கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன்
03 Mar 2024, 5:00 am
0

கோடை தொடங்கிவிட்டது. கோடை கொடுக்கும் ஆரோக்கியத் தொல்லைகள் பல உண்டு. அவற்றுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆண், பெண் என்னும் பாகுபாடு இல்லாமலும், குழந்தை, முதியோர் என்னும் வேறுபாடு இல்லாமலும் பாதிக்கிற ஒரு பிரச்சினை இது. எல்லாப் பருவ காலத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்குதல் வேகம் அதிகம்.

என்ன காரணம்?

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், தாகம் அடங்கும்வரைத் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அதிகமாகச் சேர்ந்துப் படிகமாகி சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்; கடுப்பு உண்டாகும்.

அடுத்து, கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரத்தில் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். போதுமான அளவுக்குத் திரவம் நம் உடலில் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்க்காய்ச்சல்கூட வரும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பள்ளிச் சிறுவர் சிறுமிகள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்கிறவர்கள், முதியோர்கள் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர, மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு

கு.கணேசன் 24 Apr 2022

சிறுநீர்ப் பாதையில் கல்

சிறுநீரகத்தில் தொடங்கி சிறுநீர்ப் புறவழி வரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும் வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக  வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில சமயங்களில் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம்வரை பரவும்.

சிறுநீர்ப் பைப் பிரச்சினைகள்

சிறுநீர்ப் பையில் தொற்று ஏற்பட்டு வீக்கம் உண்டாகும்போது நீர்க்கடுப்பு ஏற்படும். இங்கு கல், காசநோய், புற்றுநோய் என எது தாக்கினாலும் நீர்க்கடுப்புடன், சிறுநீரில் ரத்தம், சீழ் வெளியேறுதல், குளிர்க் காய்ச்சல், வாந்தி, வலி போன்ற துணைப் பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ளும்.

புராஸ்டேட் வீக்கம்

ஆண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்பட புராஸ்டேட் வீக்கமும் புற்றுநோயும் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. வழக்கத்தில், நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கே இந்த மாதிரியான பிரச்சினைகளால் நீர்க்கடுப்பு வருகிறது. இவர்களுக்குச் சிறுநீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் போகும். மிதமான வேகத்தில் போகும். ஒருமுறை சிறுநீர் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். எத்தனை முறை போனாலும் சிறுநீர் முழுவதுமாகக் கழிந்துவிட்ட திருப்தி இருக்காது. இன்னமும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஆண்களுக்கே உண்டான அவதி!

கு.கணேசன் 28 Aug 2022

சுய சுகாதாரம் முக்கியம்

சிறுநீர் வெளியேறுகிற பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறினால், சிறுநீர்க்கடுப்பு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கும் புதுமணத் தம்பதிகளுக்கும் இந்தக் காரணத்தால்தான் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. கொனோரியா போன்ற பால்வினை நோய்கள் தாக்கினாலும் சிறுநீர்ப் புறவழி அழற்சி அடைந்து நீர்க்கடுப்பை உண்டாக்கும்.

சிறுநீர்த் தாரையில் கல் அடைத்துக்கொண்டாலும், அந்தப் பாதை சுருங்கிவிட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு சிறுநீர் சொட்டுச்சொட்டாகப் போகும். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ, கறுப்பாகவோ மாறும்.

பெண்களுக்குரிய பிரச்சினைகள்

கர்ப்பப்பைக் கட்டிகள், சினைப்பைக் கட்டிகள், அடிஇறங்கிய கருப்பை போன்றவை சிறுநீர்ப் பையை அழுத்தும்போது பெண்களுக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுவதுண்டு. கொனோரியா நோய் வந்த பெண்களுக்குச் சிறுநீர்க் கடுப்பு நிறைய தொல்லை தரும்.

மாத்திரை, மருந்துகள் கவனம்!

வலி நிவாரணி மாத்திரைகள், சல்பா மருந்துகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு

ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட வழி அமைக்கும். அதன் விளைவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்க்கடுப்பும் அடிக்கடி தொல்லை தரும்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

சிறுநீரகக் கல் வலி: தப்பிப்பது எப்படி?

