கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

அரசே வழக்காடி - மத்தியஸ்தர் - நீதிபதி!

ப.சிதம்பரம்
17 Apr 2023, 5:00 am
0

மிழ்நாட்டின் பழைய ராமநாதபுரம் (முகவை) மாவட்டம் பலவகைப்பட்ட நீர்நிலைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருந்தது. அது இப்போது ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என்று மூன்று வெவ்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இயற்கையாகவே அமைந்த ஏரிகள், மனிதர்களால் வெட்டப்பட்ட குளங்கள், கண்மாய்கள், குடிநீர் தேவைக்காக ஊரணி, ஆடு - மாடுகளின் தாகம் தீர்க்கவும் அவற்றை நீராட்டவும் சிறு குட்டைகள் – குளங்கள், வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க கேணிகள் என்று பலவகைப்பட்ட நீர்நிலைகள் இங்கு அதிகம்.

பழைய ராமநாதபுரம் மாவட்டம் மழைப் பொழிவு குறைந்த, வறட்சியால் அதிகம் பீடிக்கப்படும் மாவட்டம். பெரும்பாலான நிலங்கள் விவசாயம் ன்றி தரிசாகத்தான் இருக்கும், சாகுபடி செய்யப்படும் நிலங்கள் ‘வானம் பார்த்த பூமியாக’ மழையை நம்பியே இருக்கும். எனவே, தண்ணீர்த் தேவையை நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் வேறு வழியே கிடையாது, ஆங்காங்கே கிணறு, குளம், குட்டை, ஏரி என்று நீர்நிலைகளுக்காக நிலத்தை வெட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்படி ஆண்டு முழுவதும் - நீர்நிலைகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் தொடரும். இந்த நீர்நிலைகள்தான் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் உயிர்வாழ்வதற்கான மூலாதாரம்.

மக்கள்தொகை பெருகப் பெருக புதிய குடியிருப்புகள் நிறையத் தோன்றின. இதன் விளைவாக நீர்ப்பிடிப்புக்காக வெட்டப்பட்ட நீர்நிலைகள்தான் முதலில் ஆக்கிரமிக்கப்பட்டன. காலங்காலமாக இதைச் செய்யும் வழிமுறை என்னவென்றால், கொடி படர்வதைப் போல குடியிருப்புகளையும் நீ்ர்நிலைகளை ஒட்டி அதன் கரைகளில் படர வைத்து நிலத்தைக் கைப்பற்றுவது. நீர்நிலைகளின் கரையோரங்களில் முதலில் ஓலைக் குடிசைகள் வரிசையாகத் தோன்றும்.

அடுத்த சில மாதங்களில் அவற்றின் எண்ணிக்கையும் வரிசைகளும் கூடும். வெளியிலிருந்து பார்த்தால் நீர்நிலையே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு குடிசைகள் அதிகரித்த பிறகு, அவற்றுக்கு இடையில் இருக்கும் நிலப்பகுதி சிறுகச் சிறுக மறைந்துவிடும். கடைசியில் ஒருநாள், நீர்நிலையே காணாமல் போய்விடும்! கடல் அலை கரையை நோக்கி தொடர்ந்து மேலேறத் தொடங்கினால், கடற்கரை மணல் பகுதியும் பரப்பளவில் குறைந்துவிடும், அதை ‘கடல் அரிப்பு’ என்கிறோம்.

பறிப்பு அல்ல, அரிமானம்

ஆக்கிரமிப்பு, அரிமானம் என்ற வார்த்தைகள் நீர்நிலைக்கு மட்டுமல்ல - சுதந்திரத்துக்கும் பொருந்தும். சுதந்திர நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் ஒரே நாளில் நள்ளிரவில் திடீரென பறிக்கப்பட்டுவிடாது. சில மாதங்களுக்கு முன்னால் வரை அனுபவித்திருந்த சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன என்று உணரும் வரையில் - அது ஓசையின்றி, இலைமறை காயாக, நயவஞ்சகமாக – பறிக்கப்பட்டிருக்கும். சுதந்திரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன என்பதை நீங்கள் உணரும் வேளையில், காலம் கடந்துவிட்டிருக்கும், இழந்ததை மீட்பதற்கு அதற்குப் பிறகு நேரமோ வாய்ப்போ இருக்காது.

நம்முடைய சுதந்திரத்தை எவராலும் பறித்துவிட முடியாது என்று மாயையில் மட்டும் இருக்காதீர்கள்; 1947இல் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றபோது நம்மோடு சேர்ந்து சுதந்திரம் பெற்ற நாடுகளை ஒரு முறை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அவற்றில் எத்தனை நாடுகள் தங்களுடைய சுதந்திரத்தை, காலனியாக பிடிக்கும் நாடுகளிடம் அல்ல – சுதேசியான சர்வாதிகாரியிடம் – இழந்திருக்கின்றன என்று பாருங்கள். அந்த நாடுகள் பலவற்றில் இப்போதும் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பும் தேர்தல்களும் இருக்கின்றன; நீதித் துறையும் நீதிபதிகளும் இருக்கின்றனர்; நாடாளுமன்றமும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர்; அமைச்சரவையும் அமைச்சர்களும்கூட உள்ளனர்; பத்திரிகைகள் வெளிவருகின்றன, பத்திரிகையாளர்களும் வேலை செய்கின்றனர்.

