கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?

பெருமாள்முருகன்
18 Mar 2023, 5:00 am
4

ந்தி அல்லது அவதி மொழியில் துளசிதாசர் இயற்றிய  ‘ராமசரித மானஸ்’ காவியத்தில் சில சாதிகளையும் பெண்களையும் இழிவுபடுத்தியிருப்பதாக ஒரு பிரச்சினையைச் சிலர் எழுப்பினர். பிஹார்   கல்வி அமைச்சர் சந்திரசேகர், பல்கலைக்கழகம் ஒன்றில் பேசும்போது ராமசரித மானஸிலிருந்து ‘கீழ்ச்சாதி மக்கள் கல்வி கற்றால் பாம்பு குடித்த பாலைப் போல விஷமாகிவிடுவார்கள்’ என்னும் பகுதியை வாசித்துக் காட்டினார். 

இதைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா என்பவரும் இப்படியான பிரச்சினையைக் கிளப்பினார். பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரை துளசிதாசரின்  ‘ராமசரித மானஸ்’ பல வகையில் இழிவுபடுத்துகிறது எனக் கூறி அத்தகைய இடங்களைத் திருத்த வேண்டும் எனக் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைத்தனர். சில இடங்களில் அத்தகைய பக்கங்களை எரிக்கும் போராட்டமும் நடந்திருக்கிறது. 

துளசிதாசர் ராமாயணத்தைப் புனித நூல் என்று கூறும் இன்னொரு பிரிவினர், அந்நூல் மீது எத்தகைய கேள்வியும் எழுப்பக் கூடாது என்றும் எரிப்புப் போராட்டம் செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் குரல் எழுப்பினர். அந்நூல் மீது விமர்சனம் வைப்போருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றே ஒருவர் கூறினார். போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். 

இருதரப்பு வாதங்கள், போராட்டங்கள் வட மாநிலங்களில் சிலவற்றில் இப்போது சாதி அரசியலாக மாற்றம் பெற்றிருக்கிறது. இப்போது இதிகாசம், காப்பியம், இலக்கியம் என்னும் வரையறைகளைக் கடந்து ராமாயணம் அரசியல் நூலாகிவிட்டது. வெகுமக்களைத் தூண்டுவதற்கும் தம் பக்கம் ஈர்ப்பதற்கும் ராமாயணம் பயன்படுகிறது. 1990களில் தொலைக்காட்சித் தொடராக ராமாயணக் கதை வர ஆரம்பித்தபோதிருந்தே இத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டது. பாபர் மசூதி இடிப்பு நிகழ்வுக்குப் பிறகு ராமாயணத்தின் மீதான புனிதம் மேலும் கவிந்துவிட்டது. படிப்படியாக அப்புனிதம் இறுகி இப்போது அது இலக்கிய உலகத்திலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக வெளியேறிவிட்டது.

ராமாயணக் கதை மிகவும் பழமையானது. எல்லா இந்திய மொழிகளிலும் ஏதோ ஒருவகையில் அது எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு எழுதப்பட்ட காலகட்டம் சார்ந்த மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளும் கருத்துக்களும் இடம்பெற்றிருப்பதைத் தவிர்க்க முடியாது. காலத்தைக் கடந்து வரும்போது மதிப்பீடுகள் மாறுவதால் அவற்றின் மீது விமர்சனங்களை வைப்பது என்பது இயல்பானது. 

தமிழில் கம்பராமாயணத்தின் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரியாரின் திராவிடர் கழகம் ஒருகாலத்தில் ‘கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்துவோம்’ என்றே பெரும் போராட்டம் நடத்தியது. ராமாயணக் கதை ஆரியர் – திராவிடர் போராட்டம் என்பதாகத் திராவிடர் கழகத்தின் வாசிப்பு அமைந்தது. திராவிடர்களை அசுரர்களாக்கி அவர்களைக் வெல்லும் ஆரியரின் மேன்மையை இந்நூல் பேசுகிறது என்று கருத்துரைத்தனர். ஆகவே திராவிடர்களை இழிவுபடுத்தும் இந்நூலைத் தீயிட்டுக் கொளுத்துவோம் எனப் போராட்டம் நடத்தினர்.  

இப்பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய பெரியாருக்கும் சரி, அண்ணாவுக்கும் சரி கம்பராமாயணத்தை முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்பது தெரியும். அதன் மீதான விமர்சனத்தைத் தம் கருத்துப் பரவலுக்குப் பயன்படுத்திக்கொண்டனர். அறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ எழுதினார். கம்பாராமாயணத்தில் உள்ள சில பாடல்கள் ஆபாசமானவை என்பதை எடுத்துக்காட்டிய நூல் அது. ராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் ஏன் எரிக்க வேண்டும் என அண்ணா எடுத்து வைத்த கருத்துக்கள் தர்க்கத்திற்குச் சிறந்த சான்றுகள். 

