தலையங்கம், அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டுக்கு வேண்டும் தனி மக்கள்தொகைக் கொள்கை

ஆசிரியர்
01 Aug 2022, 10:56 am
7

மிழ்நாட்டுக்கு என்று தமிழக அரசு தனி மக்கள்தொகைக் கொள்கையை வகுக்க வேண்டும். ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இந்திய அரசு இது தொடர்பில் கவனம் ஏதும் செலுத்தாத நிலையில், அந்தப் பணியை மாநில அரசுகளே முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளும் கருத்துருவாக்கர்களும் அரசியல் கட்சிகளும் உடனடி கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம் இது.

அரை நூற்றாண்டுக்கு முன் இந்திய அரசு அறிவித்த ‘மக்கள்தொகைக் கொள்கை’ அன்றைய தேவையின் விளைவு. இன்று மதிப்பிடுகையில், வெற்றியும் தோல்வியும் கலந்த ஒன்றாகத் தெரிகிறது அது. ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்ற பிரச்சாரத்துடன் வீட்டுக்கு இரு குழந்தைகள் எனும் இலக்கை அது மையப்படுத்தியது.

விளைவாக, சுதந்திரம் அடைந்த காலத்தில் பெண்களின் மகப்பேறு சராசரியாக ஆறு குழந்தைகள் என்ற இடத்திலிருந்து இரண்டு குழந்தைகள் என்ற இடத்தை இன்று வந்தடைந்திருக்கிறது. நாட்டின் ஆரோக்கியத்திலும், வீட்டின் ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாட்டை இது கொண்டுவந்திருக்கிறது. பொருளாதாரரீதியாகப் பெரும் தாவலை இது நமக்குத் தந்திருக்கிறது. அதேசமயம், இளையோர் – முதியோர் இடையேயான இயல்பான தொடர்ச்சியை இந்தக் கொள்கை அறுத்துவிட்டிருக்கிறது.

சமூகத்திலும் குடும்பங்களிலும் முதியோர் ஒரு பிரச்சினை ஆகும் சூழலை இப்போதைய கொள்கை  உருவாக்கி இருக்கிறது. திருமணமான ஒரு தம்பதி 25 வயதில் பெற்றோர் ஆகிறார்கள்; ஓரிரு ஆண்டுகளுக்குள் அடுத்த குழந்தையையும் பெற்றெடுக்கிறார்கள் என்றால், அவர்கள் 85 வயதை எட்டும்போது அவர்களும் முதியவர்கள்; அவர்களுடைய  குழந்தைகளும் முதியவர்கள்; பேரப் பிள்ளைகள் அடுத்த 10 ஆண்டுகளில் முதுமைக்கு நகரவிருப்பார்கள். முதியவர்களுக்கு உரிய கவனிப்பு கிடைக்காது என்பதோடு, நம் சமூகத்தில் இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளோ வருமானமோ கிடையாது என்பதால், பொருளாதாரரீதியிலும் பெரும் தேக்கம் உண்டாகும்.

இந்தியா மட்டும் இன்றி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பொருளாதார வளர்ச்சிக்கான கருவிகளில் ஒன்றாகக் கையாண்ட பல சமூகங்களும் இன்று இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றன. மருத்துவ வளர்ச்சியால் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் தொடர்ந்து நீடிப்பதால், ஜப்பான் போன்ற நாடுகளில் 100+ வயது தாயைப் பார்த்துக்கொள்வது எப்படி என்று தெரியாமல் பரிதவிக்கும் 75+ வயது மகன்கள், இவர்கள் இருவரையும் எப்படிப் பார்த்துக்கொள்வது என்று பரிதவிக்கும் 50+ வயது பேரர்கள் பிரச்சினை மிக சகஜமாக இருக்கிறது.

பல நாடுகள் இதிலிருந்து சுதாகரிக்கின்றன. உலகிலேயே மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை ‘ஒரு குழந்தைக் கொள்கை’ வழி மூர்க்கமாகச் செயல்படுத்திய சீனா இன்று மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி மக்களை உற்சாகப்படுத்துகிறது. அப்படிப் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்குச் சலுகைகளை அறிவித்திருக்கிறது. 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டம் கொடுத்து, பல லட்சம் ரொக்கப் பரிசு உள்பட பல்வேறு சலுகைகளை அளிக்கும் அரசாணையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது ரஷ்யா. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குழந்தைப்பேற்றை ஏற்கெனவே ஊக்குவிக்கின்றன.

