கட்டுரை, வாழ்வியல், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

உங்கள் வீட்டுக்குத் தண்ணீர் ஏன் முக்கியம்?

மு.இராமநாதன்
15 Jun 2023, 5:00 am
0

லக்கியம், பண்பாடு, சர்வதேசம், பொறியியல் என்று பல தளங்களிலும்  எழுதிவருபவர் எழுத்தாளர் மு.இராமனாதன். கட்டிடம், நகர்ப்புறக்  கட்டமைப்பு குறித்து தொடர்ச்சியாக இவர் எழுதும் கட்டுரைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளியாகின்றன. இவர் எழுதிய பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பு ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்’ குறிப்பிடத்தக்க நூலாக அமைந்துள்ளது. இதைப் ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ளது. வீடு கட்டுவதில் அறிந்திருக்க வேண்டிய பொறியியல் கூறுகள், கட்டுமான விதிமுறைகள், கட்டிட விபத்துகள், நடைபாதைகள், சாலைகள், சாரங்கள், மெட்ரோ ரயில், பெரியாறு அணை, சென்னைப் பெருவெள்ளம் என்று இந்த நூலின் பேசுபொருள் விரிவானது. இந்த நூலின் முக்கியத்துவம் கருதி இதில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.  

ந்தியாவில் ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்புவது சவாலாகத்தான் இருக்கிறது. ஏனெனில் நம்மவர்கள் பல்வேறு கட்டுமான நடைமுறைகளை அக்கறையோடு செயல்படுத்துவதில்லை. அவற்றுள் ஒன்று கட்டி முடித்த சுவர்களின் மீதும் கான்கிரீட் தளங்களின் மீதும் தண்ணீர் சொரிவது. இது ஒரு அவசியமான நடவடிக்கை. எனில், போதிய முக்கியத்துவமின்றிச் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

சிலர் இதை நனைத்தல் என்பார்கள். ஆனால், இது நனைத்தல் மட்டுமில்லை. ஆங்கிலத்தில் இதற்கு கியூரிங் (curing) என்று பெயர். இதைத் தமிழில் குணப்படுத்துதல் என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், அப்படி யாரும் தமிழில் சொல்வதில்லை. தமிழகத்தின் பல கட்டுமானத் தலங்களில் கியூரிங் என்றுதான் சொல்கிறார்கள். இந்தச் செயல்பாடு எதைக் குணப்படுத்துகிறது? நோயிருந்தால்தானே குணப்படுத்த வேண்டும்? கட்டி முடித்த சுவரும், இட்டு முடித்த கான்கிரீட் தளங்களும் தூண்களும் உத்திரங்களும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனவா? அந்த நோயைப் புறத்தே சொரியப்படும் நீர் குணமாக்குகிறதா? எப்படி?

வேதியியல் வினை

செங்கற்களை இணைத்துச் சுவராக்குவதற்குச் சாந்து வேண்டும். சுவரின்மீது பூசுவதற்கும் சாந்து வேண்டும். இந்தச் சாந்து, சிமெண்டும் மணலும் கலந்து உருவாகிறது. தளங்களும் உத்திரங்களும் தூண்களும் கான்கிரீட்டால் உருவாகிறது. கான்கிரீட்டில் சிமெண்ட்டும் மணலும் கருங்கல் ஜல்லியும் கலந்திருக்கிறது. சாந்திலும் கான்கிரீட்டிலும் உள்ள இன்னொரு முக்கியமான இடு பொருள் தண்ணீர். இந்த நீர் ஆவியானதும் ஏற்கெனவே நீர் இருந்த இடங்களில் வெற்றிடம் உருவாகும்.

கான்கிரீட் தளங்களின் மீதும் சுவரின் மீதும் புறத்தில் தொடர்ந்து நீரைச் சொரிவதன் மூலம் அகத்தில் ஒரு வேதியியல் வினை நடக்கும். சாந்திற்குள்ளும் கான்கிரீட்டிற்குள்ளும் புகும் நீரானது சிமெண்ட்டில் உள்ள கால்சியம் சிலிகேட் எனும் வேதிப் பொருளுடன் சேரும். விளைவாக கரிப்பொருள், கந்தகம், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் கூட்டில் ஒரு பசை உருவாகும். இந்தப் பசை ஏற்கெனவே ஆவியான நீர் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடங்களை நிரப்பும். இந்தப் பசை நாளடைவில் கட்டியாகும். இது கான்கிரீட்டையும் சாந்தையும் வலுவாக்கும். அதற்கு நீடித்த ஆயுளையும் வழங்கும்.

