கட்டுரை, நிர்வாகம், தொழில்நுட்பம் 4 நிமிட வாசிப்பு
அண்ணா சாலை விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்
பத்மபிரியாவுக்குத் தெரியாது.
கடந்த வெள்ளிக்கிழமை (27.1.2023) காலை எட்டரை மணிக்கு எப்போதும் போல் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினார். அண்ணா சாலை வழியாக நடந்து போனால் அவரது அலுவலகத்தை 15 நிமிடத்தில் அடையலாம். அன்றைய தினம் அந்த தூரத்தை அவர் கடக்கப் போவதில்லை. அது பத்மபிரியாவுக்குத் தெரியாது. பாதசாரிகளின் பயன்பாட்டிற்காக மட்டுமே நிறுவப்பட்டிருக்கும் நடைபாதையில்தான் நடந்தார். ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் சுற்றுச்சுவர் உள்புறமாக இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது வெளிப்புறமாக இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்கும் நடைபாதைக்கும் இடையே தடுப்புத் தட்டி (barricade) இருந்திருக்க வேண்டும். இல்லை. அந்த 23 வயது உசிலம்பட்டி பெண்ணுக்கு இனி எதுவும் தெரியப் போவதில்லை.
அந்தக் கட்டிடத்தை இடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தோம். ஆனால், உரிமையாளர்கள் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இப்படிச் சொன்னது மாநகராட்சி. இப்போதைய விதிமுறைகளின்படி இந்த விளக்கம் சரியானதுதான். சில சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அலுவலர்கள் சரியாகக் கண்காணிக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். இப்போதைய விதிமுறைகளின்படி அப்படி நடவடிக்கை எடுத்துவிட முடியாது.
இதில் கட்டிட உரிமையாளரும் அவர் பணியமர்த்திய ஒப்பந்ததாரரும் தவறு இழைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால், தவறு அவர்கள் மீது மட்டும்தானா? நமது நாட்டில் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கான விதிமுறைகளே குறைவு. பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான விதிமுறைகள் அதனினும் குறைவு. கண்காணிப்பு கட்டாயமில்லை. பல வளர்ந்த, வளரும் நாடுகளோடு ஒப்பிடும்போது நமது நடைமுறைகளின் பலவீனம் துலக்கமாகும்.
ஹாங்காங் மாடல்
எனது ஹாங்காங் அனுபவம் இது தொடர்பான விதிமுறைகளைப் புரிந்துகொள்ள உதவும். நான் 1995இல் ஹாங்காங்குக்குப் புலம்பெயர்ந்தேன். ஒரு பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் பணி. எனக்கு வழங்கப்பட்ட முதல் வேலை ஒரு கட்டிடத்தை இடிப்பதற்கான வரைபடமும் அறிக்கையும் தயாரிக்க வேண்டும். அதுகாறும் கட்டிடங்களைக் கட்டுவதற்குத்தான் வரைபடங்கள் இருக்கும் என்று நம்பி வந்தேன்.
ஒரு கட்டிடத்தைப் பொறியியல்ரீதியாகவும் எல்லாப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடனும் இடிக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பணியில் ஈடுபடுகிற தொழிலாளர்கள், அயல்வாசிகள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பும், அவர்தம் உடமைகளும் உடல் நலமும் பேணப்படும். இப்படித் தொடங்கியது கட்டிடங்களை இடிப்பதற்கான தொழில்நுட்ப அறிக்கை. ஹாங்காங் கட்டிடத் துறை அந்த அறிக்கையைத் தயாரித்திருந்தது. இது தொடர்பாக மேலும் சில அறிக்கைகள் இருந்தன. தவிர, கள அறிக்கைகளும் கல்விப்புல ஆய்வறிக்கைகளும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன. 1998இல் இந்த அறிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரு வரைவு விதி நூல் உருவானது. அது அனுபவ வெளிச்சத்தில் மேம்பட்டுத்தப்பட்டு 2004இல் கட்டிடங்களை இடிப்பதற்கான விதி நூலாக (Code of Practice for Demolition of Buildings 2004) மாறியது. ஹாங்காங் சட்டமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டு அதன் சகல விதிகளும் சட்டபூர்வமாக்கப்பட்டன. அந்த நகரில் ஒரு கட்டிடத்தை இடிப்பதற்கு முன்னர் சில கட்டங்களைத் தாண்டியாக வேண்டும்.