அந்த நாட்டுக்குச் செல்லும்போதோ அல்லது அங்கே வசிக்கத் தொடங்கும்போதோதான், அது சுதந்திர நாடு இல்லை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். அத்தகைய நாடுகள், சுதந்திர நாடுகளுக்கு உரிய எல்லா அலங்காரங்களுடனும் இருக்கும், இருந்தாலும் அவை சர்வாதிகார நாடுகள்தான். சுவீடனில் நாடுகளின் சுதந்திரத்தன்மையை மதிப்பிடும் ‘வி-டெம்’ என்கிற ஆய்வு நிறுவனம் இருக்கிறது. அது நாடுகளை சுதந்திர ஜனநாயகம், தேர்தல் ஜனநாயகம், தேர்தல் சர்வாதிகாரம், மூடிய(நிலை) சர்வாதிகாரம் என்று நான்காக வகைப்படுத்தி இருக்கிறது. இந்தியாவை அந்த அமைப்பு ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம்’ என்று 2021இல் வகைப்படுத்தி இருக்கிறது. அது நமக்கு அவமானகரமான பட்டம்.

அடுத்தடுத்த திருத்தங்கள்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14, 19(1)(ஏ)(ஜி) ஆகிய கூறுகள் தனிநபர் சுதந்திரத்தையும் பத்திரிகை (ஊடக) சுதந்திரத்தையும் பாதுகாக்கின்றன. 2023 ஏப்ரல் 6 நினைவில் கொள்ளப்பட வேண்டிய நாள். அந்த நாளில்தான் பத்திரிகை சுதந்திரத்தை அரிக்கும் வகையிலான - சந்தேகத்துக்குரிய சட்டத்துக்கு அரசின் ஒப்புதல் கிடைத்த நாள். நெருக்கடிநிலை காலத்தில் (1975 - 77), பத்திரிகை சுதந்திரம் ஒரே நாள் நள்ளிரவில் முற்றாக பறிக்கப்பட்டது. (அது மிகப் பெரிய தவறு, நெருக்கடிநிலையைக் கொண்டுவந்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் இந்திரா காந்தி). ‘தகவல் தொழில்நுட்ப விதிகள் - 2021’க்கு ஏப்ரல் 6ஆம் நாள் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவந்தது. திருத்தப்பட்ட பிறகு அந்த விதியின் 3(1)(பி)(வி) பின்வருமாறு மாறியது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

இறையாண்மை - மதச்சார்பின்மை - ஜனநாயகம்

ப.சிதம்பரம் 15 Aug 2022

“3(1) ‘இடைநிலை முகமை’ உரிய அக்கறையுடன் செயல்பட வேண்டும்; சமூக ஊடக இடைநிலை முகமை, முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஊடக முகமை, ஆன்லைன் (இணைய வழி) விளையாட்டு இடைநிலை முகமை ஆகியவை தங்களுடைய கடமையை நிறைவேற்றும்போது உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும்: (பி) முழுக்க முழுக்க தவறான தகவலை அல்லது உண்மைக்கு மாறான தன்மை கொண்டதை - தெரிந்துகொண்ட பிறகும், உள்நோக்கத்தோடும், அதைப் பெறுகிறவரை ஏமாற்றும் வகையிலும் தவறாக திசைத் திருப்பும் விதத்திலும் வழங்கவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றம் செய்யவோ, திருத்தவோ, வெளியிடவோ, இன்னொருவருக்குப் பகிரவோ, இருப்பில் சேமிக்கவோ, புதிய தகவல்களைச் சேர்க்கவோ கூடாது என்பதை உறுதிசெய்ய நியாயமான நடவடிக்கைகளை இடைநிலை முகமை எடுக்க வேண்டும்.

அல்லது ஒன்றிய அரசின் ‘எந்தவொரு நடவடிக்கை குறித்தும்’ தவறாகவோ, உண்மையைத் திரிக்கும் விதத்திலோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் தொடர்புள்ள ஒன்றிய அமைச்சகம் அதை சரிபார்த்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அரசிதழில் உரிய வகையில் அறிவிக்கை வெளியிடும்.”

இந்த அறிவிப்பின் பின்னால் உள்ள ‘விஷமம்’ மிகவும் வெளிப்படையானது. ஒன்றிய அரசின் எந்த நடவடிக்கைக்கும், திருத்தப்பட்ட இந்த விதி பொருந்தும். ஒன்றிய அரசில் உண்மையைச் சரிபார்க்க ஒரு பிரிவு ஏற்படுத்தப்படும். ‘அதிகாரப்பூர்வமான தணிக்கை’ என்பதை அப்படியே சொல்லாமல், (இடக்கரடக்கலாக) வார்த்தையை மாற்றி அலங்காரமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு செய்தி உண்மையானதா – தவறானதா என்று தீர்மானிக்கும் அதிகாரம் அந்தத் தணிக்கை அமைப்புக்குத் தரப்படுகிறது.

