பேட்டி, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

எழுத்தாளராவேன் என்று நினைத்ததே இல்லை: நோபல் விருதாளர் குர்னா பேட்டி

எஸ்.அப்துல் ஹமீது
10 Oct 2021, 5:00 am
2

2021 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தான்சானிய எழுத்தாளர் அப்துல் ரஸாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கருப்பின எழுத்தாளர் என்ற அடிப்படையிலும் முஸ்லீம் எழுத்தாளர் என்ற அடிப்படையிலும் அவருக்கான விருது கூடுதல் சிறப்புப் பெறுகிறது. இறுதியாக கருப்பின எழுத்தாளர் ஒருவர் 1993-ல் நோபல் பரிசு பெற்றார். அப்போது டோனி மாரிசனுக்கு வழங்கப்பட்டது. நஜீப் மஹ்பூஸ், ஓரான் பாமுக் இருவர் மட்டுமே இதுவரை இஸ்லாமிய பின்புலத்திலிருந்து நோபல் பரிசு பெற்றவர்கள்.

சன்சிபார் தீவில் 1948-ல் பிறந்த குர்னா, உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்த சூழலில், 1960-களின் பிற்பகுதியில் குடும்பத்தைப் பிரிந்து, பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டனில் கல்லூரிப் படிப்பை முடித்து, கென்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற குர்னா, அதே பல்கலைகழகத்தில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்து, ஓய்வுபெறும் வரையில் அங்கு பணியாற்றினார்.

1994-ல் வெளியான அவருடைய ‘பாரடைஸ்’ நாவல் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, இறுதிச் சுற்று வரை சென்றது. இதுவரை 10 நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள குர்னாவின் எழுத்துகள் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த துயரத்தையும், உள்ளார்ந்த தனிமையையும் பேசுகின்றன. காலனியம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் அகதிகளின் நிலையையும் சமரசமற்ற முறையில், மிக ஆழமாக எடுத்துரைத்தற்காக அவருக்கு நோபல் வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு கூறியுள்ளது. இது குர்னா 2016-ல் அளித்த பேட்டி. 

இலக்கியப் படைப்புகளை உலக இலக்கியம், பின்-காலனிய இலக்கியம், ஆப்ரிக்க இலக்கியம் என்று வகைப்படுத்துவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி வகைப்படுத்துவது அவசியமானது என்றோ, பயனுள்ளது என்றோ நினைக்கிறீர்களா?

நிச்சயமாக அவை பயனுள்ளவைதான். ஒரு இலக்கியப் படைப்பின் பின்புலத்தைப் புரிந்துகொள்ள அவற்றை வகைப்படுத்துவது அவசியமானது. குறிப்பாக, கல்விப்புல ஆய்வுக்காகவும், ஒரு புத்தகத்தைச் சந்தைப்படுத்தவும் அதை வகைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. குறிப்பிட்ட வகைமையில் ஈடுபாடுகொண்ட வாசகர்களை நோக்கிய செய்தி அது. இத்தகைய வகைப்படுத்தலில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அது ஒரு பிரதியின் மீதான வாசிப்பை எல்லைக்கு உட்பட்டதாக ஆக்கிவிடுகிறது.

உங்களைப் பின்காலனிய எழுத்தாளர் என்று நினைக்கிறீர்களா?

ஒரு குறிப்பிட்ட வகைமையின் எழுத்தாளராக நான் என்னைக் கருதிக்கொள்வதில்லை. என் பெயரைத் தாண்டி எந்த அடையாளத்துக்குள்ளும் என்னை கற்பனைசெய்துகொள்ள  முடியவில்லை. 