முதலில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் வரைபடங்களைச் சேகரிக்க வேண்டும். வரைபடங்கள் குறைவாகவோ, இல்லாமலோ இருந்தால் புதிய வரைபடங்களை உருவாக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தின் பாரம் எப்படி அடித்தளத்துக்குச் செல்கிறது என்பதை மதிப்பிட வேண்டும். தளங்களிலிருந்து உத்திரங்களுக்கு, உத்திரங்களிலிருந்து தூண்கள் அல்லது சுவர்களுக்கு, அதிலிருந்து அடித்தளத்திற்கு என்பதாக இந்த பாரப் பாதை (load path) அமைந்திருக்கும். இந்தப் பாரப் பாதையின் வரிசைப்படியே இடிக்க வேண்டும். அதாவது, முதலில் தளம், அடுத்து உத்திரம், அடுத்து தூண்- இப்படி. இவற்றையெல்லாம் வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வரிசை மாறினால் விபரீதம் விளையும்.
அடுத்து கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள், அவற்றின் தரம் முதலியவற்றை மதிப்பிட வேண்டும். இதன் மூலமே எந்தப் பகுதிகளைக் கைக் கருவிகளால் மட்டுமே இடிக்க வேண்டும், எந்தப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்பதை நிர்ணயிக்க முடியும். ஜேசிபி முதலான இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமெனில் தளங்களின் தாங்கு திறன் நிறுவப்பட வேண்டும். இடிக்கப்பட்ட சிதைக்கூளங்கள் உள்நோக்கித்தான் விழ வேண்டும்.
இடிப்புப் பணி தொடங்குவதற்கு முன்னால் சில வேலைகள் இருக்கின்றன. நடைபாதைக்கும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்துக்கும் இடையில் தடுப்புத் தட்டி அமைக்க வேண்டும். நடைபாதையில் கூரையுடன் கூடிய பாதை (covered walkway) அமைக்க வேண்டும். இந்தக் கூரையின் மீது தாங்கு தட்டி (catch platform) அமைக்க வேண்டும். கட்டிடத்திலிருந்து தப்பித்தவறி சிதைக்கூளங்கள் விழுந்தால், அவை இந்த தாங்குதட்டியில்தான் விழும். தடுப்புத் தட்டிக்கும் கட்டிடத்துக்கும் இடையில் மூங்கில் சாரம் அமைத்து அதில் நெருக்கமான கண்ணிகளைக் கொண்ட நைலான் வலை கட்ட வேண்டும். இந்த முன்னேற்பாடுகள் முடிந்ததும் சான்று பெற வேண்டும். அதன் பிறகே இடிப்பதற்கான அனுமதியை கட்டிடத் துறை நல்கும்.
சான்று அளிப்பது யார்?
அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்டிடக் கலைஞரையும் (architect) ஒரு கட்டமைப்புப் பொறியாளரையும் (structural engineer) மனையின் உரிமையாளர் நியமிக்க வேண்டும். கடுமையான தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கே அரசின் அங்கீகாரம் கிடைக்கும்.
இவர்கள் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கும் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்குமான வரைபடங்கள், கணக்கீடுகள், அறிக்கைகள், பரிசோதனை முடிவுகள் முதலானவற்றை அரசுக்குச் சமர்பிப்பார்கள். அரசின் ஒப்புதல் பெறுவார்கள்.
தொடர்ந்து கட்டிடம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின்படியும், விதிமுறைகளின்படியும் பாதுகாப்போடு இடிக்கப்படுகிறதா / கட்டப்படுகிறதா என்று கண்காணிப்பார்கள். இவர்கள்தான் கட்டிடத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இது அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்று சான்று அளிப்பார்கள். இதற்காக இவர்கள் மேற்பார்வையாளர்களை நியமித்துக்கொள்ளலாம். இவர்களுக்கு அதிகாரம் உண்டு, சுதந்திரமும் உண்டு, தவறிழைத்தால் தண்டனையும் உண்டு.
