கட்டுரை, அரசியல், சட்டம் 7 நிமிட வாசிப்பு

அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை எங்கே?

ப.சிதம்பரம்
29 Aug 2022, 5:00 am
1

குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற பெண்ணைத் தவிர வேறு யாராலும் மக்கள் படும் துயரை அவ்வளவு உருக்கமாக வெளிப்படுத்தியிருக்கவே முடியாது; கலவரக்காரர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, நெருங்கிய உறவினர்களை அவர்களுடைய வன்செயல்களுக்கு பலி கொடுத்து, காவல் துறை விசாரணை – நீதிமன்ற விசாரணை என்று பல முறை அலைக்கழிக்கப்பட்டு, கொடிய விதத்திலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர் பில்கிஸ். இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகள் மறுக்கப்படும் எளியவர்கள் ஆகியோரின் கூட்டுக் குரலாக ஒலிப்பது அவர் விடுத்த கோரிக்கையான, ‘அச்சமின்றி வாழும் என்னுடைய உரிமையை எனக்குத் தாருங்கள்’ என்பது.

கொலைகாரர்களின் அனுஷ்டானங்கள்!

பில்கிஸ் பானுவின் சோகக் கதை அனைவருக்கும் தெரிந்த ஆவணமாகிவிட்டது. குஜராத் மாநிலத்தில் 2002இல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இளம் தாயான பில்கிஸ் (21) அப்போது கர்ப்பிணியாக இருந்தார். கலவரக் கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியது, கூட்டாகப் பாலியல் வல்லுறவு கொண்டது, அவருடைய 3 வயது மகள் உள்பட ஏழு பேரைக் கொன்றது.

இத்தனை கொடூரங்களுக்குப் பிறகும் அவர் ஏதோவொரு வகையில் தப்பி உயிர் பிழைத்ததால் இந்த உண்மைகள் வெளியுலகுக்குத் தெரியவந்தன. பிறகு நடந்த விசாரணையில், அவரைத் தாக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11 பேர் குற்றமிழைத்தவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஆகஸ்ட் 15 அன்று அந்த 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இந்தியாவின் பெண்களுடைய ஆற்றல் குறித்துப் பெருமை கொள்ளுமாறு செங்கோட்டையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய சில மணி நேரங்களுக்கெல்லாம், அந்த 11 பேரின் ஆயுள் தண்டனையில் எஞ்சிய காலம் ரத்துசெய்யப்பட்டு விடுதலை பெற்றனர்.

அவர்களை குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் மாலைகளுடனும் இனிப்புகளுடனும் வரவேற்றனர். கூட்டத்திலிருந்த சிலர் அவர்களுடைய கால்களில் விழுந்து ஆசியும் பெற்றனர். ஆசிபெற்றவர்களில் ஒருவர் சொன்னார், ‘அவர்கள் அனைவரும் நல்ல அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள்’ என்று!

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய அவர்களுடைய கோரிக்கை மனுவை, மாநில அரசு நியமித்த 10 உறுப்பினர் பரிசீலனைக் குழு ஏற்றது. அந்த 10 பேரில் மூன்று பேர் மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், எஞ்சிய ஏழு தனி நபர்களில் ஐந்து பேர் பாஜக உறுப்பினர்கள். அவர்களில் இருவர் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

இந்தச் சம்பவத்துக்காக 2002இல் பாஜகவிலிருந்து ஒருவர்கூட மன்னிப்பு கோரவில்லை. 2022லும் பாஜக சார்பில் யாரும் மன்னிப்பு கோரவில்லை. பில்கிஸ் பானுவும் அவருடைய குடும்பத்தாரும் இந்த விடுதலைக்குப் பிறகு எங்கோ தலைமறைவாகிவிட்டனர். அவர்களுடைய பாதுகாப்பு குறித்து பாஜகவைச் சேர்ந்த ஒருவர்கூட கவலை தெரிவிக்கவில்லை.

மறைந்தது சமத்துவம்

இந்த நிகழ்வு சொல்லவரும் கருத்து மிகவும் தெளிவானது. இந்தியர்கள் அனைவருமே சட்டத்தின் முன் சமம் அல்ல, அனைவருக்குமே சமமான பாதுகாப்புகளும் கிடையாது என்பதே. எல்லா இந்தியர்களுமே அச்சமில்லாமல் வாழ்ந்துவிட முடியாது. உண்மை என்னவென்றால், மேலும் மேலும் அதிகமான இந்தியர்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.

ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் நடுக்கும் குளிர் இரவில் வீட்டிலிருந்த பத்திரிகையாளருக்கு ஒரு கட்டளை வந்தது. அருகில் இருக்கும் வெளிப்புற ஒளிபரப்பு வேனுக்குச் சென்று, அவசரச் செய்தியொன்றை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டது. “இந்தக் குளிரில் என்னால் போக முடியாது என்று நீங்கள் மறுக்க வேண்டியதுதானே?” என்று அவரைக் கேட்டேன். “வயதான பெற்றோர் என்னுடன் வசிக்கிறார்கள். நான் வாங்கிய அடுக்ககத்துக்கு மாதம்தோறும் கடன் தவணை கட்டியாக வேண்டும். உரிமையை வலியுறுத்தி, ‘போக முடியாது’ என்று மறுத்தால் எனக்கு வேலை போய்விடும்” என்றார்.

செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி நிறுவனங்களிலும் பணிபுரியும் பல பத்திரிகையாளர்கள் இதையே என்னிடம் தெரிவித்தனர். நிர்வாகம் சொல்வதைக் கேட்க மறுத்தால் வேலை போய்விடும் என்றார்கள். இப்போதுள்ள சூழலில் வேலை போனால் வேறொரு இடத்தில் வேலை கிடைப்பது அரிது என்று அச்சப்படுகிறார்கள். பல பத்திரிகைகளில் இப்படி நிர்வாகத்தின் உத்தரவைக் கேட்க மறுத்து வேலைகளை இழந்த பத்திரிகையாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் பலர் அவர்களுக்குக் கண்கண்ட உதாரணங்களாக இருக்கிறார்கள்.

ஊடக அதிபர்களும்கூட அச்சத்தில்தான் இருக்கிறார்கள். அரசுக்கு எதிராகச் செயல்பட்டால், அரசாங்கம் தரும் விளம்பரங்கள் வற்றிவிடும். தனியார் நிறுவனங்களும் தங்களுடைய விளம்பரங்களைத் தருவதைக் குறைத்துக்கொள்ளும். இப்போது புதிய அச்சம் என்னவென்றால், நிர்வாகத்தையே வேறு யாராவது கைப்பற்றிவிடுவார்களோ என்பது.

வங்கியாளர்களும் அச்சத்தோடு வாழ்கிறார்கள். அதிகத் தொகைக்குக் கடன் கேட்டு விண்ணப்பங்கள் வருகின்றனவா, அவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் தருகிறீர்களா என்று ஒரு வங்கியாளரைக் கேட்டேன். கூப்பிடு தூரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு என்னருகில் வந்த அவர், நான் ஏன் அனுமதிக்க வேண்டும், பணியிலிருந்து ஓய்வுபெற இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்றன என்று காதோரம் கிசுகிசுத்தார்.

அரசு அதிகாரிகளும் அச்சத்துடன்தான் வாழ்கின்றனர். மோடி பதவிக்கு வந்த முதலாண்டில், வெளிப்படையாகப் பேசும் அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள் என்று கூறப்பட்ட கதையை நானும் உண்மை என்றே நம்பினேன். ஆள்வோர் தரப்பில் முன்வைக்கப்படும் ஒரு திட்டம் எப்படி மோசமானது, பொருளாதாரத்துக்கு எவ்வளவு கேடு விளைவிக்கும் என்று பலரும் கலந்துகொண்ட கூட்டத்தில் அதிகாரியொருவர் மிகவும் வெளிப்படையாகப் பேசினாராம். பிறகு அவர் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார். இந்த அவமானத்திலிருந்து தப்பிக்கும் வழியை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். இப்போது மிகச் சிலர்தான் மத்திய அரசுப் பணிக்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.

மக்களிடையே அச்சம்

நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சத்தோடுதான் வாழ்கின்றனர். பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில மசோதாக்களையோ, அல்லது மசோதாக்களின் சில பிரிவுகளையோ எதிர்க்கின்றனர்; எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வாரம் முழுவதற்கோ, தொடர் முடியும் வரையிலோ இடைநீக்கம் செய்வதைக்கூட அவர்கள் விரும்புவதில்லை, ஆனால், இவற்றை வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். சமீபத்தில் அரசால் கைவிடப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள், குற்றவியல் நடைமுறைச் சட்ட (அடையாளம் காணல்) திருத்த மசோதா ஆகியவற்றை அவர்களில் பலர் விரும்பவில்லை.

