கட்டுரை, அரசியல், கலாச்சாரம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

செங்கோல் கதை மூலம் மோடி சொல்ல வரும் செய்தி என்ன?

சீனிவாச ராமாநுஜம்
29 May 2023, 5:00 am
1

ந்தியா தன்னுரிமை பெற்ற நள்ளிரவு அன்று ஒரு செங்கோல், தமிழ் சைவ மடாதிபதியால் நேருவிடம் கொடுக்கப்பட்டதாகவும், இத்தனை ஆண்டுகளாக அது அலகாபாத் அருங்காட்சியகத்தில் 'நேருவின் கைத்தடி' என்ற அடையாளத்தோடு இருந்துவந்ததாகவும் சொல்லி இப்போது புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகில் ‘இந்தியப் பாரம்பரிய அரசடையாள’த்தின் குறியீடாக வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தைச் சுற்றி நிறைய விவாதங்கள் நடந்துவருகின்றன.

மக்களவையில் செங்கோல் வைப்பதை நியாயமாக எதிர்ப்பவர்கள் மோடி அரசாங்கம் முன்வைக்கும் கதைக்கும், உள்ளபடியே நடந்ததுக்கும் நிறைய இடைவெளிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்;  உள்ளமையை (facts) எடுத்துவைத்து செங்கோல் கதையில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்திவருகின்றனர். ஒரு கதையை உள்ளமைகள் கொண்டு எதிர்க்க முடியுமா என்ன?

மோடி அரசாங்கம் ஒரு கதையை உருவாக்குகிறது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் கதையில் பல பாத்திரங்கள் மனமுவந்து பங்கேற்கின்றன. இந்தக் கதை உண்மையில் நடந்ததா என்று உள்ளமை அடிப்படையில் பார்ப்பது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. பலர் பல விதமான தகவல்களை முன்வைத்து மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

இது கதைதான் என்று மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இந்தக் கதையை உண்மையாக்க முயலும் மற்றவர்களுக்கும் தெரியாதா? இருந்தும் இந்தக் கதையை ஏன் கட்டுகிறார்கள்? இந்தக் கதையில் செங்கோல் எதன் குறியீடாகிறது? நாம் எதை எதிர்க்கிறோம்? முன்வைக்கப்படும் கதை உண்மைக்குப் புறம்பாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோமா அல்லது மக்களவையில் செங்கோல் வைக்கப்படுவதையே அடிப்படையில் எதிர்க்கிறோமா?

மோடி எனும் கதையாசிரியர்

நாம் செங்கோல் கதையை ஒரு கதையாகவே எதிர்கொள்வோம். நாம் ஒரு கதையைப் படிக்கிறோம். அந்தக் கதை என்ன சொல்ல முன்வருகிறது என்று புரிந்துகொள்ள முயல்கிறோம். அதுபோலவே இந்தக் கதையைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

இந்தக் கதையின் ஆசிரியர் மோடி என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கதையில் செங்கோல் முக்கியக் குறியீடாக வருகிறது. அரசன் தர்மத்துக்கு உட்பட்டு ஆள்வதன் குறியீடாக இருந்தது. அது இறையருளின் குறியீடாகிறது. அரசதிகாரத்தின் குறியீடாகிறது. மொத்தத்தில், இறையருள் பெற்ற அரசதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகச் செங்கோல் மாறுகிறது. அரசன் கொண்டிருக்கும் அதிகாரம் மக்களால் கொடுக்கப்பட்டது அல்ல; இறைவனால் கொடுக்கப்பட்டது. ஆனால், நவீன ஜனநாயக சமூகத்தில் ஆட்சியதிகாரம் மக்களால் கொடுக்கப்பட்டதாகிறது. அதை மக்களால் பறித்துக்கொள்ளவும் முடியும்.

மேலும், நவீனச் சமூகமானது அரசு, அரசாங்கம் என்று இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது. அரசு அரசமைப்பின் ஊடாகக் குடியரசாகிறது என்றால், அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்றாகிறது. இந்திய அரசின் பண்பை வெளிப்படுத்துகிறது இந்திய அரசமைப்பு. மக்களின் விருப்புறுதிகளை வெளிப்படுத்த முயல்கின்றன அரசாங்கங்கள். என்னதான் மக்கள் விருப்புறுதிகளைச் செயல்படுத்த நினைத்தாலும் அரசாங்கங்கள் அரசமைப்புக்கு உட்பட்டே செயல்பட முடியும். இதைக் கண்காணிப்பதற்குத்தான் குடியரசுத் தலைவர், நீதித் துறைகள், மக்கள் இயக்கங்கள், போராட்டங்கள், குடிமைச் சமூகங்கள், அரசியல் சமூகங்கள், பத்திரிகைகளெல்லாம் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் கதையை வாசிப்பதற்கான முஸ்தீபுகள் மட்டுமே. இப்போது கதைக்கு வருவோம்.

