கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 7 நிமிட வாசிப்பு
தனிப்பாடல் எனும் தூண்டில் புழு
தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் இன்று கூடியுள்ளது. அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் படிப்பதற்கு வரும் விண்ணப்பங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தமிழைப் படிப்பதை இழிவு, கேவலம் என்றெல்லாம் கருதிய காலம் போய், இப்போது இவ்வளவு பேர் படிக்க விரும்புவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கணிசமான அளவில் தமிழ் இலக்கியத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. அலுவலக எழுத்தர் பணிநிலைக்கு நடைபெறும் ‘குழு-4’ தேர்வைப் பெரும்பாலும் முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வரும் மாணவர்கள் குறி வைப்பர். அவர்களின் பொருளாதாரம், குடும்பப் பின்னணி ஆகியவற்றுக்கு உட்பட்டு அத்தேர்வுக்குத் தயாரிப்பது எளிதாக இருக்கும்.
நடைமுறை பிரச்சினைகள்
கல்வி நிறுவனங்களில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் கணிசமாக உள்ளன. அரசு மட்டும் அல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளது. ஒருகாலத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்குப் பிற துறை ஆசிரியர்களைவிடவும் ஊதியம் குறைவாக இருந்தது. ஆங்கிலேயர் காலத்து நடைமுறை அது.
எல்லா ஆசிரியர்களும் சமம் என்பதற்காகப் பல போராட்டங்களை நடத்திச் சம ஊதியம் பெற்றது வரலாறு. அது மட்டுமல்ல, தமிழ் ஆசிரியர்களுக்கு நிர்வாகம் தெரியாது என்று கருதி தலைமையாசிரியர், முதல்வர் உள்ளிட்ட பதவி உயர்வுகளை வழங்காத காலமும் இருந்தது. அதற்கும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. எனினும் இன்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஊதிய வேறுபாடு உள்ளது. பிறரைவிடத் தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைவான ஊதியம்தான். எனினும் ஆசிரியப் பணி வாய்ப்பு கூடுதலாக உள்ளதை அனைவரும் அறிந்துள்ளனர். இப்போது பொறியியல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவிக்கும் திட்டத்தை அரசு அறிவித்து ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு தமிழைப் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு கூடுதலாகிக்கொண்டே வருவதால் படிக்க விரும்பும் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் கூடுகிறது. ‘உயிர்த்தமிழ்’ என்றெல்லாம் பேசினாலும் சோற்றுக்கு அடிப்படையான வேலைவாய்ப்பைக் கொடுக்கவில்லை என்றால், அந்தப் படிப்புக்குக் கல்விச் சந்தையில் மதிப்பு இருக்காது. இன்று ஏறத்தாழ எல்லாக் கலைக் கல்லூரிகளிலும் இளங்கலைத் தமிழ் இலக்கியப் படிப்பு இருக்கிறது. ஆனால், படிப்பு முடித்துப் பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவுதான்.
தமிழ்ப் பாடம் மிகவும் எளிது, கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டியதில்லை என்றெல்லாம் பொதுமனக் கருத்து ஒன்றுண்டு. அதை நம்பி இப்பாடத்தில் சேரும் மாணவர்கள் இதற்குள் இருக்கும் பல்வேறு பிரிவுகளைக் கண்டு ஈடுகொடுக்க இயலாமல் பின்தங்கிப் போகின்றனர். பட்டம் பெற்றுவிட்டாலும் துறைசார் அறிவு போதுமான அளவு இல்லாததால் வேலைவாய்ப்பு பெற இயலாமல் தவிக்கின்றனர்.
மூன்றாண்டுகள் இலக்கியம் பயின்றாலும் அத்துறையின் அடிப்படைகூடத் தெரியாமல் மாணவர்கள் இருப்பதற்கு முதன்மைக் காரணம் பாடத்திட்டம். அவர்களை ஈர்த்து உள்ளிழுத்துக்கொள்ளும் வகையிலான பாடத்திட்டம் இல்லை. முதலாண்டில் மாணவர் சேர்க்கை முடிந்து அவர்கள் முழுமையாக வகுப்புக்கு வந்து சேர்வதற்கே குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் ஆகின்றன. வந்து இரண்டே மாதத்தில் பருவத்தேர்வு தொடங்கிவிடுகிறது.
