கட்டுரை, கலை, மொழி 15 நிமிட வாசிப்பு

எழுத்துக் கலை: ஆர்வெல்லின் ஆறு விதிகள்

மு.இராமநாதன்
03 Nov 2022, 5:00 am
4

ழுத்து ஒரு கலை. ஆனால், அந்தக் கலை எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் கைவரும் என்பதில்லை. எல்லோரும் எழுதுகிறோம். அது கடிதமாக இருக்கலாம், கட்டுரையாக இருக்கலாம், ஒப்பந்தமாகவோ மனுவாகவோ இருக்கலாம், மின்னஞ்சலாகவோ குறுஞ்செய்தியாகவோ நிலைத் தகவலாகவோ இருக்கலாம். ஒவ்வொரு படைப்புக்கும் ஒன்றோ அதற்கு மேற்பட்ட வாசகரோ இருப்பார்கள். அவர்களுக்காகத்தான் எழுதுகிறோம். நாம் எழுதுவது அவர்களைச் சென்றடைய வேண்டும். அந்த அக்கறையோடு எழுத வேண்டும். அதற்குச் சொல்வதைச் சிடுக்குகள் இல்லாமல், சுற்றிவளைக்காமல், நேராகச் சொல்ல வேண்டும். அதாவது, எளிமையாக எழுத வேண்டும். ஆனால், அது எளிதானதில்லை. அதற்கு மொழியிலும் அதன் பயன்பாட்டிலும் கொஞ்சம் பயிற்சி வேண்டும். 

இந்தப் பயிற்சி நம் இளைஞர்கள் பலரிடம் குறைந்துவருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால் ‘அருஞ்சொல்’ இதழில் ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?’ என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கேள்விக்கான பதில்களில் ஒன்றாக மொழிக் கல்வியைக் குறித்து நம் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் அறியாமையைப் பற்றியும் அலட்சியத்தையும் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். கணிசமான எதிர்வினைகள் வந்தன. அதே கட்டுரையில் ஹாங்காங்கிலும் சென்னையிலும் இளம் பொறியாளர்களுக்கு நான் நிகழ்த்திய ஓர் உரையைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். தொழில்நுட்ப அறிக்கைகள், அலுவல்ரீதியான கடிதங்கள், ஒப்பந்தக் குறிப்புகள் முதலானவற்றை ஆங்கிலத்தில் எழுதும்போது பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை அந்த உரை உள்ளடக்கியிருந்தது. அந்த உரையில் ‘பவர்பாயிண்ட் ஸ்லைடு’களைப் (PowerPoint Slides) பயன்படுத்தி இருந்தேன்.

கட்டுரையைப் படித்த நான்கைந்து பொறியாளர்கள் அந்த பவர்பாயிண்ட் கோப்பை அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டிருந்தார்கள். அந்தக் கோப்பை எனது கணினியின் ஏதோ ஓர் அலகில் சேமித்து வைத்திருந்தேன். இப்போது தேடினேன். கிடைக்கவில்லை. பின் எப்போதாவது கிடைக்கும். அதற்குள் கோப்பை விரும்பிக் கேட்ட நண்பர்கள் பொறுமை இழந்துவிடக்கூடும். அந்தக் கோப்பை நான் பகிர விரும்பவில்லை போலும் என்று அவர்கள் நினைத்துவிடக்கூடும். கட்டிக் காப்பாற்றுவதற்கு அந்தக் கோப்பு ஒன்றும் புதையலில்லை. நான் பூதமுமில்லை. ஆகவே, அதன் சாரத்தை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். 

தொழில்நுட்ப அறிக்கைகளை எப்படி எழுதுவது? என்கிற பொருளில் ஹாங்காங் நூலகங்களிலும் சந்தையிலும் கணிசமான புத்தகங்கள் கிடைத்தன. அந்த உரையைத் தயாரித்தபோது அப்படியான புத்தகங்களின் பக்கம் நான் போகவில்லை. ஜார்ஜ் ஆர்வெல் (1903-50) அரசியலும் ஆங்கிலமும் என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை அரசியல் தொடர்பான ஆக்கங்களில் ஆங்கிலத்தை எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றியது. அதில் ஆறு விதிகள் சொல்லுகிறார் ஆர்வெல். அவற்றைத்தான் அந்த உரையின் மையச் சரடாக வைத்துக்கொண்டேன். ஏனெனில், அவை பொறியியல் தொடர்பான எழுத்துக்கும் பொருந்துவதாக இருந்தன. 

