கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு
இட்லி தோசை சுட வரவில்லையா?
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கே.அண்ணாமலை தம் கட்சியிலிருந்து சிலர் விலகி அதிமுகவில் சேர்வது குறித்துச் செய்தியாளர்களிடம் 07.03.23 அன்று பேசினார். அப்போது “தோசை சுடுவதற்கு, இட்லி சுடுவதற்கு நான் வரவில்லை. தலைவராக வந்திருக்கிறேன்” என்று சொன்னார். மீண்டும் மீண்டும் அதைச் சொன்னார். அது என்ன? இட்லி சுடுதல், தோசை சுடுதல்? அதைச் சாதாரண வேலை என்கிறாரா? இழிவான வேலை என்கிறாரா? இட்லி சுடுவது போன்ற அற்ப வேலைகளைச் செய்வதற்கு வரவில்லை என்கிறாரா? இதற்கு என்ன பொருள்? தமிழில் இதற்கு ஏதேனும் வழக்கு இருக்கிறதா?
அரசியலர்களின் சொற்பயன்பாடுகள்
அரசியலர்கள் அன்றாடம் விடுக்கும் அறிக்கைகளில், மேடைப் பேச்சுகளில், செய்தியாளர் சந்திப்பில் சொல்லும் விளக்கங்களில் எனக்குப் பெரிய ஆர்வமில்லை. ஆனால், அவர்கள் பயன்படுத்தும் தமிழைக் கவனிப்பேன். மரபுத்தொடர்களையும் பழமொழிகளையும் அரசியலர்களைப் போல இயல்பாகப் பேச்சில் பயன்படுத்துபவர் வேறு எவருமில்லை.
வாரத்துக்கு ஒருமுறையேனும் ‘நீலிக்கண்ணீர்’ என்னும் மரபுத்தொடர் செய்திகளில் வந்துவிடும். யாராவது ஒரு அரசியலர் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க இந்தத் தொடரைக் கையாண்டுவிடுவார். இந்த வாரத்தில் வட மாநிலத் தொழிலாளர் பிரச்சினை அரசியலாகிப் பெருமளவு செய்திகளில் அடிபட்டது. அதைப் பற்றித் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை வாசகம் இது:
“கொரோனா தொற்றுக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தபோது, அப்போது மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக வாய் மூடி மெளனியாக இருந்ததைத் தவிர வேறு என்ன செய்தார்கள்? திடீரென இப்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்கள்.”
நீலிக்கண்ணீரைப் போலவே கைப்பாவை, ஆழம் பார்த்தல் முதலிய மரபுத்தொடர்கள் அரசியல்வாதிகள் மிகுதியாக கையாள்பவை. பெரியார் தொடங்கித் திராவிட இயக்கத் தலைவர்கள் பலரது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் ஏராளமான பழமொழிகள் இடம்பெறும். மரபுத்தொடர்கள், பழமொழிகள் ஆகியவை அன்றாட வழக்கில் இருப்பவை என்பதால் மக்களிடம் எளிதில் செய்தி சென்று சேர உதவும். அதைத் திட்டமிட்டோ இயல்பாகவோ அரசியலர்கள் பயன்படுத்துகின்றனர். அரசியலர்களில் கிராமப் பின்புலம் உள்ளோரிடம் இந்தக் கூறு மிகுந்திருக்கிறது.
சரி, செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசும்போது “தமிழ்நாட்டில் இட்லி தோசை சுட வரவில்லை. தலைவராக வந்துள்ளேன்” என்று கூறினார். இட்லி சுட்டு விற்றல் பற்றிய வழக்கு தமிழில் உள்ளதுதான். கணவனை இழந்து ஆதரவற்று, பிழைக்க வழியற்று நிற்கும் கைம்பெண்களின் எதிர்காலம் பற்றிப் பேசும்போது ‘ஒரு இட்லிப்பான வாங்கிக் குடுத்துட்டாப் பொழச்சுக்குவா’ என்று சொல்லும் வழக்கு உண்டு.
