியாக மாற்றி - பிஆர்எஸ் எதிர்ப்பு வாக்குகள் காங்கிரஸுக்குப் போகாமல் பிரிக்க வேண்டும். இப்போதைக்கு ஹைதராபாதை அடுத்து கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி, கத்திமுனையில் நடப்பதைப் போல மிகவும் ஆபத்தாகிவிட்டது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்
பாஜகவுக்கு எதிராக தேசம் திரளுகிறதா?
சுவாரஸ்யமான தேர்தல் களம் தயார்
ராஜஸ்தானில் காற்று இரண்டு பக்கமும் வீசுகிறது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசிம் அலி

ஆசிம் அலி. டெல்லியைப் பின்புலமாகக் கொண்டு இயங்கும் சமூக அறிவியலர். அரசியல் விமர்சகர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?புனித பிம்பம்மோடியிடம் எந்த மாற்றமும் இல்லை!எதிர்கட்சிகள்ராஜாஜி சமஸ்ஸ்டேட்டிஸ்டிக்ஸ்பாலஸ்தீன அரசியலில் அடுத்தது என்ன?: தாரிக் பகோனி பேஅசோக் வர்தன் ஷெட்டிஏக்நாத் ஷிண்டேகே.சந்துருகலைக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விஅரசர் கான்ஸ்டன்டைன்கோபாலபுரம்சுயமரியாதைப் போராட்டம்சென்னை கோட்டைபஞ்சாபி உணவகம்கல்லூரிகள்சாவர்கர்பாஜகஆலிவ் பழங்கள்இஞ்சிராமுளைபுதிய கருத்தியல்இந்துக்கள் எப்படியும் யோசிக்கலாம்கால் வலிமாதையன்செனட்கென்யாகாந்தியின் உடை அரசியல்மது வகைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!