உலகக் கலாச்சாரமானது வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலகத்தை அப்படி பிரிவுக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால், அப்படி பிரிப்பதன் வழியே சில புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இதற்கு முன்பு, ‘மூன்றாம் உலக நடுகள்’, ‘பின்தங்கிய நாடுகள்’ என்ற அடையாளங்கள் இருந்தன. தற்போது அது வடக்கு, தெற்கு என்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த அடையாளப்படுத்தல்கள், ஒரு கலாச்சாரத்தின் தன்மையையும், வேறுபாட்டையும், அதன் வரலாற்றுநிலையையும் புரிந்துகொள்ள வழிசெய்கிறது.

சமகாலச் சமூகத்துக்கு உலக இலக்கியம் எந்த அளவுக்கு முக்கியமானது? எழுத்தாளர்கள் ஆற்ற வேண்டிய கடமை என்று எதாவது இருக்கிறதா?

உலக இலக்கியம் என்று எதைச் சொல்கிறீர்கள்? ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கூடுதலாக பழைய ஃபார்சி இலக்கியம், பழைய சீன இலக்கியம் இவற்றை எண்ணத்தில் கொண்டு உலக இலக்கியம் என்று கூறுகிறீர்களா அல்லது உலகில் எந்த மூலையிலும் எழுதப்பட்ட, எழுதப்படும் இலக்கியங்களை உலக இலக்கியம் என்று கூறுகிறீர்களா? ஆகவே, எனக்கு உலக இலக்கியம் என்ற பதத்திலே உடன்பாடில்லை.

நிச்சயம் இலக்கியம் என்பது எல்லாருக்கும் அவசியமானது. அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இல்லையா? சமூகத்தை முன்னகர்த்திச் செல்வதைத்தான் இலக்கியத்தின் கடமையாகப் பார்க்கிறேன். அதன் தளம் ஒவ்வொரு சமூகத்துக்கு ஏற்ப மாறுபடலாம். எழுத்தாளர்கள் சமூகத்தின் சிந்தனைப் போக்கில் தாக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். சமூகத்தின் விழுமியங்கள், குடும்பம் சார்ந்த பார்வைகள், பாலியல் சார்ந்த புரிதல்கள் ஆகியவற்றைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடியவர்களாக எழுத்தாளர்கள் இருக்க வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கலாம். அவற்றை மக்கள் ஒழுக்கமற்றதாகவும், தேவையற்ற ஒன்றாகவும் அபாயகரமானதாகவும் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளர்களின் பங்களிப்பை அவர்களின் வாசகர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

கதை எழுதும்போது உங்கள் மனதில் எதாவது நோக்கம் இருக்குமா  அல்லது உங்கள் மனதில் உள்ள கதையை சொல்வதற்காக எழுதுகிறீர்களா?

என்னால் முடிந்தவரை உண்மையாக எழுத விரும்புகிறேன். பொதுவாக, என்னை கவலையுறச் செய்யும் விஷயங்களையே எழுதுகிறேன். ‘பை தி ஸீ’ நாவலை எப்படி எழுத ஆரம்பித்தேன் என்று சொல்ல விரும்புகிறேன். 1990-களில் ஆப்கானிஸ்தானில் போர்ச் சூழல் உச்சம் அடைந்த சமயத்தில், காபூல் மற்றும் ஹீரத்துக்கு இடையிலான ஒரு உள்நாட்டு விமானம், பயணி ஒருவரால் கடத்தப்பட்டு லண்டனை வந்தடைந்தது. ஏன் கடத்தப்பட்டது என்றால், அந்த விமானத்தில் இருந்த அனைவருக்கும் லண்டனில் அடைக்கலம் வேண்டுமாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக, இளம் வயதினர், குடும்பத்தினர் ஒரு நாட்டில் அடைக்கலம் கேட்பார்கள். ஆனால், அந்த விமானத்தில் ஒரு முதியவரும் அடைக்கலம் கேட்டார். ஒரு முதியவர், வேறு நாட்டில் அடைக்கலம் கேட்கும் அளவுக்கு, அவர் தன் சொந்த நாட்டில் அப்படி என்ன நெருக்கடியை எதிர்கொண்டிருப்பார் என்ற எண்ணம் என்னை ஆக்கிரமித்தது. சில நாட்கள் கழித்து குடியேற்ற அதிகாரியின் வேலைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. உடனே, என் மனம் நாவல் எழுதத் தயாராகிவிட்டது. அதன் பிறகு உங்களுக்குள் சேகாரமாகி இருக்கும் விஷயங்கள் எல்லாம் படிப்படியாக வெளிவரத் தொடங்கும். நீங்கள் வேறு எதாவது வேலை பார்த்துக்கொண்டிருப்பீர்கள், அப்போது நீங்கள் எழுதும் நாவல் தொடர்பாகப் புதிய சிந்தனை உங்களை வந்தடையும். வெவ்வேறு நிகழ்வுகளை இணைப்பதற்கான சாத்தியங்கள் உங்கள் முன் தென்படும். இவ்வாறாக நாவல் படிப்படியாக வளரும்.

