இருபதாம் நூற்றாண்டு அரசியல், சமூக வரலாற்றை வடிவமைத்ததில் பழந்தமிழ் இலக்கிய நூல்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. குறிப்பாகத் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு ஆகியவை. இவற்றுள் புறநானூற்றுக்குத்தான் முதன்மை இடம். இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு ஏராளமான ஆதாரங்களைக் கொண்ட நூல் இது. மூவேந்தர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசர்களை நேரடியாகப் பாடிய பாடல்களைக் கொண்டது. தமிழ்ச் சமூக வரலாற்றுக்கும் பண்பாட்டு வரலாற்றுக்கும் தரவுகளை உள்ளடக்கியது. சமகாலத்தைக் கட்டமைப்பதற்கான விழுமியங்களை வழங்கிய நூல். எல்லாவற்றையும் உள்ளடக்கிய வரலாற்றுக் கருவூலம் அது.
தமிழர்களுக்கு வரலாறு உண்டு
புறநானூறு 1894-ம் ஆண்டு அச்சில் வெளியாயிற்று. பதிப்பாசிரியர் உ.வே.சாமிநாதையர். விடுதலைப் போராட்டக் குரல்கள் எழுந்து பரவிக்கொண்டிருந்த காலம் அது. இந்தியர்களுக்கு வரலாறு இல்லை, ஆட்சிசெய்யத் தெரியாது, நிர்வாகத் திறன் கிடையாது என்னும் வாதம் ஆங்கிலேயர் தரப்பில் வைக்கப்பட்டது. வரலாற்று ஆதாரங்களான இலக்கியம், கல்வெட்டு, சாசனம், கட்டிடக் கலை உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதி ‘எங்களுக்கு வரலாறு, பண்பாடு, மொழி, ஆட்சிமுறை எல்லாம் உண்டு’ என நிறுவும் முயற்சியில் இந்திய அறிவாளர்கள் இறங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி இருபதாண்டுகளும் இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளும் இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்ட காலம். தமிழ்நாட்டிலும் இந்தப் போக்கு எதிரொலித்தது. அதற்குப் பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகள் பேருதவியாக அமைந்தன.
புறநானூற்றைப் பதிப்பித்த உ.வே.சாமிநாதையர் அந்நூலை இலக்கியமாக மட்டும் கருதவில்லை. அக்காலச் சூழலுக்குப் பெரிதும் பயன்படும் தரவு நூல் என்பதை முன்பே உணர்ந்திருந்தார். முதற்பதிப்பின் முன்னுரையில் ‘இந்நூலால் பண்டைக் காலத்து இத்தமிழ்நாட்டிலிருந்த சேர, சோழ, பாண்டியர்களாகிய முடியுடைவேந்தர், சிற்றரசர், அமைச்சர், சேனைத் தலைவர், வீரரென்கிற பலருடைய சரித்திரங்களும் கடையெழு வள்ளல்களின் சரித்திரங்களும் கடைச்சங்கப் புலவர் பலருடைய சரித்திரங்களும் அக்காலத்துள்ளாருடைய நடை முதலியனவும் இன்னும் பற்பலவும் நன்கு புலப்படும்’ (சாமிநாதம், ப.125) என்று எழுதினார்.
