கட்டுரை 10 நிமிட வாசிப்பு

ஓர் அணைக்கட்டின் ஆயுள் எத்தனை ஆண்டுகள்?

மு.இராமநாதன்
16 Dec 2021, 5:00 am
4

ன்றிய அரசானது மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் அணைப் பாதுகாப்பு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது. இப்படி ஒரு மசோதாவிற்கான அவசியத்தை 'ஜல்-ஷக்தி' அமைச்சர் பட்டியலிட்டார். “இந்தியாவில் பல அணைகளுக்கு வயதாகிவிட்டன” என்பது அவற்றில் அவர் சொன்ன காரணங்களில் ஒன்று. 

இந்த விவாதத்தையொட்டி வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 5,745 பேரணைகள் உள்ளன. அவற்றுள்  393 அணைகள் நூறாண்டுகளைக் கடந்தவை.  

முல்லை பெரியாறு அணையின் மீது கேரளம் சுமத்தும் முக்கியக் குற்றச்சாட்டு, அணையின் வயது 125; ஆகவே அது பாதுகாப்புக் குறைவானது என்பதாகும். ஓர் அணை நாட்பட்டது என்பதாலேயே பாதுகாப்புக் குறைவானதாக ஆகிவிடுமா? இதற்கு கடந்த காலத்தில் உடைப்பு ஏற்பட்ட அணைகளைப் பரிசீலிக்கலாம்.

உடைப்புகள் ஏற்படுவது ஏன்?

விடுதலைக்குப் பிறகு உடைப்பு ஏற்பட்ட அணைகளின் பட்டியல் ஒன்றை 2009-ல் வெளியிட்டது, ஒன்றிய நீர் ஆணையம். அதில் 33 அணைகள் இருந்தன. இதில் கட்டி முடித்து ஐந்தாண்டுகளுக்குள் உடைப்புக்கு உள்ளானவை 15 அணைகள், ஐந்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் உடைந்தவை 8 அணைகள். ஆகவே, ஓர் அணையில் உடைப்பு ஏற்படுவதற்கு அதன் வயது முக்கியக் காரணமில்லை என்று தெரிகிறது. 

வேறு என்ன காரணம்? 

ஆணையத்தின் பட்டியலில் நான்கு அணைகள் நீங்கலாக மற்றவை அனைத்தும் மண் அணைகள். வெள்ளக் காலத்தில் அணையில் நீர் நிலை உயர்ந்தபோது அந்த மண் சுவர்களால் அதை நேரிட முடியவில்லை. இன்னும் சில அணைகளில் வெள்ளக் காலங்களில் கலிங்குகளால் போதுமான உபரி நீரை வெளியேற்ற முடியவில்லை; இதனால் கொள்ளளவைக் காட்டிலும் அணையில் நீர் மிகுந்தது, அணை உடைப்பெடுத்தது. முதலாவது பிழை கட்டுமானத்தின் குறைபாடு, இரண்டாவது வடிவமைப்பில் நேர்ந்த குறைபாடு. அதாவது இந்த உடைப்புகளுக்கு அணையின் வயது காரணம் அன்று.

பெரியாறு அணைக்கு வயதாகிவிட்டதா?

சில வாரங்களுக்கு முன்னால் எனது எர்ணாகுளம் நண்பர் ஒருவர் அங்கு வைரலாகச் சுற்றிக்கொண்டிருந்த காணொலி ஒன்றை அனுப்பிவைத்தார். அதில் பேசியவர் ஒரு வழக்குரைஞர். ஏதோ பொறியியலையும் இரண்டாம் பாடமாகப் படித்தவர்போல ஏகமாக அடித்துவிட்டார். “பெரியாறு அணையின் ஆயுள் 50 ஆண்டுகள்தான், அது எப்போதோ முடிந்துவிட்டது” என்றார்.  சரி, யாரோ ஒருவரின் பொறுப்பற்ற பேச்சு என்று விட்டுவிட்டேன் . ஆனால் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் அப்படிப் பேசத் தயங்குவதில்லை என்பது விரைவில் தெரியவந்தது.