பொதுவாக உங்கள் இதர பணிகள் போக, கருவிலிருந்து ஒரு நாவலை உருவாக்கிப் பதிப்பிக்கும் வரையில் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது?

பொதுவாக ஒரு நாவல் எழுத எனக்கு ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகிறது. பதிப்பகத்தார் திருத்தங்கள் ஏதும் சொல்லவில்லை என்றால் அடுத்த ஓராண்டுக்குள் அது வெளியாகும். இல்லையென்றால் இன்னும் சில காலம் எடுக்கும். நான் பிரிட்டனில் வசிக்கிறேன். கேன்டர்பரியில் வேலை செய்கிறேன். தினமும் பயணத்துக்கென்றே பெரும் பகுதி நேரம் செலவாகிவிடுகிறது. எதாவது ஒரு நாள் வேலைக்குப் போகத் தேவை இருக்காது. ஆனால், அன்றைய தினம் எழுதுவதற்கு உடலில் ஆற்றல் இருக்காது. ஆக, எழுதுவதற்கு என்று சரியான நேரத்திற்குக் காத்திருக்க வேண்டும். இது தவிர, எழுதத் தயாராகுவதற்கு, அதன் கருவை மனதில் ஒழுங்குபடுத்துவதற்கு சில காலங்கள் ஆகும். ஆனால், எழுதுவதற்கான தருணத்தை எட்டிவிட்டால், ஒன்றரை ஆண்டுக்குள் ஒரு நாவலை எழுதிவிட முடியும்.

உங்கள் படைப்புகளில் நினைவுகள் முக்கியமான பங்கு வகிக்கிறது.  நீங்கள் ஒரு கதையை எழுதும்போது உங்கள் தனிப்பட்ட நினைவுகள், குடும்ப நினைவுகள், கூட்டு நினைவுகள் அதில் எவ்விதமாக செயல்படுகின்றன?

ஆம், என்னுடைய படைப்புச் செயல்பாட்டில் நினைவுகளின் பங்கு அதிகம்தான். ஆனால், இந்த நினைவுகள் எனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு நடந்த அனுபவங்களை நினைவுகூர்வதோ அல்ல. சொல்லப்போனால், ஒரு குறிப்பிட்ட நினைவைக் கொண்டு நான் உண்மை நிகழ்வுகளை எழுதியது இல்லை. துப்பறியும் நாவல்கள், நாடக நாவல்கள் போன்ற நாவல்களின் கதைக் கட்டமைப்பு முறை வேறு. அங்கு சில நிகழ்வுகளை குறிப்பிட்ட வழிமுறைகளில் நிகழ்த்தியாக வேண்டும்.  ஆனால், அத்தகைய கதைக் கட்டமைப்பு முறையை பின்பற்றாத எழுத்தாளர்களின் எழுத்து முறை வேறானது. ‘அது ஒரு நல்ல கதை, நான் அதைப் பயன்படுத்துவேன்’ என்று நீங்கள் ஒரு நினைவின் வழியான நிகழ்வைக் கதையாக்கிவிட முடியாது. உங்கள் மனதில் இருக்கும் கருவுடன் உங்கள் நினைவின் வழியான நிகழ்வு ஒரு தொடர்பை உருவாக்கும். இந்த இணைவில் அந்த நிகழ்வு புதிய பரிணாமம் கொள்ளும். இந்த செயல்முறையில் அந்த நிகழ்வின் உண்மையான விசயங்கள் அழிந்துபோய், கற்பனையும், நினைவின் சாரம்சத்தையும் கொண்ட வேறொரு தருணமாக அது உருப்பெரும்.

