ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிச் சமீபமாகப் பல்வேறு செய்திகள் வருகின்றன. மாணவரை ஆசிரியரும் ஆசிரியரை மாணவரும் பாதுகாத்த காலம் போய்விட்டது. மாணவர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்னும் வினோதக் கோரிக்கையை வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குற்றம்சாட்டும் எல்லா விரல்களும் மாணவர்களை நோக்கியே நீள்கின்றன. ஆசிரியர்களை நோக்கி ஒற்றை விரலை நீட்ட விரும்புகிறேன்.
மனிதனும் சமூக விலங்குதானே!
கரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்விச் சூழலிலிருந்து அந்நியப்பட்டிருந்த மாணவர்கள் பலருக்குக் கலந்தாலோசனை தேவை என்பதில் சந்தேகமில்லை. பலருக்கு எழுதவும் படிக்கவும் மறந்துபோய்விட்டது. வகுப்பில் உட்காரும் மனநிலை மாறிவிட்டது. மாணவர்கள் பலர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் நிறைய நேரம் செலவிட்டு இப்போது விடுபட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை எல்லாம் மீண்டும் கல்விச் சூழலுக்குள் கொண்டு வருவது கடினமான வேலைதான். ஆசிரியர்களுக்குப் பொறுப்பு கூடிவிட்டது.
அதைப் போலவே கல்விச் சூழலிலிருந்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளாக அந்நியப்பட்டிருந்தனர். வகுப்பறையில் பாடம் எடுக்க வாய்ப்பில்லை. தேர்வுகள் நடத்தவில்லை. மாணவர்களை நேரடியாகச் சந்திக்க முடியவில்லை. கரும்பலகையில் எழுதவில்லை. இப்போது ஆசிரியர்கள் மீண்டும் கல்விச் சூழலுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்வதற்கும் மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அணுகுமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் பயிற்சிகள் தேவை. ஆசிரியர்களுக்கும் கலந்தாலோசனை அவசியம்.
இன்று மாணவர்களோடு ஆசிரியர்களுக்குப் பிரச்சினைகள் வருவதற்கு முக்கியமான காரணம் தலைமுடி. ஒரு மாணவரைப் பார்த்தவுடன் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் முடிதான் ஆசிரியரின் கண்ணுக்குப் படுகிறது. இன்றைய இளைஞர்கள் முடி திருத்திக்கொள்ளும் முறை ஆசிரியர்களுக்கு உவப்பானதாக இல்லை.
தலையைச் சுற்றிலும் மண்டை தெரியுமளவு ஒட்டச் சிரைத்துவிட்டு சேவலின் கொண்டைபோல உச்சியில் அடர்த்தியாக மயிரை வைத்துக்கொள்ளும் முறை இன்று பிரபலமாக இருக்கிறது. தலையின் ஒருபுறம் முழுமையாகச் செதுக்குதல், கோடிழுத்துக்கொள்ளுதல், மயிர்களை நேராக நிறுத்துதல், நெற்றியில் படரவிடுதல் எனச் சிறுசிறு மாற்றங்களுடன் அதில் பல பாணிகள் உள்ளன. கோடிழுத்தல் ஒன்றை எடுத்தால் அதிலேயே வெவ்வேறு விதங்கள். ஒற்றைக் கோடு, ரெட்டைக் கோடு, முக்கோடு, நேர்கோடு, சுற்றுக்கோடு. நெற்றியில் மயிரைப் படரவிடுதலில் வெவ்வேறு அளவுகள். கண்ணை மறைத்தல், நடுநெற்றி வரை தவழுதல், பக்கவாட்டு நெற்றியில் படருதல்.
இத்தகைய முடிதிருத்தத்தைப் பொதுவாக 'பாக்ஸ் கட்டிங்' (Box Cutting) என்று நம் இளைஞர்கள் சொல்கிறார்கள். முடிதிருத்தகங்களில் பல பாணிகளுக்கான படங்களை வைத்திருக்கிறார்கள். ஆல்பங்களும் உள்ளன. அவற்றில் விருப்பமானதைத் தேர்வுசெய்து கொடுத்தால் அதன்படி முடிதிருத்துகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பார்த்த ஒரு பாணியின் படத்தைக் காட்டி அப்படி வேண்டும் என்று கேட்கிறார்கள். தம் தலைமயிர் பாணியைத் தீர்மானிக்க இன்றைய இளைஞர்களுக்கு முன்னால் பல தேர்வுகள் கிடக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாணியை வைத்து அழகு பார்க்க அவர்களால் முடிகிறது.
ஆண் பறவைகள் தம் இறகுகளை விரித்து அழகு காட்டிப் பெண் பறவைகளை ஈர்க்கின்றன என்கிறார்கள். ஆண் மயில் தன் தோகையை விரித்தாடும்போது பெண் மயில் மட்டுமா மயங்குகிறது? ஆண் விலங்குகள் தம் பிடரி மயிரைச் சிலிர்த்துக் காட்டிப் பெண் விலங்குகளை ஈர்க்கின்றனவே! மனிதனும் சமூக விலங்குதானே! தம் தலைமயிரைக் கலையாக்கிக் காட்ட விரும்புவது இயற்கை.
சமகாலப் போக்குகளில் விருப்பம்
இணையத்தில் பார்த்தால் 2022ஆம் ஆண்டின் பிரபலமான முடிதிருத்த வகைகள் நூற்றுக்கணக்கில் வருகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைமை. (Fade, Mid fade, Temple fade, Taper fade, Skin fade) எனப் போய்க்கொண்டே இருக்கிறது. ஃபேட், டாப் எனும் இரு வகைமைகளை இணைத்து உருவாக்கியுள்ள பாணிகளே இன்று வழக்கில் இருக்கின்றன. அழகழகான படங்களைப் பார்க்கும்போது இளமைப் பருவத்தைக் கடந்துவிட்ட துயரம் பீடிக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவில் இந்த வகை பாணிகள் இன்று பிரபலமாக இருப்பதை அறிய முடிகிறது. எல்லா வகையிலும் உலகமயமாக்கலில் கலந்துவிட்ட நம்மைத் தலைமயிர் மட்டும் விட்டுவிடுமா?
கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் தலையில் பலவிதமான பாணிகளைக் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு போட்டித் தொடருக்கும் ஒவ்வொரு பாணி. சிலசமயம் ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றுகிறாரோ என்று தோன்றும். நம் நடிகர்களும் படத்திற்குப் படம் தலை பாணியை மாற்றியிருக்கிறார்கள். நடிகர் விஜய் படத்திற்குப் படம் புதுவிதம் காட்டியிருக்கிறார். ஒரே பாடலில் நான்கைந்து பாணிகளும் வந்திருக்கின்றன. ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு ‘ராணுவ ஸ்டைல்’ முடிதிருத்தம் இளைஞர்களிடம் பிரபலமாயிற்று.
மாணவர்கள் இன்றைய தலைமுறையினர். எல்லாவற்றிலும் சமகாலத்துப் போக்குகளையே விரும்புவார்கள். அதுதான் தலைமயிரில் பிரதிபலிக்கிறது. இந்த வகை பாணி ஏன் ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை? தலையைச் சுற்றிலும் ஒன்றுமில்லாமல் உச்சியில் கிரீடம் போல நின்றிருக்கும் மயிர்க்கற்றை ஆசிரியருக்கு ‘அடங்காமை’யின் குறியீடாக அர்த்தமாகிறது. திமிர் என்று தோன்றுகிறது. ரவுடி பிம்பத்திற்குள் எளிதாக மாணவரை அடக்கிவிடுகிறார்கள். உடனே ஆசிரியரின் ‘தான்’ சீண்டப்படுகிறது. மாணவரின் தலைபாணியை ஏளனமாகச் சில ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். சிலர் சொற்களால் கேலி செய்கிறார்கள். சிலர் அறிவுரை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் சகித்தபடி மனதில் திட்டிக்கொண்டே மௌனமாக மாணவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
சில ஆசிரியர்கள் இவற்றில் திருப்திப்படுவதில்லை. எப்படியாவது மாணவரை அடக்கித் தம் கீழ்க் கொண்டுவந்துவிட வேண்டும் எனக் கருதி அடக்குமுறை உத்திகளைக் கையாள்கிறார்கள். சரியாக முடி வெட்டிக்கொண்டுதான் வர வேண்டும் என விரட்டுகிறார்கள், வெளியே நிறுத்துகிறார்கள், வருகைப்பதிவு வழங்க மறுக்கிறார்கள். மாணவரின் தன்மானத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களை வீசுகிறார்கள். சாக்பீஸைத் தூக்கி எறிந்துவிட்டுக் கத்திரிக்கோலைக் கையில் எடுக்கத் துடிக்கும் ஆசிரியர்கள் பலருண்டு.
ஆசிரியர்களின் அலுப்பூட்டும் பேச்சுக்களைக் கேட்டுப் பெரும்பாலான மாணவர்கள் தலைகுனிந்து போகும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். அவர்கள் ஆசிரியர்களுக்குப் பதிலடி கொடுக்கிறார்கள். சில சமயம் சொற்கள்; சில சமயம் கைகள்; சில சமயம் கைக்குக் கிடைப்பவை. மாணவர் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை ஆசிரியரே தீர்மானிக்கிறார்.
சிகையும் சாதியும்
ஆசிரியர்கள் கொஞ்சம் தம் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும். பள்ளியிலும் கல்லூரியிலும் அவர்கள் பயின்ற காலத்தில் எத்தகைய தலைமுடி பாணி இருந்தது? நெளி வைத்தல், முன்மண்டையில் கூடு வைத்தல், ஹிப்பி எனப் பல பாணிகளைக் கண்டிருப்பர். அந்தந்தக் காலத் திரைப்படங்களைப் பார்த்தால் ஒவ்வொரு பத்தாண்டிலும் என்னென்ன வகைகள் பிரபலமாக இருந்திருக்கின்றன என்பதைக் கண்டுகொள்ளலாம். 1980-களில் நடக்கும் சம்பவங்களைக் கொண்ட ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் காலப் பின்னணியை உணர்த்தத் தலைமுடி பாணியை ஒரு உத்தியாகக் கையாண்டிருந்தனர். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். கல்விக் காலப் புகைப்படங்கள் தலைமயிர்ச் சரித்திரத்தைச் சொல்வன. தம் ஆல்பத்தை ஒவ்வொரு ஆசிரியரும் எடுத்து அடிக்கடி பார்க்க வேண்டும். தம் காலத்துத் தலைமயிர் பாணியைப் பற்றி அப்போது என்ன விமர்சனங்கள் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் இருந்தன என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முப்பது வயதுக்கு மேல் ஒவ்வொருவரும் புதிய பாணிக்கு மாறுவதிலிருந்து தேங்கிப் போய்விடுகிறார்கள். ஆனால், தம் தலைமயிரில் கவனம் சிதைவதில்லை. நரை வரத் தொடங்கியதும் சாயம் பூசத் தொடங்குகிறார்கள். சந்தையில் இன்று மிகுதியாக விற்கும் அலங்காரப் பொருட்களில் முக்கியமானது தலைச்சாயம். வயதைக் குறைத்துக் காட்டும் சாயம் எது, முடி உதிராமல் படியும் சாயம் எது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துப் பூசிக்கொள்கிறார்கள். இயற்கைச் சாயம் என்றும் பூசிக்கொள்வது எளிது என்றும் சொல்லிவரும் விளம்பரங்கள் கணிசமானவை. நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் – குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தினர் – தலைச்சாயம் பூசாதவரைக் காண்பது கடினம். முடிதிருத்தகங்களிலேயே இப்போது விலைப்பட்டியலில் ‘கட்டிங், சேவிங், டை’ என்று மூன்றையும் சேர்த்து விலை குறித்திருக்கிறார்கள். சாயம் பூசாத சலூன்கள் இல்லை. தலைக்குச் சாயம் பூசாத ஆசிரியர் அதிசயம்.