என்ன சொல்கிறது தமிழ் இலக்கியம்?
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்நாட்டில் கைம்பெண்கள் எண்ணிக்கை மிகுந்திருந்தது. இளவயதுத் திருமணமும் மறுமணத்துக்கு ஆதிக்க சாதிகளில் அனுமதி இல்லை என்பதாலும் கைம்பெண்களின் எண்ணிக்கை கூடுதலுக்குக் காரணங்கள். தொடக்கக் கால நாவல்களில் கைம்பெண்களின் நிலையும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ளலாமா என்னும் விவாதமும் விரிவாக இடம்பெற்றிருந்தன. கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைத்த எழுத்துலகச் சீர்திருத்தவாதிகள் அ.மாதவையாவும் (முத்துமீனாட்சி) வ.ரா.வும் (சுந்தரி) என்று சொல்லலாம்.
இளவயதிலேயே கணவனை இழந்து கைம்பெண்ணானவர்கள் தம் வாழ்வை நடத்துவதற்கு என்ன செய்தார்கள்? தம் உடன்பிறந்தோர் வீடுகளில் ஊதியம் இல்லாத வேலைக்காரர்களாக வாழ்ந்தனர். அத்தகைய வாய்ப்பும் அற்றோர், குழந்தைகளைக் கொண்டிருந்தோர், உற்றார் உறவினரால் கைவிடப்பட்டோர் ஆகிய கைம்பெண்கள் தம் வாழ்வை நடத்துவதற்கு இட்லி சுட்டு விற்கும் தொழிலைச் செய்தனர்.
என் இளம்வயதில் எங்கள் பகுதிக் கிராமங்களில் இட்லி சுட்டு விற்கும் வேலையைச் செய்துகொண்டிருந்த பல பெண்களைக் கண்டிருக்கிறேன். காலையில் இட்லி சுட்டு, அதற்குப் பொருத்தமான குழம்பும் தேங்காய்த் துவையலும் செய்து பெரிய கூடை ஒன்றில் அவற்றை வைத்து எடுத்துச் சென்று வீடு வீடாக, காடு காடாக விற்பனை செய்தவர்கள் கைம்பெண்கள்.
மதுவிலக்கு இல்லாத காலத்தில் கள் இறக்கும் காடுகளுக்கு இட்லிக் கூடையோடு சென்று குடிகாரர்களுக்கு விநியோகம் செய்வார்கள். கள்குடிக்கு ஏற்ற வகையில் நல்ல காரமான குழம்பு வகைகள் இருக்கும். தம் வீட்டிலேயே இட்லியும் தோசையும் சுட்டுத் திண்ணையை உட்கார்ந்து சாப்பிடும் இடமாக்கி வருமானம் ஈட்டி வாழ்ந்த கைம்பெண்கள் பலர். அதன் அடிப்படையில்தான் கைம்பெண்களின் வாழ்வைக் குறிக்கும்போது ‘ஒரு இட்லிபான வாங்கிக் குடுத்தாப் பொழச்சுக்குவா’ என்று சொல்லும் வழக்கு கிராமங்களில் புழங்கியது.
உணவு விற்பனையும் சாதியமும்
உணவு விற்பனையை இழிவாகக் கருதிய சமூகம் நம்முடையது. அன்னதானத்தையே போற்றியது. உணவைக் காசுக்கு விற்பதும் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடுவதும் இழிவு என்னும் பொதுக்கருத்து நிலவியது. இன்னின்ன சாதியார் இன்னின்ன சாதியார் வீடுகளில் மட்டுமே உண்ணலாம் என்னும் கெடுபிடி காரணமாகவும் உணவைக் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடுவது இழிவு என்றாகியிருக்கலாம். விற்பது இழிவு என்பதற்கும் சாதிதான் காரணம். எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் வந்து சாப்பிடலாம் என்றால் தம்மைவிடக் கீழாகக் கருதப்படும் சாதியைச் சேர்ந்தவருக்குப் பரிமாறிச் சேவை செய்வது இழிவு எண்ணம்!
