தலையங்கம், அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

மடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?

ஆசிரியர்
25 Apr 2022, 5:00 am
12

காஞ்சி சங்கர மடத்தின் தலைவர்  விஜயேந்திரரால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிக்கப்பட்டிருப்பதானது மடங்கள் மீதான அரசு மற்றும் சமூகத்தின் தீவிரமான பார்வையைக் கோருவது ஆகும். மடங்கள் இத்தகைய அவமதிப்புகளைச் சம்பிரதாயங்களின் பெயரால் நியமங்கள் ஆக்கிக்கொண்டிருப்பது இயல்பானதாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் காஞ்சி சங்கர மடம் இத்தகைய அவமதிப்புகளின் உச்சத்தில் இருக்கிறது எனலாம்.

சாதாரண மனிதர்கள் இத்தகு அவமதிப்புகளைப் பக்தியின் பெயரால் விழுங்கிவிடுவதால் அவை பொதுவெளியின் கவனத்துக்கு வருவதில்லை.  மக்கள் பிரதிநிதிகள் அல்லது பிரபலங்கள் இதே அவமதிப்புகளை எதிர்கொள்ளும்போது –  சாமானியர்களைப் போலவே அவர்களும் பக்தி அல்லது அதிகாரத்தின் பொருட்டு இந்த அவமதிப்பை விழுங்கினாலும்கூட – மக்கள் மத்தியில் அது தொடர்பான புகைப்படங்களோ காணொளிகளோ வெளியாகும்போது சலனங்கள் வெளிப்படுகின்றன. 

பல லட்சம் மக்களின் பிரதிநிதிகளையேகூட பட்டவர்த்தனமாகத் தனக்குக் கீழே நிறுத்தி, அலட்சியமாகக் கையாளும் ஆதிக்கவுணர்வின்  தொடர்ச்சியாகவே ஆளுநர் தமிழிசை நடத்தப்பட்ட விதத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது; கூடுதலாக, அவர் ஒரு பெண் என்பதும் அவர் சார்ந்த சாதிப் பின்னணியும் விஜயேந்திரரின் அலட்சியத்தில் கூடுதல் பங்கு வகித்திருப்பது எவராலும் மறுக்க முடியாத அளவுக்கு அம்பலப்பட்டிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறைந்த மடாதிபதி ஜெயேந்திரர் இதேபோல் துண்டு வழங்கும்போது, ஒப்பிட்டளவில் கொஞ்சம் அவர் மரியாதையோடு வழங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது மிகப் பொருத்தமான நினைவுகூரல். ஆண்களைக் காட்டிலும் பெண்களை மடங்கள் கீழே நடத்துவது பொது என்றால், அந்தப் பொதுப் பாகுபாட்டிலும் சாதியம் மேலும் ஓர் உள்ளடுக்கைக் கொண்டிருப்பதற்கான அப்பட்டச் சான்றாகி இருக்கிறது ஜெயலலிதா – தமிழிசை இடையிலான ஒப்பீடு. ஒரே மடத்தின் நியமங்கள் எப்படி ஒரு பெண்ணிடம் துண்டைக் கையில் அளிக்கவும், இன்னொரு பெண்ணிடம் துண்டைத் தூக்கிப் போடவும் வழிகாட்டுகின்றன?

மிழிசைக்கு நேர்ந்தது ஒரு தனி நபருக்கு நேர்ந்த அவமானம் மட்டும் இல்லை. அரசமைப்புச் சட்டப்படி ஆளுநரே ஒரு மாநிலத்தின் முதல் குடிநபர். தெலங்கானா மற்றும் புதுச்சேரி என்று இரு மாநிலங்களின் ஆளுநர் பதவிகளை வகிக்கும் தமிழிசைக்கு நேர்ந்த அவமதிப்பானது இரு மாநிலங்களுக்கும் சேர்த்து இழைக்கப்பட்ட அவமதிப்பு; மிக அடிப்படையில் இந்திய அரசமைப்புக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. சம்பிரதாயம் அல்லது பாரம்பரியம் அல்லது  நியமம் என எந்தவொரு விளக்கத்தின் பெயரால் விஜயேந்திரரின் இழிச்செயல் நியாயப்படுத்தப்பட்டாலும் அடிப்படையில் அது தீண்டாமைக்கான நியாயப்படுத்தலே ஆகும்.  இந்த நாட்டில் தீண்டாமைக்கான நியாயப்பாடு காலம் காலமாக சந்நியாசத்தின் கூடவே  தீண்டாமை பயணப்பட்டுவந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. 

