கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 4 நிமிட வாசிப்பு

சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?

பெருமாள்முருகன்
25 Feb 2023, 5:00 am
8

ன் மகன் திருமணம், 2023 பிப்ரவரி 1 அன்று நாமக்கல்லில் நடைபெற்றது. ‘மாமுது பார்ப்பார்’ அல்ல, ‘நடுவயதுப் பார்ப்பார் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து’ நடந்த மணம். ஆம், திருமணத்தை நடத்திவைத்தவர் மோகனூரைச் சேர்ந்த ஐயர் பிரகாஷ். மோகனூர் சர்க்கரை ஆலைக் கோயிலில் பூசை செய்பவர். அவருடன் இன்னும் மூவர் இருந்தனர்.

திருமணத்திற்கு வந்த நண்பர்கள் தாம் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை உடனே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்தனர். ஐயர் முன்னிருந்து திருமணத்தை நடத்தும் புகைப்படமும் அதில் ஒன்று. தோழர்கள் பலருக்கும் அப்படம் உறுத்தலாக இருந்திருக்கும் என்பதை உணர்ந்தேன். சிலர் நேரடியாகக் கேட்டனர். சிலர் கேட்கத் தயங்கி மறைமுகமாக வெளிப்படுத்தினர். சிலர் முகநூலில் தம் எண்ணத்தை எழுதினர். 

குறிப்பாகத் தோழர் அமுதன் (Amudhan Ramalingam Pushpam) தம் முகநூல் பதிவில் “எழுத்தாளர் பெருமாள்முருகனின் மகன் திருமணத்தில் சம்ஸ்கிருத மொழியில் பார்ப்பனர்களை வைத்துத்தான் சடங்கு நடத்தப்பட்டதா? சூத்திர சாதியைச் சேர்ந்த பெருமாள்முருகன் வீட்டில் எப்படி பார்ப்பனர் நுழைந்தார்? அது என்ன அவரது பாரம்பரியமா  அல்லது இப்படித்தான் எல்லா தமிழர்களும் வாழ்கின்றனரா? அப்படியே குடும்ப வழக்கமாக இருந்தாலும் எழுத்தாளர்களுக்கு சமூக அரசியல் கடமை இல்லையா? எழுத்தும் வாழ்க்கையும் வேறா? அல்லது அது அவரது தனிப்பட்ட உரிமையா?” (2023 பிப்ரவரி 1) என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.  

அப்பதிவில் “மாதொருபாகன் நாவலுக்காக சங்கிகள் அவரை முடக்கப் பார்த்தபோது அவருக்காகப் போராடியவர்களில் ஒருவன் என்ற முறையில் கேட்கிறேன்” என்று கேள்வி கேட்பதற்கான தம் உரிமையைச் சுட்டியிருந்தார். 2015ஆம் ஆண்டு ‘மாதொருபாகன்’ பிரச்சினையின்போது எனக்காகவும் கருத்துரிமைக்காகவும் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் மட்டுமல்ல, உலகளவிலேயே பலர் போராடினர். அவர்களுக்கெல்லாம் பல விதங்களில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

நன்றிக்கடன் இப்பிறவியில் முடிவு பெறாது. என்னென்ன வகையில் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமோ, தெரியவில்லை. ஒருவர் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வதும் ஒருவகை நன்றிக்கடன் போலும். ஆகவே, முடிந்தவரைக்கும் கடனைச் செலுத்த முயல்கிறேன். 

என் எழுத்து சார்ந்தும் செயல்பாடுகளை ஒட்டியும் ஏதோ ஒருவகை பிம்பம் உருவாகியிருக்கிறது. மார்க்சியம், பெரியாரியம் ஆகியவற்றை வாழ்க்கை நெறியாகக் கொண்டவன் நான் என்பது அது. தவறில்லை, சரிதான். ஆனால், கொள்கைகளைக் கெடுபிடியாய்க் கைக்கொள்பவன் அல்ல, என் சூழலுக்கு உட்பட்டு இயலும் வகையில் நடைமுறையில் கடைபிடிப்பவன் நான்.