அப்போது இருந்த அறிவுச்சூழல் வரலாற்று ஆய்வில் ஈடுபட அவரையும் தூண்டியது. புறநானூறு போன்ற ஒருநூல் கையில் கிடைத்திருக்கையில் யாருக்கும் தோன்றும் எண்ணம்தான். ‘புறநானூற்றிலுள்ள செய்திகளைக் கொண்டு தமிழ்நாட்டுச் சரித்திரத்தை அறிந்து கொள்ளலாமென்பதையும் பலவகை ஆராய்ச்சிகளுக்கு அவை உபகாரமாகும் என்பதையும் உணர்ந்தபோது அத்துறையில் புகுந்து ஆராயலாம் என்று தொடங்கினேன்’ (என் சரித்திரம், ப.771) என்று தனக்கு உண்டான ஆர்வத்தைக் கூறியுள்ளார். எட்டுத்தொகை நூல்களில் புறநானூற்றைத்தான் முதலில் பதிப்பித்தார். ஏற்கனவே கலித்தொகையைச் சி.வை.தாமோதரம் பிள்ளை வெளியிட்டிருந்தார். பதிப்பிக்காத பிற நூல்களின் சுவடிப் பிரதிகளும் அவர் கைவசம் இருந்தன. ஆகவே, வரலாற்றுத் துறையில் ஈடுபட்டு ஆராய்ச்சி செய்யலாம் என அவருக்குத் தோன்றியது. ஆனால், ‘ஆதார நூல்களை வெளிப்படுத்துவதுதான் என் பணி; ஆராய்ச்சி செய்வது என் பணியல்ல’ என்று முடிவுசெய்து தம் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.
முதற்பதிப்பின் முன்னுரையில் ‘இத்தமிழ்நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்து கொள்ளுதலிலும் தெரிவித்தலிலுமே பெரும்பாலும் காலங்கழித்து உழைத்துவரும் உபகாரிகளாகிய விவேகிகள் (ஆய்வாளர்கள்) இந்நூலை நன்கு ஆராய்ச்சி செய்வார்களாயின் இதனால் பலர் வரலாறுகள் முதலியன தெரிந்துகொள்ளுதல் கூடும்’ (சாமிநாதம், ப.127) என்றெழுதியும் புறநானூற்றால் அறிய வருபவை எனச் செய்திகளைத் தொகுத்துப் பட்டியலிட்டுக் கொடுத்தும் தம் ஆர்வத்தைப் புறந்தள்ளிச் சமாதானப்பட்டார். புறநானூறு வெளியான காலத்தில் ‘தமிழ்நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்து கொள்ளுதல், தெரிவித்தல்’ ஆகியவற்றில் பல ‘விவேகிகள்’ (அறிவாளர்கள்) ஈடுபட்டுவந்தனர் என்பதும் இதனால் தெரிகிறது.
உ.வே.சா.வின் அனுமானம் தவறவில்லை. அவர் எதிர்பார்ப்புக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்வுகளைப் புறநானூறு உருவாக்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு பல கட்டுரைகள் எழுதப்பட்டன. ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’ என்னும் நூலை வி.கனகசபை ஆங்கிலத்தில் எழுதினார். சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்ப் புலமை உலகில் அடையாளப்பட்டிருந்த உ.வே.சா. மேலும் மதிப்புப் பெற்றார். புலமை உலகைக் கடந்து அன்றைக்கிருந்த அறிவாளர்கள், செயல்பாட்டாளர்கள் எனச் சகலருக்கும் அறிமுகமானார். ‘புத்தகம் வெளிவந்த பின்னர் எனக்குப் பல புதிய நண்பர்கள் பழக்கமாயினர்’ (என் சரித்திரம், ப.771) என்கிறார் உ.வே.சா.
