கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 15 நிமிட வாசிப்பு

ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.

பெருமாள்முருகன்
18 Feb 2023, 5:00 am
3

ங்கிலம், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும்படி பலர் தூண்டியபோதும் ‘எனக்குத் தமிழ் ஒன்றே போதும்’ என்று வாழ்ந்து பெருஞ்சாதனைகள் புரிந்த உ.வே.சாமிநாதையர் தம் சமகால ஆளுமைகள் பலரோடு நல்ல நட்பு கொண்டிருந்தார். திருக்குறள், நாலடியார், திருவாசகம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவராகிய ஜி.யு.போப் அவர்களுடன் உ.வே.சா. கொண்டிருந்த நட்பு தனித்தன்மை வாய்ந்தது. 1820, ஏப்ரல் 24 அன்று கனடாவில் பிறந்த ஜி.யு.போப் 1839ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தார். இடையில் இரண்டாண்டுகள் தவிர 1882ஆம் ஆண்டு வரை நாற்பதாண்டுகள் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் தங்கிக் கல்விப் பணியும் சமயப் பணியும் செய்தார். 

நண்பர்களின் கடிதப் போக்குவரத்து

ஜி.யு.போப்பைவிட உ.வே.சா. முப்பத்தைந்து ஆண்டுகள் இளையவர். தமிழ்நாட்டில் போப் இருந்த காலத்தில் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு வரவில்லை. 1872 முதல் 1882 வரை கடைசிப் பத்தாண்டுகள் பெங்களூரில் இருந்தார் போப். 1880இல் கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா. ஆசிரியரானார். பதிப்புலகில் அவர் அழுத்தமாகக் காலூன்றிய சீவக சிந்தாமணிப் பதிப்பு 1887இல் வெளியாயிற்று.

ஆகவே, இருவருக்கும் அறிமுகம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 1882இல் இங்கிலாந்து சென்ற போப் 1885 முதல் 1908ஆம் ஆண்டு அவர் இறப்பு வரைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் தமிழ் நூல்களைக் கற்பதிலும் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாகத் தம் கவனத்தைச் செலுத்தினார். அவர் ஆர்வத்திற்கு பேருதவியாக உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் இருந்தன. அதன் அடிப்படையில் இருவருக்கும் நட்பு உருவாகி வளர்ந்தது. 

உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணி நூலை எப்படியோ பெற்ற போப் தம் நாலடியார் மொழிபெயர்ப்பு நூலில் அப்பதிப்பைப் பாராட்டி எழுதினார். 1893ஆம் ஆண்டு வெளியான நாலடியாரின் முன்னுரையில் “எளிதாக வாசிக்கத்தக்க வகையில் வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணி பதிப்பு போற்றத்தக்கது” என்று (p.xii) எழுதினார்.

இவ்வாறு அவர் எழுதியுள்ள தகவலைப் பூண்டி அரங்கநாத முதலியார்தான் உ.வே.சா.விடம் தெரிவித்தார். நாலடியார் பிரதியையும் கொடுத்தார். அதை நினைவில் கொண்டிருந்த உ.வே.சா 1894ஆம் ஆண்டு தாம் புறநானூற்றைப் பதிப்பித்ததும் அதன் ஒரு பிரதியைப் போப்புக்கு அனுப்பிவைத்தார். நெடுநாட்களாக அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. 1895 ஏப்ரல் இறுதியில் போப் எழுதிய கடிதம் மே மாதத்தில் உ.வே.சா.வுக்குக் கிடைத்தது. இதுதான் இருவருக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம். அதன் பின் 1908ஆம் ஆண்டு போப் இறக்கும் வரைக்கும் கடிதம் வாயிலான நட்பு தொடர்ந்தது. 

அறிவுசார் செயல்பாடுகள்

தமக்கு வந்த கடிதங்களை எல்லாம் உ.வே.சா பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். அவற்றுள் 1877 முதல் 1900 வரைக்குமான கடிதங்களைத் தொகுத்து ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி 1’ என ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார். டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியிட்டுள்ள இத்தொகுதியில் ஜி.யு.போப் எழுதிய ஐந்து கடிதங்கள் உள்ளன. ‘போப் துரை மேலும் பல கடிதங்கள் எழுதினார்’ என உ.வே.சா குறிப்பிடுகிறார். இந்த ஐந்து கடிதங்கள் போக மீதமுள்ளவை (குறைந்தது பத்துக் கடிதங்களாவது இருக்கும் எனக் கருதுகிறேன்) அடுத்த தொகுதியில் இடம்பெறும். 09.10.1906இல் அவர் எழுதிய கடிதம் ஒன்றை ‘என் ஆசிரியப் பிரான்’ நூலில் (ப.66, 67) கி.வா.ஜகந்நாதன் மேற்கோள் காட்டியுள்ளார்.  

அவற்றை உள்ளடக்கிய இரண்டாம் தொகுதியும் விரைவில் வெளியானால் இவ்விருவர் நட்பின் பல பரிமாணங்களை ஆழமாக நாம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதற்கு ஆ.இரா.வேங்கடாசலபதி மனம் வைக்க வேண்டும். அதேபோல ஜி.யு.போப்பும் தமக்கு வந்த கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கக்கூடும். அவற்றில் உ.வே.சா. எழுதிய கடிதங்களைக் கண்டறிந்து வெளியிட்டால் ஒருவரை ஒருவர் பாராமலே தமிழால் இணைந்த இருவர் நட்புக்கும் காவிய மதிப்பு உருவாகும் என நம்புகிறேன். 