எந்தக் கட்சியிலும் நானில்லை. யாருக்கும் எத்தகைய உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. இருப்பினும் கேள்விகள் வருகின்றன. இன்று சமூக ஊடகங்கள் இருப்பதால் உடனுக்குடன் எதுவும் கவனம் பெறுகிறது. தனிப்பட்ட விஷயம் என்று எதுவுமே இல்லை.  திருமணம் குடும்ப நிகழ்வு என்றபோதும் பொதுவெளியில் கேள்வி எழ இவையே காரணம். சமாதானம் சொல்லவோ நியாயப்படுத்தவோ முயலாமல் நடந்ததை விளக்க முனைகிறேன். திருமணம், சடங்குகள் சார்ந்த என் எண்ணங்களையும் நடைமுறையில் அவற்றை நான் எதிர்கொள்ளும் முறைகளையும் இணைத்துக்கொள்கிறேன். 

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.

பெருமாள்முருகன் 18 Feb 2023

என் திருமணம்

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன் 1993இல் என் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம். ஆகவே இயல்பாகவே சாதி மறுப்பாகவும் அமைந்தது. சாதியச் சமூகத்தில் காதல் மணம் எளிதல்ல. சில பிரச்சினைகளை எதிர்கொண்டோம். என் மனைவியின் குடும்பம் பெரியாரியம், மார்க்சியம் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டது என்பதால் சடங்குகளைத் தவிர்ப்பது எளிதாக இருந்தது. தாலி வேண்டாம், மாலை மாற்றிக்கொள்வது மட்டும் போதும் என்றே முடிவுசெய்தோம். பேராசிரியர் வீ.அரசு வருகை புரிந்தார். எங்கள் இருவருக்கும் அவர் ஆசிரியர். ஆகவே, அவரையே தலைமையேற்று நடத்தித் தருமாறு கேட்டுக்கொண்டோம். காலையில் திருமணம். முந்தைய நாள் இரவில் ஒரு பிரச்சினை.

முதலில் திருமணத்திற்கு என் உறவினர்கள் யாரும் வருவதாக இல்லை. என் அம்மா தாலிக்கொடி செய்து தருவதாகச் சொன்னார். திருமணத்திற்கே வரவில்லை, நீ செய்து தரும் தாலி மட்டும் எதற்கு என்று மறுத்துவிட்டேன். என் வீம்பினால் ஏழு பவுனை இழந்ததுதான் மிச்சம். எங்கள் ஊருக்கும் மாமனார் ஊருக்கும் ஓரிரவுப் பயணத் தூரம். மாமனார் ஊரில்தான் திருமணம். கடைசி நேரத்தில் மனம் மாறி வண்டி ஒன்றில் என் உறவினர்கள் 25 பேர் நள்ளிரவு வந்து சேர்ந்தனர். வந்தவர்கள் கையில் தாலிக்கொடி. சிகிச்சையில் இருந்ததால் வர இயலாத என் அக்கா ஒருவர் (அத்தை மருமகள்) தம் தாலிக்கொடியைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார். நான் பிறந்த கொங்கு வேளாளர் சாதியில் தாலி கட்டும் வழக்கமில்லை. தாலிக்கொடியைக் கழுத்தில் மாலைபோலப் போடுவதுதான். தாலிக்கொடி செய்ய வசதியில்லை என்றால் இன்னொருவர் கொடியை வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்னும் நெகிழ்ச்சி உண்டு. திருமணத்திற்குப் பிறகு மஞ்சள் கயிறு ஒன்றைக் கட்டிக்கொண்டு தாலிக்கொடியைக் கழற்றி உரியவரிடம் கொடுத்துவிடலாம். தாலி சார்ந்து பெரிய கெடுபிடிகள் கிடையாது.

