கட்டுரை, கல்வி 15 நிமிட வாசிப்பு

தமிழக உயர்கல்வியின் யதார்த்தங்கள்

தங்க.ஜெயராமன்
03 Feb 2022, 4:59 am
1

ங்கில நாளிதழ் ‘தி இந்து’வுக்குத் தமிழக முதல்வர் அளித்த பேட்டி ஒன்றில் (14/01/2022) உயர்கல்வி பற்றியும் பேசியிருந்தார். தமிழகத்தின் மருத்துவ, பொறியியல் கல்விகள் பாராட்டு பெறுகின்றன. அவற்றுக்கு அமைந்தது போலவே கலைப்பாடங்கள், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களுக்கும் சிறப்பான கல்வி மையங்கள் உருவாகுமா என்று பேட்டியில் ஒரு கேள்வி.  சமூக அறிவியல், கலைப்பாடங்கள், இலக்கியம் பற்றி இப்போது விழிப்புணர்வு வந்துள்ளதால்  அவை தனிக் கவனம் பெறும் என்று சொல்லியுள்ளார் தமிழக முதல்வர்.  

அவர் சொல்லியிருப்பதை, நீண்ட காலமாகவே உயர்கல்வியில் தேவைப்பட்ட சிந்தனை மாற்றத்துக்கான அறிவிப்பாகக் கொண்டாடலாம். உயர்கல்வியில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாக நிலவும் யதார்த்தங்களை இப்போது  நாம் கவனிப்பது பொருத்தமாகும். 

தமிழகத்தில் உயர்கல்வி என்ற பரந்த புலம் கருத்தளவில் குறுகவும் அதைத் தொழிற்கல்விகள், தொழில் நுட்பக் கல்விகள் ஆக்கிரமித்துக்கொண்டன.  மொழி, வரலாறு, பொருளியல் போன்றவை கல்லூரிகளில் ஒப்புக்காக இருப்பவை. தத்துவம், தர்க்கம், சமூகவியல், உளவியல், மொழியியல், சமயத் தத்துவங்கள் நம் கல்லூரிகளில் தென்படுவது அரிது.  .  

இந்தப் பாடங்களை இப்போது யாராவது படிப்பார்களா? என்று கேட்கக்கூடும்.  இன்னும் போக்கிக்கொள்ளாத சொல் வறட்சியில் மொழி, தத்துவம் முதலியவற்றை வண்ணமும், ஒப்பனையும் நினைவுக்கு வருமாறு “கலை”ப் பாடங்கள் என்று சொல்கிறோம். அதுவே இவற்றுக்குக் கேடாகிவிட்டது.  தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் அரசியல் சிந்தனை, இந்திய அரசியல் சட்டம், நிர்வாகச் சட்டம் முதலிய பாடங்களை மற்ற துறை மாணவர்களுக்கு விருப்பப் பாடங்களாக  பயிற்றுவித்தேன். வேதியியல், இயற்பியல், உயிரியல் மாணவர்கள் வேண்டிய எண்ணிக்கையில் இவற்றில் சேர்ந்தார்கள். ஆர்வத்தில் இவர்களுக்குக் குறைந்தவர்களாக நம் கல்லூரி மாணவர்களை நாம் மதிப்பிடக்கூடாது.  

எதையும் விமர்சன நோக்கில் பார்க்கப் பயில்வது கல்வியின் முக்கியமான நோக்கம். நாம் தொடர்புபடுத்திப் பார்க்காத அறிவுப்புலங்களை ஒருசேரக் கற்றுக்கொள்ள இன்றைய மாணவர்கள் விரும்புவது அந்த நோக்கத்திற்கு ஏற்றது. கலை, சமூக அறிவியல் பாடங்களை வேற்றுத் துறை பாடங்களோடு சேர்த்துத் தருவதை மாணவர்கள் வரவேற்பார்கள். இந்தப் பாடங்களின் மறுவாழ்வுக்காகக் கெஞ்சாமல் கெஞ்சுகிறேன் என்று நினைக்கக்கூடாது. பல துறைப் பாடங்களையும் ஒருசேரப் பயிலவேண்டுமென்பது இன்றைய உயர்கல்விச் சிந்தனை.   

