கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

பெரியார் சொன்ன ‘சீவக்கட்டை’

பெருமாள்முருகன்
16 Sep 2023, 5:00 am
2

பெரியாரின் உரைகளில் மிக இயல்பாகப் போகிற போக்கில் கொங்கு வட்டார வழக்குச் சொற்கள் இடம்பெறுவதுண்டு. அவர் இறப்புக்கு ஆறு நாட்கள் முன் 19.12.1973 அன்று சென்னை, தியாகராய நகரில் ஆற்றிய இறுதிப் பேருரையில் அப்படி ஒரு சொல்லைக் கண்டேன். சூத்திரர் என்னும் இழிவு நீங்கும்படி அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதே அவரது இறுதிக் காலப் பரப்புரைக் கருத்தாக இருந்தது. அதை விளக்கும்போது “நம்ம பொண்டுகள் கிட்டப் போய்ச் சொல்லணும், அம்மா வெளக்கமாறு எடுத்துக்க, இந்த அரசியல் சட்டத்த எடுத்துக்க, தெருவுல வய்யி. போடு சீவக்கட்டையில” என்று பேசுகிறார். இதில் ‘வெளக்கமாறு, சீவக்கட்டை’ ஆகிய இருசொற்களைப் பயன்படுத்தி உள்ளார். 

விளக்கமாறு என்றால் என்ன?

கொங்கு வட்டார வழக்கில் வாசலைக் கூட்டும் மாறுக்கு ‘விளக்கமாறு’ என்று பெயர்; தென்னோலை ஈர்க்குகளால் ஆனது. மண் வாசலைக் கூட்டுவதற்கு இது மிகவும் பொருத்தமானது. இதை அவரவரே தயார்செய்துகொள்வார்கள். இச்சொல் பொதுவழக்கிலும் ‘விளக்குமாறு’ என்று இருக்கிறது. இந்த மாறு காரைத்தரையைக் கூட்டிச் சுத்தம் செய்ய உதவாது. ஈர்க்குகள் என்பதால் தரையில் கீறல் விழுந்துவிடும். வாசலும் காரை வாசலாக இருப்பின் இதைக் கொண்டு கூட்டுவதில்லை. 

வீட்டுக்குள்ளும் ஒருகாலத்தில் மண் தரையே இருந்தது. ஆனால் அதைச் சாணம் போட்டு வழித்து மெழுகிக் காரைத்தரை போல வைத்திருப்பர். பின்னர் காரைத்தரை வந்தது. மொசைக், டைல்ஸ், கிரானைட்ஸ் என்றெல்லாம் இப்போது பல வகைகள் வந்துவிட்டன. சரி, எந்த வகைத் தரையாக இருந்தாலும் வீட்டுக்குள் சுத்தம் செய்யப் பயன்படும் மாறுக்குக் கொங்கு வட்டாரப் பெயர் ‘சீமாறு.’ பொதுவழக்கில் சொன்னால் ‘துடைப்பம்.’ இது மென்மையான புல்வகைத் தாவரங்களிலிருந்து தயாரிப்பது. சீமாறு செய்வது சில சாதியினருக்கான வேலையாக இருந்தது. 

விளக்கமாற்றின் கடைப்பகுதியில் சிறுநூல் அல்லது சரடு கொண்டு சேர்த்துக் கட்டிவிட்டால் போதும். கட்டுத் தளர்ந்தால் அவிழ்த்து இறுகக் கட்டிவிடலாம். சிதறும் ஈர்க்குகளை எடுத்து எளிதாகச் செருகிக்கொள்ளலாம். சீமாறு அவ்வளவு எளிதானதல்ல. மென்மையான புல் வகைகளை அறுத்துக் கட்டிச் செய்ய வேண்டும். சீமாறுக்குக் கட்டுப் போடுவது ஒரு கலை. ‘அவுனி’ எனப்படும் பனைநாரால் ஐந்தாறு இடங்களில் கட்டுப் போட வேண்டும். கூட்டும் நுனிப் பகுதியை மயில் தோகை போல விரிய விட்டுக் கையில் பற்றும் அடிப்பகுதியைக் கிட்டத்தட்ட ஈரடி நீளத்திற்குக் குழல் போலச் செய்து கட்டுப் போட வேண்டும். இதற்குக் கோணூசி, கத்தி உள்ளிட்ட கருவிகளையும் பயன்படுத்துவர். ஒற்றை நாரால் கட்டினால் சாதாக் கட்டு. இரட்டை நாரால் கட்டினால் வலுவான கட்டு.  இருவகைக் கட்டுக்கும் விலை வேறுபாடும் உண்டு. 