சில ஊர்களில் இது தொடர்பாக ‘விவாதக் கூட்டங்கள்’ ஏற்பாடு செய்யப்பட்டன. அண்ணாவோடு விவாதிக்க அந்நாளைய தமிழறிஞர்களான ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் அழைக்கப்பட்டனர். விவாத மரபு கொண்ட தமிழ்நாட்டில் இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் நடந்த விவாதத்தின் சுருக்கம் ‘தீ பரவட்டும்’ என்னும் நூலாக வெளியாகியுள்ளது. 

ராமாயணம் எவ்வாறு ஆரிய மேன்மையை எடுத்துச் சொல்லும் நூலாக இருக்கிறது என்பதே அண்ணாவின் வாத மையம். அதற்கு எதிராகத் தமிழறிஞர்கள் வைத்த கருத்து ‘கம்பராமாயணம் கவிதையின் உச்சத்தைக் கொண்டிருக்கக் கூடிய நூல்; அது இலக்கியம்’ என்பதுதான்!

கம்பரின் கவித்திறத்தை அண்ணா ஒருபோதும் மறுக்கவில்லை. கம்பர் பெருங்கவிஞர் என்பதையும் கம்பராமாயணம் மாபெரும் இலக்கியம் என்பதையும் ஏற்றுக்கொண்டே பேசுகிறார். ‘பெருங்கவிஞரான கம்பரின் ஆற்றல் திராவிட மேன்மைக்குப் பயன்படாமல் ஆரிய மேன்மைக்குப் பயன்பட்டுள்ளதே’ என்னும் தொனியிலேயே அவர் தம் கருத்துக்களை முன்வைத்துள்ளார். 1940களில் ஓர் இயக்கமாக முன்னெடுத்து நடத்திய அவ்விவாதங்கள் இப்போதும் வாசிப்புச்சுவை கொண்டுள்ளன. 

அரசியல்ரீதியாகத் திராவிட இயக்கம் முன்வைத்த கருத்துக்களை ‘கம்பராமாயணம் மாபெரும் இலக்கியம்; கம்பர் கவிச்சக்கரவர்த்தி’ என்பவற்றை முன்னிறுத்தியே அன்றைய தமிழறிஞர் உலகம்  எதிர்கொண்டது.  திராவிட இயக்கப் பிரச்சாரத்தின் விளைவாகக் கம்பராமாயண வாசிப்பு மிகுந்தது. ஊர்தோறும்  ‘கம்பன் கழகம்’ உருவானது. கம்பராமாயணத்திற்குப் பலவிதமான பதிப்புகள் வெளியாயின. கம்பராமாயணத்தின் இலக்கியச் சிறப்புகளைப் பலர் எடுத்துச் சொற்பொழிவுகள் செய்தனர். கம்பராமாயணம் குறித்து நய நூல்கள் நூற்றுக்கணக்கில் எழுதப்பட்டன. 

பெரியார் போன்றவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வெகுஜனங்களிடம் கருத்துப் பரப்பலுக்கான உத்தியாகத் தம் போராட்டத்தைச் செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். 

இப்போதும் திராவிட இயக்கம் ராமாயணத்தின் பல கூறுகளை எடுத்துப் பேசத் தவறுவதில்லை. வேதம் பயின்றதற்காகக் கொலையுண்ட சம்புகன் கதை வான்மீகி ராமாயணத்தில் உள்ளதை விரிவாக எடுத்துப் பேசுகின்றனர். கம்பராமாயணத்தில் சனாதனக் கருத்துக்கள் எப்படியெல்லாம் பேசப்பட்டிருக்கின்றன என்பதையும் விளக்குகின்றனர். வான்மீகி ராமாயணத்தில் மனிதனாகக் காட்டிய ராமனைக் கம்பனே கடவுளாக்கினான் என்று விவரிக்கின்றனர். 

பெரியாரும் திராவிட இயக்கத்தவரும்  ராமாயணத்தை விமர்சித்து நூல்கள் எழுதினர். இவ்வாறு அரசியல் சார்ந்து மட்டுமல்லாமல், இலக்கியம் சார்ந்தும் ராமாயணம் பலவிதமான நவீன வாசிப்புக்கு உள்ளாயிற்று. ராமாயணம் சொல்லும் அகலிகை கதை நவீன இலக்கியவாதிகளுக்குப் பெருவிருப்பாக அமைந்தது. தமிழ்ச் சிறுகதை முன்னோடியான புதுமைப்பித்தன் எழுதிய ‘சாப விமோசனம்’ என்பது மிகவும் பிரபலமான சிறுகதை. சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யும்படி ராமன் சொன்னான் என்பதைக் கேட்ட அகலிகை மீண்டும் கல்லானாள் என்று அச்சிறுகதை முடிகிறது. 

