கட்டுரை, அரசியல், நிர்வாகம் 15 நிமிட வாசிப்பு
கட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்
சமீபத்தில் கட்டிடங்களுக்கு அனுமதி நல்குவது தொடர்பாகத் தமிழகத்தில் ஓர் அரசாணையும் ஒரு சுற்றறிக்கையும் வெளியாயின. ஆணையை வெளியிட்டது வீட்டு வசதித் துறை. அறிக்கையை வெளியிட்டது சென்னை மாநகராட்சி. இரண்டுமே முக்கியமானவை. புதிய ஆணை, நகர் ஊரமைப்பு இயக்ககம் (Directorate of Town and Country Planning- DTCP), சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority- CMDA) ஆகிய இரு நிறுவனங்களின் அதிகாரங்கள் சிலவற்றைப் பரவலாக்கியிருக்கிறது. அடுத்தது சுற்றறிக்கை. அது சொல்வது: சென்னை நகரில் கட்டப்படும் கட்டிடங்கள், தரைத்தளத்தை எட்டியவுடன், அவை அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின்படி கட்டப்படுகின்றனவா என்று மாநகராட்சிப் பொறியாளர்களால் பரிசோதிக்கப்படும்.
புதிய ஆணை, கட்டிடங்கள் தொடர்பான அனுமதி பெறுவதை எளிதாக்குகிறது. ஒப்புதல் அளிக்கப்பட்ட வரன்முறைக்குள் கட்டிடம் மேலெழும்புவதைச் சுற்றறிக்கை உறுதி செய்கிறது. ஆகவே, சமீபத்திய ஆணையும் அறிக்கையும் நல்ல முன்னெடுப்புகள்தாம். எனில், இவை போதுமானவையா?
வளரும் நாடுகளில்கூட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிமுறைகள் உள்ளன. மேலதிகமாக, அந்தக் கட்டிடங்கள் நீடித்து உழைப்பதை உறுதி செய்துகொள்ளக் கட்டுமான காலத்தில் அவை கண்காணிக்கப்படுகின்றன. இந்தியாவில் இது தொடர்பான விதிமுறைகள் பலவீனமானவை. வேறு பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் இந்த விதிமுறைகள் மேலானவைதான்.
அவை தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன என்பதன் அடையாளம்தான் சமீபத்திய ஆணையும் அறிக்கையும். எனினும் தமிழகம் போன்ற ஒரு முன்னேறிய மாநிலத்தில் இந்த விதிகளை நாம் இன்னும் மேம்படுத்தவும் அவற்றை முறையாக அனுசரிக்கவும் வேண்டும். மேம்பாடுகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் புதிய ஆணையையும் அறிக்கையையும் சற்று நெருங்கிப் பார்த்துவிடலாம்.
புதிய ஆணை
நகர் ஊரமைப்பு இயக்ககமானது (DTCP), வீட்டு வசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது. டி.டி.சி.பிதான் சென்னை நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளின் ஊரமைப்பையும் உள்கட்டமைப்பையும் திட்டமிடுகிறது. இடங்களை மனைகளாகப் பிரிப்பதற்கும், கட்டிட வரைபடங்களுக்கும், குறிப்பிட்ட பரப்பளவு வரை ஊராட்சிகள் அனுமதி வழங்கும். அதற்கு மேல் குறிப்பட்ட அளவு வரை டி.டி.சி.பி-யின் மண்டல அலுவலகங்களும், மேலதிகப் பரப்பிற்கு அதன் தலைமையகமும் அனுமதி வழங்கும். புதிய அரசாணையானது இனிமேல் 40,000 சதுர அடிப் பரப்பைக் கொண்ட கட்டிடங்களுக்கான அனுமதியை மண்டல அலுவலகங்களே வழங்க வகை செய்கிறது. இந்த அதிகாரம் முன்னர் தலைமையகத்திடம் இருந்தது.
சென்னை நகரத்தைப் பொறுத்தமட்டில், மேலே குறிப்பிட்ட டி.டி.சி.பியின் பணிகள் அனைத்தையும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்கிறது. இதுகாறும் 18 மீட்டருக்கு (59 அடி, சுமார் 6 மாடி) மேல் உயரமான அடுக்ககங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அரசு நியமித்த சிறப்புக் குழுவிடம் இருந்தது. புதிய ஆணையின்படி எல்லா அடுக்ககங்களுக்கான அனுமதியையும் இனி சி.எம்.டி.ஏ வழங்கும். இதுவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்புதான்.