இந்தியாவும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறது. மக்கள்தொகையில் 2011இல் 9%ஆக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை 2036இல் 18% ஆகிவிடும் என்று தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறுவனம் சொல்கிறது (மக்கள்தொகையில் 11% எனும் பங்குடன் நாட்டிலேயே அதிகமான முதியவர்கள் விகிதத்தைக் கொண்டிருக்கும் மாநிலம் எனும் தமிழகம் என்பதை இங்கே கூடுதலாக நாம் நினைவில் கொள்ள வேண்டும்). இந்தியாவில் 90% பேர் அமைப்புசாராத் துறைகளில் இருப்பவர்கள் என்பதால், 60 வயதைக் கடந்ததும் இவர்களுக்குப் பல மேலைநாடுகளைப் போல ஓய்வூதியம் போன்ற சமூக நலப் பாதுகாப்பும் கிடையாது என்பது நிலைமையை மேலும் தீவிரமாக்கக் கூடியது. அப்படியென்றால், இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்? தன்னுடைய மக்கள்தொகைக் கொள்கையை மீளாய்வுக்கு உள்ளாக்க வேண்டும்.

துரதிருஷ்டவசமாக நேர் எதிராக சிந்திக்கும் ஆட்சியாளர்கள் கைகளில் நாடு இன்றைக்கு இருக்கிறது. ‘இந்தியாவில் மக்கள்தொகை பெருக சிறுபான்மையினரே காரணம்’ என்ற கதையாடலின் வழி அரசியல் அனுகூலம் பெறும் கட்சி பாஜக. விளைவாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்துவதான பாவனையை அது கையாள்கிறது. உத்தர பிரதேச அரசு சென்ற ஆண்டில் அறிவித்த ‘புதிய மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் நலச் சட்டம் 2021’ ஓர் உதாரணம். இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகளை ரத்து செய்யும் வழிமுறையாக இதைத் திட்டமிட்டது அரசு.

இன்னொரு பார்வையில், இந்தி மாநிலங்களில் இப்போதைக்கு இத்தகு அணுகுமுறையை அரசு நியாயப்படுத்தவும் முற்படலாம். ஏனென்றால், குழந்தைப்பேறு விகித சராசரி தேசிய அளவில் 2.2 என்றால், உத்தர பிரதேசத்தின் சராசரி 2.5. எல்லா இந்தி மாநிலங்களிலும் கிட்டத்தட்ட இதுவே நிலை. ஆனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டைக் கடந்த காலத்தில் தீவிரமாக முன்னெடுத்த இந்தி பேசாத மாநிலங்கள் எல்லாவற்றிலுமே குழந்தைப்பேறு விகிதம் கடுமையாகச் சரிந்திருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தின் குழந்தைப்பேறு விகித சராசரி 1.4. அதாவது, தமிழ்நாட்டின் கணிசமான குடும்பங்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்கின்றன.

அநேகமாக பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ ஓர் அரசியல் கதையாடலாக முன்னெடுக்கப்படுகிறது. உலகின் போக்கை அல்லது ஒட்டுமொத்த இந்தியப் போக்கை அவர்கள் கவனிக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேகமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தியக் கூட்டாட்சிக்கு இது மேலும் ஒரு பரிமாணம் கொடுக்கும்.

குடும்பச் சூழல், குடும்பத்தின் - மாநிலத்தின் பொருளாதாரம் எனும் புள்ளிகளைத் தாண்டி அரசியல் பிரதிநிதித்துவத்திலும் மக்கள்தொகைக் கொள்கை பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. 1976இல் மக்கள்தொகைக் கட்டுப்பாடு கொள்கையை அறிவித்தது முதலாக மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற / சட்டமன்ற பிரதிநிதித்துவத்தை மறுவரையறுக்கும் பணியை நிறுத்திவைத்திருக்கிறது இந்திய அரசு.