இப்போது கிடைக்கும் ஐந்து கடிதங்கள் சொல்லும் செய்திகளே பல. 26 ஏப்ரல் 1895இல் எழுதிய முதல் கடிதத்தில் ‘அன்புள்ள ஐயா’ (Dear Sir) என விளிக்கிறார் போப். 3 ஜனவரி 1896இல் எழுதிய மூன்றாம் கடிதம் ‘உங்கள் உண்மையான நண்பன்’ (Your sincere friend) என்று முடிகிறது. நான்காம் கடிதம் ‘என் அன்பு நண்பருக்கு’ (My dear friend) எனத் தொடங்கி ‘உண்மையான நண்பன்’ என முடிகிறது. தம்மை விட முப்பத்தைந்து ஆண்டு வயது குறைந்தவரை ‘நண்பர்’ என விளித்தும் ‘நண்பன்’ என்று தம்மைச் சொல்லியும் அவரால் எழுத முடிகிறது என்றால் இருவரும் அறிவுத் துறை சார்ந்து ஒருவரை ஒருவர் எந்தளவு அங்கீகரித்துக்கொண்டனர் என்பது தெரிகிறது. ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது இதுதான் போல. 

போப்பின் மதிப்பீடு

இருவருக்கும் இடையே இத்தகைய நெருக்கம் கூடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பழந்தமிழ் நூல்களை அனைவரும் வாசிக்கும் வகையில் எளிமையாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் கருத்தொற்றுமை முதல் காரணம். புறநானூற்றுப் பதிப்பைப் பயன்படுத்திய போப், ‘புறநானூற்றுப் பதிப்பை நன்றாகப் புரியும்படியாகவும் வாசிக்கத் தூண்டுவதாகவும் ஆக்க முடியுமா? எனக்குத் தமிழ் தெரியும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தாலும் என்னால் பெரும்பாலான பகுதிகளைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்கிறேன். எளிமையாக எழுத உங்களால் முடியுமா? முடியுமானால் நன்கு புரியும்படியாக உள்ள குறிப்புகளும் விளக்கங்களும் உள்ள எளிய கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். பண்டிதர்கள் அல்லாத எங்களிடம் சற்று இரக்கம் காட்டுங்கள்’ என்று எழுதினார். 

‘உங்கள் பதிப்பு திருத்தமாகவும், முழுமையாகவும் இருக்கிறது. பழந்தமிழ் நூல்களெல்லாம் புதிய தமிழர்களுக்கு விளங்கும்படி இருக்க வேண்டுமன்று விரும்புகிறேன். நீங்கள்தான் அதற்கு வழிசெய்ய வேண்டும். நாம் எல்லாவற்றையும் எளிதானவையாக ஆக்குவோம்’ என்று இன்னொரு கடிதத்தில் குறிப்பிட்டார். அடுத்த கடிதத்தில் தொல்காப்பியப் பதிப்பு பற்றிய தம் எண்ணத்தை இப்படி எழுதினார், ‘அகரவரிசைப் பொருட்பட்டியலோடும் தேவையான விளக்க உரைகளோடும் கூடிய தொல்காப்பியப் பதிப்பு அவசியம் தேவை. சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்பு வெறுமையாக இருக்கிறது. சிந்தாமணியின் இரட்டைப் பிறவியான சூளாமணி உரிய முறையில் முழுமையாகப் பதிப்பிக்கப்பட வேண்டும்.’  

பழந்தமிழ் நூல்களைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் ஏற்றவர் எனவும் இன்னும் பல நூல்களைப் பதிப்பித்துத் தரக்கூடிய ஆற்றல் உடையவர் எனவும் உ.வே.சா.வை போப் மதிப்பிட்டுள்ளார். ஆகவே, அவர் எழுதிய கடிதங்கள் உணர்ச்சியும் அறிவும் கலந்த கலவையாகக் காணப்படுகின்றன. புறப்பொருள் வெண்பா மாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை எனத் தாம் அடுத்தடுத்துப் பதிப்பித்த நூல்களை எல்லாம் போப்புக்கு உ.வே.சா. தொடர்ந்து அனுப்பிவந்துள்ளார். அவற்றால் உத்வேகம் பெற்றுக் கற்கவும் மொழிபெயர்க்கவும் கட்டுரைகள் எழுதவும் செய்தார் போப். உ.வே.சா.வின் பதிப்புகளை முன்வைத்து ‘ஆசியாட்டிக் ராயல் சொசைட்டி’ பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை அவர் எழுதினார்.

அறிவுப் பகிர்வுகள்

பதிப்புகள் பற்றிய தம் எண்ணங்களைக் கடிதங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். இன்னும் பதிப்பிக்க வேண்டிய நூல்களைப் பற்றிய ஆவலை வெளிப்படுத்தினார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். தாம் செய்த மொழிபெயர்ப்புப் பாடல் ஒன்றை ஒவ்வோர் ஆங்கில ஆண்டுப் பிறப்பின்போதும் உ.வே.சாவுக்கு அனுப்பி வாழ்த்துத் தெரிவித்தார். புறப்பொருள் வெண்பா மாலையை முழுதுமாக மொழிபெயர்த்த அவர் “அது பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன? உங்கள் வழிகாட்டுதல்படியே நான் அதைப் பதிப்பிப்பேன்” என்று எழுதினார். 

பொதுவாக நூல்களின் காலம், பின்னணி பற்றியெல்லாம் உ.வே.சா பெரிதாக ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் அல்ல. பதிப்பிப்பதே தம் பணி என நேர்ந்துகொண்டவர். போப் அப்படியானவர் அல்ல. காலம், பின்னணி என வரலாறு சார்ந்த ஆய்விலும் கவனம் கொண்டவர். முச்சங்கம் பற்றிய கருத்துக்கள் புராணக் கதைகள் எனத் தெளிவாகச் சொன்னார். வரலாற்றுக்கான உண்மைத் தகவல்கள் மீது ஆர்வம் காட்டினார். தம் எண்ணங்களை எல்லாம் தயக்கமின்றி உ.வே.சா.விடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இவற்றுக்கு உ.வே.சா எழுதிய பதில்கள் என்னவாக இருந்தன எனத் தெரியவில்லை. தம் பதிப்புகளில் அவ்வளவாக வெளிப்படுத்தாத ஆய்வுக் கருத்துக்களை அவர் எழுதியிருக்கலாம். உ.வே.சா பற்றிய இன்னொரு பக்கத்தை அவை காட்டக்கூடும்.  

