கட்டுரை, தொடர், வரலாறு, வாழ்வியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

உகாண்டா: இடி அமின் தேசத்தில் இட்லி, தோசை!

பாலசுப்ரமணியம் முத்துசாமி
29 Oct 2023, 5:00 am
1

தான்சானியாவில் பணிக்குச் சேரும்போதே, எனது நிறுவனத்துக்கு உகாண்டாவில் கிளை உண்டு என அறிந்திருந்தேன். உகாண்டா என்றதும் நமக்குத் தெரிந்ததெல்லாம் அதன் சர்வாதிகாரி இடி அமீனும், அவர் நிகழ்த்திய வெறியாட்டங்களும்தான்.

உகாண்டாவில் ஓர் ஐரோப்பியச் சூழல்

அலுவல் நிமித்தம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தபோது பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் பயணித்தேன். தான்சானியா, உகாண்டா இரு நாடுகளுமே விக்டோரியா ஏரியின் கரையில் அமைந்துள்ள நாடுகள் என்றாலுமே, இரண்டும் இருவேறு நிலப்பரப்புகள்.

வெம்மையான வறண்ட சூழலான டார் எஸ் ஸலாம் நகரில் இருந்து விமானம் ஏறி, உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவின் ஏர்போர்ட் அமைந்துள்ள எண்டெப்பே விமான நிலையத்தில் இறங்கிய எனக்கு ஒரு மகிழ்ச்சியான அதிர்ச்சி காத்திருந்தது. இந்த விமான நிலையம் விக்டோரியா ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ளது.

எண்டெப்பே விமான நிலையம், பசுமையும், குளுமையும் என மிக ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஒன்றாகும். அங்கிருந்து கம்பாலா நகருக்கு 35 கிலோமீட்டர் சாலை வழியே பயணிக்க வேண்டும். மிக அழகான அதிவிரைவுச் சாலை, இருபுறமும் பசுமையான புல்வெளிகள், மரங்கள் என ஐரோப்பியச் சூழல்போல இருந்தது.

எண்டெப்பே விமான நிலையம்

பூமத்திய ரேகையை ஒட்டி அமைந்துள்ள நாடு உகாண்டா என்றாலும், அது கடல்மட்டத்தில் இருந்து நல்ல உயரத்தில் அமைந்துள்ளதால், வெப்பம் அதிகம் இருப்பதில்லை. அதேசமயத்தில், அதிக மழைப் பொழிவு. சாலையின் இருபுறமும் செழித்து வளர்ந்த புல்வெளியைக் கண்டவுடன், பேசாமல் 4-5 எருமைகள் வாங்கி மேய்த்துக்கொண்டு இங்கேயே செட்டில் ஆயிடலாமா என ஆசை வந்தது.

வழியில் கண்ட வீடுகள் சராசரி தான்சானிய வீடுகளைவிட நல்லபடியாகக் கட்டப்பட்டிருந்தன. வீடுகளின் தரமும், அமைப்பும் நாட்டின் பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று.

எண்டெப்பே விமான நிலைய
அதிவிரைவுச் சாலை

கம்பாலா நகரில் தினமும் மழை பொழியும். மதியம் நல்ல வெயில் அடிக்கும். சில மணி நேரங்களில் சடசடவென மழை பொழியும். குறுகிய சாலைகள் கொண்ட நகரம். பெரும் போக்குவரத்து நெரிசல். 

எங்கள் கம்பெனி வழக்கப்படி நாங்கள் அதிக விலை மதிப்புள்ள விடுதிகளில் தங்குவதில்லை. எனவே, 'ஃபேர்வே' என்னும் ஒரு சிறு விடுதியில் தங்கினேன். போப் ஜான் பால் உகாண்டா வருகையில், அவர் தங்குவதற்கென உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடம் பிறகு, ஒரு விடுதியாக மாற்றப்பட்டதாம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

உகாண்டாவும் இந்தியர்களும்

இரவு உறங்கி எழுந்து, காலையில் சிற்றுண்டிக்காகச் சென்ற எனக்குப் பல இன்ப அதிர்ச்சிகள். திறந்தவெளி உணவகத்தின் முகப்பில் புத்தர் என்னை வரவேற்றார்.

