கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு
மோடியின் செங்கோல் வணக்கம்
சேலம் இராமசாமி முதலியாரைச் சந்தித்த நிகழ்ச்சி உ.வே.சாமிநாதையரின் வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்பது அனைவரும் அறிந்த செய்தி. சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்களைக் கடந்து சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களும் சங்க இலக்கியங்களும் கொண்ட பழந்தமிழ் இலக்கியப் பரப்பு ஒன்று இருக்கிறது என்பதை அச்சந்திப்பே உ.வே.சா.வுக்கு உணர்த்தியது. அதன் பின்னரே உ.வே.சா. சீவக சிந்தாமணியைப் பயிலவும் பதிப்பிக்கவும் தொடங்கினார். தொடர்ந்து சங்க இலக்கியத்தின் பெரும்பாலான நூல்களையும் பிற நூல்களையும் பதிப்பித்துத் ‘தமிழ்த் தாத்தா’ ஆனார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பதிப்பாசிரியராக அவர் விளங்குகிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சந்திப்பிற்குக் காரணம் திருவாவடுதுறை மடம்தான். ஆம், இன்று 1947 ஆகஸ்ட் 14 அன்று ஜவஹர்லால் நேருவுக்குச் செங்கோலைப் பரிசளித்த அதே திருவாவடுதுறை மடம்தான். இன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பிய, நாடாளுமன்றக் கட்டிடத்தில் நம் பிரதமர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய, ‘தமிழர் அடையாள’மாக நாடாளுமன்றத்தை அலங்கரிக்கின்ற செங்கோலை வழங்கிய அதே திருவாவடுதுறை மடம்தான். தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
திருவாவடுதுறையில் உ.வே.சா
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை மடத்தின் 16ஆவது ஆதீனகர்த்தராக விளங்கிய மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் (1869 முதல் 1888 வரை ஆதீனகர்த்தராக இருந்தார்) தமிழ் இலக்கியத்தில் பற்றும் புலமையும் கொண்டவர். அவர் காலத்தில் அம்மடத்தின் ஆதீனப் புலவராக விளங்கியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. மகாவித்துவானிடம் மாணவராக இருந்தவர் உ.வே.சாமிநாதையர். அவ்வழியில் திருவாவடுதுறை மடத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவராக உ.வே.சா. இருந்தார்.
மகாவித்துவானின் இறப்பிற்குப் பிறகு பிற மாணவர்கள் அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு சென்றார்கள். “இனிமேல் நாம் என்ன செய்வது? இம்மடத்திற்கும் நமக்கும் என்ன உறவு இருக்கப் போகிறது? நம் நிலை இனி என்ன ஆகும்?” என்றுதான் உ.வே.சா.வும் (என் சரித்திரம், ப.416) கவலைப்பட்டார். “ஒரு பெருந்துணையாக விளங்கிய பிள்ளையவர்கள் மறைந்ததால் வேறு பற்றுக் கோடில்லாமல் அலைந்து திரியும் நிலை நமக்கு வந்துவிடுமோ?” என்று (மேற்படி, ப.417) அவர் அஞ்சினார்.
ஆனால், உ.வே.சா.வைத் திருவாவடுதுறை மடம் கைவிடவில்லை. “பிள்ளையவர்கள் இல்லையென்ற குறையைத் தவிர இங்கே ஒரு குறைவும் இராது. நீர் இனிமேல் கேட்க வேண்டிய பாடங்களை நம்மிடமே கேட்கலாம். புதிய மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டு எப்போதும் நம்முடைய பக்கத்திலே இருந்து வரலாம். உமக்கு யாதொரு குறையுமின்றி நாம் பார்த்துக்கொள்வோம். இந்த ஊரையே உம்முடைய ஊராக நினைத்துக்கொள்ளும். நீரும் தம்பிரான்களைப் போல மடத்துப் பிள்ளையாகவே இருந்து வரலாம். உமக்கு எந்த விதத்திலும் குறை நேராது” என்று சொல்லிச் (மேற்படி) சுப்பிரமணிய தேசிகர் அபயம் கொடுத்தார்.
