கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு

காதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்?

கு.கணேசன்
17 Dec 2023, 5:00 am
1

நாம் காதால் கேட்பது இசையா, இரைச்சலா எனத் தெரிவிப்பதற்காகப் படைக்கப்பட்டது, காது. ஆனால், அதற்குள்ளேயே இரைச்சல் ஏற்படுவது பலருக்கும் தொல்லையாக உள்ளது. உலக அளவில் முதியோருக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இப்போது இளைஞர்களுக்கும் இது ஏற்படுகிறது. 

எது காது இரைச்சல்?

காது இரைச்சல் (Tinnitus) என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு; அறிகுறி. காது இரைச்சலுக்கான காரணம் காதிலும் இருக்கலாம்; உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம். சில மனநோயாளிகள்கூட காதில் இரைச்சலும் குரலும் கேட்பதாகக் கூறுவார்கள். காது, காதிலுள்ள எலும்புகள், காதிலிருந்து மூளைக்குச் செல்லும் காதுநரம்பு, மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும்.

காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, இஸ்ஸ்ஸ்… என்ற இரைச்சலோ, குக்கர் விசில் அடிப்பது போன்றோ, புயல் மாதிரி பேரிரைச்சலோ கேட்பதாக இருந்தால் அந்த நபருக்குக் ‘காது இரைச்சல்’ இருப்பதாக அர்த்தம். இந்த இரைச்சலின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு இரைச்சல் தொடர்ச்சியாகக் கேட்கும்; இன்னொருவருக்கு விட்டு விட்டு கேட்கும். ஒரு சிலருக்கு இரைச்சல் தாங்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருக்கும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பாதிப்புகள் என்ன?

சுற்றுப்புறம் அமைதியாக இருந்தால், காதுக்குள் இரைச்சல் அதிகமாகக் கேட்கும். குறிப்பாக, இரவில் இது அதிக தொல்லை தரும். உறக்கம் வராது. மனக்குழப்பத்துக்கு அடிபோடும். நினைவாற்றல் குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும். பகல் நேரப்பணியில் கவனம் செலுத்துவது சிரமம் தரும். உடல் சோர்வாக இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

காது கேளாமை ஏன்?

கு.கணேசன் 24 Jul 2022

காரணம் என்ன?

காது இரைச்சலுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைத் தற்காலிகக் காரணங்கள், நிரந்தக் காரணங்கள் என்று பிரித்துவைத்துள்ளது, மருத்துவம். காதுமடலைச் சேர்த்து சிறு துவாரமாக காதுக்குள் செல்கிற வெளிக்காதுக்குழலில், இயற்கையாகச் சுரக்கிற மெழுகு உருண்டு திரண்டு கட்டியாகி காதை அடைத்துக்கொண்டால், அயட்பொருள்கள் ஏதாவது அடைத்துக்கொண்டால், காளான் தொற்று ஏற்பட்டால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். இவையெல்லாமே தற்காலிகமாக காது இரைச்சலை உண்டாக்குபவை. காதில் உள்ள அழுக்கை / அயட்பொருளை அகற்றிவிட்டால் அல்லது காளான் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவிட்டால் காது இரைச்சல் விடைபெற்றுக்கொள்ளும். ஜலதோஷம் பிடிப்பதால்கூட சில நேரங்களில் தற்காலிகமாகக் காது இரைச்சல் உண்டாகும்.

அதேநேரத்தில் சில காரணங்களால் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும். முதுமை இதற்குப் பிரதானக் காரணம். வயதாக ஆக நடுக்காது எலும்புகள், காக்ளியா எனும் நத்தை எலும்பு மற்றும் காது நரம்பிழைகள் சிதைவடைவதால் காதுக்குள் இரைச்சல் தொடங்குவது வழக்கம். காதுக்குப் போகும் ரத்தம் முதுமையில் குறைவதாலும் காதில் இரைச்சல் ஏற்படுவதுண்டு.

வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கிற செவிப்பறையில் துளை விழுந்துவிட்டால் காது இரைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுபோன்று நடுக்காதுக்குள் நீர் கோத்துக்கொண்டால், சீழ் பிடித்துவிட்டால் காது இரைச்சல் ஏற்படும். நடுக்காதில்தான் நம் உடலிலேயே மிகச் சிறிய எலும்புகளான சுத்தி, பட்டடை, அங்கவடி எலும்புகள் உள்ளன. இவற்றில் ‘எலும்பு முடக்கம்’ (Otosclerosis) எனும் நோய் தாக்கும்போது, எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்குச் செல்வது தடைபடும். அப்போது காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும். அடுத்து, தொண்டையையும் காதையும் இணைக்கிற ‘காது – மூக்கு - தொண்டைக்குழாய்’ (Eustachian tube) அழற்சி அடைந்து, வீங்கிக்கொண்டாலும் காது இரைச்சலுக்கு வழி அமைக்கும். காதில் அடிபட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

காது வலிக்கு என்ன காரணம்?

கு.கணேசன் 17 Jul 2022

ஒலி மாசு தரும் ஆபத்து

இன்றைய தினம் ஒலி மாசு இல்லாத இடத்தைப் பார்ப்பது அரிது. பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சத்தத்தைத் தொடர்ந்து எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால் அது காதைக் கட்டாயம் பாதிக்கும். எப்படி? உட்காதில் உள்ள ‘காக்ளியா’ எனும் நத்தை எலும்பில் ஒலி அதிர்வுகளை மூளைக்குக் கொண்டுசெல்கிற நரம்பிழைகள் ஏராளமாக உள்ளன. காதுக்குள் நுழைகிற பலத்த ஒலிகள் இந்த நரம்பிழைகளைச் சிதைத்துவிடுகின்றன. அப்போது இவை அசாதாரண ஒலிகளை உண்டாக்குகின்றன. இவற்றின் விளைவு, காது இரைச்சல்.

முக்கியமாக பலத்த சத்தத்துடன் இயங்குகிற இயந்திரங்களுக்கு நடுவில் வேலை பார்ப்பவர்கள், ‘ராக்’ போன்ற இசைக்கருவிகளை இயக்குபவர்கள், விமான நிலையத்திற்கு அருகில் குடியிருப்பவர்கள், ‘வாக்மேன்’ அதிக நேரம் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி வெடிச் சத்தம் கேட்பவர்கள் ஆகியோருக்கு இம்மாதிரியான நரம்புப் பிரச்சினை வந்து காதுக்குள் இரைச்சல் ஏற்படுவது உண்டு.

குழந்தைகளுக்கும் காது இரைச்சல்

சிலருக்குப் பிறவியிலேயே நரம்புக் கோளாறு ஏற்பட்டிருந்தால் சிறு வயதிலிருந்தே காதுக்குள் இரைச்சல் கேட்கும். மிக நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி நரம்புக் கோளாறு ஏற்பட்டு காது இரைச்சலுக்கு வழிவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும்.

இவை தவிர, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, ரத்தசோகை, ஒற்றைத் தலைவலி, குறை தைராய்டு, மினியர் நோய், மூளையில் ஏற்படுகிற ரத்தக்குழாய் பாதிப்புகள், புற்றுநோய் கட்டிகள், தாடை எலும்பு பாதிப்பு போன்றவையும் காது இரைச்சலுக்கு மேடை அமைக்கும். புகைபிடிப்பது, மது அருந்துவது, ‘கஃபீன்’ மற்றும் கோலா கலந்த பானங்களை அதிகமாகப் பருகுவது போன்றவை காது இரைச்சலை அதிகப்படுத்தும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

களைப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 03 Dec 2023

மாத்திரைகள் கவனம்!

பல்வேறு நோய்களுக்காக தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடும்போது அவற்றின் பக்க விளைவாகவும் காது இரைச்சல் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, காசநோய், மலேரியா, மனநோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்குத் தரப்படுகிற சில மாத்திரை, மருந்து, ஊசிகள் இம்மாதிரியான பக்கவிளைவைக் கொண்டுள்ளன. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மாத்திரைகளில் 200க்கும் மேற்பட்டவை காது இரைச்சலுக்குக் காரணமாகலாம் என்கிறது மத்தியச் சுகாதாரத் துறை.

என்ன சிகிச்சை?

