கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு
சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?
‘சி.கே.டி’. இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இது, ஏதோ ஒரு கடையின் பெயர் கிடையாது; கட்சியின் பெயரும் கிடையாது. கவலை தரக்கூடிய ஒரு மருத்துவப் பெயர். ‘க்ரானிக் கிட்னி டிசீஸ்’ (Chronic Kidney Disease - CKD) எனும் நோயின் சுருக்கப் பெயர். தமிழில் சொன்னால், நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு.
இன்றைக்கு, இந்தியாவில் 100இல் 15 பேருக்கு இந்தப் பாதிப்பு ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. நம் வாழ்வியல் மாற்றங்களால் இந்த எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துவருகிறது. சாதாரண மருத்துவச் சிகிச்சையில் குணமாகும் நோய் இது. சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பல பேர் வாரத்தில் மூன்று நாட்கள் ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு ஆபத்தை வரவழைத்துக்கொள்வதுதான் பெருந்துயரம்.
இதற்கு ஓர் உதாரணம் முதியவர் ராமசாமி. நீரிழிவுக்காக என்னிடம் சிகிச்சைக்கு வருபவர். கிராமத்துக்காரர். ஒல்லியான தேகம். பார்ப்பதற்கு டிராபிக் ராமசாமி போலவே இருப்பார். கொரோனா காலத்தில் அவரது சிகிச்சைச் சங்கிலி அறுபட்டுப்போனது. ரத்தச் சர்க்கரை எகிறிவிட்டது. சிறுநீரகம் பழுதுபட்டது. இப்போது அவர் ‘டயாலிஸிஸ்’ சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த நோயின் தொடக்கத்தில் ‘உடல் அசதியாக இருக்கிறது’ என்று என்னிடம் வந்தார். முகக் கவசத்தைக் கழற்றச் சொல்லி கவனித்தேன். முகத்தில் களைப்பு தெரிந்தது. கொஞ்சமாக முகம் உப்பியிருந்தது. பாதம் வீங்கியிருந்தது. அவரைப் பார்த்த கனத்தில் அவருக்குச் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகச் சந்தேகப்பட்டேன். ‘ரத்தப் பரிசோதனைகளைச் செய்து நோயை முடிவுசெய்யலாம்’ என்றேன். அதற்கு அவர் தயாரில்லை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
“எனக்குத்தான் சிறுநீர் போவதில் எவ்விதச் சிக்கலும் இல்லையே!” என்று அவநம்பிக்கையுடன் என்னைப் பார்த்தார். பரிசோதனை செய்துகொள்ளாமல் பொதுவான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். அவரைப் போல் ஆயிரம் ராமசாமிகளை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
‘சிகேடி’யின் தொடக்க நிலையில் இருக்கிற இவர்களுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்தாலும், மற்றொரு சிறுநீரகம் வேலை செய்வதால், சிறுநீர் பிரிவதில் குறை இருக்காது. ஆகவே, ராமசாமியைப் போல தங்களுக்குச் சிறுநீரக நோய் இருப்பதை நம்ப மறுத்து, சிகிச்சைக்கு வராமல், நிரந்தரமாகச் சிறுநீரகச் செயலிழப்பை வரவழைத்துக்கொள்பவர்களே அதிகம். நோய் ஆரம்பித்துப் பல மாதங்கள் ஆன பின்னரும் அறிகுறி எதுவும் தெரியாமல் உடலுக்குள் உலா வருவது இந்த நோயின் மோசமான குணம்.
அறிகுறிகள் என்ன?
இரவில் அடிக்கடி சிறுநீர் போவது இதன் ஆரம்ப அறிகுறி. அப்போதே விழித்துக்கொண்டால், பிரச்சினை பெரிதாகாது. இல்லாவிட்டால், சோர்வு தலைகாட்டும். நடந்தால் மூச்சு வாங்கும். இதயம் படபடக்கும். ரத்தசோகை ஏற்பட்டு முகம் வெளுக்கும். போகப்போகச் சிறுநீர் பிரிவது குறையும். பாதம், முகம் வீங்கும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது. குமட்டலும் வாந்தியும் தொல்லை தரும். எடை குறையும். அடிக்கடி விக்கல் வரும். சருமத்தில் அரிப்பு ஏற்படும்.
