கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

இளவயது மாரடைப்பு ஏன்?

கு.கணேசன்
31 Dec 2023, 5:00 am
0

12 வயது மாணவிக்கு மாரடைப்பு; 20 வயது இளைஞருக்கு மாரடைப்பு; ‘ஜிம்’மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே மாரடைப்பு; குஜராத்தில் நவராத்திரியைக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்களில் 12 பேருக்கு ஒரே நாளில் மாரடைப்பு என்றெல்லாம் செய்திகள் வரும்போது, அவற்றைக் கேட்பவர்களுக்கும் இதயம் படபடக்க, மனம் பதறிப்போகிறது.

இந்தியாவில் கரோனாவுக்குப் பிறகான புள்ளி விவரங்களும் இளம் வயது மாரடைப்பை உறுதிசெய்துள்ளன. திடீரென நிகழும் இந்த வகை மாரடைப்பால் இறப்புகள் அதிகரித்திருக்கின்றன. என்ன காரணம்?

இப்போதெல்லாம் திடீர் இறப்பு என்றதும் அநேகருக்கும் கரோனா தடுப்பூசி மீதுதான் சந்தேகம் வருகிறது. மாரடைப்பைத் தூண்டும் நவீன வாழ்க்கைமுறைகளை நினைத்துப் பார்க்கத் தவறுகிறோம். கரோனாவுக்குப் பிறகான நம் வாழ்க்கைமுறைகள் பெரிதும் மாறியுள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் மீது பட்டாசு கொளுத்துவதை மறந்துவிடுகிறோம்.

இதயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடற்பருமன் ஆகியவற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு.

இந்தியாவில் தற்போதைய புள்ளி விவரப்படி 11% பேர் நீரிழிவு நோயுடனும், 36% பேர் உயர் ரத்த அழுத்த நோயுடனும், 28.6% பேர் உடற்பருமனுடனும் வாழ்ந்துவருகின்றனர். கடந்த 20 வருடங்களாக வளரும் பருவத்தினருக்கும் இளம் வயதினருக்கும் இந்தத் தொற்றாநோய்கள் அதிகரித்துவருவதையும் பார்க்கிறோம். அதற்கு என்ன காரணம்?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தூண்டும் காரணிகள்

இன்றைய இளம் வயதினர்கள் எண்ணெயும் கொழுப்பும் மிகுந்த உணவுகளையே விரும்புகின்றனர். சுட்ட உணவும் பொரித்த உணவும்தான் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று உணவு சாப்பிட்டார்கள். இப்போதோ ஸ்மார்ட் போனில் ஆர்டர் செய்கிறார்கள். அப்படி ஆர்டர் செய்து சாப்பிடும் துரித உணவுகளிலும் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்படட உணவுகளிலும் ‘ஊடுகொழுப்பு’ (Trans fat) எனும் கொடிய கொழுப்பு கும்மியடிக்கிறது. கொலஸ்ட்ரால் கூடுகிறது.

இவர்களுக்கு வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை மைதா உணவுகளைத்தான் அதிகம் பிடிக்கிறது. உப்பும் இனிப்பும் உணவில் இல்லாவிட்டால் உணவு வயிற்றுக்குள் இறங்க மறுக்கிறது. மாவுச்சத்துள்ள உணவுகள்தான் உணவுத்தட்டில் அதிகம் இடம்பிடிக்கின்றன. இவற்றின் விளைவாக ‘இன்சுலின் எதிர்ப்புத்தன்மை’ அதிகரித்து (Insulin Resistance) இளம் வயதிலேயே நீரிழிவு வந்துவிடுகிறது. அது உயர் ரத்த அழுத்தத்தை வரவேற்கிறது. ரத்த கொலஸ்ட்ரால் இவற்றோடு கூட்டணி வைக்கிறது. இந்த மூன்றும் மாரடைப்புக்கு நெருங்கிய சிநேகிதர்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 26 Nov 2023

மாறிவிட்ட வாழ்க்கை முறை

கரோனாவுக்குப் பிறகு இளம் வயதினருக்கும் நடுத்தர வயதினருக்கும் உடலுழைப்பு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை குறைந்துவிட்டன. ‘வீட்டிலிருந்தே வேலை’ என்று ஆன பிறகு, அலுவலகம் சென்று நடப்பதும் குறைந்துவிட்டது. பல வேலைகளை செல்பேசி மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே முடித்துக்கொள்கின்றனர். தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்தே பார்க்கும் வேலை புகைபிடிப்பதைவிட இரண்டு மடங்கு ஆபத்தானது. அது மாரடைப்பை வரவேற்கிறது.