ஆர்வெல் அவரது கடைசிக் காலத்தில் எழுதிய ‘விலங்குப் பண்ணை,’ ‘1984’ ஆகிய இரண்டு நாவல்களுக்காகவே அதிகமும் நினைவுகூரப்படுகிறார். அவர் நல்ல நாவலாசிரியர். மேலதிகமாக அவர் ஒரு கட்டுரையாளர். புனைவுகளைப் போலவே அவரது அபுனைவுகளும் முக்கியமானவை. ஆங்கில மொழியில் எழுத அவர் விதித்த சட்டங்கள் எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை. ஆகவே, இந்தக் கட்டுரையில் அதைத் தமிழுக்குப் பொருத்திக்கொள்கிறேன். போலவே, ஆர்வெல் அரசியல் கட்டுரைகளுக்கும், பிற்பாடு நான் தொழில்நுட்ப அறிக்கைகளுக்கும் பயன்படுத்திய அந்த ஆறு விதிகள், எல்லா விதமான எழுத்துக்கும் சூழலுக்கும் பொருந்தக்கூடியவைதான். ஆகவே, அந்த விதிகளைப் பொதுவாக நாம் தமிழில் எதிர்கொள்கிற செய்திக் குறிப்புகள், கதைகள், பாடல்கள், வலைதளப் பதிவுகள் போன்றவற்றில் பொருத்திப் பார்க்கிறேன். 

இனி விதிகள்…

விதி- 1: தேய்வழக்கு வேண்டாம்

"பழகித் தேய்ந்துபோன உவமைகளையோ, உருவகங்களையோ, சொற்றொடர்களையோ பயன்படுத்த வேண்டாம்."

இதுதான் ஆர்வெல்லின் முதல் விதி. சொல்லவந்த கருத்து மேலும் துலக்கம் பெறத்தான் உவமைகளைப் பயன்படுத்துகிறோம். அந்த உவமை ஒரு மனச்சித்திரத்தை உண்டாக்க வேண்டும். ஆனால், பழகிப் பழகிப் பழசான உவமைகளால் எந்தக் கருத்தும் துலக்கம் பெறுவதில்லை. இந்த ட்விட்டர் பதிவைப் பாருங்கள்:

“…அரசு ஊழியர்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எறும்புகள் போல் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்”- #எடப்பாடியார் (EPS 24×7, @edapadiyaar, மே 30,2022).

இது எடப்பாடியார் அதிமுக அணிகளுக்குச் சொன்னது. இதில் இடம்பெறும் ‘எறும்பும் சுறுசுறுப்பும்’ என்கிற உவமை ஏடறிந்த வரலாற்றுக்கும் முந்தையக் காலத்தையது. அந்த எறும்பு நீண்ட காலமாக ஊறி ஊறிப் பல கற்களைத் தேய்த்துவிட்டது. இதைப் போலவே சிலந்தியைப் போல் விடாமுயற்சி உள்ளவன் என்றோ இரும்பைப் போல் உறுதியானவன் என்றோ சொல்வதால் எந்தப் புதிய சித்திரமும் நம் மனதில் உருவாவதில்லை. மாறாக அது எழுதுகிறவரின் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது. தேய்ந்துபோன உவமைகளைப் போலவே தேய்ந்துபோன சொற்றொடர்களையும் சொலவடைகளையும் தவிர்க்க வேண்டும். கரும்பு தின்னக் கேட்கப்படும் கூலியையும், பால் குடிக்காத பூனையையும் நாம் இந்தப் பட்டியலில் தைரியமாகச் சேர்த்துக்கொள்ளலாம். தேய்வழக்குளைப் பயன்படுத்திச் சாண் ஏறினால், ஒரு முழம் அல்ல பல முழங்கள் சறுக்கிவிடும். ஆகவே, இயன்றவரை அவற்றைத் தவிர்ப்பது நலம்.

அதேவேளையில் புதிய உவமைகளும் புதிய வழக்குகளும் பூங்காற்றைப் போன்றவை. இங்கே இன்னொரு எறும்பு நினைவுக்கு வருகிறது. அ.முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ (காலச்சுவடு பதிப்பகம், 2009) எனும் சிறுகதைத் தொகுதியின் தலைப்புக் கதையில் இப்படி ஒரு வரி வரும். "கறுப்பு எறும்புகள் நிரையாக வருவது போல் பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள்." 