ஜி.யு.போப் நட்பு
நான்காம் தமிழ்ச் சங்க நிறுவனரும் ஜமீன்தாருமாகிய பொ.பாண்டித்துரைத் தேவர் புறநானூறு வெளியீட்டுக்குப் பிறகே உ.வே.சா.வுக்கு அறிமுகமானார். அடுத்த நூலை வெளியிடுவதற்கு 500 ரூபாய் பணமும் அனுப்பினார். புறநானூற்று பதிப்பால்தான் ஜி.யு.போப் அறிமுகம் உ.வே.சா.வுக்குக் கிடைத்தது. போப்பின் இறப்பு வரை இருவருக்கும் கடிதத் தொடர்பு இருந்தது. புறநானூற்றில் ஈடுபட்ட ஜி.யு.போப் பெற்ற ஊக்கத்தை அவர் எழுதிய கடிதங்கள் உணர்த்துகின்றன. புறநானூற்றின் மூன்றாம் பதிப்பு முன்னுரையில் ‘காலஞ்சென்ற ஜி.யு.போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும். அவர் இப்புத்தகம் வெளிவந்த காலத்தில் இப்புத்தகத்தைப் பாராட்டி அடிக்கடி எனக்கு எழுதுவதுண்டு. இதிலுள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றார். ஒவ்வோர் ஆங்கில வருஷப் பிறப்பன்றும் இந்நூற் செய்யுட்களுள் ஒன்றை மொழிபெயர்த்து எனக்குச் சில வருஷங்கள் வரையில் அனுப்பி வந்தார்’ (சாமிநாதம், ப.146) என்று உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். ‘என் சரித்திம்’ நூலில் ஜி.யு.போப்பின் நட்புக்குச் சில பக்கங்களையே ஒதுக்கியுள்ளார். அவர் எழுதிய கடித வாசகங்களின் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளார்.
புறநானூற்றுப் பதிப்புக்குப் பிறகு பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்னும் வேண்டுகோள் பல தரப்பிலிருந்தும் உ.வே.சா.வுக்கு வந்தது. தவிர்க்க இயலாத ஆளுமையாக உ.வே.சா. உருவானார். 1942-ல் உ.வே.சா.வின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் கலியாணசுந்தரையர் புறநானூற்றின் நான்காம் பதிப்பை 1950-ல் வெளியிட்டார். அதன் முன்னுரையில் ‘அவர்களுடைய (உ.வே.சா.) பதிப்பு நூல்களுள்ளே இந்நூலைப் பதிப்பித்தவுடன் தமிழ்நாட்டினுடைய பாராட்டு அவர்களுக்கு மிகுதியாகக் கிடைத்ததென்றும் அவர்களுடைய புகழ் வளர்ச்சி யுற்றதென்றும் தமிழ் அன்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்’ (ப.vii) என்று கலியாணசுந்தரையர் குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பாளர் எனும் தமிழ் கொடை
புறநானூறு அவ்வளவு கவனம் பெற்றது என்ற போதும் அதன் இரண்டாம் பதிப்பை உடனடியாக அச்சிடவில்லை. ஒவ்வொரு நூலுக்கும் மட்டுமல்ல, ஒரு நூலின் அடுத்தடுத்த பதிப்புக்கும் நீண்ட காலம் எடுத்துக்கொள்வது உ.வே.சா.வின் இயல்பு. பதிப்பாசிரியருக்கு உரிய பொறுமையோடு பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1923-ம் ஆண்டு புறநானூற்றின் இரண்டாம் பதிப்பை உ.வே.சா. வெளியிட்டார். பல்வேறு திருத்தங்கள், சேர்க்கைகள், அகராதிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டது இப்பதிப்பு.
இரண்டாம் பதிப்பு வெளியான காலத்தைப் பற்றி ‘இந்நூல் முதற்பதிப்பு வெளியான காலத்தின் நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் எத்தனையோ மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன’ (சாமிநாதம், ப.136) என்று சூழல் மாற்றத்தை உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். என்னென்ன வகையில் மாறுபாடுகள் என்பதைப் பற்றி விரிவாக எழுதவில்லை. அரசியல் சூழல் சார்ந்த மாறுபாடுகளும் அதற்குள் அடக்கம் என்பதை உய்த்துணரலாம். அந்த மாறுபாடுகளுக்கு எல்லாம் புறநானூறும் முக்கியக் காரணம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
இரண்டாம் பதிப்பு வெளியானபோது தமிழ்நாட்டின் அரசியல் வேறொரு வடிவம் பெற ஆரம்பித்திருந்தது. பழம்பெருமை மிக்க தமிழர்கள் பார்ப்பன ஆதிக்கத்தால் கீழ்நிலைக்கு வந்தனர் என்னும் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்தோட்டம் கொண்ட திராவிட அரசியல் முதன்மை பெற்றது. அவ்வரசியலின் மையமாகிய தமிழர்களின் பழம்பெருமைக்கு ஆதாரமாகப் புறநானூறு அமைந்தது. தமிழர் வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, வாழ்வியல் விழுமியங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துப் பேசப் புறநானூற்றுப் பாடல்கள் உதவின. ‘புறநானூற்றுத் தமிழன்’ என்றே திராவிட அரசியல் அடையாளப்படுத்தியது.
