கட்டுரை 8 நிமிட வாசிப்பு

திருவொற்றியூர் தரும் பாடம்

மு.இராமநாதன்
31 Dec 2021, 5:00 am
2

திருவொற்றியூர் பாடல் பெற்ற தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்களும் பாடிய தலம். பட்டினத்தார் தம் கடைசி நாட்களில் வசித்த தலம். இனி இந்த வடசென்னை நகரின் வரலாற்றில் கடந்த திங்கட்கிழமையன்று இடிந்து விழுந்த குடியிருப்பும் இடம்பெறும். இடிபாடுகளில் சிக்காமல் பிழைத்துவிட்ட 24 குடும்பங்களின் நல்வாய்ப்பும், அதேவேளையில் உடுத்திய துணியோடு வீதிக்கு வந்துவிட்ட அவர்தம் கெடுவாய்ப்பும் இன்னும் சில காலம் பேசுபொருளாக இருக்கும்.

இந்தக் கட்டிடம் பகலில் இடிந்து விழுந்ததால் குடியிருந்தவர்களால் வெளியேற முடிந்தது.  ஐந்தாண்டுகளுக்கு முன்னால், 2017-ல் நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாரில் போக்குவரத்துக் கழகப் பணிமனைக் கட்டிடமொன்றின் கூரை இடிந்து விழுந்தது நினைவிருக்கலாம். அது ஓர் அதிகாலைப்பொழுது. எட்டு ஊழியர்கள் உறக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் மீண்டும் விழிக்கவே இல்லை.

இரண்டு வாரங்களுக்கு முன் நெல்லை சாப்டர் பள்ளியின் கழிவறைச் சுவர் பகலில்தான் விழுந்தது. ஆனால், அந்தச் சுவர் விழப்போகும் அபாயம் உள்ளே இருந்த சிறுவர்களுக்குத் தெரியவில்லை.  திருவொற்றியூர் கட்டிடமும் பகலில்தான் விழுந்தது. அது தகர்ந்து விழப்போகிற சமிக்ஞையை உணர்ந்து, வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றுவதற்கு ஒரு சாமரியன் இருந்தார்.  இடிந்த விழுந்த கட்டிடம் இருக்கும் திருவொற்றியூரின் அருவாக்குளம் பகுதியில் இன்னும் 336 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் வசிப்பவர்கள் பலரையும் அச்சம் பீடித்திருக்கிறது. அவர்கள் வசிக்கும் கட்டிடங்களில் அசாம்பாவிதம் நிகழுமானால், இன்னொரு சமாரியன் வருவான் என்பது நிச்சயமில்லை.  ஆகவே பலரும் வீட்டைக் காலி செய்கிறார்கள்.

தமிழக அரசு ஐந்து வல்லுநர் குழுக்களை நியமித்திருக்கிறது. அவர்கள் டிசம்பர் 31-க்குள் அருவாக்குளத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற கட்டிடங்களை அடையாளம் காண்பார்கள். 'நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று இப்போது அழைக்கப்படுகிற, 'குடிசை மாற்று வாரிய'த்தின் கட்டிடங்கள், சென்னை நகரில் 123 திட்டப் பகுதிகளிலாக அமைந்து இருக்கின்றன. இவற்றுள் 61 பகுதிகளில் உள்ள 20,453 வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டப்பட வேண்டும் என ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடுகள் பலவும் 25 ஆண்டுகளுக்கு முந்தியவை. மீதமுள்ள 62 திட்டப் பகுதிகளில் உள்ள 17, 734 வீடுகளைத்தான் இப்போது வல்லுநர்கள் ஆய்வுசெய்துவருகின்றனர்.

சிதிலமடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியனதான்.  அதேவேளையில் கட்டி முடித்து சில ஆண்டுகளிலேயே ஒரு கட்டிடம் ஏன் இடிந்து விழுகிறது அல்லது இடிக்கப்படுகிறது; இதை எப்படித் தவிர்ப்பது? இந்த விபத்திலிருந்து நாம் கற்கக்கூடிய பாடங்கள் என்னென்ன? இந்தக் கட்டிடங்களின் நோய் நாடி, நோய் முதல் நாடி அதைத் தணிக்க வேண்டும். நமது கட்டிடங்களைப் பாதுகாப்பு மிகுந்ததாக மாற்ற வேண்டும்.

