கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு
பொருளாதார அவலங்கள் கவனம் பெறுமா?
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு (பணவீக்கம்), ஊதியம் – சொத்துடைமையில் கடுமையான ஏற்றத்தாழ்வு ஆகியவையே நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் முக்கியமாக பேசப்பட்டன. ஒன்றிய அரசே நடத்திய ஆய்வுகளும் திரட்டிய தரவுகளும், பெரும்பாலான மக்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்துகொள்ள முடியாதபடிக்கு குறைந்த ஊதியமே பெறுகிறார்கள் என்றே சுட்டிக்காட்டுகின்றன.
மக்களுடைய ஊதியத்தின் பண மதிப்பைவிட, ‘உண்மை மதிப்பு’ (வாங்கும் சக்தி) தேய்ந்துகொண்டேவருவதை பல்வேறு சுயேச்சையான ஆய்வறிக்கைகளும் தெரிவிக்கின்றன. நாட்டின் ‘ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு’ (ஜிடிபி) உயர்ந்தாலும் அவை மக்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளையும் வருமான உயர்வையும் ஏற்படுத்தவில்லை; மாறாக பணக்காரர்களிடமே மேலும் மேலும் பணம் குவிய வழிசெய்துள்ளது.
பழைய பாதையிலேயே செல்லும் அரசு
மக்களவை பொதுத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை, ‘மோடி கி கியாரண்டி’ என்ற பெயரில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும் கடந்த பத்தாண்டுகளாக போன பாதையிலேயேதான் இனியும் இந்த அரசு போகும் என்று தெரிகிறது. பெண்கள், இளைஞர்கள், ஏழைகளுடைய வாழ்க்கையில் ஒளியேற்றுவோம் என்று எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளைத் தந்தன.
பொருளாதார வளர்ச்சி மந்தமாகிவிட்டது. அமைப்புரீதியாக திரட்டப்படாத துறையில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நடவடிக்கையும் பொது சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) போதிய முன்னேற்பாடுகள் செய்யாமல் அவசர கோலத்தில் அமல்படுத்தியதும் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக தளர்த்திவிட்டன. போதாக்குறைக்கு ‘கோவிட்-19’ பெருந்தொற்று ஏற்பட்டு நாடே முடங்கியது. ஏழை, நடுத்தர குடும்பங்களின் நுகர்வுச் செலவு சுருங்கிக்கொண்டேவருகிறது. அவசியத் தேவைகளுக்குக்கூட கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
கோடிக்கணக்கான குடும்பங்களின் கடன் சுமையும் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அதேசமயம், ஜிடிபி வளர்ச்சியில் மீட்சியும் தெரிகிறது. அரசு பல்வேறு வரிச் சலுகைகளையும் முதலீட்டு மானியச் சலுகைகளையும் அளித்தும்கூட தனியார் துறையில் முதலீடு சிறிதும் உயரவில்லை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மூலதனச் செலவுகளின் பலன்கள் என்ன?
கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் பொருளாதார உத்தியானது மூலதனச் செலவுகளை கணிசமாக உயர்த்துகிறது. அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அதிகம் செலவிடுகிறது. பொது மூலதனச் செலவு 2014 – 2015இல் ஜிடிபியில் 1.6% ஆகவும் அரசின் மொத்தச் செலவில் 11.8% ஆகவும் இருந்தது. 2023 - 2024 நிதிநிலை அறிக்கையின் திருத்திய மதிப்பீட்டின்படி அது ஜிடிபியில் 4.3% ஆகவும் மொத்தச் செலவில் 28.3% ஆகவும் அதிகரித்திருக்கிறது.
2024 - 2025க்காக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில்கூட மூலதனச் செலவுக்கு அதிகம் ஒதுக்கப்பட்டது. இப்படி மூலதனச் செலவுகளை அதிகரித்துக்கொண்டேவந்தால் அது வேலைவாய்ப்பைப் பெருக்கும், தனியார் துறையிலும் முதலீடு உயரும் என்பது அரசின் எதிர்பார்ப்பு; ஆனால், இதுவரையில் அப்படி நடக்கவில்லை.
இந்த உத்திக்கு முக்கிய காரணம் ‘நவதாராளமய’ கொள்கைதான். ‘பெருந்தொழிலதிபர்களைத் தாக்கிப் பேசக் கூடாது, அவர்கள்தான் செல்வ வளத்தை உருவாக்குபவர்கள்’ என்ற ஆட்சியாளர்களின் பேச்சு இதைத் தெளிவாக உணர்த்துகிறது. இந்தக் கருத்துக்கேற்ப வரிவிதிப்பில் முற்போக்காக இல்லாமல், குறைந்த வருவாய்ப் பிரிவினரிடம் கடுமையாக நடந்துகொள்கிறது.
மறைமுக வரிகள் மூலம் வருவாயைப் பெருக்கவே அதிக கவனம் செலுத்தப்படுகிறது, நேர்முக வரிகளைச் செலுத்துவோருக்கு அதிக வரிவிலக்குச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ரூ.500 கோடிக்கு மேல் விற்று முதல் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் லாப அடிப்படையில் வரிவிதிப்பு விகிதம் 19.14% ஆகவும் ரூ.1 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு 24.82% ஆகவும் இருக்கிறது!