சில உணவகங்களில் சாப்பிட்டவரே இலையை எடுத்துப் போட வேண்டும் என்னும் வழக்கம் இப்போதும் சில உணவகங்களில் இருப்பது பற்றிச் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் விவாதம் நடந்தது. தமக்குச் சமமான சாதியார், தமக்கு மேலான சாதியார் சாப்பிட்ட இலையை எடுப்பது ‘உபசரிப்பு.’ தமக்குக் கீழான சாதியாருக்குச் சாப்பாடு போடுவது வழக்கமில்லை. போட்டாலும் அது ‘தானம்.’ அவர்கள் சாப்பிட்ட இலையை அவர்களேதான் எடுக்க வேண்டும். அதுவே இன்னும் சில உணவகங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
சாதியக் காரணங்களாலேயே உணவு விற்பனை இழிவு என்று கருதப்பட்டது. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்வி கற்றலுக்காக புலம்பெயர்தல், அரசு அலுவல் பணியால் புலம்பெயதல் ஆகியவை நிகழ்ந்தன. அப்போது உணவு விற்பனைக்குத் தேவை ஏற்பட்டது. அதனால் வீடுகளிலேயே செய்து விற்கும் வழக்கம் வந்தது.
யார் அதில் ஈடுபடுவது? குடும்பப் பெண்கள் எந்தவிதத்திலும் சம்பாதிக்கக் கூடாது; வெளியில் வரக் கூடாது. கைம்பெண்கள் தம் பிழைப்புக்காக அத்தொழிலில் ஈடுபடச் சமூகவிதி இளகியது. அப்போதும் உணவை விலைக்கு வாங்கிச் சாப்பிடுவதை இழிவாகவே கருதினர். உணவகத்தில் சென்று சாப்பிடுவோரைக் ‘குருமா கொழம்பு நக்கி’ என்று வசை பாடினர்.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஓரளவு இருந்தாலும் 1990களுக்குப் பிறகே உணவுத்தொழில் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. இப்போது வெளியில் சாப்பிடுவது இயல்பாகிக்கொண்டுவருகிறது. எனினும் ‘வீட்டுமுறைச் சமையல்’, ‘வீட்டுச் சாப்பாடு’ என்று விளம்பரப்படுத்தும் வழக்கம் இன்றும் உள்ளது. வீட்டுச் சாப்பாடு, ஹோட்டல் சாப்பாடு ஆகியவை சுவை சார்ந்து எதிரிணைகளாக இன்று கருதப்படுகின்றன. ஆனால், அவ்வழக்கு சாதி சார்ந்த பார்வையிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும். வீட்டுச் சாப்பாடுதான் சிறந்தது; உணவகச் சாப்பாடு இழிந்தது என்னும் கருத்தே பல்லாண்டுகளாக நிலவிவந்தது. உணவகத்துக்குச் சென்று ரகசியமாகச் சாப்பிட்டுவரும் வழக்கமும் இருந்தது. ஆகவே, உணவு விற்பனையும் இழிவான தொழிலாகவே பார்க்கப்பட்டது.
இட்லி விற்பது இழிவானதா?
உணவுத் தொழிலைத் தொடங்கியவர்கள், வளர்த்தவர்கள் என்று கைம்பெண்களையே சொல்லலாம். நகரங்களில் இட்லி, தோசை மட்டுமல்லாமல் சாப்பாடும் செய்து கொடுத்திருக்கிறார்கள். கிராமங்களில் வெகுகாலம் இட்லி மட்டுமே விற்பனைக்கு உரியதாக இருந்தது. பண்டிகை காலங்களில் மட்டுமே வீடுகளில் இட்லி, தோசை சுடுவார்கள். மற்ற நாட்களில் மூன்று வேளையும் சோறுதான். ஆகவே, இட்லி விற்பனைக்கு உரிய பொருளாயிற்று.