முப்பது வயதுக்கு மேல் படிப்படியாக வழுக்கைத் தலையை அடையும் ஆண்கள் சுற்றிலும் இருக்கும் மயிர்களை நீள வளர்த்தி அவற்றைச் சேர்த்துத் தூக்கிச் சீவி நடுமண்டையை மறைக்க முயல்கின்றனர். சிலரோ வழுக்கை தெரியாத வகையில் தமக்குப் பிடித்த பாணிச் செயற்கை முடியை ஒட்டிக்கொள்கின்றனர். இத்தகைய தோற்றம்கொண்ட ஆசிரியர்கள் பலர். தம் கால்சட்டைப் பையில் சீப்பு வைத்திருக்காத ஆசிரியர் உண்டா? தம் தலைமயிரில் இவ்வாறு கவனம் எடுத்துக்கொள்வதில் தவறு ஏதுமில்லை. ஆனால், பதின்வயதில் இருக்கும் மாணவர்கள் தம் தலைமயிரை எப்படி வைத்துக்கொள்வது எனத் தீர்மானிக்கும் செயலில் ஆசிரியர்கள் ஏன் இறங்குகிறார்கள்?
ஆசிரியர்களின் வீட்டிலும் மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் 'பாக்ஸ் கட்டிங்' பாணியைத்தான் விரும்புகிறார்கள். ஆசிரியப் பெற்றோரில் எத்தனை பேர் தம் மகன்களின் தலைமயிர் பாணியில் கைவைக்க முடியும்? ஒருவேளை கடுஞ்சிந்தை கொண்ட பெற்றோராக இருந்தால் பள்ளிக் காலம் வரைக்கும் கட்டுப்படுத்தி வைக்கலாம். கல்லூரிக்குள் நுழைந்துவிட்ட எந்த மகனின் தலையிலும் ஆசிரியப் பெற்றோர் கைவைக்க முடியாது. ‘போப்பா’, ‘போம்மா’ என்னும் ஒற்றை வார்த்தையில் அவர்கள் அறிவுரையைப் புறந்தள்ளிவிடுவார்கள். தம் பிள்ளைகளிடம் செல்லுபடியாகாத விஷயத்தை மாணவர்களிடம் வந்து ஏன் திணிக்க வேண்டும்?
மாணவர்களின் தலைமயிர் எப்படி இருக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்? மயிரைக் குறைவாக வைத்திருந்தால் ஆசிரியர்களுக்குப் பிடிக்கிறது. கொஞ்சம் நீளமாகத்தான் இருக்கட்டுமே. குடுமி வைத்து அதில் பூவும் சூடியிருந்தவர்கள் தானே நம் முன்னோர்? தலைக்கு எண்ணெய் தேய்த்துப் படியச் சீவியிருந்தால் ஆசிரியர்களுக்குப் பிடிக்கிறது. இன்றைய மாணவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை விரும்புவதில்லை. மயிர் புசுபுசுவென்று அலைந்து காற்றில் பறப்பதை விரும்புகிறார்கள். மொட்டை அடிப்பது, கரும்புள்ளி செம்புள்ளி குத்துவது, ஒருபுறம் மழிப்பது எனத் தலைமயிரில் தண்டனைகளை வைத்திருந்த காலம் போய்விட்டது.
குடுமிக் காலத்தில் குறிப்பிட்ட சாதியினர் இப்படித்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நடைமுறை இருந்தது. உச்சிக்குடுமி வைத்திருக்கும் உரிமை பெற்றவர்கள் உயர்ந்த சாதியினர். பின்மண்டையில் குடுமி போட்டவர்கள் அடுத்த நிலைச் சாதியினர். முதுகில் முடிந்து குடுமி போட்டவர்கள் கீழ்நிலையினர். இந்தச் சாதி ஆதிக்கக் காலத்தை நாம் இன்னும் கடக்கவில்லையா? மாணவர்களின் தலைமயிர் பாணியால் பதறிப்போகும் ஆசிரியர்களுக்குள் அந்தக்காலச் சாதி ஆதிக்க உணர்வு துளி ஒட்டிக்கொண்டிருக்கிறது போலும்.
சுதந்திர உணர்வோடு இன்றைய தலைமுறை தம் மயிரைக் காற்றில் அலைய விடட்டும். உச்சியில் மயிர்க் கிரீடம் தவழட்டுமே! ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்கிறார் வள்ளுவர். உலகத்தில் உண்டாகும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப உடனுக்குடன் மாறிக்கொள்ள வேண்டும். தினமும் இளவயதினரைச் சந்திக்கும் ஆசிரியர்களுக்கு அது மிகவும் அவசியம். மாற்றத்தை உணர்ந்து மனதைத் திறந்தால் மாணவர் தலைமயிர் பாணியை ஆசிரியர்கள் கண்டு ரசிக்கலாம். மனம் இல்லையேல் தலைகுனிந்துகொண்டு கடந்துவிடலாம். இன்றைய தலைமுறையின் சுதந்திரத்தில் எல்லை மீறித் தலையிடாமல் இருந்தால் போதும். ஆசிரியர் – மாணவர் பிரச்சினை உருவாகாது. மயிரை மாணவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். கற்பித்தலில் நாம் கவனம் செலுத்துவோம்.