இதயத்துக்கு எதிரிகள்

இளம் வயதில் மது அருந்தும் பழக்கமும் புகைபிடிக்கும் பழக்கமும் போதைப்பழக்கமும் கரோனாவுக்குப் பிறகு ரொம்பவே அதிகரித்திருக்கின்றன.

இன்றையப் பணிச் சூழலில் எல்லாத் துறைகளிலும் பணி அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க ரத்தத்தில் கார்ட்டிசால் ஹார்மோன் குற்றால அருவிபோல் கொட்டுகிறது. அது ரத்த அழுத்தத்தை எகிற வைக்கிறது; ரத்தச் சர்க்கரை அளவைக் கூட்டிவிடுகிறது.

தூக்கம் தொலைந்த வாழ்க்கை

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களில் அநேகருக்கு அலுவலக வேலை காரணமாக, இரவில் வரவேண்டிய உறக்கம், நள்ளிரவு தாண்டி இளங்காலைக்குத் தள்ளிப்போகிறது. அதோடு செல்போன் பார்ப்பது, தொலைக்காட்சி பார்ப்பது எனப் பல வழிகளில் இப்போது இரவுத் தூக்கம் தொலைகிறது. இது மாரடைப்பை இளம் வயதிலேயே வரவழைக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 20 Mar 2022

அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றையப் பணிச்சூழல்கள் இளம் வயதினருக்கு மன அழுத்தத்தை அதிகரித்திருக்கின்றன. அதுபோல் கல்விச் சூழல்களும் மாறியுள்ளன. தற்கால இளைஞர்களுக்குக் கல்விக்கூடங்களும் மன அழுத்தம் தருவதாகவே இருக்கின்றன. இதனால் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகரித்துவிடுகிறது.

எதிரியாகும் ‘ஜிம்’ பயிற்சிகள்

‘ஜிம்’ பயிற்சிகளுக்குச் செல்லும் இன்றைய இளைஞர்கள் பலரும் அந்தப் பயிற்சிகளுக்குத் தங்கள் உடல் தகுதியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கத் தவறிவிடுகிறார்கள். அதீத ஜிம் பயிற்சிகளால் இதயத்தசைகள் வீங்கிவிடக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை அறியாமல் அவர்கள் தொடர்ந்து பயற்சிகளில் ஈடுபடுவதால் மாரடைப்பு திடீரென்று தாக்குகிறது.

கரோனாவுக்குப் பிறகு…

பொதுவாகவே, ஆசிய நாடுகளில் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு மரபுரீதியான காரணமும் இருக்கிறது. அத்தோடு, கரோனா சுனாமியின் தாக்குதலுக்குப் பிறகு அநேகரின் இதயத்தில் ‘மயோபதி’ எனும் இதயத்தசைப் பெருக்கமும், ‘மயோகார்டைட்டிஸ்’ எனும் இதயத்தசை அழற்சியும் அதிகரித்திருக்கின்றன. இவற்றால் இதயத்தின் உந்து விசை குறைந்து இதயச் செயலிழப்பு ஏற்படுகிறது. இந்தக் காரணங்களாலும் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பைத் தடுக்க என்ன செய்யலாம்?

முதலில், உடலுழைப்பில்லாத, சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறையிலிருந்து விலகிவிட வேண்டும். தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஒரு உடற்பயிற்சி அவசியம்.

