கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு
மாரடைப்புச் சிகிச்சைக்குப் பிறகு என்ன செய்வது?
ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்று, உயிர் பெற்றுத் திரும்புகிறவர்களை, எல்லையில் நடக்கும் போரில் வெற்றிபெற்று மறுபடியும் படைக்குத் திரும்பும் வீரர்களுக்கு ஒப்பிடலாம்.
மரணத்தின் வாசலுக்குச் சென்று திரும்பும் இவர்களுக்கு மரணம் பற்றிய பயம் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். மறுபடியும் மாரடைப்பு ஏற்படுமா என்னும் கேள்வி மனத்தைக் குடையும். இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா என்னும் சந்தேகம் அரிக்கும். குடும்பத்தின் முக்கியப் பொறுப்புகளைக் கவனிக்கும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு இந்தக் கவலைகள் அவரோடு முடியாது; குடும்பத்தினரையும் தொற்றிக்கொள்ளும்.
மாரடைப்புக்குப் பிறகான வாழ்க்கையை ஒருவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்து அவருடைய உடல்நிலையும் மனநிலையும் நலம் பெறும் என்பது பொதுவான விதி.
என்றாலும், சின்னச் சின்ன வாழ்க்கை முறை மாற்றங்களால் இவர்கள் தரமான வாழ்க்கையை மறுபடியும் அமைத்துக்கொள்ள முடியும் என்றுதான் நவீன மருத்துவம் நம்பிக்கை தருகிறது.
அதற்கான வழிகள் இவை: (மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்திக்கொண்டவர்கள் மட்டுமன்றி, பைபாஸ் ஆபரேஷன் மேற்கொண்டவர்களுக்கும் இந்த ஆலோசனைகள் பொருந்தும்).
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
பொதுவான பரிந்துரைகள்
- இதயநலச் சிறப்பு மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம்.
- குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மறு பரிசோதனைகளுக்குச் செல்வது முக்கியம். தேவைப்பட்டால் போகப்போக மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரை அளவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். சில மாத்திரைகளை நிறுத்திக்கொள்ளலாம். அதை மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டும்.
- புகைபிடிப்பது கூடவே கூடாது.
- மது அருந்துவதும் ஆகாது.
- உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதற்கான மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து மூலம் ரத்தச் சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- அதோடு, கொலஸ்டிராலைக் குறைக்கும் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் 8 மணி நேரம் உறக்கம் அவசியம்.
உணவுமுறை
- உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பைக் குறைக்க வேண்டும்.
- சர்க்கரை நோயுள்ளவர்கள் இனிப்பு வகைகளைக் குறைக்க வேண்டும்.
- ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள், அரிசி உணவுகளையும் நிறை கொழுப்பு உணவுகளைக் குறைத்து, ரத்த கொலஸ்டிராலையும் கட்டுப்படுத்த வேண்டும்.
- உணவு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
- ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். முழுத்தானியங்கள், பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் புரத உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்துவது நல்லது.
- செவ்விறைச்சி வேண்டாம்.
- மீன் உணவு நல்லது.
- ஊடு கொழுப்பு (Trans fat) உள்ள உணவுகளையும், வெண் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும், செயற்கை பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
- வீட்டு உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.
- எண்ணெய் மிகுந்த உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
உடற்பயிற்சிகள்
- சிகிச்சை பெற்றுக்கொண்ட ஒரு வாரத்தில் வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய சிறு சிறு உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். ஒரு மாதம் கழிந்தபின் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- மிகவும் தீவிரமான உடற்பயிற்சிகளையும் ‘ஜிம்’ போன்ற தசைப்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம்.
- 5 கிலோ எடைக்கும் அதிகமாகத் தூக்கக்கூடாது.
- தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். குறைந்தது வாரம் 5 நாட்களுக்கு இப்பயிற்சி தேவை.
- நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும்போது நடு நெஞ்சில் வலி வந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஸ்டென்ட் வலி
- மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்திக்கொண்டவர்களுக்கு உடற்பயிற்சிகளின்போது, இடது பக்க நெஞ்சில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஊசி குத்துவதுபோன்று லேசான அளவில் வலி வருவதும் போவதுமாக இருக்கும். இதற்கு ‘ஸ்டென்ட் வலி’ (Stent Pain) என்று பெயர். இதற்குப் பயப்படத் தேவையில்லை. இந்த வகை வலி 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கிறது என்றால் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
பயணம் எப்போது?
- மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்திக்கொண்டவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கார் ஓட்டலாம். பைபாஸ் ஆபரேஷன் மேற்கொண்டவர்கள் எட்டு வாரங்களுக்குப் பிறகு கார் ஓட்டலாம். வெளியூர்களுக்குச் செல்லலாம்.
தாம்பத்தியம் எப்போது?
- மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவரிடம் கேட்கத் தயங்கும் கேள்வி இதுதான்: ‘மாரடைப்புக்குப் பிறகு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா?’.
- மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்திக்கொண்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். அல்லது மூச்சுத் திணறல் இல்லாமல் இரண்டு மாடிகளுக்கு மாடிப் படிகளில் விறுவிறுவென்று ஏற முடிகிறது என்றாலும் தாம்பத்திய உறவுக்கு உடல் தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
- பைபாஸ் ஆபரேஷன் மேற்கொண்டவர்கள் இரண்டு மாதங்கள் கழித்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். அல்லது நடுநெஞ்சில் அறுவைப் புண் நன்றாகக் குணமான பிறகு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம்.
- ‘வயாக்ரா’ போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம். இவை மிகவும் அவசியம் என்றால் இதயநலச் சிறப்பு மருத்துவரின் சம்மதம் தேவை.
வழக்கமான பணிகள் எப்போது?
- ‘ஸ்டென்ட்’ பொருத்திக்கொண்டவர்கள் குறைந்தது 6 வார ஓய்வுக்குப் பின் வழக்கமான பணிகளைச் செய்யலாம்; அலுவல் பணிகளையும் செய்யலாம். பைபாஸ் ஆபரேஷன் மேற்கொண்டவர்கள் 8 வாரங்களுக்குப் பிறகு இவற்றை மேற்கொள்ளலாம்.
- கடுமையான உடலுழைப்பு தேவைப்படுபவர்கள் மட்டும் இதயநலச் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி பணிக்குத் திரும்புவது நல்லது. மிக அரிதாக ஒரு சிலர் மட்டும் தங்கள் பணியை மாற்றிக்கொள்ள வேண்டியதும் வரலாம்.
இதயநல மறுவாழ்வு மையங்கள்
- மாரடைப்புக்குப் பிறகு வெகு சிலருக்கு இதயம் மிகவும் பலவீனமாகிவிடும். இவர்களுக்கென்றே ‘இதயநல மறுவாழ்வு மையங்கள்’ (Cardiac rehabilitation centers) உள்ளன. இவற்றில் இதயம் வலுப்பெறுவதற்கான சிறப்புப் பயிற்சிகள் பிரத்தியேகமாகத் தரப்படுகின்றன.
காயங்கள் கவனம்!
- மாரடைப்புச் சிகிச்சைக்குப் பிறகு ரத்த உறவைத் தடுக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துவருவதால், உடலில் அடி பட்டாலோ, சிறு காயங்கள் பட்டாலோ ரத்தக் கசிவு கடுமையாக இருக்கும். ஆகவே, உடனடியாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பெண்கள் ஆனாலும் சரி, ஆண்கள் ஆனாலும் சரி காய்கறி நறுக்குவதில் தொடங்கி நகம் வெட்டுவது வரை கத்தி, பிளேடு. நகவெட்டி போன்றவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும்.
அறுவைச் சிகிச்சைக்கு முன்னால்…
- பல் அகற்றுதல் உள்ளிட்ட சிறு அறுவைச் சிகிச்சை என்றாலும் சரி, பெரிய அறுவைச் சிகிச்சை என்றாலும் சரி, சிகிச்சைக்குச் செல்ல 5 நாட்களுக்கு முன்பு ரத்த உறவைத் தடுக்கும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- பொதுவாக, அறுவை சிகிச்சை முடிந்த பிறகு 24 மணி நேரம் கழித்து மறுபடியும் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். பெரிய அறுவை சிகிச்சை என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தியானம் முக்கியம்
- தேவையில்லாமல் பிறருடன் வாக்குவாதம் செய்வதைத் தவிருங்கள். கோபப்படுவது, எரிச்சல் ஏற்படுவது, டென்ஷன் போன்றவை உண்டாகிற சூழ்நிலைகளைத் தவிருங்கள். அடிக்கடி இந்தச் சூழ்நிலைகளுக்கு ஆளாகிற பணிகளில் உள்ளவர்கள் அவசியம் தியானம் செய்யுங்கள்.
மனநலம்
- தனிமையைத் தவிர்ப்பது நல்லது.
- குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மனம் விட்டுப் பேசினால், மனம் நலம்பெறும்; பலம் பெறும். தேவையில்லாத பயம் விலகும்.
காப்பீடு உதவும்
- இப்போது மாரடைப்புக்கான முன் சிகிச்சை செலவுகள் மட்டுமன்றி பின் சிகிச்சை செலவுகளும் மிகவும் அதிகமாகிவிட்டன. சாமானிய இந்தியரால் இதைச் சமாளிப்பது கடினம். ஆகவே, மருத்துவக் காப்பீட்டை எடுத்துக்கொள்ளுங்கள். சிகிச்சைக்கான பொருளாதாரச் சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளலாம். தொடர் சிகிச்சைக்கு வழி அமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மாரடைப்பிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பு பெறலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?
இளவயது மாரடைப்பு ஏன்?
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?
பக்கவாதம் வந்த பிறகு என்ன செய்வது?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.