அம்மா செய்து தருவதாகச் சொன்ன தாலிக்கொடியை வேண்டாம் என்று மறுத்துவிட்டதை அறிந்த அக்கா தம் கொடியைக் கொடுத்து அனுப்பியிருந்தார். என் மீது மிகுந்த பிரியம் உள்ளவர் அவர். தம் அன்பைக் காட்ட அவர் கொண்ட வழி அது. தாலியை எடுத்து நீட்டிய உறவினர்களிடம் “திருமணத்தில் தாலி இல்லை” என்று சொன்னேன். என் பெரியம்மா “தாலிகூட இல்லாத எப்படிடா கல்யாணம்?” என்று பரிதாபமாகக் கேட்டார். 

என் மனைவி, வீ.அரசு, என் மாமனார், மைத்துனர் ஆகியோருடன் இதைப் பற்றி இரவில் விவாதித்தேன். சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு வெகுதூரத்தில் இருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள், அவர்கள் ஒரே ஒரு விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள், அதை நிறைவேற்றினால் மகிழ்வார்கள். அப்படியானால் திருமண முறையைச் சிறிது மாற்றிவிடலாம் எனத் தீர்மானித்தோம். மாலை மாற்றியதும் தாலிக்கொடியை மணமகளுக்கு மணமகன் அணிவிப்பது, மோதிரம் ஒன்றை மணமகனுக்கு மணமகள் அணிவிப்பது என மணமுறையை மாற்றினோம். சாதி மறுப்புத் திருமணத்தை உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்போது தாலி ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டால் தவறில்லை. சாதி என்னும் பெரிய தடையில் நாம் சமரசம் செய்துகொள்ளவில்லை, சடங்கு என்னும் சிறிய விஷயத்தில்தான் சமரசம். அப்படித்தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. 

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு என் மகன் திருமணம். இதுவும் காதல் திருமணம். மணம் செய்துகொள்ளாமலே இணைந்து வாழும் நடைமுறைகள் எல்லாம் வந்துவிட்ட காலம் இது. அப்படி ஒன்றை அவர்கள் தேர்வுசெய்து இருந்தாலும் எனக்குச் சம்மதமே. இருவர் இணைந்து வாழச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தேவையில்லை. குடும்பங்களிலிருந்து நாம் இன்னும் முழுதாக விடுதலை பெறவில்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறையையே தேர்ந்தார்கள்.

எங்களுக்கிருந்த சாதி, சடங்கு, பொருளாதாரம் உள்ளிட்ட எந்தத் தடையும் அவர்களுக்கு இருக்கக் கூடாது என்று நாங்கள் நினைத்தோம். அவர்கள் திருமணம், அவர்கள் விருப்பம் எப்படியோ அப்படியே செய்துவைப்பது என்று தீர்மானித்தோம். திருமணம் என்பது வாழ்நாள் நினைவு, அதற்கேற்றபடி புகைப்படம், காணொளி, ஒப்பனை, புத்தாடைகள், எளிய சடங்குகள் ஆகியவை இருந்தால் நல்லது என்று மணமக்கள் விரும்பினார்கள். இரைச்சலும் கூச்சலும் இல்லாத, ஒருவருக்கொருவர் முகம் பார்த்து அளவளாவும் அளவுக்கான கூட்டம் இருந்தால் போதும் என்றார்கள். அவர்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றி வைத்தோம்.   

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

உவேசாவை ஒதுக்கலாமா?

பெருமாள்முருகன் 19 Feb 2022

காதலுக்கு சாதி உண்டா?

