கட்டுரை, சினிமா, கலாச்சாரம், வாழ்வியல் 5 நிமிட வாசிப்பு

சுதந்திரத்தின் குறியீடு மயிர்

பெருமாள்முருகன்
07 Jan 2023, 5:00 am
1

ல்வித் துறை சார்ந்து நான் எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து ‘மயிர்தான் பிரச்சினையா?’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளேன். புத்தகம் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. ரோஹிணி மணியின் கலையமைதி கூடிய பிரமாதமான அட்டை வடிவமைப்பு. பெண் மயிலின் தோற்றம் போன்ற தலைமயிருடன் கம்பீரமாக நிற்கும் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலான அட்டை.

இந்நூலின் தலைப்புக் கட்டுரை ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. சமூக ஊடகங்களில் பரவி விவாதிக்கப்பட்டது. அதையொட்டி வெளியான கருத்துக்களால் மீண்டும் ஒரு கட்டுரையும் எழுத நேர்ந்தது. இரு கட்டுரைகளும் நூலில் உள்ளன. இன்றைய தலைமுறையினர் முடி வைத்துக்கொள்ளும் பாணி ‘அடங்காமை’ என்று அர்த்தப்படுத்தும் வகையிலானது. ஆசிரியரின் அதிகார மனநிலையைச் சீண்டுவதாக அது இருக்கிறது என்னும் கருத்தை மையப்படுத்திப் பலவற்றை இக்கட்டுரைகளில் பேசியுள்ளேன்.  

பழந்தமிழ் முதல் நவீன இலக்கியம் வரை

‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலில் இந்த மயிர்ப் பிரச்சினையை வைத்துச் ‘சிலுப்பி சிலம்பரசன்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். ஒரு மாணவர் தம் தலை மயிரை மேலும் கீழுமாக அசைப்பதைக்கூடத் தாங்க முடியாதவர்களாக ஆசிரியர்கள் இருப்பதைப் பேசும் கட்டுரை அது. அந்நூலுக்கான முன்னுரையின் தலைப்பு ‘ஆசிரியருக்கு உகந்த கருவி கத்திரிக்கோல்.’

ஒரு மாணவரைப் பார்த்ததும் அவர் தலை மயிர் மீதுதான் ஆசிரியரின் கண் முதலில் பதிகிறது. கையில் கத்திரிக்கோலைக் கொடுத்துவிட்டால் வெட்டுவதற்கு ஆசிரியர்கள் தயங்க மாட்டார்கள். சில பள்ளிகளில் அப்படி நடந்த செய்திகளும் வந்திருக்கின்றன. அடக்கம், அடங்காமை ஆகியவற்றின் குறியீடாக ஆசிரியருக்கு மயிர் தோன்றுகிறது. மாணவர்களை அடக்கி மேய்த்தல்தானே கல்வி நிறுவனங்களின் வேலை?

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மயிர்தான் பிரச்சினையா?

பெருமாள்முருகன் 01 Apr 2022

மாணவர்களை அணுகுவதில் நேரும் மயிர் தொடர்பான பிரச்சினை பற்றித் தொடர்ந்து கவனம் கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது. சமீப காலத்தில் இந்தப் பார்வை என்னிடம் கூடியிருப்பதாகவும் தோன்றுகிறது. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை தலை மயிர் எப்படியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது என்று பார்க்க ஆசையுள்ளது. திரைப்படங்களில் காட்சி ரூபமாகப் பதிவாகியிருப்பவற்றையும் காண வேண்டும். இவையெல்லாம் மிகவும் முக்கிய ஆவணம். புத்தகம் கைக்கு வந்துசேர்வதற்கு முந்தைய நாள் இரவு பார்த்த படம் ‘கட்டா குஸ்தி.’ அப்படத்திலும் மயிர் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையில் மாற்றத்தைக் கோரும் காலம் இது. பெண்கள் பரவலாகக் கல்வி கற்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. கற்ற பிறகு கணிசமாக ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள். அவர்களின் உடை, தோற்றம், உணவு ஆகியவை பெருமளவு மாறிவிட்டன. திருமணம், குடும்பம், வாழ்முறை பற்றிய பார்வைகளிலும் மாற்றங்கள். ஆனால், அந்த அளவுக்கு ஆண்களிடம் மாற்றம் வரவில்லை. புற வாழ்முறையை மாற்றிக்கொண்டாலும் பெண்கள் தம் தாயைப் போன்றவர்களாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