4
12
1
1
பின்னூட்டம் (16)
Login / Create an account to add a comment / reply.
Ananth 12 months ago
மயிர் தான் பிரச்சனையா? ஆமாம் மயிர் தான் பிரச்சனை. It is the duty of the writer to correct the society not to corrupt the society. சமுதாயத்தை நல்வழிப்படுத்த, சீர் செய்ய நீதித்துறையும், குற்றங்களை குறைக்க காவல்துறையும் இருக்கின்றன. அவை இரண்டிற்குமான வேலையினை குறைத்திட ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம். Imagine a professor or a teacher boasting such hairstyles, and wearing low-hips, கிழிந்த டெனிம் shirts or pants and taking classes. ஒரு ஆசிரியர்/ பேராசிரியர் இப்படி தான் உடை அணியனும், முடி வெட்டனும் அப்படினு எல்லாம் சமுதாயம் எதிர்பாக்குறப்ப, அதையே சமுதாயம் கிட்ட எதிர் பாக்குற நாங்க பைத்த்தியம் அப்படி தானே. கரோனா சமயத்துல online கிளாசஸ் எடுக்கணும், attendance எடுக்கணும், இருக்கானா இல்லையானு தெரியாம பாடம் எடுக்கணும். இவ்வளவும் பண்ணியும் 50% சம்பளம் கொடுத்தாங்க. அப்பல்லாம் உங்கள் குரல்வளை எங்கு இருந்துச்சு. UGC சொல்லிருக்க norms படி qualified professors சம்பளம் 57000+ க்கு மேல, இங்க கொடுக்கக்கூடிய சம்பளம் 20000, அதுவும் மே மாசம் சம்பளம் கிடையாது, 3 மாதம் 4 மாதம் சம்பளம் கொடுக்கலனா கூட வேலை பாக்குற ஆசிரியர்கள் தமிழ் நாட்டுல இருக்காங்க. அவங்களுக்கும் குரல் கொடுங்க. மயிர் தான் பிரச்சனையா அப்படினா மயிரும் பிரச்சனை தான். அதைத் தாண்டி உயிரும் இருக்கு. அது எல்லாருக்கும் பொதுவானது. நாங்க எங்க ஆசிரியருக்கு கொடுத்த மரியாதையா நாங்க எதிர்பார்க்கல, எங்களையும் ஒரு உயிரா மதிங்கனு தான் சொல்றோம்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
KMathavan 2 years ago
எத்தனை காலங்கள் மாணவர்கள் கண்ணிய குறைவாக நடத்த படுவார்கள். என்பது போன்ற கேள்வி முன் எழுகிறது கட்டுரையின் மையம்.ஒருஆண் மகன் பருவயதில் தன் அழுகு கண்டு வியந்து,வியந்து போகிறான். அந்த காலகட்டத்தில் நடக்கும் முடி அலங்காரம் அவனை திருப்தி அடையச்செய்கிறது.வசூல்ராஜாMBBS. படத்தில் சாம்புமவனே என கமல் அழைக்கும் மாணவன் போன்ற தோற்றமே அனைத்து மாணவர்களும் தோற்றுதல் நல்ல பிள்ளைகள், என நாம் வைத்துக்கொண்டால் எப்படி இருக்கும்.மாணவனுக்கும்,வகுப்புஆசிரியருக்கும் நேரடி மோதல் இல்லாமல் அரசாங்க சட்டவரைவுக்கு உட்பட்டு மாணவரை சில கட்டுபாடுகளுடன் வரையறுக்கவேண்டுத்தல் நிலையான தீர்வு. 10 அ பிரிவு வகுப்பு ஆசிரியர் தான் உண்டு,தன் வேலை உண்டு என இருக்கும் பட்சத்தில் மாணவன் மண்டை அலங்காரம் விருப்பம் போல் இருக்கும். 10 ஆ.பிரிவு வகுப்பு ஆசிரியர் மாணவனை மிக, மிக கவனமுடன் கேள்வி கேட்கும் தலை பிரச்சனை, மாணவனுக்கு அ பிரிவு மாணவன் இப்படி வருகிறான் என்ற எண்ணமே மேலோங்கும் ஆக தீர்வு கிடைக்காது. சாமானியர்கள் மீறும் சட்டம் இதிலிருந்து தொடங்குகிறது என்பேன் கா.மாதவன்
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Arunpriyan 2 years ago
தமிழின் ஆரோக்கியமான கருத்துகள் முக்கியமானதாகவும் கருதுகிறது. வாசகர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக இங்கே எழுத 'அருஞ்சொல்' ஊக்குவிக்கிறது. அதேசமயம், கண்ணியமான மொழியில் அது அமைந்திடுவது முக்கியம். . இந்த அறிவுறை வாசகர்களுக்கு மட்டும் பொருந்தும் கட்டுரையாளர்களுக்கு இல்லை என பின் குறிப்பில் தெரிவிக்க வேண்டுகிறேன். . ஆசிரியரை நோக்கி 'மயிரில்தான் பிரச்சனையா' என கேட்பது அனாகரிகமாக அமைந்துள்ளது. சமுக சிற்பி, எழுத்தறிவித்தவன் இறைவன் என புகழ வேண்டியது இல்லை. ஆனால் எந்த சமூகம் ஆசிரியர்களை மதிக்க தவறுகின்றதோ அதன் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும். . திரு பெருமள் முருகன் அவர்களின் மாதொருபாகன் என்னை மிகவும் பாதித்த கதைகளம். இந்த கட்டுரையில் நான் முரண்பட்டு நிற்க்கிறேன். ஒட்டு மொத்த கட்டுரையில் ஆசிரியர் மாணவர் என்பதற்குக் பதிலாக, கடை முதலாளி தொழிலாளி என மாற்றி எழுதினால் கட்டுரை கருதுத்துக்கள் முழுமையும் சரியாக் பொருந்தி வருகின்றது. . பள்ளி செயல்முறை விவாதத்தில் சாதிய இயல்புகளை மேற்கோளிட்டது மக்களின் பொதுபுத்தியினை மிகவும் தவறான பாதையில் இட்டுச் செல்லும் என கவலையடைய வைக்கின்றது. . மயிர் சார்த்த பள்ளி அரசியலில் ஆசிரியர்களின் வன்மம், அறியாமை, சாதிய உணர்வு, சுய அலங்காரம், உள்ளார்ந்த மனப்பிறழ்வுகள் போண்றவை குறித்து தற்போது டீ கடை திண்ணகளில் நிலவும் மணப்பாங்கை மிகச்சரியாக கட்டுரை ஆசிரியர் பதிவு செய்திருக்கின்றார். -ஆசிரியர்