சாதி பார்த்துக் காதல் வருவதில்லை. ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துக் காதல் கொள்வதற்கு இரண்டே இடங்கள்தான் நம் சமூகத்தில் உள்ளன. ஒன்று, கல்வி நிறுவனம். இரண்டாவது, பணி செய்யும் அலுவலகம். எங்கள் காதலுக்குக் கல்வி நிறுவனப் பின்னணி. மகன் காதலுக்கு அவன் வேலை செய்த அலுவலகப் பின்னணி. அவன் காதலித்தவர் ஐயர் சாதியைச் சேர்ந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லா மொழியும் கலந்த ‘திராவிட’ மொழிக் குடும்பம் அது. அவர்கள் குலதெய்வம் கேரளத்தில் உள்ளது. திருமணத்தை நாமக்கல்லில் நடத்தலாம் என முடிவானது. எந்த முறையில் நடத்துவது? 

சடங்குகள் ஏதுமற்ற சீர்திருத்தத் திருமணம் செய்வதற்கு வழியில்லை. மணமக்கள் இருவரும் அத்தகைய தீவிரக் கொள்கைப் பிடிப்பு உடையவர்கள் அல்ல. எங்கள் வற்புறுத்தலால் ஒருவேளை ஒத்துக்கொள்ளலாம். அப்படி வலியுறுத்துவது கூடாது என்பதோடு இப்போதிருக்கும் மாற்று முறைகளில் எனக்குப் பல ஒவ்வாமைகள் இருந்தன. சைவச் சார்புடையனவாகச் சில திருமண முறைகள் உள்ளன. அவற்றின் முறைகளில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. வேறு மாற்றுமுறைகளில் உறவினர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. பெற்றோருக்குக்கூட இடமில்லை. பரிதாபமாக ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒலிவாங்கியைப் பிடித்து வெகுநேரம் முழங்கும் அரசியல் பரப்புரை மேடையாக மணமேடை மாறிவிடுகிறது. சாதாரணத் திருமணத்திற்கு ஆகும் செலவைவிடவும் கூடுதலாகும் முறைகளும் உள்ளன. திருமணம் செய்துவைக்கும் பெரியோர் சிலர் ஐயர்களைவிடவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். ஏற்கெனவே, நடைமுறையில் இருக்கும் சடங்குகளுக்குப் பதிலிகள் எந்த மாற்று முறையிலும் இல்லை. 

தமிழா - சம்ஸ்கிருதமா?

சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளும் உறவினர்களை அனுசரிக்க வேண்டி இருக்கிறது. மரபான திருமண முறை அதற்குப் பெருமளவு உதவுகிறது. இவ்வகை மாற்று முறைகளைச் சொல்லி மணப்பெண் குடும்பத்தாரை ஏற்றுக்கொள்ளச் செய்வது இயலும் செயலல்ல. சரி, நான் பிறந்த ‘சூத்திர சாதி’ முறையில் திருமணம் செய்யலாமா? அதில் பார்ப்பனர் பங்கு எதுவும் இல்லை. கொங்கு வேளாளர் திருமணத்தை ‘அருமைக்காரர்’ என்னும் பட்டம் பெற்ற ஒருவர்தான் தலைமையேற்று நடத்துவார். ஆனால், அம்முறையில் நடைபெறும் சடங்குகளில் நாவிதர், வண்ணார் உள்ளிட்ட சேவைச் சாதிகளுக்குப் பங்குண்டு. ஒவ்வொரு சாதியாரும் பங்கு பெறும் வகையில் ஒவ்வொரு சடங்கு உண்டு. அச்சந்தர்ப்பங்களில் அவர்களை இழிவான சொற்களால் அழைப்பதும் ஏவுவதுமான ஆதிக்கத்தின் ஆபாசத்தைக் காணலாம். பார்ப்பனர் இல்லை என்னும் ஒரே காரணத்திற்காகப் பிற சாதியாரைக் கேவலமாக நடத்தும் சடங்கு வகைகளை ஏற்று நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. 

