கட்டுரை, நூல் விமர்சனம், கூட்டாட்சி 10 நிமிட வாசிப்பு

வடக்கும் தெற்கும்: இந்தியாவின் பெரும் பிளவு

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
30 Oct 2022, 5:00 am
3

ண்மையில், காங்கிரஸ் கட்சி நடத்திவரும் ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ தொடங்குவதற்கு முந்தைய நாள், வட இந்திய அரசியலரும், அறிவுஜீவியுமான யோகேந்திர யாதவ் ஒரு காணொளியை வலை ஏற்றியிருந்தார். அதில் அவர், ‘தக்‌ஷிணாயணம்’ என்னும் ஒரு கருதுகோளை முன்வைத்திருந்தார். அதாவது, ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை’ என்னும் வழமையான நோக்குக்குப் பதிலாக, நாம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எனவும் பார்க்கலாம் என்று. உருண்டையான உலகில், வடக்கு மேல் என்று தெற்கு கீழ் என்றும் பார்க்கும் பார்வையின் அபத்தத்தையும் அவர் சுட்டியிருந்தார்.

வட மாநிலங்களைவிட தென் மாநிலங்கள் சமூகப் பொருளாதார அலகுகளில் மேம்பட்டும், மேலான சமூக நல்லிணக்கத்துடனும் இருந்து வருவதைச் சுட்டி, வருங்காலத்தில் தென் மாநிலங்கள் இந்தியாவை வழிநடத்துவது மேலும் பொருத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

யார் இந்த நீலகண்டன்?

ஆர்.எஸ்.நீலகண்டன் எழுதியுள்ள, ‘சௌத் வெஸ் நார்த்’ (South Vs North) என்னும் ஆங்கிலப் புத்தகம் கிட்டத்தட்ட அதே தளத்தில் பேசும் புத்தகம். ஆர்.எஸ்.நீலகண்டன் ஒரு நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமைத் தரவு விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார்.

இந்தியாவின் 14ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள், மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை 32%லிருந்து 42% வரை அதிகரிக்கும் என ஒன்றிய அரசும், நிதிக்குழுவும் பெருமையடித்துக்கொண்டபோது, அந்த நிதிக் குழுவின் பரிந்துரைகள், பயன்படுத்திய தரவுகளால், தமிழ்நாட்டுக்கு உண்மையில் நிதி இழப்பு நேர்கிறது என்று ஓர் ஆழமான கட்டுரையை ‘த வயர்’ மின்னிதழில் நீலகண்டன் எழுதினார். அது அரசியல் வட்டாரங்களில், பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தென் மாநிலங்களில் இருந்து ஆட்சேபக் குரல்கள் எழுந்தன. பொருளாதார, சமூகத் தளங்களில் நன்றாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவது குறையாமலிருக்கும் வகையில் செயல்படுவோம் எனப் பிரதமரே விளக்கம் கொடுக்க நேரிட்டது.

முழுக்க முழுக்கத் தரவுகளின் அடிப்படையில் ஒரு காத்திரமான கட்டுரை எழுதப்படுகையில், அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் அந்தக் கட்டுரை. நீலகண்டன், தொடர்ந்து ‘த வயர்’, ‘த கேரவான்’ போன்ற இதழ்களில், தரவுகளின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதிவருகிறார். தென் மாநிலங்கள், குறிப்பாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் வித்திட்ட காரணிகள், ‘நீட்’ தேர்வை ஏன் தமிழகம் எதிர்க்கிறது என்பது போன்ற தளங்களில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இவை தவிரவும் ‘புரம் பாட்காஸ்ட்’ என்னும் ஊடகம் வழியாக, இவர் சில நேர்காணல்களையும் நிகழ்த்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்பில் தொல். திருமாவளவனுடன் நடத்திய நீண்ட உரையாடல், அந்தக் கட்சியின் தொடக்கம் மற்றும் எழுச்சியை, அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில் அணுகிய காத்திரமான ஒன்றாகும். அதேபோல, இன்றைய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் நடத்திய நேர்காணலும் முக்கியமான ஒன்று.