பாடத்திட்டம் பற்றிய புரிதல் ஏற்படுவதற்குள் தேர்வுக்குச் சென்றால் அவர்கள் நிலை என்னவாக இருக்கும்? முதற்பருவப் பாடத்திட்டம் அதற்கேற்ப எளிமையானதாகவும் அவர்கள் புரிதலுக்கு உட்பட்டதாகவும் இருப்பதில்லை. நடைமுறைப் பிரச்சினைகளை மனதில் கொண்டு பாடத்திட்டம் அமைக்க வேண்டும் என்னும் பார்வை பல்கலைக்கழகங்களுக்கு இல்லை.
கிளிப்பிள்ளை ஆசிரியர்கள்!
தமிழ் இலக்கியக் கல்வியை நாடிவரும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொள்வதில்லை என்பது இரண்டாம் காரணம். பாடத்தில் இருப்பதைக் கிளிப்பிள்ளை போல ஒப்பித்துச் செல்லும் ஆசிரியர்களே பெரும்பான்மையோர். இன்றைய கல்விமுறைக்கு உள்ளிருந்து வருபவர்களே ஆசிரியர்களாக இருப்பதால் போதுமான புலமையோ ஆர்வமோ அவர்களிடம் இல்லை.
கருத்தூன்றி மாணவர்கள் பயிலாமைக்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் ஒழுக்கக்கேடுதான் என எளிதாகச் சொல்லி ஒதுங்கிக்கொள்ளும் ‘ஒழுக்கப் பார்வை’ கொண்டவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். ஒழுக்கத்தைக் கட்டிக் காக்க இலக்கியத்தைக் கையிலெடுக்கலாம்; அன்பைப் பயன்படுத்தலாம். அவ்வழிகளை விட்டுவிட்டு அதிகாரத்தைக் கைக்கொள்கின்றனர்.
அதிகாரம் ஆசிரியர்களை மாணவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கும் ந.பாலமுருகன் ‘குழந்தைகளா, நான் பாஸாயிட்டேனா?’ என்று ஒருநூல் எழுதியுள்ளார். மரம் நடுதல், வாசிப்பு உள்ளிட்ட செயல்களில் தம் மாணவர்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை விவரிக்கும் அந்நூலில் அவர் இப்படிச் சொல்கிறார், ‘நான் சொன்னால் மாணவர்கள் கேட்கும் சூழலை வகுப்பறையிலும் ஒட்டுமொத்தப் பள்ளியிலும் உருவாக்க வேண்டும் என்றால் அது அன்பால் மட்டுமே முடியும் என்பதை முழுவதுமாக உணர்ந்து அதற்கேற்ப எனது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டேன்’ (ப.48). இவரைப் போல அன்பை முதன்மைப்படுத்தும் ஆசிரியர்கள் இன்று அரிதாகவே உள்ளனர்.
தமிழ் ஆசிரியராக ஏறத்தாழ முப்பதாண்டுகள் பணியாற்றியுள்ளேன். எனக்குச் சிறிதும் உவப்பில்லாத பாடத்திட்டத்தையே கற்பிக்க வேண்டியிருந்தது. எப்போதும் அதிகாரத்தை எதிர்கொண்டு சுதந்திரமற்ற சூழலிலேயே பணியாற்றிவந்தேன். கல்வி பற்றிய பார்வையில்லாத, கற்பிக்கும் ஆர்வமற்றவர்களுடன் காலம் கழிந்தது. இந்நிலையில் வகுப்பறையே எனக்கு உவப்பான இடம்; மாணவர்களே என் சுற்றம்.
இந்தச் சட்டகத்துக்கு உட்பட்டு மாணவர்களை இலக்கியத்திற்குள் ஈர்ப்பதற்கு எனக்கெனத் தனித் திட்டங்கள் வைத்தே இயங்கிவந்தேன். தமிழ் இலக்கியம் கற்பித்தல் முறையில் சில வழிமுறைகளை நானாக உருவாக்கிக்கொண்டேன். அதில் ஒன்று, பழந்தமிழ் இலக்கியத்தின் ஒரு பிரிவாகிய ‘தனிப்பாடல்’களை மாணவர்களுக்கு இயன்ற வகையில் எல்லாம் அறிமுகப்படுத்துவது.
பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ‘தனிப்பாடல் திரட்டு.’ பதினாறாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய பாடல்கள் ஓலைச்சுவடிகளில் சிதறிக் கிடந்தன. அவற்றைத் தொகுத்துத் ‘தனிப்பாடல் திரட்டு’ எனப் பெயரிட்டு 1862இல் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் அச்சில் பதிப்பித்தார். அதை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கியும் வகைப்படுத்தியும் பின்னர் பலர் பதிப்பித்துள்ளனர். இத்திரட்டில் உள்ள பல பாடல்கள் சுவையானவை.
ஒவ்வொரு பாடலுக்கும் பின்னணிக் கதை இருக்கும். கட்டுக்களை எல்லாம் தகர்த்தெறிந்து சுதந்திரமாகப் பாடியவை. மனதில் ஆழப் பதியும் சொற்றொடர்களைக் கொண்டவை. விதவிதமான நிறங்களும் மணங்களும் நிரம்பிய கதம்பம் போன்றவை. ஆசிரியர்கள் எப்போதும் தம் கைவசம் கொண்டிருக்க வேண்டிய கருவி நூல் அது.
உவேசா கொடுத்த அறிமுகம்
தனிப்பாடல் திரட்டு நூலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் உ.வே.சாமிநாதையர். ‘என் சரித்திரம்’ நூலில் தமக்கு முதன்முதலாகத் தனிப்பாடல் திரட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை விவரிக்கும்போது அதன் சிறப்புகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார். “அதைப் (தனிப்பாடல் திரட்டு) பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு பெரிய புதையல் கிடைத்துவிட்டதுபோல இருந்தது.
பல வகையான கருத்துகளும் பலவகையான சாதுரியங்களும் அமைந்த தனிப்பாடல்கள் என் மனத்தைக் கவர்ந்தன. காளமேகப் புலவர் சமயத்துக்கு ஏற்றபடி சாதுரியமாகப் பாடிய பாடல்களைப் படித்துப் படித்து உவப்பேன். அவர் பாடிய சிலேடைகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வேன். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் செய்யுள்களிலுள்ள பக்தியையும் எளிய நடையையும் கண்டு ஈடுபடுவேன்.
ஔவையார் முதலியவர்களுடைய பாடல்களின் போக்கிலே என் மனம் லயித்துவிடும். பலவகையான சுவைகள் உள்ள அப்பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரத்தினமாகவே தோன்றியது. ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அவற்றையே படித்துப் படித்துக் காலம் கழிப்பேன். பிறரிடம் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவேன். மிக விரைவில் பல பாடல்கள் மனனமாயின. எனது தமிழன்பு அப்பாடல்களால் எவ்வளவோ உயர்ந்துவிட்டது” (ப.155) என்கிறார் அவர்.
கற்போரின் தமிழன்பை உயர்த்தும் சுவைகளைக் கொண்ட தனிப்பாடல்களைத் தனி ஒரு தாளாகப் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்பது என் அவா. அதுவும் இளங்கலைப் படிப்புக்குள் நுழையும் மாணவர்களுக்கு ஐம்பது முதல் நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து முதல் பருவத்திலேயே பாடமாக வைக்க வேண்டும். அவை தமிழ் இலக்கியப் பரப்புக்குள் அவர்கள் ஆனந்தமாக நுழைவதற்குப் பெரிதும் உதவும்.
