கட்டுரை, கலாச்சாரம், கல்வி 10 நிமிட வாசிப்பு

மயிர்தான் பிரச்சினையா? அன்பைக் கூட்டுவோம்!

பெருமாள்முருகன்
16 Apr 2022, 5:00 am
4

மீபத்தில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியான ‘மயிர்தான் பிரச்சினையா?’ கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள். எழுத்துப்பூர்வமாக வந்தவை கொஞ்சம். புலனத்தில் எழுந்தவை பல. உரையாடலில் விவாதிக்கப்பட்டவற்றுக்கு அளவே இல்லை.

எதிர்வினை என்றதும் எதிர்ப்பு என்று நான் பொருள் கொள்ளவில்லை. ஆதரவும் பரிசீலனையுமாக வந்தவை பல. ‘எனக்கும் மாணவர் முடி தொடர்பில் மோசமான பார்வை சமீப காலம் வரை இருந்தது. அதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது’ என்று சொன்னார் ஓர் ஆசிரியர். ‘படிக்கும் காலத்தில் நான் ஸ்டெப் கட்டிங் வைத்திருந்தேன்’ என்றும் ‘ஒருதலை ராகம் படத்தில் வருகிற மாதிரி ஹிப்பிதான் அப்போது என் ஸ்டைல்’, ‘அப்போது நான் ஃபங்க் வளர்த்திருந்தேன் சார்’ என்றும் சில நண்பர்கள் தங்கள் இளமைக் காலத்தைப் பகிர்ந்துகொண்டனர்.  ‘மாறிக்கணுங்கிறீங்க’ என்றவர்கள் பலர். ‘நகரத்து மாணவர்களைவிடக் கிராமத்து மாணவர்களிடம் முடித்தோற்றம் பற்றிய கவனம் அதிகமாக இருக்கிறது’ என்று ஓர் ஆசிரியரின் உற்று நோக்கல் பதிவாகியிருக்கிறது. பாதகமில்லை, பரிசீலிப்பவர்கள் இருக்கிறார்கள். 

இந்தக் கட்டுரை வெளியான பிறகு சில கல்லூரி நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன். அங்கெல்லாம் மாணவர்கள் இக்கட்டுரை குறித்து மகிழ்ச்சியோடு பேசினர். தம் தரப்பில் நின்று பேசியதற்காகச் சிறப்புக் கைத்தட்டல்களையும் கொடுத்தனர்.  இப்போது ‘நம்ம பையன்’ (Namma paiyan) என்னும் யுடியூப் தளத்தில், மயிர்ப் பிரச்சினையைப் பேசும் ஒரு குறும்படம் (Engineering College Days | Beard Problems) வெளியாகியுள்ளது. அது பொறியியல் கல்லூரி மாணவர்களின் தாடிப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது.

இன்றைய மாணவர்கள் தாடி வைத்துக்கொள்வதை விரும்புகிறார்கள். தாடி வைத்தல் காதல் தோல்வியின் அடையாளம் என்னும் கருத்து இன்றில்லை. மெல்லிய கருந்தாடியைக் கன்னத்தில் படரவிடுவது இப்போதைய பாணி. தாடி வராத இளைஞர்கள் தாழ்வுணர்வு கொள்கிறார்கள். அதை வளர்ப்பதற்குப் பலவிதமாக முயல்கிறார்கள். கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர்களும் தாடிக்கு எதிராக உள்ளனர். தாடி வைத்திருக்கும் மாணவர்கள் தம் ஆசிரியர்களை எதிர்கொள்ளப் படும் பாட்டைப் படம் விவரிக்கிறது. அதற்குத்தான் எத்தனை விருப்பங்கள்!  