கள் குடிப்போரும் சீக்காளிகளும் இட்லி வாங்கிச் சாப்பிட்டனர். குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு இட்லி வாங்கினர். சிறுவர்கள் ஆசைப்படும்போது வாங்கித் தரும் பண்டமாக இட்லி இருந்தது. இவ்வாறு கைம்பெண்கள் சமைத்துக் கொடுத்ததைச் சாப்பிட்டாலும் அத்தொழில் அவர்களுக்கே உரிய இழிதொழில் என்றே சமூகம் கருதிவந்தது. ‘விதியின் காரணமாகவே கைம்பெண்கள் ஆகிறார்கள்’ என்றும் ‘அவர்களைக் கண்ணால் கண்டாலே கெட்ட சகுனம்’ என்றும் கருதிய சமூகம் அவர்கள் செய்த தொழிலை இழிவாகக் கருதியதில் வியப்பில்லை.
கைம்பெண்கள் உணவுத்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பாக நவீனத் தமிழ் இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. சட்டென எனக்கு நினைவுவரும் இரு சான்றுகளைத் தருகிறேன். உ.வே.சாமிநாதையர் தம் ‘என் சரித்திரம்’ நூலில் ஓரிடத்தில் கைம்பெண் உணவகம் நடத்திய தகவலைப் பதிவுசெய்துள்ளார். மாயூரத்துக்குச் சென்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் 1871ஆம் ஆண்டு மாணாக்கராகச் சேர்ந்தார். மாயூரத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை. உறவினர் வீடுகளில் தொடர்ந்து உண்பது கடினம். மாயூரத்தை அப்போது ‘நகரம்’ என்றே உ.வே.சா. குறிப்பிடுகிறார். அவ்வூரில் கைம்பெண் ஒருவர் சமைத்துத் தரும் உணவை மாதக் கட்டணம் செலுத்திச் சாப்பிடும் ஏற்பாட்டை அவர் தந்தை செய்து கொடுத்தார். அப்பெண்ணைப் பற்றி உ.வே.சா. இவ்வாறு எழுதுகிறார்:
“அக்காலத்தில் மகாதானத் தெருவில் ஒரு வீட்டில் அறுபது பிராயம் சென்ற விதவை ஒருத்தி அவ்வூர் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கும் பள்ளிக்கூட மாணவர் சிலருக்கும் சமைத்துப் போட்டு அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஜீவனம் செய்துவந்தாள். பள்ளிக்கூட மாணவர்களுக்குக் காலையில் பழையதும் பகலிலும் இரவிலும் ஆரோக்கியமான உணவும் அளிக்கப்படும். இதற்காக அந்த அம்மாள் மாதம் ஐந்து ரூபாய்தான் பெற்று வந்தாள்” (ப.187).
இதில் “அறுபது பிராயம் சென்ற விதவை” என்று குறிப்பிடுகிறார். உ.வே.சாவுக்கு உணவு வழங்கிய காலத்தில் அப்பெண்ணுக்கு அறுபது வயது. அப்பெண் எத்தனை வயதில் கைம்பெண்ணானாள், எத்தனை ஆண்டுகளாக உணவு சமைத்து கொடுத்தாள் என்பன தெரியவில்லை. ஆனால், உத்தியோகஸ்தர்களுக்கும் மாணவர்களும் உணவு சமைத்து விற்பனை செய்தவர் கைம்பெண் என்பது தெரிகிறது.
தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதிய நாவல் ‘அறுவடை.’ அதன் கதைத்தலைவி தேவானையின் அத்தையாகிய அங்கம்மாள் கைம்பெண். தாயற்ற பெண்ணான தேவானையை வளர்த்தவர் அங்கம்மாள். அவர் செய்த தொழில் இட்லி சுட்டு விற்பனை செய்தல்.