ஆடியோகிராம், ஹெச்ஆர்சிடி ஸ்கேன் (HRCT), எம்ஆர்ஐ ஸ்கேன் (MRI), எம்ஆர்என் ஸ்கேன் (MRN) மற்றும் எம்ஆர்ஏ ஸ்கேன் (MRA) போன்ற பரிசோதனைகள் மூலம் காது இரைச்சலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால் இது முழுமையாகக் குணமாகும்.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் காது இரைச்சல் உள்ளவர்களின் காதுக்குள் அந்த இரைச்சலுக்குச் சவால்விடும் வகையில் அதிக டெசிபல் உள்ள மற்றொரு ஒலியைச் செலுத்தினால், இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் அது தடுத்துவிடும். இதற்கு ‘மறையொலி தொழில்நுட்பம்’ (Masking technique) என்று பெயர். வாக்மேனின் இயர்போன் மாதிரி ‘மறையொலிக் கருவி’யைக் (Masker) காதில் பொருத்தி இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

எலும்பு முடக்க நோய் காரணமாக காதுக்குள் இரைச்சல் ஏற்படுமானால், அங்கவடி எலும்பைச் சீராக்கும் அறுவைச் சிகிச்சை (Stapedectomy) மேற்கொள்ளப்படும். காது இரைச்சலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்காதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் அறுவைச் சிகிச்சையும் (Labyrinthectomy) நடைமுறையில் உள்ளது. காது இரைச்சலுக்கு டிஆர்டி (TRT – Tinnitus retraining therapy), டிஎம்எஸ் (TMS - Transcranial Magnetic Stimulation) எனும் சிகிச்சைகள் இப்போது பிரபலமாகிவருகின்றன.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

தடுப்பது எப்படி?

 • அதிகச் சத்தம் தரும் இயந்திரங்களுக்கு நடுவில் பணி செய்பவர்கள் காதில் ‘செவி அடைப்பானைப்’ (Muff) பொருத்திக்கொள்ளுங்கள்.
 • தெருவில் ஸ்பீக்கர்கள் அலறுவதையும் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுவதையும், ராக் இசை கேட்பதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
 • மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவற்றை இயக்கும்போது, அவற்றுக்குக் கீழே அதிர்வுகளை உறிஞ்சக்கூடிய விரிப்பான்களை விரித்துக்கொள்ளுங்கள்.
 • வாக்மேன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
 • ‘பட்ஸ்’ (Buds)  கொண்டு காதுகளைக் குடையாதீர்கள்.
 • புகைபிடிக்காதீர்கள்.
 • மது அருந்தாதீர்கள்.
 • இரவில் உறங்குவதற்கு முன்னால் காபி, கோலா குடிக்காதீர்கள்.
 • மனதுக்கு ஓய்வு தரும் தியானம் மற்றும் சுவாசப்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
 • தினமும் காலையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
 • இரவில் உறங்கச்செல்லும்போது, படுக்கைக்கு அருகில் டிக், டிக் என்று சத்தமிடும் கடிகாரத்தை வைத்துக்கொண்டால் / மெல்லிய சத்தத்தொடு வானொலி கேட்டுக்கொண்டே படுத்தால் / சத்தமிடும் ஃபேனுக்கு அடியில் படுத்தால் காதில் இரைச்சல் கேட்பது குறையும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காது கேளாமை ஏன்?
காது வலிக்கு என்ன காரணம்?
களைப்பு ஏற்படுவது ஏன்?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   4 months ago

I am suffering from this "Tinnitus" syndrome for the past 20 years and somehow manage by wearing very powerful hearing aids! When your eyes are weak, people show pity; but when your ears are weak, people laugh at you! Why?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆளுமைகள்மாநில முதல்வர்பாக்டீரியாஆணவம்: மோடி விளையாட்டரங்கில் மோடிஎழுத்துச் செயல்பாடுஅனுஷாபெங்களூருஓய்வுமதிப்புக்கூட்டு வரிதிட்டக் குழு உறுப்பினர்கபில் சிபல்கிளிமஞ்சாரோஸ்விக்கி ட்ரான்ஸியன்ட் ஃபெசிலிட்டிஅண்ணன்மஹாஸ்வேதா தேவிஅறுவடைஉயிரிப் பன்மைத்துவம்மாஸ்பொருளாதார மேன்மைசத்தியமங்கலம் திருமூர்த்திஇரா.செல்வம் கட்டுரைசூரிய மின்சக்திசந்துருசுரேந்திர அஜ்நாத்தலைமயிர்charu niveditaஇந்து ராஜ்ஜியம்காமம்பத்திரிகை சுதந்திரம்அரசு இயந்திரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!