கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 8 நிமிட வாசிப்பு

மது என்ன செய்யும்?

கு.கணேசன்
27 Mar 2022, 5:00 am
0

இன்றைய தினம் உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள்! அதிலும் நம் தமிழகத்தில் நிலைமை மிக மிக மோசம். சுமார் ஒரு கோடி பேர் ‘ஆல்கஹால் அடிமைகள்’. இவர்களில் 13 வயது சிறுவர்களும் அடக்கம். மதுவால் நோய்வாய்ப்பட்டு நேரடியாகவும், போதையில் ஏற்படும் விபத்து போன்றவற்றால் மறைமுகமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 லட்சத்தைத் தாண்டுகிறது. அணு ஆபத்து ஆட்களை மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக!

ஆம், மது… மயக்கம்… மரணம்… இது அன்றாடம் நிகழும் நிஜம்! இந்த ஆபத்து எப்படி நேர்கிறது?

மதுவில் இருக்கும் ‘ஆனந்தப் பொருளு’க்குப் பெயர் ஆல்கஹால்! ஆக்ஸிஜனைப் போல் ஆல்கஹாலும் குடிநோயாளிகளுக்கு அனுதினமும் அவசியம். என்ன காரணம்? போதை! இது எப்படி ஏற்படுகிறது? ‘எண்டார்பின்’ (Endorphin) எனும் சந்தோஷ சமாச்சாரம்செய்யும் சதி.

அது என்ன எண்டார்பின்?

சுருக்கமாகச் சொன்னால், பெருமகிழ்ச்சியில் திளைக்கும்போது உங்கள் மூளையில் உருவாகும் ஒரு ரசாயனம்தான் எண்டார்பின். விளக்கம் தேவை என்றால், நீங்கள் நன்றிப் பெருக்கில் நண்பரைக் கட்டி அணைக்கும்போது, உங்கள் காதலை காதலி ஏற்றுக்கொள்ளும்போது, பிடித்த இணையுடன் உறவில் உச்சத்தை எட்டும்போது… இப்படி நீங்கள் பரவசப்படும்போது எல்லாம் உடலில் அமுதசுரபியாகச் சுரப்பது எண்டார்பின்.

மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், மூளையில் எண்டார்பின் சுரப்பதைத் தூண்ட, உடல் காற்றில் பறப்பதுபோல் ஒரு போதைத் தலைக்குள் ஏறுகிறது. எண்டார்பின் கொடுக்கும் இந்த ஏகசுகத்தை மூளை, தனது அழிக்க முடியாத ஹார்டு டிஸ்கில் நிரந்தரமாகப் பதிவுசெய்துகொள்கிறது. நாளடைவில் உடலும் மூளையும் அந்த சுகபோக அனுபவத்துக்குப் பழகிவிட, குறிப்பிட்ட நேரத்தில், அந்த சுகத்தைத் தேடி அலைகிறது. ’மணி ஆறாச்சு… ‘சரக்கு’ எங்கே?’ என மூளைக் கேட்கிறது இப்படித்தான் பலரும் குடி போதைக்கு அடிமையாகின்றனர்.

மது குடித்ததும், ஆல்கஹால் நேராக சிறுமூளைக்குச் (Cerebellum) சென்று “ஹலோ!” சொல்கிறது. வீட்டுக்கு விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்ச நேரம் அம்மாவை மறந்துவிடும் குழந்தை மாதிரி, இந்தப் புதிய நட்பில் மூளை எனும் எஜமானரின் கட்டுப்பாட்டில் இருந்து சிறுமூளை விலகிவிடுகிறது. மது குடிப்பவர்கள் கண்களில் போதைத் தெரிவதும், கால்கள் பின்னுவதும், வாய் குழறுவதும், லேசான மயக்கத்தில் திளைப்பதும் இதனால்தான்!

கல்லீரல் கவனம்!

ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் தினமும் 3 ‘பெக்’ மது அருந்தினால், அவரது கல்லீரல் பாதிக்கப்படுவது உறுதி. ஆல்கஹால் என்பது முழுக்க முழுக்க மாவுச்சத்து நிரம்பிய அமிலம். அது உடலுக்குள் அதிகமானால், கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தன்னிடம் சேமித்துக்கொள்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் அவர் தொடர்ச்சியாக மது அருந்துகிறார் என்றால், கல்லீரல் செல்கள் பாதிக்கப்படும். ஈரம் மிகுந்த மரங்களில் கறையான்கள் யோசிக்காமல் கூடுகட்டுவதைப் போல், கெட்டுப்போன கல்லீரல் செல்களில் கொழுப்பு செல்கள் சுலபமாக குடியேறிவிடும். இதனால் கல்லீரல் லேசாக வீங்கத் தொடங்கும். இதன் பெயர் ‘ஃபேட்டி லிவர்’ (Fatty liver). அதாவது கொழுப்புக் கல்லீரல். கல்லீரல் பாதிப்பின் முதற்கட்டம் இது; அறிகுறி எதுவும் வெளியில் தெரியாது.

இதை நினைத்து “வயிறுதான் சமர்த்தாக இருக்கிறதே” என்று குடிநோயாளிகள் சந்தோஷப்பட முடியாது. இந்தக் கட்டத்தில் அவர்கள் சுதாரித்தால் ஆச்சு! இல்லாவிட்டால் அவர்களின் மொத்த ஆரோக்கியமும் போச்சு! வருஷத்துக்கு ஒருமுறை வயிற்றை ஸ்கேன்செய்து, கல்லீரல் பரிசோதனை செய்து (LFT), அதன் நிலைமையைப் புரிந்து, மதுவை மறந்து, தகுந்த மாத்திரை, மருந்துகள் மூலம் சரிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், ஆறுமுகத்துக்கு ஆன கதிதான் ஆகும்!

ஆறுமுகத்துக்குக் கொத்தனார் வேலை. மனைவி கீரை விற்பவர். விபத்தில் கணவனை இழந்த மகள் உடனிருப்பது வீட்டுக்குக் கூடுதல் சுமை. அந்தச் சோகத்தில் குடிக்க ஆரம்பித்தார். காலையில் ஒரு குவார்ட்டர் குடித்தால்தான் கட்டுமானக் கரண்டியைக் கையில் எடுக்க முடியும். அப்படி ஒரு மெகா குடி!

ஆறுமுகம், ஆரம்பத்தில் “பசி இல்லை”, “சாப்பிட பிடிக்கவில்லை”, “வாந்தி வருகிறது”, “வயிறு வலிக்கிறது” என்றுதான் என்னிடம் வந்தார். அப்போதே “மதுவைத் தொடாதே!” என எச்சரித்தேன். “என்னால குடிக்காம இருக்க முடியல, டாக்டர்” என்றார். அவருக்கு மஞ்சள் காமாலை வந்தது. பாபநாசம் போய் பச்சிலை மருந்து சாப்பிட்டார். “இது குடியால் வந்த காமாலை. பச்சிலைச் சாற்றுக்குக் கட்டுப்படாது. குடிப்பதை நிறுத்தினால்தான் காமாலை அடங்கும்” என்றேன். அவர் புரிந்துகொள்ளவில்லை. குடிப்பதையும் விடவில்லை. ஆறு மாதத்துக்குள் ஆறு கிலோ எடை குறைந்தது. நெஞ்சு எலும்பெல்லாம் வெளியில் தெரிந்தது. “எங்கிருந்துதான் வந்து சேர்ந்ததோ” என அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு வயிற்றில் நீர் கோத்து, பானை மாதிரி வீங்கிவிட்டது.

அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. பணக் கஷ்டம். அரசு மருத்துவமனைக்குப் போனார். ஸ்கேன் ரிப்போர்ட் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) என்றது. மாதாமாதம் அங்கே அட்மிட் ஆகி வயிற்றுக்குள்ளிருந்து சுமார் மூன்று லிட்டர் வீச்சம் எடுத்த திரவத்தை ஊசி மூலம் எடுத்துக்கொண்டு வந்தார். அதிக பலனில்லை.