இட்லிக் கூடையைத் தலைமேல் வைத்துக்கொண்டு மக்கள் குடியிருக்கும் வளவுகளுக்குச் சென்று விற்றுவருவதே அவர் தொழில். அந்த வருமானத்தைக்கொண்டே எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் தம் தம்பியின் மகளை வளர்க்கிறார். இட்லிக் கூடையைத் தலைமேல் வைத்துக்கொண்டு அங்கம்மாள் கிளம்பும் காட்சியும் அவர் குடிவளவு என்னும் ஆதிக்க சாதியினர் குடியிருப்புக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர் குடியிருப்புக்கும் சென்று இட்லி விற்கும் செய்தியும் நாவலில் அங்கங்கே சொல்லப்படுகிறது. இந்திய விடுதலையை ஒட்டிய ஆண்டுகளில் நடக்கும் கதை இது.
‘ஒரு இட்லிப்பான இருந்தா அவ பொழப்பு ஓடிரும்’ என்று கைம்பெண் வாழ்வைப் பற்றி மக்கள் வழக்கு உருவான பின்னணி இது. இப்போது ‘இட்லி தோசை சுட வரவில்லை’ என நவீன வழக்காகி உள்ளது.
பயன்பட்ட நூல்கள்:
- உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பதினொன்றாம் பதிப்பு.
- ஆர்.ஷண்முகசுந்தரம், அறுவடை, 2019, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம், மறுபதிப்பு.
தொடர்புடைய கட்டுரைகள்
தனிப்பாடல் எனும் தூண்டில் புழு
சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?
ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.
4
2
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
பெருமாள்முருகன் 2 years ago
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid032WNY62Y67o5jrvaosTQouWPTXUQvkgQzXPrNbuq7fqme6a3wx7ov7HLMEMhm64VAl&id=100001302710573&mibextid=Nif5oz கட்டுரைப் பொருளை உறுதிப்படுத்தும் நல்ல சான்று.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
P.Saravanan 2 years ago
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழக்கம் போல, வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி கவலைப்படாதவராகப் பேசிய, இட்டிலி சுடுதல் பற்றிய பேச்சு குறித்து பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை முக்கியமான சில விஷயங்களைப் பேசுகிறது. இட்டிலி சுட்டு விற்பது அப்படி என்ன இழிதொழிலா அல்லது வேலைவெட்டி இல்லாதவன் செய்யும் தொழிலா என்பதற்கு அண்ணாமலை பதில் சொல்லத்தான் வேண்டும். ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரமாக விளங்கிய, ஏன் இன்றைக்கும் அவ்வாறாக உள்ள தொழிலை கேவலப்படுத்தவது பொறுப்பில் உள்ள ஒருவருக்கு அழகல்ல! மேலும் உணவுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பை, பெருமாள் முருகன் அழகாக கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். எங்கும் சாதி எதிலும் சாதி என்று உள்ள இத்தேசத்தில், சாதி வெறிக்கு, உணவு விஷயத்தில் விலக்களிப்பார்கள் என்பதை கற்பனையில் கூட எதிர்பார்க்க முடியாது. சொல்லப்போனால் சாதி, மற்ற வாழ்வியல் விஷயங்களைவிட, உணவு பற்றியதில் கூடுதல் இறுக்கம் கொண்டது.. எங்கள் ஊரில் நடந்த, முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த இடைநிலை சாதியினர் கூட ( பிராமணர்களைப்பற்றி சொல்ல வேண்டியதுல்லை ) அங்கு பரிமாறப்பட்ட அன்னதாத்தில் கலந்து கொள்ளவில்லை. உணவு இங்கு ஒரு சாதியை வெளிப்படுத்தும் அடையாளமாகவே உள்ளது. இவ்வுண்மையை, தனது கட்டுரையில் சிறப்பாக வெளிப்படுத்திய கட்டுரையாளரை மனதாரப் பாராட்டுகிறேன். நவகை ப.சரவணன், கரூர்
Reply 6 0
Login / Create an account to add a comment / reply.