கட்டுரையைக் கடுமையாக எதிர்த்தவர்களின் கருத்துகளைப் பொறுமையாக வாசித்தேன். ஏமாற்றமாக இருந்தது. ஆசிரியர்களுக்கு எதிரானது என்று முடிவுசெய்துவிட்டால் வாசிப்புக்கு இடம் ஏது? மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வதில் ஆசிரியர்கள் தவறவிடும் புள்ளிகளைப் பற்றிப் பேசுகிறது கட்டுரை. ‘இன்றைய தலைமுறையினரின் மயிரைப் பார்த்ததும் ஏன் நமக்கு எரிச்சல் வருகிறது?’ என்னும் கேள்வியைக் கேட்டுகொண்டு யோசிக்கக் கொஞ்சம் நேரம் கொடுத்தால் கட்டுரையின் தொனி விளங்கும். ‘இந்தக் காலத்து மயிர்பாணி இது’ என்று ஏற்றுக்கொள்வதில் நமக்குள்ள தடைகள் எவை? என்பதைத் துணைக் கேள்வியாகக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் இன்னும் வெவ்வேறு பிரச்சினைகளையும் பேசலாம். மற்றபடி ஆசிரியர்களுக்கு எதிரானது என்று முடிவு செய்துகொண்டு ‘ஆசிரியர்கள் தெய்வங்கள்; புனிதர்கள்; எழுத்தறிவித்தவன் இறைவன். அவர்கள் மீது குறை சொல்லலாமா?’ என்றெல்லாம் பழைய விழுமியங்களைத் தூக்கிக்கொண்டு வந்தால் எப்படி? 

ஒரு விவாதத்தில் தர்க்க வகைகளைத் திறம்படப் பயன்படுத்தும் பல நூல்கள் நம்மிடம் உள்ளன. மணிமேகலை, நீலகேசி உள்ளிட்டவையும் பிற்காலச் சித்தாந்த உரைகள் பலவும் அப்படிப்பட்டவை. அந்தத் தர்க்க மனதை எங்கே இழந்தோம்?  ‘மயிர்தான் பிரச்சினையா?’ என்று கேட்டால் உடனே ‘மாணவர்கள் மது அருந்துவதை நியாயப்படுத்தி எழுதுங்கள், போதைப்பொருள் பயன்படுத்துவதை ஆதரியுங்கள், சீருடையைத் தவிர்த்துவிட்டு வண்ண உடைகளை அணியச் சொல்லுங்கள்’ என்றெல்லாம் சொல்வது என்ன வகை தர்க்கம்?

ஒவ்வொன்றைப் பற்றியும் பேச வேண்டும். அவை சரி, தவறு என்னும் பார்வை ஒருபுறம். இவை நிலவப் பின்னணிக் காரணங்கள் எவை என ஆராய்வது இன்னொரு புறம். இவற்றைத் தவிர்ப்பது அல்லது மாற்றுவது எப்படி என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை வந்ததும் இந்தக் காலத்திலும் சீருடை தேவையா என்னும் கேள்வியைப் பலர் முன்வைத்தனர். மேற்கொண்டு அந்த விவாதம் செல்லவில்லை. சென்றிருக்க வேண்டும்.

அளவுகோல்களைப் பயன்படுத்துவதிலும் அப்படித்தான். ஓர் ஆசிரியர் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வந்தார் என்று செய்தி வந்தால் ‘எங்கேயோ ஓரிருவர் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக எல்லா ஆசிரியர்களும் அப்படித்தான் என்று சொல்ல முடியுமா?’ என்று கேட்பார்கள். அதுவே ஒரு மாணவர் மது அருந்திவிட்டு வந்தார் என்றால் ‘மாணவ சமுதாயமே பாழ்பட்டுவிட்டது’ என்று ஒப்பாரி வைப்பார்கள். ஆசிரியர் ஒருவர் சாதிரீதியாக மாணவர்களைப் பார்த்துத் திட்டுகிறார் என்றால் ‘எல்லா ஆசிரியர்களையும் சொல்லாதீர்கள். அவர்மீது நடவடிக்கை எடுங்கள்’ என்பார்கள்.

எங்கோ ஓரிடத்தில் மாணவர் சிலர் சாதி அடையாளக் கயிறு கட்டிக்கொண்டு வந்தால் எல்லாப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அப்படித்தான் என்று மாணவ சமுதாயத்தையே வசைபாடுவார்கள். கரோனோ காலத்தில் படிப்பையே மறந்துவிட்ட மாணவர்களுக்குக் கலந்தாலோசனை தேவை என்றால் ஆதரிப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்களைக் கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் கலந்தாலோசனை தேவை என்றால், ‘இவ்வளவு படித்துவிட்டு வந்த ஆசிரியர்களுக்கா கலந்தாலோசனை?’ என்று கொதிப்பார்கள். நம் அளவுகோல் எங்கே நீள்கிறது, எங்கே சுருங்குகிறது என்று பாருங்கள்.

மாணவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லாத் தரப்பினருக்கும் ஒழுக்கம் அவசியம். ஆனால், ஒழுக்கம் என்பதற்குக் காலம் கடந்த வரையறை ஏதுமில்லை. காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப ஒழுக்க விதிகளில் சிறுசிறு மாற்றங்களோ பெரும் மாற்றங்களோ நிகழ்கின்றன. அவற்றை உணர்ந்து ஏற்றுக்கொள்ளாமல் காலாவதியான பழைய விழுமியங்களைத் தூக்கிக்கொண்டு வந்து புலம்புகிறது ஒழுக்கவாதம். வலைவகுப்புகள், திறன் வகுப்பறைகள், கற்பித்தலில் நவீனக் கருவிகளின் பயன்பாடு என்றெல்லாம் மாறிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பழைய ஒழுக்க விதிகளில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம் என்றால் சரியா? மாற்றங்களை இயல்பாகக்கொண்டு வளர்ந்துவருகிறது இளைய தலைமுறை. நிர்ப்பந்தம் ஏற்படும் வரை மாற மாட்டோம் என்று அடம்பிடிக்கிறது முந்தைய தலைமுறை. இந்த முரணைப் பற்றி நாம் விரிவாக விவாதிக்க வேண்டிய காலம் இது. 

இந்த எதிர்வினைகளில் ஒரு மகிழ்ச்சி ‘மயிர்’ என்னும் சொல் பயன்பாடு இயல்பாகியிருப்பதுதான். ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’, ‘தலையின் இழிந்த மயிர் அனையர்’ என்றெல்லாம் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். ‘வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி’ என்கிறார் ஆண்டாள். ‘சிலிர்த்து மெய்ம்மயிர் போர்த்தனர்’, ‘கருமைபோய் வெளுத்தது ஓர்மயிர்’ என்பன கம்பராமாயணத் தொடர்கள். தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் ‘மயிர்’ என்னும் சொல் பயன்பாட்டுக்கு எத்தனையோ சான்றுகள்!

மக்கள் வழக்கில் இச்சொல் இன்றும் வாழ்கிறது. உடல் உறுப்புகளில் ஒன்றைக் குறிக்கும் இத்தகைய சொல்லை ‘இடக்கர்’ என்று கருதி ஒதுக்கும் போக்கு சமீப காலமாக நிலவுகிறது. இந்த விவாதத்தில் அது தகர்ந்திருக்கிறது. இயல்பாகவோ கோபமாகவோ பலரும் ‘மயிர்’ என்பதைச் சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். மகிழ்ச்சி.

நான் ‘மயிர்தான் பிரச்சினையா?’ கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துகள் பல்லாண்டுகளாகவே எனக்குள் இருந்தவைதான் என்றாலும் கட்டுரையாக்கும் எண்ணத்தை உருவாக்கியது ஒரு செய்தி. சேலம் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் முடிவெட்டிக்கொண்டு வரும்படி தலைமையாசிரியர் சொன்னதை எதிர்த்த மாணவர் ஒருவர் பீர் பாட்டிலால் தாக்க வந்தார், பொருட்களை உடைத்தார் என்பதுதான் அது. அம்மாணவர் கைதுசெய்யப்பட்டுக் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று காவல் துறை சொல்லியிருக்கிறது. அம்மாணவரின் செயல் தவறானது. பதின்வயது இளைஞர், அதுவும் மாணவர் ஒருவர் குற்ற மனநிலை கொள்வது மிகவும் வருத்தத்திற்குரியது. பதற்றத்துடன் மூச்சு வாங்க அவர் பேசும் காணொலியைப் பார்த்தபோது அவருக்குத் தேவை தண்டனை அல்ல; கலந்தாலோசனை என்றுதான் எனக்குப் பட்டது. 