தம் வாழ்க்கையில் பெண்ணைப் பற்றி யோசிக்கும்போது அவர்களுக்குத் தாய்தான் நினைவுக்கு வருகிறார். சேலையும் தலைமயிரும் தாயின் தோற்ற அடையாளம். அவற்றுக்கும் அன்புக்கும் அல்லது தாய்மைக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்று நம்புகிறார்கள். வாழ்வியல் விழுமியங்களில் இன்று உருவாகியுள்ள மாற்றங்கள் ஆண்களின் மனதை அவ்வளவாகத் தீண்டவில்லை. மாற்றங்களை உணர்ந்து தம்மையும் மாற்றிக்கொள்ளும் ஆண்கள் சுலபமாக இன்றைய பெண்களையும் திருமண வாழ்வையும் எதிர்கொள்கிறார்கள். மாற மறுப்பவர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.

பொய் மயிர் எனும் ரகசியம்

‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பெண்களைப் பற்றிய பழைய விழுமியங்களுக்கும் இன்றைய மாற்றங்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் பேசுகிறது. பெண்களைப் பற்றிப் பேசும் ஆண்களின் பழமைப் பார்வைகள் கேலிக்குரியனவாகப் படத்தில் வெளிப்படுகின்றன. பெண்கள் பேசுபவனவும் அப்பார்வைகளும் நவீனமாகவும் தர்க்கத்திற்கு ஏற்றவையாகவும் உள்ளன. வெகுஜனப் படம் ஒன்றில் இப்படிப் பழைய விழுமியங்களை எள்ளி நகையாடி அவற்றுக்கு எதிராகக் காட்சிகள் அமைவது அபூர்வம். நம் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் பெண்களின் உடை, மயிர் பற்றியெல்லாம் அளந்து அறிவுரை பிதற்றிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் முக்கியமானதாகவே படுகிறது. இனி வெகுஜன கருத்தியலும் மாற்றம் பெறும் என்பதற்கான அறிகுறி இப்படம். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஆம், மயிரும் பிரச்சினைதான்: ஆசிரியர்கள் எதிர்வினை

09 Apr 2022

பெண்களைப் பற்றிச் சுயபார்வை அற்ற கதாநாயகன் தன் மாமன் சொல்பவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான். பெண்ணை அடக்கி ஆள்பவன்தான் ஆண். அதற்குப் பெண் படித்திருக்கக் கூடாது; ஆண் என்ன செய்தாலும் கேட்கக் கூடாது; சமையல் செய்துகொண்டு ஆணின் வரவை எதிர்பார்த்து வீட்டிலிருக்க வேண்டும் என்று நினைக்கிறான். கூடுதலாகப் பெண் என்றால் நீள மயிர் வேண்டும் என்கிறான். இடுப்புக்குக் கீழ் தொங்கும்படி மயிர் கொண்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். கதாநாயகி ‘கட்டா குஸ்தி’ கற்று அப்போட்டிகளில் திறம்படச் செயல்படுபவள். தந்தையின் கட்டாயத்திற்காகக் குஸ்தி கற்றதையும் பட்டப்படிப்பு முடித்ததையும் மறைத்து பொய் மயிரை நீளமாகப் பொருத்திக்கொண்டு திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். 

ரகசியத்தின் வாசனை

திருமணத்திற்குப் பிறகான வாழ்வில் குஸ்தி, படிப்பு ஆகியவற்றை மறைத்திருப்பதில் அவளுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. பொய் மயிரைக் காப்பாற்றிக்கொள்வதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போதே அவன் ‘முடியப் பாத்தியா? பாம்பு மாதிரி எவ்வோ நீளம்’ என்று வியக்கிறான். ‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்’ என்று வருணிக்கும் மரபில் வருபவன் என்பதை அவன் சொல்லும் உவமையே உணர்த்துகிறது.