தரவுகள் சொல்லும் தகவல்

நீலகண்டனின் ‘சௌத் வெஸ் நார்த்’ (South Vs North) என்னும் இந்தப் புத்தகம் மூன்று முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. முதல் பகுதியில், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் முதலிய தளங்களில் இந்திய மாநிலங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை, அரசின் புள்ளிவிவரங்கள் வழியே எடுத்துச் சொல்கிறார். இத்தளங்களில், தென்னிந்திய மாநிலங்கள் ஏன் முன்னணியில் உள்ளன என்பதற்கான காரணிகளையும் விவரிக்கிறார். இரண்டாவது பகுதியில், தற்போதைய அரசியல், நிதி நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள போதாமைகளை விவரிக்கிறார். மூன்றாவதாக, இந்தப் போதாமைகளைப் போக்கி, செயல்திறன் மிக்க வகையில் மக்களின் நேரடியான பங்கேற்பு ஜனநாயக முறையைத் தீர்வாக முன்வைக்கிறார்.

சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரக் குறியீடுகளில், தென் மாநிலங்கள் மேம்பட்டிருப்பது கடந்த 25 ஆண்டுகளில் நாம் கண்டுவரும் நிகழ்வு. இது யதேச்சையானது அல்ல. மிகத் தெளிவான மக்கள் நலக் கொள்கைகள், கல்விக் கட்டமைப்பு, மருத்துவக் கல்வி, மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு, சத்துணவு, கர்ப்பிணிப் பெண்கள் திட்டம் என ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையே இதற்குக் காரணம் என்பதற்கான தரவுகளை ஆற்றொழுக்கான முறையில் எழுதிச் செல்கிறார். 

இந்தத் தரவுகளினூடே, இந்தியத் திட்டக்குழுக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும், ‘பொருளாதார வளர்ச்சியே மக்கள் மேம்பாட்டை உறுதிசெய்யும்’ என்னும் கருதுகோளின் அடிப்படைகளை அசைக்கிறார். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் தனிநபர் வருமானம் மிக அதிகமாக உள்ள ஹரியானா, குஜராத் மாநிலங்களின் குழந்தைகள் இறப்பு சதவீதம் பல ஏழை மாநிலங்களைவிட அதிகம் என்பதைச் சுட்டுகிறார். மக்கள் நல மேம்பாட்டில் அரசு கவனம் கொள்ளாமல் இருந்தால், பொருளாதார வளர்ச்சி அதிகரித்தாலும், மக்கள் நலக் குறியீடுகள் மேம்படாது. எனவே, மாநில அரசுகள், முனைப்புடன் மக்கள் நலக் கொள்கைகள், அவற்றுக்கான கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு முதலியவற்றை உருவாக்க வேண்டும் என்பதை தரவுகள் வழியே நாம் அறிகிறோம்.

கல்வித் துறை

கல்வித் துறையைப் பற்றிப் பேசுகையில் அவர் முன்வைக்கும் கருத்து, விடுதலை பெற்ற இந்தியா செய்த ஒரு மாபெரும் தவறைச் சுட்டுகிறது. அது அனைத்து மக்களுக்குமான ஆரம்பக் கல்வி. கொரியா, மலேஷியா, இந்தோனேஷியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவைப் போலவே குறைந்த கல்வியறிவு கொண்டிருந்தாலும், அடுத்த 60-70 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 100% கல்வியறிவு சதவீதத்தைத் தொட்டார்கள். மக்கள் நலக் குறியீடுகளிலும், பொருளாதார வளர்ச்சியிலும், அந்நாடுகள் மேம்பட அது மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது. அனைவருக்குமான ஆரம்பக் கல்வியை, நீலகண்டன், ‘சமூகச் செயல்திறனை மேம்படுத்தும் மருந்து’ என அழைக்கிறார். உண்மை!

பள்ளிக் கல்வியில் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்று, ‘மேற்கல்வி பயிலும் மாணவர்கள் சதவீதம்’. இதில் 49%த்துடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. வளமான மாநிலங்களான குஜராத், ஹரியானா போன்றவை 20% மற்றும் 29% என்னும் விகிதத்தில் உள்ளன. இதற்கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக அனைவருக்குமான  மதிய உணவைச் சொல்கிறார் நீலகண்டன். அத்துடன் கட்டணமில்லாப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், மாதவிலக்காகும் பெண் குழந்தைகளுக்கான சானிடரி நாப்கின்கள் முதலியன எளிதாகக் கிடைக்கும் சூழலும் ஏழைகள், பெண்கள் கல்வியைத் தவறவிடாமல் இருப்பதற்கான காரணங்களாகச் சொல்கிறார்.