பாதைத் தெரியாதவருக்குப் பார்வையும் தெரியாமல்போனால் எப்படி இருக்கும்? ஆறுமுகத்துக்கு வயிற்றில் நீர் சேர்ந்தது போதாமல், கால்களிலும் நீர் சேர்ந்து யானைக்கால் போன்று வீங்கிவிட்டது. நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் விண்விண்ணென்று வலி உயிர்போனது. அவர் படும் அவஸ்தைகளைப் பார்த்து மகளும் மனைவியும் அழாத நாள் இல்லை. “எப்போதுதான் விடியும்?” என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு மரணம்தான் முடிவு சொன்னது. ஆம், ஓர் அந்திப்பொழுதில் ஆறுமுகம் குடம் குடமாக ரத்த வாந்தி எடுத்துச் செத்துப்போனார்.

மெல்லக் கொல்லும் விஷம்!

மது என்பது ரசித்துப் புசிக்கும் பழச்சாறு அல்ல, மெல்லக் கொல்லும் விஷம்! எப்படி? இதை ‘லிவர் சிரோசிஸ்’ கட்டத்தில் இருந்து தொடர்வோம். கல்லீரல் பாதிப்பின் இரண்டாவது கட்டம் இது. 60 மி.லி. மதுவைச் செரித்து முடிக்க இயல்பான கல்லீரலுக்கு 1 மணி நேரம் ஆகும். லேசாக வீங்கிய கல்லீரலுக்கு 2 மணி நேரம் ஆகும். கொழுப்புக் கல்லீரல்கொண்ட ஒருவர், ஒரு நாளில் எட்டு ‘லார்ஜ்’ மது குடிக்கிறார் என்றால், என்ன ஆகும்? கணக்குப் போட்டுப்பாருங்கள். 16 மணி நேரம் ஆகும். இதற்கிடையில் பித்தநீர் சுரப்பது, என்சைம்கள் உற்பத்தி என ஏகப்பட்ட வேலைகளையும் அது பார்க்க வேண்டும். பாவம் கல்லீரல்! அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? அந்த 16 மணி நேரத்துக்குள் குடிநோயாளி அடுத்த ஆறு லார்ஜ்களை உள்ளே இறக்கிவிடுகிறாரே!

இப்படி அடுத்தடுத்து கல்லீரல் தாக்கப்படுவதால், முதலில் தர்ப்பூசணிபோல் காணப்பட்ட கல்லீரல் இப்போது முள் முள்ளாக இருக்கும் அன்னாசிபோல் மாறிவிடுகிறது. இதனால், கை இழந்தவர் கார் ஓட்ட முடியாத மாதிரி கல்லீரல் செயல் இழக்கிறது. இதைத்தான் ‘லிவர் சிரோசிஸ்’ – ‘கல்லீரல் சுருக்கம்’ - என்கிறோம். இதன் கொடுமைதான் காமாலை, வயிறு வீக்கம், வீச்சம் எடுக்கும் நீர் கோத்தல், கால் வீக்கம் எல்லாமே! சிலருக்கு இது புற்றுநோயாகவும் மாறக்கூடும்.

இன்றைய நவீன மருத்துவத்தில் கல்லீரல் சுருக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கல்லீரலைக் காக்கும் வசதி வந்துவிட்டது. என்றாலும், மதுவை மறந்தால் மட்டுமே பல ஆண்டுகள் நிம்மதியாக வாழ முடியும். இல்லையேல் எந்த நிமிடமும் கல்லீரல் செயல் இழந்துவிடலாம். அப்போது 'கல்லீரல் மாற்று' (Liver transplantation) ஒன்றுதான் தீர்வு. இது லேசுப்பட்ட சிகிச்சை அல்ல; சவால் மிகுந்தது. நினைத்த நேரத்தில் கல்லீரல் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் எல்லோருக்கும் இது பலன் கொடுக்கும் என்கிற உத்தரவாதமும் இல்லை.

