இன்னொரு குரல் 10 நிமிட வாசிப்பு

ஆம், மயிரும் பிரச்சினைதான்: ஆசிரியர்கள் எதிர்வினை

09 Apr 2022, 5:00 am
1

தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.  பெருமாள் முருகன் எழுதி சமீபத்தில் வெளியான ‘மயிர்தான் பிரச்சினையா?’ கட்டுரைக்கு ஏராளமான  எதிர்வினைகள் வந்தன; அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே தருகிறோம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்

கட்டுரையாசிரியர் ஐயா அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை நன்கு தெரியும். இத்தகு தலையாய பணிசெய்யும் மாணவர்களின் சமூக, பொருளாதர வாழ்வியல் சூழல் குறித்து ஐயா அவர்கள் நன்கு அறிந்தவர். அவரிடமிருந்து இத்தகு கருத்துகள் வந்திருப்பது வியப்பைத் தருகிறது. தனியார் கல்வி நிறுவன மாணவர்களிடம் இத்தகு முடி(வு) எடுக்கும் பிரச்சினைகள் எழுவது இல்லை. பெரும்பாலும் அரசுக் கல்வி நிறுவனங்களிலேயே நிகழ்கின்றன. அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் பணி மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது!

-அண்ணா ரவி

ஒழுங்கு வேண்டாமா?

ஐயா பெருமாள் முருகன் அவர்களின் கருத்துகளுக்கு எதிர்க் கருத்துகள் தெரிவிக்க விரும்புகிறேன். நாள்தோறும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் சராசரி தமிழ்நாட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களில் நானும் ஒருவர். இனி மாணவர் விரும்பினால் வண்ண உடைகளில் வரலாமா? எங்கள் வேலை கற்பிப்பதுதானே; வீண் வேலை எதற்கென அமைதி காக்கிறோம்! புகை, மது இவற்றை எல்லாமும் அப்படியே விட்டுவிடலாமா? எங்கள் வேலை கற்பிப்பதுதானே! நாளை இந்த இளைய சமுதாயம் பல இடங்களிலும் பணியாற்ற வேண்டுமே, ஒழுங்கு வேண்டாமா? அதை எங்கே கற்பார்களாம்?

- பானு, அரசுப் பள்ளி ஆசிரியர்

மாணவர்களின் மன அழுத்தத்துக்கு இது ஒரு வடிகால்

தமிழ்நாடு முழுவதும் இப்பொழுது மாணவர்களின் சிகையலங்காரம் பெருமாள்முருகன் குறிப்பிட்டதுபோல்தான் இருக்கிறது. அதேவேளையில், நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களிடையே இது அதிகம். நகர்ப்புற மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்க ஏகப்பட்ட மடை மாற்றங்கள் உண்டு. ஷாப்பிங் வளாகம், கடற்கரை, திரையரங்கு, பூங்காக்கள் என்று ஏராளம்… ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு இப்படியான ஒன்று ஏதும் இல்லை. அவர்களுக்கு ஏதாவது வாழ்க்கையில் மாற்றம் தேவை என்று நினைக்கும்போது அது தோற்ற மாற்றத்தில் கவனம் கொள்ள வைக்கிறது.

கல்வி வளாகங்களில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க அல்லது சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஏதேனும் வழி வகை உண்டா? சிற்றுண்டிச்சாலை, ஒரு சிறிய பூங்கா, விளையாட்டு மைதானம், இப்படி சிலவற்றை ஏற்படுத்தித் தருவோம் என்றால் அவர்களின் மன அழுத்தம் குறையும். தோற்றத்தினால் வெளிப்படும் அவர்களின் மன எழுச்சியும் கட்டுப்படும். ஆடை அலங்காரம் என்பது அவரவர் மனநிலையை வெளிப்படுத்தும் ஒன்று. மாணவர்கள் எப்போதும் புதியனவற்றையே விரும்புகின்றார்கள்.

