தொடர், வாழ்வியல், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு

குறை ரத்த அழுத்தம்: சமாளிப்பது எப்படி?

கு.கணேசன்
02 Oct 2021, 5:00 am
1

உயர் ரத்த அழுத்தம் தொடர்பில் விழிப்புணர்வு இருக்கிற அளவுக்குக் குறை ரத்த அழுத்தம் தொடர்பில் படித்தவர்களிடம்கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் யதார்த்தம். இளம் வயதினரில் 100-ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவீதமும் கூடுகிறது. 

உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்கிறோம். குறை ரத்த அழுத்த நோயை ஓர் ‘எரிமலை’ என்கிறோம். எப்படி எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் பல நேரங்களில் இது ஆபத்தில்லாத நோயாக அமைதி காத்தாலும், சில வேளைகளில் திடீரென்று உயிருக்கு ஆபத்து தருகிற நோயாகவும் மாறிவிடுகிறது.

குறை ரத்த அழுத்தம்

ஒருவருக்கு ரத்த அழுத்தம் 90/60 மி.மீ. அளவுக்குக் கீழ் குறைந்தால் அது ‘குறை ரத்த அழுத்தம்’. வழக்கத்தில் மருத்துவர்கள் மொழியில் இது ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension). பலருக்கும் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் தராது. அவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று மேல் அழுத்தம் 20 மி.மீ. குறைகிறதென்றால், தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

குறை ரத்த அழுத்தம் நோய்க்கு அடிப்படைக் காரணம் ரத்த ஓட்டத்தடை. எப்படியெனில், ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்றுவிடுகிறது. இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படுகிறது.

யாருக்கு வருகிறது; என்ன அறிகுறிகள்?

தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியானவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், படுக்கையில் நாட்பட படுத்திருப்பவர்கள், நீரிழிவு/ரத்தசோகை/தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இதயநோயாளிகள், நீரிழப்பு, ரத்தம் இழப்பு ஏற்படுபவர்கள் மற்றும் நச்சுத் தொற்று, ஒவ்வாமை, அதிர்ச்சிநிலையில் உள்ளவர்களுக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தலைக்கனம், தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, அதிக அளவில் நாவறட்சி, சோர்வு, கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

இருக்கை நிலை அழுத்தம்

சிலருக்குப் படுக்கையைவிட்டு எழுந்ததும், சிறுநீர் கழித்ததும் அல்லது கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதற்கு  ‘இருக்கை நிலை குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர்.  நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, எழுந்து நின்றால், வெயிலில் அதிக நேரம் நின்றால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரும். சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உணவைச் சாப்பிட்டதும் அதைச் செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து மிகுந்த, கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் முக்கியம்.

பரிசோதனைகள், சிகிச்சைகள் 

குறை ரத்த அழுத்தம் நோய்க்கு வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ரத்த அழுத்த அளவு, ரத்தச் சர்க்கரை அளவு, இசிஜி, எக்கோ, டிரட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. சிலருக்கு ‘சாய் மேசை பரிசோதனை (Tilt-table Test) தேவைப்படும்.

 குறை ரத்த அழுத்தம் நோய்க்கு அடிப்படைக் காரணத்தைக் கணித்துச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக்கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்துகொள்வது நல்லது. இந்த நோயைக்கு மாத்திரைகளும் உள்ளன. மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடலாம்.

என்ன செய்ய வேண்டும்; கூடாது?

தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்படிப் படுக்க முடியாது என்றால் தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள். படுக்கையைவிட்டு சட்டென்று எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருங்கள். எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் படுத்துக்கொண்டு எழுந்திருங்கள்.

அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும். வழுக்காத தரை விரிப்புகளையே வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள். இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தினமும் 40 நிமிட நடை தேவை.

நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது. வெயிலில் அளவுக்கு அதிகமாக அலையக் கூடாது; விளையாடக் கூடாது.  கடுமையான உடற்பயிற்சிகள், ‘ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. 

சரியான ஓய்வும் உறக்கமும் அவசியம். சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். புகை, மது, போதை மாத்திரைகள் வேண்டாம். படுக்கையை விட்டு எழுந்தவுடனேயே நடந்து செல்ல வேண்டாம். 

படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது.  படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள். தலைக்குத் தலையணை வைக்காதீர்கள். உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள். ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். சுய மருத்துவம் செய்யாதீர்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com
பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Dr RAMANATHAN   2 years ago

Congratulations sir . Even a lay man can follow and try to prevent hypotension.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அருணாசலக் கவிராயர்ஆசிரியர் பணியிடங்கள்சாதி உணர்வுஇந்தியா வங்கதேசம்குடிமைச் சமூகங்கள்அரசுகளுக்கிடையிலான கவுன்சில்காதில் இரைச்சல்பாப் ஸ்மியர்காரிருள்தான் இனி எதிர்காலமா?திட்ட அனுமதிஏழு நாள் பயணம்வி.பி.சிங்: ஓர் அறிமுகம்முதுமை உபி தேர்தல் மட்டுமல்ல...பஜ்ரங் தளம்பீமா கோரெகவோன்அம்பேத்கர் ரவிக்குமார் கட்டுரைமொழிபெயர்ப்புக் கலைஆட்சிமுறைபுலம்பெயர்வின் சவால்கள்இந்தியர்களின் ஆங்கிலம்ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடைகே.ஆர்.விநாகாலாந்துவி.பி. சிந்தன்பெரியார் சிலைசாஹேப்பழங்குடிசைபர் குற்றம்சமஸ் வீரமணி பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!