ஃபேர்வே உணவு விடுதியில் புத்தர்

காலைச் சிற்றுண்டிகள் வைத்திருக்கும் மேசையில் இரண்டாம் அதிர்ச்சி. அங்கே இட்லி இருந்தது. அருகில் சாம்பார். அதை எடுத்துக்கொண்டதும், உணவு மேசைக்குப் பின்னிருந்த பணியாளர் சொன்னார், “தோசை வேண்டுமெனில் கேட்டால் கிடைக்கும்.” உலகமெல்லாம் பயணித்து, தயிர் சாதம் தேடியலைந்த முன்னோடி பயண எழுத்தாளர் மணியனை நினைத்துக்கொண்டேன். இதை அறிந்திருந்தால், மனிதர் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்.

அடுத்த நாள் காலை அங்கே மராத்தியத்தின் புகழ் பெற்ற காலை உணவான அவல் உப்புமா கிடைத்தது. உணவின் சுவை நன்றாகவே இருந்தது. இந்த விடுதியில் வணிக நிமித்தம் நிறைய இந்தியர்கள் வந்துபோவதின் காரணமாகவே இந்திய உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.

பணியின் ஒரு பகுதியாக வழக்கம்போல கம்பாலாவின் மொத்த விலை வணிக வளாகமான 'கிக்குபு மார்க்கெட்' சென்றோம். அங்கே ஒரு மொத்த விலைக் கடை தமிழருடையது என்றார்கள். அவரது கடைக்குச் சென்று பேச்சு கொடுத்தேன். அவர் கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியர். (நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி இராசா’ கதை நினைவுக்கு வந்தது) இங்கே எப்படி வந்தீர்கள் எனக் கேட்டேன்.

அவருடைய உறவினர் கம்பாலாவில் பணிபுரிய வந்ததாகவும், அவர் ஆலோசனையின் பெயரில், வணிகம் செய்ய வந்து சேர்ந்ததாகவும் சொன்னார். உகாண்டாவின் பிற நகரங்கள் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுடன் வணிகம் செய்துவருவதாகச் சொன்னார். கிக்குபு மொத்த வணிக வளாகமும் மற்ற எந்த மொத்த வணிக வளாகம் போலவே இருந்தது. நெரிசல் மிகுந்த சாலைகள், வாகனங்கள், ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளர்கள், உணவகங்கள் என.

கிக்குபு மொத்தவிலை வளாகம்

கிக்குபு மொத்த வணிக வளாக வேலையை முடித்துக்கொண்டு அருகில் இருந்த தென்னிந்திய உணவகம் சென்றோம். உரிமையாளர் நாகர்கோவில்காரர். சாப்பாடு ஓகே ரகம்தான். ஆனால், இரவு உணவு ஃபேர்வேயில். மிக நன்றாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டால், இது இந்திய நகரமேதான் என்று தோன்றும்.

உகாண்டா நாட்டின் பரப்பளவு 2.40 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். (தமிழ்நாட்டைவிட இரண்டு மடங்கு அதிக பரப்பளவு). மக்கள்தொகை 5 கோடி. இதில் 80 லட்சம் பேர் தலைநகர் கம்பாலாவில் வசிக்கிறார்கள். 

ஆப்பிரிக்க நாடுகளில், இந்தியர்களின் மேலாதிக்கம் அதிகமான நாடு என உகாண்டாவைச் சொல்லலாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், உகாண்டாவில் ரயில் போக்குவரத்தை அமைக்க இந்தியாவில் இருந்து வேலையாட்கள் அழைத்துவரப்பட்டனர். முதலாம் ஆண்டு 350 பேர் வந்தார்கள் எனச் சொல்லப்படுகிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 32 ஆயிரம் பேர் வந்து குடியேறினார்கள்.