தோற்றத்தில் மாற்றத்தை விரும்புபவர்கள் கல்வி நிலையங்களிலும் வகுப்பறைகளிலும் மாற்றங்களை வேண்டுவார்கள்தானே! அதேவேளையில் மாணவர்களின் கல்விக் கடமைகளையும், அவர்கள் நிறைவேற்ற வேண்டிய தேவைகளையும் அவர்களிடத்தில் ஆசிரியர்கள்தான் உணரச்செய்ய வேண்டும். இதற்காக நாம் அதிகமாகவே கடின உழைப்பை தர வேண்டும்தான். இரு தரப்புமே மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

- பத்மினி ராமாநுஜம், அரசுக் கல்லூரி முதல்வர்

செல்பேசி அபாயத்தை மறக்க வேண்டாம்

கட்டுரையில் ஆசிரியர் மற்றும் மாணாக்கர் இடையேயான பிரச்சினையாக சிகையலங்காரம் மட்டுமே பிரதானமாகக் கையாண்டிருப்பது கவலைக்குரியது. தாங்கள், மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருவதுபோல போக்குகாட்டிவிட்டு மாற்றுச்சீருடையில் சக மாணவியை அழைத்துக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதும், சக கூட்டாளிகளோடு சேர்ந்துகொண்டு போதை பழக்கங்களுக்கு உட்படுவதும் அறிந்துகொண்டிருக்கவில்லையா? வகுப்பறை நடைமுறைகளைப் பின்பற்றாமல் மனம்போன போக்கில் நடந்துகொள்வது தங்கள் கவனத்திற்கு வரவில்லையா?

கட்டுரையாசிரியர் பெருமாள் முருகன் இதையெல்லாம் சுட்டிக்காட்டிருக்கலாம் கண்டித்திருக்கலாம் அல்லவா? கண்டித்திருந்தால் மாணாக்கர் தங்களை நோக்கியும் எதையாவது நீட்டிவிடுவார்கள் என்ற அச்சமா?  

இத்தனை நாட்களில் இல்லாமல் இப்போது ஏன் இத்தகு பிரச்சினைகள் தீவிரமாக எழுகின்றன என்றால், இணையவழிக் கல்விக்காகக் கிட்டத்தட்ட 80% மாணாக்கரிடம் அலைபேசி இரண்டாம் மூளையாக உள்நுழைந்து அவர்களுடைய தவறான செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. கிராமம், நகரம், மாநகரம் எனறு மாற்றமில்லாமல் எல்லா இடங்களிலும் அலைபேசி விளையாட்டு மற்றும் ஆபாச படங்களைப் பார்ப்பது என்பது எல்லா வயதினரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை தாங்கள் அறிய வேண்டும்.

மாணவர்களுக்கு மாதிரி சமூகம் பள்ளிதானே! இங்கிருந்து மாணவர்களைச் சமூகத்திற்கு தரமான குடிநபர்களாக அனுப்புவதுதான் பள்ளியின் கடமை. இதனை அடைவதற்காகத்தான் ஆசிரியர்கள் அரும்பாடுபடுகின்றனர் என்பதைக் கட்டுரையாசிரியர் அறிய வேண்டும். ஆசிரியர்களை நோக்கி ஒருவிரலை நீட்டுங்கள் வரவேற்கிறோம். அதேசமயம், சமூகத்தின் பார்வையைப் பதிவுசெய்ததில் உள்ள பாகுபாட்டை சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன். இருதரப்பு நியாயங்களை உள்ளது உள்ளபடி எதிர்காலத்தில் தாங்கள் பதிவுசெய்வீர்கள் என்றே நம்புகிறேன்.