திருமணத்திற்கு நாயகன் ஒத்துக்கொள்ள முக்கியமான காரணம் முழங்காலைத் தொடும் நீள மயிர். அந்தப் பொய் மயிர் ரகசியத்தைப் பாதுகாக்க அவள் பெரும்பாடு படுகிறாள். முதலிரவு முடிந்து காலையில் எழுகிறாள். பொய் மயிர் கழன்று படுக்கையில் கிடக்கிறது. அதன் மீது கணவன் படுத்திருக்கிறான். அவன் தூக்கத்தைக் கலைக்காமல் பெரும்பாடு பட்டு மயிரை உருவி எடுக்கிறாள். குளிக்கையில் அதைக் கழற்றித் தொங்கவிடுகிறாள். கழுத்து வரை இருக்கும் தன் சொந்த மயிரை நீரில் நனைத்து ஆனந்தமாகக் குளிக்கிறாள்.  பொய் மயிரை அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். 

பொய் மயிர் நனையாமல் இருப்பதைக் கண்ட கணவன் ‘போய்த் தலைக்குக் குளிச்சிட்டு வா’ என்று மீண்டும் அவளைக் குளியலறைக்கு அனுப்புகிறான். அதற்கு ஷாம்பு போட்டுக் கழுவி அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். கணவனுக்குத் திருப்தி. பொய் மயிரை உண்மையென நம்பும் கணவன் அதற்குச் சாம்பிராணிப் புகை போட்டுவிடுகிறான். ‘இதெல்லாம் உங்கம்மா உனக்குச் சொல்லித் தர்லியா?’ என்று கேட்கும் அவன் ‘முடி வளக்கறது பெரிசில்ல, அத மெயின்டெயின் பண்ணனும். அதுதான் முக்கியம்’ என்று அவளுக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்கிறான்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மயிர் பிரச்சினை: எதிர்வினைக்கு மறுவினை

11 Apr 2022

அவள் மயிரை அப்படி ரசிக்கிறான். சடையை முன்னால் எடுத்துவிட்டுக்கொள்ளச் சொல்லி அழகு பார்க்கிறான். மயிரை மோந்து பார்த்து அதன் மணத்தில் மெய் மறக்கிறான். மயிர் அவன் முகத்தில் மோதுவதில் கிளர்ச்சி அடைகிறான். மனம் நம்பும்போது பொய் மயிரும் இவ்வாறு மயக்கம் தரும் போல. இக்காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களுக்கு நகைப்பையே தருகின்றன. இப்படியெல்லாம் அவன் ரசனைக்கு உரியதாக இருப்பது பொய் மயிர்தான் என்பதைக் கண்டுபிடித்துவிடுவானோ என்னும் பதற்றத்திலேயே எப்போதும் நாயகி இருக்கிறாள். அது தொடர்பான காட்சிகள் நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருந்தாலும் பல கோணங்களில் பார்க்கத் தூண்டுகின்றன. 

குளியலறையில் எரிச்சலுடனும் சினத்துடனும் பொய் மயிரைப் போட்டுத் துவைத்து எடுக்கிறாள். அது மயிரைத் துவைப்பது அல்ல, மயிர் பற்றி இன்னும் நீடிக்கும் விழுமியப் பார்வையைப் போட்டு அடித்துத் துவம்சம் செய்வதுதான். நீள மயிரைப் பராமரிப்பது சாதாரணம் அல்ல. கொஞ்சமாக இருக்கும் மயிரைப் பராமரிப்பதே இன்றைய காலத்தில் மிகக் கஷ்டமாக இருக்கிறது. கல்வி, வேலை உள்ளிடப் பல பொதுவெளிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மயிர் குறைவாக இருப்பதுதான் வசதி. ஆண்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளக் கழுத்தில் உரசும் அளவுக்கு மட்டும் வளர்த்துக்கொள்வது போதுமானதாக இருக்கிறது. அதையும் அலையவிடும் பாணியில் சீவிக்கொள்வதை விரும்புகிறார்கள். 