தரைத்தளச் சோதனை
அடுத்து சுற்றறிக்கை. புதிய கட்டிடத்திற்கும் அருகமைச் சாலைகளுக்கும், அண்டை அயலில் உள்ள பிற மனைகளுக்கும் இடையே கடைப்பிடிக்க வேண்டிய இடைவெளியைக் குறித்து விதிகள் உள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்திலும் இந்த அளவுகள் இருக்கும். ஆனால், கட்டி முடிக்கும்போது சிலர் இந்த இடைவெளிகளைக் குறுக்கிவிடுவார்கள். இது தொடர்பான ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பும் வழங்கியது. அப்போது நீதிபதிகள் கட்டிடம் தரைத்தளத்தை எட்டும்போதே, அது அதிகாரிகளால் சோதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்தே மாநகராட்சி இந்தச் சுற்றறிக்கையை வழங்கியிருக்கக்கூடும். இந்த முன்னெடுப்பு இது தொடர்பான அத்துமீறல்களைக் கணிசமாகக் குறைக்கும்.
வளர்ச்சி விதி
கட்டிட விதிகளில் அவசியமான மேம்பாட்டைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நிலவில் உள்ள விதிகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்தும், அதன் பரப்பைப் பொறுத்தும், கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்தும் சி.எம்.டி.ஏ அல்லது டி.டிசி.பி, ஊராட்சி அமைப்புகளோ கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கும். இந்த ஒப்புதல்கள் அரசு நிறுவனங்களின் ‘வளர்ச்சி விதி’களின் (Development Control Rules) அடிப்படையிலேயே வழங்கப்படும். மனை அமைந்திருக்கும் சாலையின் அகலத்தைப் பொறுத்துக் கட்டிடத்தைச் சுற்றிலும் இடைவெளிகள் இருக்க வேண்டும்.
மனையின் பரப்பைப் பொறுத்து கட்டுமானப் பரப்பு நிர்ணயிக்கப்படும். இன்னும் வாகன நிறுத்தம், கட்டிடத்தின் அனுமதிக்கப்பட்ட உயரம், மழை நீர் சேகரிப்பு போன்ற பலவும் விதிகளில் இடம்பெறுகின்றன. இந்த 'வளர்ச்சி விதி'களின்படி கட்டிடத்தின் திட்ட வரைபடங்களைக் கட்டிடக் கலைஞர் (architect) சமர்ப்பிப்பார். அதனடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும். இதற்குத் திட்ட அனுமதி (Planning Permission) என்று பெயர். இந்தத் திட்ட வரைபடங்களுடன் கட்டுமானத்திற்கு கட்டமைப்புப் பொறியியல் (structural engineering) தொடர்பான வரைபடங்களும் வேண்டும்; ஆனால், இந்தியாவில் மிக்க இடங்களிலும் இவை கோரப்படுவதில்லை.
கட்டமைப்பு வரைபடத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ஒரு கட்டிடத்தை மனித உடல் என்று வைத்துக்கொண்டால், ஒரு கட்டிடக் கலைஞர் உடலமைப்பைக் குறித்தும் தோற்றப் பொலிவைக் குறித்தும் அக்கறை கொள்வார். ஒரு கட்டமைப்புப் பொறியாளர் எலும்புக்கூட்டைக் குறித்தும் தசையை எலும்போடு பிணைக்கும் தசைநார்கள் குறித்தும் அக்கறை கொள்வார். ஒரு கட்டிடத்தின் பயன்பாட்டுக்கேற்ப அதன் தோற்றத்தைக் கட்டிடக் கலைஞர் வடிவமைக்கிறார் என்றும், அதற்கு இசைவாகக் கட்டிடத்தின் உள்ளீடு எவ்விதம் இருக்க வேண்டுமென்று கட்டமைப்புப் பொறியாளர் வடிவமைக்கிறார் என்றும் கொள்ளலாம். இந்தியாவின் பல நகரங்களிலும் தோற்றப் பொலிவைக் குறித்த விதிமுறைகள் உள்ளன (சி.எம்.டி.ஏ-வின் ‘வளர்ச்சி விதி’களைப் போல). ஆனால், உள்ளீடு எவ்விதம் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தும் விதிகள் போதுமான அளவுக்கு இல்லை.