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Anna.Ravi 2 years ago
கட்டுரையாசிரியர் ஐயா அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை நன்கு தெரியும். இ இத்தகு தலையாய பணி செய்யும் மாணவர்களின் சமூக, பொருளாதர வாழ்வியல் சூழல் குறித்து ஐயா அவர்கள் நன்கு அறிந்தவர். அவரிடமிருந்து இத்தகு கருத்துகள் வந்திருப்பது வியப்பைத் தருகிறது. தனியார் கல்வி நிறுவன மாணவர்களிடம் இத்தகு முடி (வு) எடுக்கும் பிரச்சனைகள் எழுவதில்லை. பெரும்பாலும் அரசு கல்வி நிறுவனங்களிலேயே நிகழ்கின்றன.அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் பணி மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது. கட்டுரையாசிரியர் ஐயா n அவர்கள் கூறுவது போல் மாணவர்களை விட்டுவிடலாமா?
Reply 7 0
Login / Create an account to add a comment / reply.
Banu 2 years ago
ஐயா பெருமாள் முருகன் அவர்களின் கருத்துகளுக்கு எதிர் கருத்துகள் தெரிவிக்க விரும்புகிறேன். நாள்தோறும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் சராசரி தமிழ்நாட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களில் நானும் ஒருவர். இனி மாணவர் விரும்பினால் வண்ண உடைகளில் வரலாமா? எங்கள் வேலை கற்பிப்பதுதானே... வீண்வேலை எதற்கென அமைதி காக்கிறோம்... புகை, மது.... எங்கள் வேலை கற்பிப்பது தானே வேண்டுமென்றால் சாம்பல் தட்ட தட்டு வகுப்பில் வைத்துவிடுகிறது.... எங்கள் வேலை கற்பிப்பதுதானே... நாளை இந்த இளைய சமுதாயம் இராணுவத்திலும், காவல் துறையிலும் கீழ்படிதலுடன் விதிகளுக்குட்பட்டு பணிபுரிவர்... அன்று விண்ணுலகில் இருந்து ஒழுக்கம் நேரடியாக இவர்கள் மனதிற்குள் பாய்ச்சப்பட்டுவிடும் ... மன்னிக்கவும்... கருத்துகள் வரம்பு மீறி இருந்தால்... ஆனால் இதுவே உண்மை..
Reply 17 1
Login / Create an account to add a comment / reply.
Padmini Ramanujam 2 years ago
தமிழ்நாடு முழுவதும் இப்பொழுது மாணவர்களின் சிகையலங்காரம் பெருமாள்முருகன் குறிப்பிட்டது போல்தான். அதே வேளையில் நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களிடையே இது அதிகம் . நகர்ப்புற மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்க ஏகப்பட்ட மடைமாற்றங்கள் உண்டு. ஷாப்பிங் வளாகம், கடற்கரை, திரையரங்கு , பூங்காக்கள் என்று ஏராளம்… ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு இப்படியான ஒன்று ஏதுமில்லை. அவர்களுக்கு ஏதாவது வாழ்க்கையில் மாற்றம் தேவை என்று நினைக்கும் போது அது தோற்ற மாற்றத்தில் கவனம் கொள்ள வைக்கிறது. நகர்ப்புற மாணவர்கள் பிராண்டட் ஷர்ட் அணியும் போது அவனும் அதே போன்று விற்கும் ஆடையை அணிகிறான். கல்வி வளாகங்களில் மாணவர்களின்்மன அழுத்தத்தைக் குறைக்க அல்லது சற்றே ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஏதேனும் வழி வகை உண்டா ? சிற்றுண்டிச்சாலை, ஒரு சிறிய பூங்கா, விளையாட்டு மைதானம், இப்படி சிலவற்றை ஏற்படுத்தித் தருவோமென்றால் அவர்களின் மன அழுத்தம் குறையும். தோற்றத்தினால் வெளிப்படும் அவர்களின் மன எழுச்சியும் கட்டுப்படும். ஆடை அலங்காரம் என்பது அவரவர் மன நிலையை வெளிப்படுத்தும் ஒன்று. மாணவர்கள் எப்போதும் புதியனவற்றையே விரும்புகின்றார்கள். தோற்றத்தில் மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விநிலையங்களிலும் வகுப்பறைகளிலும் மாற்றங்களை வேண்டுவார்கள்தானே. அதே வேளையில் மாணவர்களின் கல்விக்கடமையை தேவையை அவர்களை ஆசிரியர்கள் உணரச்செய்ய வேண்டும். இதற்காக நாம் அதிகமாகவே கடின உழைப்பை தரவேண்டும் தான். இரு தரப்புமே மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
Reply 6 0
Login / Create an account to add a comment / reply.
