கட்டுரை, அரசியல், சட்டம், நிர்வாகம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

நகராட்சிகள் ஆக்கப்படும் மாநிலங்கள்

ப.சிதம்பரம்
29 Jan 2024, 5:00 am
1

‘இந்தியா’ என்பது ‘மாநிலங்களின் கூட்டமைப்பு’ என்ற கேள்விக்கே இடமில்லாத அனுமானத்தின்பேரில் இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன். 

‘மாநிலங்கள்’ (ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக), அரசமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. கூட்டாட்சியின் முக்கியத்துவம் எதனால் வருகிறது என்றால், பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த மாகாணங்களும் மன்னர்கள் ஆட்சிக்குள்பட்ட சுதேச சமஸ்தானங்களும் ‘சுதந்திர இந்தியா’ என்ற நாட்டின் ஒன்றிய கட்டமைப்புக்குள் தாங்களாகவே சேர்ந்துகொண்டன. ‘மாநிலம்’ என்பது வெறும் நிர்வாக அலகு மட்டும் அல்லவே, அதற்கென்று மொழி, பண்பாடு, வரலாறு, தனி அரசியல் அடையாளம் ஆகியவை இருப்பதால் மொழி அடிப்படையில் பிறகு மாநிலங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டன. 

சந்தேகமே வேண்டாம், கூட்டரசு

உண்மையில் நாம் எந்த அளவுக்குக் கூட்டரசாக இருக்கிறோம் என்று நமக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் விவாதித்துக்கொள்ளலாம். ‘இந்தியா’ என்பது உண்மையில் கூட்டாட்சிதான், அரசமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் அதன் கூட்டாட்சித்தன்மையை விரிவாகப் பேசுகின்றன, சில அதைக் குறுக்குகின்றன, ஆனால் தொடக்கத்தில் இந்தியாவை கூட்டரசாகத்தான் உருவாக்கினார்கள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி எந்த லாபமும் இல்லை.

என்னுடைய வாதத்துக்கு வலு சேர்க்க, அரசமைப்புச் சட்டத்தின் 368(2)வது பிரிவைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். அரசமைப்புச் சட்டத்துக்கு எந்தத் திருத்தம் செய்வதாக இருந்தாலும் மொத்த மாநிலச் சட்டமன்றங்களின் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் மேல் அதை ஏற்று நிறைவேற்றிய பிறகே அந்தத் திருத்தம் சட்டமாகும் என்கிறது அந்தப் பிரிவு.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சட்டங்களைத் திருத்த நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரம் இப்போது சர்ச்சைக்கிடமாக இருக்கிறது. கேசவானந்த பாரதி (1973) வழக்கிலும், மினர்வா ஆலை வழக்கிலும் (1980) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்புச் சட்டத்தின் ‘அடிப்படைக் கட்டமைப்பை மாற்றவே முடியாது. கேசவானந்த பாரதி, எஸ்.ஆர்.பொம்மை வழக்குகளிலும் இதர சில வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகள், ‘கூட்டாட்சி அமைப்பு’ முறைதான் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பதையும் தெளிவாக அறிவித்துள்ளன. அந்தத் தீர்ப்புகள் அனைத்துமே நம்முடைய கூட்டாட்சி அமைப்பு முறைக்குக் கிடைத்த வெற்றிகள்.

உச்ச நீதிமன்றம் சட்டப்பூர்வமாக இப்படி எத்தனையோ முறை அறிவித்திருந்தாலும் இன்றைய ஒன்றிய அரசு, கூட்டாட்சி முறை என்பதை வலுவிழக்கச் செய்ய வழிகளைக் கண்டுபிடித்து செயல்படுத்துகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்பவை அதிகார நிர்வாகம், சட்டமியற்றல், நிதி நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டது. இந்த அதிகாரங்களையெல்லாம் ஒன்றிய பாஜக அரசு எப்படி அரித்துவருகிறது என்று பார்ப்போம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காரிருள்தான் இனி எதிர்காலமா?

ப.சிதம்பரம் 18 Dec 2023

நிர்வாக அதிகாரம்

அரசமைப்புச் சட்டத்தின் 154, 162 பிரிவுகளின்படி அனைத்து விஷயங்களிலும் மாநில அரசுக்கு (அரசுகளுக்கு) நிர்வாக அதிகாரம் இருக்கிறது, அதனதன் சட்டமன்றங்கள், மாநில நிர்வாகத்துக்குத் தேவைப்படும் சட்டங்களை இயற்றிக்கொள்ள உரிமை இருக்கிறது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வருகிறது.