தன்னாட்சி  பெற்ற சில கல்லூரிகள் புதிய பாடங்களையும், வேற்றுப் புலப் பாடங்களையும் பயிற்றுவிப்பது உண்டுதான். ஒரு பட்டப்படிப்புக்கு இரண்டு மூன்று முதன்மைப் பாடங்களை வைத்துள்ளவையும் உண்டு. இப்படியான முயற்சிகளும், சோதனைகளும் அபூர்வம். தன்னாட்சியின் சுதந்திரத்தை நம் கல்லூரிகள் உயர்கல்வியின் எல்லா அம்சத்துக்கும்—பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல், தேர்வு ஆகிய எல்லாவற்றுக்கும்- முழுமையாகப் பயன்படுத்துகின்றன என்று சொல்ல இயலாது. விருப்பப் பாடங்கள் பெரும்பாலும் முதன்மைப் பாட வகையிலான குட்டிப் பாடங்களாகத்தான் இருக்கும். வேறு அறிவுப்புலத்தவையாக இருக்காது. இந்த முயற்சிகள் ஏன் ஓர் அளவோடும், சில கல்லூரிகளோடும் தேங்கிவிடுகின்றன?

வாழிடம் தேடும் உயிரினம்

பாடங்கள் உண்மையிலேயே புதியனவாக இருந்தால் நம் கல்விச் சூழலில் தரிக்க இயலாத அரிய உயிரினங்கள் போல் விரைவில் மறைந்துபோகும் என்பது என் அனுபவம்.  ‘நூலாக்கம், எடிட்டிங்’ என்ற ஒரு பாடத்தை அப்போதைய ‘தி மெட்ராஸ் மெயில்’ ஆசிரியர் வி.பி.ராஜன் தலைமையில், சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியில் துவக்கினோம். விரைவிலேயே அது மறைந்துவிட்டது. இப்போதாவது நிலைக்கும் என்று அந்தப் பாடத்தை இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு கல்லூரியில் துவக்கினேன். மூன்று ஆண்டுகளில் மறைந்துபோனது. பட்ட மேற்படிப்புக்கு மாணவர்களைத் தேர்வுசெய்யும் கல்லூரிகள் இந்தப் படிப்பு பி.ஏ. ஆங்கிலத்துக்குச் சமமானதா என்பதில்  குழம்பிப்போயின.  பாடம் மறைந்துபோனதற்கு இப்படியும் ஒரு புறக் காரணம். வேலைக்கு ஆளெடுக்கும் துறைகள் புதிய பாடங்களை அங்கீகரிக்கவில்லையானால் அப்போதும் உயர்கல்விப் பாடங்களில் நிகழும் சோதனை முயற்சிகள் தொய்யும்.

இலக்கியம், அரசியல், சமூகவியல், தத்துவம் போன்றவற்றுக்குப் பொதுப்புத்தி உயர்கல்வியின் மவுசைத் தராது.  இவற்றைப் பாமரப்போக்கில் பயன்பாடு இல்லாதவையாக வகைப்படுத்திப் படிநிலைப்படுத்துவதும் உண்டு.  சமூக அறிவியல் பாடங்கள்பற்றிய விழிப்பு உணர்வைப் பேசும்போது ஒரு புதிய கல்விக் கலாச்சாரத்தின் வருகையை அறிவிக்கிறோம்.   

ஆக, உயர்கல்விபற்றிய நம் கருத்து விரிவாகி மாறவேண்டியதுதான் இப்போது நடக்கவேண்டும். ஆனால், நாம் அந்தக் கட்டத்துக்கு நகராமல்  நூல்களைப்பற்றியே பேசுகிறோம். புத்தகங்களில் உள்ள தகவல்கள் திருந்தி செழுமையாகவேண்டும்,  அது ஒரு வல்லுநர் குழுவால் இயலும் என்ற வகையிலேயே சிந்திக்கிறோம். அல்லது, நமக்கு எதுவெல்லாம் சிறப்பானவை என்று தோன்றுகிறதோ அவை மாணவர்கள் படிக்கும் கதைகளாக, கட்டுரைகளாக வைக்கப்டாததுதான் உயர்கல்வியின் குறை என்று நினைக்கிறோம். கல்விக் கொள்கை நூல்களில் உள்ள பாடங்களைப்பற்றியதுதான் என்று வைத்துக்கொண்டோம்.        