சு.தாமோதரசாமி 2 years ago
வாழ்க வளமுடன். தங்கள் கட்டுரையில் ஆசிரியர் மற்றும் மாணாக்கர் இடையேயான பிரச்சனையாக முடிதிருத்தம் பற்றி மட்டுமே பிரதானமாக கையாண்டிருப்பது கவலைக்குரியது. தாங்கள், மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருவதுபோல போக்குகாட்டிவிட்டு மாற்றுச்சீருடையில் சக மாணவியை அழைத்துக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதும், சக கூட்டாளிகளோடு சேர்ந்துகொண்டு போதை பழக்கங்களுக்கு உட்படுவதும் அறிந்து கொண்டிருக்கவில்லையா? வகுப்பறை நடைமுறைகளை பின்பற்றாமல் மனம்போன போக்கில் நடந்துகொள்வது தங்கள் கவனத்திற்கு வரவில்லையா? இதையெல்லாம் சுட்டிக்காட்டிருக்கலாம் கண்டித்திருக்கலாம் அல்லவா? கண்டித்திருந்தால் மாணாக்கர் தங்களை நோக்கியும் எதையாவது நீட்டிவிடுவார்கள் என்ற அச்சமா? இந்தக்கட்டுரையை தாங்கள் எழுதுவதற்கு முன் கள ஆய்வுக்குச் சென்றீர்களா? ஆசிரியர்கள் , மற்றும் மாணவர்களிடம் பேசினீர்களா? மாணாக்கர் கூடும் இடங்களில் சக மனிதனாக பயணித்தீர்களா? அவர்களின் தற்போதைய நடவடி.க்கைகளை கவனித்தீர்களா? அவ்வளவு ஏன் திமிர்பிடுச்சவன் திரைப்படத்தில் 18வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களை வைத்து சமூக குற்றங்களை செய்வதாக காட்சிப்படுத்தியிருந்தனர். தாங்கள் இதுசார்ந்து ஏதாவது சமூகத்திற்கு செய்தியை வெளிப்படுத்தினீரா? ஒட்டுமொத்தமாக பதின்ம வயதுப்பிள்ளைகளுக்கு தவறான வழிகாட்டலை நல்கிய இப்படத்தில் நல்ல காட்சிகள் உண்டு. ஆனால் அதையெல்லாம் காணும் மனநிலையில் பிள்ளைகள் இல்லை என்பதை தாங்கள் களப்பரிசோதனையில் அறிந்துகொள்ள வேண்டும். இத்தனை நாட்களில் இல்லாமல் இப்போது ஏன் இப்பிரச்சனைகள் தீவிரமாக எழுகிறது என்றால் இணையவழிக்கல்விக்காக கிட்டத்தட்ட 80% மாணாக்கரிடம் அலைபேசி இரண்டாம் மூளையாக உள்நுழைந்து அவர்களை தவறான செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. கிராமம்,நகரம் மாநகரம் எனறு மாற்றமில்லாமல் எல்லா இடங்களிலும் அலைபேசி விளையாட்டு மற்றும் ஆபாச படங்களைப் பார்ப்பது என்பது எல்லா வயதினரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை தாங்கள் அறிய வேண்டும். மாதிரி சமூகம் பள்ளிதானே. இங்கிருந்து மாணவர்களை சமூகத்திற்கு தரமான குடிமகன்களாக அனுப்புவது தான் பள்ளியின் கடமை. இதனை அடைவதற்காகத்தான் ஆசிரியர்கள் அரும்பாடுபட்டுக் கொண்டுள்ளனர் என்பதை தாங்கள் அறிய வேண்டும். ஆசிரியர்களை நோக்கி ஒருவிரலை நீட்டுங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் சமூகத்தின் பார்வையை பதிவுசெய்ததில் உள்ள பாகுபாட்டை சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன். இருதரப்பு நியாயங்களை உள்ளது உள்ளபடி எதிர்காலத்தில் தாங்கள் பதிவுசெய்வீர்கள் என்றே நம்புகிறேன்.
Reply 17 0
Login / Create an account to add a comment / reply.
Sivakumar 2 years ago
அன்பின் ஐயா அவர்களுக்கு.... வலி எனப்படுவது வலி உணர்ந்தவர்களுக்கே வெளிச்சம். ஆசிரியர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள் சரி. இந்த தலைமயிர்ச் சிக்கல் இப்போது கொரொனா காலத்தில் தான் என நினைத்துக் கொண்டு எழுதுவது அதிமேதாவித்தனம். கல்வி முறையில் மிகப்பெரிய சுரண்டல் ஒன்று நடைபெறுவது தாங்கள் அறியவில்லை போலும். கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தம் அறிதிறன் பற்றி நீங்கள் எவரேனும் வினா எழுப்பியதுண்டா? இங்கு மயிர் மட்டும் சிக்கல் இல்லை எல்லாமே இடியாப்பச்சிக்கலாய் முடிந்திருக்கிறது. மயிர் என்பது அடங்காத்தனத்தின் அடிப்படைக் குறியீடு. மயிர் என்பது ஒரு மனநிலை. உளவியல் அறியாத ஆசிரியர்கள் பணிக்கு வருவது ஒரு புறம் பெரிய சாபக்கேடு. ஆசிரியை கையுயர்த்தி கரும்பலகையில் எழுதினால் மாணவனின் அலைபேசி விழித்துக்கொள்கிறது பற்றி நீர் அறியீர் போலும். எப்போதும் பொதுப்பார்வையில் வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஒரு வகுப்பைக்கூட முழுமையாக எடுக்க முடியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டே தனது அறை செல்லும் அசிரியைகளைத் தெரியுமா உங்களுக்கு. அல்லது தன் சுயத்தைத் தொலைத்து மனவேதனையில் உழலும் ஆசிரியர்களைத்தான் தெரியுமா? ஒரே அடியாக ஆசிரியர்கள் பக்கம் கைநீட்டி கைதட்டைப் பெறும் இழி நோக்கைக் கைவிட்டு எல்லாக் கோணங்களிலிலும் சிந்தித்து எழுத முடிந்தால் எழுதவும். ஆசிரியரைக் கைகாட்டும் நீர் அரசு எந்திரங்கள் பற்றியும் பேசியிருக்கலாமே?!! அடியேனுக்குத் தெரிந்தது அவ்வளவே. நன்றி
Reply 25 0
Login / Create an account to add a comment / reply.