தரம் குறைந்தது ஏன்?

எல்லா விபத்துகளுக்கும் ஒரு வாரம் செய்தி மதிப்பு இருக்கும். அந்த ஊடகக் கவனம் திருவொற்றியூருக்கும்  கிடைத்தது. சமூக ஊடகங்களும் இதில் அடக்கம். ஒரு யூடியபர் அரசுக் கட்டிடங்கள் எல்லாமே தரம் தாழ்ந்தவை என்று கோபப்பட்டிருந்தார். அது அப்படித்தானா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை நெற்குன்றத்தில் வீட்டு வசதி வாரியம் கட்டிய ஓர் அடுக்ககத்தைப் பார்க்க வாய்த்தது. அது ஐ.ஏ.எஸ். அலுவலர்களுக்கானது. கட்டுமானம் நல்ல தரத்தில் இருந்தது. கடந்த பல ஆண்டுகளாகப் பொதுப் பணித்துறை பல்வேறு அரசு அலுவலகங்களையும், விருந்தினர் மாளிகைகளையும், நீதி மன்றங்களையும், மருத்துவமனைகளையும் கட்டியிருக்கிறது. அந்தக் கட்டிடங்கள் தரமானவைதாமே?

வீட்டு வசதி வாரியம் கடந்த ஐம்பதாண்டுகளாக அரசுப் பணியாளர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அடுக்ககங்களைக் கட்டிவருகிறது. அவை எதிலும் பெரிய அசம்பாவிதங்கள் நிகழவில்லை. ஏனெனில் அதன் பயனர்கள் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டுப்பெறக் கூடியவர்கள். ஆனால் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பயனர்கள் தங்கள் உரிமைகளை அறியார், அதைக் கேட்டுப்பெறும் வலிவும் இலார். 

அவர்கள் இந்த நகரத்தின் கூலித் தொழிலாளர்கள். ஒரு நாகரீகமான குடியிருப்பில் வசிப்பதற்கு ஏற்ற ஊதியத்தை இந்த நகரம் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் அவர்கள் புறம்போக்கு நிலங்களிலும் நடைபாதைகளிலும் ஒதுங்கினார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல குடியிருப்பை வழங்கும் உன்னத நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதுதான் குடிசை மாற்று வாரியம். ஆனால், அந்த நோக்கத்தின் மேன்மை நடைமுறைப்படுத்துவதில் நீர்த்துப்போனது. இந்தப் பாத்திரத்துக்கு இது போதுமானது என்று சிலர் முடிவுசெய்தார்கள். இந்த மனோபாவம் பயிருக்கு இடையிலான களையாகத்தான் தொடங்கியிருக்கும். ஆனால், விரைவில் மரமாய் வளர்ந்து விட்டது. இதை வெட்டி எறிய வேண்டும். தீர்க்கமான அரசியல் தலைமையால்தான் இதைச் செய்ய முடியும்.

பராமரிப்பின் அவசியம்

ஒரு  நாளிதழ் தனது தலையங்கத்தில் பின்வரும் வினாவை எழுப்பியிருந்தது. 'குடியிருப்புக்கான ஒரு கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து விழுந்திருப்பது, ஒப்பந்ததாரர் தொடங்கி அந்தப் பணியை மேற்பார்வையிட்ட பொறியாளர்கள் வரையில் அனைவரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. நெல்லையில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து குழந்தைகள் பலியானதையடுத்து அப்பள்ளியின் தலைமையாசிரியர், தாளாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரைக் கைதுசெய்ததுபோல், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?' - இதுதான் வினா.