வெற்று ஊடகமல்ல பேராசிரியர்

திறந்து பேசவேண்டுமென்றால், பேராசிரியத்தன்மை உள்ள எவரும் இன்னொருவர் வகுத்துக்கொடுத்த பாடத்தை தான் சொல்லித்தர இசையமாட்டார். தான் எப்படிக் கற்பிக்கவேண்டும், தன்னிடம் கற்கும் மாணவர்களை எப்படிச் சோதிக்கவேண்டும் என்று தனக்கு இன்னொருவர்—அது நல்ல வல்லுநர் குழுவாக இருந்தாலும் – சொல்வதற்கு ஒப்பமாட்டார். தாங்கள் குறிப்பிடும்  நூல்களை மாணவர்கள் படிக்கவேண்டும் என்று சொல்பவர்களின் சிந்தனை என்ன? அவர்கள் எதிர்பார்ப்பு நூலைப் படிக்கும் மாணவர்கள் அதனோடு ஒன்றிப்போகவேண்டும் என்பது மட்டுமல்ல. ஒன்றிப் படிப்பதுதான் நல்ல வாசிப்பு. ஆனால், எதிர்பார்ப்பது என்னவென்றால் மாணவர்கள் நூலில் உள்ளதை ஏற்பார்கள்; அவர்கள் அப்படி ஏற்கவேண்டும் என்பதும்தான். இது உயர்கல்விக்குப் பொருந்திவரும் சிந்தனை அல்ல. நல்ல கேள்விகள்கூட பாடத்தில் வருவதை அப்படியே விடையாக எதிர்பார்த்துக் கேட்கப்படுவதில்லை. அவை விமர்சனத்தை எதிர்பார்ப்பவை. 

பாடம் சொல்லும் ஆசிரியர்  பாடத்தில் தன்னை கரைத்துக்கொண்டு தகவல் கடத்தும் வெற்று ஊடகமாகிவிடுவார் என்று எதிர்பார்ப்பதும் தவறு. ஆசிரியர் பங்களிப்பும் மாணவர்களின் முனைப்பான பங்களிப்பும் இல்லாத எந்தப் பாடங்களும்  கறாராகத் தங்களிடம் உள்ள செய்திகளைக்கொண்டே வகுப்பறையில் வெற்றிபெற்றதில்லை. 

பேராசிரியரை மையப்படுத்தி அமையாத உயர்கல்வி ஒன்று இருப்பதாக நான் கூறமாட்டேன். இன்னின்ன பேராசிரியர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் மாணவர்கள் அந்த பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் படிக்கவருகிறார்கள். நான் படிக்கும்போது என் பேராசிரியர்களைக் கருதியே கேரளத்திலிருந்து மாணவர்கள் அங்கு வந்தார்கள். 

இங்கு நெருக்கி நூற்று நாற்பது அரசுக் கல்லூரிகளும், நானூறுக்கும் மேலான தனியார் கல்லூரிகளும் இருக்கின்றன. அரசுக் கல்லூரிகளில் மட்டும் நான்கு லட்சத்துக்கும் மேலாக மாணவர்கள் இருக்கக்கூடும். யு.ஜி.சி. விதிக்கும் ஊதியம் அளித்தால் திறமையானவர்கள் கல்லூரிப் பணிக்கு வருவார்கள் என்று அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அந்த ஊதியத்தை அனுமதித்தார். மேலும் கல்லூரிகள் வேண்டுமென்று நன்கொடையாளர்கள் பெயரில் கல்லூரி துவக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். 

பின்னர் 1970களில் அப்போதைய முதல்வர் கலைஞர் ஏராளமாகக் கல்லூரிகளைத் துவக்கியது பெரிய முன்னேற்றம். அந்தப் போக்கு நிலைத்து, இந்த ஆண்டுகூட பத்து கல்லூரிகள் புதிதாக வந்தன. சமுதாயத்தின் முனைப்புக்கு ஈடுகொடுத்து சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையை  அதிகரித்தார்கள். கல்லூரிகள் ஒரு நாளைக்கு இரண்டு சுற்று செயல்பட்டுத் தங்களை இரட்டித்துக்கொண்டன. 

1970களில் நூறு மாணவர்களுக்குமேல் வகுப்பறையில் வைத்துக்கொண்டு மேடைப் பிரசங்கம்போல் பாடம் நடத்துவோம். கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் இப்போது மாநில அரசு மட்டுமே ஆண்டுக்கு நாலாயிரம் கோடி செலவழிக்கிறது. சுவாமி விவேகானந்தர் தனக்கு நூறு இளைஞர்கள் போதும் என்றார். நம் மாணவர்களின் என்ணிக்கையைப் பார்த்தால் நமக்கு ஒரு யுகப் புரட்சிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். நம் சாதனைகளை, கல்லூரி என்ற உயர்கல்விச் சாதனத்தை, இந்த வாய்ப்பைப்  பின்னணியாக்கி மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும்.  