இது கொங்கு வட்டாரச் சொல்!

‘சீமாறு’ என்பது கொங்கு வட்டாரத்திற்கே உரிய சொல். ‘சீர்மாறு – சீர் (சுத்தம்) செய்யும் மாறு’ என்றிருந்து ‘ர்’ கெட்டு ‘சீமாறு’ என ஆகியிருக்கலாம்.  ‘தேன்மொழி’ என்பது ‘தேமொழி’ என்றாகிறது அல்லவா? ‘தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி’ என்பது சிலப்பதிகார அடி. தேன்மதுரம் – தேமதுரம் ஆகிறது. ‘தேமதுரத் தமிழோசை’ எனப் பாரதியார் எழுதுகிறார். இவற்றில் னகரம் கெடுவது போலச் ‘சீர்’ என்பதில் ரகரம் கெட்டிருக்கலாம். ரகரம் கெடுதலுக்கு வேறு சான்றுகள் இருக்கிறதா என்றும் தேடிப் பார்க்க வேண்டும். எப்படியும் ‘சீர்மாறு’ என்று கொள்வது பொருள் பொருத்தம் உடையதாக உள்ளது. 

‘சீமாறு’ என்னும் சொல்லைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சம்பவம் நினைவு வரும். வால்பாறை மலைப்பகுதியில் உள்ள ‘சின்கோனா’ என்னும் ஊரில் என் மனைவி ஈராண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த கணித ஆசிரியை ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பள்ளிப் பணியில் வந்துசேர்ந்தபோது அவர் பேசும் சில சொற்கள் மாணவர்களுக்குப் புரியவில்லை. மாணவர் பேச்சில் சில சொற்கள் ஆசிரியைக்கு விளங்கவில்லை. ஆசிரியையின் பேச்சு பாணி மாணவர்களுக்கு நகைப்பைக் கொடுத்தது. அவர் பேசத் தொடங்கினாலே மாணவர்கள் சிரித்தனர்.

ஒருநாள் காலை முதல் பாடவேளையின்போது அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்பறையின் முன் வேறொரு வகுப்பு மாணவர் வந்து நின்றார்.  “டீச்சர், சீமாறு…” என்று கேட்டிருக்கிறார். அந்த வகுப்பறையில்தான் சீமாற்றை வைப்பது வழக்கம். இன்னொரு வகுப்பைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்குச் சீமாற்றை எடுத்துச் செல்ல மாணவர் அனுமதி கேட்டிருக்கிறார். ஆசிரியைக்கு அது தெரியவில்லை. ‘சீமாறு’ என்பது யாரோ ஒரு மாணவரின் பெயர் என்று நினைத்துவிட்டார். மலைவாழ் மக்கள் வித்தியாசமான பெயர்கள் வைத்திருப்பர். அப்படிச் சீமாறும் ஒரு மக்கட்பெயர் எனக் கருதிவிட்டார். மாணவர்களைப் பார்த்துச் ‘சீமாறு யாரு? போ’ என்றிருக்கிறார். மாணவர்கள் எல்லோரும் சிரித்திருக்கின்றனர். நுழைவாயில் கதவை ஒட்டிய மூலையில் இருந்த சீமாற்றை எடுத்துக்கொண்டு மாணவர் ஓடிப்போனார். ஆசிரியை அதைக் கவனிக்கவில்லை. திரும்பிப் பார்த்தால் மாணவர் இல்லை. வகுப்பு மாறி மாணவர் வந்திருக்கக்கூடும் என்று நினைத்துப் பாடத்தைத் தொடர்ந்தார். 