மவுலிவாக்கம்
சென்னையில், 2014 ஜுன் 28 அன்று நடந்த துயரச் சம்பவத்தை மறக்க முடியாது. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. 61 பேர் பலியாயினர். மவுலிவாக்கம் எனப் பெயர், சென்னையைத் தாண்டி, இந்தியாவைக் கடந்து, உலக நாக்குகளில் புரண்டது.
விபத்து நடந்த உடனேயே ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், பொதுப்பணித் துறை ஆகிய நிறுவனங்களின் வல்லுநர்கள் குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் கண்டறிந்த சில குறைபாடுகள் வருமாறு: கான்கிரீட்டின் அடர்த்தி குறைவாக இருந்தது. இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்டு ஊடுகம்பிகள், தரம் தாழ்ந்தவையாக இருந்தன. அடித்தளம் அமைக்கப்பட்ட ஆழத்தில் மண்ணின் தாங்குதிறன் போதுமானதாக இல்லை. முக்கியமாக, வாகனங்கள் நிறுத்துவதற்கான கீழ்தளத்தில், வரைபடத்தில் காட்டப்பட்டிருந்த சில தூண்கள் கட்டப்படவே இல்லை.
ஹாங்காங் மாடல்
அப்போது நான் ஹாங்காங்கில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். மவுலிவாக்கம் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாயின. என்னுடன் பணியாற்றிய சீனப் பொறியாளர்களால் இதை நம்ப முடியவில்லை. வரைபடத்தில் உள்ள தூண்களை ஒப்புதல் இல்லாமல் எப்படி நீக்க முடியும் என்று கேட்டார்கள். ஹாங்காங்கில் இப்படி நடக்காது. வளர்ந்த நாடுகள் எதிலும் நடக்காது.
ஹாங்காங்கில் ஒரு கட்டிடத்தின் பணி ஆரம்பிக்கப்படுவதன் முதற்கட்டமாக, மனையின் உரிமையாளர் அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்டிடக் கலைஞரையும் ஒரு கட்டமைப்புப் பொறியாளரையும் நியமித்துக்கொள்ள வேண்டும். இந்த அங்கீகாரத்தை இவர்கள் எப்படிப் பெறுகிறார்கள்? குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வடிவமைப்பிலும் களப்பணியிலும் அனுபவம் பெற்ற கட்டிடக் கலைப் பட்டதாரிகள் ஹாங்காங் கட்டிடக்கலை கழகத்திலும் (Hong Kong Institute of Architects), அதேபோல் பொறியியல் பட்டதாரிகள் ஹாங்காங் பொறியாளர் கழகத்திலும் (Hong Kong Institute of Engineers) உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் மிகக் கடுமையான எழுத்துத் தேர்வுகளையும் நேர்முகத் தேர்வுகளையும் எதிர்கொள்வார்கள். வெற்றி பெற்றவர்கள் கழகத்தின் உறுப்பினர்களாவார்கள். இதைத் தொடர்ந்து இவர்கள் அரசின் பதிவுபெற்ற கட்டிடக் கலைஞர்களாகவும் பதிவுபெற்ற பொறியாளர்களாகவும் முடியும். இப்படித்தான் இவர்கள் அங்கீகாரம் பெறுகிறார்கள்.
ஹாங்காங் அடுக்ககங்களால் உருவானது. நகரத்தின் குடிமக்கள் அனைவரும் அடுக்ககங்களில்தான் வசிக்கிறார்கள். ஆகவே அடுக்ககங்களின் பாதுகாப்பு என்பது அதில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பும்தான். அவை நல்ல தரத்திலும் போதுமான பாதுகாப்போடும் கட்டப்படுவதற்கு, விரிவான விதிமுறைகள் ஒரு காரணம்; அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தனியார் துறைப் பொறியாளர்களுக்கும் கட்டிடக் கலைஞர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பங்கும் ஒரு காரணம். இவர்களுக்குப் பொறுப்பு உண்டு, சுதந்திரம் உண்டு, அதிகாரம் உண்டு, தவறிழைத்தால் தண்டனையும் உண்டு.
