கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

கு.கணேசன்
18 Sep 2022, 5:00 am
0

புற்றுநோய் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடம் வகிப்பது, நுரையீரல் புற்றுநோய். இந்தியாவில் புற்றுநோயால் இறப்பவர்களில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மற்ற புற்றுநோய்களைப் போலவே, நுரையீரல் புற்றுநோயும் அதன் அடிப்படை செல்களிலிருந்துதான் உண்டாகிறது. புற்றுநோயை உருவாக்கும் காரணிகளால் இந்த செல்கள் தொடர்ந்து தூண்டப்படும்போது, அவை தம் இயல்பான வளர்ச்சிப்படிகளில் இருந்து விலகி, தவறான, கட்டுப்பாடில்லாத வளர்ச்சிநிலைகளுக்குச் சென்றுவிடுகின்றன. இதனால் அந்த செல்கள் புற்றுசெல்களாக மாறிவிடுகின்றன. அவை உருவாக்கும் கட்டிகள் புற்றுக்கட்டிகளாக வளர்கின்றன. இவையே ‘முதன்மை நுரையீரல் புற்றுக் கட்டிகள்’ (Primary Lung Cancer) என்று அழைக்கப்படுகின்றன.

என்ன காரணம்?

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முதல் காரணமாகவும் முக்கியக் காரணமாகவும் இருப்பது ஆண்களின் ஆறாவது விரல் என அழைக்கப்படும் பீடி, சிகரெட், சிகார் புகைக்கும் பழக்கம் மற்றும் குட்கா பயன்படுத்தும் பழக்கமும்தான் என்கிறது உலக சுகாதார நிறுவனம். புகைப்பழக்கம் உள்ளவர்களில் 90% பேருக்கு இந்தப் புற்றுநோய் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், புகைப்பவருக்கு அருகில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரும் அந்தப் புகையைச் சுவாசிக்க நேர்ந்தால், அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 100 பேரில் 3 பேருக்கு இவ்வாறாக நுரையீரல் புற்றுநோய் வருகிறது.

வாகனப்புகை, தொழிற்சாலை புகை, கரிப்புகை, கட்டுமானப் புகை உள்ளிட்ட மாசு கலந்த காற்றைச் சுவாசிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. காரணம், நாம் சுவாசிக்கும் காற்றில் மாசுத் துகள் 2.5 அளவுக்கு (PM 2.5) அதிகமென்றால் அது தினமும் ஒரு சிகரெட் புகைப்பதற்கு சமம். இது தவிர, ஆஸ்பெஸ்டாஸ், ஆர்செனிக், நிக்கல், குரோமியம், யுரேனியம், தார், ரேடான், இரும்புச் சுரங்கம் போன்ற தொழில்துறைகளில் பணிபுரிவோருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கும் ஆபத்து உண்டு. அதிகமாக மது அருந்துவோருக்கும் இந்த ஆபத்து ஏற்படுவது உண்டு. வம்சாவளியிலும் இந்த நோய் வருவதுண்டு. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வழியில்தான் நுரையீரல் புற்றுநோய் வருகிறது.

உணவும் நுரையீரல் புற்றுநோயும்

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு சில உணவுகளும் காரணமாகின்றன என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பீட்டா கரோட்டீன் என்னும் வைட்டமின் ஏ சத்து குறைந்த உணவைத் தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. விலங்கின இறைச்சிகளையும் சீஸ், வெண்ணெய் போன்ற பால் பொருள்களை அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

அதேநேரத்தில் கேரட், ஆப்பிள், தக்காளி, பூசணி, வெங்காயம், வாழைப்பழம், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், தக்காளியில் உள்ள லைக்கோபீன், ஆப்பிளில் உள்ள ஃபிளவினாய்டுகள், பச்சைக் காய்கறிகளில் உள்ள ஐசோதயோசயனேட்டுகள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டவை என்பதால், இந்த நன்மை கிடைக்கிறது.

அறிகுறிகள் என்னென்ன?

நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இரண்டு விதமாக உண்டாகின்றன. ஒன்று, முதன்மை நுரையீரல் புற்றுநோய் காரணமாக ஏற்படுவது. இரண்டாவது, உடலில் மற்ற இடங்களிலிருந்து புற்று செல்கள் நுரையீரலுக்கு வந்து நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குவதால் (Secondary lung cancer) ஏற்படுவது.

நாட்பட்ட இருமல், நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், இருமலில் ரத்தம், சளியில் ரத்தம், பசி குறைவது, உடல் எடை குறைவது, தொடர்ந்து களைப்பாக இருப்பது போன்ற அறிகுறிகள் சாதாரணமாகவும் இருக்கலாம்; நுரையீரல் புற்றுநோயின் முதல்கட்ட அறிகுறிகளாகவும் இருக்கலாம். சாதாரணம் என்று அலட்சிப்படுத்தாமல் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொண்டால், நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே ‘கைது’ செய்துவிடலாம்.

என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

மார்பு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளில் நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். சிலருக்கு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அல்லது பெட் ஸ்கேன் தேவைப்படலாம். இந்த இரு பரிசோதனைகளும் நுரையீரல் புற்றுநோய் எந்த நிலையில் (Stage) உள்ளது என்பதையும் காட்டிவிடும்; நுரையீரல் புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சை பலன் தருகிறதா, இல்லையா என்பதையும் இந்தப் பரிசோதனைகளில் தெரிந்துகொள்ள முடியும்.

திசுப் பரிசோதனை

நுரையீரல் புற்றுநோய்க்கு திசு ஆய்வுப் பரிசோதனை (Biopsy) முக்கியமானது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் உதவியுடன் புற்றுநோயுள்ள உறுப்பிலிருந்து சிறிதளவு திசுவை வெட்டி எடுத்துப் பரிசோதிப்பார்கள். இதில் புற்றுநோயின் இருப்பிடம், வகை, நிலை போன்ற பல தகவல்கள் தெரிந்துவிடும்.

நுரையீரல் புற்றுநோயில் ‘சிறு செல் வகை’ (SCLC) என்றும் ‘சிறு செல் அல்லாத வகை’ (NSCLC) என்றும் இரு வகை உண்டு. சிறு செல் அல்லாதவற்றில் அடினோ வகை, ஸ்குவாமஸ் வகை என உட்பிரிவுகளும் உண்டு. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எந்த வகை புற்று, எந்த நிலையில் உள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, சிகிச்சைமுறை தேர்வு செய்யப்படும்.

என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?

நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், கதிர்வீச்சு மருத்துவ நிபுணர் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு நோயாளியை ஆராய்ந்து நோயின் நிலையைக் குறிக்கின்றனர். அதற்கேற்ப அவருக்குத் தேவையான சிகிச்சைமுறையைத் தேர்வு செய்கின்றனர்.

முதல் கட்டத்தில் அல்லது இரண்டாம் கட்டத்தில் நோய் இருந்து, நோயாளி அறுவை சிகிச்சைக்கு ஏற்றவராக இருந்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து, ‘ஹீமோதெரபி’ என்னும் மருந்து சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு ஏற்ற உடல்நிலை நோயாளிக்கு இல்லையென்றால், மருந்து சிகிச்சையும் கதிரியக்க சிகிச்சையும் தரப்படுவதுண்டு.

நோய் மூன்றாம் கட்டத்தில் இருக்கிறது என்றால், மருந்து சிகிச்சையையும் கதிரியக்க சிகிச்சையையும் கொடுத்து, கட்டியைச் சுருங்கவைத்த பின்னர் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அப்போதும் அறுவை சிகிச்சைக்கு நோயாளியின் உடல் தயாரில்லை என்றால் மருந்து சிகிச்சையையும் கதிர்வீச்சு சிகிச்சையையும் மட்டுமே வழங்குகிறார்கள்.

