பேட்டி, கலை, சினிமா 10 நிமிட வாசிப்பு

சிறைகளில் ஏன் இவ்வளவு கைதிகள்? - பைப்பெர் கெர்மன் பேட்டி

14 May 2022, 5:00 am
0

பைப்பர் கெர்மன் 24 வயது இளம் பெண்ணாக இருந்தபோது எதிர்பாராத வழக்கில் சிக்கி, சிறை செல்ல நேர்கிறது. அங்கே அவருக்குக் கிடைப்பது புது விதமான அனுபவம். அடர்த்தியான அனுபவம். அந்த அனுபவமானது சமூகத்தைப் புதிய கண் கொண்டு பார்ப்பதற்கான உத்வேகத்தை அவருக்குத் தருகிறது. சிறையிலிருந்து திரும்பியதும் தன்னுடைய அனுபவங்களை ‘ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக்’ (Orange Is the New Black) என்ற புத்தகமாக எழுதுகிறார். சுதந்திர நிலமாகவும் முன்னோடி ஜனநாயகமாகவும் கருதப்படும் அமெரிக்கா ஏன் சிறைக் கைதிகளின் எண்ணிக்கையிலும் முன்வரிசையில் நிற்கிறது என்பதையும், அமெரிக்க நீதி அமைப்பு எவ்வளவு சமத்துவமின்மையோடு இயங்குகிறது என்பதையும் பொதுமக்களின் பிரக்ஞைக்கு இந்தத் தன்வரலாற்றுப் புத்தகம் கொண்டுவருகிறது. விற்பனையில் பெருவெற்றி அடைந்த இந்தப் புத்தகம் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே தலைப்பில், ‘நெட்பிளிக்ஸ்’ தொடராக உருமாறவும், இன்னும் பலதரப்பு மக்களைச் சென்றுசேர்கிறது. எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்த இந்தத் தொடரின் உண்மையான நாயகி பைப்பர் கெர்மன், வெவ்வேறு நேர்காணல்களில் பேசிய சிறை தொடர்பான கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தன்வரலாற்றுப் புத்தகத்தை நீங்கள் எழுதத் தொடங்கியபோது எப்படியான வழிமுறைகளைக் கையாண்டீர்கள்? அதைப் பற்றி ஏற்கெனவே யோசித்து வைத்திருந்தீர்களா?

என்னுடன் அறையைப் பகிர்ந்திருந்த நடாலி (புத்தகத்திலும் இதே பெயர்தான்), எல்லோராலும் மிக மரியாதையாக நடத்தப்பட்ட வயது முதிர்ந்த பெண். எங்கள் அறையில் திடீர்திடீரென வேடிக்கையான விஷயங்கள் நடக்கும். அப்படியான ஒரு தருணத்தில், “நீ வீடு திரும்பியதும் சிறை அனுபவங்களைப் புத்தகமாக எழுத வேண்டும்” என்றார். நான் சிரித்தேன். ஆனால், நான் வீடு திரும்பிய பிறகு, என்னுடைய அனுபவங்களை எழுதச் சொல்லி பலரும் ஊக்கம் கொடுத்தார்கள். என்னால் முடியும் என்று அப்போது நம்பிக்கை இல்லை. ஏனெனில், அதற்கு முன்பாக நான் எதுவும் எழுதியதில்லை. அதே நேரத்தில், நான் கலைப் பாடம் பயின்றவள். நிதானமாக அமர்ந்து யோசித்தேன்: “மற்றவர்களை ஆர்வமூட்டும் கதைகள் என்னிடம் என்ன இருக்கின்றன?” என்னுடைய முதல் நாள் சிறை அனுபவத்தை முதலில் எழுதினேன். வனேஸ்ஸா பற்றி எழுதினேன். அவர் ஒரு திருநர். எனக்குப் பக்கத்து அறையில் வசித்துவந்தார். அப்படியே என்னுடைய தனித்துவமான அனுபவம் ஒவ்வொன்றையும் எழுதினேன். அப்படித்தான் தொடங்கியது.

புத்தகத்தை என்ன நோக்கத்துக்காக எழுதினீர்கள்?