டிசம்பர் 2ம் தேதி மாநிலங்களவையில் அணைப் பாதுகாப்பு மசோதா விவாதிக்கப்பட்டது. அதை ஆதரித்துப் பேசியவர்களில் ஒருவர் அல்போன்ஸ் கண்ணந்தானம். அதில் வியப்பொன்றுமில்லை. அவர் பாஜக உறுப்பினர். மலையாளி. கடந்த மோடி அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். தனது பேச்சில் அவர் மசோதாவை ஆதரித்து ஒரு வரி சொன்னார். மற்றபடி அந்த உரை முழுக்க பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத்தான் பேசினார்.

மனித வாழ்க்கை முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்று தத்துவார்த்தக் கேள்வியையும் எழுப்பினார். மனிதனைப் போல மனிதன் உருவாக்கிய  எல்லாக் கட்டுமானங்களின் ஆயுளும் முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும்? ஒரு மனிதனால் 200 ஆண்டுகள் வாழ முடியுமா? முடியாது. அப்படியானால் ஓர் அணை எப்படி அத்தனை காலம் நீடித்திருக்க முடியும்? இப்படிக் கேள்விகளை அடுக்கினார். அடுத்து அவர் சொன்னது சுவராஸ்யமானது. பெரியாறு அணை சுருக்கியால் கட்டப்பட்டது. சுருக்கி என்பது சுண்ணாம்பும் செங்கலும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து உருவான கலவை. அவர் தொடர்ந்தார். பெரியாறு அணை கான்கிரீட்டால் கட்டப்பட்டவில்லை. சுருக்கியில் உருவான அணையால் எப்படி 125 ஆண்டுகள் நீடித்திருக்க முடியும்? இப்படியாக நீண்டது அவரது வாதம். 

கண்ணந்தானம் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும்கூட. வழக்குரைஞரின் 'வாட்ஸப்' காணொலியைவிட கண்ணந்தானத்தின் நாடாளுமன்ற உரை எந்த விதத்திலும் உயர்வாக இல்லை.

இந்தக் காணொலிகளை விட்டுவிடுவோம். மேதகு உறுப்பினரின் பேச்சையும் விட்டுவிடுவோம். சுருக்கி பலவீனமானதா? கான்கிரீட் பலமானதா? சுருக்கியைவிட கான்கிரீட் நீடித்து உழைக்கக் கூடியதா? ஓர் அணைக்கட்டின் ஆயுளை எப்படி நிர்ணயிப்பது?

கட்டுமானப் பொருட்களின் வலிமையும் ஆயுளும்

கான்கிரீட் ஒரு செயற்கைக் கலவை. மேலதிகமாக  செயற்கையாக உருவாக்கப்பட்ட உலோகக் கலவையான இரும்புக் கம்பிகள் அதனுள்ளே பதிக்கப்படுகிறது. சிமெண்டும் கம்பியும் இயற்கையின் போக்குக்கு எதிர்த்திசையில் உருவானவை. ஆகவே இவை இயற்கையின் விதிகளை எதிர்த்து நிற்க வேண்டி இருக்கிறது. கான்கிரீட்டில் விரிசல் விழும். இரும்பு துருப் பிடிக்கும். இந்தப் போராட்டத்தில் எதிர்த்து நிற்கும் சக்தியைப் பொறுத்துதான் கான்கிரீட்டின் ஆயுள் தீர்மானமாகிறது. ஆகவே கான்கிரீட்டில் தரக் கட்டுப்பாடு முக்கியமானது. எவ்வாறாயினும் கான்கிரீட்தான் இந்த நூற்றாண்டின் பிரதானக் கட்டுமானப் பொருள். காரணம் அது வலுவானது, நவீனப் பயன்பாடுகளுக்கு உசிதமாக இருக்கிறது. சரி, கான்கிரீட்டின் ஆயுள் எத்துணை ஆண்டுகள்?