Chella 2 years ago
மனிதன் ஒரு சமூக விலங்கு, மயிரில் கலை வளர்த்தல், நவீன பாணி, சுதந்திரம் ... அது எல்லாம் சரிதான் ஐயா.... ஆனால் இங்கு பேசப்படும் 'இடம்' என்பது "பள்ளிக்கூடம்". சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் சீரழிவுகளையோ அவற்றை சீரமைக்க ஆரம்பிக்க வேண்டிய அடிப்படை மாற்றங்களைக் குறித்தோ சிந்திக்காமல் இப்படி ஏனோ தானோ என்று வெறும் 'மயிர்' பற்றி எழுதலாமா... ? இது சரி என்றால்.... மாணவ மாணவியருக்கு எதற்கு சீருடை...? எதற்கு வருகைப் பதிவு ? எதற்கு கால அட்டவணை ? என்றெல்லாம் கேட்கலாம். மாணவர்களுடன் ஆண்டுக்கணக்கில் மிக நெருக்கமாக இருக்கும் அனைவரும் அறிந்தது அவர்களின் கேடு கெட்ட வார்த்தைப் பிரயோகங்கள், செய்யும் எதிலும் ஒழுக்கமின்மை, மித மிஞ்சிய சுய நலம், தனக்கு ஒரு அவமானம், கோபம் என்றால் அதற்காக இந்த உலகையே அழிக்கத் துடிக்கும் அகம்பாவம் ஆகியன. மாணவர்களில் ஒரு பகுதியினர்தான் இப்படி என்றாலும், இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது உண்மை. 'விதிகளுக்கு கட்டுப்படுதல் ' என்பது ஒரு நாகரிக சமூகத்தின் அடையாளம். பொது இடம், கோவில், பணி இடம் என எங்கும், ஒரு 'சீரான' இயங்குதலையும், அனைவர் நலனை காக்க வேண்டியும் (வலியோர் எளியோர் பாகுபாடின்றி ), அந்த இடம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை அடைய வேண்டியும் விதிகள் உருவாக்கப்படுகின்றன. விதிகள் மாறலாம். ஆனால் தெளிந்த ஆய்வு தேவை. மேற்கண்ட எல்லா ஒழுங்கீனங்கழும் ஆரம்பிக்கும் புள்ளிகளில் ஒன்று மயிராகவும் இருக்கலாம். எனவே இது வெறும் 'மயிர்' பிரச்சினை அல்ல.
Reply 26 0
Login / Create an account to add a comment / reply.
Sathish Kumar Chidambaram 2 years ago
மயிருக்கும் பயிருக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஒரு கட்டுரை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியாக இருக்கிறது இக்கட்டுரை... நடிகர்களோடும் விளையாட்டு வீரர்களோடும் மாணவர்களை ஒப்பிடுப்பார்க்கிறது கட்டுரை.. சம்பாதிக்கும் இடத்தில் இருந்துகொண்டு புகையிலை, மது, மாது என கேளிக்கைகளில் திரியும் கூட்டத்திடம் சிக்காமல் இருக்கச் செய்யும் கல்வியை, அவர்களே அப்படி இருக்கும்போது, இவர்கள் இப்படியிருந்தால் என்ன எனக் கேட்கிறது கட்டுரை. கிழிந்துபோன சட்டையை ஒருவர் தைத்துப் போடும்பொழுது, மாணவர்கள் சட்டையைக் கிழித்துவிட்டுத் திரிந்தால் என்ன எனச் சொல்வதாக அமைந்திருக்கிறது கட்டுரையாளரின் மனப்பான்மை. ஆசிரியர்கள் வழுக்கையை மறைக்க தலைமுடியை மடித்து சீவுவதையும், மாணவர்கள் குடுமி வளர்ப்பதையும் ஒன்றாக்கிப் பார்க்கும் ஒப்பீடு நகையாட வைக்கிறது. பதின்ம வயதில் எல்லாவற்றின்மீதும் ஆர்வம் வரத்தான் செய்யும். ஆனால் எதனை நோக்கி நகர வேண்டும் என ஒழுங்குபடுத்துவதே கல்வியாக அமைய வேண்டும். நடத்தையில் மாற்றம் என்பதுதான் கல்வி. நடத்தை எப்படி மாறிப்போனாலும் ஏற்றுக்கொள்வதை எப்படிக் கல்வியாகக் கருத முடியும். ஆசிரியரை அடிப்பதற்கும் ஒரு நியாயம் தேடப் பார்க்கிறதாகவே தோன்றுகிறது இக்கட்டுரையாளரின் மனப்போக்கு. ஆனால் அவர்போக்கில் பார்த்தால் ஏன் பள்ளிகளில் சீருடை? மாணவர்கள் படித்தால் படிக்கட்டும். இல்லையேல் இருக்கட்டும் ஆசிரியர்களுக்கு ஏன் கவலை? மாணவர்கள் பதின்ம வயதில் காதல் செய்யாமல் எப்பொழுது செய்வார்கள்? மாணவர்கள் இப்பொழுது தவறு செய்யாமல் எப்பொழுது செய்வார்கள்? ஏன் ஆசிரியர்கள் தவறே செய்யவில்லையா? என்னும் போக்கிலேயே அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். தவறுகள் எல்லாமட்டத்திலும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கு நியாயம் கற்பிக்கும் ஒரு கூட்டம் அலைந்தேகொண்டே இருக்கின்றது அவர்கள்தான் இந்த சமூகத்திற்கு பேராபத்தாக இருக்கின்றனர். எந்த ஆசிரியரும் தண்டிக்க விரும்புவதில்லை. கண்டிக்கவே விரும்புகின்றனர். கண்டிப்பதையே கண்டணத்திற்குரியது என்றால் கல்வியின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும். சிகரம்சதிஷ் எழுத்தாளர்- ஆசிரியர்
Reply 25 0
Login / Create an account to add a comment / reply.