புத்தகம் எழுதியதற்கும், அதைத் தழுவி தொடராக எடுக்க அனுமதி அளித்ததற்கும் என்ன காரணம் என்றால், சிறையில் உள்ளவர்களின் மனிதநேயத்தை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான். நாம் நேசிக்கும் ஒரு நபர் அவர்களின் இடத்தில் இருந்தால் நாம் அவரின் சிறை வாழ்க்கைக்காக எண்ணி வருந்த மாட்டோமா? அவருடைய பாதுகாப்பை எண்ணி வருந்த மாட்டோமா? நாம் நேசிக்கும் ஒருவர் சிறைக்குச் சென்று அங்கிருந்து மிக மோசமான நிலையில் திரும்பிவருவதை விரும்ப மாட்டோம், இல்லையா? ஆக, நாம் ஒவ்வொருவரும், எப்படியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் கொண்டிருக்க வேண்டிய தொடர்பை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. நாம் சுதந்திர நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. நாம் சிறைவாசிகள் நிறைந்த நிலத்தில் அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

உங்கள் அனுபவத்திலிருந்து வாசகர்கள் என்ன பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தீர்கள்?

அமெரிக்கச் சிறைகளில் கடந்த முப்பது ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பெண்களைப் பாருங்கள். வன்முறைகளில் ஈடுபட்டிராதவர்களாக, பெரிய குற்றங்களில் ஈடுபட்டிராதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மேலும், மனித வரலாற்றில் அதிக சிறைவாசிகளைக் கொண்டிருக்கும் நாடாகவும் அமெரிக்க வளர்ந்துவருகிறது. நம்மைப் போல வேறு எந்த நாடும் தம்முடைய குடிமக்களை இந்த அளவு சிறையில் அடைத்திருக்கவில்லை. பெண்களின் கண்கள் வழியாக இந்த விஷயத்தைப் பார்ப்பதும் விவாதிப்பதும் முக்கியமாகப் பட்டன.

சிறை வாழ்க்கை தொடர்பான மக்களின் பிம்பத்தை நீங்கள் என்ன விதத்தில் மாற்றியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

முதலாவதும் முக்கியமானதுமான விஷயம் என்னவென்றால், சிறை அல்லது கைதிகள் என்றதும் பொதுவாகவே பெண்கள் நம் நினைவுக்கு வருவதில்லை. அந்த இடத்தில், சிறைகளையும் கைதிகளையும் பற்றிய நம் அனுமானங்களைப் பரிசீலிக்க வைப்பதாக என் கதை இருக்கிறது. நான் என்னுடைய புத்தகத்தில் என்ன செய்ய நினைத்தேன் என்றால், உண்மையில் யார் இந்த நாட்டின் சிறைகளில் இருக்கிறார்கள், அங்கே அவர்கள் இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன, சிறைச் சுவருக்குப் பின்னால் இருக்கும் மக்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது இவற்றைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில், இவையெல்லாம் மக்களின் பார்வையிலிருந்து வேண்டும் என்றே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளபடி, மக்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

உங்கள் புத்தகத்தில் வெவ்வேறு இடங்களில் ‘நம்பிக்கை’ தொடர்பில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நம்பிக்கைக்கும் சிறையில் நம்பிக்கையின் பங்கு என்ன என்பது தொடர்பிலும் சொல்லுங்களேன்…

சிறை அனுபவத்தில் நம்பிக்கைக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் அது பொருந்தும் என்றே நினைக்கிறேன். நிறைய மக்கள் தங்களுடைய நம்பிக்கையை நம்பியிருக்கும் இடமாக சிறை இருக்கிறது. மிகவும் கடினமான அனுபவங்களை எதிர்கொள்வதற்கு அதுவே உதவியாக இருக்கிறது. மேலும், வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் நபர்களோடு பழகியே தீர வேண்டிய கட்டாயம் சிறையில் ஏற்படுகிறது. ஏனெனில், நீங்கள் யாருடன் இணைந்து இருக்க வேண்டும் என்கிற தேர்வு உங்களிடம் கிடையாது. அதே நேரத்தில், அந்த எல்லைக்குள் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடப்பதையும் பார்க்கலாம். சிறைவாசத்தின் மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான அம்சம் இதுதான்.

மிகப் பிரமாதமான நண்பர்கள் எல்லாம் உங்களுக்குச் சிறையில் கிடைத்திருக்கிறார்கள் இல்லையா?