துறத்தலும் சுதந்திரமும்

முந்தைய காலத்தில் சடை போட்டுக்கொள்ளப் போதுமான மயிர் இல்லை என்றால் சவுரி முடி வைத்துக்கொள்வார்கள். கொண்டை போட்டுக்கொள்பவர்களும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சவுரி சேர்ப்பார்கள். கிராமத்துச் சந்தைகளில் சவுரிக் கடைகள் தனி வரிசை கட்டி இருக்கும். இன்று அப்படி இல்லை. சாதாரண நாட்களில் சவுரி வைத்து நீளச் சடை போடுதல் வழக்கொழிந்து போயிற்று. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மரபான அலங்காரம் செய்கிறார்கள். அப்போது சவுரி முடி வைத்து இடுப்புக் கீழ் வரை விட்டுப் பின்னுகிறார்கள். நீள மயிர் என்பது இன்று சடங்குகளில் ஒன்றாகிவிட்டது.

இள வயதில் வழுக்கை விழும் ஆண்களுக்காகத்தான் நவீனமான பல கடைகள் செயல்படுகின்றன. பெண்களும் தம் மயிரைப் பராமரிக்க நவீன முடிதிருத்தகங்கள் பல உள்ளன என்றபோதும் அவை மரபிலிருந்து மாறுபட்டவை. பெண் என்றால் நீள மயிர் இருக்க வேண்டும் என்பது காலாவதியான மிகப் பழைய பார்வை. அதை இப்போது பெண்கள் விரும்புவதில்லை. அப்படி எதிர்பார்க்கும் ஆண்கள் ஏமாந்துதான் போக வேண்டும். அவர்களுக்குத் திருமண வாழ்க்கை பிரச்சினைதான்.

இப்படியெல்லாம் பேச வாகாக இப்படத்தில் சில காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் உச்சமான ஒரு காட்சி. எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் கணவன் அடிவாங்கிக் கிடக்கிறான். அவனைக் கொல்ல ஒருவன் முயல்கிறான். அப்போது வெகுண்டெழும் கட்டா குஸ்தி சாம்பியனான கதாநாயகி எதிரிகளை அடித்து நொறுக்கிக் கணவனைக் காப்பாற்றுகிறாள். சண்டையின்போது ஒருகட்டத்தில் அவளது பொய்மயிரை ஒருவன் பிடித்து இழுக்கிறான். அந்த நெருக்கடியிலும் பொய்மயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று ‘விடுரா’ என்று அவனை எச்சரிக்கிறாள். அவன் ‘என்ன, வலிக்குதா?’ ஏளனமாகக் கேட்கிறான். முடியைப் பிடித்து இழுத்தால் பெண்கள் அடங்கிவிடுவார்கள் என்று எண்ணம். மனைவியை அடிக்கும் கணவன் பற்றிக்கொள்ளத் தலை மயிர் பிடியாகப் பயன்பட்டதுண்டு. அதைப் பற்றிய உரையாடல் ஒன்றும் படத்தில் உள்ளது.

மயிரைப் பற்றிக்கொண்டு ஏளனமாகப் பேசுபவனைத் திரும்பி அடிக்கிறாள் நாயகி. அவனை அடிக்கும்போதும் விடாமல் இழுப்பதால் அவன் கையோடு வந்துவிடும் பொய்மயிர் கணவனின் முகத்தில் மோதிக் கீழே விழுகிறது. அதிர்ச்சியோடு அதைக் கணவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். பொய்மயிர் கழன்றதும் பெரிய பாரம் தன் தலையிலிருந்து இறங்கிவிட்ட நிம்மதியுடன் அவன் தலையை அசைக்கிறாள். இயல்பான கழுத்தளவு மயிரைச் சிலிர்த்துக்கொண்டு இருபுறமும் அசைத்துப் பின் தலையை மேலுயர்த்துகிறாள். கண்களை மூடிக் கையால் நடுத்தலையைத் தடவுகிறாள். காற்றில் அலைந்து எல்லாப்புறமும் பறக்கிறது மயிர்க்கற்றை. இது ஒருகணக் காட்சி.