ஒப்பந்த வேலை முடிந்ததும், பலர் தாயகம் திரும்பினாலும், பெரும்பாலானோர், இங்குள்ள மிதமான தட்பவெப்ப நிலையை விரும்பி இங்கேயே தங்கிவிட்டனர். அதையடுத்து, குஜராத்தி, சிந்தி வணிகர்கள் இங்கே வந்து குடியேறினர். மெல்ல மெல்ல உகாண்டாவின் வணிகத்தை ஆக்கிரமித்தனர். இதையொட்டி, இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வு வளரத் தொடங்கியது.

இடி அமின் வருகை

உகாண்டாவில் 1971ஆம் ஆண்டு, ஒரு ராணுவக் கிளர்ச்சியை உருவாக்கி, அன்றைய அதிபர் மில்டன் ஒபாட்டே வெளிநாட்டில் இருக்கும்போது, அவரை அகற்றுவதாக அறிக்கை விட்டு, நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார் ராணுவத் தளபதி இடி அமீன். அவர் தலைவராகப் பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டில், உகாண்டாவில் இருந்த ஆசியர்களை, குறிப்பாக இந்தியர்களை வெளியேற்றினார்.

அப்போது கிட்டத்தட்ட 80 ஆயிரம் இந்தியர்கள் உகாண்டாவில் இருந்தனர். ஆனால், அவர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்தனர். அவர்களில், 20 ஆயிரம் பேர் உகாண்டா குடியுரிமை பெற்று தங்கிவிட, மீதியுள்ளோர் அகதிகளாக வெளியேறினர். உகாண்டாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து, தான்சானியா, இந்தியா, கென்யா, மற்றும் கனடா நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அப்போது உகாண்டாவின் 90% வரி வருமானம் ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மூலம் வந்துகொண்டிருந்தது. இந்த நடவடிக்கையால், உகாண்டாவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தியா, உகாண்டாவுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டது.

உகாண்டாவை விட்டு வெளியேறிய
இந்தியர்கள்

இடி அமீன் விரைவிலேயே கொடூரமான சர்வாதிகாரியாக மாறினார். 8 ஆண்டுகளில், அவர் கொன்றழித்த மக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை. 80 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை இருக்கலாம் என ஊகங்கள் சொல்கின்றன. 

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஒபாட்டே, தான்சானிய நாட்டில் தஞ்சம் புகுந்தார். தான்சானிய நாட்டில் அகதிகளாக இருந்த உகாண்டர்கள் இணைந்து, உகாண்டாவைக் கைப்பற்ற 1972ஆம் ஆண்டில் செய்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதன் விளைவாக, தான்சானியாவுக்கும், உகாண்டாவுக்கும் உறவுகள் மோசமடைந்தன.

அதிபர் மில்டன் ஒபாட்டே தனது ஆட்சிக்காலத்தில் பெருமளவு பிரிட்டிஷ் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். இடதுசாரி அரசியலை முன்னெடுத்தார். இதனால், பாதிக்கப்பட்டிருந்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற நாடுகள் முதலில் இடி அமினை ஆதரித்தன. ஆனால், மெல்ல மெல்ல இடி அமினின் உண்மையான முகம் வெளியே தெரியவந்தது. இங்கிலாந்து, இஸ்ரேல் நாடுகள் உகாண்டவுடன் தமது உறவுகளை முறித்துக்கொண்டு வெளியேறின.

அந்த 53 நிமிடங்கள்

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தீவிரவாதிகள், 1976ஆம் ஆண்டு, டெல் அவிவ் நகரில் இருந்து பாரிஸ் சென்ற ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தைக் கடத்தி, உகாண்டாவின் எண்டெப்பே விமான நிலையத்திற்குக் கொண்டுசென்றார்கள். பின்னர், விமானப் பயணிகளில், இஸ்ரேல் நாட்டினரைத் தவிர மற்றவர்களை விடுவித்தார்கள்.