ஒவ்வொரு பாடலுக்கும் பின்னணிக் கதை சொல்லிக் கற்பிப்பது உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தையின் நாவில் தேன் தடவினால் சப்புக் கொட்டிக்கொண்டு இன்னும் இன்னும் என்று நம்மை நோக்கி வருமே, அதுபோல மாணவர்களை நாச் சொடக்குப் போட வைக்கும் இலக்கியத் தேன் தனிப்பாடல்கள். சிலேடை போன்ற இலக்கிய உத்திகளை விளக்கும் நோக்கில் சாரமற்ற ஒன்றிரண்டு பாடல்கள் எங்கேனும் பாடத்தில் இருக்கும். மற்றபடி பாடத்திட்டத்தில் தனிப்பாடல்களை விரிவாகக் கற்க வாய்ப்பே இல்லை.
சுயமாகக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். உ.வே.சாமிநாதையர் கொடுத்த அறிமுகத்தைக் கொண்டும் பின்னர் பலர் எழுதிய கட்டுரை நூல்களை வாசித்தும் சுயமாகத் தனிப்பாடல் பிரபஞ்சத்திற்குள் சஞ்சாரம் செய்தேன். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி முதலிய நவீன இலக்கிய ஆளுமைகளையும் வசீகரித்த பிரபஞ்சம் அது. அதற்குள்ளிருந்து சில துளிகளை எடுத்து மாணவர்களுக்குக் கொடுத்தேன்.
நானும் தனிப்பாடலும்
இலக்கணம் கற்பித்தாலும் சான்றுக்குத் தனிப்பாடலுக்குள் போய்விடுவேன். இலக்கண வகுப்பு என்னும் கசப்பை அது போக்கிவிடும். இலக்கணப் பாடம், குறிப்பாக யாப்பிலக்கணம் நடத்துவதில் எனக்குப் பெருவிருப்பம் என்று என் மாணவர்கள் கருதுவார்கள். உண்மையில் அப்பாடத்தை விரும்பிக் கற்பிக்கக் காரணம் சான்றாகத் தனிப்பாடல்கள் பலவற்றைச் சொல்லலாம் என்பதுதான். எந்த இலக்கியப் பகுதியை, என்ன பாடத்தை நடத்தும் போதும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் தனிப்பாடல்களைத் தூண்டில் புழுவாக்குவேன். வகுப்பு உற்சாகம் கொள்ளும். அப்படி எத்தனையோ பாடல்களை என் மாணவர்கள் சுவைத்துள்ளனர். இலக்கியத்திற்குள் ‘பருகுவன் அன்ன ஆர்வத்தோடு’ நுழைந்துள்ளனர்.
இன்று தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் சுவையுணர்ந்து கற்கத் தனிப்பாடல்களையே பரிந்துரைப்பேன். அது பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை என்றால் பரவாயில்லை. புத்தகச் சந்தையில் தனிப்பாடல் திரட்டின் வெவ்வேறு பதிப்புகள் கிடைக்கின்றன. புலவர் அ.மாணிக்கம் உரை எழுதிய ‘தனிப்பாடல் திரட்டு’ இரு பகுதிகளைப் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கா.சு.பிள்ளையின் உரையோடு நல்லறப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்னும் பல. இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கிச் சுயமாகவே சுவைத்துப் படிக்கலாம். சுயகற்றலுக்கு ஏற்றது தனிப்பாடல். அதன் வழியாக தமிழ் இலக்கியப் பாற்கடலில் வெகுதூரம் நீந்தலாம். இலக்கிய மாணவர்கள் கையில் இருக்க வேண்டிய வேதப் புத்தகம் ‘தனிப்பாடல் திரட்டு.’
ஒளவை சென்ற விருந்து…
ஔவையார் எழுதிய தனிப்பாடல் ஒன்றோடு இக்கட்டுரையை முடிக்கலாம்.
உடன் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் வீட்டுத் திருமணம். மாணவர்களை எல்லாம் அழைத்திருந்தார். எல்லோரும் போனோம். உணவுக்கூடத்தில் பெருங்கூட்டம். இடம்பிடிப்பது எளிதாகத் தெரியவில்லை. பந்தியில் அமர்ந்து உண்பவர்களுக்குப் பின்னால் போய் நின்று இடம்பிடிக்க முயன்றனர். மோர் சோறு சாப்பிடும் தருணத்தில் போய் நின்றால்கூடப் பரவாயில்லை.