நீதித் துறையின் எந்தவித மேற்பார்வையும் இல்லாமல், அதிகாரியின் உளப்பாங்கை மையமாகக்கொண்டே தணிக்கை இருக்கும். தவறான அல்லது உண்மைக்கு மாறான செய்தி என்று அதிகாரியால் அடையாளம் காணப்பட்டவுடன் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள் அனைத்தும் அவற்றைத் தங்களுடைய கணினி பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

முழுதாகப் போவதற்கு முன்னால்…

திருத்தப்பட்ட இந்த விதிகளில் உள்ள சட்டப்பூர்வமான குறைபாடுகளைப் பட்டியலிட்டு இந்தக் கட்டுரையை மேலும் கனமாக்க விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த முடிவின்படி அரசே வழக்கு தொடுக்கும், அரசே ஜூரியாக (மக்கள் குழு உறுப்பினர்) இருக்கும், நீதிபதியாகவும் இருந்து எது தவறு, எது போலி என்று தீர்ப்பும் வழங்கிவிடும்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

நீதித் துறை யார் கையில்?

ஏ.பி.ஷா 02 Mar 2023

திருத்தப்பட்ட இந்த விதிக்கே தனி வரலாறு இருக்கிறது. ‘தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021’ என்பது இடைநிலை முகமைகள் மீது கவலைதருகிற பொறுப்புகள் பலவற்றைச் சுமத்தியுள்ளது. அந்த விதிகளின் செல்லத்தக்கத்தன்மை குறித்து பல நீதிமன்றங்களில் வழக்குகளும் விசாரணையில் இருக்கின்றன. 2022 அக்டோபர் 28இல் ‘தகவல் தொழில்நுட்ப (இடைநிலை முகமைகளுக்கான வழிகாட்டு நெறிகள், எண்ம ஊடக நடத்தை நெறிகள்) விதிகள்’ என்பதை அரசு அறிவிக்கை மூலம் வெளியிட்டது. அதில்தான் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விதி 3(1)(பி)(வி) திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தான் சுதந்திரத்தைப் பறிக்கும், படர்தன்மையுள்ள அரிமானம் என்கிறேன். 

அரசு திருத்தியுள்ள விதிகள் சட்டப்படி செல்லத்தக்கவையா, அரசமைப்புச் சட்டத்துக்குப் பொருத்தமானவையா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கட்டும். இதில் சட்டம் அல்லாத - சுதந்திரத்துக்குத் தொடர்புள்ள அம்சங்கள் குறித்து நீங்கள் கவனிக்க வேண்டும்:

  • சுதந்திரமான, ஜனநாயக நாட்டில் செய்திகள் தணிக்கை செய்யப்பட வேண்டுமா?
  • செய்திகளைத் தணிக்கை செய்வதை நீங்கள் ஏற்பீர்களா?
  • அரசு நியமிப்பவர்தான் தணிக்கை அதிகாரியாக இருக்க வேண்டுமா?
  • தவறான செய்தி அல்லது உண்மைக்கு மாறான செய்தி என்ற புகாரை அதிகாரி, அவருடைய மனப்போக்கில் பரிசீலித்தால் போதுமா?
  • தணிக்கை செய்யும் செயலை அரசு மேற்கொண்டால் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த தயக்கமும் அச்சமும் மக்களுக்கு ஏற்படாதா?

அரிதான உரிமை, அரிக்கப்படுகிறது. உரிமை போகிறது, போகிறது… முழுக்கப் போவதற்குள் விழித்தெழுங்கள்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

நீதித் துறை யார் கையில்?
அரசமைப்புச் சட்டத்தில் கை வைக்க நயவஞ்சகத் திட்டமா?
தேர்தல் ஆணையத்தில் தன்னாட்சி அவசியம்
அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை எங்கே?
இறையாண்மை - மதச்சார்பின்மை - ஜனநாயகம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வேலூர்காமம்கோணங்கிநட்சத்திரம் நகர்கிறது: பா.இரஞ்சித்தின் அழகியல்வைக்கம் வீரர்தி டெலிகிராப்தகவல்கள்வ.உ.சி. வாழ்க்கை வரலாறுநாத்திகர்தொழில்நுட்பத் துறைபசுங்குடில் வாயுக்கள்வலதுசாரிக் கொள்கைகணினிமயமாக்கல்இரட்டைத் தலைமைகுறைந்த பட்ச ஆதரவு விலைஊட்டச்சத்துதீண்டத்தகாதவர்கள்ஊழல்அறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!கார்கில்மணமக்கள்samas on vallalarவிமான நிலையங்கள்மனத்திண்மைமுல்லை நில மக்கள்சர்வதேச வங்கிகள்மைக்ரோ மேனஜ்மென்ட்ராஜஸ்தானின் முன்னோடித் தொழிலாளர் சட்டம்அண்ணா அருஞ்சொல் பொங்கல் கடிதம் கட்டுரைமானுடவியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!