அமைச்சர்களும் அச்சத்துடன்தான் வாழ்கின்றனர். தங்களுடைய துறைச் செயலாளர்கள் பிரதமர் அலுவலகத்திடமிருந்தோ, மத்திய அமைச்சரவைச் செயலகத்திடமிருந்தோ நேரடிக் கட்டளைகளை அன்றாடம் பெற்று அதன்படியே செயல்படட்டும் என்று விட்டுவிட்டார்கள். அவர்களுடைய ஆணைப்படியே கோப்புகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அமைச்சரவைச் செயலகம் எழுதி அனுப்பும் குறிப்புகளை அப்படியே ஏற்று, கையெழுத்திட்டு அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கின்றனர்!

தொழிலதிபர்களும் வர்த்தகர்களும்கூட அச்சப்படுகின்றனர். சி.பி.ஐ., இ.டி., வருமானவரித் துறை ஆகியவற்றுக்கு மட்டும் இப்போது அஞ்சுவதில்லை. ஜிஎஸ்டி நிர்வாகம், டிஆர்ஐ, எஸ்எஃப்ஐஓ, செபி, சிசிஐ, என்ஐஏ, என்சிபி ஆகிய முகமைகளுக்கும் அஞ்சுகின்றனர். இவை அனைத்துக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திடமிருந்து உதவிகள் எதையும் பெற முடியாத சிறு குறு நடுத்தரத் தொழில் பிரிவுகள், இப்போதைய பொருளாதாரச் சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமலும் அரசிடம் கோரிக்கைகளை வைக்க முடியாமலும் உற்பத்தி அலகுகளை இழுத்து மூடும் நடவடிக்கையை எடுக்கின்றன.

பொதுமக்களோ குற்றச் செயல்களின் அதிகரிப்பு, கும்பல்களின் வன்முறை, காவல் துறை அத்துமீறல்கள், பொய் வழக்குகள் ஆகியவற்றுக்கு அஞ்சுகின்றனர். மிகவும் குறிப்பாக - பெண்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள், சமூக சேவை அமைப்புகளின் தொண்டர்கள், எழுத்தாளர்கள், பொதுவெளியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவோர், பத்திரிகைகளுக்குக் கருத்துச் சித்திரம் வரைவோர், திரைப்படத் தயாரிப்பாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரும் அரசின் செயல்களால் அஞ்சுகின்றனர். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த எவராவது ஒருவரை அரசின் துறை தனது கூரிய நகத்தால் கொத்தித் தூக்கும் செய்தி அன்றாடம் தவறாமல் இடம்பெறுகிறது.

மாணவர்களும் அச்சத்திலேயே வாழ்கின்றனர். நீட், கியூட் என்று மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்படும் தேர்வுகளும் அதைக்கூட சரியாக எழுத முடியாதபடிக்கானத் தொழில்நுட்பத் தடங்கல்களும் மாணவர்களைத் தொடர்ந்து அச்சப்பட வைக்கின்றன. யாரைத் தேர்ந்தெடுப்பார்கள், தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வரையறைகள் என்ன, கல்வி ஆண்டு எப்போது தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாது.

குறையவே குறையாத விலைவாசி, வேலையிழப்பு அபாயம், வளர்ந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் ஏழைகளும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இல்லாத வேலையைத் தேடும் வேலையை பலரும் நிறுத்திவிட்டனர். 2017 முதல் 2022 வரையில் 2.1 கோடி பெண்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டனர் என்று சிஎம்ஐஇ அறிக்கை தெரிவிக்கிறது.

மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாழலாம் என்று உறுதி கூற அரசில் யாராவது இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்; அந்தோ – அப்படி ஒருவர்கூட இப்போது இல்லையே!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


5


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

அரசியல் கட்சிகளின் அச்சத்தை விட்டு விட்டீர்கள்.. குறிப்பாக காங்கிரஸ் கட்சி..

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்!ராஜ குடும்பம்பசுமைத் தோட்டம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மொரொக்கோதினமலர்எல்ஐசிபுதினம்குற்றங்களும்எஸ்.எஸ்.ஆர். பேட்டிமேல் இந்தியாகை சின்னம்அஸ்வினி வைஷ்ணவ்கருணாநிதி சகாப்தம்கூகுள் பிளே ஸ்டோர்ஷேக் அப்துல்லாபாபர் மசூதி இடிப்புபாலு மகேந்திரா ஆனந்த விகடன் பேட்டிசமஸ் பெரியார்உண்மையில் ஹிஜாப்தான் பிரச்சினையா?எழுத்துச் சுதந்திரம்வனப்பகுதிஇருண்ட காலம்பணக்கார நாடுகார்பன் அணுக்கள்பதேர் பாஞ்சாலி அருஞ்சொல்நடிகைகளின் காதல்திருநங்கைகள்புத்தகத் திருவிழாநடவடிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!