பொய் மயிரைத் துறந்ததும் அவள் அனுபவிக்கும் சுதந்திரம் அக்கணத்தில் அற்புதமாகக் காட்சியாகிறது. இக்காட்சியை மட்டும் கிட்டத்தட்டப் பத்து முறை பார்த்திருப்பேன். மயிர் அலைதலும் அப்பெண்ணின் முகம் கொள்ளும் ஆனந்தமும் ஆசுவாசமும் பார்க்கப் பார்க்கச் சிலிர்ப்பை ஏற்படுத்தின. அது வெறும் மயிர் அல்ல; குறியீடு. ஆம், மயிர் என்பது இன்றைய தலைமுறை பெற்றிருக்கும் சுதந்திரம், சமகால வாழ்வியல் ஆகியவற்றை உணர்த்தும் காத்திரமான குறியீடு.

 

தொடர்புடைய கட்டுரைகள்

மயிர்தான் பிரச்சினையா?
மயிர்தான் பிரச்சினையா? அன்பைக் கூட்டுவோம்!
ஆம், மயிரும் பிரச்சினைதான்: ஆசிரியர்கள் எதிர்வினை
மயிர் பிரச்சினை: எதிர்வினைக்கு மறுவினை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

6





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   2 years ago

தலைமயிர் மட்டுமல்ல இலக்கியத்தில் இருக்கும் மயிர் பற்றி மாணவர்களிடம் விவாதிப்பதும் சிக்கலையே உண்டு பண்ணுகிறது. மயிர் தலையில் பெண் பிள்ளைகளுக்குக் குறைந்தால் பிரச்சனை ஆண் பிள்ளைகளுக்குக் கூடினால் பிரச்சனையாகப் பார்க்கிற சமூக ஒழுங்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மயிர். தலையில் மட்டுமல்ல முகத்தில் மீசையாக இருந்து முறுக்கப்பட்டுச் சாதியம் பேசுவதிலும் பெரும் சலசலப்பை உண்டாக்குகிறது. கட்டாகுஸ்தி ஆண்களின் கடா மீசை திரைப்படங்கள் கடந்து ஒரு வராலாற்று அரசியலைப் பேசினால் முகத்தில் நீண்டு வளரும் தாடி ஆன்மீக அரசியலை முன்வைக்கிறது. இந்த மயிர் இன்றைக்கு நேற்றைக்கு அல்ல இலக்கியக்காலம் தொட்டே பேசப்பட்டு வருகிறது. மயிர் நீப்பின் உயிர்வாழா கவரி மா அன்னார் மானம் வரின் உயிர் நீப்பர். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்த கடை. இவையெல்லாம் திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிற மயிர் பற்றிய குறள். இவைகள் இன்றி ஏனைய இலக்கியங்களும் மயிர் பற்றிப் பேசுகின்றன. மரைமலர்க் குளத்திலாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட (இராவண காவியம் - 61) எனப் புலவர் குழந்தை பாடுகிறார். மாணவர் தலையில் வளர்க்கும் மயிரைக்காட்டிலும் இலக்கியத்திற்குள் வளம் வரும் இந்த மயிர் என்ற சொல்லைப் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அத்தனை இன்னல்கள் எழுகின்றன. மேலே இருக்கிற இராவண காவியம் பாடல் தற்போதைய ஒன்பதாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை நடத்துகிற பொழுது மயிர்த்தலைச்சிறார் என்று வாசிக்கையில் வகுப்பறைக்குள் அத்தனை சலசலப்பு எழுகிறது. மயிர் கெட்ட வார்த்தையில்லையா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இல்லை மயிர் கெட்டவார்த்தையில்லை. மயிர்கெட்ட வார்த்தை என்றால் திருக்குறளில் மயிர் என்று எப்படி வள்ளுவர் பயன்படுத்தியிருப்பார். மயிர் கெட்ட வார்த்தையில்லை என்றால் "என்ன மயிருக்கு இப்படிச் செஞ்சிட்ட? " நண்பர்கள் ஏதும் தவறிழைக்கும் போது கோபமாக இந்தச் சொல்லைப் பயன்படுத்தும் பொழுது இது கொட்ட வார்த்தையாக அல்லவா பார்க்கப்படுகிறது என்ற வினாவை முன் வைக்கிறார்கள். இந்த வினாவிற்கு எப்படி நீங்கள் ஒரு ஆசிரியராகப் பதிலை முன் வைப்பீர்கள். இந்த விற்கான பதிலைச் சொல்லாமல் அப்படியே கடந்து போய்விடவும் முடியாது. இந்த வினாவைக் கேட்பவர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். வரலாற்றைப் பின்னோக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. இலக்கியத்தைக் கூடுதல் கண் கொண்டு பார்க்க வேண்டிய தேவையை இது போன்ற மாணவர்களின் கேள்விகள் உருவாக்கிவிடுகின்றன. எந்த