கட்டிடக் கலைஞர் புதிய கட்டிடத்தின் வரைபடங்களைச் சமர்ப்பிக்கும்போது, கட்டமைப்புப் பொறியாளர், அதன் உள்ளீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைத்து, அது குறித்த கணக்கீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். கூடவே, கட்டமைப்பின் உறுப்புகளான தளங்கள், உத்திரங்கள், தூண்கள் முதலானவற்றின் விரிவான வரைபடங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கட்டமைப்புப் பொறியாளர் அடித்தளத்தின் விரிவான வரைபடத்தையும் சமர்ப்பிப்பார். அடித்தளத்தின் வடிவமைப்பு, தூண்கள் அல்லது சுவர்கள் தாங்க வேண்டிய பாரத்தைப் பொறுத்தும், மண்ணின் தன்மையைப் பொறுத்தும் அமையும்.
மண் பரிசோதனை முக்கியமானது. மனையின் பரப்பையும் கட்டிடத்தின் தன்மையையும் பொறுத்து, தேவையான எண்ணிக்கையில், தேவையான ஆழத்தில் துளைகள் இடப்பட்டு, அவற்றிலிருந்து பல்வேறு ஆழத்தில் மண்ணின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்படும்; பின்னர் பொறியியல்ரீதியாக அவற்றின் தாங்குதிறன் அனுமானிக்கப்படும். இதுகுறித்த விரிவான அறிக்கையோடும், கணக்கீடுகளோடும் அடித்தளத்தின் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தவிர, கட்டமைப்புப் பொறியாளர் ‘எலும்புக்கூட்’டின் முக்கிய உறுப்புகளான கான்கிரீட், ஊடுகம்பி, முதலானவற்றின் பண்புகளையும் தமது வரைபடத்தில் குறிப்பிட வேண்டும்.
ஹாங்காங் கட்டிட விதிமுறைகள் விரிவானவை. பொறியியல் விதிநூல்கள், சர்வதேச விதிநூல்களை அடியொற்றியும், ஹாங்காங் தேவைகளைக் கருத்தில் கொண்டும் தயாரிக்கப்பட்டவை. இன்னும் ஏராளமான பாதுகாப்பு விதிகளும் தரக்கட்டுப்பாட்டு விதிகளும் உண்டு. கட்டமைப்புப் பொறியாளரின் கணக்கீடுகளும் வரைபடங்களும் இவற்றைப் பின்பற்றியே அமையும்.
கட்டிடக் கலைஞரும் கட்டமைப்புப் பொறியாளரும் கட்டிடத்தை வடிவமைப்பதோடும், அரசின் ஒப்புதல் பெறுவதோடும் நின்றுவிட முடியாது. கட்டிடம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின்படியும், ஹாங்காங் கட்டிட விதிமுறைகளின்படியும் தரத்தோடும் பாதுகாப்பாடும் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்கிற பொறுப்பும் கடமையும் அவர்களையே சாரும். இதற்காகக் கட்டிடத்தின் அளவைப் பொறுத்து தேவையான மேற்பார்வையாளர்களை இவர்கள் நியமிக்க வேண்டும். மேற்பார்வையாளர்களின் தகுதியும் அனுபவமும் விதிமுறைகளில் உள்ளன.
இவர்கள், கட்டுமானம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின்படி கட்டபடுகிறதா என்பதையும், கட்டுமானப் பொருட்களின் தரம், கட்டப்படுகிற முறை முதலானவற்றையும் கண்காணிக்க வேண்டும். விதி நூல்களில் வரையறுக்கப்பட்டிருக்கும் அளவிற்குக் குறையாமால் கட்டுமானப் பொருட்களை சோதனைச் சாலைகளில் பரிசோதித்து, அந்த அறிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கட்டுமானப் பணியானது, அதில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கும், மனையிடத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கும், அடுத்துள்ள கட்டிடங்களுக்கும் எந்தவித அபாயத்தையும் விளைவிக்கக் கூடாது. அதைக் கண்காணிப்பதும் மேற்பார்வையாளர்களின் கடமையே.