இலையில் சோறு விழுந்திருக்கிறது. இன்னும் சாம்பார் ஊற்றவில்லை. அப்போதே போய்ப் பின்னால் நின்றுகொண்டனர். எப்போது இடத்தைக் காலி செய்வார் என்று பின்னால் நின்றுகொண்டு ஒருவர் பார்த்தபடியிருந்தால் எப்படிச் சாப்பிட முடியும்? விருந்துணவுக்குச் செல்கிறேன், எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றிருந்தேன்.
சரி, வெளியில் சாப்பிட்டுவிட்டுக் கமுக்கமாக இருந்துகொள்ளலாம் என்று நினைத்து வெளியே ஓடி வந்தேன். நான் நகர்வதைக் கவனித்த மாணவர் ஒருவர் ஓடி வந்து ‘ஐயா, வாங்க. எடம் இருக்குது’ என்று அழைத்தார். ‘அப்படியா?’ என்று அவருடன் சென்றேன். உண்போர் பின்னால் வரிசையாக நின்று என் மாணவர் கூட்டம் ஒரு பந்தியையே பிடித்து வைத்திருந்தது. அவர்கள் தயவில் ஓரிடத்தில் அமர்ந்து உண்டு திரும்பினேன்.
மறுநாள் வகுப்பில் இந்தத் திருமணப் பந்தி அனுபவத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. திருமணம் என்றால் உணவு பற்றித்தானே பேச்சு அமையும்? உணவைப் பற்றிய பேச்சுக்கு முடிவேது? எத்தனை அருமையான விருந்தாக இருப்பினும் ‘ரசத்திற்கு உப்பில்லை’, ‘மோரில் புளித்த வாசம்’ என்று ஏதாவது பேசுவோம். பேச்சுக்குப் பொருள் வேண்டும்; ஆற்றாமையைத் தணிக்கவும் வேண்டுமே. நேற்றைய பந்தியில் இடம் பிடிப்பது கஷ்டமாக இருந்தது ஒருபக்கம். பந்திக்கு முந்தாதவர்களுக்குப் பாயாசம் கிடைக்கவில்லை. சிலருக்கு அப்பளம் இல்லை.
சிலருக்குச் சாம்பார் தண்ணீராக ஓடிற்று. கடைசியாகச் சென்றவர்களுக்கு இலையே இல்லை. இப்படித் திருமணத்தில் உண்டது பற்றிச் சுவாரசியமாகப் பேச்சு போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் எல்லோரையும் பேச விட்டுவிட்டுப் பிறகு சொன்னேன், “முந்நூறு நானூறு வருசத்திக்கி முன்னாடி இப்படி ஒரு கல்யாண விருந்துக்கு ஔவையார் போயிருக்கிறார். அது பாண்டிய மன்னன் வீட்டுக் கல்யாணம்.” மாணவர்கள் தயாராகிவிட்டனர். பாண்டிய மன்னன் வீட்டுத் திருமணத்திற்கு ஔவையாருடன் சேர்ந்து நாங்களும் போனோம்.
ஆசிரியர் வீட்டுக் கல்யாணத்துலயே இத்தன கூட்டம்னா, அரசன் வீட்டுல கேக்கவா வேணும்? தமிழை வளர்த்தெடுத்த பாண்டியன் வீட்டுக் கல்யாணம். எங்கெங்கிருந்தோ சனம் வந்து குவிந்திருக்கிறது. ஏராளமான பதார்த்தங்களோடு தலைவாழை இலை போட்டுப் பந்தி நடக்கிறது. உண்டுவிட்டு வெளியேறும் சனம், இப்படி விருந்தை இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை என்று விதவிதமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டு செல்கிறது. ஔவையாரும் கூட்டத்திற்குள் முண்டியடித்துப் பந்தியில் உட்கார முயன்றார்.
அரசன் வீட்டு விருந்துச் சிறப்பைப் பாட வேண்டும். அதற்காகவாவது உண்ண வேண்டுமே. சரி, திரும்பிக்கொண்டிருந்த ஔவையாரை வழியில் பார்த்த ஒருவர் “உணவு எப்படி?” என்றார். அவரால் திருமணத்திற்குச் செல்ல முடியவில்லை. சென்று உண்டவர்களிடம் கேட்டாவது ஆறுதல் அடையலாம் என்று நினைக்கிறார். உடனே ஔவையார் பதிலைப் பாட்டாகவே பாடிவிட்டார். அப்பாடல் இது:
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்; நீள்பசியி னாலே
சுருக்குண்டேன்; சோறுண்டி லேன்.