இந்த உவமை புதியது. இது ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. இன்னொரு உவமையையும் பார்க்கலாம்.

“வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்". இது சூரியகாந்தி (1973) திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் வரி. இங்கே வண்டி என்பது குடும்பம், சக்கரங்கள் கணவனும் மனைவியும். சாதாரண உவமைதான். அடுத்த வரியில்தான் கண்ணதாசன் வெளிப்படுகிறார். “அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?". கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. கணவன் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகிறான். பாடல் அவனது மனதின் குரல். கவிஞர் ஒரு பழைய உவமையில் சிறிய மாற்றத்தை வருத்துகிறார். முதல் வரியோடு நிறுத்தியிருந்தால் அது பட்டா தேய்ந்த ஒரு பழைய வண்டிச் சக்கரமாக இருந்திருக்கும். இரண்டாவது வரியில் சக்கரம் வேகம் பிடிக்கிறது. 

தேய்வழக்குகளைத் தவிர்ப்பதற்கு ஒருவர் கண்ணதாசனாகவோ முத்துலிங்கமாகவோ இருக்க வேண்டியதில்லை. நாம் எழுதும் உவமை அல்லது சொற்றொடரின் மூலம் சொல்லவந்த கருத்து துலக்கம் பெறுகிறதா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாக இருந்தால், அந்த உவமையை வெட்டி எறிந்துவிட வேண்டும்.

விதி- 2 மற்றும் 3: சுருக்கத்து வேண்டும் எழுத்து

"சிறிய சொல்லால் பதிலீடு செய்யக்கூடிய இடங்களில் நீண்ட சொல்லைத் தவிர்த்துவிடவும். தேவையற்ற சொல் என்று தெரிந்தால், அதை உருவி எடுத்துவிடவும்." 

அதாவது, ‘சொற்களை விரயம் செய்யாதீர்கள், சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’ என்கிறார் ஆர்வெல். ‘எம்எஸ் வேர்டு’ (MS Word) மென்பொருளைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் எழுதுபவர்களால் பிழைகளைத் தவிர்க்க முடியும். அந்த மென்பொருள் பிழைகளைச் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டு காட்டிக்கொடுக்கும். நாம் பிழையாகத் தட்டிய சொல்லுக்கு நிகரான பிழையற்ற சொல்லையும் எடுத்துத்தரும். இன்னொரு விதமான அடிக்கோடும் உண்டு. அதுவும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். ஆனால், அது உடைகோடு. நாம் எழுதும் வாக்கியத்தில் தேவையற்ற ஆணிகள் இருந்தால் அவற்றின் கீழ் சிவப்புநிற உடைகோடுகள் தோன்றும். All of these என்று எழுதினால், all என்று சொன்னாலே போதும் என்று சுட்டிக்காட்டும். Each and every என்று தட்டச்சு செய்தால், ஏதேனுமொரு ஒரு வார்த்தை போதாதா என்று கேட்கும். Fairly close, fairly easy என்றெல்லாம் உள்ளிட்டால் முன்னொட்டை நீக்கச் சொல்லிப் பரிந்துரைக்கும். That is why என்று மூன்று வார்தைகளை எழுதினால், இதற்கு ஈடாக therefore என்கிற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதா என்று கேட்கும். இந்த உடைகோடுகளுக்கும் மென்பொருள் வழங்கும் பதிலீடுகளுக்கும் என்ன காரணம்? சுருங்கச் சொல்வதைத்தான் உங்கள் வாசகர்கள் விரும்புவார்கள். இதையும் அதே மென்பொருள்தான் சொல்லும். இப்படியான அடிக்கோடுகளும் உடைகோடுகளும் தமிழில் வருவதற்கு நாம் இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டும். அதுவரை நாம் நம்மைத்தான் நம்ப வேண்டும்.

இந்தச் சொற்சிக்கன விதிகளின் நீட்சியாக நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்துவிட்டு, இயன்றவரை சிறிய வாக்கியங்களாக எழுத வேண்டும் என்பதைப் பெறலாம். அதாவது, சுருக்கமாக எழுத வேண்டும். இதைத் தமிழில் பலரும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். 