விவரித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏற்ற சம்பவங்களும் நாடகக் காட்சிகளும் புறநானூற்றில் நிறைந்திருந்தன. ஒவ்வொரு பாடலும் பேசுவதற்கு ஏதோ ஒரு செய்தியை உள்ளடக்கி இருந்தது. தமிழர் வீரம், மானம், கொடை, கல்வி, நட்பு என அனைத்து மேன்மைகளுக்கும் புறநானூறு சான்றாயிற்று. திராவிட இயக்கப் பேச்சாளர்களுக்கு இது பெரிதும் கைகொடுத்தது. உணர்ச்சிகரமான பேச்சுப் பாணிக்கு உரிய கருப்பொருள்களைப் புறநானூறு கொடுத்தது. அரசியல் நிகழ்ச்சிகளிலும் கல்வி நிறுவன விழாக்களிலும் புறநானூற்றுக் காட்சிகள் நாடகமாயின. வீரம், மானம், நட்பு, அரசர் புலவர் உறவு எனப் பல கோணங்களுக்கும் புறநானூற்றுப் பாடல்களில் இடம் இருந்தது.
தமிழ்ப் பெண்களின் வீரத்திற்கும் சாகசத்திற்கும் எடுத்துக்காட்டுகள் இருந்தன. ‘கெடுக சிந்தை கடிதிவள் துணிவே’ (279) பாடல் எத்தனை முறை மேற்கோள் காட்டப்பட்டிருக்கும், அது எத்தனை விதமாக நடிக்கப்பட்டிருக்கும் என்று கணக்கிடவே முடியாது. கடையெழு வள்ளல்களின் கதைகள் பேச்சு, எழுத்து, நடிப்பு என எல்லா வடிவங்களிலும் பரவின. இப்படிப் பல. உடனே கட்டுரை எழுதித் தர வேண்டும் என்றால் புறநானூற்றின் ஒரே ஒரு பாடலை எடுத்து எழுதுவது உ.வே.சா.வுக்கே எளிதாக இருந்துள்ளது. அவன் யார்?, ஒருவன்தானா?, உயிர்மீட்சி, வல்வில் ஓரி, புலவர் தைரியம், அபசாரத்திற்கு உபசாரம் முதலிய கட்டுரைகள் எல்லாம் புறநானூற்றின் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு எழுதப்பட்டவை.
புறநானூற்றில் இடம்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தொடர் தமிழர் கோட்பாட்டு வாசகமானது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், உண்பது நாழி உடுப்பவை இரண்டே எனப் புறநானூற்றின் பல தொடர்கள் மேற்கோள் காட்ட ஏற்றவையாக இருந்தன. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்’, ’உண்டால் அம்ம இவ்வுலகம்’, ‘படைப்பு பல படைத்து’ போன்ற பல பாடல்கள் முழுமையும் எடுத்துக்காட்ட வாகாக அமைந்தன. புறநானூற்றின் எந்தப் பாடலும் பயன்பாடு அற்றதாக இல்லை. இலக்கிய நோக்கிலோ அரசியல் பார்வையிலோ ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒருவிதப் பயன்பாடு உருவாயிற்று.