அகலிகை கதையை மட்டும் எடுத்துக்கொண்டு நாடகமாக, குறுங்காவியமாக எழுதியவர்கள் கு.ப.ராஜகோபாலன், ச.து.சு.யோகியார், கோவை ஞானி உள்ளிட்ட பலர். அரசியல் பார்வையை இலக்கியப் பார்வை எதிர்கொண்டது தமிழ்நாட்டு வரலாறு. இரு பார்வைகளுமே அந்தந்தத் தளத்தில் இன்றுவரை நிலவி வருகின்றன. 

வட மாநிலங்களில் இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. இது தென்னகத்தில் பிரதிபலிக்கவும் காலம் எடுக்காது என்ற அச்சம் ஏற்படுகிறது. பழைய இலக்கியத்தில் உள்ள கருத்துகளை இப்போது திருத்த முடியாது. அது எவ்வாறு பழமைக் கருத்துகளை உட்பொதிந்து வைத்திருக்கிறது, சனாதனத்திற்கு ஆதரவாக இருக்கிறது என விமர்சனம் செய்யலாம். கட்டுரைகள் எழுதலாம். கடுமையாகப் பேசலாம். ஆனால் திருத்த முடியுமா? அப்படியானால் யார் திருத்துவது? அதிலிருக்கும் பகுதிகளை நீக்க முடியுமா? 

தமக்கு உவப்பில்லாத பகுதியை ஒருவர் நீக்கிவிட்டுப் பதிப்பித்து வெளியிடலாம். இன்னொருவர் அக்கருத்துக்களையும் சேர்த்துப் பதிப்பிக்கலாம். அப்படியெல்லாம் ஏற்கனவே நடந்துதான் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தைப் பதிப்பித்த சிலர் தமக்கு வேண்டாதவற்றை நீக்கிப் பதிப்பித்தது உண்டு. அதுவெல்லாம் பதிப்பரசியல் ஆகும். 

இன்னொரு பிரிவினர் ராமாயணம் புனித நூல் என்றும் அதன் மீது எந்த விமர்சனமும் வைக்கக் கூடாது என்றும் மதம், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தி வன்மையாக வெளிப்படுகின்றனர்.

ராமாயணம் ஒவ்வொரு மொழியிலும் இலக்கியமாகத்தான் இத்தனை காலம் கருதப்பட்டு வந்துள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ளோர் அந்நோக்கில் வாசித்ததும் உண்டு. வீட்டில் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றால் சுந்தர காண்டத்தைத் தினமும் வாசிக்க வேண்டும் என்னும் நம்பிக்கை எல்லாம் உண்டு. நம்பிக்கைகள் ஒருபுறம்; இலக்கியப் பார்வை மறுபுறம். இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில்லை. இப்போது அப்படியல்ல. நம்பிக்கை என்னும் இடத்தை மதவாத அரசியல் கைப்பற்றிக் கொண்டது. ஆகவே எந்த மொழியாக இருந்தாலும் சரி, ராமாயணம் இலக்கிய அந்தஸ்தை இழந்துவிட்டது என்றே நினைக்கிறேன். 

இந்நிலை இலக்கிய மாணவனாக, எழுத்தாளனாக எனக்கு மிகப் பெரும் வருத்தத்தைத் தருகிறது. ஒரு நூல் எத்தகைய அரசியல் காரணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த போதும் அதன் இலக்கிய மதிப்பே அதைக் காலம் கடந்து எடுத்துச் செல்லும் மையக் காரணியாக அமையும். இன்று ராமாயணம் தன் இலக்கிய மதிப்பை இழந்துவிட்டது. முழுக்க முழுக்க மதவாத அரசியல் சார்ந்தே வாசிக்கப்படுகிறது. 

துளசிதாசர் ராமாயணத்தின் சில இடங்களில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் இழிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அப்பகுதிகளை எரிக்கவும் ஜனநாயகம் அனுமதிக்கிறது. பெரியாரும் அம்பேத்காரும் இத்தகைய எரிப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போதும் அரசியல் கட்சிகள் சில அறிக்கைகளை, சட்டங்களை எரிக்கும் போராட்டத்தை நடத்துகின்றனர்.  விமர்சனமும் எரிப்பும் எதிர்ப்பின் அடையாளங்கள். அவற்றைச் செய்வற்கான உரிமை இருக்கிறது. 