தரவு வலைக்குச் சிக்காதவை  

இந்த வளாகங்களில்தான் உயர்கல்வி என்ற நிகழ்வு. வளாகங்கள் அந்த நிகழ்வுக்குச் சாட்சி; பங்கேற்கின்றன, பங்களிக்கின்றன என்று சொல்லமுடியாது. தரவுகள் இல்லாமல், தோன்றியதைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். நாற்பத்தேழு ஆண்டுகள் உயர்கல்வி நிலையங்களில் இருந்தவன் சமுதாயத்திற்கு முன்னால் நின்று அளிக்கும் வாக்குமூலம். தரவுகள் என்ற வலைக்குள் சிக்கும் தன்மை இல்லாதவையும் மனித சமுதாயத்தில் உண்டுதானே! 

அறுபது எழுபது மாணவர்கள் இருக்கும் வகுப்பில் பத்துப் பதினைந்து மாணவர்களிடம் கற்கும் ஆர்வமிருந்தால் அது நம் எதிர்பார்ப்பிற்கு அதிகம் என்கிறார்கள் இன்றைய ஆசிரியர்களும். இந்தச் சொற்பத்திலும் மணி மணியான மாணவர்கள் சிலர் உருவானார்கள். சிறந்த பதிப்பாளர் ஒருவர், ”புத்தகங்களையே வாங்காதவர்களில் கல்லூரி ஆசிரியர்கள்தான் அதிகம்” என்று சொன்னார்.  

எல்லா சமூகப் பின்னணி உள்ளவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்கிறது. அதனால் கற்பதில்  சில போதாமைகள் வரலாம் என்று நினைப்பது சரியல்ல. இட ஒதுக்கீட்டு முறைப்படி மாணவர் சேர்க்கை கறாராக நடப்பதில்லை. முதல் இரண்டு சுற்று சேர்க்கை ஓரளவுக்குச் சரியாக நடந்துவிடும். அதில் மீத்துக்கொள்ளும் இடங்கள், அவசரத்துக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கும் இடங்கள் முறையாக யாருக்குப் போகவேண்டுமோ அவர்களுக்குப் போகாமல் இதரர்களுக்குப் போகும். அப்போதைய மடைமாற்றுக்கு முதல் இலக்கு பஞ்சைச் சமூக அறிவியல் துறைகள். 

ஆரம்ப கால ஆசிரியர் தேர்வில் இருந்த போதாமைகளை நீக்கிக்கொள்ள ஆசிரியர்கள்  முயற்சித்தார்கள். கூடவே நுட்பமில்லாத போராட்டப் போக்கு ஒன்று ஆசிரியர்களுக்குள் புகுந்தது. அந்தப் போக்குக்கான காரணிகள் இன்றுவரை தணியவில்லை. இந்தச் சூழலில் கல்லூரி வளாகங்களில் புலமை தழைக்கும் என்று எதிர்பார்க்கலாமா? கற்பதற்குக் கிடைத்தது சொற்பம் என்று மாணவர்கள் வருந்தக்கூடும். பேராசிரியர்கள் சிலரும் தங்களை அங்கே வீணடித்துக்கொண்டோம் என்ற நினைப்போடு ஒய்வு பெறலாம். கல்லூரி வளாகங்கள் இதில் ஒரு தரப்பை விட்டு இன்னொன்றை வளர்க்க முடியாது. கற்க வருபவரும், கற்பிக்க வருபவரும் ஒருவரை ஒருவர் தொலைத்துத் தேடிக்கொண்டேயிருக்கும் இருண்ட வனாந்தரங்கள் அவை.   .   

ஒரு நேரத்தில் தமிழகத்தின் கல்லூரிகளில் சில பெரும் செல்வாக்குபெற்ற நிறுவனங்கள். செல்வாக்கு என்று நான் சொல்வது அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை. ஒருவர் திறமையாகச் செயல்பட்டால் பாராட்டும்வகையில், “ இவர் அந்தக் கல்லூரி மாணவர்” என்று சொல்வது வழக்கம். சில பள்ளிகளும் இப்படி இருந்தன. இந்த நிறுவனத்தன்மை வெயிலில் போட்ட துணியாக வெளுத்துப்போயிற்று. 