தேசிகர் சொன்னது போலவே அவரிடம் பாடம் கேட்டுக்கொண்டும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டும் மடத்தின் ஆதரவிலேயே உ.வே.சா. இருந்தார். குடும்பத்தோடு உ.வே.சா. வசிப்பதற்கு அவ்வூர் அக்கிரகாரத்தில் புதுவீடு கட்டிக் கொடுத்தார் தேசிகர். உணவுக்கான தானியம், செலவுக்குப் பணம் முதலிய வழங்கி போதுமான வசதியோடு திருவாவடுதுறையிலேயே வசிக்கச் செய்தார்.
பாடம் சொல்வது மட்டுமல்லாமல், மடத்திற்குரிய சில காரியங்களைச் செய்யும் பொருட்டு அவ்வவ்போது கும்பகோணத்திற்கும் உ.வே.சா. சென்று வந்தார். “நானும் என் தந்தையாரும் பிரிந்து வாழ்ந்துவந்த சங்கடம் தீர்ந்தது. ஸ்திரமான இடமும் நிலையான வருவாயும் பெரிய இடத்துச் சார்பும் கிடைத்தன. நான் திருவாவடுதுறை மனிதனாகிவிட்டேன்” (மேற்படி, ப.454) என்று உ.வே.சா. மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
செங்கோல் கதை மூலம் மோடி சொல்ல வரும் செய்தி என்ன?
29 May 2023
உ.வே.சா.வின் முதல் பதிப்பு
மடத்து வாழ்க்கை அவருக்கு ஆனந்தமாகவே இருந்தது. புதிய புதிய மனிதர்களைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்த்தது. ஆதீனகர்த்தருடன் யாத்திரை செல்லும் வாய்ப்பு அமைந்தது. போகும் இடங்களில் கண்டியும் சால்வையும் கடுக்கனும் மோதிரமுமாகிய சன்மானங்கள் கிடைத்தன. ‘ஆதீன வித்துவான்’ என்றே தேசிகர் அழைத்தார். வேறென்ன வேண்டும்? “நான் சந்தோஷத்தால் பூரித்தேன்” (மேற்படி, ப.465) என்று அந்நிலையைப் பற்றி உ.வே.சா. எழுதுகிறார். அக்காலத்தில்தான் ‘வேணுவனலிங்க விலாசச் சிறப்பு’ (1878) என்னும் நூலைப் பதிப்பித்தார். அதுதான் உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல்.
மகாவித்துவான் மறைந்த 1876ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1880ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நான்காண்டுகள் மடத்தின் ஆதரவில் உ.வே.சா. வாழ்ந்துவந்தார். அக்காலத்துப் புலவர்கள் போலவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. தம் ஆசிரியர் செய்துவந்த பல செயல்களை அவர் மேற்கொண்டிருந்தார். ஆசிரியரைப் போலச் செய்யுள் செய்யும் திறன் உ.வே.சா.வுக்கு அவ்வளவாக இல்லை. என்றாலும் ‘செய்யுள் செய்யும் முயற்சியை விருத்தியாக்கிக்கொள்ளும்’ (மேற்படி, ப.501) முயற்சியை விடவில்லை. அனேகமாக மடத்து வித்துவானாகவே கழிந்திருக்க வேண்டிய அவர் வாழ்வைத் திசை மாற்றியவர் தியாகராச செட்டியார்.
மகாவித்துவானின் மாணவராகிய தியாகராச செட்டியார் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்தார். உடல்நிலை காரணமாக அவர் ஓய்வுபெறுவதாக எழுதிக் கொடுத்துவிட்டார். அவர் பார்த்துவந்த தமிழ்ப் பண்டிதர் பணிக்கு உ.வே.சாமிநாதையரை நியமிக்கும்படி அக்கல்லூரிக்கு முதல்வருக்குப் பரிந்துரை செய்தார். அத்தகவலைச் சொல்லி ஆதீனகர்த்தரிடம் அனுமதி பெறுவதற்காக அவர் திருவாவடுதுறை மடத்திற்கு வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. “இவர் இவ்விடம் இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. ஆதலால் இப்போது இவரை அனுப்ப இயலாது” என்று (மேற்படி, ப.503) பதில் சொன்னார். தியாகராச செட்டியார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தேசிகர் இணங்கவில்லை.
“நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம். மடத்துக்கு மிக்க உதவியாக இருக்கும் இவர்களைப் பிரிவதற்கு ஸந்நிதானம் சம்மதிக்குமா? எனக்கும் உசிதமாகத் தோற்றவில்லை; மற்றவர்களும் அப்படியே கருதுவார்கள்” என்றே (மேற்படி, ப.504) பிறரும் கருத்துத் தெரிவித்தனர். உ.வே.சா.வின் மனம் ஊசலாடியது. தியாகராச செட்டியாரின் ஆசை வார்த்தைகள் அவர் எண்ணத்தை மயக்கின. மடத்தின் ஆதரவும் அன்பும் ஒருபக்கம் ஈர்த்தன. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருவழியாக முடிவுக்கு வந்து “ஸந்நிதானம் உத்தரவு கொடுத்தால்தான் நான் வருவேன். இல்லாவிட்டால் வர மாட்டேன்” என்று (மேற்படி, ப.505) தீர்மானமாகச் சொல்லிவிட்டார். உரியவரே அப்படிச் சொன்னாலும் தியாகராச செட்டியார் தம் முயற்சியில் தளரவில்லை.
தமிழ்ப் பண்டிதர் பணி
அடுத்த நாள் காலையில் ஆதீனகர்த்தரைச் சந்தித்த தியாகராச செட்டியார் மிகவும் வலுவான அம்பு ஒன்றை எய்தார். கும்பகோணம் கல்லூரியில் மடத்தைச் சேர்ந்த ஒருவர் பணியிலிருக்க வேண்டியது அவசியம், இதுநாள் வரைக்கும் தான் இருந்ததால் மடத்தின் சிறப்புகளைப் பரப்பவும் மடத்திற்குத் தேவையான செயல்களைச் செய்யவும் முடிந்தது, இனி இருப்பவரும் மடத்தோடு தொடர்புடையவராக இருந்தால் நல்லது, கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் எல்லோரும் எதிர்காலத்தில் பெரிய உத்தியோகஸ்தர்களாக வருவார்கள், அவர்களால் மடத்திற்கான காரியங்கள் எளிதாக நடக்கும் – என்றெல்லாம் எடுத்துச் சொன்னார். “இதுவரையில் நான் மடத்து பிரஸ்தாவத்தை அடிக்கடி செய்துவந்தேன். எனக்குப் பிறகு தெரியாத வேறு யாராவது வந்தால் மடத்தின் சம்பந்தம் விட்டுப்போய்விடும். இவர் இருந்தால் அது விடாமல் இருக்கும். அதனால் பலவிதமான அனுகூலமுண்டென்பது ஸந்நிதானத்துக்கே தெரிந்ததுதானே?” என்று (மேற்படி, ப.506) தியாகராச செட்டியார் சொன்னார். அந்த அம்புக்குப் பலன் கிடைத்தது. உ.வே.சா.வை அனுப்ப ஆதீனகர்த்தர் ஒத்துக்கொண்டார். கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக உ.வே.சா. பணியில் சேர்ந்தார்.
தியாகராச செட்டியார் எய்த அம்பின் வலுவை உ.வே.சாமிநாதையர் மிகவும் மென்மையாகவே குறிப்பிடுகிறார். அதைப் பொதுவெளியில் விவரிப்பது அத்தனை பொருத்தமாக இருக்காது என அவர் கருதியுள்ளார். திருவாவடுதுறை மடத்துக்கு அளவற்ற நிலங்கள் உடைமையாக இருந்தன. பல கோயில்கள் மடத்தின் நிர்வாகத்தில் இருந்தன. கிளை மடங்கள் பலவும் நிறுவியிருந்தனர். இப்போதும் அவை குறைவின்றி உள்ளன. சொத்துக்கள் இருந்தாலே ஏதாவது பிரச்சினைகளும் வரத்தானே செய்யும்? அவற்றை எதிர்கொள்ளப் பலருடைய உதவிகளும் தேவைப்படும். குறிப்பாக அதிகாரிகள், ஆட்சியாளர்களின் அனுகூலம் தேவை. அந்த வகையில்தான் கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியேற்ற பிறகு சேலம் இராமசாமி முதலியாரை உ.வே.சாமிநாதையர் சந்தித்த நிகழ்வு நடந்தது.
