கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, சுற்றுச்சூழல், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

தத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?

சமஸ் | Samas
11 Dec 2023, 5:00 am
4

மிழகத்தின் தலைநகரம் என்பதைத் தாண்டி திமுகவுக்கு வரலாறு சார்ந்தும் முக்கியமானது சென்னை. 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பே 1959இல் சென்னை மாநகராட்சியைத் தன் வசப்படுத்தியது திமுக; அதன் முதல் மேயராக அ.பொ.அரசு அமர்ந்தார்.

அங்கிருந்து கணக்கிட்டால், திமுகவின் நிர்வாகத்துக்கு சென்னை அறிமுகமாகி ஆறு தசாப்தங்கள் ஆகின்றன. இதனூடாக 23 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலும் திமுக இருந்திருக்கிறது. தமிழகத்தின் ஆட்சியை அது கைப்பற்ற முடியாத தேர்தல்களிலும்கூட திமுகவை சென்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. சென்னைக்கு எந்தக் கட்சியைவிடவும் கடமைப்பட்டது திமுக என்று சொல்லலாம்.

திமுகவின் முந்தைய தலைவர்கள் அல்லது தமிழ்நாட்டின் முந்தைய முதல்வர்களைப் போல அல்லாமல், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின். சென்னையில் சட்டமன்ற உறுப்பினராக 30 ஆண்டுகள், மேயராக 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இன்னமும் பெருமழை என்றால், சென்னை தத்தளிக்கும் சூழலில் இருப்பதை அவராலோ, திமுகவாலோ எப்படி நியாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தொடரும் மக்கள் வதை

2015இல், நூற்றாண்டு காணாத ஒரு பெருமழையை சென்னை எதிர்கொண்டபோது அன்றைய அதிமுக அரசு பெருமளவில் ஸ்தம்பித்திருந்தது. ‘முதல்வர் ஜெயலலிதா எங்கே?’ எனும் குரல்கள் எங்கும் கேட்டன. சமூகம் தனக்குள் கை கோத்துக்கொண்டுதான் மீண்டெழ வேண்டி இருந்தது.

2023இல், சீரமைப்புப் பணியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிற்கிறார். அரசு இயந்திரம் இரவு பகல் தொடர்ந்து செயல்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் – அரசு ஊழியர்கள் களத்தில் நிற்கிறார்கள். கொட்டும் மழையிலும் சூழ்ந்திருக்கும் வெள்ளத்திலும் பணியாற்றுவோரின் அர்ப்பணிப்பு வணக்கத்துக்குரியது. ஆனால், மழையை எதிர்கொள்வதில் அரசின் செயல்திட்டத் தோல்வியையோ, மக்களுடைய வதைகளையோ அரசு தன் சீரமைப்புப் பணிகளைக் கொண்டு மறைத்துவிட முடியாது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கொல்வது மழை அல்ல!

சமஸ் | Samas 17 Nov 2015

திட்டமிடா நகரமயமாக்கல்

இந்தியாவில் இன்று அதிகம் நகர்மயமாகியுள்ள மாநிலம் தமிழ்நாடு; கிட்டத்தட்ட சரிபாதி மக்கள் நகரங்களில் இருக்கிறார்கள். நேரெதிராக, நம்முடைய பெரும்பான்மை நகரங்கள் முறையான திட்டமிடல் இன்றி உருவானவை. ரியல் எஸ்டேட்காரர்கள் தேர்ந்தெடுக்கும் திசைக்கும், அவர்களுடைய லாபிக்கும் ஏற்றபடிதான் நம்முடைய ஊர்கள் விரிந்திருக்கின்றன.

வீங்கிப் பெருத்திருக்கும் நகரங்களைச் சீரமைக்க எங்கோ ஒரு புள்ளியில், தொலைநோக்கிலான செயல்திட்டத்தை ஓர் அரசு முன்னெடுப்பது முக்கியம். நகரத்தின் உள்கட்டமைப்பில் உள்ள கோளாறுகளைக் களைந்து, புதிய அமைப்பை உருவாக்குதல் அவசியம்.