மோடி என்ற கதையாசிரியர் மிகக் கச்சிதமான  குறியீட்டைப் பயன்படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அவர் சொல்ல வருவதைக் குறிக்க இதைவிடச் சிறந்த குறியீட்டை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. மக்களவையே அரசின் பிற உறுப்புகளைக் காட்டிலும் — தேர்தல் பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையில் — முதன்மை கொண்டதாகப் பார்க்கிறார் மோடி. அரசின் அனைத்து உறுப்புகளும் கொண்டிருக்கும் (நீதித் துறை, குடியரசுத் தலைவர் போன்றவை) அதிகாரத்தைவிட, அதிக அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தகுதி இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடிநபர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தனக்கு இருக்கிறது என்பதே மோடி சொல்ல வரும் செய்தி. 

மக்களுக்கு எது நல்லது, எது தேவை என்று தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது என்றும், அதையெல்லாம் நீதித் துறை தீர்மானிக்க முடியாது என்றும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் முந்தைய சட்ட அமைச்சர் (இதே வார்த்தைகளில் இல்லை). இதுபோலவே சமீபத்தில் கொச்சினில் போர்க் கப்பல் ஒன்றை நாட்டுக்கு மோடி அர்ப்பணித்தார். முப்படைத் தளபதியான குடியரசுத் தலைவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்தது மோடி. இதுபோலவே புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டியதும் மோடிதான். உண்மையில், குடியரசுத் தலைவரே இதைச் செய்திருக்க வேண்டும்.

செங்கோலின் இடம் எது?

கதையாசிரியர் மோடியைப் பொறுத்தமட்டில், அரசும் அரசாங்கங்மும் ஒன்றாகிறது. இவ்விரண்டுக்கும் இடையேயான உள்ளார்ந்த உறவு கதையாசிரியரால் முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. ஆக, கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரே மக்களை வழிநடத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியும் என்ற பார்வையில் இரண்டு விஷயங்கள் சாத்தியப்படுகின்றன.

ஒன்று, இந்திய அரசின் பிற அங்கங்களைக் காட்டிலும் மக்களவையே முதன்மையானதாக மோடி அர்த்தப்படுத்துகிறார். அதுவே எல்லா அதிகாரங்களையும் — விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, கொண்டிருக்க முடியும் என்றாகிறது. இரண்டு, அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுத் தலைவர், குடிமைச் சமூகம், அரசியல் சமூகமெல்லாம் தன்னாட்சியலார்ந்த ஒன்றாக இல்லாமல் மக்களைவைக்குக் கட்டுப்பட்டவையாக — நேரடியாகப் பிரதமரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றாகிறது.

மக்களவையின் அசாத்திய அதிகாரத்தின் குறியீடே செங்கோல். மோடி என்ற கதையாசிரியர் செங்கோலைச் சுற்றி ஒத்திசைந்த கதையாடலை முன்வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்திய அரசின் குறியீடாக இருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகை அப்புறப்படுத்தப்படுகிறது; மக்களவை இந்திய அரசின் குறியீடாகிறது.

இந்தப் புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதாகவும் (உண்மையில் இந்தியவின் முதல் குடிநபராகவும், இந்திய அரசின் திரளுருவாகவும் இருக்கும் இவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்) செங்கோலை அவரிடம் கொடுப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அதைத் தனது அதிகாரத்தின் குறியீடாக தன்னுடைய இல்லத்தில் வைத்துக்கொள்ள முடியுமா? அதற்கான இடம் இருக்கிறதா?

முடியாது. ஏனெனில், நவீன அரசின் குணாம்சத்தைப் பிரதிபலிப்பது அரசமைப்பே. அரசமைப்புக்கு உட்பட்டே அரசின் அங்ககமாக இருக்கும் அனைத்தும், குடியரசுத் தலைவர் உட்பட செயல்பட முடியும். ஆக, அரசமைப்பே நவீன அரசின் செங்கோலாகிறது. அரசமைப்பு இருக்கும்போது செங்கோலுக்கான இடம் அருட்காட்சியகமாகத்தான் இருக்க முடியும்.