சேலம் இராமசாமி முதலியார் கும்பகோணத்திற்கு முன்சீபாக இடமாறுதலில் வந்து சேர்ந்தார். முன்சீப் என்பது குறிப்பிட்ட பகுதிக்கான நீதிபதிப் பதவி. அத்தகைய பதவியில் உள்ளோரோடு நல்லுறவைப் பேணுவது திருவாவடுதுறை மடத்தின் வழக்கம். “கும்பகோணத்துக்கு நூதனமாக உத்தியோகஸ்தர்கள் வந்தால் அவர்களிடம் மனிதர்களை அனுப்பிப் பார்த்து வரச் செய்வதும் குருபூஜை முதலிய விசேஷ தினங்களில் மடத்திற்கு வர வேண்டுமென்று அழைக்கச் செய்வதும் திருவாவடுதுறை மடத்து வழக்கங்கள்” என்று (மேற்படி, ப.553) உ.வே.சா. பதிவுசெய்துள்ளார். அவ்வழக்கத்தின்படி மடத்தின் காறுபாறு தம்பிரானும் அவருடன் வேறு சிலரும் இராமசாமி முதலியாரைப் பார்த்து வரச் சென்றார்கள்.
மடத்தின் அணுக்கம்
அப்போது உ.வே.சாமிநாதையரைப் பற்றிப் பேச்சு வருகிறது. மடத்தில் படித்தவர் இப்போது கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக உள்ளார் என்று பெருமையுடன் சொன்னார்கள். அதன் பின் சுப்பிரமணிய தேசிகர் “அவரை நீங்கள் போய்ப் பார்த்து வர வேண்டும்” என்று உ.வே.சா.வுக்குச் சொல்லியனுப்பினார். “அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் முதலில் என்னிடமில்லை; சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினமையின் நான் சென்று பார்க்கலாமென்று ஒருநாள் புறப்பட்டேன்” (மேற்படி, ப.555) என்பது உ.வே.சா.வின் பதிவு. அந்த முதல் சந்திப்பின் போதுதான் இருவருக்கும் இடையே பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான புகழ்பெற்ற உரையாடல் நடந்தது. சீவக சிந்தாமணியின் பக்கம் உ.வே.சா.வின் பார்வை திரும்பியது.
சேலம் இராமசாமி முதலியார் மட்டுமல்ல. கும்பகோணத்திற்கு வரும் அதிகாரிகளோடு எப்போதும் நல்லுறவைப் பேணுவதில் மடம் கவனம் செலுத்தி வந்திருப்பதைப் பல பதிவுகள் மூலமாக உ.வே.சா. சுட்டியுள்ளார். அதுவும் ஓரளவு தமிழில் ஆர்வம் உடையவர்களாக இருக்கும் அதிகாரிகளிடம் சிறப்புக் கவனத்தை மடம் செலுத்தியுள்ளது. மாயூரம் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளை, கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருந்தவரும் பல்வேறு அரசுப் பதவிகளை வகித்தவருமான சி.வை.தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட பலரையும் திருவாவடுதுறை மடம் தனக்கு அணுக்கமாகக் கொண்டிருந்தமைக்குக் காரணம் அவர்களின் தமிழ் மட்டுமல்ல. அவர்களால் மடத்திற்கு ஆக வேண்டிய காரியங்களையும் உத்தேசித்ததே அவ்வணுக்கம்.
ஆதீனகர்த்தர் என்பவர் கிட்டத்தட்டக் கடவுள் போலத்தான். அவர் யாரையும் பார்க்கச் செல்வது வழக்கமில்லை. அவரைத்தான் பிறர் பார்க்க வர வேண்டும். ஆட்சியாளராக இருப்பினும் அதிகாரியாக இருப்பினும் அதுதான் வழக்கம். ஆதீனகர்த்தர் யாத்திரை செய்யும் போதும் கோயில்களுக்கு விஜயம் செய்யும் போதும் அவர்கள் வந்து பார்க்கலாம். மடத்திலும் வந்து பார்க்கலாம். பார்க்க வருபவர்கள் கடவுள் சந்நிதானத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவதைப் போல ஆதீனகர்த்தரையும் வணங்க வேண்டும்.