சராசரி உலகில் தொலைந்தவை

கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் அவற்றின் நிறுவனத்தன்மை எப்படி வருகிறது? நான் படித்த பள்ளியின் சின்னத்தில், “உலகத்திற்கு வெளிச்சம் நீங்களே” என்ற வாசகமிருக்கும். கல்வி நிலையங்களுக்கு இப்படி ஒரு தத்துவ தரிசனம். பேராசிரியர்களும் அவரவர் அறிவுப் புலத்தில் ஒரு தரிசனம் வாய்த்தவர்களே. இதன் காரணமாகவே வளாகங்களுக்கும், பேராசிரியர்களுக்கும் அன்றாட சமூகத்திலிருந்து ஒரு விலகல் இருக்கும். 

நிறுவன உருவாக்கம்பற்றிப் பேசும்போது, கல்லூரியின் வளாகப் பரப்பு போன்ற பெளதீக அமசங்களிலிருந்தே துவங்கவேண்டும் என்பேன் நான். வளாகத்தின் விஸ்தாரம், அதிலுள்ள மரங்கள், கட்டடங்களின் ஆகிருதியும் பாணியும் –- இவை எல்லாம் சராசரிச் சமூகத்திலிருந்து வளாகம் விலகி நிற்பதை தங்களின் சங்கதியாக உரத்துச் சொல்பவை.  இன்றைய வளாகத்தையும் கட்டடங்களையும் பாருங்களேன்! அவை நோக்கம் தெரியுமாறு அமைந்திருக்காது. அள்ளித் தெளித்தவையாக ஒன்றுக்கு ஒன்று இசைவில்லாமலும், தங்களுக்கென்று ஒரு  தன்மை இல்லாமலும் இருக்கும்.  “இன்றைக்கு ஒரு பொழுதுதான் இங்கே, நாளைக்குச் சென்றுவிடுவேன்” என்பவைபோல் ஒண்டிக்கொண்டிருக்கும் கூழைகள். வளாக வெளியின் குரூரத் தழும்புகள். மரத்தடியில் பாடம் சொல்வது எவ்வளவோ மேல். அதையும்தான் செய்தோம்! 

மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை கட்டடக் கலைஞர்களைக்கொண்டு கம்பீரமாக வடிவமைத்துக்கொள்கிறோம். அதிகாரத்தை குடிமக்களுக்கு அடையாளப்படுத்த அது நமக்குத் தேவை. கல்லூரிக் கட்டடங்களுக்கு அடையாளம் எதற்கு? அவை சராசரி உலகத்தில் தங்களைத் தொலைத்துக்கொள்ளவேண்டாமா? அங்கே துவங்கும் உயர்கல்வியின் தாழ்ச்சி ஆசிரியர் தேர்வில் வந்து கச்சிதமாக நிலைகொள்ளும். காலக் கிரமத்தில் ஆசிரியர் தேர்வு நடந்ததில்லை. கால் நூற்றாண்டுக்கு முன்பு நிரந்தர ஆசிரியர்கள் இல்லாத இடங்களில் ஒப்பந்த ஆசிரியர்களையும், மாதம் மூவாயிரத்து இருநூறுக்கு மிகாத ஊதியத்தில் வருகை விரிவுரையாளர்களையும், பெற்றோர்-ஆசிரியர் நிதியில் ஊதியம் பெறுபவர்களையும் கொண்டு பாடங்கள் நடந்தன. ஒரு முறை பதினேழு நிரந்தர ஆசிரியர்களையும், ஏறத்தாழ நூறு வருகை விரிவுரையாளர்களையும் வைத்து நான் பணியாற்றிய கல்லூரி நகர்ந்தது.  

கல்வி, ஆசிரியர், கட்டடம், வளாகம், பெருகும் மாணவர் எண்ணிக்கை, அவர்களின் தேர்ச்சி விகிதம் - இப்படி பிரச்சினை எதுவானாலும் அப்போதைக்கு அப்போது தோன்றியதைத் தீர்வாக வைத்துக்கொண்டோம். எந்தத் தீர்வுக்கும் கல்விச் சிந்தனை அடிப்படையாக இருந்திருக்காது. கொஞ்சம் மாற்றிச் சிந்தத்தவர்களும் உயர்கல்வி என்பது பெருகும் எண்ணிக்கைக்கும் தரத்துக்கும் இடையிலான இழுபறிப் போட்டி,  ஜனநாயகத்தின் பிறவிக் குறை என்ற வகையிலேயே சிந்தித்தார்கள்.