இந்த வினை முறையாக நடக்காவிட்டால் வெற்றிடங்கள் முழுமையாக நிரம்பாது. அந்தச் சாந்தும் கான்கிரீட்டும் குறைபட்டதாகவே இருக்கும். பிற்பாடு ஒருக்கிலும் குணப்படுத்த முடியாத நோய் அதன் மீது கவியும். பலம் குறையும். விரிசல்கள் நேரும். காற்று உள்புகும். உள்புகுந்த காற்றிலுள்ள ஆக்சிஜன் இரும்புக் கம்பியுடன் நடத்தும் வேதியில் வினையால் ஊடுகம்பிகளில் துருவேறும். துருப்பிடித்த கம்பி பருக்கும். அதைச் சுற்றிப் பிடித்திருக்கிற கான்கிரீட்டில் விரிசல் விழவும் உதிர்ந்து கொட்டவும் ஏதுவாகும். கட்டுமானத்தின் ஆயுளும் குறையும். ஆகவே, கியூரிங் முறையாக நடந்தால் மட்டுமே கட்டுமானத்திற்கு நோயற்ற வாழ்வு அமையும். 

நீராற்று 

சிமெண்ட் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று சிமெண்ட் இல்லாமல் ஒரு கட்டுமானத்தை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், சிமெண்ட்டும் கான்கிரீட்டும் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் ஆக்கப்படவில்லை. கியூரிங் அவற்றுள் ஒன்று. சிலர் இதை நீராற்று என்கிறார்கள். அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத இந்தச் சொல் காடாற்று என்கிற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். ‘காடத்து’ என்பது சிதை எரியூட்டப்பட்ட அடுத்த நாள் செய்யப்படும் ஒரு சடங்கு. முதல் நாள் சடலம் வைக்கப்பட்டிருந்த இடம் மறுநாள் எலும்பும் சாம்பலுமாய் இருக்கும். அப்போதும் கனன்றுகொண்டிருக்கும். அஸ்தியை எடுப்பதற்குத் தண்ணீர் ஊற்றி மயானத்தை ஆற்றுப்படுத்துவதே காடாற்று.

ஈழத்துக் கவிஞர் சேரன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின் காடாற்று என்று ஒரு கவிதை எழுதினார். அது இப்படி முடியும்: 

முற்றிற்று என்று சொல்லி
காற்றிலும் கடலிலும் கரைத்துவிட்டுக்
கண்மூட
காற்றும் கிடையாது
கடலும் கிடையாது
காடாற்று எப்போதோ?

காயம்பட்ட ஈழப் பெருநிலத்தில் மாண்டு போனவர்களுக்குக் கண்ணியமான ஈமச்சடங்கு வாய்க்கவில்லை. நிறைவேற்ற முடியாத அந்தக் காடாற்றின் நிராதரவில் ஒலித்த கவிக்குரல் அது.

அஸ்தியை எடுத்து நீருற்றி ஆற்றுப்படுத்துவதைக் காடாற்று என்றழைக்கிறது தமிழ். அந்த மரபில், கான்கிரீட்டில் கலக்கப்பட்ட நீர் ஆவியானதும் உருவாகும் வெற்றிடங்களை நீர் ஊற்றி ஆற்றுப்படுத்துவதை நீராற்று என்று சொல்வது பொருத்தம்தான். 

கான்கிரீட்டை எந்தவித சமரசமும் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு நீராற்ற வேண்டும். நீராற்றுவதற்கு அதிகச் செலவாகாது. ஆனால், அதைச் செய்யாவிடில், மிகுந்த பொருட்செலவில் வார்க்கப்படும் கான்கிரீட்டும் கட்டப்படும் சுவர்களும் பலமும் ஆயுளும் குறைந்துபோகும். நீராற்றுவது கட்டுமானத்தில் மிக முக்கியமான பணி என்கிற புரிதல் எல்லோருக்கும் வரவேண்டும். நீராற்று முறையாக நடக்கச் செய்ய வேண்டுவது என்ன?

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

கட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்

மு.இராமநாதன் 10 May 2022

செங்கலை நனைத்தல்

பூர்வாங்க நடவடிக்கையிலிருந்து தொடங்க வேண்டும். சுவர்களுக்குப் பயன்படுத்தப்போகும் செங்கற்களைக் குளிரக் குளிர நனைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இந்தச் செங்கற்களுக்கு இடையில் சாந்துக் கலவையைப் பரத்துகிறபோது, கலவையில் உள்ள நீரைச் செங்கற்கள் கணிசமாக உறிஞ்சிவிடும். சாந்துக் கலவை முதற்கட்டமாக இறுகுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும். அதற்குப் பிறகுதான் சுவரின் மீது நீரைச் சொரிய முடியும். உலர்ந்த செங்கற்கள் கலவையின் நீரை உறிஞ்சிவிட்டால், சாந்து இறுகுவதற்கு முன்னதாகவே கலவையில் வெற்றிடங்கள் தோன்றிவிடும். இது கலவையில் விரிசல் தோன்றக் காரணமாகிவிடும்.