திருவாசகம் பற்றிய தம் கருத்துக்களையும் ஐயங்களையும் உ.வே.சா.வுக்கு எழுதினார் போப். தம் ஆய்வுப் பார்வைகளையும் பகிர்ந்துகொண்டார். குறிப்பாகத் திருக்குறள் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து அதில் எவ்வளவு ஆழம் கண்டவர் என்பதை உணர்த்துகிறது. அது வருமாறு: ‘தமிழ்க் கவிதை அடிகளின் நேர்த்தியுடனும் அழகின் மகுடமாகவும் விளங்கும் குறள் வெண்பாவைத் திருவள்ளுவர்தான் கண்டுபிடித்து இருப்பார் என்ற என்னுடைய சொந்த அனுமானம் பற்றிய உங்கள் கருத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் காலத்திற்கு முன்பே இத்தகைய இரண்டடி வெண்பாக்கள் இருந்தனவா என்பதைப் பற்றி ஐயத்திற்கு இடமின்றி உங்களால் சொல்ல முடியுமா? அவருக்குப் பின்னால் இதைப் போலப் பல போலியான இரண்டடி வெண்பாக்கள் வந்திருக்கின்றன. ஆனால், என்னைப் பொருத்தவரை அவற்றில் ஒரே ஒரு கவிதைகூட இந்த வைர வரிகளுக்கு இணையாக முடியாது. எனவே குறள் வெண்பா இந்தப் பேரறிஞரிடம் தொடங்கி அவருடனேயே முடிந்துவிட்டது என்பது என் நம்பிக்கை.’

இருவரின் தமிழ் பற்று

இருவருக்கும் தமிழ் மீது இருந்த பற்று அளவற்றது. தம் முதுமையைக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தில் எழுதிய போப் ‘நானோ முதியவன்; நீங்கள் இளையவர்’ என்றார். தமக்குப் பல்வேறு செயல்திட்டங்கள் இருப்பதாகக் கூறிய அவர் தம் வாழ்நாள் குறைவு என்பதையும் உணர்ந்திருந்தார். ‘ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியும் அல்ல பல’ என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதினார். உ.வே.சாவுக்கு உடல் நலமில்லை என்னும் செய்தியை அறிந்த போப் “என்னைப் போலவே நீங்களும் இலக்கியப் பணிகளே தலையாய மருந்து என்று கருதுவீர்கள் என்று நம்புகிறேன். நம் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் மேலும் சிறந்த பதிப்புகளை வெளியிடும் பணிகளுக்காகவேனும் நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் மீண்டும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்; பிரார்த்திக்கிறேன்” என்று எழுதினார். ‘நம் தமிழ்’ என்று அவர் சுட்டுவது முக்கியமானது. உ.வே.சாவும் தம் முதுமைக் காலத்தில் தமிழே மருந்தாக இருந்ததாகக் கருதி அப்போது பதிப்பித்த நூல்களில் அதைக் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறார்.  

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

உவேசாவை ஒதுக்கலாமா?

பெருமாள்முருகன் 19 Feb 2022

புறநானூற்றின் மூன்றாம் பதிப்பை 1935ஆம் ஆண்டு உ.வே.சா. வெளியிட்டார். ஜி.யு.போப் இறந்து இருபத்தேழு ஆண்டு கடந்த பிறகு வெளியான பதிப்பு அது. அதன் பதிப்புரையில் ஜி.யு.போப்பை நினைவுகூர்ந்து உ.வே.சா எழுதியுள்ளார். “காலஞ்சென்ற ஜி.யு.போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும்” (சாமிநாதம், ப.146) என்பது அவர் குறிப்பு. மேலும் ஜி.யு.போப்பின் நட்பு குறித்து ‘என் சரித்திரம்’ நூலின் ஓரியலில் உ.வே.சா விரிவாக எழுதியுள்ளார். போப்பைக் குறித்த தம் மனப் பதிவுகளை அதில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். “அவர் முதல் முறையாக எழுதிய இக்கடிதத்தால் அவருக்கிருந்த தமிழன்பை ஒருவாறு அளந்தறிய முடிந்தது. தமிழ் நூல்களை நல்ல முறையில் நல்ல உருவத்தில் பதிப்பிக்க வேண்டுமென்ற கருத்துடைய எனக்கு அவர் எழுதியனவெல்லாம் மிகவும் பொருத்தமாகத் தோற்றின” (என் சரித்திரம், ப.785) என்கிறார். ‘ஒருபொழுதும்’ குறளைக் காட்டி அவர் எழுதிய கடிதத்தைக் குறிப்பிடும்போது "எவ்வளவோ காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற ஆசையோடு உழைத்து வரும்போது இடையிலே வாழ்க்கை முடிந்துவிட்டால் என் செய்வதென்ற பயம் அவர் நெஞ்சில் இருப்பதை அக்குறள் வெளிப்படுத்தியது. அவர் இன்னும் பல வருஷங்கள் வாழ வேண்டுமென்று வாழ்த்தினேன்" (மேற்படி, ப.786) என்கிறார்.

இன்னொரு கடிதம் பற்றி எழுதுகையில் ‘அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்துகொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப் பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது’ (மேற்படி, ப.786) என்று கூறுகிறார். பழந்தமிழ் நூல் பதிப்பு பற்றி இருவரின் கருத்துக்களும் ஒத்துப்போயின என்பது இந்நட்புக்குக் கூடுதல் பலமாயிற்று. ‘முதுமைத் தளர்ச்சியிருந்தாலும் தமிழாசை அவர் உடம்பில் ஒரு புதிய முறுக்கை ஏற்றியிருக்க வேண்டும்’ (மேற்படி) என்கிறார் உ.வே.சா.