- சு.தாமோதரசாமி   

மயிர் மட்டும் இல்லை சிக்கல்

அன்பின் ஐயா அவர்களுக்கு.... வலி எனப்படுவது வலி உணர்ந்தவர்களுக்கே வெளிச்சம். இங்கு மயிர் மட்டும் சிக்கல் இல்லை; எல்லாமே இடியாப்பச்சிக்கலாய் முடிந்திருக்கிறது. மயிர் என்பது அடங்காத்தனத்தின் அடிப்படைக் குறியீடு. மயிர் என்பது ஒரு மனநிலை. ஆசிரியை கையுயர்த்தி கரும்பலகையில் எழுதினால் மாணவனின் அலைபேசி விழித்துக்கொள்கிறது ஐயா, இதைப் பற்றி நீர் அறியீர்போலும்! ஒரு வகுப்பைக்கூட முழுமையாக எடுக்க முடியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டே தனது அறை செல்லும் ஆசிரியைகளைத் தெரியுமா உங்களுக்கு?

- சிவகுமார்

சமூக விலங்குகளை ஒழுங்குப்படுத்த விதிகள் அவசியம்

மனிதன் ஒரு சமூக விலங்கு, மயிரில் கலை வளர்த்தல், நவீன பாணி, சுதந்திரம் ... அது எல்லாம் சரிதான் ஐயா. ஆனால், இங்கு பேசப்படும் ‘இடம்’ என்பது ‘பள்ளிக்கூடம்’. சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் சீரழிவுகளையோ அவற்றைச் சீரமைக்க ஆரம்பிக்க வேண்டிய அடிப்படை மாற்றங்களைக் குறித்தோ சிந்திக்காமல் இப்படி ஏனோதானோ என்று வெறும் மயிர் பற்றி எழுதலாமா? இது சரி என்றால், மாணவ மாணவியருக்கு எதற்கு சீருடை? எதற்கு வருகைப் பதிவு? எதற்குக் கால அட்டவணை? கேட்கலாம். மாணவர்களுடன் ஆண்டுக்கணக்கில் மிக நெருக்கமாக இருக்கும் அனைவரும் அறிந்தது அவர்களின் கேடு கெட்ட வார்த்தைப் பிரயோகங்கள், செய்யும் எதிலும் ஒழுக்கமின்மை, மிதமிஞ்சிய சுய நலம், தனக்கு ஒரு அவமானம், கோபம் என்றால் அதற்காக இந்த உலகையே அழிக்கத் துடிக்கும் அகம்பாவம்… இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா? மாணவர்களில் ஒரு பகுதியினர்தான் இப்படி என்றாலும், இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருவது உண்மை அல்லவா? ‘விதிகளுக்கு கட்டுப்படுதல்’ என்பது ஒரு நாகரிகச் சமூகத்தின் அடையாளம். பொது இடம், கோயில், பணியிடம் என எங்கும் ஒரு ‘சீரான இயங்குதல்’ வேண்டியும், அனைவர் நலனைக் காக்க வேண்டியும், அந்த இடம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை அடைய வேண்டியும் விதிகள் உருவாக்கப்படுகின்றன. விதிகள் மாறலாம். ஆனால், தெளிந்த ஆய்வு தேவை. மேற்கண்ட எல்லா ஒழுங்கீனங்கழும் ஆரம்பிக்கும் புள்ளிகளில் ஒன்று மயிராகவும் இருக்கலாம். எனவே இது வெறும் மயிர்ப் பிரச்சினை அல்ல.

- செல்லா   

மயிருக்கும் பயிருக்கும் வித்தியாசம் வேண்டாமா?