துளசிதாசர் ராமாயணத்தின் மீதான விமர்சனத்தை எதிர்ப்போர் வைக்கும் ஒரே வாதம் ‘அது புனித நூல்; அதன் மீது எந்த விமர்சனமும் வைக்கக் கூடாது’ என்பதுதான். இது எப்படிச் சரியான எதிர்கொள்ளல் ஆகும்?  வன்முறையைத் தூண்டும் இத்தகைய எதிர்கொள்ளல் மிகவும் ஆபத்தானது. ஒரு இலக்கியப் பிரதியின் மேல் அரசியல் சார்ந்தோ சமூகவியல் சார்ந்தோ எவ்வகையிலும் விமர்சனம் வைக்கலாம். எல்லாவற்றுக்கும் அது இடம் கொடுக்கும். விமர்சன அடிப்படையில் அந்நூலை ஒருவர் புறக்கணிக்கலாம்; தூக்கி எறியலாம். விமர்சனத்தை எதிர்ப்போர் இலக்கியப் பார்வையை முன்வைத்தால் அது ஆரோக்கியமான விவாதமாக அமையும். முழுமையாக மதவாத அரசியல் பிரதியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் ராமாயணத்தை இனி இலக்கியப் பிரதியாக வாசிப்பது சாத்தியமா என்னும் கேள்வியே இப்போது எனக்குள் எழுந்திருக்கிறது!

மலையாள மொழியின் எழுத்துகளை வரையறைப்படுத்தியவர்; மொழிநடையைச் செம்மையாக்கியவர்; ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மலையாளத்தில் இயற்றிய இலக்கிய முன்னோடி எனப் பல சிறப்புகளைப் பெற்றவரான  ‘துஞ்சத்து ராமானுசன் எழுத்தச்சனின்’ பெயரால் அவர் பிறந்த ஊராகிய கேரளத்தின் மலப்புரம் மாவட்டம் திரூர், துஞ்சன் பறம்பில் ஆண்டுதோறும் இலக்கிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 16-03-23 அன்று முதல் 19-03-23 வரை நான்கு நாட்கள் ‘துஞ்சன் திருவிழா’ வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேராசிரியர் பெருமாள் முருகன் அந்நிகழ்வைத் தொடங்கிவைத்து ஆற்றிய உரையின் எழுத்தாக்கம். 

 

பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


6

3

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   9 months ago

நாகரீக வளர்ச்சியின் காரணமாக ஒரு காலத்தில் புனிதமாக கருதப்பட்டவை அனைத்தும் எப்பொழுதும் அதே மதிப்பீட்டுடன் நீடிக்காது. உதாரணமாக அந்தக்கால போர்களில் ஆநிரை கவர்தல் என்று ஒன்று இருந்தது. இப்போது அதை செய்தால் இன்றைய ஏளனமாக சிரிக்கும்.

Reply 0 0

Ganeshram Palanisamy   9 months ago

..இன்றைய சமூகம்...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

jaimadhan amalanath   9 months ago

ஒரு இலக்கிய படைப்பின் உயிர்ப்பும் இத்தகைய காலத்திற்கேற்ற விளக்கம் பெறுவதில் இருக்கிறது என்பது என் எண்ணம். இவை இல்லையெனில் இப்படைப்புகள் இவ்வளவு காலம் நினைவில் நின்றிருக்காது. நன்றி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

LAKSHMAN T   9 months ago

ஒரு நூலுக்கு உருவாக்கப்படும் புதுமை, கருத்து, செயல்திட்டம் போன்றவையே அந்த நூலை குறித்த வளர்ச்சி என்று கருதலாம். மதவாதிகள் பார்வையில் மதவாத பிரதி. இலக்கியவாதிகள் பார்வையிலும் இலக்கியவாதிக்கும் இராமாயணம் இலக்கியபிரதியே... நன்றி

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழ் வரலாறுநியாயமற்ற வரிக் கொள்கைஎருமைப் பொங்கல்எண்கள் பொய் சொல்லாதுமண்டல் அரசியல்நம்பிக்கையில்லாத் தீர்மானம்சிவசேனைஆண்டிகள்எஸ்.ராஜா சேதுதுரை கட்டுரைதேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்தந்தை மனநிலைகே.சந்திரசகேர ராவ்லாலு சமஸ்இனக் கலவரம்சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்தை உண்டாக்கும்ஆவின்: பாதுகாக்கப்பட வேண்டிய பால் கூட்டுறவு நிறுவனநாகரிகம்முன்னெடுப்புவளையக் கூடாதது செங்கோல்! அவரவர் முன்னுரிமை வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!கனல் கண்ணன்தன்வரலாறுசமஸ் நயன்தாரா குஹாஈஷா ஆஷ்ரம்வருவாய் ஏய்ப்புசித்தாந்த முரண்முரசொலி செல்வம்தகவல் பெட்டகம்சர்க்கரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!