கு.கணேசன் 29 May 2022

பரிசோதனைகள் என்ன?

சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே பெரும்பாலான காரணம் புரிந்துவிடும். இத்துடன் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் முழுமையான காரணங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதைக் கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவுசெய்துவிடலாம். அடிப்படைக் காரணத்தைக் களையும் சிகிச்சைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தடுக்க என்ன வழி?

கோடையில் தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் குளிக்க வேண்டும். வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஏசி அறையில் வேலை பார்ப்பவர்களுக்குத் தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்கலாம். ஆனாலும், இவர்களும் தினமும் குடிக்க வேண்டிய அளவுக்குத் தண்ணீர் குடித்துவிட வேண்டும். அப்போதுதான் நீர்க்கடுப்பு தொல்லை தராது.

கோடைக் காலத்தில் முடிந்த அளவு, மசாலா, காரம், புளி, எண்ணெய் மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கோடை முழுவதும் அசைவ உணவுகளை ஒதுக்கிவைப்பது இன்னும் நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் கோடையிலாவது நிறைய காய்கறி, பழங்களைச் சாப்பிட வேண்டும்.

வெறுமனே தண்ணீரை மட்டும் அதிக அளவில் குடிப்பதற்குச் சிரமமாக இருந்தால், மோர், பழரசம், இளநீர், பதனீர், கிரீன் டீ போன்றவற்றை அதிகமாக அருந்தலாம்.

காபி, தேநீர், பிளாக் டீ போன்றவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது. சூடாக சாப்பிடுவதையும் சூடான திரவங்களை அருந்துவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். கோடையில் கம்மங்கூழ் சாப்பிடுவது நீர்க்கடுப்பு வராமல் தடுக்கும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, நெல்லி, திராட்சை, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத்தன்மையைக் குறைத்துவிடும். இதனால் நீர்க்கடுப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

இதையும் வாசியுங்கள்... 6 நிமிட வாசிப்பு

சிறுநீரகமும் சர்க்கரையும் ரத்த அழுத்தமும்!

கு.கணேசன் 06 Nov 2021

கோடையிலாவது பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். காரணம், இந்த உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கும். இது சிறுநீரின் அடர்த்தியை அதிகமாக்கி, நீர்க்கடுப்புக்குப் பாதை போடும். எனவேதான் இந்த எச்சரிக்கை.

பெரும்பாலும் வெயிலில் அதிகமாக அலையும்போதும் நீண்ட நேரம் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீரிழப்புதான் சிறுநீர்க் கடுப்பு ஏற்படுவதற்குத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது. வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியது இருந்தால், கண்களுக்கு 'சன் கிளாஸ்' அணிந்துகொள்ளலாம்.

இறுதியாக இது முக்கியம். அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பாலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழித்துவிட வேண்டும். அத்தோடு, பாலுறுப்புகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஆண்களுக்கே உண்டான அவதி!
சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு
சிறுநீரகக் கல் வலி: தப்பிப்பது எப்படி?
சிறுநீரகமும் சர்க்கரையும் ரத்த அழுத்தமும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4


ரவிக்குமார் கட்டுரைCongressஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்ஏழைகளின் உணர்வுகளுடன் விளையாடும் பைஜூஸ்!மால்கம் ஆதிஷேஷய்யாசட்டமன்றக் கூட்டத் தொடர்நாடெங்கும் பரவட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்புசோம்பேறித்தம்மரபுதமிழக அரசுடன் மோதும் ஆளுநர்ராஜவிசுவாசம்சந்துரு கட்டுரைஇந்திய மாடல்சண்டே டைம்ஸ்அற்புதான மாலைப் பொழுதுஹிண்டென்பர்க் அறிக்கைசமூகம்இந்திய ஜனநாயகம்அ.குமரேசன்கோர் லோடிங்இஞ்சிராவேள்விக்யூஆர் குறியீடுஉள்ளாட்சி நிர்வாகம்அண்ணாவின் கடைசிக் கடிதம்சட்டப்பேரவை பொதுத் தேர்தல்காலம்தோறும் கற்றல்கலப்புப் பொருளாதாரம்கோடி மீடியாடாலா டாலா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!