யார் யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
‘சிகேடி’ விஷயத்தில் யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்ல ஒரு பட்டியல் இருக்கிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், உயர் ரத்த அழுத்தக்காரர்கள், ரத்தக் கொலஸ்டிரால் அதிகமாக உள்ளவர்கள், பருமனான தேகத்துக்குச் சொந்தக்காரர்கள், குடும்பத்தில் வம்சாவளியாக ‘சி.கே.டி’ பிரச்சினை இருக்கிறவர்கள், சிறு வயதில் சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிட்டு வருபவர்கள், வருடக்கணக்கில் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடுபவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்கள்… இப்படி ஒரு பலசரக்குப் பட்டியல்போல் இது நீள்கிறது.
என்ன காரணம்?
‘சிகேடி’ பிரச்சினை தலைதூக்குவதற்கு மூத்த வயது, உடல் பருமன் போன்ற காரணங்கள் பல இருந்தாலும், நீரிழிவை காலங்காலத்துக்குக் கட்டுப்படுத்தத் தவறுவதும், ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விடுவதும்தான் ‘விஐபி’ காரணங்கள். அடுத்ததாக, இதயச் செயலிழப்பு இருந்தால் அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். தவறினால், அது சிறுநீரகச் செயலிழப்பைத் துணைக்கு அழைத்துக்கொள்ளும்.
என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?
இவர்கள் வருடத்துக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்யவேண்டியது கட்டாயம். அத்தோடு மாதம் ஒருமுறை வழக்கமான மருத்துவ செக்-அப் செய்துகொள்ள வேண்டியதும் அவசியம். அப்போதுதான் சிறுநீரகத்துக்கு ஏற்படுகிற சீரழிவை முதல் கட்டத்திலேயே சிறைப்பிடிக்க முடியும். சிறுநீரில் ‘மைக்ரோ அல்புமின்’ அளவும், ரத்தத்தில் யூரியா, க்ரியேட்டினின், BUN, இஜிஎஃப்ஆர் (eGFR) ஆகிய அளவுகளும், வயிற்று அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும் சிறுநீரகத்தின் நிலைமையைக் காட்டும். அப்போது ‘சி.கே.டி’யின் வளர்ச்சிக் கட்டங்கள் தெரிந்துவிடும்.
சிகிச்சை என்ன?
‘சி.கே.டி’யில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என மொத்தம் 5 கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் மூன்று கட்டங்களுக்கு மருந்து சிகிச்சை மட்டுமே போதும். மருத்துவரின் பரிந்துரைகளைச் சரியாகப் பின்பற்றினால், சுமார் பத்து வருடங்களுக்குப் பெரிதாக சிக்கல் எதுவும் ஏற்படாமல் சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும்.
பொதுவாக, 40 வயதைக் கடந்த ஒருவருக்கு ரத்தத்தில் யூரியா அளவு 20லிருந்து 40 மி.கி., வரையிலும், க்ரியேட்டினின் அளவு 0.7லிருந்து 1.2 வரையிலும், இஜிஎஃப்ஆர் (eGFR) அளவு 99 என்றும் இருக்க வேண்டும். யூரியா அளவு 40 மி.கி.க்கு மேல் போகக் கூடாது. க்ரியேட்டினின் அளவு 1.2க்கு மேல் தாண்டக் கூடாது. இஜிஎஃப்ஆர் 60க்குக் கீழ் குறையக் கூடாது. சிறுநீரில் அல்புமின் புரதம் (Albuminuria) வெளியேறக் கூடாது.
சிறுநீரகப் பிரச்சினையைச் சரியாக அணுகாதவர்களுக்கு யூரியா, க்ரியேட்டினின் அளவுகள் அடுத்தடுத்து எகிறிக்கொண்டே போகும். இஜிஎஃப்ஆர் 15க்கும் கீழ் குறைந்துவிடும். அப்படியானால், இதுவரை இவர்கள் சாப்பிட்டு வந்த மாத்திரைகளுக்குச் சிறுநீரகம் சீரடையவில்லை என்று பொருள். சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்பதற்கான அடையாளம் இது. இந்த நேரத்தில் ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை மட்டுமே சிறுநீரகத்தைக் காப்பாற்ற முடியும்.
இந்த இடத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி. தமிழ்நாட்டில் ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை இலவசமாகவே வழங்கப்படுகிறது. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இதை மேற்கொள்ள முடியும்.