ஆபத்தாகும் ரத்த வாந்தி

கல்லீரல் பாதிப்பின் மூன்றாவது கட்டம் ‘ஈசோபேஜியல் வேரிசஸ்’ (Esophageal varices). மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் கால்களைப் பாருங்கள். குட்டிப் பாம்பு படுத்திருப்பதுபோல் ரத்தக் குழாய்கள் நெளிநெளியாய் புடைத்துக்கொண்டிருக்கும். இதுமாதிரிதான் குடிநோயாளியின் உணவுக் குழாயில் ரத்தக் குழாய்கள் வீங்கி வெடிக்கக் காத்திருக்கும். இந்த ‘எரிமலைகள்’ எப்போதெல்லாம் வெடிக்கிறதோ அப்போதெல்லாம் லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி எடுப்பார்கள். அந்த அதிர்ச்சியில் மரணம் அடைபவர்கள் அதிகம். இதைக் குணப்படுத்துவது ரொம்பவே கடினம்.

கிளைமாக்ஸாக இன்னொரு கட்டம் இருக்கிறது. அதற்கு ‘ஹெப்பாடிக் என்கெபலோபதி’ (Hepatic encephalopathy) எனப் பெயர். புத்தி பேதலித்து, பித்துப்பிடித்த மாதிரி அலைய வைக்கும் நோய் இது. மது குடிப்பவர்களை மரணப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் மிகவும் உறுதியாக இருப்பது இதுதான். மதுவின் பாதிப்பால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை மூளைக்குப் பரவுவதால் இந்தக் கொடுமை ஏற்படுகிறது; குடிநோயாளியைக் ‘கோமா’வுக்குக்கொண்டுசென்று மரணக்குழியில் தள்ளிவிடுகிறது.

இதைத்தான் கிராமப்புறங்களில் “பித்தம் தலைக்கு ஏறி செத்துப்போனான்!” எனும் சொலவடையில் சொல்கிறார்கள்!

வயிற்றைக் கெடுக்கும் மது!  

  • மதுவில் இருக்கும் ஆல்கஹால் இரைப்பைச் சுவரை அரித்து அழற்சியை ஏற்படுத்தும். இதனால் பசி எடுக்காது; வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
  • மது அளவுக்கு மீறும்போதும், வெறும் வயிற்றில் ‘குடி’க்கும்போதும் உணவுக் குழாய்க்குள் புகுந்து, அங்கே புண் உண்டாக்கும். இதனால் குமட்டல், வாந்திவரும்.
  • குடலில் உறிஞ்சும் தன்மையைக் குறைக்கும். இதனால், வைட்டமின், தாதுக்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் குறையும்.
  • கணையத்தைக் கடுமையாகப் பாதிக்கும். கணையம் வீங்கிவிடும். வயிற்றுவலியும், வாந்தியும் படுத்தி எடுக்கும். 

 

(பேசுவோம்...)

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com



2



1


உபரி வளர்ச்சிபிடிஆர் பழனிவேல் தியாகரான் பேட்டிகொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?விகடன் வழக்கும் திமுக குடும்பமும்ஐஎம்எஃப்வேளாண் நிதிநிலை அறிக்கைஇரண்டாவது என்ஜின்ஜீவாமகேஸ் பொய்யாமொழிவரிச் சலுகைகள் முக்கியமல்லஹிந்துத்துவர்தனிப்பாடல் திரட்டுமலையகம்அருஞ்சொல் தமிழ்நாடு நவ் ப.சிதம்பரம் பேட்டிஅம்பேத்கர் அருஞ்சொல் கட்டுரைகளைப்புநவீன தொழில்நுட்பம்ஜாக்டோ ஜியோசரியான நேரத்தில் சரியான முடிவுபழங்குடி கிராமம்மனுதர்ம சாஸ்திரம்ஒட்டுண்ணி முதலாளித்துவம்சிறிய மாநிலம்விவசாயி படுகொலைபாரத்அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்மாதவி புரி புச்சமஸ் - கல்கிதோற்றவியல்பூபேந்திர படேல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!