பெண்கள் அதிக காலம் கல்வி நிலையங்களில் இருப்பது, அவர்களின் பொருளாதாரத் தன்னிறைவை ஊக்குவிக்கிறது. கல்லூரிக் கல்வியும், பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற பெண், மகப்பேற்றுக்காக நவீன மருத்துவமுறைகளை நாடுவார். அதனால், இளம் சிசு மரணங்கள் குறையும். பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதும் குறையும். பொருளாதாரம் மேம்படும் அதேசமயத்தில் மக்கள்தொகைப் பெருக்கமும் குறையும்.

புதிய கல்விக் கொள்கை பேசும் மும்மொழிக் கொள்கையின் அபத்தங்களையும் தரவுகளின் அடிப்படையில் சுட்டுகிறார். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் முதலிய மாநிலங்களில் ஆங்கிலவழிக் கல்வி கிட்டத்தட்ட 80%-90%த்தை தொட்டுவிட்டதைச் சுட்டும் தரவு மிக முக்கியமான ஒன்று. கல்விக்காக மாநில, மத்திய அரசுகள் செய்யும் செலவு, பொருளாதாரத்தில் 3.1% மட்டுமே. உலகின் முன்னேறிய நாடுகள் பலவும், இதைவிட அதிகமாகச் செலவு செய்கின்றன. கல்வியில் இந்தியா பின் தங்கியிருப்பதன் முக்கியக் காரணம் இத்துறைக்கான மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு.

பிமாரு மாநிலங்கள்

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், இந்தியாவின் மிக வளமான மாநிலமாக மேற்கு வங்கம் இருந்தது. மஹராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் அடுத்த நிலையில் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளில், மேற்கு வங்கம் தன் நிலையில் இருந்தது வீழ்ந்து, இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. வளமான மாநிலங்களுக்கும், ஏழ்மையான மாநிலங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துவிட்டது. இந்திய விடுதலை பெற்ற காலத்தில், தென்னிந்திய மாநிலங்கள் வளமான மாநிலங்களாக இருக்கவில்லை. ஆனால், இன்று, தென்னிந்தியாவின் 5 மாநிலங்களும், இந்தியாவின் 10 வளமான மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், இயற்கை வளங்களும், வேளாண்மையும், பொருளாதார வளத்தில் முக்கிய இடம் வகித்தன. ஆனால், 70 ஆண்டுகளில், தொழில் துறை, சேவைத் துறை போன்றவை பெருகி, வேளாண்மையின் பங்கு வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழில் துறை மற்றும் சேவைத் துறை வளரத் தேவை, செயல்திறன் கொண்ட மனித வளம்.  அதை உருவாக்குவதில் முக்கிய பங்கு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் உண்டு. அதில் கவனம் செலுத்திய தென்னிந்திய மாநிலங்கள் காலப்போக்கில், வேக வளர்ச்சியை அடைந்தன.

புள்ளிவிவரங்களைச் சேர்த்தும், பிரித்தும் அலசியும், மிக முக்கியமான கோணங்களில் நீலகண்டன் பாய்ச்சும் வெளிச்சம், நாம் நமது நாட்டின் பிரச்சினைகளை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, பிமாரு (பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்) என அழைக்கப்படும் மாநிலங்களில் உள்ள தொழில் துறை பற்றிய ஒரு அலசலில் கீழ்க்காணும் ஒரு கோணத்தை முன்வைக்கிறார். இந்த நான்கு மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 50 கோடி. இவை ஒரு தனி நாடாக இருந்தால், உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும்.  இந்த மாநிலங்களில் மொத்தம் 33,036 ஆலைகள் உள்ளன. இவற்றுள், 16.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். தமிழ்நாட்டின் மக்கள்தொகையான 7.6 கோடி, இந்த மாநிலங்களின் மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளின் எண்ணிக்கை 37,787. அதில் பணிபுரியும் ஊழியர்கள் 20.95 லட்சம்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே இதுபோன்ற மாபெரும் இடைவெளிகள் உள்ளன. இதை நாம் மக்கள் நலக் குறியீடுகளிலும் பார்க்கலாம். விடுதலை பெற்ற காலம் தொடங்கி மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் வளர்ந்தே உள்ளன.