வகுப்பு மாணவர்களிடம் சீமாறு பற்றிக் கேட்டிருக்கலாம். ஆசிரியைக்குத் தோன்றவில்லை. அடுத்த நாள் காலை முதல் பாடவேளையின்போதும் அதே மாணவர் வந்து நின்று “டீச்சர், சீமாறு…” என்று கேட்டிருக்கிறார். இன்றைக்கு ஆசிரியை ஏமாறத் தயாரில்லை. அம்மாணவர் தம்மைக் கேலிசெய்கிறார் என்று நினைத்து அருகில் அழைத்துக் காதைப் பிடித்துத் திருகி “என்னடா, கேலி செய்றியா?” என்று கண்டித்தார். அன்றும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சிரித்தனர். காதை விடுவித்துக்கொண்ட மாணவர் கதவு மூலைக்கு ஓடிச் சீமாற்றைக் கையில் எடுத்துக்கொண்டு ‘இதுதான் சீமாறு டீச்சர்’ என்று சொல்லிவிட்டு ஓடினார். காது வலியை மீறி அவர் முகத்தில் சிரிப்பு. ‘துடைப்பம், வாரியல்’ என்று கேட்டுப் பழகிய ஆசிரியைக்குச் சீமாறு புதிது. அந்த ஆசிரியை இன்றும் எங்கள் நினைவில் தங்கியிருப்பதற்கு இந்த ஒரே ஒரு சொல்தான் காரணம். 

இது இழிவுக்குறியதா?

யாரையாவது இழிவுபடுத்த வேண்டும் என்றால் ‘கட்ட வெளக்கமாத்தால அடி’ என்று சொல்வதுண்டு. பயன்பட்டுத் தேய்ந்து நுனிப் பகுதி சிதைந்து குறுகியிருக்கும் விளக்கமாற்றால் அடித்தால் அடி நன்றாக விழும்.  அதேபோலத் தேய்ந்த சீமாற்றைச் ‘சீவக்கட்டை’ என்று சொல்வது கொங்கு வழக்கு.  ‘சீவக்கட்டையிலயே சாத்திருவன்’ என்பது மிகவும் பிரபலமான கொங்குப் பெண்மொழி. சீமாற்றுக்கட்டையின் சுருங்கிய வடிவம் சீவக்கட்டை. சிலர் ‘சீமாத்துக்கட்ட’ என்று நீட்டியும் சொல்வதுண்டு.  

‘கட்ட வெளக்கமாற்றை’ விடச் ‘சீவக்கட்டையே’ இங்கு பெருவழக்கு. பொருட்களின் பயன்பாட்டைப் பொறுத்து அவற்றுக்கு மதிப்பு கூடுவதும் குறைவதும் நடக்கிறது. சுத்தம் என்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் சுத்தப்படுத்த உதவும் கருவிகளுக்கு மதிப்பில்லை. கழிவுப் பொருட்களை, குப்பைகளை அகற்றும் வேலைக்கு அவை உதவுகின்றன. அதனால்தான் மதிப்பில்லை.  உடலைப் பாதுக்காக்கப் பயன்படுத்தும் பொருள்களிலேயே நாம் செருப்பைத்தான் இழிவாகக் கருதுகிறோம். அதேபோல வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் கழிவகற்றும் கருவிகளையே இழிவாக எண்ணுகிறோம்.  

ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமானால் அவரை இழிவான பொருளால் அடிப்பதாகச் சொல்லலாம்; அடிக்கலாம். அந்த வகையில்தான் செருப்பால் அடித்தலும் விளக்கமாற்றால் சாத்தலும் வருகின்றன. குறிப்பாக விளக்கமாற்றால் அடித்தல் பெண்களுக்குரிய செயலாக இருக்கிறது. வீட்டைச் சுத்தம் செய்யும் வேலை பெண்களுக்குரியது. விளக்கமாற்றைப் பயன்படுத்துவோர் பெண்கள். ஆகவே, ஒருவரை இழிவுபடுத்தப் பெண்கள் விளக்கமாற்றைப் பயன்படுத்துகின்றனர். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன் 01 Apr 2023