புறநானூற்றில் இரு பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பாடல்களுக்கு தொடக்கம் இல்லை; சிலவற்றிற்கு முடிவுப் பகுதி இல்லை. இடையில் சில அடிகள் சிதைந்தவை பல பாடல்கள். உரையோ முதல் இருநூற்று அறுபத்தாறு பாடல்களுக்கு மட்டுமே கிடைத்தது. அதிலும் பல குழப்பங்கள். உரையாசிரியர் யார் என்றும் தெரியவில்லை. இந்நிலையில் தமக்குக் கிடைத்த மூலம் மட்டும் கொண்ட ஐந்து சுவடிகளையும் உரையோடிருந்த பதினொரு சுவடிகளையும் தீர ஆராய்ந்து முடிந்தவரை துலக்கிப் புறநானூற்றை உ.வே.சா. பதிப்பித்தார். தொடர் தேடலில் மேலும் கிடைத்த மூலப்பிரதி மூன்று, உரைப் பிரதி இரண்டு ஆகிய ஐந்தையும் கொண்டும் புறநானூற்றையும் பிற நூல்களையும் ஒப்பிட்டும் ஆராய்ந்து இரண்டாம் பதிப்பை 1923-ல் சிறப்பாக வெளியிட்டார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1935-ல் மூன்றாம் பதிப்பை வெளியிட்டார். அப்பதிப்புக்குக் கூடுதலாகச் சுவடிகள் கிடைக்கவில்லை எனினும் திருத்தங்கள், புதிய பகுதிகள், அகராதிகள் சேர்த்துப் பதிப்பைச் செம்மையாக்கினார். ஆய்வுகளுக்கு மட்டுமல்ல, புறநானூற்றின் பிறரது பதிப்புகள், உரைகள் அனைத்திற்கும் உ.வே.சா.வின் பதிப்பே மூலமாயிற்று. இன்று வரைக்கும் அதற்கு நிகரான பதிப்பு வேறொன்றில்லை; இனியும் தோன்றப் போவதில்லை.
தம் பதிப்புக்குப் பிறகு புறநானூறு பெற்ற வாழ்வை, அது ஏற்படுத்திய தாக்கத்தை முழுமையாக உ.வே.சா. உணர்ந்திருந்தார். மூன்றாம் பதிப்பு முன்னுரையில் அதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். ‘அப்பதிப்பு (முதற்பதிப்பு) வெளிவந்த பின்னர் இன்றுவரையில் தமிழ்நாட்டின் சரித்திரச் செய்திகளை அறிவதற்கு இந்நூல் இத்தனை வகையாகப் பயன்பட்டிருக்கின்ற தென்பதைத் தமிழ்நாட்டினர் நன்கு அறிவர்’ (சாமிநாதம், ப.145) என்றெழுதும் அவர் அது பயன்பட்ட விதங்களைப் பற்றியும் சொல்லத் தவறவில்லை.
‘தமிழ்ப் புலவர் வரலாறுகளையும் தமிழ்ப் பேரரசர், சிற்றரசர், உபகாரிகள் முதலியோர்களுடைய சரித்திரங்களையும் பண்டைத் தமிழருடைய ஒழுக்க வழக்கங்களையும் இதிற் கண்ட ஆராய்ச்சியாளர் பலர் அவற்றைத் தனித்தனியே தொகுத்தும் விரித்தும் விரவுவித்தும் அமைத்துப் பல வகையான சரித்திரங்களையும் ஆராய்ச்சி நூல்களையும் சிறுவர்களுக்குரிய புத்தகங்களையும் வெளியிட்டிருக்கின்றனர்’ (மேலது) என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். முதற்பதிப்பு வெளியீட்டின்போது இந்நூல் எப்படியெல்லாம் பயன்படும் என்று எதிர்பார்த்தாரோ அது நிறைவேறிய திருப்தியைப் பெற்றார்.