தேனி மாவட்டப் பள்ளிக் காட்சி ஒன்றும் அதைப் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வந்தன. ‘ஏறுனா ரயிலு, போட்டா ஜெயிலு, எடுத்தா பெயிலு’ என்று வசனம் பேசும் சிறுவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ரயிலை அவர் பார்த்திருக்கக் கூடும். ஜெயிலைத் திரைப்படத்தில் கண்டிருக்கலாம். ‘பெயில்’ என்றால் என்னவென்று அம்மாணவருக்குத் தெரியுமா? இந்த வசனத்தை எங்கிருந்து அவர் எடுத்திருப்பார்? இத்தகைய மாணவர்களை எப்படி அணுகுவது? ஓர் ஆசிரியராக என் அணுகுமுறையில் என்ன மாற்றம் தேவை? என் மகனாக இருந்தால் காவல் துறையில் ஒப்படைக்க விரும்புவேனா? பாதுகாப்புக் கேட்டுப் போராட்டம் நடத்துவேனா? நெருக்கடியான காலத்தில் என் பாதுகாப்புக்குப் படை திரண்டு வந்தவர்கள் மாணவர்கள். அவர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்கும் அவலமும் நேருமா? இவைதான் என் மனதுக்குள் ஓடின. 

பரபரப்புக்காகவோ செய்தி மதிப்புக்காகவோ பொதுப்புத்தி சார்ந்தவற்றை ஊடகங்கள் அப்படியே முன்வைக்கின்றன. சிறு கேள்விகளைக்கூட எழுப்புவது கிடையாது. ‘நான் ரௌடிதான்’ என்று ஒரு மாணவர் சொன்னால் அது செய்தி மதிப்புப் பெறுகிறது. ஒரு மாணவர் தன்னை ரௌடி என்று சொல்லிக்கொள்கிறார் என்பது பொதுப்புத்திக்கு உவப்பாக இருக்கிறது. பதின்வயதினரைக் குற்றவாளிகளாகவும் குற்றம் செய்ய எந்நேரமும் தயாராக இருப்பவர்களாகவும் பொதுப்புத்தி கருதுகிறது. ‘நான் ரௌடிதான்’ என்பது பதின்வயதின் ஒப்புதல் வாக்குமூலமாக வெளிப்படும்போது எல்லோருக்கும் அத்தனை ஆனந்தம். ‘நீ என்ன பெரிய ரௌடியா?’ என்று ஓர் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குத்தான் இந்தப் பதில் வருகிறது. ஆனால், கேள்விக்கும் கேட்டவருக்கும் செய்தி மதிப்பில்லை.  

ஓர் ஆசிரியரின் வாயிலிருந்து ‘தூக்கிருவாங்க’, ‘போட்டுருவாங்க’ என்னும் சொற்கள்  வருகின்றன. அதற்கு ‘மயிரக்கூடப் புடுங்க முடியாது’ என்று மாணவரிடம் இருந்து பதில் வருகிறது. மாணவர் பேச்சும் அவர் செயலும் படத்தில் தெரிகிறது. ஆசிரியரின் ஏளனத் தொனி மட்டும் குரலில் தெரிகிறது. அவர் தோற்றமும் செயலும் தெரியவில்லை. மாணவர் என்ன பேசினார், என்ன செய்தார் என்று ஆசிரியர் சொல்லும்போது எல்லோரும் நம்புகிறோம். ‘முடிச்சிருவன்னு சொன்னாரு’ என்று மாணவர் ஓர் ஆசிரியர் மீது குற்றம் சாட்டுகிறார். அதைப் ‘பொய்’ என்னும் ஒரே சொல்லில் எளிதாகக் கடந்துவிடுகிறோம். மாணவர் பொய்ப் பேசுவார்; ஆசிரியர் உண்மையே பேசுவார் என்பது என்ன வகை நியாயம்? ஏன் நாம் இன்னொரு பக்கத்து நியாயத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை?

ஆசிரியர்களாகட்டும், பொதுச் சமூக மனிதர்களாகட்டும், மாணவர்களை எதிர்மறையாகவே அணுகுகிறோம். மாணவர்கள் குற்றவாளிகள்; எந்த நேரத்திலும் குற்றம் புரியத் தயாராக இருப்பவர்கள் என்பதுதான் இந்த அணுகுமுறை. ஆகவே எப்போதும் அவர்களைக் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறோம். பெற்றோரின் கண்காணிப்பு, ஆசிரியர்களின் கண்காணிப்பு மட்டுமல்ல, பொது மனிதர்களும் அவர்களைக் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று பேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சி கண்ணில்பட்டதும் ‘இதுங்கெல்லாம் வெளங்கவா போகுது’ என்றொருவர் சாபம்விடுகிறார். நம் சமூகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதே குற்றமாகிவிடுகிறது. குற்றப் பார்வைகொண்ட கண்கள் இந்தச் சமூகத்தினுடையது. 