பெண் வீட்டார் ஐயர் என்பதால் அவர்கள் பிற வகைச் சடங்குகளை ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். திருமணத்திற்கு ஒத்துக்கொள்பவர்களை மாற்று முறைகளைச் சொல்லி ஒத்துக்கொள்ளச் செய்வது அத்தனை எளிதல்ல. திருமணத்தை அது சிக்கலில் கொண்டுவந்து நிறுத்திவிடலாம். திருமணம் முக்கியம்; சடங்குகள் அப்புறம். ஆகவே, ஐயரை வைத்துத் திருமணம் நடத்தலாம் எனத் தீர்மானித்தோம். அதில் பெண் வீட்டாருக்கு எந்த எதிர்ப்பும் இருக்கக் காரணமில்லை. பார்ப்பனச் சடங்குகளில் சேவைச் சாதியாருக்கு எந்தப் பங்கும் இல்லை. யாரையும் இழிவுபடுத்துவதும் இல்லை. சம்ஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் மட்டும் பிரச்சினை. சரி, அதைச் சகித்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம். 

என் உடன் பணியாற்றிய வணிகவியல் பேராசிரியர் செந்தில்குமாரின் நண்பர், அவரது ஊர்க்காரர்தான் ஐயர் பிரகாஷ். அவரை அழைத்துத் தொகை பேசியபோது “தமிழ்ல மந்திரம் சொல்வீங்களா?” என்று கேட்டேன். “சம்ஸ்கிருத மந்திரந்தான் படிச்சிருக்கறன். தமிழ்ல சொல்ற வழக்கமில்லீங்களே” என்றார். “உங்கள்ல யாருமே தமிழ்ல சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டேன். “அப்படி யாரும் இல்ல. வேண்ணா பாக்கறன்” என்றார். அதற்கு மேல் அவரை வலியுறுத்தவில்லை. திருமணம் அரைமணி நேரத்திற்குள் முடிந்துவிட்டால் நல்லது, வெகுநேரம் புகையில் உட்கார்ந்திருக்க முடியாது என்று மணமக்கள் சொல்லியிருந்தனர். அதைப் பிரகாஷிடம் சொன்னபோது “முக்கால் மணி நேரம் கொடுங்க” என்றார். அதற்கு ஒத்துக்கொண்டோம்.

ஐயர் முறையில் செய்யும் திருமணமும் ஒரே மாதிரி இருக்காது என்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறும் என்றும் சொன்னார். தாம் பின்பற்றும் முறையை வாய்மொழிச் செய்தியாகப் பதிவாக்கி எனக்கு அனுப்பிவைத்தார். அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் முதலிலேயே சொல்லிவிட்டால் நல்லது என்றார். பெண் வீட்டார் ஐயர் என்பதால் மேடையில் வந்து ஏதேனும் மாற்றம் சொன்னால் அப்போது செய்வது கஷ்டமாக இருக்கும் எனவும் விவரம் சொன்னார். பெற்றோருக்குப் பாத பூஜை செய்தல் அவர் சொன்ன முறையில் இருந்தது. அது வேண்டாம் என்று சொன்னோம். இப்படிச் சில மாற்றங்கள் சொன்னதும் ஏற்றுக்கொண்டார். 

ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வகைத் தாலி இருக்கிறது. பெரும்பாலும் கணவனின் சாதிக்குரிய தாலியைப் போடுவதே வழக்கம். மணப்பெண்ணின் தாயார் இறந்துவிட்டார். அம்மா போட்டிருந்ததுபோலத் தாலி போட்டுக்கொள்ள மணப்பெண் ஆசைப்பட்டார். எந்த வகைத் தாலியாக இருந்தால் என்ன? சரி என்று சொல்லிவிட்டோம். தாலியோடு மஞ்சள் கயிற்றையும் சுற்றி வைத்துக்கொள்வது என்றும் தாலிக்கொடியைக் கழுத்தில் மாலை போலப் போட்டுவிட்டு அதில் சுற்றியுள்ள மஞ்சள் கயிற்றை மூன்று முடிச்சுப் போட்டுக் கட்டிவிடலாம் என்றும் முறை வகுத்தோம். “உங்கள் விருப்பம்” என்று ஐயர் சொல்லிவிட்டார். இருசாதி முறையும் சேர்ந்த தாலி கட்டல். சடங்கென்று வந்துவிட்டால் எங்காவது சாதி வந்து நிற்கத்தான் செய்கிறது. முற்றிலும் சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. 

