கட்டுரை, அரசியல், சட்டம் 3 நிமிட வாசிப்பு

நீதித் துறை யார் கையில்?

ஏ.பி.ஷா
02 Mar 2023, 5:00 am
1

ச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு மாதத்துக்கெல்லாம் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்  எஸ்.அப்துல் நசீர். அயோத்தி ராமர் கோயில் வழக்கில் ‘அரசமைப்புச் சட்ட அமர்வு’ எடுத்த முடிவுக்கும், இப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும் என்று மேலும் பலரைப் போலவே நானும் நம்புகிறேன்.

நரேந்திர மோடி தலைமையில் 2014இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, பதவியிலிருந்து ஓய்வுபெற்ற உடனேயே உயர் அரசியல் நியமனப் பதவியைப் பெறும் உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிமான் அவர். முதலில் நீதிபதி பி.சதாசிவம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு நீதிபதி ரஞ்சன் பி.கோகோய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் ஆனார்.

முக்கியம் என்று அரசு கருதும் வழக்குகளில், அதற்கு ஆதரவாகத் தீர்ப்பு சொன்னால் ஓய்வுபெற்ற பிறகு இப்படிப்பட்ட உயரிய பதவிகள் கைம்மாறாக வழங்கப்படும் என்று இப்போது பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு ஆட்சியாளர்கள் உணர்த்தும் மறைமுக செய்திதான் இந்த நியமனங்கள். இப்படிப் பதவிகளைத் தந்து நீதிபதிகளை ஈர்ப்பது, நீதிபதிகளிடையே அரசுக்கு இணக்கமாகப் போகும் புதிய வழக்கத்தைத்தான் தோற்றுவிக்கும்.

இப்போதுமே சில நீதிபதிகள் அதைச் செய்துவருகின்றனர். இதனால் மக்களுக்கு நீதித் துறையின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவருகிறது. நீதிபதி வி.டி.துல்ஜாபுர்கார் 1980இல் கூறினார்: “தேர்தல் வெற்றிக்காக அரசியல் தலைவருக்கு நீதிபதிகள் பூங்கொத்து கொடுப்பதோ, பாராட்டுவதோ, உயர்ந்த பதவியை ஏற்பதற்காகப் புகழ் மொழிகளால் அர்ச்சிப்பதோ நீதித் துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பி்க்கையையே ஆட்டம் காண வைத்துவிடும்.”

நீதித் துறை மாண்பு மீதான அடி

மாநில ஆளுநர் பதவி என்பது அலங்காரமான அரசமைப்புச் சட்டப் பதவியாகத் தோன்றினாலும், உள்ளூர அது அரசியல் சார்புள்ள நியமனப் பதவிதான். எந்தக் காலத்திலும் ஆளுங்கட்சிகளின் நீண்ட கால அரசியல் விளையாட்டே, நீதித் துறையின் சுதந்திரத்தை முழுதாகவோ – பகுதியளவுக்கோ வெவ்வேறு விதங்களில் வலுவிழக்க வைப்பதுதான்; இந்த விவகாரங்களுக்கு வெளியில் நின்றுகொண்டு நடப்பவற்றை ஊன்றிக் கவனித்தால் மெதுவாக - ஆனால் நிச்சயமாக, நீதித் துறையை நிர்வாகத் துறை வலுவிழக்கச் செய்துவருவதை அறியலாம்.

உண்மையைச் சொல்வதென்றால், நீதிபதிகளுக்கு ஓய்வுக் காலத்துக்குப் பிறகு பதவிகளைக் கொடுத்து – பதவிக் காலத்தில் அவர்கள் தங்களுக்குச் சாதகமாக நடப்பதை உறுதிசெய்யும் முயற்சிகள் இப்போது மட்டுமே நடப்பவை அல்ல; காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் குறிப்பாக இந்திரா காந்தி – ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகள் இதைச் செய்திருக்கின்றன. கடந்த காலத்திலேயே இவையெல்லாம் நடந்திருக்கின்றனவே என்று சுட்டிக்காட்டுவது கோழைத்தனமான தற்காப்பு வாதமாகும்.