‘சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்’ என்கிறது நன்னூல். சுருங்கச் சொன்னால் மட்டும் போதாது, கருத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கவைக்க வேண்டும். சீதையைக் கண்டடைய அனுமன் மேற்கொள்ளும் முயற்சிகள் பல. கடலைக் கடக்கிறான், அசோக வனத்தை அழிக்கிறான், பேருருக்கொள்கிறான். எனினும் ராமனிடம் திரும்பி வந்ததும் இந்தப் பிரதாபங்களை எல்லாம் கொட்டி அளக்காமல் “கண்டேன் சீதையை!” என்கிறான். அந்தச் சொற்சிக்கனம்தான் அவனைச் ‘சொல்லின் செல்வன்’ ஆக்குகிறது. 

சமீபத்தில் மேற்கூறிய நன்னூல் விதிக்கு எதிர்த்திசையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ஹாங்காங்கில் 18 ஆண்டுகளாகத் தமிழ் வகுப்புகள் நடந்துவருகின்றன. இதன் ஆசிரியர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். மொழியின்பால் பற்றும் அறிவும் மிக்கவர்கள். ஆனால் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களல்லர். அவர்களுக்கு மொழிக்கல்வியைப் பயிற்றுவிக்கும் முறை குறித்து ஜூம் செயலி வழியாக ஒரு பட்டறை நடத்தித் தர சில தமிழக ஆசிரியர்கள் முன்வந்தனர். அதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க இணையத்தில் மேய்ந்தபோது எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஒரு வெளியீடு காணக்கிடைத்தது. அதிலிருந்து மாதிரிக்கு ஒரு பத்தி:

"மொழியைப் பற்றிய புதிய (முற்போக்கான) கற்பனைகளுடன் அதன் பயனடிப்படையில் அதன் பொருளை நோக்குவோமானால், கலாச்சாரத்தோடான ஒப்பந்தங்கள் அல்லது வாழ்க்கையின் வடிவங்கள் மேலும் பெயரிலிருந்து பொருளுடன் இணைவது உலக நிகழ்வுகளுடன் செல்வாக்கும் பெற்றுள்ளது."

- ப 33/99, அலகு 2: வகுப்பறையில் மொழியின் பன்முகத்தன்மை, பாடம் 4: கலைத்திட்டத்தில் மொழி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இளங்கலைக் கல்வியியல் (பி.எட்) முதலாம் ஆண்டு.

இப்படி ஒரு வாக்கியம் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான பாடநூலில் வருகிறது. இந்த வாக்கியத்தில் சுருக்கமும் இல்லை, பொருள் விளங்கவும் இல்லை. இதை எழுதிய ஆசிரியர் என்ன நினைத்து எழுதினார் என்பதும், இதைப் படிக்கிற மாணவர்கள் எப்படியான ஆசிரியர்களாக வருவார்கள் என்பதும், இப்படியான இடியாப்ப வாக்கியங்களை ஓர் அரசுத் துறை எங்ஙனம் அனுமதித்தது என்பதும் புரியவில்லை. 

விதி- 4: சொந்தக் கால்

"அயல்மொழிச் சொற்களைத் தவிர்க்கவும்" 

இது நான்காவது விதி. ஆர்வெல் அயல்மொழி என்று குறிப்பது கிரேக்க, லத்தீன், ஜெர்மானிய மொழிகளை. நம்மைப் பொறுத்தவரை ஆங்கிலமும் சமஸ்கிருதமும்தான் நம் பயன்பாட்டில் அதிகம் கலந்திருப்பவை, ஆகவே இயன்றவரை விலக்கப்பட வேண்டியவை.

ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுகிற பழக்கம் வெகு காலமாக இருந்துவருகிறது. பாரதியார் சொல்கிறார்: “தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பர்த்துக்கொண்டு, பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்” 

பாரதியார் இதழாளர்களைப் பார்த்துப் பேசுகிறார். எனில், இது ஆங்கிலம் கலந்து எழுதும் எல்லோருக்கும் பொருந்தும். ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதுவதால் தமிழ் உரைநடைக்கும் அதன் வளர்ச்சிக்கும் சேதாரத்தை உண்டாக்குகிறோம் என்கிற உணர்வு நமக்கு வர வேண்டும்.

சமீபத்தில் இந்தப் பொருள் பற்றி அருஞ்சொல் இதழில் ‘தமிழ் உரைநடையின் இரவல் கால்: ஆங்கிலம்’ என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன். கூறியது கூறலைத் தவிர்க்க நான்காவது விதியை இந்த இடத்தில் நிறுத்திக்கொண்டு அடுத்த விதிக்குப் போகலாம்.