புறநானூறு; திராவிடம்- தலித்தியம்
இந்நூலின் அரசியல் பயன்பாடு குறித்து உ.வே.சா. எதுவும் சொல்லவில்லை. 1920களில் எழுச்சி பெற்ற திராவிட அரசியல் போக்குகள் பற்றி அவர் தெளிவாகவே அறிந்திருப்பார். அவ்வரசியல் கொள்கைகளில் உ.வே.சா.வுக்குச் சிறிதும் உடன்பாடு இருந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக அரசியல் விஷயங்களில் ஒருபோதும் தம் எண்ணத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உ.வே.சா. வெளிப்படுத்தியதில்லை. அரசைச் சார்ந்திருந்து தம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளும் வாழ்முறையையே பின்பற்றினார். ஆகவே திராவிட அரசியல் குறித்தும் எந்தக் குறிப்பும் அவர் எழுத்துக்களில் இல்லை. ஆனால் தாம் பதிப்பித்த ஒரு நூல் பொதுவில் பயன்படும் விதம் அவருக்குப் பெருமிதத்தைக் கொடுத்தது.
தன் 80-ம் வயதில் புறநானூற்றின் மூன்றாம் பதிப்பை வெளியிட்ட அவர் ‘இவ்வொரு நூல் இத்துணை ஆராய்ச்சிகளுக்கு இடங்கொடுப்பதையும் இதனை வெளியிடும்படி நேர்ந்த திருவருட்டிறத்தையும் எண்ணும் போது தமிழ்ப்பணியை இடையீடின்றிச் செய்து வருங்கால் இடையிடையே பலவகையால் தோன்றும் துன்பங்களை மறந்துவிடற்குரிய பெரிய ஆறுதல் எனக்கு உண்டாகின்றது’ (மேலது) என்று எழுதியுள்ளார். அவரைப் பொருத்தவரையில் இதை யார்யார் பயன்படுத்துகிறார்கள், எப்படியெல்லாம் பயன்படுகின்றது என்பவற்றைப் பற்றி அக்கறையில்லை. தாம் பதிப்பித்த நூல் பலவிதங்களில் பயன்படுகின்றது என்பது மட்டுமே அவருக்குப் போதுமானது. புறநானூற்றின் விரிவான பயன்பாட்டைத் தம் தமிழ்ப்பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் துன்பம் போக்கும் ஆறுதலாகவும் கருதியுள்ளார்.
தாம் பதிப்பித்த வேறு எந்த நூல் குறித்தும் இத்தகைய மனநிறைவுச் சொற்களை உ.வே.சா. கூறவில்லை. புறநானூறு வெளியான பின் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலம் உ.வே.சா. வாழ்ந்தார். தம் வாழ்நாளிலேயே புறநானூற்றின் பரவலை, செல்வாக்கைக் கண்ணாரக் கண்டுவிட்டார். அவர் காலத்திற்குப் பின்னும் புறநானூற்றின் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. திராவிட அரசியலோடு அது நின்றுவிடவில்லை. 1990களில் தலித் அரசியல் மேலெழுந்தபோது புறநானூற்றின் 335-ம் பாடலின் ‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை’ என்னும் தொடர் பெரிதும் மேற்கோள் காட்டப்பட்டது. பெண்ணியக் கோட்பாடு பரவலானபோது பெண்களின் பொதுவாழ்வு பற்றிய பழைய நிலைக்குப் புறநானூற்று அவ்வையார் உள்ளிட்ட புலவர்கள் சான்றாயினர்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் புறநானூறு பின்தங்கிவிடவில்லை. கீழடி அகழ்வாய்வுக்குப் பிறகு புறநானூறு கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அகழ்வாய்வுச் சான்றுகளைப் பொருத்திப் பார்க்கப் புறநானூற்றுத் தகவல்கள் உதவுகின்றன. சிந்துவெளி நாகரிக ஆய்வில் அதைத் திராவிட நாகரிகம் என்று நிறுவுவதற்குப் புறநானூற்றுச் செய்திகள் பயன்படுகின்றன. அதில் முனைந்து நிற்கும் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் புறநானூற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். புறநானூற்றுப் பாடல்கள் இப்போது மீள்பார்வைக்கு உள்ளாகின்றன. தமிழர் நாகரிகத்தை உலகளவில் ஒப்பீடுசெய்யும் நோக்கு தோன்றியுள்ளது. அதற்குப் புறநானூறு முக்கிய ஆதாரமாகி உள்ளது.