பாரிஸ் நகரத்திலிருந்து கடிதம் மூலமாக உ.வே.சா.விடம் நட்புகொண்ட ஜூலியன் வின்ஸோனையும் போப்பையும் இணைத்துச் சொல்லும்போது “இருவரிடத்தும் விடாமுயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றன ரென்றெண்ணி வருந்தினேன்” என்றும் “இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று” (மேற்படி, ப.787) என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

உ.வே.சாவின் ஊக்கசக்தி

தமிழ் மீது பேரன்பு கொண்டு ‘உலகத் தாய்மொழிகளின் வரிசையில் தமிழ் தனது தகுதிக்குரிய இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நான் உதவியாக வேண்டும்’ என்று எழுதிய ஜி.யு.போப் பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த உ.வே.சாவுக்கு உத்வேகம் தரும் நண்பராக விளங்கியுள்ளார். தம் வாழ்நாளெல்லாம் தமிழ் நூல்களைக் கற்பதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஆய்வதிலும் செலவிட்ட அவரது பல பரிமாணங்களை உணராமல் திருக்குறள் கடவுள் வாழ்த்து மொழிபெயர்ப்பை மட்டும் கொண்டு தமிழுக்கு எதிரானவராகச் சித்திரிக்கும் வெறுப்பரசியல் இன்று நடந்து வருவது வருத்தமளிக்கிறது. ஜி.யு.போப்பின் வாழ்க்கை வரலாறு, அவரது பணிகள், அவர் மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுகள் எனப் பல நூல்களும் கட்டுரைகளும் தமிழில் வெளியாக வேண்டும். ஜி.யு.போப்புக்கு எதிரான வெறுப்பரசியலுக்கு அவையே பதில் சொல்லும். அவ்வகையில் அவரது தமிழன்பை, ஆளுமைப் பண்பை அறிய உ.வே.சா.வுக்கு அவர் எழுதிய கடிதங்களே சான்று.

உ.வே.சாவின் பணிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் நட்பாக இருந்த ஜி.யு.போப் தம் இறப்பு வரையிலும் தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். தம் புகைப்படத்தை உ.வே.சாவுக்கு அனுப்பிவைத்தார். அனேகமாக உ.வே.சாவின் படத்தையும் அவர் கேட்டு வாங்கியிருக்கக்கூடும். அப்படியானால் புகைப்படத்தில் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட நண்பர்கள் அவர்கள். மணிமேகலை குறித்து நூல் எழுதும் எண்ணம் கொண்டிருந்த அவர் உ.வே.சா. பதிப்பித்த மணிமேகலையைக் கற்றும் ஆய்வுக்கு உட்படுத்தியும் வந்தார். தம் பிரதியில் பல குறிப்புகளை எழுதிவைத்திருந்தார். போப்பின் இறப்புக்குப் பிறகு அவர் மகன் ஜே.ஏ.ஆர்.போப் வழியாக அப்பிரதி (என் ஆசிரியப் பிரான், ப.85) உ.வே.சா.வை வந்துசேர்ந்தது. உ.வே.சா அதைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்துவந்தார். இருவருக்குமான நட்பின் சின்னமாக அப்பிரதி இன்றும் உ.வே.சா நூலகத்தில் இருக்கக்கூடும். 

பயன்பட்ட நூல்கள்:

1. ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி ஒன்று, 2018, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்.
2. உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், பதினொன்றாம் பதிப்பு. 
3. ப.சரவணன் (ப.ஆ.), சாமிநாதம் (உ.வே.சா. முன்னுரைகள்), 2014, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
4. கி.வா.ஜகந்நாதன், என் ஆசிரியப் பிரான், 1983, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.
5. G.U.Pope, F.W.Ellis, Naladiyar, 1958, Madras, The South India Saiva Siddhanta Works Publishing Society.
6. ஜி.யு.போப் எழுதிய கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்த  கமலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி. 

(ஜி.யு.போப் நினைவு நாள்: 11, பிப்ரவரி. உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள்: 19, பிப்ரவரி)

இணைப்பு:

ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையருக்கு ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து கடிதங்களின் மொழிபெயர்ப்பு இது. மொழிபெயர்த்தவர்: கமலா கிருஷ்ணமூர்த்தி.

நன்றி: ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி 1, உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்.

 

கடிதம் 1

                                                                                                               ஏப்ரல் 26, 1895

அன்புள்ள ஐயா,              

அறிவார்ந்த பெருமதிப்பிற்குரிய உங்களது புறநானூற்றுப் பதிப்பை எனக்கு அன்பளிப்பாகத் தந்ததற்கு நான் முன்பே நன்றி தெரிவித்து எழுதியிருக்க வேண்டும்.

உங்களுடைய மிகச் சிறந்த சீவக சிந்தாமணிப் பதிப்பு என்னிடம் இருக்கிறது. அதை நான் என்னுடைய நாலடியார் பதிப்பிற்குத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டும் பார்வை நூலாகக் குறிப்பிட்டுக்கொண்டும் வருகிறேன். பக் Xli (முன்னுரை).

நீங்கள் வேறு ஏதாவது பதிப்பித்திருக்கிறீர்களா? நான் உங்களுடைய பதிப்புகளைக் குறித்து ‘ராயல் ஆசியாட்டிக் சொசைட்டிக்கு’ ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதற்கிடையில் புறநானூற்றுப்  பதிப்பை நன்றாகப் புரியும்படியாகவும்  வாசிக்கத் தூண்டுவதாகவும் ஆக்க முடியுமா? எனக்குத் தமிழ் தெரியும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தாலும் என்னால் பெரும்பாலான பகுதிகளைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்கிறேன். எளிமையாக எழுத உங்களால் முடியுமா? முடியுமானால் நன்கு புரியும்படியாக உள்ள குறிப்புகளும் விளக்கங்களும் உள்ள எளிய கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். பண்டிதர்கள் அல்லாத எங்களிடம் சற்று இரக்கம் காட்டுங்கள்.