நோய் நான்காவது கட்டத்தை எட்டிவிட்டது என்றாலும், அறுவை சிகிச்சையைத் தவிர்த்துவிட்டு, மருந்து சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுவது உண்டு. நோயின் இறுதிக்கட்டத்தில், இனி எந்த ஒரு மருத்துவமும் பலன் தராது என்னும் நிலைமையில், ‘பேலியேட்டிவ் கேர்’ (Palliative care) எனும் பாதுகாப்பு சிகிச்சையில் நோயாளி இருக்க வேண்டும். இதில் நோயாளியைச் சிரமப்படுத்தும் வலி, வாந்தி, உணவு சாப்பிட முடியாதது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட சிகிச்சை தரப்படும்.

புற்றுநோய்க்கான மருந்து சிகிச்சையில் தற்போது ‘இமுனோதெரபி’ சிகிச்சையும் ‘இலக்குசார் சிகிச்சை’யும் (Targeted treatment) கதிர்வீச்சு சிகிச்சையில் சைபர் நைஃப், ‘ட்ரூ பீம்’ சிகிச்சைகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன. இவை பழைய சிகிச்சைமுறைகளில் ஏற்படுகின்ற வாய்ப்புண், அல்சர், குமட்டல், வாந்தி, சாப்பிட முடியாத நிலைமை, முடிகொட்டுதல் போன்ற பல பக்கவிளைவுகளைக் குறைப்பதோடு, சிகிச்சைக்கான காலத்தையும் குறைத்துவிடுகின்றன.

அடுத்ததாக, புற்றுநோய் சிகிச்சையில் தொடர்கவனிப்பு என்பது மிகவும் முக்கியம். மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகளும் உடல் பரிசோதனைகளும் செய்துகொண்டால்தான் நோயைக் கட்டுப்படுத்துவதும் குணப்படுத்துவதும் மறுபடியும் அது வருவதைத் தடுப்பதும் கைகூடும்.

தடுப்பது எப்படி?

புகைப்பழக்கத்தை எல்லா வழிகளிலும் விட்டொழிப்பது ஒன்றுதான் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும் முக்கிய வழி. இறைச்சி அதிகமில்லாமல், காய்கறி மிகுந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தொழில் சார்ந்த நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் அந்தந்தத் தொழிலுக்கு ஏற்ற தடுப்புக் கவசங்களை அணிந்துகொண்டு பணிபுரிவது நல்லது.

நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங்!

வம்சாவளியில் புற்றுநோய் வந்திருப்பவர்களும், புகைப்பழக்கம் உள்ளவர்களும், நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புள்ள வேலைகளில் உள்ளவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை ‘குறை அளவு சி.டி. ஸ்கேன்’ (Low dose CT scan) பரிசோதனை செய்துகொண்டால், அறிகுறிகள் தெரியாத ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டுபிடித்துவிட முடியும். அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் முழுவதுமாக குணமாவதற்கு 80% வாய்ப்புள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தி.

(தொடர்ந்து பேசுவோம்…)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1

1





தமிழக ஆளுநரின் அதிகார மீறல்மொழிப் போர் தியாகங்களை மறக்க முடியுமா?கனவுத் தெப்பம்அருஞ்சொல் கூட்டுறவு நிறுவனங்கள்கண் வங்கிமாமிச உணவுஜெய்ராம் தாக்கூர்தாலிக்கொடிமணிப்பூர் பிரச்சினையின் பின்னணி என்ன?வெற்றிடம்அண்ணாவின் இருமொழிக் கொள்கைசிறப்பு நீதிமன்றம்சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா?பற்பசைநியூயார்க்சாலைகள்வர்ண ஒழுங்குநிறுவனங்கள்விமர்சனம்மனித இன வரலாறுஇந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்தமிழ்ப் பௌத்தம்திணைகள்தொழில் நுட்பம்சிதம்பரம் கட்டுரைஅப்பாவுவின் யோசனை ஜனநாயகத்துக்கு முக்கியமானதுதனிப்பாடல் எனும் தூண்டில் புழுநார்சிஸ்டுகள்அலுவலகப் பிரச்சினைகாட்டுக்கோழி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!