நீரின் அளவு

கான்கிரீட்டைப் பொறுத்தமட்டில் அதில் தண்ணீர் சரியான அளவில் சேர்க்கப்பட வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால் மேலே குறிப்பட்ட வேதியியல் வினை நிகழும் சூழல் உருவாகாது. தண்ணீர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டால், அந்தத் தண்ணீரெல்லாம் ஆவியாகும்போது வெற்றிடங்கள் அதிகமாகும். நீராற்று காலத்தில் உருவாகிற பசையால் எல்லா வெற்றிடங்களையும் நிரப்ப முடியாது. விளைவு முறையான நீராற்று நடந்தாலும், உள்ளுக்குள் வெற்றிடங்கள் நிரம்பிய, அதனால் பலமும் ஆயுளும் குறைந்த கான்கிரீட்தான் கிடைக்கும். ஆக, கான்கிரீட் கலவையில் தண்ணீர் குறைந்தாலும் குற்றம், கூடினாலும் குற்றம்.

அடுத்ததாகக் கலவையில் உள்ள நீர் ஆவியாவதைத் தாமதப்படுத்துவது பலன் தரும். தளங்களின் கான்கிரீட் வார்க்கப்பட்டதும் சில மணி நேரங்களில் இறுகிவிடும். இது முதற்கட்டம். உடன் இந்தத் தளங்களின் மீது பிளாஸ்டிக் அல்லது பாலீத்தீன் விரிப்புகளைப் விரிக்கலாம்.

சென்டரிங் பிரித்தல்

பொதுவாக தூண்களின் ஷட்டரிங் பெட்டிகளை 24 மணி நேரத்திற்குப் பிறகு பிரிக்கலாம். 12 அடி வரை அகலமுள்ள அறைகளைக் கொண்ட ஒரு வீட்டின் சென்டரிங்கை 7 நாட்களிலும், அதனினும் அகலம் கூடுதல் உள்ள அறைகளைக் கொண்ட தளங்களின் சென்டரிங்கை 14 நாட்களிலும் பிரிக்கலாம். நீளம் குறைந்த உத்திரங்களின் ஷட்டரிங்கை 14 நாட்களில் பிரிக்கலாம். நீளம் கூடிய உத்திரங்களுக்கு 21 நாட்கள் வேண்டிவரும்.

நீராற்றின் வேதியியல் வினை நன்றாக நடைபெற ஷட்டரிங்கையும் சென்டரிங்கையும் தாமதமாகப் பிரிப்பது உதவும். தூண்களின் ஷட்டரிங்கை இரண்டு நாட்கள் வரையில் பிரிக்காமல் வைத்திருக்கலாம். தளங்களின் சென்டரிங்கை மூன்று வாரங்களுக்கும் உத்திரங்களை நான்கு வாரங்களுக்கும் பிரிக்காமல் வைத்திருக்கலாம். இதனால் வெளியிலிருந்து வெப்பத்தால் தாக்கப்படும் கால அளவை தாமதப்படுத்தலாம். இதன் மூலம் கான்கிரீட்டின் உள்புறமுள்ள நீர் முழுமையாக ஆவியாவதற்கு முன்னால் வேதியியல் வினையைத் தொடங்கிவிடலாம்.

நீராற்று முறைகள்

கான்கிரீட் தூண்களை வார்ப்பதற்காகப் பூட்டப்பட்ட ஷட்டரிங் பெட்டிகளைப் பிரித்ததும் அவற்றைச் சுற்றிச் சாக்குகளாலோ வைக்கோல் பிரிகளாலோ கட்டி, அதன் மீது நீரைச் சொரிவது நன்று. அது நனைவு கூடுதல் நேரம் நீடித்திருக்க வகை செய்யும். நீராற்றுக் காலம் முழுவதும் கான்கிரீட் பரப்புத் தொடர்ச்சியாக ஈரமாக இருக்க வேண்டும். ஒரு முறை சொரிந்த நீர் உலர்வதற்கு முன்னர் மீண்டும் நீர் சொரிய வேண்டும்.