திரைப்படங்களில் விளக்கமாறு

விளக்கமாற்றல் அடிப்பேன் எனச் சொல்லுதல், விளக்கமாற்றைத் தூக்கிக்கொண்டுவருதல், விளக்கமாற்றால் அடித்தல் ஆகிய காட்சிகள் நம் திரைப்படங்களில் சாதாரணமாகக் காணக் கிடைப்பவை. ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தில் தனுஷை அடித்து விளாச அம்மா சரண்யா பயன்படுத்துவது விளக்கமாறு. ‘முனி’ படத்தில் பேய் பிடித்திருப்பதாக நடிக்கும் பெண், ராகவா லாரன்ஸை விளக்கமாற்றால் அடிக்கும் காட்சி ஒன்றுண்டு.  அடி வாங்கிய பிறகு தலை முழுக்கவும் விளக்கமாற்று ஈர்க்குகள் சிக்கிக் கிடக்க லாரன்ஸ் வெளியேறுவார். டைல்ஸ் போட்டிருக்கும் அறைக்குள் விளக்கமாற்றை வைத்திருக்க மாட்டார்கள். என்றாலும் திரைப்படத்தில் இத்தகைய சிறுதர்க்கங்களை மீறுவது இயல்பு. பெண்களிடம் விளக்கமாற்று அடி வாங்கிய பிறகு தலைமுழுக்க ஈர்க்குகள் சிக்கியிருக்கத் தடுமாறி விவேக் நடக்கும் காட்சி ஒன்றும் நினைவில் இருக்கிறது. 

நடைமுறை வாழ்வில் விளக்கமாற்றால் அடித்த காரணத்தால் பெரும்பகை கொண்ட குடும்பங்கள் உள்ளன. விளக்கமாற்றைத் தூக்கிக் காட்டினாலே இழிவுபடுத்துவதுதான். விளக்கமாற்றால் அடிப்பேன் எனச் சொல்வதும் இழிவு. அடித்துவிட்டால் அது பெரும் இழிவு. புழங்கித் தேய்ந்துபோன கட்டை விளக்கமாற்றால் அடித்தல் மாபெரும் இழிவு. சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றி விளக்கமாற்றால் அடித்தல் என்பது உறவை ஒருபோதும் மீட்கவே இயலாத அதீத இழிவு. விளக்கமாற்றைக் கண்ணுக்குத் தெரியாமல் மறைவான இடத்தில் வைப்பதே வழக்கம். விருந்தினர் கண்ணில் படுவது அவர்களை இழிவுபடுத்துவது என்பது மக்கள் நம்பிக்கை.

கொடும்பாவி

தமிழறிஞர் உலகில் ‘விளக்குமாற்றால் விளக்குதும்’ என்னும் தொடர் புகழ்பெற்றது. சுந்தர சண்முகனார் எழுதிய ‘ஞானியார் அடிகள்’ நூலில் ஒரு சம்பவம் வருகிறது. காரைக்குடியில் ஞானியார் அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டுக் காழ்ப்புகொண்ட அம்பலவாண நாவலர் என்பவர் தம் மாணவர்களைக் கொண்டு மொட்டைத் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘ஞானியார் அடிகள் கூறும் கருத்துக்கள் பொருந்தாதவை; அவற்றை யாரும் கேட்கக் கூடாது’ என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. 

அடிகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட ஆற்றூர் சுப்பராய ஐயர் என்பவர் பதில் அறிக்கை எழுதி வெளியிட்டார். அவ்வறிக்கையில் ‘மொட்டைத் துண்டறிக்கையில் உள்ள செய்திகள் உண்மையல்ல; உண்மையாயின் கீழே கையெழுத்து இட்டிருப்பார்களே. யாம் கூறுவதில் ஏதேனும் ஐயப்பாடு இருப்பின் நேரில் வந்து வினவின் விளக்குமாற்றால் விளக்குதும்’ என்று சொல்லிக் கையொப்பத்துடன் வெளியிட்டார். ‘விளக்குமாற்றால் விளக்குதும்’ என்பதைப் பிரித்தால் ‘விளக்கும் ஆற்றால் விளக்குதும்’ என வரும்.  ‘விளக்கும் முறையால் விளக்குவோம்’ என்பது பொருள். நேர்பொருள் எடுத்தால் ‘விளக்குமாற்றால் அடிப்போம்’ என்றாகும். அதைக் கண்ட ஞானியார் அடிகள் பெரிதும் வருந்தினார். இதேபோன்ற சம்பவத்தைப் பரிதிமாற் கலைஞர் வாழ்வோடு இணைத்தும் சொல்வதுண்டு.  ‘விளக்குமாற்றால் அடித்தல்’ புலமை உலகிலும் இழிவுக்குப் பயன்பட்டுள்ளது.

