கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் அப்படிப் பேசினார்?

அரவிந்தன் கண்ணையன்
02 Jun 2024, 5:00 am
0

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் மிகப் பெரிய அதிர்ச்சி, பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த பிரச்சாரத்தின் தொனிதான். 2014 முதல் அசுர பலத்துடன் ஆட்சி செய்து மூன்றாவது தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் ஆட்சியின் தலைவரும் கட்சியைத் தன் பூரண கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவரும் அரசின் சாதனைகள் பற்றியோ, மூன்றாவது ஆட்சி அமைந்தால் முன்னெடுக்கக்கூடிய முன்னேற்றத் திட்டங்கள் குறித்தோ பிரதானமாகப் பேசாமல் இஸ்லாமியரை மையப்படுத்திய வெறுப்பு அரசியலையே பிரச்சாரம் என்று கை கொண்டார். இது ஏன், இப்பிரச்சாரம் நமக்கு, இவர்களின் ஆட்சி மீண்டும் அமைந்தால், இந்தியாவின் எதிர்காலம் பற்றியும் சொல்லும் செய்திகள் என்ன?

பிரச்சாரம் எனும் பொய்யுரைகள்

தேர்தல் பிரச்சாரங்களில் அரசியலர்கள் மிகைப்படுத்தல்களையும் பொய்களையும்கூட பயன்படுத்துவது உண்டு; ஆனால் அவற்றுக்கெல்லாம் ஓர் எல்லையுண்டு. சமூகங்கள் இடையே வெறுப்பை உண்டாக்குவதோ பிளவுகளை உண்டாக்குவதோ மீறக் கூடாத எல்லை என்ற புரிதல் உண்டு. அப்படியே மீறல்கள் நடந்தாலும், அது மூன்றாம் நிலைப் பிரச்சாரகள் மூலம் நடக்கும். இதையெல்லாம் கட்சித் தலைமையிடம் பாவனை அளவிலேனும் கண்டிக்கும்.

நரேந்திர மோடி கட்சியின் முகமும் அதன் முதன்மை பிரச்சாரகருமானவர். அவரே கூர்மையான வெறுப்பரசியலையும் அப்பட்டமான பொய்யுரைகளையும் முன்னெடுத்தார்.

இந்தியா பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்ட இந்து சாதிகளுக்கும் அவர்களைப் போன்றே விளிம்பு நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமூகத்துக்கும் அரசு உதவ வேண்டும் என்று மன்மோகன் சிங் பேசிய உரையைத் திரித்த மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை ஊடுருவியர்களுக்கும், அதிகமான பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் உங்கள் சொத்துகளையும், உங்கள் வீட்டுப் பெண்களின் தாலிகளையும், பறித்து விநியோகம் செய்துவிடுவார்கள்” என்றார்.

பிரதமரின் இத்தகயே நேரடியான, கீழ்மையான தாக்குதல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மோடி அதன் பின் தொடர்ச்சியாக இஸ்லாமியரை தாக்கினார். “காங்கிரஸின் அறிக்கையை பாகிஸ்தான் வரவேற்கிறது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்து சாதிகளின் இடஒதுக்கீட்டைக் களவாடி இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு கொடுப்பார்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவுசெய்வார்கள்” என்று அடுக்கடுக்காக பொய்களையும் வெறுப்பையும் இரண்டற கலந்த பிரச்சாரத்தை மோடி முன்னெடுத்தார்.

பிரதமரே இப்படிப் பேசினால் அமித் ஷாவும் யோகி ஆதித்யாநாத்தையும் பற்றி கேட்கவும் வேண்டுமோ?

மோடியின் சில வியூகங்கள்

மோடி ஏன் இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்று சில யூகங்களை வாக்காளர்களும் அரசியல் நோக்கர்களும் சொல்கிறார்கள். முதல் கட்டத் தேர்தலுக்குப் பின்தான் இம்மாதிரி பேசுகிறார், அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்கிறார்கள் சிலர். வேறு சிலர் இது 400 இடங்களில் அசுர பெரும்பான்மைக்கான தந்திரோபாயம் என்கிறார்கள்.

நான் நிச்சயம் இது தோல்வி பயத்தினால் விளைந்த பேச்சு என்று நினைக்கவில்லை.

2014இலும், 2019இலும்கூட மோடிதான் குஜராத் கலவரத்தின் நாயகன் என்பதை பூசி மெழுகி உலகுக்காகப் பொருளாதார முன்னேற்றம் என்ற முகமூடி அணிந்து வந்தார். இப்போது அவருக்கு தன் சுயரூபத்தை வெளிப்படுத்தக்கூடிய வசதி இருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இந்திய இஸ்லாமிய சமூகம் பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு, ராமர் கோயில் திறப்பு, பர்தா விவகாரம், குடியுரிமைச் சட்டத் திருத்தம் போன்றவற்றில் பெருத்த மௌனத்தையோ அல்லது தீர்க்கமான சட்டப்பூர்வமான எதிர்வினைகளையுமே அரசியல் செயல்பாடுகளாக வெளிப்படுத்தியது.

இஸ்லாமிய சமூகத்தின் மீது மேலும் அழுத்தம் கொடுத்து அவர்கள் இந்தியாவின் இரண்டாம் நிலைக் குடிமக்களே என்று அப்பட்டமாக உணர்த்த முடியும் என்கிற அரசியல் நம்பிக்கை மோடிக்கு தற்போது வலுத்திருக்கிறது, அதுதான் அவர் பேச்சுகளின் காரணம் என்று எண்ணுகிறேன்.