உங்கள் எழுத்தில் தாக்கம் செலுத்தியவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா?  

குறிப்பிட்டு சொல்ல முடியாது. சொந்த நிலத்தை விட்டுவந்தது, ஓர்  அந்நிய நிலத்தில் தனியனாக, எனக்கான வழியைத் தேடி அலைந்தது இவையெல்லாம்தான் என்னுள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. நான் வெர்ஜினியா உல்ஃப் போன்று பத்து வயதிலே எழுத்தாளராக ஆக வேண்டும் என்று நினைத்தவன் இல்லை. திடீரென்று ஒரு நாள் என்னுள் தோன்றிய விஷயங்களை எழுதினேன். பக்கங்கள் பெருகிக்கொண்டேபோயின. எழுத எழுத என்னுள் எண்ணங்கள் பெருகிக்கொண்டே சென்றது. எழுத்துச் செயல்பாடு என் உடம்பிலிருந்து பேசுவதுபோல் இருந்தது. ஒரு நாள் என் எழுத்துகளை ஒழுங்குபடுத்தியபோது அது நாவல் வடிவை அடைந்திருந்ததை உணர்ந்தேன். அதைச் செழுமைப்படுத்தி, பதிப்பிக்கச் செய்வதைத் தவிர என் முன் வேறு வழி எதும் இல்லை என்ற நிலையை அடைந்தேன். எழுத்தாளரானேன். அவ்வளவுதான்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1

2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Lakshmi narayanan   1 year ago

அருஞ்சொல் ஒரு பாராட்டப்பட வேண்டிய ஒரு ஆக்கம்..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அன்பழகன் ( பாரதிமணாளன் )   3 years ago

உங்களுக்குள் சேகாரமாகி இருக்கும் விஷயங்கள் எல்லாம் படிப்படியாக வெளிவரத் தொடங்கும். நீங்கள் வேறு எதாவது வேலை பார்த்துக்கொண்டிருப்பீர்கள், அப்போது நீங்கள் எழுதும் நாவல் தொடர்பாகப் புதிய சிந்தனை உங்களை வந்தடையும். வெவ்வேறு நிகழ்வுகளை இணைப்பதற்கான சாத்தியங்கள் உங்கள் முன் தென்படும். இவ்வாறாக நாவல் படிப்படியாக வளரும். இவையனைத்தும் உண்மையான வார்த்தைகள் இவ்வனுபவம் எனக்கும் நேர்கிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

இந்தியா ஒரே நாடு அல்லமுதலீட்டியம்அமித் ஷாஏடாங்கரிசிகேடுதரும் மருக்கள்நிராசை உணர்வுசச்சின் பைலட்கமலா ஹாரிஸ்புவியியல் அமைப்பு எனும் சவால்அணித் தலைவர்மனிதவளம்ருவாண்டா தேசபக்த சக்திஅசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ்துர்நாற்றம்ராஜாஜிசிங்களர்கள்ஆணவம்: மோடி விளையாட்டரங்கில் மோடிஅபுனைவுகிரெகொரி நாள்காட்டிஅரசின் திணிப்பு நடவடிக்கைவேத மரபுஅதிகாரத்தின் நிறம்தேர்வுச் சீர்திருத்தம்சேஷாத்ரி குமார்இந்துத்துவமா?தமிழகத்தில் பள்ளிகள் திறப்புஎதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுwritersamasஉக்ரைன் ராணுவம்அபிஷேக் பானர்ஜி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!