தமிழ்நாட்டின் முகம்; ஒரு கோடிப் பேருக்கும் மேல் வாழும் நெருக்கடியான நகரம்; கடல் மட்டத்திலிருந்து சில மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் ஊர் எனும் பின்னணியில், பருவநிலை மாற்றங்கள் தந்திருக்கும் வெளிச்சத்தில், சென்னையை மறுகட்டமைத்தல் தமிழர்கள் முன்னுள்ள முக்கியமான பணி. இதில் மழைநீர் – நீர்நிலைகள் - குடிநீர் - கழிவுநீர் – குப்பைகள் மேலாண்மை தலையாயது.

பொதுவெளியில் 2015க்குப் பிறகு, இதுகுறித்து நிறையவே பேசப்பட்டது. திமுகவும் பேசியது என்றாலும், ஆட்சிக்கு வந்த பின் முந்தைய அரசுகளைப் போல, அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு, தைலம் பூசும் சிகிச்சையையே அதுவும் தொடர்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பேரழிவுக்கு யார் பொறுப்பு?

சமஸ் | Samas 10 Nov 2015

மக்களுடைய கேள்விகள்

2015 பேரிடர் காலகட்டத்தில், மழையை எதிர்கொள்ளல் தொடர்பாக நிபுணர்களால் அதிகம் பேசப்பட்ட ஐந்து விஷயங்களை எடுத்துக்கொள்வோம். தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கணிசமான நீர்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டாதோர் இல்லை. ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையே சுட்டிக்காட்டியது. எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது நடைமுறை சாத்தியம் அற்றது என்றாலும், நீர்ப் போக்குக்குப் பெரும் பாதிப்புகளைத் தரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுக்கு என்ன தயக்கம்?

நீர்ச்சேகரங்களின் விஸ்தரிப்பு: நிலம்தான் பெரும் உறிஞ்சான். வடிகால்களைவிடவும் அதிகப் பலன் தரக் கூடியன நீர்ச்சேகரங்கள். மழைநீரைக் கடத்துவதுடன் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துபவை. நகரத்தின் நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் எவ்வளவு ஆழச் சாத்தியம் கொண்டிருக்கின்றனவோ அவ்வளவுக்கு ஆழப்படுத்துதல்; அதே போன்று, கல்வியகங்கள், பூங்காக்கள், திடல்கள் என்று அரசுக்குச் சாத்தியமான இடங்களில் எல்லாம் நிலத்தடி நீர்ச்சேகரங்களை உருவாக்குதல்; புதிய கட்டிடங்களை அனுமதிக்கும்போது, மனையை முழுமையாகக் கட்டுமானத்தால் ஆக்கிரமிக்காமல், சுற்றிலும் குறைந்தது 25% பகுதி மண் தரையாக இருப்பதையும் ஒவ்வோர் அடுக்கக வளாகத்திலும் மழைநீர் சேகரிப்புக் கிணறு உருவாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துதல்; இந்த நடவடிக்கையை எடுப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை?

உள்கட்டுமானப் புனரமைப்பு: சென்னையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மழைநீர் வடிகால்கள் தொடர்ந்து கட்டப்படுகின்றன. என்ன கொள்ளளவு இலக்கை இவை கொண்டிருக்கின்றன? நூற்றாண்டு மழையளவு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு - 2015 போன்று ஒரு நாளில் பெருமழை கொட்டித் தீர்த்தால், அடுத்த சில மணி நேரங்களில் வடிந்துவிடக் கூடிய அளவுக்கு – விரிவான வடிகால் கட்டுமானம் அமைப்பது நகரின் தேவையாக இருந்தது. இப்போதைய வடிகால் ஐம்பதாண்டு மழையைக்கூட தாங்காது என்பதையே இந்த மழை நிரூபித்திருக்கிறது. வரைமுறையற்ற குப்பை உருவாக்கத்தைக் கட்டுப்படுத்தலும் மறுசுழற்சிக் கையாள்கையையும் இந்தப் பணியின் பிரிக்க முடியாத இன்னோர் அம்சம். குடிநீர் விநியோகக் கட்டுமானத்தைப் பலப்படுத்தப்படுவதோடு, இணையாக ‘புழங்கு நீர்’ விநியோகக் கட்டுமானத்தை உருவாக்குவது தொடர்பிலும் அப்போது பேசினோம். என்னானது?