நிதிப் பகிர்வில் மாநிலங்களின் நிலை

மக்கள் நலக் குறியீடுகளில், கேரளம், அமெரிக்காவுடன் ஒப்பிடும் வகையில் வளர்ந்திருக்கும் அதேசமயத்தில், பிஹார் மாநிலத்தின் குறியீடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் குறியீடுகளுடன் ஒப்பிடும் வகையில் உள்ளன. இப்படிப்பட்ட மாபெரும் வேறுபாடுகள் இருக்கையில், ஒன்றிய அரசின் மையப்படுத்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான சுகாதாரத் திட்டங்கள் எப்படி செயல்திறன் மிக்கவையாக இருக்கும் என்னும் கேள்வியை புத்தகம் மிகவும் ஆணித்தரமாக முன்வைக்கிறது.

ஆனால், ஒன்றிய அரசோ, திரும்பத் திரும்ப கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற மாநிலங்களின் துறைகளில், ’ஒரே நாடு, ஒரே மாதிரியான திட்டம்’ என்னும் வகையில் திட்டங்களைத் தீட்டிவருகிறது. இந்தத் துறைகளில், மக்களுக்கு நெருக்கமாக இருப்பவை மாநில அரசுகளும், அவற்றின் நிர்வாகமும்தான். அவர்களிடம் நிதியைக் கொடுத்துவிட்டு, தங்கள் மாநிலத்தின் தேவைக்கேற்பத் திட்டங்களைத் தீட்டிக்கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுப்பதே சரியாக இருக்கும். ஆனால், 2021-22ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்காக ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதி ரூ.3.81 லட்சம் கோடி. ஒன்றிய அரசு பணமாக, மாநில அரசுகளுக்குக் கொடுத்தது ரூ.2.2 லட்சம் கோடி. ஒன்றிய அரசின் பல திட்டங்கள் வளர்ந்த மாநிலங்களுக்குக் கொஞ்சமும் பொருந்தாதவை.

இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு எனச் சொன்னாலும், இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து, ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாகத்தான் செயல்பட்டுவந்துள்ளது. அரசியல் மட்டுமல்ல, வரி நிர்வாகமும் மையப்படுத்தப்பட்டிருப்பது மாநில நலன்களுக்கு எதிரான ஒன்று. இந்திய வரி வசூலில், மூன்றில் இரண்டு பங்கு ஒன்றிய அரசுக்குச் செல்கிறது. ஆனால், அவர்களது செலவினம், மொத்த செலவுகளில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. தேவையில்லாமல், அதிக நிதியை வசூலித்துக்கொண்டு, அதை மாநிலங்களுக்குப் பகிர்ந்து தருதல் வழியே, ஒன்றிய அரசு மாநில அரசுகளின் மீது ஒரு மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது என்கிறார்.

இனி என்ன செய்ய வேண்டும்?

புத்தகத்தின் இறுதிப் பகுதியில், இந்திய ஒன்றியம் மற்றும் தற்போதைய தேர்தல் முறைகளில் உள்ள போதாமைகளைத் தெளிவாகச் சொல்லும் நீலகண்டன், இந்தப் போதாமைகளுக்கு எதிராக, ‘கேமிபைட் டைரக்ட் டெமோக்ரஸி’ (Gamified Direct Democracy) என்னும் புதிய முறையை முன்வைக்கிறார்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள மக்கள் கருத்துக்கேட்பு முறைகளை முன்வைத்து, அரசின் திட்டங்களில், மக்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதே அவர் முன்வைக்கும் கருத்து. இன்றைய வாக்களிப்பு ஜனநாயகம் என்பது, தேர்தல் காலத்தில் வாக்களிப்பதுடன் நின்றுவிடுகிறது. அதன் பின் அரசுகள், ஒருவிதமான பெரும்பான்மை மனச்சாய்வுடன் நாட்டை நிர்வாகம் செய்கின்றன. இந்த முறையில் இருந்த நகர்ந்து, நாட்டின் நிர்வாகத்தில், திட்டமிடுதலில், மக்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்பும் தேவை என்னும் புள்ளியில் இந்த வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