கட்டமைப்புப் பொறியியல்
இப்போது இந்தியாவிற்கு வரலாம். இந்திய நகரங்களின் 'வளர்ச்சி விதி'களில் கட்டமைப்பு குறித்த விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. தேசியக் கட்டிட விதிநூலின் (National Building Code- NBC) விதிகளின்படியே கட்டமைப்பு அமைய வேண்டும், வரைபடங்களில் கட்டிடக் கலைஞரோடு பொதுவியல் (civil) அல்லது கட்டமைப்புப் பொறியாளரும் கையொப்பமிட வேண்டும் போன்ற விதிகள் உள்ளன.
மவுலிவாக்கம் சம்பவத்திற்குப் பிறகு சி.எம்.டி.ஏ-வில் கட்டமைப்புப் பொறியியல் வரைபடங்கள் கோரப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் அவை எந்த அளவிற்குப் பரிசோதிக்கப்படுகின்றன என்பதைக் குறித்த தெளிவில்லை என்கிறார்கள். அந்த வரைபடங்களின்படி அவை முறையாகக் கட்டுப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்படுவது இல்லை. தமிழகத்தின் மற்ற நகரங்களில் கட்டமைப்பு வரைபடங்கள் கோரப்படுவதாகத் தெரியவில்லை. கட்டிடக் கலைஞர்களும் கட்டமைப்புப் பொறியாளர்களும் கட்டுமான காலத்தில் கண்காணிக்க வேண்டும் என்று இந்திய விதிகள் வலியுறுத்துவதில்லை.
கண்காணிப்பு
மவுலிவாக்கம் விபத்தைத் தொடர்ந்து கண்காணிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த சி.எம்.டி.ஏ., 2014 நவம்பர் மாதம் கட்டிடக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது. 'ஒரு கட்டிடத்தின் பணி நிறைவடையும்போது கட்டிடக் கலைஞர், கட்டமைப்புப் பொறியாளருடன் இணைந்து கட்டிடம் வலுவானது என்று சான்றளிக்க வேண்டும்' என்பதே அது. இந்தியக் கட்டிடவியல் கழகம் (Indian Institute of Architects- IIA) இதற்கு இணங்கவில்லை. இந்திய தேசியக்கட்டிட விதிநூலின்படி (NBC) கட்டிடக் கலைஞர்கள் கட்டிடத்தின் வலிமைக்குப் பொறுப்பேற்க வேண்டாம் என்பது அவர்கள் வாதம். ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பலரும் பணி நடக்கும்போது தங்களை மேற்பார்வையிடப் பணிப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதாவது கட்டுமானக் காலத்தில் மேற்பார்வையிடுவதற்கு முதலாளிகள் தங்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை என்பதைத்தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். இது சி.எம்.டி.ஏவிற்கும் புரிந்திருக்கும். ஆனாலும் இதைக் குறித்த உரையாடல் தொடர்ந்து நடக்கவில்லை.
கட்டுமானக் காலத்தில் கண்காணிப்பு ஏன் அவசியமானது? சென்னை மாநகராட்சியின் புதிய சுற்றறிக்கை, கட்டிடம் தரைத் தளத்தை எட்டியதும் புறச் சுவர்கள் விதிக்கப்பட்ட வரையறைக்குள்ளாகவே கட்டப்படுகிறது என்பதை அரசுப் பொறியாளர்கள் சோதிப்பார்கள் என்கிறது. இது பலன் தரும். எனினும் விதிமீறல்கள் கட்டிடத்தின் விஸ்தீரணத்தை விரிப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. பெரிய அளவில் விதிமீறல்கள் நடக்கின்றன. என்னுடைய அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.
விதிமீறல்
ஆண்டு 2010. மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிற்காக அண்ணா சாலையை அகழும் பணி நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்து 10 நிமிட நடை தூரத்தில் இருந்தது நண்பர் அழைத்துக்கொண்டு போன அடுக்ககம். அதில் நான்காவது தளத்தில் ஒரு வீட்டை அவர் விலை பேசிக்கொண்டிருந்தார். அதைப் பார்ப்பதற்காக என்னையும் அவரது கணக்காளரையும் அழைத்துப் போனார். கட்டுமானம் திருப்பதிகரமாக இருந்தது- எனக்கு. ஆனால், கணக்காளர் திருப்தியடையவில்லை. உரிமையாளர் சொன்ன விலை, சந்தை விலையைக்கால் குறைவாக இருந்தது. எங்கேயோ 'எழுத்துப் பிழை' இருக்கிறது என்றார் கணக்காளர். நண்பர் இரண்டு நாளில் பிழையைக் கண்டறிந்துவிட்டார்.