கட்டுமானத் துறையில் 'வடிவமைப்பு ஆயுள்' (design life) என்றொரு சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒரு கட்டுமானம் இத்தனை ஆண்டுகள் நீடித்திருக்கும் என்று கணிப்பார்கள். கான்கிரீட் கட்டிடங்களுக்கு ஒரு விதி நூல் இருக்கிறது, IS456. இதன் விதிகளுக்கு இசைவாகக் கான்கிரீட்  தயாரிக்கப்பட்டு, கம்பி பதிக்கப்பட்டு, கட்டிடம் உருவானால் அதன் 'வடிவமைப்பு ஆயுள்' 50 ஆண்டுகளாக இருக்கும். தரமான கட்டிடம் 'வடிவமைப்பு ஆயு'ளைக் கடந்தும் நீடித்திருக்கும். எனினும் 50 ஆண்டுகள் என்பதை கான்கிரீட் கட்டிடங்களின் குறைந்தபட்ச ஆயுளாக எடுத்துக்கொள்ளலாம்.

இது கட்டிடங்களுக்குச் சரி. பாலம், சுரங்கம், துறைமுகம் போன்ற உள்கட்டுமானப் பணிகள் பெரும் பொருட்செலவில் உருவாகின்றன. அவை 50 ஆண்டுகளே நீடித்திருக்கும் என்றால், அது அந்த முதலீட்டிற்கு நியாயம் சேர்க்காது. ஆகவே  கான்கிரீட் உருவாக்கத்திலும் கம்பிகளைப் பதிப்பதிலும் வடிவமைப்பிலும் தரக் கட்டுபாடுகளை உயர்த்தி, இந்த 'வடிவமைப்பு ஆயு'ளை 120 ஆண்டுகளாகக் கூட்டுவார்கள். கான்கிரீட் கலவையை மேம்படுத்தி, கான்கிரீட்டின் வெளிப்புறத்திற்கும் கம்பிக்குமான இடைவெளியைக் கூட்டுவது, கான்கிரீட்டின் வெளிப்புற விரிசலை மட்டுப்படுத்துவது முதலான முறைகளால் இந்த ஆயுள் நீட்டிப்பு செய்யப்படும். சாதாரண கான்கிரீட்டைவிட இதைக் கருத்தாக உருவாக்க வேண்டும், செலவும் அதிகமாகும்.  இப்படி உருவாகும் உள்கட்டுமானப் பணிகளின் ஆயுள்  120 ஆண்டுகளில் முடிந்து போகும் என்பது பொருளல்ல. அது  அந்தக் கட்டுமானத்தின் குறைந்தபட்ச ஆயுள். அதைத் தாண்டியும் அது நீடித்திருக்கும்.

கான்கிரீட் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் செங்கல் கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்கள் குறைவு.  ஆகவே இயற்கையோடு அவை நிகழ்த்தும் யுத்தமும் குறைவு. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சிமெண்ட் சாந்தைவிட, முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புச் சாந்து இயற்கையோடு கூடுதல் இயைந்தது. ஆக, கான்கிரீட் கட்டிடங்களைவிட செங்கல் கட்டிடங்களின் ஆயுள் பல மடங்கு அதிகம். அதிலும் சிமென்ட் சாந்து பயன்படுத்திய செங்கல் கட்டிடங்களைவிட சுண்ணாம்புச் சாந்து பயன்படுத்தப்பட்ட கட்டிடங்கள் நீடித்து நிற்கும். 

கல்லணையும் கருங்கல் சாதனையும்  

இவை இரண்டையும்விட கருங்கல் கட்டிடங்களின் ஆயுள் அதிகம். செங்கற்களால் கட்டப்பட்ட பராம்பரியக் கட்டிடங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றன. கருங்கல்லால் கட்டப்பட்ட கோட்டைகளும் கோயில்களும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிற்கின்றன. காரணம் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், கட்டுமானத்தின் தரமும், தொடர்ச்சியான பராமரிப்பும்.