என் வழக்குக்காக நிறைய நேரம் செலவிடும்படியான வழக்கறிஞரை என்னால் அமர்த்திக்கொள்ள முடிந்தது. சிறந்த வழக்கறிஞர் அவர். சிறைக்குச் செல்லும்போது எனக்கு அவர் சொன்ன கடைசி அறிவுரை இதுதான்: “பைப்பெர், சிறையில் நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முயலாதே.” அது நல்ல எண்ணத்தில் சொல்லப்பட்ட அறிவுரைதான். ஆனால், சிறையில் நண்பர்கள் இல்லாமல் எப்படி உங்களால் வாழ முடியும்? சிறை வாழ்க்கையில் இப்படியான நட்புகள்தான் பிழைத்திருப்பதற்கான இன்றியமையாத காரணம். அந்தப் பெண்களெல்லாம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களில் பலரும் என்னுடைய வாழ்க்கையின் பகுதியாகத் தொடர்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

உங்களுடைய கதையைத் திரையில் பார்க்கும் அனுபவம் எப்படி இருந்தது? புனைவுக் கதாபாத்திரத்தையும் உங்களையும் குழப்பிக்கொண்டவர்கள் உண்டா?

இருக்கலாம். ஆனால், அதை நான் பொருட்படுத்தவே இல்லை. ஜென்ஜி கோஹன் மிகப் பிரமாதமான வேலையைச் செய்திருப்பதாகவே நினைக்கிறேன். அவர் அற்புதமான பெண். மிக புத்திசாலித்தனமான தழுவல் அது. என்னுடைய கதையையும் அவருடைய கற்பனையையும் கலந்துகட்டி அற்புதமாக உருவாக்கிவிட்டார்.  

உங்கள் கதையும் அதன் தொடர் வடிவமும் இந்த அளவு மக்களின் ஆதரவைப் பெறும் என்று நினைத்தீர்களா? இவ்வளவு மக்களைக் கவர்ந்திழுக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய படைப்பு வெற்றி பெறும் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இல்லையென்றால், ஒருவரால் தன்னுடைய புத்தகத்தை முடிக்க முடியாது. அதே நேரத்தில், இவ்வளவு பெரிய பிரபல்யத்தை நான் கனவுகூடக் காணவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால், பெருந்திரளான சிறைவாசத்துக்கு என்ன காரணம், அமெரிக்கா ஏன் இவ்வளவு கைதிகளைக் கொண்டிருக்கிறது, இந்த உலகத்திலுள்ள வேறு எந்தச் சமூகமும் செய்திராத காரியத்தை அமெரிக்கா ஏன் செய்கிறது போன்ற கேள்விகளைப் புரிந்துகொள்வதற்கான வழியாக இதைப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள். குறிப்பாக, மனசாட்சி உள்ளவர்களுக்கு.

சிறை விதிமுறைகள் தொடர்பில் பொதுவாக என்ன நினைக்கிறீர்கள்?

சிறை எனும் நிறுவனத்துக்கென்று இருக்கும் பிரத்யேகமான விதிமுறைகளை நீங்கள் உள்ளே சென்றதும் முதலில் கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். கூடவே, காவலர்களும் வார்டன்களும் அவர்களுக்கான விதிமுறைகளைச் செயல்படுத்தி வைத்திருப்பார்கள். நியாயமான, நியாயமற்ற நிறைய விதிகள் அங்கே உண்டு. ஆனால், குழப்பமூட்டும் விஷயம் என்னவென்றால், சிறை ஊழியர்கள் அவர்கள் விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுத்து விதிமுறைகளைச் செயல்படுத்துவார்கள் என்பதுதான். பல நேரங்களில் சிறை ஊழியர்களே விதிகளை மீறுபவர்களாகவும் இருப்பார்கள். அடுத்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கே இருக்கும் பெண் குழுமம் உருவாக்கி வைத்திருக்கும் விதிகள். அவர்கள்தான் சிறைச் சமூகம். அவர்களுக்காக அவர்கள் உருவாக்கி வைத்திருப்பவை அவை. சிறைச் சமூகத்தில் நீங்கள் எங்கே பொருந்திக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

சமூகக் கட்டமைப்பு சிறையில் எப்படி இருக்கிறது?