சரியான உணவுப்பழக்கம் உடற்பருமனைக் கட்டுக்குள் வைக்கும். இனிப்பு, உப்பு, கொழுப்பு இந்த மூன்று ‘பு’க்களைக் கட்டுப்படுத்துங்கள். மாவுச் சத்துள்ள உணவுகளைக் குறைக்கவும். புரதச் சத்துள்ள உணவுகளைக் கூட்டவும். முட்டை, இறைச்சி, மீன் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இறைச்சிக் குழம்புகள் போதும். புகையும், மதுவும் ஆகாது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதீத கொலஸ்ட்ரால் இந்த மூன்று ‘வில்லன்’களின் கை ஓங்கக் கூடாது.

தியானம், யோகாவுக்கு முக்கியத்துவம் தரலாம். நாள் முழுவதும் வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். அதற்காக ‘மதுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வார இறுதி பார்ட்டி’ கூடாது. இரவில் 6 - 8 மணி நேரம் நிம்மதியாக உறங்குங்கள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

முன்பெல்லாம் நடுத்தர வயதினருக்குத்தான் வருஷத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனைகள் தேவைப்பட்டன. இப்போது 20 வயதிலிருந்தே இந்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, அதிதீவிர விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமுன் இதயக்குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

குடும்பத்தில் மாரடைப்பு வந்திருப்பவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ‘பிஇடி எம்பிஎஸ்’ (PET MPS) உள்ளிட்ட இதயப் பரிசோதனைகளைச் செய்துகொண்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். சுருக்கமாகச் சொன்னால், உணவு, உடற்பயிற்சி, உறக்கம், உளநலம், உடற்பரிசோதனை ஆகிய ஐந்து ‘உ’க்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இளம் வயது மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

செய்தி: 1

இதயம் கொடுக்கும் மனு!

நெஞ்சு வலி வந்தால்தான் மாரடைப்பு என்பதில்லை. உடல் அசதி, குமட்டல், வாந்தி, மூச்சுமுட்டுவது, வியர்ப்பது… இப்படிச் சாதாரண தொல்லையுடன்கூட மாரடைப்பு எட்டிப்பார்க்கலாம். இந்த ஆரம்பக்கட்டத்தைப் பலரும் கவனிக்கமாட்டார்கள். பாதிப்பின் அடுத்த கட்டத்தில் நெஞ்சுவலி தாங்க முடியாமல் வரும்போதுதான் பதற்றமடைவார்கள்.

படியில் ஏறினாலோ, பளு தூக்கினாலோ, வேகமாக நடந்தாலோ, உணர்ச்சிவசப்பட்டாலோ, நிம்மதி தொலைந்தாலோ நெஞ்சு கனமாக இருக்கும். சிலருக்கு வெறும் வயிற்றில் நடக்கும்போது வராத நெஞ்சுவலி வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்டு நடக்கும்போது வரும். இதயம் ‘என்னைக் கவனி’ என்று இப்படித்தான் ‘மனு’ கொடுக்கும். அந்த மனுவை அலட்சியப்படுத்தக் கூடாது; நிராகரிக்கக் கூடாது.

 

செய்தி: 2

கரோனா தடுப்பூசி காரணமா?

திடீர் மாரடைப்பு, இளம் வயதில் மாரடைப்பு என்றாலே பலரும் பழி சுமத்துவது கரோனா தடுப்பூசியைத்தான். இந்த அவப்பெயரைப் போக்க மத்திய அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம் செப்டம்பரில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 729 பேரை ஒரு குழுவிலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 2,916 பேரை இன்னொரு குழுவிலும் சேர்த்து இந்த ஆய்வை மேற்கொண்டது. இவர்கள் அனைவரும் 18லிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள். திடீரென இறந்தவர்கள். இவர்களின் இறப்புக்கு வேறு காரணங்கள் தெரியாதவர்கள்.

