கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு
சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு
நம்மை உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிக்கும் பிரச்சினைகளுள் சிறுநீர்க் கசிவு முக்கியமானது. சாதாரணமாக, இருமும்போதும் தும்மும்போதும்கூட சிறுநீர்க் கசிவு ஏற்படும்போது, பலரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்படுவதைக் காண்கிறோம். இது பெண்களை மட்டுமே பாதிக்கும் என்றுதான் அநேகரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், இல்லை, இது ஆண்களையும் பாதிக்கும்; பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகளையும் பாதிக்கும்.
சிறுநீரைக் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலைமையை அல்லது அடக்க முடியாத நிலைமையைச் ‘சிறுநீர்க் கசிவு’ (Urinary incontinence) என்கிறோம். இந்தப் பாதிப்பு உள்ள ஒருவர் எங்கே, எப்போது, எந்நேரம் என்று யோசிக்க முடியாமலும் தன்னை அறியாமலும் சிறுநீர் கழித்துவிடுவார்.
இதற்கு என்ன காரணம்?
சிறுநீரகத்திலிருந்து சொட்டுச் சொட்டாகப் பிரியும் சிறுநீர், சிறுநீர்க் குழாய் வழியாகச் சிறுநீர்ப்பையை வந்தடையும். பொதுவாக, நம் சிறுநீர்ப்பையில் 400 முதல் 600 மி.லி. வரை சிறுநீரைத் தேக்கிவைக்க முடியும். சிறுநீர்ப்பை சுருங்கி விரியும் தன்மை உடையது. ஆகவே, அதிகபட்சமாக 850 மி.லி.வரை அது தாக்குப்பிடிக்கும். வழக்கத்தில், சிறுநீரானது 450 மில்லியைத் தாண்டியதும், சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். அப்போது பலரும் சிறுநீர் கழித்துவிடுவார்கள். அல்லது அடக்கிக்கொள்வார்கள். சிலருக்குச் சிறுநீரை அடக்க முடியாது. அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி, தானாகவே சிறுநீர் சொட்டடிக்கும்.
இதற்கான தூண்டும் காரணிகள் என்னென்ன?
சிறுநீர்ப்பையில் ’ஸ்பிங்க்டர்’ (Sphincter) எனப்படும் வால்வுகள் இரண்டு உள்ளன. இவை பலவீனம் அடைவது சிறுநீர்க் கசிவுக்கு ஒரு முக்கியக் காரணம். கோட்டைக் கதவுபோல் வால்வுகள் வலுவாக இருக்க வேண்டுமானால், அவற்றைச் சுற்றியுள்ள சிறுநீர்ப்பைத் தசைகளும், இடுப்புக்குழித் தசைகளும் துவளாமல் இருக்க வேண்டும். முதுமை, அதீத அழுத்தம், நோய் போன்ற பலவும் இந்தத் தசைகளைப் பலவீனப்படுத்துகின்றன. இதனால், சிறுநீர்ப்பை வால்வுகள் வலுவிழந்து, விரிசல்விட்ட தொட்டியில் தண்ணீர்க் கசிவு ஏற்படுவதுபோல, சிறுநீர்க் கசிவுக்கு வழிவிடுகிறது.
அடுத்து, சிறுநீர்ப்பைக்குச் செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டால், மூளைக்குச் செல்லும் தகவல் தடைபடும். அதனால் சிறுநீரை அடக்க முடியாமல் போகும். இதற்கு ‘நரம்புக்குறை சிறுநீர்ப்பை’ (Neurogenic bladder) என்று பெயர். சிலருக்கு சிறுநீர்ப்பையில் தசைச் சுருக்கம் ஏற்படும். அப்போது சிறுநீர்ப்பை நிரம்பாலேயே சிறுநீர் கசியும். அதற்கு ‘அதீத செயலூக்கச் சிறுநீர்ப்பை’ (Overactive bladder) என்று பெயர்.
இதில் என்னென்ன வகைகள் உள்ளன?
சிறுநீர்க் கசிவில் பல வகை உண்டு. முதலாவது ‘அழுத்தக் கசிவு’ (Stress incontinence). அடிவயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு, சிறுநீர்க்கசிவு ஏற்படுவது இந்த வகை. கனமான பொருட்களைத் தூக்கும்போது, பலமாகத் தும்மும்போது, இருமும்போது, சிரிக்கும்போது சிறுநீர்க் கசிவு ஏற்படுவது இதனால்தான். சர்க்கரை நோயாளிகள் உட்பட ஒரு சிலர் அடிக்கடி சிறுநீரை அடக்குவார்கள். அப்போது சிறுநீர்ப்பை வால்வில் அழுத்தம் ஏற்பட்டு, அது வழுவிழந்து, சிறுநீர்க் கசிவுக்கு வழிவிடும்.
உடற்பருமன், கர்ப்பம், குடல் கட்டிகள், மலச்சிக்கல் என ஏதாவது ஒரு காரணத்தால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரிக்கிறது என்றால், அதனாலும் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. மிகக் குறைந்த இடைவெளியில் அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் இரண்டுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கும் இடுப்புக்குழித் தசைகள் பலவீனம் அடைந்து சிறுநீர்க் கசிவு ஏற்படுவது அடுத்த வழி.
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு சில ஹார்மோன்களின் செயல்பாடு குறைவதால் இந்தப் பிரச்சினை உருவாகிறது. பெண்களுக்கு கருப்பையை அகற்றுதல், ஆண்களுக்கு புராஸ்டேட் நீக்கம் ஆகிய அறுவை சிகிச்சைகளின் பின்விளைவாலும் இது ஏற்படலாம். கடுமையான மன அழுத்தமும் இதற்குக் காரணமாகலாம்.