எடுக்கப்படாது என்பதைவிட எடுக்க முடியாது என்பதுதான் விடை. ஒரு கட்டிடம் நீடித்து நிற்பதற்குத் தரமான கட்டுமானம் எத்துணை முக்கியமோ, அதைப் போலவே முறையான பராமரிப்பும் முக்கியம். கட்டுமான ஒப்பந்தங்களில் ஒப்பந்ததாரரின் பராமரிப்புக் காலம் முன்பெல்லாம் ஓராண்டாக இருந்தது. இப்போது பலரும் அதை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தி இருக்கிறார்கள்.  அதற்குப் பின்பு அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்தான் பராமரிக்க வேண்டும். இதுதான் சர்வதேச நடைமுறை. அந்தப் பொறுப்பை ஒப்பந்ததாரர் மீதோ கட்டுமானத்தை மேற்பார்த்த பொறியாளர்கள் மீதோ சுமத்துவது முறையாகாது.

மேலை நாடுகளில் ஒவ்வொரு அரசுக் கட்டிடத்திற்கும் ஒரு பராமரிப்புப் பதிவேடு இருக்கும். பராமரிப்பதற்குப் பொறுப்பான பொறியாளரும் நியமிக்கப்பட்டு இருப்பார். கட்டிடத்தில் பழுது நேர்ந்தால் அவர் அதை உடனடியாகச் சீரமைப்பார். ஏற்பட்ட பழுதையும் திருத்த வேலைகளையும் பதிவேட்டில் குறித்து வைப்பார். ஒவ்வொரு ஆண்டும் கட்டிடத்திற்கான தகுதிச் சான்றிதழ் வழங்குவார். அப்படி வழங்கும்போது அவர் மேற்கொள்ள வேண்டிய சோதனைகளைக் குறித்து தெளிவான பட்டியல் இருக்கும். இந்த நடைமுறைகளை நாமும் பின்பற்ற வேண்டும். இதற்காகக் கூடுதல் பொறியாளர்கள் தேவைப்படலாம். பராமரிப்புச் செலவு அதிகரிக்கவே செய்யும். ஆனால், நம்மைச் சுற்றியுள்ள சுவர்களும் தலைக்குமேல் உள்ள கூரையும் எப்போது வீழும் என்று யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. கட்டிடத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே அதைத் தகர்த்துவிட்டுப் புதிதாகக் கட்ட வேண்டிய அவசியம் வராது.

நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம்

இப்போது கட்டிடத்தின் ஆயுள் பற்றிய உரையாடலையும் கேட்க முடிகிறது. ஒரு மொபைல் பத்திரிகை சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் ஆகப் பழையது என்று கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள அடுக்ககங்களைக் குறிப்பிட்டிருந்தது. இவை 56 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1965-ல் கட்டப்பட்டவை. அடுத்ததாக, எம்டிபி பகுதியில் உள்ள வீடுகள் (1969), அடையாறு சாஸ்திரி நகர், இந்திரா நகர்(1970), ருக்மிணி நகர் (1972), பிருந்தாவன் நகர் (1973) அடுக்ககங்களும் 'பழைய வீடு'களின் பட்டியலில் இருந்தது.

ஒரு கட்டிடம் எப்போது பழையதாகிறது? ஒரு கட்டிடத்தின் ஆயுள் எத்தனை ஆண்டுகள்? நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கட்டிடங்களின் ஆயுள் 30 ஆண்டுகள் என்பதாக ஓர் ஆங்கில நாளிதழ் எழுதியிருந்தது. இதை வாரியமே சொன்னதாகவும் அந்தக் குறிப்பில் கண்டிருந்தது. இந்தச் செய்தி சரியானதெனில் அதை வாரியம் விளக்க வேண்டும். ஏனெனில், இது சர்வதேசக் கட்டுமான விதிமுறைகளுடன் பொருந்திப் போகவில்லை.