சிந்தாமணி பெரும்பாலும் எளிதாகவே இருக்கிறது.

மேலும் அருமையும் பெருமையும் உள்ள நம் தமிழுக்காகத் தொல்காப்பியத்திற்கு ஓர் ஆய்வுப் பதிப்பு வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். 

விதவிதமான எடுத்துக்காட்டுகளோடும் விளக்கக் குறிப்புகளோடும் எளிதில் அணுகக்கூடியதாகவும் அது இருத்தல் வேண்டும். நீங்களும் நானும் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அதை எல்லோரும் அப்படியே வாசித்துவிட முடியுமா?

மேலும் சங்கம் பற்றிய புராணக் கதைகளை விட்டுவிடுவோம். (அவை சுவையானவை; ஆனால், வரலாற்றுத் தகவல்கள் அல்ல) முச்சங்கம் பற்றிய வரலாற்றையோ தமிழ் குறித்த உண்மையான நம்பகமான தகவல்களையோ தொகுக்க முடியுமா? கலித்தொகையில் பெருமளவும் சிலப்பதிகாரத்தில் மிகச்சிறு பகுதியும் நன்றாகவே வந்திருக்கின்றன. பார்க்க என்னுடைய நாலடி பக்கம் xxxix, 260, 257. 

இதுபோலவே மற்ற கவிதைகளிலிருந்தும் நல்முத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம்.

தமிழ் மொழி பற்றிய பழமையானதும் உண்மையானதுமான விவரங்களை எல்லாம் என் புத்தகப் பட்டியல் பற்றிய ஆய்வுகளில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களால் முடிந்தவரை எனக்கு உதவுங்கள். 

நான் எழுதியுள்ளவற்றைப் பார்த்துவிட்டு நீங்கள் இவையெல்லாம் ஓர் அயல்நாட்டானின் அறியாமை என்று எண்ணிச் சிரித்துவிடக்கூடும். ஆனால், உலகத் தாய்மொழிகளின் வரிசையில் தமிழ் தனது தகுதிக்குரிய இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நான் உதவியாக வேண்டும்.

நீங்கள் எனக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியதாகக் கருதி பயன்படுத்திக்கொள்ளப்படும்.

புறநானூற்றின் காலத்தைச் சரியாக வரையறுப்பது எப்படி? அதை எவ்வாறு கையாளுவது என்பதையும் தெரிவியுங்கள்.

அதில் உள்ள பெருந்தேவனார் இயற்றிய முதல் பாடல் நன்றாகவே இருக்கிறது. அது பெருமளவு மாணிக்கவாசகருடையது போலவே இருக்கிறது. அதன் உண்மைத்தன்மை என்ன?

என்னை பொறுத்தருளுங்கள். நம்பிக்கைக்குரிய,

உங்கள் உண்மையுள்ள,
ஜி.யு.போப்

MRRY வெ.சாமிநாத ஐயர்                        
கல்லூரி
கும்பகோணம்
தென்னிந்தியா

கடிதம் 2

பேலியல் கல்லூரி, 
ஆக்ஸ்போர்டு,
 21 அக்டோபர் 1895.

அன்புள்ள திரு. சாமிநாத ஐயர்,              

நீங்கள் எனக்கு அனுப்பிய புறப்பொருள் வெண்பாமாலைக்கு நன்றி. அது இப்போது இங்குள்ள தமிழ் நூலகத்தில் இருக்கிறது. அதைப் படித்து முடிக்க அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.

நானும் பல செயல்திட்டங்கள் வைத்திருக்கிறேன்; ஆனால் நீங்கள் இளையவர்; நானோ முதியவன்.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல, பல!

‘Who know not if their happy lives shall last the day
In fancies infinite beguile the hours away!’

நான் மிகவும் சுகவீனமாக இருக்கிறேன், இருந்தாலும் ஏதேனும் கொஞ்சம் செய்யலாம் என்று நம்புகிறேன்.

உங்கள் பதிப்பு திருத்தமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. பழந்தமிழ் நூல்களெல்லாம் புதிய தமிழர்களுக்கு விளங்கும்படி இருக்க வேண்டுமன்று விரும்புகிறேன். நீங்கள்தான் அதற்கு வழிசெய்ய வேண்டும். நாம் எல்லாவற்றையும் எளிதானவையாக ஆக்குவோம்.

உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதோடு என்றும் உங்களுக்குக் கடப்பாடு உடையவனாக இருப்பேன் என்று உறுதிகூறுவதைத் தவிர வேறு எதுவும் எழுத இயலாத நிலையில் இப்போது இருக்கிறேன்.                                                                                                                         

உண்மையுடன் உங்கள்,
ஜி.யு.போப்

MRRY வெ.சாமிநாத ஐயர்                        
கல்லூரி
கும்பகோணம்
தென்னிந்தியா

கடிதம் 3

             பேலியல் கல்லூரி 
ஆக்ஸ்போர்டு 
ஜன 3, 1896

அன்புள்ள ஐயா,  

நான் உங்களுக்கு நீண்ட காலமாகக் கடிதம் எழுதுவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்துவிட்டேன். என் உடல்நலக் குறைவும் இடைவிடாது தொடரும் வேலைப்பளுவும்தான் அதற்குக் காரணம் என்று கூறிக்கொள்கிறேன். தயைகூர்ந்து என்னை மன்னியுங்கள். 

உங்கள் புறநானூற்றுப் பதிப்பையும் புறப்பொருள் வெண்பாமாலைப் பதிப்பையும் எளிதிற் படித்து இன்புற்று வருகிறேன். அவை இரண்டும் ஒன்றையொன்று அழகாக விளக்குகின்றன.