இதைச் சொன்னதும் ‘மாணவர்களைக் கண்காணிக்கவே கூடாதா?’ என்று பாய்ந்துவரும் குரல்கள் காதுகளில் விழுகின்றன. அவசியமான கண்காணிப்பும் ஆலோசனையும் தேவை. ‘குற்றப் பார்வை’ வேண்டாம் என்கிறேன். சமூகத்தில் கொலை, கொள்ளை, களவு, ஏமாற்று, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட பெருங்குற்றங்களில் ஈடுபவர்கள் பெரும்பான்மையாக முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். பதின்வயதுப் பிள்ளைகள் சமூக, குடும்ப வாழ்வுக்குள் இன்னும் நுழையாதவர்கள். பொறுப்பு குறைவானவர்கள். பணி, ஊதியம் எனப் பணத்தைக் கையாளச் சந்தர்ப்பம் அமையாதவர்கள். ஆகவே குற்றம் செய்வதற்கான வாய்ப்புகளைக் குறைவாகவே பெற்றவர்கள். வாய்ப்பற்றவர்கள் மீதே சமூகத்தின் ‘குற்றப் பார்வை’ முழுவதுமாகப் படிகிறது. தன்னம்பிக்கைப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் மூத்தவர்கள் இளையவர்கள் மேல் நம்பிக்கை கொள்வதில்லை என்பது முரண்.

மாணவர்களைக் குற்றப் பார்வையோடு அணுகுவதால் எல்லோரிடமும் அதிகாரத் தொனி வந்துவிடுகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர் மீது செலுத்தும் அதிகாரத்திற்கு அளவேயில்லை. நிர்வாகத் துறைகளில் பணிபுரிபவர்கள் பலரைவிடவும் அதிக ஊதியம் பெற்றபோதும் அவர்களுக்கு நிகரான அதிகாரம் ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள் அதிகாரம் செய்யக் கிடைத்த பிறவிகள் மாணவர்கள்தான். மாணவர்களிடம் ஆசிரியர்கள் காட்டும் அதிகாரம் ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது; ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது. மாணவர்களை அடிக்கக் கூடாது என்று அரசு தடுத்துவிட்டதுதான் மாணவ சமுதாயம் தற்கெட்டுப் போவதற்குக் காரணம் என்று நம்பும் ஆசிரியர்கள் அனேகம்.

அடித்தல் என்பது வன்முறை வடிவம், அதைக் குழந்தைகள் மீது பிரயோகிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்னும் கருத்தோட்டம் உலகெங்கும் மேலோங்கியிருக்கும் காலம் இது. ‘அடியாத மாடு படியாது’ போன்ற பழந்தொடர்களை ஏந்திக்கொண்டு அடிக்க ஏங்கும் மனநிலையை எப்படிப் போக்குவது?

‘டேய்’ என்னும் விளியைக்கூட இன்றைய மாணவர்கள் விரும்புவதில்லை. வயதின் காரணமாகவோ பதவிப் படிநிலையின் காரணமாகவோ ஒருவர் அப்படி அழைப்பதை இளையவர்கள் ஏற்பதில்லை. சகவயது நண்பர்கள் மட்டுமே அப்படி அழைக்க உரிமை உடையவர்கள் என்றே கருதுகிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் ‘டேய்’ என்றுதான் அழைக்கிறார்கள். அதில் ஒரு காவலர் தம் முன்னிற்கும் குற்றவாளியை அழைக்கும் தொனியை மாணவர்கள் உணர்கிறார்கள். காவலர்கள்கூடக் குற்றவாளியை ‘டேய்’ என்றழைக்கக் கூடாது என்னும் இடத்தை நோக்கி இன்று நகர்ந்திருக்கிறோம். இப்படியான அழைப்புகள் நம் சமூகத்தில் சாதியப் படிநிலை சார்ந்தவை. அறிந்தோ அறியாமலோ ஆதிக்க சாதி மனநிலை நமக்குள் படிந்திருக்கிறது. அதை மாணவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படிச் சிறுசிறு விஷயங்கள் என்று கருதப்படும் பலவற்றைப் பற்றி நாம் விவாதிக்கலாம்; பரிசீலிக்கலாம். அதற்கு ஆசிரியர்கள் தம் அதிகாரத் தொனியைச் சற்றே குறைத்துக்கொள்ள வேண்டும்; அன்பை இன்னும் இன்னும் கூட்ட வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

