கட்டுரை, அரசியல், சட்டம் 7 நிமிட வாசிப்பு
இறையாண்மை - மதச்சார்பின்மை - ஜனநாயகம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றுள்ள இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய மூன்று வார்த்தைகள் வாசகர்களுக்கு நினைவிலிருக்கும். நவீன இந்தியக் குடியரசை வரையறுக்கும் பண்புகளே அந்த வார்த்தைகள். அத்தகைய குடியரசை உருவாக்கத்தான் 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிகழ்வை நாடு கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அப்படியே நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தையும், அதற்குப் பிறகு வரும் சுதந்திர தினங்களையும் கொண்டாடும் வகையில் இந்தியா தொடர்ந்து ஜனநாயக நாடாகவே திகழும் என்று நிச்சயம் நம்புகிறேன். இருந்தாலும் மிகுந்த மன நடுக்கத்துடனேயே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் – இந்தியக் குடியரசு 2047வது ஆண்டில் இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய தன்மைகளுடன் இருக்குமா?
உதிர்கிறதா மக்களின் அதிகாரம்?
பல நூற்றாண்டுகளாக இந்தியா இறையாண்மை மிக்க நாடாகவே இருந்தது – எப்படி என்றால், வெளிநாடுகளைச் சேர்ந்த ராஜாக்களும் ராணிகளும் இந்தியாவை ஆண்டதில்லை. ஆட்சியாளரை மாற்றக்கூடிய அதிகாரம்தான் இறையாண்மை மிக்க மக்களின் தனிச் சிறப்பு. நேர்மையான – சுதந்திரமான தேர்தல் நடைமுறைகள்தான் மக்களுடைய இறையாண்மை மிக்க உரிமை. சமீபத்திய ஆண்டுகளில் தேர்தல்கள் குறித்தே சந்தேகங்கள் வளர்ந்து வருகின்றன. தேர்தல் முடிவுகளைப் பண பலம்தான் தீர்மானிக்கிறது, பாரதிய ஜனதா கட்சிதான் பண பலத்தில் பெரிய கட்சியாக விளங்குகிறது.
அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் நன்கொடைகளில் 95%ஐ கைப்பற்றும் வகையில், வஞ்சகமாகத் திட்டமிட்டு தேர்தல் நன்கொடைப் பத்திரம் என்கிற புதிய – மூடுமந்திரமான வழிமுறையை பாஜக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுவல்லாமல் தேர்தலில் வெற்றி பெற வேறு சில உத்திகளையும் சாதனங்களையும் பாஜக கையாள்கிறது: நடுநிலையாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் அடக்கிப் பணியவைக்கப்படுகின்றன. நிறுவனங்கள் கைப்பற்றப்படுகின்றன. சட்டங்களே ஆயுதங்களாக மாற்றப்படுகின்றன. பல்வேறு முகமைகள் சட்ட விரோதமாக நடக்குமாறு நெருக்கப்படுகின்றன.
அப்படியே ஒருவேளை பொதுத் தேர்தல்களில் தோற்றுவிட்டாலும், ‘தாமரைச் செயல்திட்டம்’ மூலமாக ஆட்சி கைப்பற்றப்படுகிறது. இப்படித்தான் வெட்கமின்றி கோவா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மேகாலயம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் அது ஆட்சியைப் பிடித்தது. ராஜஸ்தானில் பிடிக்க முயற்சி செய்தது.
தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்கும் நடைமுறை இனி கிடையாது என்ற நிலைக்கு வெகு விரைவில் வந்துவிடுவோமோ? அப்படி நடக்காது என்று நம்புகிறேன், ஆனால் அப்படியொரு ஆபத்து ஏற்படாது என்றும் கூறிவிட முடியாது. ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்ற கொள்கை முழக்கம் காங்கிரஸை மட்டும் குறி வைப்பதல்ல. “சிறிய கட்சிகள் எல்லாம் மறைந்துபோய்விடும், பாஜக மட்டுமே அரசியல் களத்தில் தேசியக் கட்சியாக நீடிக்கும்” என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் பேசியிருக்கிறார்; இது வெறும் பேச்சல்ல, பாஜகவின் தோட்டத்தில் கவனமாக வளர்க்கப்படும் அரசியல் லட்சியச் செடி.
மக்கள் தங்களுடைய இறையாண்மையை ஒரே நாளில் இழந்துவிடமாட்டார்கள். மெதுவாகக் கொல்லும் நஞ்சைப் போல அது உட்செலுத்தப்படும். மக்களுடைய தனிப்பட்ட சுதந்திரம், பேச்சுரிமை – எழுத்துரிமை, மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை, அச்சமற்று இருப்பதற்கான உரிமை ஆகியவை படிப்படியாக மறுக்கப்பட்டு, அந்த அரிமானம் பரவும். இந்தியா இப்போது எந்த திசை நோக்கிச் செல்கிறது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
உதிர்கிறதா மதச்சார்பின்மை?
உலகிலேயே அதிக மக்கள்தொகை உள்ள நாடு என்ற நிலையை இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் எட்டவிருக்கிறது. மக்கள்தொகை அதிகபட்சமாக 160 கோடியை எட்டிவிடும். மகப்பேறு விகிதங்கள் ஒரு புள்ளியை நோக்கிக் குவிவதால், வெவ்வேறு மதங்களுக்குள்ள மக்கள்தொகை சதவீதம் இப்போதிருப்பதிலிருந்து பெருமளவு மாறிவிடப் போவதில்லை. இந்துக்கள் 78.4%, முஸ்லிம்கள் 14.4%, கிறிஸ்தவர்கள் 2.2%, சீக்கியர்கள் 1.7%, மற்றவர்கள் 3.3%. முதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா பன்மைத்துவ நாடாக இருந்துவிட்டது.