மீண்டு வராத பாண்டித்திய மரபு   

ஆசிரியர் போதாமை போன்ற சிறிய பிரச்சினைகளை இப்போது சரிசெய்துவிடலாம் என்பது ஆறுதல் அல்ல. வளாகத்தின் பாண்டித்திய தொடர்ச்சி இற்றுப்போனதை எப்படிச் சரிப்படுத்த முடியும்? பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருவர், “அறிவியலில் திறமையான ஆசிரியர் உருவாக இருபத்தைந்து ஆண்டுகள் வேண்டும்; நல்ல மொழி ஆசிரியர் உருவாக ஐம்பது ஆண்டுகளாகும்” என்றார். உண்மைதான் என்றுபட்டது. கல்வி நிலையங்களின் இருப்புக்கு  பாண்டித்திய மரபின் தொடர்ச்சி ஒரு நிபந்தனை. வளாகங்களில் அதை நாம் பராமரித்துக்கொள்ளவில்லை. இப்போது துவங்கினாலும், அது மீளவும் வந்து நிலைகொள்ள இன்னும் அரை நூற்றாண்டு வேண்டும். 

ஆட்சியாளர்களின் அக்கறைகளில் பாண்டித்திய மரபு கடைசி இடத்தில்கூட இருந்ததில்லை. அந்த மரபு இற்றுப்போனதை நூலகங்களில் குப்பைகளாக இருக்கும் புத்தகத் தொகுப்புகளே காட்டிக்கொடுக்கும். ஆண்டுமலர்களைப் பார்த்தும் கல்லுரிகளின் புலமை மரபை புரிந்துகொள்ளலாம். அவை கல்லூரிகளைப்பற்றி உண்மைச் சங்கதிகளைச் சொல்லும் தரவுகள்.    

முனைவர் பட்டத்துக்கான ஆய்வுத் தலைப்புகளைப் பாருங்கள். பெரும்பாலானவை அந்தப் புலத்தில் உளுத்துப்போனவை என்று ஒதுக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் வரையப்பட்டிருக்கும். ஆய்வுத் தலைப்பு,  “யமுனா—-ஒரு உளவியல் ஆய்வு” என்று இருக்கும்.  “அவர் ஒரு கற்பனைப் பாத்திரம். அது கதை, நோயாளியின் பரிசோதனை அறிக்கை அல்ல. நீங்களும் உளவியல் பயிற்சி பெற்றவர் இல்லை” என்று அந்த மாணவரிடம் சொல்லிப்பாருங்கள். இப்படியான நூறு ஆய்வேடுகள் பாராட்டு பெற்றுள்ளன என்பார் மாணவர். மெஜாரிட்டி தத்துவம் கல்விப் புலத்துக்குப் பொருந்தாது என்றா அவரிடம் சொல்லமுடியும்? 

வெட்கத்துக்கு ஆற்றாமல் பல சங்கதிகள் என் மனத்திலேயே தங்கிவிடுகின்றன. தன்னாட்சிக் கல்லூரிகள் அறிமுகமானபோது மதுரைத் தனியார் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் அதற்குத் தகுந்த நாணயம் நம்மிடம் இல்லை என்று விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார். முனைவர் பட்டங்களை ஆய்வுத் திறனுக்காக மட்டுமே மாணவர்கள் பெறுவதில்லை.  ஆனால், இந்தப் பட்டமே ஆசிரியர் தேர்வுக்கு அடிப்படைத் தகுதியாக நியமிக்கப்பட்டிருக்கும். அந்த நியமனம் உயர்கல்வியின் மேம்பாட்டுக்கு யு.ஜி.சி. யின் பல தனித்துவமான பங்களிப்புகளில் ஒன்று மட்டுமே!   

அத்தைக்கு அத்தையான தீர்வுகளுக்கு மாணவர் தரப்பிலிருந்தும்  எடுத்துக்காட்டு தரமுடியும். ஆங்கிலத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைவு என்றால் அதற்கு என்ன தீர்வு? நாடகம் வேண்டாம், நாவல் வேண்டாம், உரைநடையில் நூல்கள் வேண்டாம், நீண்ட கவிதைகள் வேண்டாம், தேர்வுத் தாள்களையும் குறைப்போம் என்று தீர்வுகள் துவங்கின. தொப்பிக்குப் பொருந்த தலையை இப்படிக் குறைத்துக்கொண்டே சென்றாலும் ஆங்கிலம் மாணவர்களுக்குச் சென்று சேரவில்லை. 

