கட்டுரை, சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

மியான்மரில் என்ன நடக்கிறது?

மு.இராமநாதன்
01 Feb 2022, 5:00 am
1

ஓராண்டு நிறைவு என்பது பொதுவாகக் கொண்டாட்டமாக இருக்கும், அல்லது புகழஞ்சலியாக இருக்கும். ஆனால், இப்போது மியான்மர் என்றழைக்கப்படும் முன்னாளைய பர்மாவில்  இன்றைய தினம் (பிப்ரவரி 1) அப்படி இருக்கப்போவதில்லை. இன்று அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறும். மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.

ராணுவம் தனது பிடியை இறுக்கிக்கொண்டேபோகிறது. போராடும் மக்களை வன்மையாக அடக்குகிறது. ஒரு தலைபட்சமான விசாரணைகளின் முடிவில் அரசியலர் பலருக்குச் சிறைவாசம் விதிக்கிறது. மறுபுறம், விலைவாசி பன்மடங்கு உயருகிறது. நாணயத்தின் மதிப்பு தலைகுப்புற விழுகிறது. பல மேலை நாடுகள் தண்டனைத் தடைகள் விதிக்கின்றன. பல அந்நிய முதலீடுகள் திரும்பப் பெறப்படுகின்றன. எனில், இவையெதுவும் ராணுவ ஆட்சியாளர்களை அதைரியப்படுத்தவில்லை.

இவை அனைத்துக்கும் மத்தியிலும், ராணுவத்தால் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தி வலுப்பெற்றுவருகிறது. அரசின் எதிர்ப்பாளர்கள் ஒன்றிணைந்து தேசிய ஐக்கிய முன்னணி (NUF) ஒன்றைக் கட்டிவருகிறார்கள். இது தலைமறைவு அரசாங்கமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. தேசம் ஓர் உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது.

ராணுவம் - தேர்தல்- போராட்டம்

இந்தப் பதற்றம் ஒராண்டுக்கு முன்பு தொடங்கியது. 2021, பிப்ரவரி 1. தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) அன்றைய தினம் பதவியேற்றிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அந்த விழாவிற்குச் சில மணி நேரங்களே இருந்தபோது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது. என்.எல்.டி-இன் தலைவர் ஆங் சான் சூச்சியும் கட்சி முன்னணியினரும் சிறை வைக்கப்பட்டார்கள். அன்று முதல் கடந்த ஓராண்டாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள். கடந்த கிறிஸ்துமஸின்போது மட்டும் 35 நிராயுதபாணிப் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டார்கள்.  இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மக்கள் அரசப் படைகளால் உயிர் துறந்திருக்கிறார்கள்.

ராணுவத்தின் கரங்கள் சொந்த நாட்டு மக்களின் குருதியில் நனைந்திருக்கிறது. சில எல்லைப்புற மக்கள் தாய்லாந்திற்கும் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் அகதிகளாக வெளியேறுகின்றனர்.

ராணுவத்துக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் நீர்த்துப்போகுமென்றுதான் தளபதிகள் ஆரம்பத்தில் கருதினார்கள். அதற்குப் பல காரணங்கள். 1962இல் ராணுவம் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சிக்கு எதிரான பெரிய போராட்டம் 1988இல்தான் நடந்தது. அப்போது உயர்ந்து வந்த நட்சத்திரம்தான் சூச்சி. போராட்டம் ஒடுக்கப்பட்டது. சூச்சி சிறை வைக்கப்பட்டார். அடுத்து 2007இல் புத்த பிக்குகள் ராணுவத்திற்கு எதிராகத் திரண்டனர். அந்த எழுச்சியும் ஒடுக்கப்பட்டது. 2011இல் ஜனநாயகக் கீற்றுகள் தோன்றலாயின. 2012இல் என்.எல்.டி எதிர்க்கட்சி ஆகியது; 2015இல் ஆளுங்கட்சியாக உயர்ந்தது. எனினும் ராணுவம் ஆட்சியிலும் பங்கு வகித்தது.

சூச்சி ராணுவத்துக்கு இணக்கமாகவே நடந்துகொண்டார்.  இதனால் உலக நாடுகளின் நன்மதிப்பை இழந்தார். ஆனால், பெரும்பான்மை பாமா இனத்தவர் அவரைக் கொண்டாடவே செய்தனர். 2020இல் நடந்த தேர்தலில் என்.எல்.டி இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்றது.