காவல் துறைத் தலைவர் (சட்டம்-ஒழுங்கு) மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். ஆனால், ஒன்றிய அரசானது இந்த அதிகாரத்தை மிக்க வலிமையுடன் பறிக்கும் விதத்தில், காவல் துறைத் தலைவர்களாக நியமிக்கப்பட தகுதியுள்ளவர்களில் மூன்று பேரின் பட்டியலை மத்தியத் தேர்வாணையத்திடம் அளிக்குமாறு ஆணையிட்டு, மூன்று அதிகாரிகளை மட்டுமே மாநிலம் பரிசீலிக்கத் தேர்வுசெய்யலாம் என்று அதிகாரத்தைக் குறுக்கிவிட்டது.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

மருத்துவம் பயில தேசிய அளவில் நுழைவுத் தேர்வை (நீட்) புகுத்தி, மருத்துவக் கல்லூரிகளில் (மழுக்க முழுக்க மாநில அரசுகளின் நிதியில் நடத்தும் கல்லூரிகள் உள்பட) அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண் – தகுதி ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று பணிய வைத்துவிட்டது.

ஒன்றிய அரசின் நிதியுதவியில் அமல்படுத்தப்படும் திட்டங்களுக்கான தொகையை மாநிலங்களுக்குத் தருவதை அற்பக் காரணங்களுக்காக மறுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது; ஒன்றிய அரசின் திட்டங்களுக்குள்ள பெயரின் முன்னொட்டையோ – பின்னொட்டையோ மாநில அரசுகள் மாற்றிவிட்டன, ஒன்றிய நிதியில் மேற்கொள்ளப்படும் வேலைகள் செய்து முடிக்கப்பட்டதற்கான தணிக்கைச் சான்றிதழை உரிய காலத்துக்குள் தரவில்லை என்பவை போன்றவை இந்தக் காரணங்கள்.

புதிதாக பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை என்று கூறி கேரளத்துக்கு நிதி மறுக்கப்பட்டுள்ளது, குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவிட்டதால் புதிய பள்ளிக்கூடங்களைத் திறக்கும் அளவுக்கு மாணவர்கள் இல்லை என்று கேரளம் கூறியதை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இப்படி வழக்கத்துக்குப் புறம்பான காரணங்கள் எதுவும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் கூறப்பட்டு ஒன்றிய நிதி மறுக்கப்படுவதில்லை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை

ப.சிதம்பரம் 01 Jan 2024

சட்ட அதிகாரம்

அரசமைப்புச் சட்டம் குறிப்பிடும் பொது அதிகாரப் பட்டியலில் 47+4 துறைகள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பாக நாடாளுமன்றமும் சட்டம் இயற்றலாம், மாநில சட்டமன்றங்களும் சட்டம் இயற்றலாம். ஆனால், மாநில அரசுகளிடம் கருத்தைக் கேட்காமலேயே இந்தப் பொது அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவை தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றிவருகிறது.

உரிமையியல் சட்டம், வனங்கள், போதை மருந்து கட்டுப்பாடு, ஏகபோக கட்டுப்பாடு, தொழிற்சங்கங்கள், சமூக பாதுகாப்பு, சமூக காப்புறுதி, தொழிலாளர் நலம், விலைக் கட்டுப்பாடு, ஆலைகள், மின்சாரத் துறை, தொல்லியல் ஆய்விடங்கள், சொத்துகளைக் கையகப்படுத்துதல், முத்திரைத்தாள் தீர்வை என்று இப்படிப் பலவற்றின் தொடர்பாக சட்டங்களை இயற்றியுள்ளது ஒன்றிய அரசு.

பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றி, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்துவிட்டால், அதற்கு முன்னர் அமலில் இருந்த ஒன்றியச் சட்டத்தைவிட அந்த மாநிலத்தில் – மாநில அரசின் சட்டமே செல்லும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 254(2) பிரிவு கூறுவதை ஒன்றிய பாஜக அரசு அனுமதிக்குமா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது; காரணம் எல்லாவற்றிலும் ‘ஒரே சீர்மை’ – ‘ஒற்றைத்தன்மை’ நிலவ வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

‘பொதுப் பட்டியல்’ என்பது ஒன்றிய அரசின் அணுகுமுறையால் இப்போது ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குள்பட்ட பட்டியலாகிவிட்டது. மாநிலங்களிடம் ஆலோசனைகள் கலக்கப்படாதது மட்டுமல்ல - ஒப்புதல்கூட பெறாமல் பல சட்டங்களை நாடாளுமன்றம் தொடர்ந்து இயற்றுவது கண்டனத்துக்குரியது. இதில் மோசமான உதாரணம், குற்றவியல் தொடர்பான மூன்று சட்டங்கள் திருத்தப்பட்டு சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதாகும்.

குற்றவியல் சட்டமும் குற்றவியல் சட்ட நடைமுறையும் பொதுப் பட்டியிலில் இடம்பெற்றவை, மாநில அரசுகளுக்கு இதில் உள்ள உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இடைக்கால ஏற்பாடாக ஒன்றிய அரசு நியமித்த நிபுணர்கள் குழு வரைவு மசோதாவைத் தயாரித்த பிறகு, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துவது போன்ற பாவனையைக்கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. இந்த மசோதாக்களின் பல பிரிவுகள், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இடம்பெறும் ‘பொது அமைதி’, ‘காவல் முறைமை’ ஆகியவற்றில் அப்பட்டமாகக் குறுக்கிடுகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இதுதான் சட்ட சீர்திருத்தமா?