சில ஆண்டுகள் மழை பொழியாமல் வறட்சி நிலவினால் ‘கொடும்பாவி’ இழுத்தல் என்னும் சடங்கு ஒன்றைச் செய்வார்கள். மரக்குச்சிகளில் கைகால்களும் வைக்கோல் திணித்து உடம்பும் மண்சட்டியில் வரைந்த முகம் கொண்ட தலையும் இணையக் கொடும்பாவி என்னும் உருவம் செய்து அதை ஓர் ஊரிலிருந்து இழுத்துச் சென்று அடுத்த ஊர் எல்லையில் போடுவார்கள். அந்த ஊரார் இழுத்துப் போய் அடுத்த ஊரில் போடுவார்கள். இப்படியே பல ஊர் எல்லைகளைக் கடந்து கடைசியில் குறிப்பிட்ட ஊரார் அதைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். மனிதர் செய்த ஒட்டுமொத்தப் பாவத்தின் குறியீடாக இந்தக் கொடும்பாவி அமையும். அதை இழுத்துச் செல்லும்போது வசைச் சொற்களால் கேவலமாகப் பேசியபடி விளக்கமாற்றால் பெண்கள் அடிப்பார்கள். பாவியை இழிவுபடுத்த விளக்கமாற்று அடி.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பெரியார்: அவர் ஏன் பெரியார்?

கல்யாணராமன் 02 May 2023

எதைக் குறிப்பிடுகிறார் பெரியார்?

கொங்கு வழக்கில் விளக்கமாற்றால் அடித்தல், விளக்கமாற்றால் சாத்துதல் (அதிகமான அடி கொடுப்பதைச் சாத்துதல் குறிக்கும்) ஆகியவை வழங்குவதைப் போலவே ‘சீவக்கட்டையால் அடித்தல்’ என்னும் வழக்கும் உண்டு. பெரியார் வாக்கில் அதுதான் இயல்பாக வந்துள்ளது. முதலில் ‘அம்மா, வெளக்கமாறு எடுத்துக்க. அரசியல் சட்டத்த எடுத்துக்க’ என்று சொல்லத் தொடங்கியவர் அடிக்கச் சொல்லும்போது ‘தெருவுல வை, போடு சீவக்கட்டையில’ என்கிறார். சீவக்கட்டை என்று அவர் பேசும்போது தெளிவாகச் சொல்கிறார்.  ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தைப் பதிலுக்கு இழிவுபடுத்த நடைமுறை வழக்கம் ஒன்றைத் தம் உரையில் பெரியார் குறிப்பிடுகிறார். அந்தப் பகுதி இது: 

“நம் பெண்களிடத்தே போய்ச் சொல்லணும், ‘அம்மா விளக்கமாறு எடுத்துக்கொள், இந்த அரசியல் சட்டத்தை எடுத்துக்கொள், தெருவிலே வை, போடு சீவுகட்டையாலே – அதைக் குத்திக் குத்தி’ என்று. ‘ஏம்மா, அரசியல் சட்டத்தை விளக்கமாற்றாலே போடுகிறாய்?’ என்று கேட்டால் ‘அதை எழுதின அயோக்கியப் பயல்கள், என்னைப் பார்ப்பானுக்குத் தேவடியாள் என்று எழுதி இருக்கிறான், பின்னே என்ன, அதனைக் கொஞ்சட்டுமா?’ என்று கேட்கச் சொல்லுகிறேன். ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், இந்த மாதிரியான, பதிலுக்குப் பதிலான முறையை நாம் எடுக்காததனாலே, நாதி இல்லை நம்மைப் பற்றிப் பேசுகிறதற்கு” (ப.3233, 3234).