சூச்சிக்கு வெகுமக்கள் அளித்துவரும் ஆதரவு ராணுவத்தை அச்சுறுத்தியது. சூச்சி சர்வதேச ஆதரவை இழந்துவிட்டார் என்று ராணுவம் கணக்கிட்டது. மேலும், ராணுவ நுகத்தடிக்கு மியான்மர் மக்கள் பழக்கமானவர்கள்தானே என்றும் அது கருதியது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அதன் கணக்கு பிசகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளாக வீசும் அரசியல் - பொருளாதார சுதந்திரக் காற்றை, அது எத்துணை குறைவாக இருந்தாலும், இழப்பதற்கு மக்கள் சித்தமாக இல்லை. அவர்கள் போராடினார்கள். உயிரிழந்தார்கள். பதினாயிரக்கணக்கானோர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சூச்சியின் மீது ஏராளமான குற்றச்சாடுகளை அடுக்கியிருக்கிறது ராணுவம். யாருடைய பார்வையும் தீண்ட முடியாத நீதிமன்ற விசாரணை அவருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. இன்னும் எல்லாக் குற்றச்சாட்டுகளும் விசாரித்து முடிக்கப்படவில்லை! கைதான என்.எல்.டி கட்சியினர் பலருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. மக்களின் அகிம்சைப் போராட்டங்களால் ராணுவ ஆட்சியின் மனசாட்சியின் முனையைக்கூடத் தீண்ட முடியவில்லை. ஆகவே, முதல் முறையாக பெரும்பான்மை பாமா இனமக்கள் சிறுபான்மையின மக்களோடு  கை கோர்க்கின்றனர்.

சிறுபான்மை அரசியல்

இந்த இடத்தில் மியான்மரின் இன வரைவியலைச் சற்றே நெருங்கிப் பார்க்கலாம். மியான்மர்  பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’ எனப்படும் பெரும்பான்மை பர்மிய சமூகத்தினர், மூன்றில் இரண்டு பங்கினர், புத்த மதத்தினர், ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கின்றனர். இவர்கள் மூன்றில் இரு பங்கினர். பல நாடுகளைப்போல இங்கும் பெரும்பான்மை சமூகத்திற்கு மேட்டிமை மனோபாவம் இருக்கிறது.

மியான்மரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இதில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின் இனங்கள் பிரதானமானவை. இவர்கள் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கின்றனர். இந்த இனங்களில் தேர்தல் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட பல அரசியல் கட்சிகளும் பிரிவினை கோரும் பல ஆயுதக் குழுக்களும் உள்ளன. இந்த ஆயுதக் குழுக்கள் பல ஆண்டு காலமாக மியான்மர் ராணுவத்தோடு போராடிவருகின்றனர்.

கடந்த ஆட்சியின்போது சிறுபான்மை இனத்தவரின் கோரிக்கைகளுக்கு சூச்சி செவி சாய்க்கவில்லை. அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிவரும் ரொகிங்கியா எனும் முஸ்லிம் பிரிவினரின் அவதி தொடர்ந்தது. அவர்களை நாட்டின் குடிமக்களாகக்கூட அரசு கருதவில்லை. 1982இல் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் எழுத்துபூர்வமாகவே ரொகிங்கியாக்களை நாடற்றவர்கள் ஆக்கியது. 2017இல் அவர்களுக்கு எதிராகப் படுகொலைகளும் கலவரங்களும் கற்பழிப்புகளும் நடந்தன. ஏழு லட்சம் ரொகிங்கியாக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். ஐநாவின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் மியான்மார் அரசின் மீதான இனப்படுகொலை வழக்கை விசாரித்தது.

வழக்கில் ராணுவத்திற்கு ஆதரவாகச் சாட்சி அளித்தவர்- சூச்சி. ஒரு நட்சத்திரம் தரையில் உதிர்ந்து விழுந்ததை உலகம்  நம்பமுடியாமல் பார்த்தது.  சூச்சி சர்வதேச நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால் உள்நாட்டில் பெரும்பான்மை பாமா இனத்தவர் அவருக்கு ஆதரவு நல்கினர். 2020இல் என்.எல்.டி பெற்ற தேர்தல் வெற்றி சொல்வது அதைத்தான். ஆனால், இந்த மனப்பான்மையில் இப்போது மாற்றம் வந்திருக்கிறது. கச்சின், கரீன் இன மக்களின் ஆயுதக் குழுக்களும் ஜனநாயக அமைப்புகளும் தனித்தனியாகப் போராடிவந்தன. ரொகிங்கியாக்களுக்கு ஆதராவாக ரக்கைன் ஆயுதக் குழுக்கள் போராடிவந்தன. 