மயிருக்கும் பயிருக்கும் வித்தியாசம் வேண்டாமா? கிழிந்துபோன சட்டையை ஒருவர் தைத்துப் போடும்பொழுது, மாணவர்கள் சட்டையைக் கிழித்துவிட்டுத் திரிந்தால் என்ன எனச் சொல்வதாக அமைந்திருக்கிறது கட்டுரையாளரின் மனப்பான்மை. ஆசிரியர்கள் வழுக்கையை மறைக்க தலைமுடியை மடித்து சீவுவதையும், மாணவர்கள் குடுமி வளர்ப்பதையும் ஒன்றாக்கிப் பார்க்கும் ஒப்பீடு நகையாட வைக்கிறது. பதின்ம வயதில் எல்லாவற்றின் மீதும் ஆர்வம் வரத்தான் செய்யும். ஆனால், எதனை நோக்கி நகர வேண்டும் என ஒழுங்குபடுத்துவதே கல்வியாக அமைய வேண்டும். நடத்தையில் மாற்றம் என்பதுதான் கல்வி. நடத்தை எப்படி மாறிப்போனாலும் ஏற்றுக்கொள்வதை எப்படிக் கல்வியாகக் கருத முடியும்? ஆசிரியரை அடிப்பதற்கும் ஒரு நியாயம் தேடப் பார்க்கிறதாகவே தோன்றுகிறது இக்கட்டுரையாளரின் மனப்போக்கு. ஆனால், அவர் போக்கில் பார்த்தால் ஏன் பள்ளிகளில் சீருடை? மாணவர்கள் படித்தால் படிக்கட்டும். இல்லையேல் இருக்கட்டும் ஆசிரியர்களுக்கு ஏன் கவலை? மாணவர்கள் பதின்ம வயதில் காதல் செய்யாமல் எப்போது செய்வார்கள்; மாணவர்கள் இப்பொழுது தவறு செய்யாமல் எப்பொழுது செய்வார்கள்; ஏன் ஆசிரியர்கள் தவறே செய்யவில்லையா… இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டே போகலாம்.

தவறுகள் எல்லா மட்டங்களிலும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கு நியாயம் கற்பிக்கும் ஒரு கூட்டம் அலைந்தேகொண்டே இருக்கின்றது. அவர்கள்தான் இந்தச் சமூகத்திற்குப் பேராபத்தாக இருக்கின்றனர். எந்த ஆசிரியரும் தண்டிக்க விரும்புவதில்லை. கண்டிக்கவே விரும்புகின்றனர். கண்டிப்பதே கண்டனத்திற்குரியது என்றால், கல்வியின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும்.

- சிகரம் சதிஷ், ஆசிரியர் – எழுத்தாளர்       

ஆசிரியர்களை உதைக்கிறார்கள், தெரியுமா?

மாணவர்கள் தலைமுடி, மீசை எப்படி வைத்திருக்க வேண்டும் என்றே அதிகாரிகளிடம் இருந்து சுற்றறிக்கை வருகிறது. ஆனால், மயிர் மட்டுமே பிரச்சினை இல்லை. பெண் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது, மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து டிக் டாக் வீடியோ வெளியிடுவது, தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு வெளியே அடி உதை கொடுப்பது... சொல்லிக்கொண்டேபோகலாம். இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் அதிகாரிகள் வழங்கும் பணிச்சுமை! தேர்ச்சி விழுக்காடு கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி! கல்லூரிகளில் மேற்காண் பிரச்சினைகளை கண்டும் காணாமலும் போய்விடலாம். பள்ளியில் அப்படி அல்ல. பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் உங்கள் மாணவர்களிடம் கலந்துரையாடிப் பாருங்கள். பிரச்சினைகளின் பட்டியல் நீளக்கூடும்!

- இளங்கோ   

மயிர்க் கட்டுப்பாடு அவசியம்!

எங்கள் பள்ளிகூட மற்றும் கல்லூரி பருவத்தில் தலை மயிர் ஒழுக்கம் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டது. கட்டுரையாசிரியர் கூறுவதுபோல எங்கள் இளமையில் விதவிதமான சிகையலங்காரம் வைத்த நினைவு இல்லை. உடைக் கட்டுப்பாடு அவசியம் என்று எண்ணினால், மயிர் கட்டுபாடும் அவசியம் வேண்டும்!

- டாக்டர் பிரபு

நல்ல கட்டுரை

அருமையான கட்டுரை. ஆசிரியர்கள் மாணவர்களின் முடியில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக, ஒழுக்கத்திலும் கல்வியிலும் செலுத்தலாம்.