இப்போதும் இந்தியா பன்மைத்துவ நாடாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த பன்மைத்துவத்தை மறுக்கும் முனைப்பு இப்போது (ஆட்சியாளர்களிடம்) தெரிகிறது. அதற்கு மாறாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பன்மைத்துவ சமூகங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுவரும் நன்மைகள் பெருமையுடன் அங்கீகரிக்கப்படுகின்றன. அவர்களுடைய நிறுவனங்களான நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள், ஊடகம் ஆகியவை பன்மைத்துவத்தைத் தேடி, அவற்றைத் தங்களுடைய அமைப்புகளில் இடம்பெற ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் இப்போது இஸ்லாமியர், கிறிஸ்தவர் சமூகங்களைச் சேர்ந்த தலா ஒருவர் நீதிபதிகளாகப் பதவி வகிக்கின்றனர். சீக்கியர் எவருமில்லை. இப்போது பதவி வகிக்கும் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பதவியிலிருந்து ஓய்வுபெறும் வரையில் அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவர் நியமிக்கப்பட மாட்டார் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவால் மதச்சார்பற்ற நாடாக அல்லாமல் வேறு எப்படியாகவும் இருக்க முடியுமா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்? இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் விலக்கினால் நம்முடைய இசை, இலக்கியம், திரைப்படம், விளையாட்டு, அறிவியல், மருத்துவம், சட்டம், ஆசிரியப் பணி, அரசுப் பணி ஆகியவை வளம் குறைந்துவிடும். மதச்சார்பின்மை என்ற கருத்துக்கு இழிவான பொருளைக் கற்பித்தவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தவர். அதை சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தும் ‘காக்காய் பிடிக்கும் உத்தி’ என்று இகழ்கின்றனர். அந்தத் தவறான கண்ணோட்டம்தான், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்த அரசியல் சட்டப்படியான தனி அந்தஸ்தை ரத்துசெய்வது என்ற அவர்களுடைய முடிவுக்குக் காரணமாக அமைந்தது.
தேர்தல் பிரதிநிதித்துவம், கல்வி – வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, மொழிப் பயன்பாடு, உணவுப்பழக்கம், உடையணியும் பாணி, தனிச்சட்டம் என்று அனைத்திலும் இந்தத் தவறான கண்ணோட்டத்தைத்தான் அவர்கள் காட்டுகின்றனர். மதச்சார்பின்மை மரணிக்கும் செய்தியும், இந்து ராஷ்டிரம் என்று இந்தியாவை அறிவிப்பதும் இந்திய ஜனநாயகத்துக்கே சாவு மணி அடிக்கும் செயலாகிவிடும். பெரும்பான்மை இந்தியர்கள் அப்படியொரு நிலைமை ஏற்படுவதை விரும்பவில்லை. ஆனால், பாஜகவின் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கின்றனர். அடக்க முடியாத பெரும் சக்தி (இந்துத்துவ ஆதரவாளர்கள்), அசைய முடியாத கூட்டத்தை (மிதவாத, சகிப்புத்தன்மையுள்ள இந்தியர்கள்) நேருக்கு நேர் சந்திக்கும்போது யார் வெற்றிபெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
உதிர்கிறதா ஜனநாயகம்?
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகமாகிவிடாது. ஜனநாயகம் என்பது ஒவ்வொரு நாளும் பேச்சுவார்த்தை, விவாதம், கருத்து மோதல் – கருத்தொற்றுமை ஆகியவற்றால் வலுப்படுத்தப்படுவது. அதை அடிப்படையாக வைத்துப்பார்த்தால் இந்தியாவில் ஜனநாயகம் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. ஆண்டின் மிகச் சில நாள்களில் மட்டுமே நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கூடுகின்றன. ‘இந்தியாவிலிருப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம்’ என்கிறது சுவீடனை மையமாகக் கொண்டு செயல்படும் ‘வி-டெம்’ என்ற ஆய்வு நிறுவனம். உலக அரங்கில் இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்காக 2021இல் அதை 53வது இடத்துக்கு கீழ் இறக்கியது அந்த அமைப்பு.
இந்தியாவின் அனைத்து மாநிலக் கட்சிகளும் தத்தமது மாநிலங்களில் தங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றன. அதேசமயம், பிற மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவுக்கு எதிராகப் போராட முன்வருவதில்லை. பாஜக தேசியத் தலைவர் நட்டா விரும்புவதைப் போல, ‘ஒரே கட்சியின் ஆட்சி’ என்கிற கொடுங்கனவு நனவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ‘நாங்கள்தான் ஜனநாயகம் - இந்தியர்களுக்குரிய அத்துணை அம்சங்களும் எங்கள் கட்சிக்குள்ளேயே சங்கமித்துக் கிடக்கின்றன’ என்றுகூட அவர் உரிமை பாராட்டக்கூடும்!
இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்துக்கு வணக்கம் செலுத்தும்போது, அதை வடிவமைத்த பிங்காலி வெங்கையாவை நினைவுகூருங்கள். இப்போதைய அரசியல் பின்னணியில் அந்த மூவர்ணங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய மூன்றைத்தான்.

4

2





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.