இதில் ‘அதைக் குத்திக் குத்தி’ என்றும் சொல்கிறார். விளக்கமாற்றைப் பயன்படுத்திக் கூட்டும்போது அதன் கட்டுத் தளர்ந்துபோகும். கட்டை இறுக்கமாக்க அதன் தலைப்பகுதியை நிலத்திலே குத்துவது வழக்கம். ஒருவரை விளக்கமாற்றால் அடித்தால் தளரும். தளரத் தளரக் குத்திக் குத்திச் சரியாக்கி அடிக்க வேண்டுமாம். அரசியல் சட்டத்தின் மேல் பெரியாருக்கு அத்தனை கோபம். விளக்கமாற்றால் போடுவதை மட்டுமல்லாமல் கொங்குப் பகுதி வழக்காகிய ‘சீவக்கட்டையிலே போடு’ என்பதையும் பெரியார் இணைத்துப் பேசுகிறார்.  ஆனால், பெயர்த்து எழுதியவர்களால் அச்சொல்லைச் சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை. ‘சீவுகட்டை’ என்று எழுதியுள்ளனர். 

பெரியாரின் இறுதியுரை என்று உணர முடியாத வகையில் வேகமும் தெளிவும் கொண்ட அந்தப் பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட இடத்தில் இந்த வட்டார வழக்குச் சொல் இயல்பாக வந்து விழுந்திருக்கிறது. தமிழ்நாடு முழுக்கவும் சுற்றி ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பங்கேற்றுப் பேசிய பின்னும் தொண்ணூற்றைந்து வயதிலும் அவர் பேச்சில் வட்டார வழக்கு மறையவில்லை. இப்போது இருந்து பெரியார் பேசியிருந்தால் இப்படிச் சொல்லியிருப்பாரோ?

‘அம்மா, விளக்கமாறு எடுத்துக்கொள், இந்தச் சனாதன தருமத்தை எடுத்துக்கொள், தெருவிலே வை, போடு சீவக்கட்டையாலே, அதைக் குத்திக் குத்தி.’

 

பயன்பட்ட நூல்: 

  1. வே.ஆனைமுத்து (ப.ஆ.), பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 6, பகுதி 1, 2009, பெரியார் ஈ.வெ.இராமசாமி – நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை, இரண்டாம் பதிப்பு.
  2. சுந்தர சண்முனார், தவத்திரு ஞானியார் அடிகள், 1993, மணிவாசகர் நூலகம், சென்னை.

 

தொடர்புடைய கட்டுரைகள்

பெரியாரின் கருத்துரிமை: தான், மற்றமை, மக்கள்
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
பெரியார்: அவர் ஏன் பெரியார்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


2

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

M Ramachandran   12 months ago

வட்டாரச் சொல்லாய்வு விரிவாக அலசப்பட்டுள்ளது. நன்று. விளக்கமாறு மற்றும் இழிவுபடுத்தல் என்ற கருத்துக்களை இவ்வளவு நீட்டியிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆங்கில இணைய இதழ்களைப் போல சுருக்கி விளக்குதல் அவசியம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

ஒரு கொங்குவட்டார ஆளாக, புன்னகையுடன் வாசித்த கட்டுரை. நுட்பமான தகவல்கள்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

malcolm adiseshiahதான்சானியா: சுற்றுலா தலங்களும்தமிழர் மருத்துவம்பித்தப்பைஅறிஞர்கள்மாமா என் நண்பன்!மக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை!கிழக்கு பதிப்பகம்முடி உதிர்வுஆண்களை அலையவிடலாமா?முன்னோடி மாநிலம்பீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் பேட்டிதேவர் மகன்ஆவின்பந்து வீச்சாளர்கள்சீனா எப்படிக் கண்காணிப்புக்குப் பழகியிருக்கிறது?இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை!மெதுவடைகொலம்பியா பல்கலைக்கழகம்பதற்றம்கேள்விகளும்கைம்பெண்கள்ஹைக்கூதலைமைப் பண்புமாங்கனித் திருவிழாபொதுவுடைமைக் கட்சிமுதல் தேர்தல்சித்தாந்திகசடதபறசமஸ் கலைஞர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!