ஆனால், ‘டயாலிஸிஸ்’ என்றதுமே அநேகரும் அந்தச் சிகிச்சைக்குத் தயங்குவதுதான் நடைமுறை. ‘டயாலிஸிஸ்’ சிகிச்சைக்குப் பயந்து மருந்துச் சிகிச்சையைத்தான் தொடர்கின்றனர். பலரும் மாற்று மருத்துவத்துக்குக் ‘கட்சி’ தாவுவதும் உண்டு. ‘சி.கே.டி’யில் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள் மனம் தளராமல், சிகிச்சைக்குத் தயங்காமல், இருக்கிற பிரச்சினையை ஏற்றுக்கொண்டு, தேவையான ‘டயாலிஸிஸ்’ சிகிச்சையை எடுத்துக்கொண்டால் செயலிழந்த சிறுநீரகத்தைக் காப்பாற்ற முடியும்.
அதேவேளை, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பல மருத்துவமனை வாசற்படிகளில் ஏறி இறங்கினால், சிறுநீரகம் முழுவதுமாகச் செயலிழந்துவிடும். அதற்குப் பின்னர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைதான் பயனாளியைக் காப்பாற்ற முடியும். அதாவது முழுசும் பழுதாகிப்போன சிறுநீரகத்தை மாற்றியாக வேண்டும். அந்தப் புதிய சிறுநீரகத்தை அடுத்தவர்கள்தான் தானமாகத் தர வேண்டும். நாட்டில் நினைத்த நேரத்தில் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்காது; காத்திருக்க வேண்டும். அதற்குள் சிறுநீரகப் பாதிப்பு உச்சநிலையை எட்டிவிடக் கூடாது.
இத்தனை பாடு எதற்கு? நோயின் ஆரம்பத்திலேயே விழித்துக்கொண்டு, சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொண்டால் ‘சிகேடி’க்கு இடமில்லாமல் போகும்தானே!
வாருங்கள், அதற்கான பத்து ஆரோக்கிய வழிகளை இப்போது பார்க்கலாம்!
- உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. அதைக் கட்டுப்படுத்துங்கள். சராசரி ரத்த அழுத்தம் 120/80 என்று இருக்க வேண்டும். இது 129/89க்கு அதிகமானால் மருத்துவ ஆலோசனை அவசியம். 139/89க்கு மேலே இருந்தால் மாத்திரை அவசியம்.
- ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துங்கள். அனைவருக்கும் பொதுவாக, இதன் மூன்று மாதக் கட்டுப்பாடு (HbA1C) 6%க்குக் கீழே இருக்க வேண்டும். ஆனால், சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு இது வேறுபடும். 50 வயதுக்குக் கீழ் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இது 6.5% என்ற அளவிலும், 50 – 70 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 7 - 7-5%, 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 8% எனும் அளவிலும் இருக்க வேண்டும்.
- உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள். அதற்குச் சத்தான, சமச்சீரான உணவு முக்கியம்.
- சமையல் உப்பு ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். ஆகவே, நாளொன்றுக்கு 5 கிராமுக்குக் குறைவாக உப்பின் அளவு இருக்கட்டும். முக்கியமாக, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், சாஸ், கருவாடு போன்ற உப்பு ஊறிய உணவுகளைத் தவிர்க்கவும். காய்கறி, பழங்களை அதிகப்படுத்தவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ‘ரெட் மீட்’ வகைகளையும் புறந்தள்ளவும். புரதமும் பொட்டாசியமும் குறைந்த உணவைச் சாப்பிடுவது நல்லது.
- ஒரு நாளைக்குக் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவான பரிந்துரை. ஆனால், இது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தாது. அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப மருத்துவரின் பரிந்துரைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது. செயற்கை பானங்கள் வேண்டாம்.
- புகை, மது இந்த இரண்டும் வேண்டாம்.
- மூட்டுவலி, முதுகுவலிக்கு வலி மாத்திரைகளைச் சுயமாக வாங்கிச் சாப்பிடும் பழக்கம் வேண்டாம். ஆஸ்துமாவுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டாம்.
- நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா உதவும்.
- சிறுநீரகத் தொற்று, சிறுநீரகக் கல், புராஸ்டேட் வீக்கம் ஆகிய பிரச்சினைகள் இருந்தால் உடனே சிகிச்சை பெறுங்கள்.
- சீரான கால இடைவெளிகளில் முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
சிறுநீரகமும் சர்க்கரையும் ரத்த அழுத்தமும்!
நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?
ஆண்களுக்கே உண்டான அவதி!
சிறுநீரகக் கல் வலி: தப்பிப்பது எப்படி?
சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு
கோடையில் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும், ஏன்?
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.