எல்லாக் கட்டுமானத்திற்கும் 'வடிவமைப்பு ஆயுள்' (design life) உண்டு. தார்ச் சாலைகளுக்கு 20 ஆண்டுகள். கான்கிரீட் சாலைகளுக்கு 40 ஆண்டுகள். கான்கிரீட் கட்டிடங்களுக்கு 50. பாலங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள் முதலான உள்கட்டுமானப் பணிகளுக்கு 120. ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் விதி நூல்கள் உள்ளன. கான்கிரீட் கட்டிடங்களின் விதி நூல் IS 456. அதன்படி அதன் வடிவமைப்பு ஆயுள் 50 ஆண்டுகள். இதன் பொருள், அந்தக் கட்டுமானம் 50 ஆண்டுகள் மட்டுமே நீடித்திருக்கும் என்பதல்ல.  அதேவேளையில், எந்தப் பராமரிப்பும் இல்லாவிட்டாலும் அதன் ஆயுள் 50 ஆண்டுகள் நீடித்திருக்கும் என்றும் இதற்குப் பொருளல்ல. தரமாகக் கட்டப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்ட கட்டிடத்தின் ஆயுள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாக இருக்கும் என்பதுதான் பொருள். பராமரிப்பைப் பொறுத்து அதன் ஆயுள் நீடிக்கும். வளர்ந்த நாடுகளில் ஒரு கட்டிடத்தின் பெருமதி குறைகிறதா என்பதை அதன் பராமரிப்புப் பொறியாளர் மதிப்பிடுவார். அதில் திருத்த வேலைகள் செய்யலாமா அல்லது அதைத் தகர்த்துவிடலாமா, இரண்டில் எது ஆதாயகரமானது என்பதையும்  அவர் முடிவு செய்வார். எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கட்டிடங்கள் இடிந்து விழும் அசம்பாவிதங்கள்  அங்கு நிகழ்வதில்லை. தமிழ்நாடு போன்ற ஒரு வளர்ந்த மாநிலத்திலும் இப்படியான விபத்துகளை நாம் அனுமதிக்கலாகாது.

நமது கட்டிடங்கள் விதி நூல்களின்படி வடிவமைக்கப்பட வேண்டும். தரக் கட்டுப்பாடுடன் கட்டப்பட வேண்டும். கட்டுமான காலத்தில் செம்மையாக மேற்பார்க்கப்பட வேண்டும். பயன்பாட்டுக் காலத்தில் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். பழுது நேர்ந்தால் உடனுக்குடன் சீரமைக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் பரிசீலிக்கப்பட்டு தகுதிச் சான்றிதழ் வழங்கபடவேண்டும். இவை திருவொற்றியூர் தந்த பாடமாக இருக்கட்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


2

2

1
பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Mukundan Varadharajan   2 years ago

வீட்டு வசதி வாரியம் கடந்த ஐம்பதாண்டுகளாக அரசுப் பணியாளர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அடுக்ககங்களைக் கட்டிவருகிறது. அவை எதிலும் பெரிய அசம்பாவிதங்கள் நிகழவில்லை. ஏனெனில் அதன் பயனர்கள் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டுப்பெறக் கூடியவர்கள் I have lived in Tamilnadu Housing board houses for many years. The quality of construction of these houses is also very bad. But we can't complain anywhere. Even if you complain no action will be taken because of nexus between contractors and politicians. Everything works based on commission.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Sivabalan Kannan   2 years ago

சமாரியன், சாமரியன் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன பொருள்?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஊடகர் ஹார்னிமன்நவீன சிந்தனைகள்சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதற்குமே அவசியம்மாறுபட்ட கவிதைஇந்திய வரலாறுஅழகியல்மக்கள் விடுதலை சேனைபுதுமடம் ஜாஃபர் அலி கட்டுரைஅச்சத்தை மறைக்கப் பார்க்கிறது அரசுஉடல் எடை ஏன் ஏறுகிறது?இந்தியாவுக்கான திராவிடத் தருணம்சாதி ஒழிப்புகுறு மயக்கம்அக்னிபாத்கலைக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விபொதுப் பாதுகாப்புசில யோசனைகள்சசிகலாஉத்திபுதிய தலைமுறைதனியார் நிறுவனங்கள்தொகுதிகள் மறுவரையறைநவ நாஜிகள்தீப்பற்றிய பாதங்கள்எழுத்தாளர் பேட்டிசெலன்ஸ்கிஜயலலிதாவர்ணாசிரம தர்மம் தொடர்ந்து மறுக்குது அரசாங்கம்உள்ளூர் மொழி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!