நான் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்தபோது ஒரு கல்லூரியின் முன்னூறு எண்ணிக்கையிலான மாணவர்கள் கேள்விகளையே முன்னும் பின்னுமாகக் குலைத்து விடைத்தாளை நிரப்பியிருந்தார்கள். தேர்வு வாரியத் தலைவராக இருந்தபோது ஆங்கிலத்தில் தேர்வு பெறாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் பத்து ஆண்டுகளாகவே மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவதைப் பார்த்தேன். விக்கித்துப்போய் இத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலே தேர்ச்சி என்று அறிவிக்குமாறு வரம்புக்கும் குறைந்த மதிப்பெண் ஒன்றைத் தீர்மானமாகக் கொடுத்தேன். பல்கலைக் கழகத்துக்கு பெரிய நிம்மதி.  அதற்கு அடுத்த ஆண்டில் அந்தப் பொறுப்பை ஏற்க எனக்கு மனம் வரவில்லை.

தங்களையே நம்பாத ஆசிரியர்கள்

ஆங்கிலத்தில் நாற்பது சதம் தேர்ச்சி என்பதே பெரிதாக இருந்ததே, இப்போது எழுபது சதத்திற்குமேல் தேர்ச்சி என்பது சாதனையில்லையா என்று ஒரு ஆசிரியரைக் கேட்டேன்.  “விடைத்தாள் மதிப்பிடும் ஆசிரியருக்கு ஆங்கிலம் தடுமாற்றம்; அவர் நமக்கு ஏன் வம்பு என்று தேர்ச்சிக்கான மதிப்பெண் வழங்கிவிடுவார்” என்று பதில் வந்தது. நாங்கள் படிக்கும்போது உரை நடையில் ரஸல், நியூமன் போன்றவர்களின் முழு நூலையும் படிக்கவேண்டும். ஆயிரம் வரிகளுக்குக் குறையாத நீண்ட கவிதை படிக்கவேண்டும். கட்டுரைத் தொகுப்பும் படிக்கவேண்டும். ஒரு முழு நாவல் படிக்கவேண்டும். குறைந்தது இரண்டு நாடகங்களாவது படிக்கவேண்டும். ஆங்கிலத்தை பொறுத்தவரை தலைமுறைக்குத் தலைமுறை மாணவர்களின் கற்கும் திறன் குறையும் என்று கல்வியாளர்கள் நினைக்கிறார்களோ? கல்வியாளர்கள் மாணவர்களை நம்பவில்லை; ஆசிரியர்களோ தங்களையே நம்பவில்லை!  

இன்றைய உயர்கல்வியின் சமூகத் தாக்கம்பற்றி கொஞ்சம் விளக்க வேண்டும். நான் சிறுவனாக இருந்தபோது ஊரில் திருவிழா வந்தால் ராஜ வீதியில் நிறைய தரைக் கடை போடுவார்கள். பிச்சுவாக்களுக்கும், பெரிய மடக்கு கத்திகளுக்கும் கடைகள் இருக்கும். சங்க இலக்கியத்தில் வருவதுபோல் இந்தத் தற்காப்பு ஆயுதங்களுக்கு எண்ணெய் தடவி பத்திப் பத்தியாக பரப்பி வைப்பார்கள். குஜிலி இலக்கியங்களோடு மற்ற புத்தகங்களுக்கும் கடைகள் இருக்கும். திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைகூட அங்கு வாங்கியிருக்கிறேன். புல்லாங்குழல், முகர்சிங் முதலியவற்றுக்கும் கடைகள் இருந்தன.  இப்போது இசைக் கருவிகளுக்கும், புத்தகங்களுக்கும் திருவிழா கடைகள் வருவதில்லை. அதற்கு  நாம் வருந்தவேண்டாம். கத்திகளுக்கும் கடை வருவதில்லை. ஆனால், அது ஒரு ஆறுதல் இல்லை.   