ஒரே நிர்வாகம்: குடிநீர், மழைநீர், கழிவுநீர், குப்பைகள் மேலாண்மை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். தன்னுடைய செயல்பாட்டைக் கறாராகச் செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவும், அதேசமயம் செயல்பாடு சார்ந்து ஏற்படும் எந்தக் கோளாறுக்கும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் அது உருமாற்றப்பட்டிருக்க வேண்டும். இல்லையே?

சூழலோடு இயந்த பார்வை: மாறிவரும் பருவநிலைச் சூழலில், ஏற்கெனவே நாம் சென்ற அதே பாதையில் பயணிக்க முடியாது. மாநிலத்தின் தொழில் கொள்கை முதல் உள்ளாட்சிகளின் அதிகாரம் வரை சூழலோடு இயைந்த பார்வையை வரித்துக்கொள்வது காலக் கட்டாயம். குறைந்தபட்சம் ‘பருவநிலைச் செயல்பாட்டுத் திட்ட’த்தைக்கூட இன்னும் சென்னை மாநகராட்சியால் அறிவிக்க முடியவில்லை. நகரங்கள் – கிராமங்கள் இடையிலான வேறுபாடுகளைக் குறைக்கும், அதிகாரங்களைப் பகிரும், ஏனைய நகரங்களை வளர்த்தெடுக்கும் கொள்கையை எப்போது தமிழக அரசு சிந்திக்கும்?  

பொறுப்பாக்கும் கடமை

மழைநீர் மேலாண்மைக்காக இந்த அரசு ரூ.4,000 கோடியில் செயல்படுத்தியுள்ள வடிகால் திட்டமானது, பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த வடிகால்கள் பிரயோஜனம் இல்லை என்கின்றன எதிர்க்கட்சிகள். வடிகால்கள் பெரிய அளவில் உதவியிருக்கின்றன என்கிறது ஆளுங்கட்சி.

முற்றிலுமாக இந்த வடிகால்களின் பங்களிப்பை நிராகரிப்பது அபத்தம். அதேசமயம், இத்தகு வடிகால் அமைப்பைக் கொண்டு பெருமழையை எதிர்கொண்டுவிட முடியும் என்று யாரேனும் நம்புவது பரிதாபம்.

அரசு உண்மையாகவே பெருமழையை எதிர்கொள்ளும் ஒரு தொலைநோக்கிலான திட்டத்தை எதிர்பார்த்திருந்து, இப்படி ஒரு வடிகால் திட்டத்தை யாரோ முன்மொழிந்து, அரசை நம்ப வைத்துவிட்டிருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். குறிப்பாக, உலகில் எங்கும் இல்லாத வகையில், 145 கிமீ மெட்ரோ பாதை ஒரு நகரத்தில் உருவாக்கப்படும் அதே காலகட்டத்தில், இப்படியொரு வடிகால் திட்டத்தைப் பல ஒப்பந்ததாரர்கள் வழியே துண்டு துண்டாகச் செயல்படுத்த யோசனை கொடுத்தவர்கள் தங்கள் முடிவுக்கான நியாயத்தைப் பொதுவெளியில் விளக்கக் கடமைப்பட்டவர்கள்.