அந்த அடுக்ககத்தில் மூன்று மாடிகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி இருந்தது. உரிமையாளர் நான்காவது மாடியும் அதில் ஒரு வீடும் கூடுதலாகக் கட்டிவிட்டார். விவரம் அறிந்ததும் நண்பர் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டார். உரிமையாளர் மறுக்கவில்லை. சென்னை நகரில் இது போல் பல வீடுகள் கட்டப்பட்டிருப்பதாவும், நாளாவட்டத்தில் இவை அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்றும் சொன்னார். இப்படியான அத்துமீறல்கள், சட்டத்தின் மாட்சிமை (rule of law) பேணப்படுகிற ஒரு நகரத்துக்கு அழகன்று. நமது கண்காணிப்பு முறை, இப்படியான அத்துமீறல்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டுமானம் பாதுகாப்புடன் நடக்க வேண்டும். குறைந்தபட்சத் தரம் காக்கப்பட வேண்டும். இதற்கு ஹாங்காங் உட்பட பல வளர்ந்த நாடுகள் செய்வதைப் போல கட்டிடக் கலைஞரையும் கட்டமைப்பு பொறியாளரையும் பொறுப்பாக்கலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த தெளிவான விதிகளை வகுக்க வேண்டும்.
என்ன செய்யலாம்?
முதற்கட்டமாக இப்படிச் செய்யலாம். இரண்டு மாடிகளுக்கு மேலாகவும், 3000 சதுர அடிப் பரப்புக்கும் மேலாகவும் உள்ள கட்டிடங்களின் வரைபடங்களைத் தயாரிப்பதற்கும், கட்டுமான காலத்தில் கண்காணிப்பதற்கும் தகுதி வாய்ந்த கட்டிடக் கலைஞர்களையும் கட்டமைப்புப் பொறியாளர்களையும் சி.எம்.டி.ஏ-வும் டி.டி.சி.பி-யும் அங்கீகரிக்க வேண்டும்.
கட்டிடக் கலை படிப்பை முடித்ததும் ஒருவர் கட்டிடக் கலைஞர் ஆகிவிடுவதில்லை. போலவே பொறியியல் படிப்பை முடித்ததும் ஒருவர் பொறியாளர் ஆகிவிடுவதில்லை. அதற்குத் தொடர்ச்சியான படிப்பும் பயிற்சியும் தேவை. தற்போது இந்தியக் கட்டிடவியல் கழகத்திலோ (Indian Institute of Architects- IIA), இந்தியப் பொறியியல் கழகத்திலோ (Institute of Engineers India- IEI), முறையே கட்டிடக் கலைப் பட்டமோ, பொறியியல் பட்டமோ, கூடவே ஐந்து ஆண்டு அனுபவமும் உள்ளவர்கள் உறுப்பினராகிவிடலாம். இந்தக் கழகங்கள் வளர்ந்த நாடுகளைப் போல் உறுப்பினராவதற்குத் தேர்வு நடத்துவதில்லை. கல்லூரியில் காலடி வைப்பதற்கு முன் நுழைவுத் தேர்வு நடத்துகிற நடைமுறையைக் கைவிட்டுவிட்டு, பட்டம் பெற்ற பின், குறிப்பிட்ட அளவு களப்பயிற்சியும் பெற்ற பின் தேர்வு நடத்துகிற முறையைக் கொண்டுவர வேண்டும். தொழிற்கழகங்கள் (IIA, IEI) தேர்வு நடத்தி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது நடைமுறைக்கு வரும் வரை ஒன்றிய, மாநில அரசுகளின் பணியாளர் தேர்வாணையங்கள் (UPSC/TNPSC) கட்டிடக் கலைஞர்களுக்கும் கட்டமைப்புப் பொறியாளர்களுக்கும் தேர்வுகள் நடத்தித் தெரிவு செய்யலாம்.