“வளமை மிக்க தமிழை ஆராய்ந்து கற்றவனாகிய பாண்டிய மன்னன் வீட்டுக் கல்யாணத்திற்குச் சென்று நான் உண்டுவந்து சிறப்பைச் சொல்கிறேன், கேளப்பா” என்று ஔவையார் தொடங்குகிறார். என்னென்ன பதார்த்தங்கள், எத்தகைய சுவைகள் என்றெல்லாம் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து நாக்கில் நீர் சொட்ட அவர் காத்திருக்கிறார். ஔவையார் தொடர்கிறார், “பந்தியை அண்டிச் சென்றுவிட்டேன். அப்போது ஒருகூட்டம் புகுந்தது. கூட்டம் நெருக்கி வெளியே தள்ளியது. அரசன் வீட்டிலே சாப்பிடலாம் என்பதற்காகப் பட்டினி கிடந்துவந்தேன். நீண்ட நேரமாகப் பசியோடு இருந்ததால் வயிறு இழுத்துப் பிடித்துக்கொண்டது. ஆம் ஐயா, கூட்டத்தில் நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்; நீள் பசியினாலே வயிறு சுருக்குண்டேன். இவற்றை எல்லாம் உண்ட நான் சோறுண்டிலேன்.”
மாணவர் ஒருவர் சத்தமாகக் கத்தினார், “ஐயா, நானும் உண்டிலேன்.”
பயன்பட்ட நூல்கள்:
- உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், பதினொன்றாம் பதிப்பு.
- அ.மாணிக்கம் (உ.ஆ.), தனிப்பாடல் திரட்டு, 1996, சென்னை, பூம்புகார் பதிப்பகம், நான்காம் பதிப்பு.
- ந.பாலமுருகன், குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?, 2023, திண்டுக்கல், வெற்றிமொழி வெளியீட்டகம்.
தொடர்புடைய கட்டுரைகள்
ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சா.
சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?
உவேசாவை ஒதுக்கலாமா?
3
3
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 2 years ago
All our Tamil writers and speakers should give free lectures (or a nominal fee) to inspire these Tamil aspirants! In turn the authorities should provide them free transportation, food and a guest's treatment to them!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 2 years ago
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பல்கலைக் கழக அரங்கமொன்றில், கு. அழகிரிசாமி் பற்றிய கருத்தரங்கில் பெருமாள் முருகன் சொன்ன தனிப்பாடல் இன்றும் நினைவில் உள்ளது. "நீரெலாஞ் சேற்று நாற்றம்; நிலமெலாங் கல்லு முள்ளும்; ஊரெல்லாம் பட்டி தொட்டி; உண்பதோ கம்பஞ் சோறு; பேரெல்லாம் பொம்மன் திம்மன்; பெண்களோ னாயும் பேயும் காருலாங்கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொணாதே!". இன்றும் கொங்குச்சீமை தங்கங்களை கோவப்படவைக்க உதவும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Banu 2 years ago
உண்மையும், அருமையுமான கருத்துகள். Pre occupied மனநிலையில் இருக்கும் மாணவனின் மனதில் நுழைந்து கற்பிப்பது தற்பொழுது கடினமாகவே உள்ளது. வகுப்பறையில் "ஊக்குவித்தல்" என்ற செயல்பாட்டிற்கு ஆசிரியர்கள் புதுப்புது யுக்திகளை கையாளவேண்டியது தவிர்க்க இயலாதது. " A teacher who is attempting to teach without inspiring the pupil with a desire to learn is hammering on cold iron." என்ற வரிகளுக்கேற்ற வகுப்புகளாய் கட்டுரை ஆசிரியரின் வகுப்புகள் அமைந்தது இளம் ஆசிரியர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாய் நிச்சயம் அமையும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.