இது போதுமே…

திருமண நிகழ்வை ஐயர் தொடங்கும்போது சம்ஸ்கிருத மந்திரம் சொன்னார். அப்படியே தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்தார். பின் முழுக்கத் தமிழுக்கு மாறிவிட்டார். அறிவிப்பு, வாழ்த்து எல்லாம் தமிழில். எப்படியும் ‘மாங்கல்யம் தந்துனானே’ வருமே என்று பார்த்திருந்தேன். ஐயர் தொடங்கினார், 

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
               கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
            கழுபிணி யிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
            தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
         தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும்ஒரு
         துன்ப மில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிபெரிய
           தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
                 ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
                அருள்வாமி! அபிராமியே!

பதினாறு பேறுகளைப் பட்டியலிடும் ‘அபிராமி அம்மைப் பதிகப்’ பாடலைத் தெளிவாக ஒலித்து ‘மாங்கல்ய தாரணம்’ செய்யச் சொன்னார். ‘சகல வாத்தியம்’ முழங்கிற்று. அபிராமி அம்மைப் பதிகப் பாடலை ஏற்கெனவே படித்து வைத்திருந்தாரா, இந்தத் திருமணத்திற்காகப் படித்துக்கொண்டாரா தெரியவில்லை. தமிழ்ப் பாடலே மந்திரமாயிற்று. எனக்குப் பெருநிறைவு. மணம் முடிந்ததும் ஐயரைத் தழுவிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால், அவர் கைகளைப் பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். என்னால் தழுவ முடியாத அளவு அவர் கொஞ்சம் பருத்த சரீரத்தவர். “போதுங்களா?” என்று சிரித்தார். என் விருப்பத்தைச் செயல்படுத்திவிட்ட நிறைவு குரலில் தெரிந்தது. “போதும் போதுங்க. வேறென்ன வேணும்? என் மகிழ்ச்சிக்குத் தமிழ் ஒன்றே போதும்” என்றேன்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.
உவேசாவை ஒதுக்கலாமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


4

8


1



பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

Dr. S. Ezhilan   1 year ago

வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்வியல் நிலைப்பாடுகளோடு புதியதாக வாழ்வைத் தொடங்குபவர்களோடு பொருத்துவது ஏற்புடையதில்லை. மரபுகள் என்பவை கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. பொருள் புரியாத மந்திரங்கள், வணிகமய சடங்குகள், மூன்றாம் மனிதரின் தலையீடு இயற்கைக்கு எதிரானவை. திருமணங்களை ஆடம்பரமாக நடத்துவதற்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டவை. மண்டபத்தில் தொழில்நுட்பம், உணவில் பன்னாட்டு நெடி, உரையாடலில் அன்னிய மொழிகள் என்று அனைத்திலும் நெளிவுசுளிவுகள். ஆனால் மாங்கல்யம்,, வடமொழி போன்றவற்றில் இறுக்கம். இருமனங்களும் இசைந்து போகாமல் திருமண முறைகளை மட்டும் வழுவாமல் பின்பற்றிவிடுவதால் சுற்றங்கள் மகிழலாம். நட்புகள் கைதட்டலாம். ஆனால் மணமக்களை நல்வழிப்படுத்தி அன்பும் அறனும் மிக்கதான பாதையில் பயணிக்க இந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்தொடர்வதில்லை. பெண்களுக்கான எந்த உரிமைகளையும் சம்பிரதாயங்கள் வழங்குவதில்லை. முதல் நாளிலேயே மணமக்களிடையே ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கின்றன. மணமகளின் பெற்றோர்களை கைப்பொத்தி வாய்ப்பொத்தி பேசவிடாமல் சிலைகளாக்கிவிடுகின்றன. "வழக்கம்' என்ற பெயரில் மணமகன் வீட்டாரின் பட்டியல்கள் நீள்கின்றன; தொடர்கின்றன. இத்தனையையும் செய்தாலும் பெண்வீட்டாரின் வயிற்றில் பெண்ணை நல்லபடியாக வைத்துக்கொள்வார்களா என்ற கங்கு கனன்று கொண்டுதான் உள்ளன. அது எழுத்தாளர் என்றாலும் எம் போன்ற பேராசிரியர் என்றாலும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. மனிதர்கள் நிலாவில் வாழும்போது தான் மாறுமோ? -பேராசிரியர் சா. எழிலன்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