பாரி, அவன் மகளிர், கபிலர் (பொய்யா நாவிற் கபிலன்) கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார் போன்றவர்களைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். 115 முதல் 120 வரையுள்ள பாடல்களில் காணப்படும் தமிழ் மரபுப் பற்றிய செய்திகள் எனக்கு வேண்டும். 

இத்துடன் இணைத்துள்ள பட்டியலில் X எனக் குறியிட்டுள்ள புத்தகங்களை உங்களால் எனக்கு அனுப்ப முடியுமா? V எனக் குறியிட்டுள்ள புத்தகங்கள் முழுவதையும் உங்கள் உதவியால் நன்கு கற்றுத் தேர்ந்துவிட்டேன்.

அகநானூறு பதிப்புப் பற்றிச் செய்தி ஏதேனும் உண்டா?  முழுமையான சிலப்பதிகாரப் பதிப்பு ஒன்று எனக்கு வேண்டும்.

கலித்தொகை நன்றாக வந்திருக்கிறது.

மதுரைச் சங்கம் பற்றிய முழுமையான வரலாறு தேவை.

ஆக்ஸ்போர்டில் இருந்து என் நாலடி வரப்பெற்றீர்களா? மிகுந்த மதிப்போடும் மரியாதையோடும் உங்களுக்கு நான் அதை அனுப்பி இருக்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்.

பழந்தமிழ் நூல்களின் பட்டியல் ஓரளவாவது முழுமையாக அமைவதற்கு உதவி செய்யும் நோக்கத்தில் அன்புள்ளத்தோடு நீங்கள் அனுப்பும் யாதொன்றுக்கும் நான் உடனடியாக உரிய தொகையை அனுப்பிவிடுவேன்.

அகரவரிசைப் பொருட்பட்டியலோடும் தேவையான விளக்க உரைகளோடும் கூடிய தொல்காப்பியப் பதிப்பு அவசியம் தேவை. சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்பு வெறுமையாக இருக்கிறது.

சிந்தாமணியின் இரட்டைப் பிறவியான சூளாமணி உரிய முறையில் முழுமையாகப் பதிப்பிக்கப்பட வேண்டும். 

உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் 1896ஆம் ஆண்டில் ஆண்டவரின் மிகச் சிறந்த வரங்கள் கிடைக்கப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 

.                                                                 உங்கள் உண்மை நண்பன், 
ஜி.யு.போப்  

MRRY பண்டிட் வெ.சாமிநாதையர்                                                                     
கும்பகோணம் கல்லூரி
தென்னிந்தியா.

கடிதம் 4

இந்தியவியல் நிறுவனம்
ஆக்ஸ்போர்டு 
ஜூன் 6, 1898

எனதருமை நண்பருக்கு,          

உங்களுக்குத் தமிழில் எழுதுவதா, ஆங்கிலத்தில் எழுதுவதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் எண்ணங்களை ஆங்கிலத்தில்தான் முழுமையாக வெளிப்படுத்த முடியும். அதோடு உங்களைப் போன்ற அறிஞர்களுக்கு முன்னால் என்னுடைய மோசமான தமிழ் அறிவை வெளிப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். நான் எழுதியவற்றைப் புரிந்துகொள்வதில் உங்களுக்கு எந்தவிதமான சிரமமும் இருக்காது என்பதில் எனக்குச் சந்தேகமும் இல்லை

I. நான் என்னுடைய திருவாசகப் பதிப்பில் பல இடங்களில் பாடல் அடிகளில் தளை தட்டுவதைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அந்தக் கவிஞருக்கு நல்ல இசை ஞானம் இருந்திருக்கிறது. அதனால் தளை தட்டும் இந்தப் பாடல் வரிகள் எல்லாம் இடைச்செருகல்களாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பாடல்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணியில் நான் ஈடுபடப்போவதில்லை என்றாலும் ஐரோப்பாவில் நாங்கள் எல்லோரும் செவ்வியல் இலக்கியங்களில் வழக்கமாகச் செய்வதைப் போல் தமிழ் அறிஞர்களும் இத்தகைய நூல்களை முழுவதுமாகப் பரிசோதிக்க வேண்டும். கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுக்கும் போது இத்தகைய தவறுகள் கண்டிப்பாக வந்துவிடும். குயிற்பத்துப் பாட்டில் 18ஆவது பாடல் 2ஆவது வரியை நாம் ‘பாதாளம்’ என்று வாசிப்பதற்கு மாறாகப் ‘பாதலம்’ என்று வாசித்தால் தளை சரியாகிவிடும். இது மிகவும் சாதாரணமான தவறுதான். ஆனால், இதைப் போன்ற இருபது தவறுகள் இருக்கின்றன என்பதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

II. தமிழ்க் கவிதை அடிகளின் நேர்த்தியுடனும் அழகின் மகுடமாகவும் விளங்கும் குறள் வெண்பாவைத் திருவள்ளுவர்தான் கண்டுபிடித்து இருப்பார் என்ற என்னுடைய சொந்த அனுமானம் பற்றிய உங்கள் கருத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் காலத்திற்கு முன்பே இத்தகைய இரண்டடி வெண்பாக்கள் இருந்தனவா என்பதைப் பற்றி ஐயத்திற்கிடமின்றி உங்களால் சொல்ல முடியுமா? அவருக்குப் பின்னால் இதைப் போலப் பல போலியான இரண்டடி வெண்பாக்கள் வந்திருக்கின்றன. ஆனால், என்னைப் பொருத்தவரை அவற்றில் ஒரே ஒரு கவிதைகூட இந்த வைர வரிகளுக்கு இணையாக முடியாது. எனவே, குறள் வெண்பா இந்தப் பேரறிஞரிடம் தொடங்கி அவருடனேயே முடிந்துவிட்டது என்பது என் நம்பிக்கை.