உள்ளே காலடி எடுத்து வைத்ததும் அந்த விசித்திரமான சமூகத்தில் முதலில் நீங்கள் தெரிந்துகொள்வது இன வேற்றுமைகளைத்தான். அங்குள்ள மக்களையெல்லாம் இனம்தான் வழிநடத்துவதாகத் தோன்றும். ஆனால், நாளாக நாளாக அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அங்கே என்னுடைய வேலை இன அடிப்படையில் அமையவில்லை. என்னுடன் கறுப்பினத்தவர்கள், லத்தீன் அமெரிக்கர்கள், ஆசியர்கள் இருந்தார்கள். அங்கே மக்களை எது வழிநடத்துகிறது என்றால், சிறைக் குடும்பங்கள் எனும் கருத்துதான். அதுதான் அவர்கள் அங்கே வாழ்வதற்கான கவர்ச்சிகரமான வழிமுறையாக இருக்கிறது. அந்தச் சிறைக் குடும்பங்களில் அம்மா இருப்பார், அப்பா இருப்பார், சிலருக்குக் குழந்தைகள் இருக்கும். பொதுவாக, இளையவர்களைத் தங்களின் கீழ் கொண்டுவர விரும்புவார்கள்.

சிறை எனும் அமைப்பு எப்படி மாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதலில், மிகக் குறைந்த அளவிலான நபர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வளவு பெருங்கூட்டம் அங்கே இருப்பது நியாயம் அல்ல. மேலும், நடுத்தவர வர்க்கமும் மேல்நடுத்தர வர்க்கமும் அங்கே குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன. அதிகமும் ஏழைகளே பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, கறுப்பின ஏழைகள். இது அதிக கவனம் கோரும் பிரச்சினை, இல்லையா? அடுத்ததாக, சிறையில் ஒருவருக்கு மறுவாழ்வு அளிக்கும் ஆற்றல் தற்போது மிகக் குறைவாகவே உள்ளது. சிறைச்சாலையானது புனரமைக்கும் மையங்களாகச் செயல்பட வேண்டுமென்றால் அங்கே நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. சின்ன அளவிலான வன்முறைச் செயலில் ஈடுபட்டவர்கள், முதல் தடவைக் குற்றவாளிகளையெல்லாம் முதல் கட்டமாக வெளியே அனுப்ப வேண்டியது முக்கியம்.

குற்றவியல் நீதி அமைப்பைச் சீர்திருத்துவதில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். சிறையிலிருந்து வெளிவந்த கணத்தில் எழுந்த இயல்பான உந்துதலால் அது நடந்ததா?

சிறையில் சந்தித்த மனித ஆற்றலை அப்படியே தூக்கியெறிந்துவிட்டுப் போயிருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. மேலும், சிறையில் ஒவ்வொரு நாளும் எதிர்கொண்ட சமத்துவமின்மையையும் மறந்துவிட முடியாது. வெவ்வேறு விதமான காவல், வெவ்வேறு விதமான தீர்ப்பு, வெவ்வேறு விதமான தண்டனை என சமத்துவமின்மை இங்கே நிறைந்திருக்கிறது. எனவே, மக்கள் அறிந்திராத பக்கத்தைப் புதிய வழியில் பார்ப்பது மாற்றங்களை உருவாக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: கதிரவன்

2






பற்றாக்குறைஇரண்டாவது அனுபவம்முதல் தியாகி நடராசன்இயர் மஃப்சாதிவாரி கணக்கெடுப்புதணிக்கைக் குழுபட்டியலினத் தலைவர்கள்முடிவுக்காலம்கிழக்கு பதிப்பகம்தாளாண்மைகுஜராத் 2002சந்நியாசமும் தீண்டாமையும்பிசிசிஐஏன் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்கிறார்கள்தொல்காப்பியம்பொதுக் கணக்குடர்பன் மாரியம்மன்வசனம்எண்ணுப்பெயர்கள்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்கல்வியும் வாழ்வியலும்நிவேதிதா லூயிஸ் கட்டுரைகல்வான் பள்ளத்தாக்குசமஸ் காமராஜர்சிவராஜ் சிங் சௌகான்கூட்டணி ஆட்சிசோவியத் யூனியன்மத்திய பிரதேசத்தில் மாறுகிறது ஆட்சி!டெல்லி போராட்டம்தேசிய எழுத்தறிவு அறக்கட்டளை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!