6





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

aslam   1 year ago

பெருமாள் முருகன் மிகச் சிறந்த இலக்கியவாதி நூலாசிரியர் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை ஆனால் இன்றைய சமூகத்தில் நிலவும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர்களிடையே காணப்படும் ஒழுக்க சீர்கேடுகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் இத்தகைய கருத்துக்களை முன்னெடுப்பது மிகவும் ஆபத்தானது இன்று ஆசிரியர்கள் தினமும் சந்திக்கும் சவால்கள் ஏராளம் அதில் இந்த மயிர் பிரச்சனை மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்க கலை தெரியப்பட வேண்டிய ஒரு சமூக தீமை ஒரு தனி மனிதன் தான் விரும்பியவாறு தன்னுடைய சிகை அலங்காரத்தை அமைத்துக் கொள்வதில் இந்த ஆசிரியர்களுக்கு ஏன் இவ்வளவு சீற்றம் என பெருமாள் முருகன் கட்டுரையின் வாயிலாக கேட்கிறார் மாணவர்களின் சிகை அலங்காரம் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருவது இயல்புதான் இருப்பினும் தன்னுடைய முகத்துக்கு பொருந்தாத பொருந்தாத பார்ப்பதற்கு அருவருக்கத் தக்க வகையில் சிகை அலங்காரத்தை அமைத்துக் கொள்வது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் பெரும்பாலான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இரு பாலரும் இணைந்து பயிலக்கூடிய சூழ்நிலை உள்ளது இத்தகைய சூழலில் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் இந்த மயிர் பிரச்சினையையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஒழுங்கு படுத்தி தான் ஆக வேண்டிய சூழ்நிலை உள்ளது இந்த விஷயத்தில் மாணவர்களுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்தல் என்பது சாத்தியமல்ல. பெருமாள் முருகன் போன்ற சமூக அக்கறை உள்ள எழுத்தாளர்கள் சமூகத்திற்கு கூற வேண்டிய ஏராளமான கருத்துக்கள் இருக்கின்ற நிலையில் இது போன்று கருத்துக்களை முற்போக்குத்தனம் என்ற போர்வையில் ஆதரித்து சமூகத்தை தவறான வழியில் வழி நடத்த வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

UMAR FAROOK.A   2 years ago

நல்ல கட்டுரை. ஆசிரியர் - மாணவர் உறவுகளில் இன்னும் பேசப்படாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று. அவசியம் பேச வேண்டியவற்றை, எளிதாகக் கடந்து விடுகிற மனநிலையை காலம் நமக்குத் தந்திருப்பது சோகம்தான். ஆசிரியர்கள் தாம் பயின்று வந்த பழைய உளவியலின் வழியாகவோ, தன்னுடைய தனிப்பட்ட சமூக மதிப்பீட்டின் வழியாகவோதான் மாணவர்களைப் புரிந்து கொள்கிறார்கள். தற்கால உளவியல் பார்வைகள் குறித்தும், மாறிவரும் சமூகப் பார்வைகள் குறித்தும் ஆசிரியர்களொடு உரையாட வேண்டியது அவசியமானது. அதை யார் துவங்குவது என்பதுதான் கேள்வி. மாணவர்களின் எல்லாவிதமான குற்ற நடவடிக்கைகளையும் எழுத்தாளர் ஆதரிக்கிறார் என்று தலைகீழாகப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒரு முன்னாள் மாணவர், சமகால ஆசிரியர், சமூகத்தைப் புரிந்து கொண்ட எழுத்தாளரின் ஆய்வாகவே இதனைச் சிந்திக்கலாம். அதே நேரம், மாணவர்களின் பெரும்பாலான எதிர்வினைகளுக்கான காரணம் ஆசிரியர் மட்டுமே என்ற தொனி கட்டுரைக்குள் ஊடுருவி இருப்பது போன்ற தோற்றம் தருகிறது. மாணவர் என்பவரும் ஆசிரியர் என்பவரைப் போலவே, சமகாலத்தின் பிரதிபலிப்பாகவே வெளிப்படுகிறார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சிறந்த விவாதங்களை உருவாக்கி வரும் அருஞ்சொல்லிற்கு வாழ்த்துகள்....