நாட்டின் அரசமைப்பு என்பது நாம் விடுதலை பெற்ற காலத்தில் உருவாக்கிக்கொண்டது. அதில் பல மாற்றங்களை நாடாளுமன்றம் கொண்டுவந்துள்ளது. ஆனால், அடிப்படையான, தேர்தல் அரசியல் என்னும் முறையில் இதுவரை எந்த மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை. கடந்த 75 ஆண்டுகளில், தேர்தல் ஜனநாயகம் என்னும் முறையில் உள்ள போதாமைகளை நாம் கண்டிருக்கிறோம். எந்த ஒரு அமைப்பும், காலத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக்கொள்ள வேண்டும். அந்த வகையில், நீலகண்டன் முன்வைக்கும் இந்தக் கருதுகோள் ஒரு முக்கியமான முயற்சி. இது உடனே நடக்குமா எனில், வாய்ப்புகள் குறைவு என்றுதான் தோன்றுகிறது. ஆனால், இப்போதிருக்கும் முறையில் உள்ள போதாமைகளை உரத்துப் பேசுதல், மாற்றத்துக்கான திசையில் முதல்படி. அதை மிக வலுவாகவும், தெளிவாகவும் முன்வைத்திருக்கிறார் நீலகண்டன்.

தமிழகத்தில் அரசியல் விமர்சனம் என்பது மேலோட்டமான திண்ணைப் பேச்சாகவே இருந்துவந்துள்ளது. அதுபோன்ற தளங்களில் இருந்து உயர்ந்து, தரவுகள் அடிப்படையிலான அரசியல் விவாதங்கள் அண்மைக்காலத்தில் எழத் தொடங்கியுள்ளன. ஆர்.எஸ்.நீலகண்டனின், இந்தப் புத்தகம், அந்தத் திசையில் மிக முக்கியமான முயற்சி.

 

நூல்: சௌத் வெஸ் நார்த்: இந்தியாஸ் கிரேட் டிவைட்
ஆசிரியர்: ஆர்.எஸ்.நீலகண்டன் 
விலை: 599 
பக்கம்: 262
பதிப்பகம்: ஜக்கர்நாட்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


5

2





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

ஆங்கிலத்தை பின் தள்ளிவிட்டு ஹிந்தியை முன்னிறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் நம்பிக்கை.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

இதில் முதல் கோட்டை போட்டது தமிழ்நாடு. அதை மற்ற தென்னிந்திய மாநிலங்கள் ரோடாக போட்டன. உதாரணமாக 25 வருடங்களுக்கு முன் கோவை விலைவாசியை விட பெங்களூரு விலைவாசி மிகவும் குறைவு. அதாவது வளர்ச்சி அதற்குபின்தான். 98 குண்டு வெடிப்பு நிகழாமல் இருந்து இருந்தால் கோவை இன்னொரு பெங்களூரு ஆக மாறி இருக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

A very interesting and informative article! Congratulations🎉🥳👏

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

விடைமகாத்மாதலைவலி – தப்பிப்பது எப்படி?தி வயர்ஒளிஅதிநாயக பிம்பமான நாயகன்இந்திய தேசியம்Factsவிஜய் அசோகன் கட்டுரைடூட்ஸிசெயற்கைக்கோள்பிடிஆர் சமஸ் பேட்டிநவதாராளமயம்இஞ்சிராமாநிலத் தலைகள்: வசுந்தரா ராஜ சிந்தியாதாங்கினிக்காகுறுங்கதைபயண இலக்கியம்நவீனத் தமிழாசிரியர்கன்னிமாரா நூலகம்கடற்கரைநார்வேஅரசமைப்புச் சட்டப் பிரிவு 246ஏஉள்ளூரியம்பயிர்கள்1984 நாவல்கோர்பசெவின் கல்லறை வாசகம்தூக்க மாத்திரைகாதில் இரைச்சல்ஜேம்ஸ் பால்ட்வின் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!