ஆய்வுநூல் இந்த நூற்றாண்டு வரையில் மயிர் நல்ல சொல் இந்த நூற்றாண்டு கடந்து கெட்ட சொல்லாக , இழிசொல்லாக மயிர் மாறியிருக்கிறது என்ற தகவலைப் பதிவு செய்திருக்கின்றன என்பது என் குறைவாசிப்பில் புலப்படவில்லை. ஆயினும் மீண்டும் மீண்டும் வள்ளுவத்தை வாசிக்கையில் ஓர் உண்மை வெளிச்சம் புலப்பபடுகிறது. வள்ளுவர் காலத்தில் முடித்திருத்தம் என்பது ஒன்று மழித்தல். மழித்தல் என்பது முழுதுமாக மொட்டை அடித்துக் கொள்வது அல்லது நேர்த்தியாக ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி நீட்டமாக முடியை ஓர் ஒழுங்கில் வளர்த்துக்கொள்வது என்ற நிலை இருந்திருப்பதை உணர முடிகிறது. இந்த நேர்த்தியான முடிக்கு எதுவரையில் மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது எனில் தலையில் இருக்கும் வரை. தலையிலிருந்து முடி நழுவியோ மழிக்கப்பட்டோ கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டால் அந்த மயிரை சமூகம் இழிவானதாகவும் அருவருக்கத் தக்கப் பொருளாகவும் பார்த்திருக்கிறார்கள் மதிப்பளிக்காமல் கடந்து போயிருக்கிறார்கள். தலையிலிருந்து வீழ்ந்த மயிரைப்போல தன் நிலையிருந்து தவறிய மனிதர்களை இந்தச் சமூகம் தாழ்ந்தவர்களாகக் கருதியிருக்கிறது என்பதையும் வள்ளுவரே தம் குறளில் பதிவு செய்கிறார். குறிப்பாக ஆங்கிலேயர் வருகையை ஒட்டியோ அல்லது அதற்கு முன்பாகவோ வள்ளுவர் சொல்லியிருக்கிற மழித்தல், நீட்டல் என்ற தலைமயிர் பராமறிப்பிலிருந்து மூன்றாவது ஒன்றான முடி வெட்டுதல். அதாவது சலூன்களில் முடிக்கத்தரிக்கும் வழக்கம் வந்தப் பின் அழகுக்காக நாம் கத்தரித்துக் கொள்கின்ற மயிரின் எச்சங்கள் பெரும் பயன்பாடின்றி பயன்ற்றுப் போவதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த வரலாற்றுப்பாதையில் மயிர் பற்றி நம் சிந்தனை ஒன்றை மட்டும் எவரும் சொல்லிக்கொடுக்காமலையே பதிவு செய்து வருவது மயிர் என்று யாரேனும் நம்மைத் திட்டினால் நாம் பயன்பாடற்றவன் ( யூஸ்லெஸ் ) என்ற பதத்தில் புரிந்து கொண்டு கெட்டவார்த்தையாக நம் பொதுப் புத்தி அர்த்தப்படுத்திக்கொள்கிறது என்ற புரிதலோடு ஒரு பதிலை மயிர் என்றால் ஏன் கெட்டவார்த்தை? என்ற கேள்விக்கு முன் வைத்து வகுப்பை முடித்து, அப்பாடா மாணவனின் ஒரு கேள்விக்கு யாரும் பதில் சொல்லமுடியாத கேள்விக்கு நாம் பதில் சொல்லிவிட்டோம். ஏறத்தாழ வரலாற்றோடு பொருத்திப் போகின்ற ஓர் உண்மையைக் கண்டறிந்து விட்டோம் என்ற தலைக்கனத்தோடு இருக்கையில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஒரு பெற்றோர் நேரே வந்து என்னைச் சந்தித்து என்ன ஆசிரியர் நீங்கள் (என்ன சார் நீங்கள் கடும் கோவமாக) என் மகன் வீட்டிற்கு வந்து எங்கள் ஆசிரியர் மயிர் என்பது தவறான வார்த்தையில்லை என்று சொல்கிறார் என்று எங்களிடமே சொல்கிறான். அவன் வாயில் கெட்டவார்த்தையை இது நாள் வரையில் கேட்டதே இல்லை ஆனால் இன்று அவன் வாயில் மயிர் என்ற வார்த்தையைக் கேட்கிறோம். என்ன ஆசிரியர் நீங்கள் இப்படி கெட்டவார்த்தைகளை வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறீர்கள். என்று எச்சரிக்கைத் தொனியில் பேசிவிட்டு அந்தப் பெற்றோர் கேட்கிறார் அடுத்த ஆண்டும் நீங்கள் தான் இவனுக்குத் தமிழாசிரியராக இருப்பீர்களா? என்ற உன்னதமான கேள்வியையும் முன் வைக்கிறார். அப்போது தான் புரிந்தது மயிர் என்பது மாணவனின் தலையில் ஒழுங்கற்றுவிருப்பது மட்டுமே பிரச்சனையில்லை மயிர் பெற்றோரின் மூளைக்குள்ளும் அடர்ந்த காடக வளர்ந்து சிந்தனையின் விழிகளை அடைத்துகிறது என்பது புரிந்தது. மகா.இராஜராஜசோழன் தமிழாசிரியர். 8940874940 cholan1981@gmail.com