வேண்டும் கூடுதல் கவனம்!
இவ்வாறு நூற்றாண்டு கடந்தும் அரசியல், சமூக வரலாற்றுக்குப் பயன்பட்டு உயிர்ப்போடு விளங்கிவரும் புறநானூற்றைப் பதிப்பித்துக் கொடுத்தவராகிய உ.வே.சாமிநாதையர் பெயரில் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிறது. சென்னை, மாநிலக் கல்லூரியில் அமைந்துள்ள சிலைக்கு அவர் பிறந்த நாளில் (பிப்ரவரி, 19) அரசு சார்பாக மரியாதை வழங்கப்படுகிறது. எப்போதும் அரசு நிகழ்வுகளுக்கு ஒருவிதச் சடங்குத்தன்மை உண்டு. எனினும் இவ்வாறு அவரை நினைவுகூர்வது பாராட்டத்தக்கது. அது போதுமானதா? உ.வே.சா. பதிப்பித்த நூல்களும் எழுதியவையும் கிட்டத்தட்ட நூறைத் தொடுகின்றன. அவற்றை மையப்படுத்திய கருத்தரங்குகள், ஆய்வுரைகள் நிகழ வேண்டாமா? நூல் வெளியீடுகள், உரையாடல்கள், விவாதங்கள் தேவையில்லையா?
ஆனால், பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ‘பார்ப்பனர்’ என்னும் பார்வையில் அவரைப் புறக்கணிப்பதும் அபவாதமாகப் பொய்களைப் பரப்புவதுமான பார்வை ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பிறப்பு, ஆசாரம், வாழ்முறை ஆகியவற்றின் அடிப்படையில் உ.வே.சா.வை விமர்சிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது. ஏற்கனவே ச.வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் அவர் பதிப்புகள் சார்ந்தும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஆனால், இப்போது பிறப்பு, வாழ்முறையின் காரணமாகவே அவரது பங்களிப்பை ஏற்பதில் பலருக்குத் தயக்கம் இருக்கிறது.
அத்தயக்கம் யாரையெல்லாம் கையில் எடுக்கலாம் என்று பார்த்திருந்தும் காத்திருந்தும் பற்றிக் கொள்ளும் தந்திரம் கொண்ட மதவாதத்தின் கையில் அவரைக் கொண்டு சேர்த்துவிடும். தமிழ்ச் சமூக, அரசியல் வரலாற்றைக் கட்டமைக்க உதவிய புறநானூறு போன்ற பேராற்றல் கொண்ட நூலைப் பதிப்பித்துக் கொடுத்த உ.வே.சா.வை அப்படி விட்டுவிடப் போகிறோமா? புறநானூற்றுப் பதிப்பு தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டது கண்டு பெருமிதப்பட்ட அவரது தமிழ் உணர்வையும் அளப்பரிய பங்களிப்பையும் கருதிக் கொண்டாடப்போகிறோமா?
உதவிய நூல்கள்:
1. ப.சரவணன் (ப.ஆ.), சாமிநாதம் (உ.வே.சா. முன்னுரைகள்), 2014, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
2. உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு.
3. ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி ஒன்று, 2018, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
4. உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), புறநானூறு மூலமும் உரையும், 1950, ஜோதி அச்சுக்கூடம், சென்னை, நான்காம் பதிப்பு.
5. ப.சரவணன் (ப.ஆ.), உயிர்மீட்சி (உ.வே.சாமிநாதையர் இலக்கியக் கட்டுரைகள்), 2016, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
(பிப்ரவரி, 19 – உ.வே.சாமிநாதையர் 167ஆம் பிறந்த நாள்.)
3
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 3 years ago
நல்ல கட்டுரை.... தமிழ் சமூகத்திற்கு உ. வே. சா. அவர்களின் பங்களிப்பையும் அவரை நாம் கைக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சிறப்பாக கட்டுரையாளர் உணர்த்தியுள்ளார்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.