விதி- 5: செய்வினை வைக்கலாம்!

"செய்வினை வாக்கியங்களைப் பயன்படுத்தக்கூடிய எல்லா இடங்களிலும் செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் தவிர்த்துவிடுங்கள்."

'கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை' என்பது செய்வினை. 'கல்லணையைக் கரிகாலன் கட்டி வைத்தான்' என்பது செயப்பாட்டுவினை. இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். இரண்டும் இலக்கணப்படி சரிதான். ஆனால், தொனி மாறுகிறது. முதல் வாக்கியத்தில் கரிகாலன் எழுவாய். இரண்டாவது வாக்கியத்தில் கல்லணை எழுவாய். அதாவது, முக்கியத்துவம் மாறிவிடுகிறது. முதல் வாக்கியம் நேரடியானது. அதனால்தான் கண்ணதாசனின் பாடல் செய்வினையில் தொடங்குகிறது.

‘நான் நாளை கடனைத் திரும்பச் செலுத்துவேன்’ என்பதில் உள்ள நேரடித்தன்மையும் பொறுப்புணர்ச்சியும் ‘நாளை கடன் திரும்பச் செலுத்தப்படும்’ என்பதில் நீர்த்துப் போய்விடுகிறது. இந்த வாக்கியத்தில் ‘நான்’ காணாமல் போய்விட்டதையும் கவனிக்க வேண்டும். அது அப்படித்தான். பெரும்பாலான செயப்பாட்டுவினை வாக்கியங்களில் உரிமையாளர் காணாமல் போய்விடுவார். ‘ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை’ என்பதிலும் ‘சட்ட ஒழுங்கு பின்பற்றப்படவில்லை’ என்பதிலும் அதற்குக் காரணமானவர்கள் மறைந்து நிற்கிறார்கள். மாறாக இதன் செய்வினை வாக்கியங்கள், ‘வங்கி நிர்வாகம் ஊக்கத் தொகையை வழங்கவில்லை’ என்பதாகவும், ‘ஊழியர்கள் சட்ட ஒழுங்கைப் பின்பற்றவில்லை’ என்பதாகவும் இருக்கும். செயப்பாட்டுவினை வாக்கியங்கள் பொறுப்பைத் துறக்கின்றன. செய்வினை வாக்கியங்கள் பொறுப்பை ஏற்கின்றன. ஆதலால், செய்வினை வாக்கியங்களே வாசகருக்கு நெருக்கமாக இருக்கும். எனவே, இயன்றவரை செய்வினையைப் பயன்படுத்துங்கள் என்கிறார் ஆர்வெல்.

விதி- 6: தாண்டத்தான் கோடுகள்

ஆறாவது விதிதான் உச்சக்கட்டம். அது: 

"மேலே சொன்ன ஐந்து விதிகளில் ஏதேனும் ஒன்றை முறித்தால்தான் நீங்கள் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல முடியுமென்றால், இந்த விதிகளை மீறத் தயங்காதீர்கள்". 

அதாவது, இந்த விதிகள் இரும்பால் அடிக்கப்பட்டவை அல்ல என்கிறார் ஆர்வெல். ஒரு கருத்தைத் தெளிவாகச் சொல்லவந்த உவமையோ தேய்வழக்கோதான் பொருத்தமாக இருக்கும் என்றால் அதைப் பயன்படுத்துவதில் தயக்கம் வேண்டியதில்லை. ஒரு வாக்கியம் இயல்பாகவே நீண்டு நிற்குமானல் அதை வலிந்து முறிக்க வேண்டாம். ஓர் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் புழக்கத்தில் இல்லையென்றால் ஆங்கிலத்தைத் துணைக்கு வைத்துக்கொள்ளலாம். செயப்பாட்டுவினை வாக்கியம்தான் சொல்ல வந்த கருத்துக்கு ஏதுவாக இருந்தால், அது அவ்வாறே ஆகட்டும்.

இந்தக் கட்டுரையிலும் முதல் ஐந்து விதிகள் பல இடங்களில் மீறப்பட்டிருக்கும். அப்படியான எல்லா மீறல்களையும் அவசியம் கருதித்தான் செய்தேன் என்று சொன்னால் அது அடுக்காது. ஆர்வெல்லின் ஆன்மா என்னை மன்னிக்காது. அவை யாவும் என் கவனக் குறைவாலும் பயிற்சிக் குறைவாலும் நேர்ந்த மீறல்களாகவே இருக்கும். 