ஆதீனகர்த்தருக்கு இணையான இருக்கை யாருக்கும் கிடையாது. அவர் அமர்ந்தே அருளாசி வழங்குவார். அமரச் சொன்னால்தான் அமர வேண்டும். இத்தகைய வழக்கங்கள் இருப்பதால்தான் சேலம் இராமசாமி முதலியாரை ஆதீனகர்த்தர் சந்திக்கவில்லை. அவர் சார்பாகத் தம்பிரான் ஒருவரும் வேறு சிலரும் சென்று சந்தித்தனர். மடங்கள் என்னும் மத நிறுவனங்கள் தம் சொத்தையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்திக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அணுக்கமாக்கிக்கொள்வது இயல்பான நடைமுறை என்பதற்கு சேலம் இராமசாமி முதலியார் சந்திப்பே நல்ல சான்று.
மரபு மீறல்கள்
இதில் 1947 ஆகஸ்ட் 14 அன்று திருவாவடுதுறை மடம் சார்பாகச் சிலர் சென்று ஜவஹர்லால் நேருவைச் சந்தித்துச் செங்கோலைப் பரிசாக வழங்கிய நிகழ்வும் அந்தவகைச் சந்திப்புத்தான். ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி மாறும்போது தமக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வருமோ என மடங்கள் எண்ணிப் பார்த்திருப்பது இயல்பு. தமது பாதுகாப்பைக் கருதியே ஜவஹர்லால் நேருவைச் சந்தித்துப் பரிசளிக்க ஆதீனம் முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஆதீனகர்த்தராகிய 20ஆம் பட்டம் அம்பலவாணத் தம்பிரானுக்கு அப்போது கடும் காய்ச்சல்; அதனால் அவர் செல்லவில்லை என்று இப்போது சொல்லப்படுகிறது. ஆதீனகர்த்தர் தாமாகச் சென்று ஒருவரைச் சந்திப்பதோ பரிசளிப்பதோ மரபல்ல. அதன் காரணமாக அவர் செல்லவில்லை என்பதுதான் உண்மை. அவர் சார்பாகக் கட்டளைத் தம்பிரானும் நாதஸ்வர வித்துவான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை உள்ளிட்ட வேறு சிலரும் சென்றனர். எல்லோரும் ஆகஸ்ட் 11 அன்று ரயிலில் சென்றுள்ளனர் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
இப்போதைய 24ஆம் பட்டம் ஆதீனகர்த்தர் மரபை மீறித் தாமே தனி விமானத்தில் சென்றிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பல ஆதீனகர்த்தர்கள் சென்றுள்ளனர். எப்போதும் உட்காந்து அருளாசி வழங்கும் ஆதீனகர்த்தர்கள் அனைவரும் நிகழ்ச்சியின்போது நின்றுகொண்டுள்ளனர். இவையெல்லாம் மரபு மீறல்கள். காலத்தை அனுசரித்து ஆதீனங்கள் மாறிவிட்டன என்பது நல்ல விஷயமே. ஆதீனங்கள் மரபை மீறினாலும் செங்கோலை வணங்குவது போல நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி மரபைக் காப்பாற்றியுள்ளார் நம் பிரதமர். வாழ்க!
பயன்பட்ட நூல்:
உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பதினொன்றாம் பதிப்பு.
தொடர்புடைய கட்டுரைகள்
செங்கோல் கதை மூலம் மோடி சொல்ல வரும் செய்தி என்ன?
ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.
உவேசாவை ஒதுக்கலாமா?
மடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?

4


1

1



பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

பெருமாள்முருகன்
சீனிவாச ராமாநுஜம்
ஆசிரியர்
சமஸ் | Samas
பி.ஆர்.அம்பேத்கர்
சி.என்.அண்ணாதுரை
ஞான. அலாய்சியஸ்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
Be the first person to add a comment.