உருப்படிகள் அல்ல மக்கள்

வெள்ளத்தால் தீவுத்தீவாகத் துண்டுபட்டு, புயல் கரையைக் கடந்து நான்கு நாட்களுக்குப் பின்னரும், இன்னமும் பல இடங்களில் குடியிருப்புகளைச் சூழ்ந்து நிற்கிறது நீர். மின்சாரம் – இணைய விநியோகம் சீரடையவில்லை. தண்ணீருக்கும் பாலுக்கும் பரிதவித்து நிற்கின்றனர் பல்லாயிரம் மக்கள். பொது இழப்புக்கு அப்பாற்பட்டு, பல்லாயிரம் கோடி மதிப்பிலான மக்களுடைய உடைமைகள் நாசமாகியுள்ளன. உருப்படிகள் இல்லை மக்கள்.  ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரங்களைத் தம் வருவாயிலிருந்து வரியாகச் செலுத்துபவர்கள். தாம் கண்ணியமாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

இந்த விவகாரத்தில் அரசின் போதாமை - தவறுக்கு முதல்வர் ஸ்டாலின் முகம் கொடுக்க வேண்டும். இந்தச் சீரழிவுக்குக் காரணமான பிரதிநிதிகள் – அதிகாரிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாபெரும் செயல்திட்டத்தைச் சென்னை எதிர்நோக்கியுள்ள தருணம் இது. கால மாற்றத்துக்கேற்ப சென்னையை மறுகட்டமைக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இருந்தால், அத்தகு பெரும் பணியைக் கறாரான நடவடிக்கைகளால் மட்டுமே மேற்கொள்ள முடியும்!

-‘தினமலர்’, டிசம்பர், 2023

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சென்னையை நாசமாக்குகிறோம்: ஜனகராஜன் பேட்டி
சென்னையில் வெள்ளத்தைத் தவிர்க்க ஒரு செயல்திட்டம்
சென்னை தத்தளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மழையை எதிர்கொள்ள நிரந்தரக் கட்டமைப்பைத் தமிழ்நாடு அரசு சிந்திக்கட்டும்
பேரழிவுக்கு யார் பொறுப்பு?
கொல்வது மழை அல்ல!
கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

1

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   5 months ago

தனி தமிழ் நாடு பற்றி சிந்திக்க வேண்டும்... வரியை வாரி வழங்கி விட்டு, நிவாரண உதவி பிட்சை கேட்பத போல உள்ளது... நிர்மலா வை மன்னிப்பு கேட்கும் வரை தமிழ் நாட்டில் நுழைய விட கூடாது... யார் சாவி கொடுத்ததால் அது (நிர்மலா) இங்கே தூத்துக்குடி க்கு வந்தது.....

Reply 0 1

அ.பி   5 months ago

மனிதத்தன்மை யற்ற ஜந்து

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

R Thillai Govindan    5 months ago

இனிமேலாவது முழு முயற்சியுடன் உண்மையாக ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது நல்லது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abi   5 months ago

ஐஏஎஸ் அதிகாரிகள் பேச்சை மட்டுமே கேட்பேன்.. வேறு யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்... All is well...

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கேட்கும் திறன்தேரடிஜர்னலிஸம்காணொலிசட்டப்பேரவைசென்னை மழைநீர் வடிகால்: வேண்டும் புதிய வடிவமைப்பு!ஆடுதொட்டிதேசியவாத அலைகிழக்கு பதிப்பகம்ஆயுர்வேதம்கடுப்புமம்தா பானர்ஜிகிராமங்கள்மகாஜன் ஆணையம்சிக்கிம் அரசுவிவேகானந்தரின் சிந்தனைகளில் வர்ணமும்திருமாவாசகர்கள் கடிதம்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கட்டுரைசர்வதேசம்அறுவடைகுற்றவுணர்ச்சிநடிகர் சூர்யாநாகூர் இ.எம்.ஹனீஃபாதிராவிட நிலம்திபெத்சமஸ் பார்வைகுழந்தைகளைக் கையேந்த விடாதீர்!கல்விப்புலம்வாழ்க்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!