இப்பேச்சுகளின் உபரி பயனாக 400 இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறார். 400 இடங்கள் கிடைக்கிறதோ இல்லையோ இந்திய இஸ்லாமியரிடம் “நீங்கள் இரண்டாம் நிலை, இதனை மறவாதீர்” என்ற எண்ணத்தை விதைப்பதையே முதன்மை குறிக்கோளாகக் கொண்டுள்ளார் பிரதமர்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்துக்கே அபாயம் என்று காங்கிரஸ் எதிர் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது அவர்களே எதிர்பார்த்ததைவிட கூடுதலாக எதிரொலித்திருக்கிறது. 400 இடங்கள் பெரும்பான்மை கிடைத்தால் பொது சிவில் சட்டத்தையும், ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தையும் அமல் செய்வோம் என்று அமித் ஷா தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லி இருப்பது காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது.

அமித் ஷா சொல்லாமல் விட்டது நாடாளுமன்றத்துக்கு மக்கள்தொகையிலான இடங்கள் மறு நிர்ணயம் 2026இல் நடக்கவிருக்கிறது.

மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற பிரதிநித்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டால் குடும்பக் கட்டுபாட்டைச் சீரிய முறையில் தங்கள் மாநிலங்களில் முன்னெடுத்ததால் இந்திய மக்கள்தொகையில் 25%இல் இருந்து 20% ஆகக் குறைந்துவிட்ட தென் மாநிலங்கள் உத்தர பிரதேசம் போன்று, “பிள்ளைகளை அதிகம் பெறும்” மாநிலத்திடம் பிரதிநிதித்துவ இடங்களை இழக்க நேரிடும். ஏற்கெனவே பாஜகவின் ஏறுமுகத்தால் இஸ்லாமியரின் பிரதிநித்துவம் வீழ்ச்சியடைந்துள்ளது, 400 கிடைத்தால் உத்தர பிரதேசம் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும்.

ஜூன் 4க்குப் பிறகு?

இந்தத் தேர்தலில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அரசியல் நோக்கர்கள் முதல் வாட்ஸப் பல்கலைக்கழகங்கள் வரை காங்கிரஸின் காலம் முடிந்துவிட்டது என்பார்கள். ஆனால், பிரதமரும் பாஜகவும் காங்கிரஸின் வீச்சினை அறிந்துதான் அதனை மட்டுமே குறி வைக்கிறார்கள். மோடியின் இந்தியாவைக் கட்டமைக்க நேருவின் இந்தியாவை செங்கல் செங்கல்லாக பிரிக்க வேண்டும் என்பதை காங்கிரஸைவிடவும் நன்றாக மோடி உணர்ந்திருக்கிறார்.

காந்தியை தந்திரோபாயமாகவும் பாசாங்காகவும் ஏற்கும் மோடிக்கு நேரு ஏன் இந்தளவு கசக்கிறார்? மதச்சார்பின்மை, விஞ்ஞான நோக்கிலான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றில் காந்தியைவிடவும் மேன்மையானவர் நேரு என்பதால். சாவர்க்கரின் தியாகம் மதிக்கப்பட்ட வேண்டும் என்று பேசும் கட்சியினர் தேசத்துக்காக 9 வருடம் சிறை சென்ற நேருவின் தியாகத்தைக் கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாதது ஏன்? உண்மையில் பாஜகவுக்கு சாவர்க்கரின் தியாகமோ நேருவின் தியாகமோ பெரிதல்ல, மாறாக அவர்கள் எந்தெந்த அரசியலுக்கு முகமாக இருக்கிறார்கள் என்பதே காரணம். 

2024இல் சாவர்க்கரின் இந்தியா வெல்லுமா, நேருவின் இந்தியா வெல்லுமா என்பதே நாம் எதிர்கொள்ளும் கேள்வி. நான் இங்கே வெற்றி என்று குறிப்பிடுவது வெறும் சீட் கணக்கு அல்ல. இந்தியாவை வழிநடத்தப்போவது யாருடைய கருத்தியல்?

இந்தியாவை பிரதேசங்களாகவும் மதங்களாகவும் இனக்குழுக்களாகவும் எதிரரெதிர் நிறுத்தி அரசியல் லாபம் அறுவடை செய்யும் கருத்தியலா இல்லை “முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்” என்ற நம் ஆசான் பாரதியின் வழிவந்த கருத்தியலா? ஜூன் 4ஆம் தேதி இறுதி முடிவல்ல. பாஜக வென்றாலும், தோற்றாலும் அவர்கள் விதைத்த வெறுப்பரசியலில் இருந்து இந்தியாவை மீட்க பெரும் கருத்தியல் முன்னெடுப்புத் தேவை என்பதே நிதர்சனம்! 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். இந்திய வரலாறு, சமகால அரசியல் தொடர்பில் இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். உலக வரலாறு, அமெரிக்க அரசியல் தொடர்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.


3






மூன்றே மூன்று சொற்கள்ராஜாஜிஉக்ரைனின் பொருளாதாரம்தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்நன்மாறன்கி. ராஜாநாராயணன்வருடங்கள்உலக அமைதிக்கான நோபல் பரிசு – 2022கு.கணேசன்கல்வெட்டியல் நிபுணர்நால்வரணிரத்தக்கசிவுசாதாரண பிரஜைமுதுகுவலி ஒரே தேர்தல்திராவிட முன்னேற்ற கழகம்நவீன வேளாண் முறைஇரண்டு செய்திகள்தானியங்கித் துறைமாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்அமெரிக்க அரசியல்தி டான் ஆஃப் எவரிதிங்க்உணவு விற்பனைமிதமானது முதல் வலுவானது வரைவிதிகள்சமஸ் வி.பி. சிங்காவிரி நதிநீர்Economyகாலம்தோறும் கற்றல்உற்பத்தி செய்யப்படும் கருத்துகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!