SENTHIL KUMAR P   1 year ago

அருமையான விளக்கம்....நன்று....மணமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

K Chitra   1 year ago

வாழ்க வளமுடன், நிறைவுடன்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

PRASANNA R   1 year ago

பொதுவெளியில் சமூக சீர்திருத்தம், மாற்று அரசியல், சனாதன எதிர்ப்பு என்று பல நூறு பக்கங்களுக்கு புத்தகம் போட்டாலும் தனிநபர் எடுக்கும் முடிவுகளில் கூட எந்த சாதியையும் அதன் அடையாளங்களையும் விட்டுக்கொடுக்க முடியாத நிலைமையில் தான் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தனி நபர்களின் சமாளிப்புகளை பார்க்கும் போது வெளிப்படையாக சாதியை தூக்கி பிடிக்கும் அரசியல்வாதிகள் நல்லவர்கள் தான் போல..

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   1 year ago

Being persuasive, practical, diplomatic, always engaging in dialogues and compromise, are the hall marks of a marriage! Congratulations!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

கதிரவன் கணேசன்   1 year ago

மகனார்க்கும் மருமகளார்க்கும் வாழ்த்துகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. என்னுடைய திருமணம் சாதிமறுப்புத் திருமணமன்று. ஆயின் சடங்கு மறுப்புத் திருமணமாக நடத்தப்பெற்றது. பார்ப்பனர் திருமணச் சடங்கு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். தாலிகட்டித்தான் திருமணம் செய்துகொண்டோம். சேவைச்சாதியினரின் எந்தவிதப் பங்களிப்புக்கும் இடந்தராது, என்னுடைய தந்தையின் சிறிய தந்தையாரும் என்னுடைய சிறிய தந்தையின் மனைவியும் மணவறை நிகழ்வுகளை ஒருங்கிணைக்க, அரசாணைக் காலுக்குப் பூசைசெய்தோம். என்னுடைய மனைவியும் அவளுடைய சகோதாரியும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடினர். என்னுடைய பேராசிரியர்கள் மோசசு மைக்கேல் பாரடே ஐயாவும் அரசேந்திரன் ஐயாவும் தாலி எடுத்துத்தர சடங்கு நடந்தேறியது. மேடையில் என்னுடைய பேராசிரியர்கள் இருவரும் என்னுடைய சிறிய தாய்மாமனும் வாழ்த்திப்பேசினர். நான் ஏற்புரை நிகழ்த்தினேன். திருமணத்திற்குப் பின் தாலிகட்டியது ஒரு சடங்கு மட்டுமே, தாலி அடையாளம் தேவையில்லை, தாலியைக் கழட்டி வைத்துவிடலாம் என்று நான் கூறியதை என் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே மணநாளன்று எனக்கு அணிவிக்கப்பெற்ற மெட்டியை, மூன்றாம் நாள், வழக்கம்போல், கழட்ட முனைந்தபோது நான் மறுத்துவிட்டேன். 1999 செப்டம்பரிலிருந்து இன்றுவரை தொடர்ந்து அணிந்திருக்கிறேன். தாலியைக் கழட்டினால் மெட்டியைக் கழட்டிவிடுவதாகப் பேரம் பேசினேன். வீட்டுக்கு ஆகாது, குடும்பத்துக்கு ஆகாது என்று பலவாறு எடுத்துச்சொல்லி என்னுடைய மனைவி, என்னுடைய அம்மா, அப்பத்தா, உறவுப்பெண்கள் பலரும் என்னை மெட்டியைக் கழட்டுமாறு வற்புறுத்தினர். மிரட்டினர். நான் உறுதியாக மறுத்துவிட்டேன். விட்டுவிட்டனர். முதலில் நான் மெட்டி அணிவதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்த என்னுடைய மனைவியும் என்னுடைய அம்மாவும் பின்னர் மெட்டி கழண்டு விடாமல் பார்த்துக்கொள்வதில் முனைப்புடையவர்களாக மாறிவிட்டனர். மூன்றாம் நாளே கழட்ட வேண்டியிருப்பதால் மெல்லிய வெள்ளித் தகடாய் எளிதில் நெளிந்துவிடக்கூடியதாய்ச் செய்யப்பட்டிருந்த மெட்டிக்குப் பதிலாக தொடர்ந்து அணிவதற்கு ஏற்ப, உறுதியாகச் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் எதுவுமில்லாத வெள்ளிமெட்டியை செய்துதரச்சொல்லி என் இருகால் விரல்களிலும் மாட்டிவிட்டார் என் அம்மா. என்னுடைய ஒரு கால் விரல் மெலிந்திருப்பதால் நடக்கின்றபோது அக்கால்விரல் மெட்டி கழண்டு காணாமல் போனது. ஓரிரு வாரத்திற்குள் அந்தக் கால் விரலுக்கு புது மெட்டி செய்து வந்து மாட்டிவிடுவார். இரண்டு முறை இவ்வாறு நிகழ்ந்தது. மூன்றாம் முறையும் கழண்டு காணாமல் போக, நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், என்னுடைய மற்றொரு கால்விரலில் மட்டும் இன்றுவரை மெட்டி கழட்டாது அணிந்துள்ளேன். என்னளவில் சாத்தியமாவது என் மகன் திருமணத்தில் சாத்தியமாகுமா என எனக்கும் தெரியவில்லை.