இந்திய மாடல்
இந்திய தேசியக் கட்டிட விதி நூலில் (National Building Code of India) ஒரு கட்டிடம் எப்படி இடிக்கப்பட வேண்டும் என்பதற்கான பாதுகாப்பு விதிகள் உள்ளன. இந்த விதிகளை உரிமையாளர் பின்பற்ற வேண்டும். ஆனால், உரிமையாளர் பலரும் இப்படியான விதிகள் இருப்பதை அறிய மாட்டார்கள். மேலும் விரிவான வரைபடங்களைச் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுவது நமது நாட்டில் அவசியமில்லை. இருக்கிற விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்க முறையான அமைப்பும் இல்லை. முழுப் பொறுப்பும் உரிமையாளரையே சாரும். ஆனால், எல்லா உரிமையாளர்களும் தார்மிகப் பொறுப்போடு நடந்துகொள்வதில்லையே!
என்ன செய்யலாம்?
இந்தியா எங்கும் இதுதான் நிலைமை. ஆனால், தமிழ்நாடு முன்னேறிய மாநிலம். நாம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமையலாம். எப்படி? இடிபாட்டு விதிகளையும் கட்டமைப்பு விதிகளையும் மேம்படுத்த வேண்டும். விரிவான வரைபடங்களையும் அறிக்கைகளளையும் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதற்காகக் தகுதியும் அனுபவமும் வாய்ந்த கட்டமைப்புப் பொறியாளர்களும் கட்டிடக் கலைஞர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு தேர்வாணையம் இவர்களுக்கான தகுதிகாண் தேர்வுகளை நடத்தலாம்.
கட்டிடம் விதிகளின்படி இடிக்கப்படுகிறதா (அல்லது கட்டப்படுகிறதா), பணிகள் பாதுகாப்பான முறையில் நடக்கின்றனவா என்றும் இவர்கள் கண்காணிக்க வேண்டும். இவற்றைச் சட்டபூர்வமாக்க வேண்டும். அப்போது தங்களது வடிவமைப்புப் பணிக்கும் கண்காணிப்புப் பணிக்குமான ஊதியத்தை இவர்கள் உரிமையாளரிடம் இருந்து பெற முடியும். விபத்துகள் நேர்ந்தால் அதற்கு இவர்கள் பொறுப்பாக்கப்படவும் வேண்டும். அரசுப் பொறியாளர்களால் எல்லாக் கட்டுமானப் பணிகளையும் கண்காணிக்க முடியாது. அது அவசியமும் இல்லை.
நம்முடைய நாட்டில் கட்டிடங்களை இடிப்பதற்கான விதிமுறைகள் பலவீனமானவை. இருக்கும் விதிகளும் பின்பற்றப்படுவது இல்லை. அவை கண்காணிக்கப்படுவதும் இல்லை. இவை எதுவும் பத்மபிரியாவுக்கு தெரியாது. நமது சட்டங்களின் மீதும் அதன் மாட்சிமையின் மீதும் நம்பிக்கை வைத்திருந்த எளிய குடிநபர் அவர். அண்ணா சாலைக் கட்டிடத்தின் சுவர் அந்த நம்பிக்கையின் மீதுதான் விழுந்திருக்கிறது. இப்படியான விபத்துகள் தொடர்வதை நாம் அனுமதிக்கலாகாது. அதுவே பத்மபிரியாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும்.
தொடர்புடைய கட்டுரைகள்
கட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்
திருவொற்றியூர் தரும் பாடம்
ஓர் அணைக்கட்டின் ஆயுள் எத்தனை ஆண்டுகள்?
4
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Soraiyur Rangarajan 2 years ago
மிக மிக வருத்தமான விஷயம். அந்த ப்பெண்ணின் குடும்பம் என்ன பாடுபாடும். இதைவிட கொடுமை 2012ல் அக்டோபர்மாத திடீரென பெய்த மழையில் கோடம்பாக்கம் செல்ல சாலையை கடக்க நேர்ந்த ஒர் பெணணுக்கு கழிவுநீர் வெளியேற இருந்த இடம் தெரியாமல் உள்ளே விழுந்த பெண்ணிடமிருந்து வருகிறது
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.