சில நாட்களிலேயே இஸ்ரேலின் புகழ் பெற்ற மோஸாட், தனது விமானங்களுடன் வந்து எண்டெப்பே விமான நிலையத்தில் இறங்கி, ஏர் ஃப்ரான்ஸ் விமானத்துக்குக் காவலாக நின்ற உகாண்டா ராணுவ வீரர்களைக் கொன்று, விமானத்துக்குள் நுழைந்து, தங்கள் குடிமகன்களை மீட்டார்கள். இதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 53 நிமிடங்கள்.

இன்றுபோலத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் ராணுவம், கடற்படை உதவி இல்லாமல், மூன்று விமானங்களில் பல ஆயிரம் மைல்கள் கடந்து சென்று தன் குடிமக்களை மீட்ட இந்த ஆப்பரேஷன் எண்டெப்பே இஸ்ரேலின் ராணுவ வல்லமையை உலகுக்கு எடுத்துக்காட்டியது. இதுபற்றி பல புத்தகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்தக் காலகட்டத்தில் உகாண்டாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்தது. மெல்ல மெல்ல ராணுவத்தினரும் இடி அமின் மீது அதிருப்தி கொள்ளத் தொடங்கினர். 1977ஆம் ஆண்டு, தனது இராணுவத் தளபதி அட்ரிஸ் என்பவரை துணை அதிபராக நியமித்தார். ஆனால், இடி அமினுக்கும் அட்ரிஸுக்கும் இடையே இருந்த உறவு கசந்துபோனது. நாட்டுக்குள் ராணுவக் கிளர்ச்சிகள் அதிகரித்தன. 

இதில் 1978 நவம்பர் மாதம், அட்ரிஸின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராணுவ வீரர்கள், இடி அமினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இடி அமினின் துருப்புகள் எதிர்நடவடிக்கையில் இறங்க, கிளர்ச்சியாளர்கள், உகாண்டா எல்லையை விட்டு தான்சானியாவுக்குள் புகுந்தனர். இதைச் சாக்காக வைத்து தான்சானியா மீது படையெடுத்தார் இடி அமின்.

அரசியல் அடைக்கலம்

தான்சானிய அதிபர் ஜூலியஸ் நைரேரே, தனது ராணுவத்துடன் உகாண்டா அகதிகளையும் இணைத்தார். உகாண்டா அகதிகள் உகாண்டா மக்கள் விடுதலைப் படை (Uganda National Liberation Army – UNLA) என அழைக்கப்பட்டது. இரண்டும் இணைந்து, உகாண்டா நாட்டின் மீது படையெடுத்தன. இந்தப் போரில் லிபிய அதிபர் கடாபியும், பாலஸ்தீன விடுதலை இயக்கமும் இடி அமினை ஆதரித்தன. ஆனாலும், தான்சானிய – உகாண்ட மக்கள் விடுதலைப்படைக் கூட்டணியின் முன்னால், நிற்க முடியாமல், உகாண்டப் படைகள் பின்வாங்கின.

ஏப்ரல் மாதத்தில், கம்பாலா கைப்பற்றப்பட்டது. இடி அமின் லிபியாவுக்குத் தப்பியோடினார். பின்னர் சௌதி அரசு அவருக்கு அரசியல் அடைக்கலம் அளித்தது. தனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் மரக்கறி உணவுக்கு மாறிய இடி அமின் 2003இல் மரணமடைந்தார். தன் வாழ்நாளில் 6 பேரை மணந்த இடி அமினுக்கு மொத்தம் 60 குழந்தைகள்.