கால மாற்றத்துக்கு ஏற்ப எந்தவோர் அமைப்பும் தன்னை மாற்றிக்கொள்வது மிக அவசியமானது. ‘தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று இந்திய அரசமைப்பு விடுத்த பிரகடனமானது, இந்நாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்கள் மீதும் விழுந்த சவுக்கடிதான். இன்றைக்கு மடங்கள் மற்றும் மடத் தலைவர்களின் அபத்தமான செயல்பாடுகளை நியாயப்படுத்துகிறவர்கள் அறிந்துகொள்ள  வேண்டிய ஓர் உண்மை, ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்நாட்டின் கோயில்களும் இத்தகைய இழிவான நடைமுறைகளை எந்த  வெட்கமுமின்றி பேணின; சுயமரியாதை மிக்க சீர்திருத்தர்கள், மக்கள் தலைவர்கள் மற்றும் அரசு துணிச்சலாக மேற்கொண்ட படிப்படியான மாற்றங்கள் வாயிலாகவே நம் கோயில்களில் கொஞ்சமேனும் ஜனநாயகம் இன்று சாத்தியமாகி இருக்கிறது.

மடங்கள் எப்போதும் சாதியைக் கட்டிக்காக்கிற நிறுவனப் பண்பையே கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் குறைந்தபட்சம் சமயத் தொண்டோடு, மொழிச் செயல்பாடு, கல்விச் செயல்பாட்டிலும் அவை பங்காற்றின. இன்றைக்குத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மடங்களுக்கான சமூகப் பொருத்தமே கிடையாது. ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கான முகமையாகவே அவை மிச்சத்தில் உயிர்த்திருக்கின்றன. இந்தச் சூழலிலும்கூட அவை உள்ளடக்கி வைத்திருக்கும் அதிகாரம் சாமானியமானது இல்லை.

ஒவ்வொரு மடத் தலைவரும், சாமியாரும் தம்மால்  சாத்தியப்படும் அளவுக்குத் தம் இழிவை கக்கியபடியே இருக்கின்றனர். ஆண்டாள் சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை வெளியிட்டதற்காக 'தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதனை சாஷ்டங்கமாகக் கீழே விழுந்து கும்பிட வைத்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜரின் நடவடிக்கை தொடங்கி நாற்காலியில் தான் அமர்ந்தபடி அமைச்சர் கே.என்.நேருவைத் தரையில் அமர்த்திய பங்காரு அடிகளின் நடவடிக்கை வரை இன்றைய காலகட்டத்திலும்கூட அவர்களிடத்தில்தான் எவ்வளவு அதிகாரம்! இதே விஜயேந்திரர்தான் கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்காமல் மேடையில் அமர்ந்தபடியே இருந்தார் என்பதும் அதன் தொடர்ச்சியாக, ‘தமிழ்த் தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்’ எனத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கவை. இன்றைக்கும் பல்லக்குகளில் உட்கார்ந்து பவனி வரும் வக்கிரத்தை உரிமையெனக் கருதும் மடாதிபதிகள் இருக்கத்தானே செய்கின்றனர்!

சக மனிதர்கள் மீதும், ஒரு சமூகமாக நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனநாக விழுமியங்கள் மீதும் துளியேனும் மதிப்பு இருந்தால், இத்தகைய தடித்தனத்தை நியாயப்படுத்த எவரும் முற்பட மாட்டார்கள். சொல்லப்போனால், இத்தகைய மடங்கள் அல்லது சாமியார்கள் மீது பற்று கொண்டிருப்போர் கூடுதல் குற்றவுணர்வுக்கும் சுயபரிசீலனைக்கும் தம்மை உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தையும்கூட இத்தகைய அவமதிப்புகள் உருவாக்குகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்தபடி சகஜமாகக் கடப்பதும், இன்னும் கூடுதலாகச் சிலர் நியாயப்படுத்த முற்படுவதும் அவரவருடைய சீழ் மனதின் வெளிப்பாடே ஆகும்.

ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இத்தகு  விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். முந்தைய நூற்றாண்டின் செயல்பாடுகள் கோயில்களை அரசுடைமையாக்கம் நோக்கி நகர்த்தின என்றால், இந்த  நூற்றாண்டின் செயல்பாடுகள் மடங்களின் சொத்துகளை அரசுடைமையாக்கம் நோக்கி நகர்த்தலாம்.  மடங்களைத் தம் கையில் எடுத்து, கோயில்களின் ஒரு பகுதியாக மடங்களின் சொத்துகளை இணைத்துவிடுவது தொடர்பில் அரசும் சமூகமும்  யோசிக்க வேண்டும்.

அரசியலர்களும் அதிகாரிகளும் ஏன் மதங்களோடும் சடங்குகள் சம்பிரதாயங்ளோடும் தங்களை விலக்கி வைத்துக்கொள்வது அவர்களுக்கான தார்மீக கடப்பாடு என்பதையும்கூட இந்நிகழ்வு நமக்குச் சுட்டுகிறது. ஆட்சியாளர்களேயே காலில் விழ வைப்பவர்கள் குடிமக்களின் மேலே ஏறி நிற்பார்கள். பிறர் மரியாதைக்காவது ஆட்சியாளர்கள் தம் சுயமரியாதையைப் பேணலாம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

15

4

2

1



பின்னூட்டம் (12)

Login / Create an account to add a comment / reply.

தமிழ்வேள்   2 years ago

தங்கள் தளத்தில் இந்த தலையங்கத்தை தற்போதுதான் வாசித்தேன்....எந்த மடாதிபதியும், அரசியல்வாதிகளை , தங்கள் மடத்துக்கு வருகை தரும்படி வேண்டுவதில்லை ..அரசியல்வாதிகள் , தாங்கள் ஹிந்து என்பதை காண்பிக்கவோ, அல்லது வேறு நோக்கம் கருதியோதான் மடங்களுக்கு வருகிறார்கள்....எப்படி இருந்தாலும், அவர்க்ள் வருகைதரும் மடத்தின் ஐதீகங்கள், வழக்கங்கள் ஆகியனவற்றுக்கு கட்டுப்பட்டவர்க்ளே.....எந்த துறவியும், பிறரை தீண்டுவதில்லை..தங்களது மடத்தின் ஆசார சீலர்களான சீடர்களைக்கூட தீண்டமாட்டார்கள்...பிறரை தீண்டுதல் என்பது துறவிகளுக்கு தடுக்கப்பட்ட ஓன்றே ஆகும்..என்வே இதை பெரிதுபடுத்த தேவை இல்லை...மடங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டால், எவனாவது கட்சியின் அல்லக்கை வந்தால் கூட, அவனுக்கு "சகல" வசதிகளையும் 'குறைவற" நிறைவேற்றுதல் வரை, தர்ம விரோதம் திகழும் இடமாக மடாலயங்கள் மாற்றப்படும் அபாயம் உண்டு..மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், இந்த அபாயம், நாத்திக வாதம் வேறூன்றி உள்ளமையால் அதிகம்....எனவே, மடங்க்ளை அரசுடைமையாக்குதல் என்ற எண்ணமே தவறு...கோவில்கள் திராவிடத்தால் குட்டிசுவரானது போதாதா? மடங்களும் அழியவேண்டுமா? மடங்களிலும் இட ஒதுக்கீடு கேட்பீர்களா? வேண்டாத எண்ணம் இந்த தலையங்கம் என்பது எனது கருத்து...

Reply 1 2

Sivakumar   3 months ago

...பிறரை தீண்டுதல் என்பது துறவிகளுக்கு தடுக்கப்பட்ட ஓன்றே ஆகும்..என்வே இதை பெரிதுபடுத்த தேவை இல்லை '_ சரி தீண்ட வேண்டாம், வஸ்த்திரத்தை ஜெ..வுக்கும் , தமிழிசைக்கும் வழங்கும் முறையின் வேறுபாட்டை என்னவென்று சொல்வீர்கள்.... திராவிடத்தால் கோயில்கள் எந்த வகையில் குட்டிச்சுவர் ஆனது?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vivek    2 years ago