இந்த மறுவரையறை 2026இல் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் நாடாளுமன்றக் கட்டிட விஸ்தரிப்பானது இதை மனதில் வைத்தே மேற்கொள்ளப்படுகிறது என்றும் இன்று  பேசப்படுகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி ‘மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவையில் இடங்கள்’ என்று தொகுதிகள் மறுவரையறுக்கப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் பெரும் இழப்பை அதில் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே மக்களவையில் 24.3%ஆக இருக்கும் தென் இந்திய மாநிலங்களின் பிரநிதித்துவம் மேலும் குறைந்து, 41.0%ஆக இருக்கும் இந்தி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும். இந்தி பேசும் மாநிலங்களின் மேலாதிக்கத்துக்கு இது வழிவகுக்கும். அப்படி நடக்காமல் இருக்க இதுபற்றி இந்தி பேசாத மாநிலங்கள் பேச வேண்டும்; புதிதாக ஒரு மாற்று ஏற்பாட்டை ஒன்றிய அரசிடம் முன்மொழிய வேண்டும். இதற்கெல்லாமும் நமக்கு என்று தனிக் கொள்கை வகுப்பது அவசியம் ஆகிறது.

அப்படியென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தமிழக அரசு தம் மக்களை உற்சாகப்படுத்த வேண்டுமா? உற்சாகப்படுத்தலாம் அல்லது முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையிலான இடைவெளியைக் கொஞ்சம் அதிகரிக்கும்படி கூறலாம். திருமண வயது சார்ந்தும், குழந்தைப்பேறு சார்ந்தும் திட்டமிட மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கலாம். குழந்தைப்பேறு எப்போதும் மக்களின் தனிப்பட்ட விஷயம்; குறிப்பாக பெண்கள் தீர்மானிக்க வேண்டிய முடிவு. அதேசமயம், அரசு அதில் ஏற்கெனவே குறுக்கிட்டிருக்கும் நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. எப்படியும் ‘இரண்டுக்கு மேல் நமக்கு எதற்கு?’ என்று தம்பதியருக்குக் குறுக்கே அரசு நின்ற காலம் முடிந்துவிட்டது என்பதையேனும் மக்களுக்கு அது தெரிவிக்க வேண்டும்!

 

தொடர்புடைய கட்டுரைகள்: 
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை கூடாது
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

1



1


பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

//அப்படியென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தமிழக அரசு தம் மக்களை உற்சாகப்படுத்த வேண்டுமா? உற்சாகப்படுத்தலாம்// இல்லை. மக்கள்தொகை அதிகரித்தால், வறுமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் மேலும் அதிகரிக்கும். மணல் கொள்ளை, நிலத்தடி நீர் மாசுபடுதல், நிலத்தடி நீருக்கு பற்றாகுறை, நீர் நிலைகள் பாழ்படுதல் போன்ற ஏராளமான பிரச்சனைகள் மேலும் தீவிரமடையும். தமிழகம் மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை பாதியாக குறைந்தால், இவற்றிற்கு நல்ல தீர்வு கிடைக்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு புலம் பெயரும் வட இந்திய தொழிலாளர்களை ஏற்றுக் கொண்டு, சம உரிமைகள், வாக்குரிமை அளித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும். குழந்தை பிறப்பு வெகுவாக குறைந்துள்ள ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகளில் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து புலம் பெயர்பவர்களுக்கு பெரிய அளவில் அனுமதி அளித்து, இதே பாணியில் பிரச்சனையை தீர்க்க வேண்டும். யாதும் ஊரே, யாவரும் கேளிர்.