நாம் எழுதுவது ஒற்றைவரிக் குறுஞ்செய்தியாக இருக்கலாம், ஒரு பத்தி மட்டுமே உள்ள நிலைத்தகவலாக இருக்கலாம், இரண்டோ முன்றோ பத்திகளிலான மின்னஞ்சலாக இருக்கலாம். நீண்ட கட்டுரையாக இருக்கலாம். வடிவம் எதுவானாலும், வார்த்தைகள் எவ்வளவு  இருந்தாலும், அவற்றை அக்கறையோடு எழுத வேண்டும். தொடர்ச்சியாக வாசிப்பதும் எழுதுவதும் நல்ல பயிற்சியாக அமையும். ஒவ்வொரு முறையும் நாம் எழுதியதைப் பலமுறை சரி பார்ப்பதும், அதை ஆர்வெல்லின் விதிகளில் பொருத்திப் பார்த்துக்கொள்வதும் நமது எழுத்தைச் செம்மையுறச் செய்யும். எழுத்தாளர்களுக்கு மட்டுமில்லை, நமக்கும் எழுத்துக் கலை வசப்படும். 

தொடர்புடைய கட்டுரைகள்

ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?

தமிழ் உரைநடையின் இரவல் கால்: ஆங்கிலம்

திரும்ப வரும் ஆண்டுகளின் நிரந்தர எண்: 1984

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


5

3





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   10 months ago

செம்மை! பத்து ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆர்வெல் கூறியுள்ள எல்லா நெறிமுறைகளையும் - கடைசி ஒன்றைத் தவிர - நான் என்னையறியாமலே கடைப்பிடித்து வருகிறேன் என்பதை அறியும்பொழுது தானாகவே என் கை கழுத்துப்பட்டைக்குச் செல்கிறது. நனி நன்றி!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

A very useful article! This is one way to encourage new writers and contribution of Arunchol on this score is appreciable.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

M.Arulkumar   2 years ago

நான் என் செல்பேசியில் ஏதாவது வாசிக்கிற போது எனனவள் கேட்டால்,ஆர்ட்டிக்கள் வாசிக்கின்றேன் என கூறுவேன்,அதை என்னவள் பிறரிடம் கேலியாக அவர் ஆர்ட்டிக்கள் வாசிக்கிறார் என கூறுவதுண்டு, நிச்சயமாக நான் புத்தகம் வாசிப்பதை போல அருஞ்சொல் கட்டுரைகளை ஆர்வமாக வாசிக்கின்றேன்,பல்வேறு தலைப்புகளில் நல்ல பல ஆளுமைகளின் கட்டுரைகளை வாசகர்களுக்கு அளிக்கும் அருஞ்சொலிற்கும், ஆசிரியர் சமஸ் அவர்களுக்கும் நன்றிகள் ஆயிரம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Vickneswaran    2 years ago

அருமை. மிக தெளிவான கட்டுரை. எழுத்துக் கலைக்கு மட்டுமல்ல, பேச்சு கலைக்கும் இக்கட்டுரை வெகுவாக பொருந்தும். இந்த பின்னூட்டம் எழுதும்போதே ஆறு விதிகளும் மனதிலுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ஜெயலலிதாவாதல்!மார்க்ஸியர்விவசாயி படுகொலைஉள் மூலம்ராஜன் குறைபாசிசிறுநீர்முதல் பெண் முதல்வர்பிஹாரின் முகமாக தேஜஸ்விமோன்டி பைதானின் பறக்கும் சர்க்கஸ்ஆர்.எஸ்.எஸ்தேசிய இயக்கம்தர்பூசணிபாரதிய ஜனசங்கம்விலைவாசி உயர்வுபெரும் கவனர்கிங்ஸ் அண்டு க்வின்ஸ்மாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிமாய குடமுருட்டிஉருமாற்றம் நாளை சென்னையா?துரித உணவுபற்களின் பராமரிப்புபேரறிவாளனுக்கான கொண்டாட்டம்: அபாயகரமான தமிழகத்தின்நீர்நிலைகள்தந்தைமைப் பிம்பம்ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரைபாக்டீரியாசிறந்த நிர்வாகிவேலைப் பட்டியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!