இப்போதைய ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியும் சம அளவுக் குற்றவாளிதான் என்பது உண்மையாக இருந்தாலும், நீதித் துறையின் சுதந்திரத்தில் ஆளும் அரசு அப்பட்டமாகத் தலையிடுவதை நியாயப்படுத்தவே முடியாது. கடந்த காலங்களில் நீதித் துறையில் சிலர் விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும் அதுபோன்ற முயற்சிகள் ஏதும் தங்களுடைய ஆட்சியில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதே அரசின் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் நல்ல நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, ஜனநாயக விழுமியங்கள் காக்கப்படவும் – நீதித் துறையின் மாண்பும் நடுநிலையும் காக்கப்பட வேண்டும்.

கூட்டணியில் தங்களுடைய கட்சிக்கு மட்டுமே அறுதிப் பெரும்பான்மை வலு இருப்பதால் ஏற்படும் அதிகாரச் செருக்கு, அந்தச் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ளவும் மேலும் வலுப்படுத்தவும் என்னவெல்லாம் செய்யலாம் என்றே சிந்திக்கத் தூண்டும். இன்றைய இந்திய அரசின் நிலை இதுதான்.

வஞ்சகமான நடத்தை

தங்களுடைய கட்சியைச் சேர்ந்தவரும் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தவருமான மறைந்த அருண் ஜேட்லி வலியுறுத்திய “நீதித் துறை சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்” என்ற வாக்குறுதியையே காற்றில் பறக்கவிடுவது வஞ்சகமான செயலாகும். பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு முக்கியப் பதவிகளைத் தரக் கூடாது என்றே ஜேட்லி தன்னுடைய வாழ்நாளில் வலியுறுத்தினார். நீதிபதிகள் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு எழுத வேண்டும் என்று இத்தகைய நியமனங்கள் மூலம் தூண்டுகிறது காங்கிரஸ் அரசு என்றே பாஜக அப்போது வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது.

இந்தச் சூழலில், நீதித் துறையும் குற்றத்தில் குறைந்தது அல்ல; இந்திய நீதிபதிகள் இப்படிப்பட்டத் தூண்டல்களுக்கு வளைந்து கொடுக்காமல் நேராக நின்றுச் செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். நீதிபதிகள் தார்மிகப் பொறுப்புணர்வுடனும் ஒழுக்கத்துடனும் - நீதிபதி அகில் குரேஷி சமீபத்தில் இருந்ததைப் போல - இருக்க வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நீதிபதிகள் நியமனம்: என்னதான் தீர்வு?

ப.சிதம்பரம் 05 Dec 2022

பதவி உயர்வைப் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் இருந்த நிலையிலும் அது மறுக்கப்பட்டதல்லாமல், ஓய்வுபெறுவதற்கு முன்னால் வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு அவர் இடமாற்றமும் செய்யப்பட்டார். “தங்களுடைய நோக்கங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று அரசு நினைத்ததே ‘சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்படுகிறவன்’ என்று எனக்கு தரப்பட்ட சான்றிதழாகக் கருதுகிறேன், அந்தப் பெருமிதத்தோடு பதவியிலிருந்து விடைபெறுகிறேன்” என்றார் குரேஷி. அரசாங்கத்தால் வழங்கப்படும் இத்தகைய சன்மானங்கள் அல்லது பரிசுகள் ஒருவழிப் பாதையல்ல என்பதை நீதிபதிகள் உணர வேண்டும்; இங்கே கொடுப்பவர் அரசாகவும் - கொள்பவர் நீதிபதியாகவும் இருக்கிறார்.

அரசியல் சாயமுள்ள பதவி நியமனங்களுக்கும், நீதித் துறையின் நலன் சார்ந்த நடுவர் மன்றம், தீர்ப்பாயம் போன்ற பொறுப்புகளை நிறைவேற்றும் கடமைக்கும் உள்ள வேறுபாட்டை நீதிபதிகள் பிரித்துணர வேண்டும்.

வரையறுக்கப்பட்ட பங்களிப்புகள்

சில வகைப் பொறுப்புகளுக்கும் கடமைகளுக்கும் நீதித் துறையில் பணியாற்றியவர்களின் சட்ட அறிவு, அனுபவம், நடுநிலை, நேர்மை ஆகியவை அவசியம்; மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை, அவ்வப்போது ஏற்படும் சட்டம் சார்ந்த அல்லது மத்தியஸ்தம் அவசியம் தேவைப்படும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்; அப்படிப்பட்ட அவசியமல்லாத பதவிகள் எவை என்றும் நீதிபதிகள் தெரிந்து ஒதுக்குவது நல்லது.

மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் பெற்ற நீதிபதி கோகோய், “நீதித் துறைக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாகச் செயல்படுவேன்” என்றார். நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு அவர் செல்வதும் அதிகம் இல்லை, விவாதங்களில் பங்கேற்பதும் அதைவிடக் குறைவு என்னும்போது, அவர் சொன்னபடி செய்யவில்லை என்பது தெளிவு. “ஆளுநராகப் பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்யப்போகிறேன்” என்றார் நீதிபதி சதாசிவம். அந்தச் சேவையை, ஆளுநர் பதவி இல்லாமலேயேகூட அவரால் செய்திருக்க முடியும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவே பதவி வகித்த அவருடைய பதவிக்கு அது மேலும் பெருமையைச் சேர்த்திருக்கும்.

தலைமை நீதிபதிகளின் மாநாட்டில், நீதித் துறை சமூகம்தான் இதைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அரசியல் அரவணைப்புடன் கூடிய பதவி எதையும் ஓய்வுபெற்ற பிறகு ஏற்க மாட்டோம் என்று நீதிபதிகள்தான் முடிவுசெய்து அறிவிக்க வேண்டும். அடுத்ததாக, நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற இரண்டு முழு ஆண்டுகளுக்கு அரசின் எந்த நியமனப் பதவியையும் நீதிபதிகள் ஒப்புக்கொள்ளக் கூடாது.

“நீதித் துறைக்கான மிகப் பெரிய ஆபத்து நீதித் துறைக்கு உள்ளேயேதான் இருக்கிறது” என்றார் நீதிபதி ஒய்.வி.சந்திரசூட். பணி ஓய்வுக்குப் பிறகு அதிக உழைப்பு தேவைப்படாத – ஆனால் பணப் பயன்கள் மிகுந்த அதிகாரப் பதவி மீது மோகம் கொண்டு நீதித் துறையின் சுதந்திரத்தன்மையை நீதிமான்கள் இழந்துவிடும்படியான சமரசங்களுக்கு இடம் தரக் கூடாது.

நீதிபதிப் பதவியை ஏற்கும்போதே ‘நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடப்பேன்’ என்றுதான் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்; எந்தச் சூழ்நிலையிலும் இதற்கு மாறாக யாரும் நடக்கக் கூடாது. இந்திய மக்களுடன் நேரடியாகக் கையெழுத்துப் போடாமல் செய்துகொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தை, நம்முடைய நீதிமான்கள் சமூகத்துக்கு நினைவுபடுத்த வேண்டியது நம்முடைய கடமை! 

 

தொடர்புடைய கட்டுரைகள்

நீதிபதிகள் நியமனம்: நாம் செல்ல வேண்டிய திசை எது?
நீதிபதிகள் நியமனம்: என்னதான் தீர்வு?
அமைச்சர்கள் அரியாசனத்துக்கு சரியாசனத்தை நீதிபதிகள் கேட்பது முறையா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஏ.பி.ஷா

ஏ.பி.ஷா, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி. சட்ட விமர்சகர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Dr. S. Ezhilan   12 months ago

ஓய்வூதியம் பெறும் ஒருவர் மற்றொரு பொறுப்பில் சேர்ந்து ஊதியம் பெறுவதை சட்டம் அனுமதிக்கிறதா? நீதிபதிகள் ஓய்வு பெற்றப்பிறகு ஆதாயப் பதவிகளை பெறும் போது அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வேலையில் ஜொலிப்பது எப்படி?வி.பி.மேனன்எக்கியார்குப்பம்வேளாண்மைகல்வான் பள்ளத்தாக்குதடுப்புத் தட்டிகேஒய்சி க்யூஎஸ்தலைதைவானில் நெருப்பு அலைகள்உரம்ஹிஜாப்: ஆதரவு – எதிர்ப்புஉரையாடல்பின்நவீனத்துவம்மாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்மனநல மருத்துவர்கள்குடல்வால் அழற்சிஇந்தித் திணிப்பு போராட்டம்ஆட்சியாளர்கள்சமூக மாற்றம்நடராஜர் கோயில்கிபுட்ஸ்dawnபுளிக்குழம்புசச்சின் பைலட்சீபம்பொன்முடி - அருஞ்சொல்கணினி அறிவியல் என் பள்ளி எனக்குக் கொடுத்த கொடைJaibhimவிஜய் வரட்டும்… நல்லது!அடுத்த தலைவரும் பிராமணர்தானா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!