Reply 0 1

Hejope   2 years ago

The question of having how many children is a personal one. Arguments like increasing population lead to increasing poverty, depletion of natural resources, increase the amount of polution are absurd. Please try to understand the what is poverty, polution etc. Example the population of tamilnadu in 2020 is manifold than 1950. Still the land and natural resources are enough to support and the quality of life is better then before.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

ஒரு சில பிரச்சினைகளைச் சமாளிக்க ஓராயிரம் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளச் சொல்கிறீர்கள். குடிநீருக்கு என்ன செய்ய? நிலத்தடிநீர் கிடைத்துக் கொண்டே இருக்குமா? இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதால் முதியோரைப் பராமரிக்கும் வயதில் பிள்ளைகள் இருப்பார்கள் என்று கணக்கு போடுகிறீர்கள். அவர்களுக்கு வேலையும் சம்பாத்தியமும் உறுதியாக கிடைக்குமா? சீனா வளர்ந்த நாடு, நாம்? மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகப்படுத்தக் கூடாது என்று போராட முந்தைய கட்டுரைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நீங்கள். நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளச் சொல்லி அடுத்த கட்டுரையில் எழுதுகிறீர்கள்!! உத்திரப்பிரதேசமாகும் உத்தேசம் எதற்கு தமிழகத்துக்கு? பெண்களின் முடிவு என்கிறீர்கள்.. எத்தனை குழந்தைகள், என்ன இடைவெளியில் பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கும் உரிமை பல பெண்களுக்கு இல்லை. அவர்கள் கணவரும் கணவரின் பெற்றோரும் தான் அதை நிர்ணயிக்கின்றனர். இவர்களின் துயரை எழுத இங்கே இடமில்லை. குழந்தைகளின் மனநலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனமுதிர்ச்சி பெற்றோருக்கு,பள்ளிகளுக்கு இல்லவே இல்லை. இதில் மூன்றாவது வந்து மாட்டிக் கொள்ள வேண்டுமா?அரசுப்பள்ளிகளில் காலை உணவும் குழந்தைகளுக்கு கிடைக்க உழைத்தவர் நீங்கள், குழந்தைகளுக்கு எதனால் இந்த நிலை என உங்களுக்குத் தெரியாதா? முதல் குழந்தைக்கும் இரண்டாவதுக்கும் இடைவெளி விடச்சொல்லி மக்களை கேட்டுக்கொள்ளலாமா? இத்தனை வருடங்களாக அதைத்தான் சொல்லி வருகிறோம், யார் கேட்கிறார்கள்? அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்ததும் தாய்மாருக்கு போட்டு விடுவதாக சொல்லாமலும் வற்புறுத்தியும் copper T போட்டு விடுகிறார்கள். விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் எதற்கு என. கருத்துருவாக்கர்களா??? அவர்கள் கவனத்துக்கு, அரசின் கவனத்துக்கு இந்த கட்டுரை போகாமல் இருக்கக் கடவது

Reply 5 1

Abi   2 years ago

அருமை சகோ

Reply 1 0

Raja   11 months ago

மிக சிறப்பான கருத்துக்களை சொல்லி இருக்கீங்க

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abi   2 years ago

2 குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க எவ்வளவு செலவு ஆகிறது.. இதில் 3 வது, 4 வது என்றால்...... ஏ‌ற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் வேறு.... பெருகிவரும் நகரமயமாதல், விவசாய சுருங்குதல், போட்டி உலகமனஅழுத்தம் என பல பிரச்சினைகள் குறித்து அரசு திட்ட மிடவே‌ண்டு‌ம்.

Reply 5 1

Hejope   2 years ago

There is enough for every one's need. M K Gandhi.

Reply 0 4

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அந்தரங்கம்பேரிடர்வி.பி.சிங்வள்ளலார்வல்லாரசுகளின் படையெடுப்புகாவிரி வெறும் நீரல்லசீன மக்கள் குடியரசுமன்னார்குடி அன்வர் கடை புரோட்டாமிஸோ அத்வானிஅமினோ அமிலங்கள்கம்யூனிஸ்ட் கட்சிசமாஜ்வாடி கட்சிகீழத் தஞ்சைபுதிய தொழில்கள்சட்டமன்றத் தேர்தல்துறவியோகாdenugaமலக்குழி மரணங்கள்ரெட் ஜெயன்ட் மூவிஸ்ஆடி பதினெட்டுசமஸ் ராகுல் காங்கிரஸ்பொது தகன மேடைஅரசியலதிகாரம்ஜிஎஸ்டிபிமதராஸ் ஓட்டல்அத்வானிபிரதமர்மரண சாசனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!