இந்த ஆய்வில் தெரிந்த விவரங்கள்:

கரோனாவின் தாக்குதலால் ரத்தக்குழாய்களில் அழற்சி உண்டாவது அதிகரித்திருக்கிறது; இன்றைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் இந்த அழற்சிகளில் ரத்தம் உறைவதை வரவேற்கிறது இதனால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இளம் வயது இறப்புகளுக்கு இவைதான் முக்கியக் காரணிகளாகத் தெரிய வந்துள்ளன. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியால் இவர்கள் இறந்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கு எந்தவொரு தடயமும் தெரியவில்லை என்பதே இந்த ஆய்வின் முக்கிய முடிவு.

மேலும், ஏற்கனவே குடும்பத்தில் இளம் வந்து உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்குமானால் அந்தக் குடும்ப வாரிசுகளுக்கும் இளம் வயதில் மாரடைப்பு வருகிறது என்று அறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உயிரிழப்புகள் பலவற்றில், இறப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு மிக அதிக அளவிலான மது அருந்தியதும் போதைப் பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது. சிலருக்கு இறப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன்னால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததையும் காண முடிகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

களைப்பு ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 03 Dec 2023

செய்தி: 3

உயிர் காக்கும் ஆலோசனை:

திடீர் மாரடைப்பு வந்து சுயநினைவு இழந்தவர்களுக்கு ஆம்புலன்ஸுக்குத் தகவல் தந்துவிட்டு, ‘சிபிஆர்’ (CPR) எனும் செயற்கைச் சுவாசம் தர முயற்சி செய்யுங்கள். அல்லது ‘கம்பிரெஸன்-ஒன்லி லைஃப் சப்போர்ட் – சிஓஎல்எஸ்’ (Compression-only life support - COLS) முறையில் மயக்கத்தில் உள்ளவரின் நடுநெஞ்சில் உடனிருப்பவர் உள்ளங்கையை வைத்துத் தொடர்ந்து பலமாக அழுத்த வேண்டும். மருத்துவ உதவி கிடைக்கும்வரை இதைச் செய்யலாம். உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

அடுக்ககங்கள், ஜிம் பயிற்சிக்கூடங்கள், மக்கள் கூடும் இடங்கள் ஆகிய இடங்களில் ‘ஏஇடி – ஆட்டோமேடட் எக்ஸ்டெர்னல் டிஃபிப்ரிலேட்டர்’ (AED - Automated external defibrillator) எனும் இதயத்துடிப்பைச் சீராக்கும் கருவியைப் பொருத்தலாம். இதை இயக்கப் பல நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தவர்களுக்கு ‘ஏஇடி’ (AED) கருவியை இயக்கியும் ‘சிபிஆர்’ (CPR) செயற்கைச் சுவாசம் கொடுத்தும் மயக்கம் தெளிய உதவலாம்.

 

செய்தி: 4

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க!

கடுமையான வேலைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஓய்வில்லாமல் தொடர்ந்து பல மணி நேரம் வேலை செய்வதைத் தவிருங்கள். அளவுக்கு அதிகமான – கடுமையான – உடற்பயிற்சிகள் வேண்டாம். மேட்டில் ஓடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
களைப்பு ஏற்படுவது ஏன்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வேலைக்குத் தடைசு.வெங்கடேசன்விளக்கமாறுஹமாஸ்ஜனநாயகத்தின் தற்காப்புக் கேடயம் ‘என்டிடிவி’ஆளும் கட்சிஅதிகார வலிமைஜீன் திரேஸ் கட்டுரைகுஹா கட்டுரைகோணங்கள்கூகுள் பேதமிழக ஆளுநரின் அதிகார மீறல்சமஸ் வள்ளலார் கட்டுரைபள்ளியில் அரசியல்கின்ஷாசாதர்மசக்கரம்பூபேஷ் பகேல்ஒற்றைத் தலைவலிவடகிழக்குதமிழ்வழிக் கல்விசமூக விலக்கம்திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!அமெரிக்க அரசமைப்புச் சட்டம்காளைகளுக்கான சண்டைதமிழக அரசு ஊழியர்கள்கள்ளக்கூட்டுஇந்துத்துவமா?யூட்யூபர்கள்திருவாரூர் தேர்ஆருஷா பிரகடனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!