- ஜேம்ஸ் குமார்

ஆசிரியர்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்

மயிர் மட்டும் அல்ல பிரச்சினை. மாணவர்கள் பள்ளிச் சூழலில் செய்யும் பலவிதமான விதிமீறல்கள் இக்கட்டுரையில் குறிப்பிடாதது வருத்தமே. ஆசிரியரைச் சுற்றி வந்து கும்மியடிப்பது, ஆசிரியைகளைத் தரக்குறைவாக இழி வார்த்தைகளைப் பயன்படுத்தி பாலியல்ரீதியாகச் சீண்டுவது, சகத் தோழிகளை இம்சிப்பது, பள்ளிவளாகச் சுவரிலும் அசிங்கமாக எழுதுவது, மாற்றுத்திறனாளி ஆசிரியர் முன் அவரை அவமதிக்கும்படி செய்வது… எவ்வளவோ நடக்கின்றன. மாணவ மாணவிகள் மயிர் வளர்ப்பதில் மட்டுமே பிரச்சினை அல்ல. அதற்கான ஆணிவேர் வேறு எங்கோ இருக்கிறது. அதைப் பற்றி கட்டுரையாளர் இன்னொரு முறை எழுதுவார் என்று நம்புகிறேன்!

- ராஜேந்திர குமார்

 

தொடர்புடைய கட்டுரை: ‘மயிர்தான் பிரச்சினையா?’

 


1


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

nimirtamizh   3 months ago

கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிடுவதும் நீங்கள் எல்லோரும் சொல்வதைத்தான், ஆசிரியைகளைத் தரக்குறைவாக பேசுவது, சகத் தோழிகளை இம்சிப்பது, பள்ளிவளாகச் சுவரில் அசிங்கமாக எழுதுவது, மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும்படி நடப்பது, இது எதையும் நியாப்படுத்தவும் இல்லை. இவை அனைத்தையும் மாற்ற வேண்டும் என்பதில் ஆசிரியருக்கும் மாற்று கருத்தில்லை ; மாறாக, இதை களைவதற்கான புரிதலையும், கற்றலை எளிமைபடுத்தவும்,மேன்மைபடுத்தவும், ஆசிரியர்-மாணவர் உறவை வளர்க்கவும் நீண்ட கால அனுபவம் கொண்ட ஆசிரிய பெருந்தகை கவனம் செலுத்தலாமே..! என்றுதான் கட்டுரை ஆசிரியர் தன் கருத்தை முன் வைக்கிறார். "மயிரில்" கவனம் செலுத்தும் மாணவனுக்கு ஒழுக்கம் கிடையாது;படிப்பு வராது என்று ஏதும் விதி உள்ளதா...? - தாமிரபரணி கரையோரம் நெல்லை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜார்கண்ட் சட்டமன்றம்நேட்டோதமிழ் விக்கிஸரமாகோ நாவல்களின் பயணம்வாழ்வியல்நிதி ஒதுக்கீடுசுந்தர் சருக்கைபார்ப்பனர்விடுப்புபத்திரிகை ஆசிரியர்எப்படி எழுதுவது வேலைக்கான விண்ணப்பக் கடிதம்?பண்டிட்டுகள் படுகொலைபாகுபலிஎம்ஜிஆர்டேவிட் கிரேபர்நரம்புக்குறை சிறுநீர்ப்பைசமதா யுவஜன் சபா (எஸ்ஒய்எஸ்)சமஸ் நயன்தாரா சேகல்பஞ்சாப் புதிய முதல்வர்சார்புநிலைஎழுத்துதமிழ்நாடு கேடர்உபி தேர்தல் 2022கீழடி அகழாய்வுநல்ல பெண்பத்திரிகையாளர் சமஸ் பேட்டிஆம்வினோத் ராய்மாநில அரசுகள்கட்டமைப்புப் பொறியாளர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!