தளங்களைப் பொறுத்தமட்டில் கான்கிரீட் இறுகியதும் நனைத்தலைத் தொடங்கிவிட வேண்டும். தொடர்ந்து ஈரமாக வைத்திருப்பதற்குத் தளங்களின் மீது சாந்தாலோ களிமண்ணாலோ பாத்திகள் கட்டுவார்கள். இந்தப் பாத்திகள் இறுகியதும் தண்ணீரைக் கட்டி நிறுத்துவார்கள். அது ஒரு குட்டை போல் நீர் தேங்கி நிற்க வகை செய்யும். இந்தக் குட்டைகளை நீராற்றுக் காலம் முழுதும் நிரப்பி வைக்க வேண்டும்.

நீராற்றுக் காலம்

எவ்வளவு நாட்களுக்கு நனைக்க வேண்டும்? கான்கிரீட்டின் தரம் 15, 20, 25, 30 என்று குறிக்கப்படும். இது கான்கிரீட் வார்க்கப்பட்ட 28ஆம் நாளில் மெகா பாஸ்கல் அலகில் அதன் தாங்குதிறன். ஆகவே, 28 நாட்களுக்கு நீராற்றைத் தொடர வேண்டும் என்று சில பொறியாளர்கள் சொல்வதுண்டு. இது நடைமுறைச் சாத்தியமில்லை, அவசியமுமில்லை. சுவர்களைக் கட்டிய பிறகும், பிற்பாடு அவற்றைப் பூசிய பிறகும் குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு நனைக்க வேண்டும். கான்கிரீட் தூண்களை ஒரு வார காலத்திற்கும், தளங்களை இரு வார காலத்திற்கும் நனைக்க வேண்டும். நீராற்று காலத்தில் கான்கிரீட் பரப்பு உலர்ந்துபோக அனுமதிக்கலாகாது.

நீராற்றுவதற்கு அதிகச் செலவாகாது. ஆனால், அதைச் செய்யாவிடில் மிகுந்த பொருட்செலவில் வார்க்கப்படும் கான்கிரீட்டின், கட்டப்படும் சுவர்களின் பலமும் ஆயுளும் குறைந்துபோகும். நீராற்றுவது கட்டுமானத்தில் மிக முக்கியமான பணி என்கிற புரிதல் எல்லோருக்கும் வர வேண்டும். கட்டுமானத்தில் நாம் பேசும் எந்தச் சீர்திருத்தமும் ஒரு வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல; சுற்றுச்சூழலோடும் பருவநிலை மாறுபாட்டோடும் தொடர்புடையது. ஆக, கட்டிடத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் நாம் கட்டிடத்துக்கு மட்டும் தண்ணீர் ஊற்றுவதில்லை!

நூல்: வீடும் வாசலும் ரயிலும் மழையும்
ஆசிரியர்: மு.இராமனாதன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 184
விலை: ரூ.190
தொடர்புக்கு: 
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை, சென்னை - 600018
தொலைபேசி: 044-24332424, 24330024
ஆன்லைனில் வாங்கhttps://thamizhbooks.com/product/veedum-vaasalum-rayilum-mazaiyum/

 

தொடர்புடைய கட்டுரைகள்

அண்ணா சாலை விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்
கட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்
திருவொற்றியூர் தரும் பாடம்
ஓர் அணைக்கட்டின் ஆயுள் எத்தனை ஆண்டுகள்?
சென்னையில் வெள்ளத்தைத் தவிர்க்க ஒரு செயல்திட்டம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


1

2





தமிழுக்கான வெள்ளை அறைஅரசியல் கட்சிகளுக்கு வருமான வரி உண்டா?அரசியல் – பொருளாதாரம்நிவேதிதா லூயிஸ் கட்டுரைதோட்டிகளை இந்த தேசம் எப்படிப் பார்க்கிறது?சாவர்க்கர் சிறை அனுபவங்கள்சினைமுட்டைசமூகங்களை அறிவோம்ஜி.யு.போப்ப.சிதம்பரம் கட்டுரைபா வகைஇல்லாத கட்டமைப்புகள்தில்லைதமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது4 கொள்கைக் கோளாறுகள்உணவுமுறைவாரிசுரிமை வரிபொதிதல்சுழல் பந்துஅதிகாரத்தின் நிறம்மாநில வருவாய்வேண்டும் வேலைவாய்ப்புஅரசமைப்புச் சட்டப் பிரிவு 370கற்க வேண்டிய கல்வியா?அவரவர் முன்னுரிமைதேர்தல் வாக்குறுதிகளில் ‘இலவசம்’ கூடாதா?உரம்கொரியா ஹெரால்டுசேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்ஆவின் ப்ரீமியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!