அடுத்தது, ‘அவசர சிறுநீர்க் கசிவு’ (Urge incontinence). இது முதுமையில் ஏற்படும் பிரச்சினை. முக்கியமாக, ‘நரம்புக்குறை சிறுநீர்ப்பை’ உள்ளவர்களுக்கு இது ஏற்படுகிறது. அடக்க முடியாமலும் மிக அவசரமாகவும் சிறுநீரைக் கழிக்க வேண்டியது வரும். இது இரவில் அடிக்கடி எழுப்பித் தொல்லை தரும். மத்திய நரம்புகளில் பிரச்சினை, பக்கவாதம், சிறுநீர்ப்பையில் கடுமையான தொற்று, கல், கட்டி இருந்தால் இந்த நிலைமை உண்டாகும்.
மூன்றாவது, ‘நிரம்பி வழியும் நீர்க் கசிவு’ (Overflow incontinence). இவர்களுக்கு சிறுநீர் கழித்த பிறகும் இன்னும் சிறுநீரைக் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும் அல்லது சிறுநீர் சொட்டடிக்கும் அல்லது முக்கிச் சிறுநீரை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிறுநீர்ப்பையில் அல்லது அதன் வெளிப்பாதையில் அடைப்பு இருப்பதுதான் இதற்குக் காரணம்.
ஆண்களுக்கு புராஸ்டேட் வீக்கம் / புற்றுநோய் இருந்தால், பெண்களுக்கு ‘சிறுநீர்ப்பை இறக்கம்’ (Cystocele) இருந்தால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத் தானியங்கி நரம்புகள் பலவீனம் ஆவதால் இந்த வகை சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. சிறுநீர்த் துவாரம் சுருங்குவது, முதுகு மற்றும் மூளைத் தண்டுவடம் தொடர்புடைய நோய்கள், அல்ஸைமர், பார்க்கின்ஸன் நோய் போன்ற காரணங்களாலும் இது ஏற்படலாம். முதுகில் ஏற்படும் விபத்து மற்றும் பிறவிக் கோளாறு காரணமாக சிறுநீர்ப்பைக்கு வரும் நரம்பு பாதிக்கப்பட்டாலும் இந்தத் தொல்லை தொடரும். புகைபிடிப்பதும் மது அருந்துவதும் வைட்டமின் பி12 குறைபாடும் இந்தப் பிரச்சினையை விரைவில் வரவேற்கும்.
என்ன சிகிச்சை உள்ளது?
‘அழுத்தக் கசிவு’ உள்ளவர்கள் உடல் எடையைப் பேண வேண்டும். கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. தும்மல் / தொடர் இருமல் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே அவற்றுக்கான சிகிச்சைகளை முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் குறைய யோகா, தியானம், நடைப்பயிற்சி உதவும். புராஸ்டேட் வீக்கம் காரணமாக சிறுநீர்க் கசிவு இருப்பவர்கள் அதைத் தொடக்கத்திலேயே கவனித்தால் மாத்திரைகள் மூலமே சரிப்படுத்த முடியும். தவறினால், அறுவை சிகிச்சைதான் அடுத்த வழி. சிறுநீர்ப்பையில் கல், கட்டி இருந்தாலும் சிறுநீர்த் துவாரம் அடைத்திருந்தாலும் அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.
‘அவசர சிறுநீர்க் கசிவு’ இருப்பவர்களுக்கு மாத்திரைகளோடு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். மூளை நரம்பு தொடர்பான நோய்கள் மற்றும் அல்ஸைமர் நோயுள்ளவர்களுக்கு ‘டாயப்பர்’ பயன்படுத்திக்கொள்ளலாம். சிறுநீர்ப்பையில் ‘செயற்கை வால்வு’ (Tape Mechanical Occlusive Device - TMOD) பொருத்தப்படும் நவீன அறுவை சிகிச்சை ஒன்று இப்போது வந்துள்ளது.
ஒவ்வொரு பிரசவத்துக்குப் பிறகும் இடுப்புக்குழித் தசைகளும் சிறுநீர்ப்பைத் தசைகளும் துவண்டுவிடாமல் இருக்க, பெண்களுக்கென ‘கேஜெல் பயிற்சிகள்’ (Kegel exercises) உள்ளன. அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ‘வஜைனல் பெசரி’ (Vaginal pessary) என்னும் சிறு வளையத்தைப் பெண்களின் சிறுநீர்த் துவாரத்தைச் சுற்றி வெளிப்பக்கத்தில் பொருத்தப்படும் சிகிச்சையும் உள்ளது. இது சிறுநீர்ப்பை வால்வைத் தாங்கிக்கொள்ள, அது சிறுநீரை ஒழுகவிடாமல் பார்த்துக்கொள்கிறது. தவிர, கொலாஜென் ஊசி மருந்துகளும், ஈஸ்ட்ரோஜன் சிகிச்சையும் சிலருக்குப் பலன் தருகின்றன. இவற்றுக்கெல்லாம் சிறுநீர்க் கசிவு சரியாகாதவர்களுக்கு அறுவை சிகிச்சைதான் கைகொடுக்கும். அதற்கு ‘யூரோ கைனக்காலஜிஸ்ட்’ என்னும் மகளிர் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்களுக்கும், முதுமை மற்றும் நாட்பட்ட நோய்கள் காரணமாக மாதக் கணக்கில் படுக்கையில் கிடப்போருக்கும், மற்ற சிகிச்சைமுறைகளில் சிறுநீர்க் கசிவு சரியாகாதவர்களுக்கும் ‘கெதீட்டர்’ என்னும் ரப்பர் குழாயைச் சிறுநீர்ப்பைக்குள் நுழைத்து விடுவதுதான் இறுதி வழி. பொதுவாகவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் புகை, மது, அதிக அளவில் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
(பேசுவோம்)
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.