அருமை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   2 years ago

வணக்கம்... மடங்கள் பல நூற்றாண்டாகச் சமூகத்தில் வேரூன்றிய சாதி , மதத்தைப்போன்றது . வலிமையான அடித்தளத்தால் தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. மடங்களுக்குப்பின்னால் கோயில்கள் , கோயில் நிலங்கள், அந்த நிலங்களுக்கான ஊர்கள் என பல நூற்றாண்டு வருமான வங்கியிருப்புகள் என நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பெரும் பொருளோடு நிற்கிறார்கள். முன்னாள் முதல்வர்களே மடத்திற்குச் சென்று மடாதிபதிகளைச் சந்தித்த வரலாறுகள் தான். இருக்கின்றன. மடாதிபதிகள் முதல்வர்களைச் சந்தித்த வரலாறுகள் இன்னும் எழுதப்பட வில்லை. இங்கே அரசுப்பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகிக்கொண்டிருக்கிற நவீன அரசியல் பார்வையில் ஒரு மாற்றுப்பார்வை மடங்களை அரசுடமை ஆக்குவது. முயலலாம் அரசுக்கு அசூரபலம் வேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

மடங்களின் சொத்துக்களை கையகப்படுத்தும் முடிவை அரசு துணிந்து எடுக்க வேண்டும்.... அதில் வரும் வருமானத்தை கொண்டு, நல்ல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

udhaya kumar   2 years ago

மடத்தை அரசுடைமை ஆக்குவது தேவையற்றது. அவமானத்தையும் தனக்கு வழங்கப்பட்ட ஆசியாக பார்க்க கூடிய நபர்கள்தான் மடங்களை தேடிச் செல்கிறார்கள். ஒரு கட்டிடத்திற்குள் வலிய சென்று ஒரு நபர் தனக்கான ஆசியையோ அவமானத்தையோ தானே தேடிக்கொள்கிறார். இதில் அரசிற்கும் நமக்கும் என்ன இருக்கிறது?

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

No mutt or so called saints are asking VIPs to come and have "Darshan"! The ball is in the court of visitors!

Reply 2 3

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

Electricity Board is incurring thousands of crores loss! Public transport is a huge revenue-drainer! Show us some institutions which are well run by governments!

Reply 2 0

aravind raj   2 years ago

here the question is about discrimination prevailing in mutts and the need for government arises there to democraticise the mutts for fellow religious followers.you can't simply override the constitutional values in the name of religious practices.and the analogy you used is absurd because the above mentioned enterprises are for both efficiency and service for people and in the case of mutts it's all about service to god

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

Sir, You are making a molehill out of mountain. JJ Photo was pre-Sankarraman era! Untouchability and casteism is more prevalent between other high castes and oppressed class! Please highlight cases like Utthapuram wall which is a great wall in our system! Or at least find out who is responsible for Marakkanam riots !

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Satheesh Kumar   2 years ago

மடங்களும் மடாதிபதிகளும் செயற்கை அதிகாரம் கொண்டு செயல்பட்டுவருவது யாரும் அறிந்ததே. நிச்சயம் அரசு உட்புகுந்து கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

Balamurugan N   2 years ago

மிகச்சிறந்த பதிவு. ஆட்சியாளரும், அரசியலரும், பொது மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இளைஞர்கள்அடையாள அரசியல்அரசமைப்புச் சட்டப் பிரிவு 370தொல்.திருமாவளவன்2019 ஆகஸ்ட் 5ரத்தசோகைஅயோத்தி பிரதேசம்திமுகஒட்டுண்ணி முதலாளித்துவம்தியாகராய ஆராதனாநீரிழப்புமகாஜன் ஆணையம்அந்தரங்க உரிமைகொட்டும் பனிநேரு கட்டுரைத் தொடர்மது ஒழிப்புதென்னகம் வஞ்சிக்கப்படுகின்றனவா?முதன்மைப் பொருளாதார ஆலோசகர்பாமகநோக்கமும் தோற்றமும்மு.க.ஸ்டாலின் - பழனிசாமிஆசியாராகுல் நடைப்பயணம் இதுவரை சாதித்தது என்ன?சினிமாகே. ஆறுமுகநயினார் கட்டுரைஇந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!இன்றைய காந்திகள்குடியரசு மாண்டுவிட்டதுஇந்தியப் பொதுத் தேர்தல்மொழிப் பொறுப்புணர்வு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!