கரிகாலன் கட்டிய கல்லணை ஈராயிரம் ஆண்டுகளாகக் காவிரியை வழி மறித்து நெறிப்படுத்திவருகிறது. அது கருங்கல்லால் கட்டப்பட்டது. கருங்கற்கள் ஆற்று நீருக்கு இடையில் ஒன்றன் மீது ஒன்றாக அமிழ்த்தப்பட்டு, பின்னர் இறுக்கப்பட்டது. இடையில் சாந்து இராது. பின்னாளில் வெள்ளையர் ஆட்சியில் இந்தக் கட்டுமானத்தைக் கண்டு விதந்து பாராட்டிய பொறியாளர் ஆர்தர் காட்டன், கல்லணயை மேம்படுத்தவும் செய்தார்.

இந்தியாவில் மட்டும் 100 ஆண்டுகளைக் கடந்த நிற்கும் அணைகள் பல. கர்னாடாகாவில் உள்ள ஹெப்பலா அணையின் வயது 1000 ஆண்டுகளுக்கும் மேல்.  மராட்டியத்தின் தமாப்பூர் அணையின் வயது 400 ஆண்டுகளுக்கும் மேல். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணை (1906), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெலிங்கடன் அணை (1923), சென்னையின் தாகம் தீர்க்கும் செங்குன்றம் (1876), ஆர்தர் காட்டன் கோதாவரிக்கு குறுக்கே கட்டிய தவுலேஸ்வரம் (1850),  கர்நாடாகத்தின் வாணி விலாச சாகரா (1907) முதலான பழைய அணைகள் அவற்றின் சீரிய கட்டுமானத்தாலும் சிறப்பான பராமரிப்பாலும் பாசனத்திற்கும் குடிநீருக்கும் மின்சாரத்திற்கும் பல்லாண்டுகளாகப் பணியாற்றிவருகின்றன.

பெரியாறு அணை கட்டப்பட்ட காலத்தில் சிமெண்ட் பயன்பாட்டுக்கு வரவில்லை. செங்கற்கள், சுண்ணாம்பு, நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட கலவையில் உருவாக்கப்பட்ட சுருக்கி கருங்கல் சுவர்களுக்கு இடையில் கெட்டிக்கப்பட்டது. இந்த சுருக்கியின் அடர்த்தி கான்கிரீட்டின் அடர்த்தியைவிடக் குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் சுருக்கி கான்கிரீட்டைவிடத் தாழ்வானது என்கிறார் கண்ணந்தானம். ஓர் அணையில் நிறைந்து நிற்கும் நீர் அணை சுவர்களின் மீது பெரும் பக்கவாட்டு அழுத்தத்தைத் தரும். இதை அணையின் சுவர் தனது எடையால்தான் எதிர்கொள்கிறது. அதனால்தான் பேரணைகளின் சுவர்கள் பெரிதாக இருக்கும். 

அடர்த்தி குறைவான சுருக்கியால் உருவான சுவர்களின் அகலம் கான்கிரீட் சுவர்களைவிட  அதிகமாக இருக்கும். அதே வேளையில் இயற்கைக்கு நெருக்கமான பொருட்களால் உருவான சுருக்கி, வேதியில் வினைகளால் உருவான செயற்கையான கான்கிரீட்டைவிட நீடித்துழைக்கக் கூடியது.  பெரியாறு அணை சுருக்கியால் உருவானதால் பலவீனமானது என்கிறார் கண்ணந்தானம். அது தவறு. அணை பலமானது மட்டுமில்லை, அவர் குற்றஞ்சொல்கிற சுருக்கியால் அதன் ஆயுள் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மேலதிகமாக சுருக்கியின் இருபுறமும் உள்ள கருங்கற்கள் அணையின் எடையையும் ஆயுளையும் அதிகரித்திருக்கிறது. 

பெரியாறு அணை சிறப்பாக பராமரிக்கப்பட்டுவருகிறது. அணையின் தரம் பல முறை ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டது. ஒன்றிய நீர் ஆணையத்தாலும், உச்ச நீதி மன்றம் நியமித்த ஆய்வுக் குழுக்களாலும் மேற்பார்க்கப்பட்டது, அவர்களால் சான்றளிக்கப்பட்டது.