Elango 2 years ago
மாணவர்கள் தலைமுடி, மீசை எப்படி வைத்திருக்க வேண்டும் என்றே அதிகாரிகளிடம் இருந்து சுற்றறிக்கை வருகிறது. ஆனால் மயிர் மட்டுமே பிரச்சினை இல்லை. பெண் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது, மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து டிக் டாக் வீடியோ வெளியிடுவது, அதைக் தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு வெளியே அடிஉதை கொடுத்தது. மது மயக்கத்தில் வந்து வகுப்பில் கலாட்டா செய்வது .... என நீண்டுக்கொண்டே செல்கிறது. மற்றொரு புறம் அதிகாரிகள் வழங்கும் பணிச்சுமை, EMIS ல் ஏராளமான பதிவேற்றம். தேர்ச்சி விழுக்காடு கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி ... கல்லூரிகளில் மேற்காண் பிரச்சினைகளை கண்டும் காணாமலும் போய்விடலாம். பள்ளியில் அப்படி அல்ல. பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் உங்கள் மாணவர்களிடம் கலந்துரையாடிப் பாருங்கள். பிரச்சினைகளின் பட்டியல் நீளக்கூடும்.
Reply 13 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
எங்கள் பள்ளிகூட மற்றும் கல்லூரி பருவத்தில் தலை மயிர் ஒழுக்கம் strict ஆக கடை பிடிக்கபட்டது.. ஆசிரியர் கூறுவது போல எங்கள் இளமையில் வித விதமான hairstyle வைத்த நினைவு இல்லை.. உடை கட்டுப்பாடு அவசியம் என்று எண்ணினால், மயிர் கட்டுபாடும் அவசியம் வேண்டும்...
Reply 14 0
Login / Create an account to add a comment / reply.
James Kumar 2 years ago
அருமையான கட்டுரை. . . ஆசிரியர்கள் மாணவர்களின் முடியில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக ஒழுக்கத்திலும் கல்வியிலும் செலுத்தலாம்.
Reply 4 14
Sivakumar 2 years ago
ஒழுக்கக்கேட்டின் குறியீடாக மாணவர்கள் கொண்டிருப்பதே சிகையலங்காரம் தானே சார்.
Reply 8 1
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 2 years ago
மயிர் மட்டும் அல்ல பிரச்சினை.... மாணவர்கள் பள்ளிச் சூழலில் செய்யும் பலவிதமான விதிமீறல்கள் இக்கட்டுரையில் குறிப்பிடாதது வருத்தமே... ஆசிரியரைச் சுற்றி வந்து கும்மியடிப்பது ,ஆசிரியைகளைத் தரக்குறைவாக இழிவார்த்தைகளைப் பயன்படுத்தி பாலியல் சீண்டல்கள் செய்வது, சகத்தோழிகளை இம்சிப்பது, பள்ளிவளாகச்சுவரிலும் , மாற்றுத்திறனாளி ஆசிரியர் முன் அவரை அவமதிக்கும் படி செய்வது போன்ற செயல்கள் , அதே மயிர் பிரச்சனையா?பள்ளி வளாகத்தின் வெளியே அரசுப்பேருந்துகளில் செய்யும் அடாவடிகளுக்கும் மயிர் மட்டுமே பிரச்சனையா ? மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு முழுக்க வாட்ஸ் அப்பில் பரவிய, அரசுப்பேருந்தில் பயணிக்கும் போது மாணவிகள் பீர் பானத்தை அருந்தியதற்கும் தலைமயிர் பிரச்சினை தான் காரணமா? கல்வித்துறையானது மாணவர்களுக்கு தலைமுடியானது இப்படித்தான் இருக்க வேண்டும் மேலும் இதைக்கண்காணிப்பது ஆசிரியர்களின் பொறுப்பு என்று சுற்றறிக்கை விடுவானேன் ? அதற்கு ஆசிரியர்கள் பலிகடா ஆவதேன் ? மாணவ மாணவிகள் மயிர் வளர்ப்பதில் மட்டுமே பிரச்சினை அல்ல.... அதற்கான ஆணிவேர் வேறு எங்கோ இருந்து வருகிறது.... அதைப்பற்றி கட்டுரையாளர் இன்னொரு முறை எழுதுவார் என்று நம்புகிறேன்.... நன்றி
Reply 24 0
Login / Create an account to add a comment / reply.
Pradhap M 2 years ago
தவறாக கருதவில்லை இருப்பினும் எது சரி என்பதோ அல்லது எது நல்லது என்பதை பற்றியோ வருந்தத் தேவையில்லை அவரவர் போக்கில் செல்லட்டும் என்பதே பொருளாக புரிகின்றது. நன்று. எனதறிவுக்கு தெரிந்தவரை மனிதனும் சமூக விலங்கே தேனீக்கள் கரையான்கள் போன்றவையும் சமூக பூச்சிகள் தான் இன்றும் இயற்கை தேர்வுப்படி வாழ்கின்றது நம்மால் ஏற்படும் இடையூறு தவிர அவை அனைத்தும் நன்று வாழ்கின்றன ... நன்று
Reply 2 1
Login / Create an account to add a comment / reply.