இப்படியாகத் தேர்வானவர்களில் விருப்பமுள்ளவர்களை சி.எம்.டி.ஏ-வும் டி.டி.சி.பி-யும் அங்கீகரிக்கலாம். மேலும் வளர்ந்த நாடுகளைப் போல் இவர்களது கடமைகளையும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தண்டனைகளையும் வரையறுக்க வேண்டும்.
இப்படி அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே கட்டிடத்தின் விரிவான கட்டிடவியல், பொறியியல் வரைபடங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீடுகள், மண் பரிசோதனை அறிக்கைகள் போன்றவற்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். கட்டுமானப் பொருட்கள் தரமானவையா, கட்டிடம் விதிகளின்படி கட்டப்படுகிறதா, கட்டுமானப் பணிகள் பாதுகாப்பான முறையில் நடக்கின்றனவா என்றும் இவர்கள் கண்காணிக்க வேண்டும். இதற்காக இவர்கள் மேற்பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். இவை அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தங்களது பணிக்கான ஊதியத்தை கட்டிடக் கலைஞர்களும் கட்டமைப்புப் பொறியாளர்களும் பெற முடியும்.
இப்போது இரண்டு கேள்விகள் எழலாம். முதல் கேள்வி, இதனால் கட்டுமானத்தின் செலவு கூடுமே? ஆம். கூடவே கட்டுமானத் தொழிலின் தரமும் கூடும். கட்டிடங்கள் பாதுகாப்பாகாவும், சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டும், தரமாகவும் உருவாகும். இது கட்டிடங்கள் நீடித்துழைக்க வகை செய்யும். மேலும் கட்டிடக் கலைஞர்களும் கட்டமைப்புப் பொறியாளர்களும் பெறப்போகும் கூடுதல் ஊதியம், கட்டுமானச் செலவோடு ஒப்பிட்டால் அதன் சிறிய வீதமாகவே இருக்கும்.
இரண்டாவது கேள்வி, ஏன் அரசே அவசியமான கட்டிடக் கலைஞர்களையும் கட்டமைப்புப் பொறியாளர்களையும் நியமித்துக் கண்காணிக்கக் கூடாது? செய்யலாம். அப்படிச் செய்தால் கூடுதல் அலுவலர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். அதாவது பொது மக்கள் அனைவரும் வழங்க வேண்டும். இது பெட்ரோலுக்கு விதிக்கப்படும் மறைமுக வரியைப் போன்றது. இது வறியவர்களை அதிகமாகவும் செல்வந்தர்களைக் குறைவாகவும் பாதிக்கும். மாறாக கட்டிட உரிமையாளர்கள் தாங்கள் நியமிக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடக் கலைஞர்களுக்கும் கட்டமைப்புப் பொறியாளர்களுக்கும் கண்காணிப்புப் பணிக்கான ஊதியத்தை நேரடியாக வழங்குவது, வருமான வரியைப் போன்றது; நேர்முக வரியை ஒத்தது, மேலானது.
‘இந்தியாவில் எல்லாவற்றுக்கும் விதிகள் உள்ளன; அவற்றை நடைமுறைப் படுத்துவதில்தான் சுணக்கம் உள்ளது’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் கட்டிடங்களைப் பொறுத்த மட்டில் இப்போதுள்ள விதிகள் போதுமானவை அல்ல. 'வளர்ச்சி விதி'களை விரிவாக்கவும் மேம்படுத்தவும் வேண்டும். கட்டிடக் கலைஞர்களுக்கும் கட்டமைப்புப் பொறியாளர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும். தெரிவானவார்களை சி.எம்.டி.ஏ-வும் டி.டி.சி.பி-யும் அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் விரிவான வரைபடங்கள் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான காலத்தில் கண்காணிக்க வேண்டும். அரசு இதைக் குறித்த ஓர் உரையாடலை முன்னெடுக்கலாம். அரசு நிறுவனங்களும், கல்வி நிலையங்களும், கட்டிடவியல், பொறியியல் கழகங்களும், ஒப்பந்தக்காரர்களும் இதைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!
2
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.