III. நான் என்னுடைய புறநானூற்று மொழிபெயர்ப்பிலிருந்து சில சிதறல்களை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். விளக்கம் கூற இயலாதவை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்த சில பாடல்களைத் தவிர மற்றவற்றை எல்லாம் நான் முகப்பு அட்டையிலிருந்து இறுதிப் பக்கம் வரை முழுமையாக வாசித்துவிட்டேன். நான் மற்ற ஆங்கிலக் கவிதைகளை அறிந்திருப்பதைப் போலவே புறநானூற்றுக் கவிதைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்துவிட்டேன் என்று எண்ணுகிறேன். ஆனால், அவற்றில் வரலாற்று தகவல்கள் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. அவற்றுள் சில பாடல்கள் வைரவரிகள்.

IV. நீங்கள் உங்கள் முன்னுரையில் குறிப்பிட்டிருந்த ஐங்குறுநூறு போன்ற பிற பாடல்களும் எனக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? எனக்கு ஆறாம் பாடலும் எட்டாம் பாடலும் கிடைத்தன. மற்ற பாடல்களுக்காகக் காத்திருக்கிறேன்.

V. புறப்பொருள் வெண்பாமாலையை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? நான் அதை மொழிபெயர்த்துவிட்டேன்.  ‘ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையோடு சேர்த்து அதைப் பதிப்பிக்கப் போகிறேன். அது பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன? உங்கள் வழிகாட்டுதல்படியே அதை எழுதிப் பதிப்பிப்பேன்.

VI. இப்பொழுது நம்மிடம் உள்ள தொல்காப்பியம் எந்த அளவுக்குச் சரியான பதிப்பு என்பதை அறிந்துகொள்வதில் நான் மிகவும் கவனம் கொள்கிறேன். முழுப் புத்தகமும் பதிப்பிக்கப்பட்டுவிட்டதா?  அது தற்போது கிடைக்கிறதா? பொருளதிகாரத்தின் காலம் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? (தாமோதரம் பிள்ளை பதிப்பு)

VII. நீங்கள் தாமோதரம் பிள்ளை அவர்கள் பதிப்பித்த வீரசோழியம் பற்றி அறிந்திருப்பீர்கள். அது தொல்காப்பியத்திற்கு இணையானதா, அதைவிட மேம்பட்டதா?

உங்களுடைய நேரத்தையும் பொறுமையையும் சோதிப்பதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் தமிழ் இலக்கியங்கள் பற்றிய சற்றேறக் குறைய முழுமையான தரவுகளைத் தர வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன். மதராஸில் உள்ளவர்கள் திருமூலருக்கும் பட்டினத்துப் பிள்ளைக்கும் அதிக அளவு முக்கியத்துவம் தருவதைப் பார்க்கிறேன். ஆனால், அவை செவ்வியல் இலக்கியங்கள் இல்லை அல்லவா? நான் சீவக சிந்தாமணி, சூளாமணி, சிலப்பதிகாரம் ஆகிய மூன்று சமண இலக்கியங்களையும் வாசித்திருக்கிறேன். இவை தவிர இன்னும் ஒன்றிரண்டு செவ்வியல் இலக்கியங்கள் இருக்கக்கூடும். அவை எனக்குக் கிடைக்கவில்லையோ என்று நினைக்கிறேன். எனது இந்தப் பட்டியலை முழுமையாக்க உங்களால் முடியுமா? மூதுரை மாதிரியான நீதி நூல்களின் முழுப் பட்டியலும் அவை எங்கிருந்து கிடைத்தன என்ற நம்பகமான தகவல்களோடும் குறிப்புரைகளோடும் எனக்கு வேண்டும். என்னிடம் பல நூல்கள் உள்ளன. அவற்றுள் பலநூல்களை நான் தவிர்த்துவிட்டேன். இறுதியாக நான் திருவாய்மொழியைப் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். வைணவ இலக்கியப் பரப்புக்கு எல்லையே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அவை செவ்வியல் இலக்கியங்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவற்றுள் சில உங்களிடம் அச்சகத்தில் இருக்கக்கூடும். மெய்கண்டார் (சிவ) பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் என்னை நீண்ட காலமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. மாணிக்கவாசகரின் வரலாறு பற்றிய எனது குறிப்புகளிலிருந்து நீங்கள் அதனைத் தெரிந்து கொள்ளலாம். என் கருத்துப்படி அவற்றில் பல காலத்திற்கு ஒவ்வாதவை; நடைமுறைக்குப் பொருந்தாதவை; தீங்கு பயப்பவை. ஆனால், உன்னதமான எண்ணங்களின் இருப்பிடமாக அது இருக்கிறது.

கடிதத்தின் இறுதிப் பகுதிக்கு வந்திருக்கும் நிலையில் நாம் இதுவரை கண்டிராத அருள் ஒளியினையும் இறைத்தொடர்பையும் இப்போதே உணர்கிறேன். ஆண்டவனின் நல்லாசி எப்பொழுதும் உங்களுக்கானதாக இருக்கட்டும்

நம்பிக்கைக்குரிய
உங்கள் உண்மை நண்பன்
ஜி.யு.போப் 

கடிதம் 5

இந்தியவியல் நிறுவனம்  
              ஆக்ஸ்போர்டு  
மே 5, 1899

எனதருமை சுவாமிநாத ஐயர்,       

நான் உங்களுக்குத் தமிழில் எழுத இயலும். இங்குத் தமிழ்த் தட்டச்சு இல்லை. தற்போது என்னால் கையால் எழுத முடியவில்லை.

நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு உங்களுக்கு என் புகைப்படத்தை அனுப்பியிருந்தேன். அது உங்களுக்குக் கிடைத்ததா என்ற தகவல் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அதைப் பற்றித் தெரிந்து மகிழ்ச்சி அடைவேன். அது உங்களுக்குக் கிடைத்திருக்குமா என்று கொஞ்சம் கவலையாக இருக்கிறது. என் திருவாசகப் பதிப்பு தற்போது அச்சில் இருக்கிறது. அதை விரைவுபடுத்தத் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறேன். நான் உங்கள் நாட்டு இறைப் பற்றாளர், இறையருள் பெற்ற முனிவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஆங்கிலத்தில் உரிய மதிப்போடு கொண்டுவர முயன்றிருக்கிறேன். நான் ஆங்கில அறிஞர்கள் போற்றும் அளவுக்குத் தேவையான விவரங்களை எல்லாம் சேகரித்துத் தர முயன்றிருக்கிறேன். அதோடு இது உங்களுக்குச் சுவாரசியம் அளிப்பதாகவும் உங்கள் அங்கீகாரத்திற்கு உரியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் வழக்கமாகப் பயன்படுத்திவரும் உங்களுடைய பதிப்புகளான சீவகசிந்தாமணி, புறநானூறு, மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் எனக்குத் துணைபுரிந்ததற்கு நான் எந்த அளவுக்கு உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன் என்று என்னால் சொல்லமுடியவில்லை. எனக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நீங்கள் சொல்வதைப் போல ஒட்டுமொத்த இலக்கியங்களிலும் அதிகமாகக் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் மணிமேகலை தொடர்பான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். சீவக சிந்தாமணி எவ்வாறு முற்ற முழுக்கச் சமணக் காப்பியமாக இருக்கிறதோ, அதே போல மணிமேகலையும் முழுமையாகவும் கோட்பாட்டுரீதியிலும் புத்த மதத்தைச் சார்ந்ததாவெனத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

எனக்கு இன்னும் ஆயுளும் ஆரோக்கியமும் இருந்தால் மணிமேகலையைப் பற்றி ஒரு சிறு நூல் எழுதுவேன். நான் புறநானூற்றை முடித்துவிட்டேன். அது பிற்காலத் தமிழ்க் கவிதைகளுக்கு முன்னோடியாக இருப்பதைக் காண முடிகிறது. நான் ‘ஆசியாடிக் ராயல் சொஸைட்டி’ பத்திரிகையில் இதைப் பற்றியும் புறப்பொருள் வெண்பாமாலை பற்றியும் தற்போது எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

மதராசில் இவற்றின் மறுபதிப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். என்னிடமும் சிற்சில பழமையான நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் திருவாசகத்தின் மீதே நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பகால புத்த மதத்திலிருந்த நல்ல கருத்துகள் எல்லாற்றையும் களைந்துவிட்டுப் புத்தெழுச்சி பெற்றுள்ள தற்போதைய புத்த மதத்தவர்கள் மேல் எனக்குள்ள அவநம்பிக்கையை நீங்களும் பகிர்ந்துகொள்வீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. அவர்கள் நமது கடவுளையும் ஆன்மாவையும் அழிக்க முடியாத மனசாட்சியையும் நம்மிடம் இருந்து பறித்துவிடுவார்கள். உங்களாலும் என்னாலும் இவற்றை இழக்க முடியாது. என்னுடைய புத்தகம் எந்த அளவுக்கு இந்தியாவில் விற்பனையாகும் என்று எனக்குத் தெரியாது. இங்கிலாந்தில் விற்க முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இது அதிகம் செலவு பிடிக்கும் தொழில். ஆதலால் தமிழர்களில் சில நண்பர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நீங்கள் உடல் நலக் குறைவாக இருக்கிறீர்கள் என்பது குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும்இலக்கியப் பணிகளே தலையாய மருந்து என்று கருதுவீர்கள் என்று நம்புகிறேன். நம் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் மேலும் சிறந்த பதிப்புகளை வெளியிடும் பணிகளுக்காகவேனும் நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் மீண்டும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்; பிரார்த்திக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் உங்களால் எனக்கு ஒருவரியாவது எழுத முடியுமோ அப்போது எழுதுங்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நீங்கள் நிச்சயமாக நம்பலாம்.

நம்பிக்கைக்குரிய
மிகவும் உண்மையுள்ள உங்கள்
ஜி.யு.போப்

 

தொடர்புடைய கட்டுரைகள்

உவேசாவை ஒதுக்கலாமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


4






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

K Chitra   2 years ago

ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. இந்த நட்பை குறித்து நான் இதுவரை அறிந்ததே இல்லை. மிக்க நன்றி 🙏

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

LAKSHMAN T   2 years ago

உ.வே.சா வுக்கும், போப்புக்குமான ஆசிரியர் மாணவர் உறவு, கருத்து பரிமாற்றம், மதிப்பீடு போன்றவைகள் புதிய தகவல்கள். வாசிக்க வாசிக்க ஆர்வத்தையும் அறிவையும் அதிகரிக்கின்றன. நன்றி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Kumaresan   2 years ago

உடல்நிலை சரியில்லாத போதுநண்பரே நமது இலக்கியப் பணி தானே நமக்கு ஆகச்சிறந்த மருந்து என்று கூறிய இடத்தை வாசிக்கும் போதெல்லாம் மேனி சிலிர்த்தது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

தேர்தல் வரலாறுசமூக மாற்றம்வத்திராயிருப்புபனிக் குளிர்உட்கார்வதற்கான உரிமைவேலை வாய்ப்புவெள்ளி விழாஇக்ரிசாட்பிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிஆழ்வார்கள்ங்கொரொங்கொரோவியூக அறிக்கைமறைமுக வரிஆலஸ் பயாலியாட்ஸ்கிஎலக்ட்ரான்இந்தியா டுடே கருத்தரங்கம்போட்டி தொடரட்டும்உரையாடு உலகாளுஇந்தித் திணிப்புரோபோட் கடைகள்பெரும்பான்மைவாதம்அனில் அம்பானிபருவ இதழ்கள்பிரேர்ணா சிங்மோடி அரசின் செயல்சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?3ஜி சேவைஓம் பிர்லாசந்திராயன் சரிபயிற்சி மையங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!