Reply 13 1

RAJA RAJAMANI   1 year ago

/என்னளவில் சாத்தியமாவது என் மகன் திருமணத்தில் சாத்தியமாகுமா என எனக்கும் தெரியவில்லை./ காலத்தின் திசை எவ்வாறு செல்லும் என்று சொல்லமுடையது அல்லவா? நேற்றைய பெரியரிகளின் வாரிசுகள் இன்று இந்து மத சடங்கை நோக்கி செல்கின்றனர். தப்பு ஒன்றும் இல்லை. நம்முடைய பழமையான சடங்குகளை எல்லாம் தவிர்க்காமல், நமக்கு ஒப்புள்ளவற்றை தேர்ந்தெடுப்பது தான் முறை. Don't throw the baby with the bathwater.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

நிதிநிலை அறிக்கைஊடகர்இலக்கியம்கடல்வழி வாணிபம்காதல் திருமணங்கள்அறிவியல் நிபுணர்கள்ஹரியானாபுனித பிம்பம்ராஜஸ்தானின் முன்னோடி தொழிலாளர் சட்டம்மார்க்ஸியர்ஸ்வீடிஷ் மொழிஅயோத்திதாசர்சீர்திருத்த நடவடிக்கைமருத்துவர் ஜீவா ஜெயபாரதிதொழிற்சாலைகள்உயிர்கள்மணவை முஸ்தபா: இறுதி மூச்சுவரை தமிழ்ப் பற்றாளர்!சவால்மனிதவளச் செயல்திறன் மேம்பாட்டில் முதலீடு செய்யும் நளினி சிதம்பரம்பல்லடம்தகுதிதேவேந்திர பட்நவிஸ்கடற்கரைஅதிக மழைகட்டுரைபைஜூஸ்உள்ளடக்கங்கள் மாற வேண்டும்வழிபாடுவடகிழக்கு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!