மூலதனச் செலவை உயர்த்தும் அதேவேளையில் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவசியமான சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைந்துகொண்டேவருகிறது. ‘நிர்வாகத்துக்கான மையம் – பட்ஜெட் பொறுப்பேற்பு’ (சிபிஜிஏ) என்ற அமைப்பின் அறிக்கை இதைத் தெரிவிக்கிறது. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் - சுகாதாரம் துறைக்காக 2014 – 2015இல் 4.1% ஒதுக்கப்பட்டது, 2023 – 2024இல் 1.9% ஆக சரிந்துவிட்டது. (ஜிடிபியில் கணக்கிட்டால் இது 0.55% - 0.29%). கல்விக்கான ஒதுக்கீடும் அதேபோல 3.1%-லிருந்து 2.5% ஆகக் குறைந்துவிட்டது.
சமூக நலத் திட்டங்கள் கைவிடப்படுகின்றனவா?
சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை ‘இந்திய சமூக நலத் திட்டங்களின் எழுச்சி’ என்ற தலைப்பிலான அறிக்கை தெரிவிக்கிறது. அங்கன்வாடி திட்டம், மதிய உணவு திட்டம், தேசிய சமூக நல உதவித் திட்டம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு 20% முதல் 45% வரை கடந்த பத்தாண்டுகளில் குறைத்துக்கொண்டே வரப்பட்டுள்ளது.
குழந்தைகள் நலனுக்கான நிதி 2014 – 2015இல் 4.5% ஆக இருந்தது 2023 – 2024இல் 2.3% ஆகக் குறைந்துவிட்டது. அதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் மொத்த செலவு – ஜிடிபி ஆகிய இரண்டுடனும் ஒப்பிடும்போது பெருமளவு குறைந்திருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் ஜூலை 23இல் தாக்கல் செய்யப்படப்போகும் பட்ஜெட்டை நாம் மதிப்பிட வேண்டும். நிதிநிலை அறிக்கையில் இந்த அரசு பெரிய பொருளாதார முடிவுகளை அறிவிப்பதில்லை. 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மட்டும், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிஎம்-கிஸான் திட்டத்தை அறிவித்தது. பட்ஜெட் உரை என்று அழைக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்குப் பார்வையை அரசுகள் தெரிவிப்பது வழக்கம்.
புதிய முழக்கங்களையும் ‘அம்ரித் கால்’ போன்ற குறு வார்த்தைகளையும் அறிவிப்பாக வெளியிடும் அரசு, அவற்றுக்குப் பெரிய அளவில் நிதிகளை ஒதுக்குவதும் கிடையாது.
நம்பிக்கை இழக்கும் மக்கள்
நிதிநிலை அறிக்கை என்பதற்கும் வரம்புகள் உண்டு. அது உண்மையில் அரசின் வரவு – செலவு அறிக்கை மட்டுமே. அதேசமயம் கடந்த காலத்தில் சாதித்தது என்ன, அடுத்து என்ன செய்யப்போகிறது அரசு என்று சிலவற்றை அதில் குறிப்பிடும் வழக்கமும் உண்டு. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகாவது இந்த அரசின் நிர்வாக உத்தியில் மாற்றம் இருக்குமா என்று பார்க்க வேண்டும். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மீது கவனம் செலுத்துவார்களா என்று பார்க்க வேண்டும்.
கல்வித் துறையின் நிலைமை மோசமாக இருக்கிறது. உயர்படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு, தேர்வாணையத் தேர்வு ஆகியவற்றை லட்சக்கணக்கான மாணவர்கள் – இளைஞர்கள் எழுதுகின்றனர். அவற்றில் முறைகேடுகளும் ஊழல்களும் பெருகிவருகின்றன. மிகச் சில வேலைகளுக்காக, ஆயிரக் கணக்கானவர்கள் நேர்காணலுக்குக் குவிவதால் கூட்ட நெரிசல்களும் விரும்பத்தகாத விபத்துகளும் நிகழ்கின்றன.
எப்படியாவது நல்ல வேலை கிடைத்து குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டுவிட வேண்டும் என்ற வேகத்தில் வெளிநாடுகளுக்கு உயிரையும் பொருள்படுத்தாது கள்ளத் தோணிகளில் செல்வது பற்றிய செய்திகளும் அடிக்கடி வருகின்றன. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விபத்துச் செய்திகள் அல்ல.
அரசு தங்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கையை இழந்துவரும் மக்கள், தாங்களாகவே தங்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மேற்கொள்ளும் விபரீத முயற்சிகளாகும்.
© த வயர்
தொடர்புடைய கட்டுரைகள்
பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்
கௌரவமான ஓய்வூதியம்: ஏழைகளின் உரிமை
விஷச் சுழலை உடையுங்கள்
குறைகிறது விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம்
வரிச் சலுகைகள் முக்கியமல்ல, 4 தவறுகள் கூடாது
பொருளாதாரத்தில் புதிய அணுகுமுறை தேவை
பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரியா?
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.