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

nimirtamizh   2 years ago

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்....!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Shanthi   2 years ago

நல்ல பதிவு என்பதை விட தேவையான பதிவு. நடைமுறைக்கேற்ற மாற்றம் - இளையர்கள் இதை வரவேற்கிறார்கள் என்பதைத் தாண்டி பல மாற்றங்களை முன்னெடுக்கவும் செய்கின்றனர். சென்ற தலைமுறையினருக்கு அவற்றை ஏற்றுக் கொள்ளவதில் இருக்கும் சிக்கல் அல்லது அந்நியப்பட்டு போகும் தன்மை என்பது குறிப்பிட்ட மாற்றம் தனக்கானது இல்லை என்பதில் தான் தொடங்குகிறது. தான் வாழ்ந்த வாழ்க்கையைத் தனக்குப் பின் வரும் தலைமுறை அச்சு பிசகாமல் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கம் தன் கௌரவத்தை நிலைநாட்டும் என்றும், தான் சரி என்ற உத்திரவாதத்தை நம்பும் மனப்பான்மையே காட்டுகிறது. அள்ளி முடியும் அளவு கூந்தல் வைத்திருந்த ஆண்கள் வாழ்ந்த காலத்தில் ஒட்ட வெட்டப்பட்ட மயிருடன் வந்தவன் கலாச்சாரத்தைக் கெடுத்தவனாக தான் பார்க்கப்பட்டான். காலம் மண்டையில் வேகமாக குட்டிச் சொல்லும் வரை பயங்கரமாக பண்பாடு பேசும் கூட்டம், பின்னர் ஓர் அசட்டுச் சிரிப்புடன் அதைக் கடப்பதும் (பின்பற்றுவதும்) இயல்பே. அன்பை விதைக்கும் மாற்றம் மனநிலையில் தான் வேண்டும். அதை மயிரிலிருந்தாவது தொடங்க வேண்டுமே! ஆசிரியருக்கு அன்பும் வாழ்த்துகளும்😊

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

R. Alaguraj   2 years ago

நல்ல கட்டுரை.. தன்னுடைய உடல் தோற்றத்திற்கு தாடி வைப்பது சரியாக இருக்கும் என நினைத்து தாடி வைக்கக்கூடிய ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர்கள் குற்றப் பார்வையுடனேயே அணுகுகிறார்கள். இன்றைக்கு மாணவர்கள் தாடியை முகத்தில் சிறியதாக படரவிடுவது ஒரு ட்ரெண்ட் மட்டுமல்ல. அவர்கள் உடல் தோற்றத்தின் மூலம் தங்களுக்கான ஆளுமையை வளர்ப்பதற்காகவும் அது பயன்படுகிறது என்ற நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் உண்டு.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உடல் எடையைக் குறைப்பது எப்படி அருஞ்சொல்புள்ளிவிவரம்செலவழுங்குதல்writer samasஆழ்ந்த அரசியல் ஈடுபாடுபெட்ரோல் டீசல் விலை உயர்வுஇர்மாஇடஒதுக்கீட்டுகேள்விமாநிலங்கள் நகராட்சிகளாகின்றன!வெறுப்பைத் தூண்டும் பேச்சு செழிக்கிறதுஎரிபொருள்கரும்பு சாகுபடிகால்நடைகள்தாங்கினிக்காபாசிஸ்ட்டுகள்சிக்கிம் அரசுமகேஸ் பொய்யாமொழிகோலோச்சி நிற்கும் ஜாதியமும்எலும்பு வலிமை இழப்புசில்க்யாரா நியாயமாக நடக்காது 2024 தேர்தல்!சர்வதேச உதாரணங்கள்ராஜீவ் மீதான வெறுப்புவிவசாயிகளுக்கு சூரிய ஒளி மின்சாரம்கர்ப்பப்பைக் கட்டிகள்வரி செலுத்துபவர்கள் யார்?அரவிந்தன் கட்டுரைஅமுல் நிறுவனத்தின் சவால்கள்நிதித்துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!