கத்திகளுக்குக் கடை இருந்தபோது திரைப் படங்களில் வெட்டு, குத்து, கொலைக் காட்சியெல்லாம் இருக்காது. அப்படியே இருந்தாலும் கண்ணுக்கு முன்னால் காட்சிப்படுத்தாமல் நளினத்தோடு அவற்றை நம் ஊகத்துக்கு விட்டுவிடுவார்கள். இன்றைய திரைப் படங்களில் வன்முறைக் காட்சிகள் குரூர யதார்த்தத்தோடு அடுக்கடுக்காக வருகின்றன. திரைப் படங்களுக்கு இதை எப்படி இன்னும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தலாம் என்பதில் போட்டி. யதார்த்தக் கலைப் படைப்புக்கும் இவற்றுக்கும் தொடர்பில்லை. ஏனைய வக்கிரங்களுக்குத்  தீணிபோடுபவை போலத்தான் இவையும்.  ஆளுக்கு ஆள் சூரிக்கத்திகளை  அவசரத்துக்கு வேண்டியிருக்குமே என்று மடியில் கட்டிக்கொண்டு போனபோது வன்முறையை விஸ்தாரமான காட்சியாகக் காண்பதில் இல்லாத ருசி இப்போது எப்படி வந்தது? இத்தனை பள்ளிகளையும், இத்தனைக் கல்லூரிகளையும் மீறி இந்த ரசனை தழைக்கிறது. 

இது போன்ற இடங்களிலும்தான் நாம் இலக்கியத்தையும், சமூக அறிவியல் துறைகளையும்பற்றி  அக்கறை காட்டவேண்டியுள்ளது. சங்க இலக்கியங்களை நாம் போற்றுவது அப்போதே இப்படியானவைகளை எழுத புலவர்கள் இருந்தார்களே என்ற வியப்பால் அல்ல. அவர்கள் எழுதியதை வாசிக்கச் சமுதாயம் ரசனை படைத்திருந்ததே என்பதற்காக.  ரசிகச் சமுதாயம் இல்லாமலிருந்திருந்தால் அந்த இலக்கியப் படைப்பு நடந்திருக்காது. இலக்கியமும், சமூக அறிவியலும் நாமே நம்மிடமிருந்து விலகி நம்மை விமர்சிக்கக் கற்பிக்கும் பாடங்கள். 

பாண்டித்திய மரபு, பேராசிரியர்களுக்குச் சுதந்திரம்பற்றிப் பேசினால் இதெல்லாம் கவைக்கு உதவாத பழைய லட்சிய வாதங்கள் என்று நீங்கள் கூறலாம். பல்கலைக் கழகங்களும் வரலாற்றில் இடைக்காலத்தவைதான்; நவீன காலத்தவை அல்ல. பாண்டித்தியம் மட்டுமல்ல, உண்மை, நீதி முதலானவையும் புராதனங்கள்தான்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தங்க.ஜெயராமன்

தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர். மொழியியலாளர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ பணியில் பங்கேற்றவர். ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com


2

3

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

அற்புதமான கட்டுரை. ஒரு கல்லூரியின் ஆண்டுமலரை வைத்தே அதன் புலமை மரபை எடைபோட்டுவிடலாம் என்பது போன்ற நுட்பமான சிந்தனைத் தெறிப்புகள் அபாரம். ஆனால், ஆசிரியருக்கு நிறைய விஷயங்களை ஒரே கட்டுரையில் சொல்லவேண்டுமென்கிற சிக்கலும் இருப்பதாகத் தோன்றுகிறது. கட்டுரையின் மொழியும் வாசிப்புப் பயிற்சி இல்லாதவர்களுக்கு கடினம் நினைக்கிறேன். இவை கட்டுரைத்தொடருக்கானவை எனத் தோன்றுகிறது; ஆசிரியர் விரித்தெழுத விழைந்தால் உயர்கல்வி குறித்த நல்லுரையாடல் துவங்கும். அக்கறைமிகு கட்டுரை, வணக்கங்கள்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

பழஞ்சொற்கள்ஓய்வுபெற்ற நீதிபதிகள்பிரேம் ஆனந்த்வேலு கட்டுரைநவ தாராளமயம்பிராமணர்நார்சிஸ்டுகளின் இருண்ட பக்கம்பினராயி விஜயன்உணவியல்அசோக்வர்த்தன் ஷெட்டி கட்டுரைஉறுதிமொழிசுற்றுச்சூழலியல்ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!முதலாம் உலகப் போர்செமி கன்டக்டர் தட்டுப்பாடுஅரசின் திணிப்பு நடவடிக்கைமனுதர்ம சாஸ்திரம்விரைப்பைகுதுபுதீன் அன்சாரிகலைச்சொற்கள்டிஜிட்டல்அவதூறுஉலக எழுத்தாளர் கி.ரா.மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாதுபிராணிகள்சேவை நோக்கம்ஜெய்லர்ஜப்பான்இந்திய அரசு சட்டம்அரசியல் பரிமாணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!