Reply 9 0

Login / Create an account to add a comment / reply.

மாமன்னன்வேலைவாய்ப்புசூப்பர் ஸ்டார்குற்றவியல் வழக்குகள்இயற்கை உற்பத்தியோகியை வீழ்த்துவது எளிதல்ல!பற்கள் ஆட்டம்கல்விக் கொள்கைநவீன மருத்துவம்மனப்பிறழ்வுசபாநாயகர் அப்பாவுஅயோத்திதாசர்: அடுத்தகட்ட பயணம்மைக்கேல் ஜாக்ஸன்தாரிக் பகோனிமுரசொலி 80வது ஆண்டு விழாக் கட்டுரைசிங்களம்பிரஷாந்த் கிஷோருக்கு பிஹார் வசப்படுமா?சாதி நோய்க்கு அருமருந்துமாரா நதிபொருளாதார நெருக்கடிபேட்டிகள்விமர்சனத்தை மதிக்கும் இயக்கம் திமுக: இமையம் பேட்டிபிராந்தியக் கட்சிகள்டோபமின்மூட்டுவலிசமஸ் சிந்தனைகளின் அர்த்தம்பருவநிலை இடர்கள்என்.கோபாலசுவாமி பேட்டிதாழ்வுணர்ச்சி கொண்டதா தமிழ்ச் சமூகம்?நாங்குநேரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!