ப.சிதம்பரம் 27 Nov 2023

நிதி அதிகாரம்

மாநிலங்களின் அதிகாரங்களில் குறுக்கிட்டுப் பறித்திடும் ஒன்றிய பாஜக அரசின் செயல் வேறெந்தத் துறைகளையும்விட நிதித் துறையில் வெகு அப்பட்டமாக வெளிப்படுகிறது. இன்றைய பிரதமர் புதிதாக பொறுப்பேற்ற உடனேயே (2014), மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கினைக் குறைக்க 14வது நிதியாணையத் தலைவருடன் விவாதித்தார் என்ற தகவல் சமீபத்தில்தான் அம்பலமாகியிருக்கிறது.

நிதியாணையத் தலைவர் அதற்கு உடன்பட மறுத்ததால், மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய 41% பங்கினை சூழ்ச்சிகரமாக செயல்பட்டு 31% ஆக குறைத்திருக்கின்றனர். மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தேவையற்ற, ‘சிறப்பு மேல் வரி’ (செஸ்), ‘கூடுதல் மேல் வரி’ (சர்-சார்ஜ்) இனங்களில் வரி வசூலிக்கப்பட்டது. மாநிலங்கள் பொதுச் சந்தையில் கடன் பெறுவதும், கேள்விக்குரிய வழிகளில் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்பட்டது.

மிகக் கடுமையாகவும், மோசமாகவும் வடிவமைக்கப்பட்ட ‘பொது சரக்கு சேவை வரி’ (ஜிஎஸ்டி) சட்டமானது மாநிலங்களின் நிதியாதாரங்களைக் கட்டுப்படுத்தி முடக்கிவிட்டது. ஒன்றிய அரசு வழங்கும் மானிய உதவிகளிலும் பேரிடர் நிவாரணங்களிலும் மாநிலங்களுக்கு மாநிலம் பாரபட்சமான அணுகுமுறையே நிலவுகிறது.

பாரதிய ஜனதா கட்சி அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த எந்த முதல்வரை வேண்டுமானாலும் கேளுங்கள், நிதிக்காக ஒன்றிய அரசிடம் யாசகம் கேட்க வேண்டிய நிலையில் இருப்பதாகத்தான் தெரிவிப்பார் (பாஜக ஆளும் மாநிலங்களில் நிதியமைச்சர்கள் அல்லது முதல்வர்கள் இதை வெளியில் சொல்லக்கூட முடியவில்லையே என்று முணுமுணுக்கவும் கூடும்).

அரசின் நிர்வாக வட்டாரங்களில் ஒருகாலத்தில் கிசுகிசுவென்று முணுமுணுக்கப்பட்டது இன்றைக்கு ஒன்றிய அரசின் செயல்திட்டமாகவே மாறிவிட்டது. அந்தத் திட்டம் முழுதாக நிறைவேறி முடிக்கும்போது அனைத்து மாநிலங்களும் ‘நகராட்சிகள்’ நிலைக்குத் தாழ்ந்துவிடும், இந்தியாவே ‘நகராட்சிகளின் ஒன்றியம்’ என்ற நிலைக்கோ அல்லது அதற்கும் கீழே இன்னும் மோசமான நிலைக்கோ சென்றிருக்கும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டது!
காரிருள்தான் இனி எதிர்காலமா?
மக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை
இதுதான் சட்ட சீர்திருத்தமா?
காஷ்மீர்: நீதியின் வீழ்ச்சி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sundar Gopalakrishnan   6 months ago

நல்ல கட்டுரை. மாநில அரசுகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சிகளை முறியடிக்க, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

பொருளாதார நீதிஇட ஒதுக்கீடுசஞ்சய் மிஸ்ராபதினெட்டாம் பெருக்குராமாயணத்தை இலக்கியப் பிரதியாக வாசிக்க முடியாதா?பொருளாதாரம்: முதலாவது முன் எச்சரிக்கைபிராந்திய சமத்துவம்சுதந்திர தினம்தளவாய்ப்பேட்டைஉருமாற்றம்செல்வந்தர்களின் இந்தியாஇந்துத்துவ பரிசோதனைக்கூடம்ஜனதாசாகுபடிகிபுட்ஸ்இயந்திரமயம்இயற்கை வேளாண்மைஅரவிந்தன் கண்ணையன் எதிர்வினைவயிற்றில் அடிக்கிறார்கள்காந்தியர்கள்மேற்கத்திய மருந்துகள்விட்டாச்சியின் பரவசம்காங்கிரஸ் வளர்ச்சி2024 எழுப்பும் சவால்கள்தமிழ் தேசியம்இன்னமும் மீட்சி பெறவில்லைமுசோலினிமகளிர் ஒதுக்கீடு: அமல் பிறகுஇயற்கை விவசாயம்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணஉழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!