ஓர் அணையின் ஆயுள் அதன் கட்டுமானப் பொருட்களின் நீடித்துழைக்கும் பொறியியல் பண்புகளால் தீர்மானமாகிறது.  பெரியாறு அணை அதன் கட்டுமானப் பொருட்களின் அடர்த்திக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. ஆகவே வலுவானது. அதன் கட்டுமானப் பொருட்கள் இயற்கையோடு இயைந்தவை. அதனால் நீடித்து உழைக்க வல்லவை. மிக முக்கியமாக அணை சீராகப் பராமரிக்கபட்டு வருகிறது. வல்லுநர்களால் தொடர்ந்து  பரிசோதிக்கப்பட்டும்வருகிறது.  

கேரளத்தின் 'வாட்ஸப்' பண்டிதர்கள் முதல் பொறுப்பான பதவிகளில் இருக்கும் அரசியலர்கள் வரை சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. தமிழக அரசு இதை தேசிய அரங்குகளிலும் கேரளத்தின் அறிவாளர்களிடையிலும் எடுத்துச் சொல்ல வேண்டும்.  பெரியாறு அணை இன்னும் பல நூறாண்டுகள் வலுவோடு நிற்க வல்லது. இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


1


பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Kannan Rajendran   2 years ago

The author mentioned, sugar is used in mortar. It's not true. The British Engineers are against using any organic matter,as it'll yield under water. Fresh lime used for making mortar is the strength of Periyar Dam.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

M. K. Sabarimani   3 years ago

எங்களுடைய ஆலோசனை அலுவலகம் எங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. பழைய காலத்தில் வாழ்ந்த மக்கள் சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் பிரபலமான கட்டுமானத்தை உருவாக்கிய கட்டுமானங்களை நாம் இன்று வரை அனுபவித்து வருகின்றோம். கருங்கல் கட்டிடங்கள் மிகவும் வலிமையானது. சரியான முறையில் அடுக்கி கட்டும் கருங்கல் கட்டுமானம் மிகவும் பலமானது. அதற்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது. இதன் பலம் ,அதன் சிறந்த வடிவம்,அதன் அடர்த்தி, மற்றும் எடையை சார்ந்து அமைகின்றன.

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

அ.வெண்ணிலா   3 years ago

பெரியாறு அணை திட்டத்தில் பணியாற்றிய ஏ.டி.மெக்கன்சி என்ற பிரிட்டீஷ் பொறியாளர் சொல்வது... சுர்க்கி என்ற செங்கல்தூள் கலந்து கட்டப்படும் கட்டுமானம் காலம் கூட கூட, கட்டுமானம் வலிமையாகும் என்கிறார். பெரியாறு அணையின் உறுதிக்கு சுர்க்கிதான் பிரதான காரணம்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

Cementஇன் முக்கிய மூலப்பொருளே சுண்ணாம்புதான். இன்னொன்று alumina எனப்படும் இயற்கையான ceramic தான்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

நாங்குநேநிலம்ஹார்மோனியம்திராவிடக் கதையாடல்ராஜபக்சகுடும்பப் பெயர்மனநிலைகேரளம்அடையாள அரசியல்ஆழ்ந்த அரசியல் ஈடுபாடுஇருவகைத் தலைவர்கள்யாதும் ஊரேஜலதோஷம்புதிய உடை தரித்த பழைய இந்தியின் கதை ஒரே தேர்தல்தி.ஜ.ரங்கநாதன்அப்துல்லாஹிஜாப்: ஆதரவு – எதிர்ப்புபேச்சுதாண்டவராயனைத் தேடி…பொருளாதாரப் பங்களிப்புகோயில் திறப்பு விழாபிறகு…தியாகராய ஆராதனாதேசியப் பொதுமுடக்கம்சருமநலம்நெறியாளர்சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா?சில யோசனைகள்சென்னை வெள்ளம் 2021

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!