இப்போது ராணுவ ஆட்சி அமலானதும் மக்களின் அகிம்சைப் போராட்டங்கள் நிர்தாட்சண்யமாக ஒடுக்கப்பட்டன. நான்கு லட்சம் அரசு ஊழியர்களின் போராட்டமும் அடக்கப்பட்டது. இது பெரும்பான்மை மக்களை மாற்று வழிகளை நோக்கிச் சிந்திக்கவைக்கிறது. தலைமறைவாகிய ஆயிரக்கணக்கான என்.எல்.டி கட்சியினரும் ஒரு புதிய கூட்டணியின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். என்.எல்.டி.யும், குடிமைச் சமூகமும், சிறுபான்மை இனக் குழுக்களும், கச்சின் - கரீன் ஆயுதக் குழுக்களும் இணைந்து உருவாக்கியதுதான் தேசிய ஐக்கிய முன்னணி (NUF). இது ஒரு தலைமறைவு அரசாங்கத்தை நிறுவியிருக்கிறது. இப்போதும் ரொகிங்கியாக்களின் மீதான தீண்டாமை முழுதுமாக அகலவில்லை. அவர்களால் இந்தக் குழுவில்  இணைய முடியவில்லை. ஆனால் ரொகிங்கியாக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதையும் அதற்காகச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதையும் என்.யு.எப். ஏற்றுக்கொள்கிறது. ரக்கைன் ஆயுதக் குழுக்களும் என்.யு.எப்-ஐ ஆதரிக்கின்றன.

இப்போதும் மியான்மர் பார்வையாளர்களில் பலர் சூச்சியின் என்.எல்.டி வழியாகத்தான் மாற்றுப் பாதை திறக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் ராணுவத்தோடு அவர் இணக்கமாக நடந்துகொண்டது பலனளிக்கவில்லை என்பதை மியான்மர் சமூகம் உணர்ந்திருக்கிறது. அவர் ரொகிங்கியாக்களின் மீது கருணையின்றி நடந்துகொண்டது சர்வதேசத் தளத்தில் அவரது மதிப்பைச் சரித்துவிட்டது. ஆகவே, சூச்சி இனி மியான்மர் அரசியலின் மையத்தில் இருக்க மாட்டார் என்கிறார்கள். இனி வருங்காலத்தில் என்.யு.எப். செல்வாக்கு அதிகரிக்கும், ஓர் உள்நாட்டு யுத்தம் தவிர்க்க முடியாமல் ஆகும், உலக நாடுகள் என்.யு.எப். அமைப்பை அங்கீகரிக்கத் தொடங்கும்... இப்படியான கருத்துகள் வலுப்பெற்றுவருகின்றன.

இந்தியாவின் நிலைப்பாடு

மியான்மரைக் கடுமையாக விமர்சிக்கும் மேலை நாடுகளின் முகாமிலிருந்து இந்தியா தள்ளி நிற்கிறது. மியான்மரைக் குறித்து கவலை தெரிவிப்பதோடு நின்றுகொள்கிறது. காரணம் மியான்மர் நமது அண்டை நாடு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை வெகு நீளமானது (1610 கிமீ). இந்த எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. சுற்றுச் சுவர்கள் இல்லை. இந்த  எல்லையோரம் அமைந்திருப்பவை மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள். இவற்றிலும் குறிப்பாக மிசோரம், மணிப்பூர் மக்களும் மியான்மரின் சின் இன மக்களும் ஒரு கொடியில் கிளைத்தவர்கள்.  திபெத்-பர்மீய வம்சாவளியினர். பிரிட்டிஷ் இந்தியாவில் இணைந்திருந்த பர்மா 1937இல் தனிநாடாகும் வரை ஒரே மாநிலமாக வாழ்ந்தவர்கள்.

இப்போதும் மண உறவுகளாலும் வணிக உறவுகளாலும் இவர்கள் பிணைக்கப்பட்டவர்கள். எல்லையின் இரு புறங்களிலும் போக்கும் வரவுமாக இருந்தவர்கள். ராணுவ அடக்குமுறையைத் தொடர்ந்து மியான்மரின் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கும் சிறுபான்மையினர் இந்தியாவிற்குப் புகலிடம் தேடிவருகின்றனர். நமது ஒன்றிய அரசு அவர்களை ஏற்க மறுத்தது. ஆனால் மிசோரம், மணிப்பூர் மாநில அரசுகளால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியவில்லை. அகதிகள் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 3000-க்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிற்குள் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மியான்மருக்கு அண்டை நாடுகளின் ஆதரவு இருக்கிறது. 2021, மார்ச் 27 அன்று  நடந்த ராணுவ தின அணிவகுப்பு ஓர் உதாரணம். இதில் இந்தியப் பிரதிநிதி கலந்து கொண்டார். வேறு சில நாடுகளும் பங்கேற்றன. அவை: பாகிஸ்தான், வியட்நாம், ரஷ்யா, சீனா, வங்காளதேசம், லாவோஸ், தாய்லாந்து. இவற்றுள் கடைசி நான்கு நாடுகளும் இந்தியாவும், மியான்மரின் எல்லையைப் பகிர்ந்துகொள்பவை.  அணிவகுப்பு நடந்த அதே நாளில் மியான்மரின் பல்வேறு இடங்களில் ஏழு குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் கொல்லப்பட்டனர். இது இந்திய அரசின் மீதும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மீதும் விமர்சனங்கள் எழக் காரணமானது.

தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி கூடிய ஐநா அரங்கில் மியான்மர் ராணுவ அரசை இந்தியா கண்டித்தது; உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தது; அரசியலரை விடுவிக்கக் கோரியது. 

கடந்த ஏப்ரலில் ஆசியான் மாநாடு நடந்தது. அதில் மியான்மர் அரசு வன்முறையைக் கைவிட வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகளோடு உரையாட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இரு தரப்புகளுக்கும் இடையில் ஆசியானைத் தூதுவராக அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்தது ஆசியான். ராணுவம் செவி சாய்க்கவில்லை.

இது இவ்வாறிருக்க மியான்மருக்கு சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடாக இந்தியா இருக்கிறது. 2021, ஜூன் 19 அன்று மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆயுதங்கள் வழங்கலாகாது என்று ஒரு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு அவையில்  மேலை நாடுகள் கொணர்ந்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. அதில் இந்தியாவும் இருந்தது.

இந்தச் சூழலில் கிறிஸ்துமஸ் சமயத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் மியான்மருக்குச் சென்று வந்தார். இந்தியா, மியான்மரோடு இணக்கத்தைப் பேண விரும்புவதாகத் தெரிவித்தார். இந்தியாவின் அரிசி, கொரோனாத் தடுப்பூசி முதலான கொடைகள் தொடருமென்றும் தெரிவித்தார். மியான்மர் அரசைக் கண்டிப்பது அங்கு சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்துவிடும் என்று இந்தியா அஞ்சுவதாகத் தெரிகிறது. ஆகவே இந்தியா மென்மையான வருத்தம் தெரிவித்தலோடு நின்றுகொள்கிறது. எல்லைப் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தும் அதே வேளை சர்வதேச அரங்கில் தார்மீக ரீதியாக தன்னை ஒரு சக்தியாகவும் இந்தியா நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திசை வழி

மியான்மர் ராணுவ அரசு கடந்த ஓராண்டு காலத்தில் அகிம்சைப் போராட்டங்களை ஒடுக்கியது. உரையாடலுக்குக் கதவடைத்தது. இதன் மூலம் தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொள்ளப்போவதில்லை என்கிற செய்தியைத் தெளிவாகச் சொல்கிறது. இந்த நிலை ஒரு புதிய தலைமறைவு அரசை அங்கே உருவாக்கியிருக்கிறது.  ஓர் உள்நாட்டு யுத்தத்திற்கான எல்லாக் கருமேகங்களும் சூழ்ந்திருக்கின்றன. மியான்மரின் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு திசை வழியில் பயணிப்பதற்கான ஆயத்தத்தில் இருக்கிறது. உலக நாடுகள் இந்த சமிக்ஞையை உணர வேண்டும். இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் இதற்கேற்றாற்போல் அமைய வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


1





2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Subbaian Saravanakumar   3 years ago

சிறந்த கட்டுரை நன்றி திரு.இராமநாதன் சார்

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

திபெத்அசோகர் அருஞ்சொல் மருதன்குஜராத்: பின்பற்றக் கூடாத முன்மாதிரிசாதிக் கட்டுரைமோன்டி பைதான்காதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்?அரசமைப்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துகிறோம்?உயர் பதவிசுற்றுலா தலம்கலைக்களஞ்சியம்ஆர்.சுவாமிநாதன் கட்டுரைபுலனாய்வு இதழாளர்கிங் மேக்கர் காமராஜர்பொதுமுடக்கம்உயர்கல்விமன்னார்குடி தேசிய பள்ளிபிராந்திய மொழிகள்கரிகாலனோடு பொங்கல் கொண்டாட்டம்இந்திய ஜனநாயகம்நடைப்பயிற்சிஜெர்மன்இது மோடி 3.0 அல்லநிதி வருவாய்மேம்படுத்தப்பட்ட செயலிகள்சொத்து பரிமாற்றம்திமுக அரசுபால் உற்பத்தியாளர்காண முடியாததைத் தேடுங்கள்!நஜீம் ரஹீம் கட்டுரை ஏன்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!