இடி அமினுக்குப் பின்னர் உகாண்டாவின் அதிபராகப் பதவியேற்ற முஸூவேணி, 1986ஆம் ஆண்டில், உகாண்டாவை விட்டு வெளியேற்றப்பட்ட இந்தியர்களை உகாண்டா திரும்புமாறு அழைத்தார். “குஜராத்திகள், உகாண்டப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். அவர்கள் திரும்ப வந்தால், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியும்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பை ஏற்று, பெரும்பாலான இந்தியர்கள், குறிப்பாக குஜராத்திகள் திரும்பவும் உகாண்டா வந்தார்கள். அவர்களின் தொழில்கள், நிலங்கள் அவர்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டன.  

இந்தியர்களும் பொருளாதாரமும்

அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியர்கள் மீண்டும் உகாண்டா பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள். இன்று உகாண்டாவின் மிகப் பெரும் செல்வந்தர் சுதீர் ரூபரேலியா என்னும் இந்தியர்தான். இது தவிர மயூர் மத்வானி (இந்தி நடிகை மும்தாஜீன் கணவர்), ஹஸ்முக் டாவ்டா, மிராஜ் பரோட், முகேஷ் சுக்லா எனப் பலரும் உகாண்டா நாட்டின் மிக முக்கியமான செல்வந்தர்கள்.

கம்பாலா நகரில் பல இந்தி வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. பெரும்பாலும் மரக்கறி உண்பவர்கள் என அறியப்படும் குஜராத்திகள், இங்கே சகஜமாக அசைவம் உண்கிறார்கள். 

ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளைவிட, உகாண்டாவிலும், கென்யாவிலும் குடியேறுதல் மிகவும் சுலபம் எனச் சொல்கிறார்கள். எனது பயணங்களில், உகாண்டாவின் சிற்றூர்களில்கூட, குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்கள் சிறு சிறு அங்காடிகளை நடத்திவருவதைக் கண்டேன். பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களான குஜராத் மற்றும் பஞ்சாபில் இருந்து, தொழில் (சிறு தொழில்கள்) நிமித்தம் பெருமளவு மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது ஆய்வுக்குரிய ஒரு விஷயம்

அண்மையில் உகாண்டாவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. அதேபோல, தான்சானியாவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் முக்கியமான செய்தி, தான்சானியாவும், உகாண்டாவும், தத்தம் எரிபொருட்களை அனுப்பிக்கொள்ள இரண்டு நாடுகளுக்கிடையே பைப்லைன்களைப் பதிக்கப் பேச்சு வார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், இந்த இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் மேம்பட வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பக்கிரி பிள்ளையும் உப்புப் பருப்பும்
நைரேரேவின் விழுமியங்களும், திட்டங்களும்
தான்சானியாவின் வணிக அமைப்பு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Dharrani   7 months ago

மோதி ஏன் ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு கவனம் எடுக்கிறார் என்று யோசிக்க வேண்டும்.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஊடகக் கட்டுப்பாடுகள்ஊரகப் பொருளாதாரம்அரசுக் கலைக் கல்லூரிஎழுத்துச் செயல்பாடுவேறுஅழிவுக்கே விழிஞ்சம் திட்டம்! மிதவாதியுமல்லகட்சித்தாவல்எலும்பு முறிவுமுன்கழுத்துக்கழலைஅஞ்சலிக் குறிப்புபல்பீர் சிங் ராஜேவால்தைராக்சின் ஹார்மோன்குற்றங்கள்மகமாயிகாங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்திராவிட மாடல்கியூட் தேர்வுகிழக்கு பதிப்பகம்ஐம்புலன்பாரத இணைப்பு யாத்திரைசாவர்க்கர் பெரியார் காந்திபொருட்சேதம்எண்டோஸ்கோப்பிஏஞ்சலா மெர்க்கல்குண்டர் அரசியல்அழகியல்நல்லகண்ணுசுவாமிநாத உடையார்: மக்கள் நேசர்இன்று மும்பை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!