இதையும் வாசியுங்கள்... 30 நிமிட கவனம்

அது சோழர் செங்கோலே இல்லை

26 May 2023

குறியீடுகள்...

மீண்டும் மோடியின் கதைக்கு வருவோம். மக்களவையில் சொங்கோலை வைப்பதன் ஊடாக அவர் ஒன்றைத் தெளிவாகத் தெளிவுபடுத்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவையே அரசின் பிற அங்கங்களைவிட அதிக அதிகாரம் கொண்டதாக இருக்க முடியும். இந்திய அரசமைப்பின் மீது கொஞ்சமேனும் மரியாதை இருக்குமென்றால் அரசமைப்புக்கு இணையாக, குடியரசுத் தலைவருக்கு இணையாக ஒரு குறியீட்டை மக்களவையில் வைத்திருக்க மாட்டார்.

மோடியைப் பொறுத்தமட்டில் குடியரசுத் தலைவர், அரசமைப்பு எல்லாம் அலங்காரத்துக்கானவை. மக்களவையின் தன்னாட்சியிலான செயல்பாட்டுக்குத் தடையாக இருப்பவை. வருங்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை, செங்கோல் கதையின் ஊடாக மோடி மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

ஆக, நாம் இந்தக் கதையை எதிர்ப்பதற்குக் காரணம் இது கதையாக இருக்கிறது என்பதால் அல்ல; இது உள்ளமைகளோடு பொருந்திப்போகவில்லை என்பதால் அல்ல. இந்தக் கதையை எதிர்ப்பதற்குக் காரணம் அதன் உள்ளடக்கமே!

இந்தச் செங்கோலானது வெகுஜனப் பெரும்பான்மைவாதத்தின் குறியீடாக இருக்கிறது. இன்று நாம் கொண்டிருக்கும் ஜனநாயகபூர்வமான சில விஷயங்களைக்கூட வருங்காலத்தில் அழித்துவிடும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதால் இந்தக் கதையை எதிர்க்க வேண்டியுள்ளது. ஜனநாயக நாடாக இந்தியா தொடர வேண்டுமென்றால், செங்கோலை மக்களவையிலிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
அது சோழர் செங்கோலே இல்லை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சீனிவாச ராமாநுஜம்

சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர். மொழிபெயர்ப்பாளர். பிரச்சினைகளின் அடிவேர்களை நோக்கிச் செல்லும் எழுத்துகள் இவருடையவை. ‘சந்நியாசமும் தீண்டாமையும்’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை’, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சாதத் ஹசன் மண்டோவினுடைய ‘மண்டோ படைப்புகள்’, டி.ஆர்.நாகராஜ் எழுதிய ‘தீப்பற்றிய பாதங்கள்’, சுந்தர் சருக்கை - கோபால் குரு இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தவர். தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com


5

1

1

1பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

'ஆராய்ச்சி' மணியைப் பற்றிக்கொண்டு நாம் உலுக்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

தும்பா ஏவுதளம்பத்திரிகையாளர் சமஸ் பேட்டிவேரிகோஸ் வெய்ன்பற்கள் நிறம் மாறுவது ஏன்?நகர்ப்புற நக்ஸலைட்சட்டத் திருத்தம் அருஞ்சொல்சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்கால மாற்றத்தை ஏற்க வேண்டும்: நூலகர் தியாகராஜன் பேடஉபி அரசியல்உற்பத்தி செய்யப்படும் கருத்துகள்மனித குலம்மார்க்ஸிஸ்ட் கட்சிஉயர்ஜாதியினர்டென்டின்மண்டேலாஎதிர்கொள்ளவிருக்கும் அபாயம்தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்துக்ளக் இதழ்சி.பி.கிருஷ்ணன்103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் – 2019திராவிட இயக்கக் கொள்கைகள்இடதுசாரி முன்னணிபூக்கள் குலுங்கும் கனவுகாங்கிரஸ்: 255 மக்களவைத் தொகுதிகளில் கவனக்குவிப்புஇயக்குநர் மணிரத்னம்பொதிகை தொலைக்காட்சிஅரசியல் பழகுசட்டப்பேரவை தேர்தல்இரண்டாம் உலகப் போர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!