கட்டுரை, தொடர், வாழ்வியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

காங்கோ: விதியே... விதியே என்ன செய்ய நினைத்தாய்?

பாலசுப்ரமணியம் முத்துசாமி
05 Nov 2023, 5:00 am
1

ன்று ஒருநாள், “மதிய உணவுக்கு ஒரு அழகான ரூஃப் டாப் (Roof Top) இந்திய உணவகத்துக்கு அழைத்துச் செல்கிறேன்” என என் வணிக நண்பர் சொல்லியிருந்தார். சொன்னபடியே அழைத்துச் சென்றார். ஒரு குறுகிய தெருவில் காரைப் பார்க் செய்துவிட்டு, ஒரு கட்டிடத்தின் பின் பகுதிக்குச் சென்றோம். மின்தூக்கி வழியே, ஆறாவது மாடியை அடைந்தோம். கதவு திறந்து, உணவகத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே எதிர்ப்பட்ட காட்சியில், என் இதயமே நின்றுவிட்டது. எதிரே காங்கோ நதி. ப்ரௌன் நிறப் பிழம்பாக நகர்ந்துகொண்டிருந்த பிரம்மாண்டமான புதுவெள்ள நீர்ப் பரப்பை, என் கண்களும், மனமும் உள்வாங்க முடியாமல் திணறின. 

உணவு ஆர்டர் செய்வது, உண்பது என எதிலுமே கவனம் செல்லாமல், மனத்தைக் காங்கோ நதி முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. ஏழு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தும், எவ்வளவு விஷயங்களைப் பார்க்காமல் விட்டிருக்கிறோம் என நினைத்துக்கொண்டேன்.

தந்தூர் க்ரில்ஸ் அண்ட் கறிஸ் உணவகம், கின்ஷாசா, காங்கோ

அந்த உணவகத்தின் பெயர் ‘தந்தூர் க்ரில்ஸ் அண்ட் கறிஸ்’ (Tandoor Grills and Curries). இந்த உணவகம், காங்கோ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of Congo - DRC) நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் உள்ளது. 

காங்கோ நதி

அதாவது, 4,370 கிலோமீட்டர் நீளமான காங்கோ நதி உலகின் 9வது பெரிய நதி. ஆப்பிரிக்காவில் நைல் நதிக்கு அடுத்த பெரிய நதி. இதை ஒரு நதி என அழைப்பதைவிட நீர்ப் பரப்பு என்றே அழைக்க வேண்டும். பத்து நாடுகளில் விரிந்து பரந்திருக்கும் இதன் நீர்ப் படுகையின் பரப்பளவு 40 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவின் மொத்த பரப்பளவைவிட (32 லட்சம் சதுரக் கிலோமீட்டர்கள்) அதிகம் என்று சொன்னால், அதன் பிரம்மாண்டம் விளங்கும். காங்கோ நதி, அதில் வசித்துவந்த இனக்குடிகளான காங்கோ மக்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.

காங்கோ நதி, ஒரு முக்கால் வட்ட வடிவில் ஓடி, இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கலக்கிறது. இந்த நதியின் நீரில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கடல்வாழ் உயிரினங்களின் ஆதாரமான ஃபைட்டோ ப்ளாங்டன்ஸ் (Phytoplanktons) செழித்து வாழ, இரும்புச் சத்து மிகவும் அவசியம். அட்லாண்டிக் பெருங்கடலின் மீன் வளத்துக்கு காங்கோ நதி கொண்டுசென்று கொட்டும் கரிமச் செல்வமும், இரும்புச் சத்தும் முக்கிய காரணம்.

அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் காங்கோ நதி 

அமேசான் காடுகளுக்கு அடுத்தபடியான மிகப் பெரும் மழைக் காடுகளைக் கொண்டது காங்கோ நதியும், அதன் கிளைநதிகளும் உருவாகி ஓடும் இந்த நீர்ப் படுகை. கிழக்கு ஆப்பிரிக்க பிளவு மலைத்தொடர், தாங்கினிக்கா ஏரி, ம்வேரு ஏரி எனப் பல இடங்களில் இருந்து சிறு சிறு நதிகளாக ஓடி, லுலாபா நதி என உருவாகி, பயோமா நீர் வீழ்ச்சியை அடையும்போது காங்கோ நதி என உருவெடுக்கிறது என்கிறார்கள்.

காங்கோ நதி சமவெளியை அடைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலப்பதற்கு 400 கிலோமீட்டர்கள் முன்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாஷா உள்ளது. கின்ஷாசா அமைந்திருக்கும் காங்கோ நதிக்கரையின் மறுபுறத்தில் இன்னொரு காங்கோ நாடான காங்கோ குடியரசின் தலைநகர் பிராஸ்ஸாவில்லே (Brazzaville) உள்ளது. தந்தூரி க்ரில்ஸ் உணவகத்தின் ஆறாவது மாடியில் இருந்து ‘அதோ அங்கே இருக்கு பிராஸ்ஸாவில்லே’ எனக் காண்பித்தார்கள்.

கடந்த 5-6 ஆண்டுகளாகவே காங்கோ செல்ல வேண்டும் என நான் எடுத்த பல முயற்சிகள் வெற்றியடையவில்லை. வணிகத் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டுமானால், நம்பிக்கையான வணிகக் குழுமங்களுடன் தொடர்புகள் வேண்டும். பல முயற்சிகள் தோல்வியுற்று வெறுப்படைந்திருந்த காலத்தில் வாராது வந்த மாமணியாக ஒரு குஜராத் இஸ்லாமியக் குழுமம் வந்துசேர்ந்தது.

முதலில் காங்கோவின் லுபும்பாஷி நகருக்கு வந்துசேர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் கின்ஷாசா வந்துசேர்ந்தோம். மூன்று மணி நேரப் பயணம். 320 பேர் கொள்ளளவு கொண்ட விமானம் ஃபுல்லாக இருந்தது. அதன் காரணம் மோசமான, பாதுகாப்பற்ற சாலைகள். கின்ஷாசா விமான நிலையம் இறங்கியதும் முதலில் வியக்க வைப்பது 8 வழிச் சாலை. விமான நிலையத்திலிருந்து கின்ஷாசா நகர மத்தியில் செல்லச் செல்லத்தான் நாம் ஒரு மெகா நகரத்திற்கு வந்திருக்கிறோம் என உணர்ந்தேன். கின்ஷாசாவின் மக்கள்தொகை 1.6 கோடி.

மும்பை போலவே வழியெங்கும் மக்கள். லுமும்பாஷியும், கின்ஷாசாவும் ஒரே நாடு எனினும், பேசும் மொழிகள் வேறு. லுமும்பாஷியில் ஸ்வாஹிலியும், ஃப்ரெஞ்சும் பேசுகிறார்கள். கின்ஷாசாவில் லிங்காலாவும், ஃப்ரெஞ்சும் பேசுகிறார்கள். எனக்கு எல்லாமே ஒன்றுதான். ஒரு எழவும் புரியாது.

இரவில் கின்ஷாசா, பின்புலத்தில் காங்கோ நதி

எட்டு வழிச் சாலையில் நீந்திக் கடந்து எங்களது வணிகத் தொடர்பு நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்தித்து, பேச்சு வார்த்தைகளை நடத்தினோம். எங்கள் நிறுவனத்தின் பற்பசை, அழகு சாதனப்பொருட்கள் போன்றவற்றை காங்கோவில் விநியோகிக்கும் சாத்தியங்களைப் பேசினோம். பின்னர், கின்ஷாசா நகரின் முக்கிய பல்நோக்கு நவீன அங்காடிகளைப் பார்வையிடலாம் எனச் சென்றோம். இங்குள்ள அழகு சாதனப்பொருட்கள், பற்பசைகள் எல்லாமே, பெல்ஜியம், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. தான்சானியாவில் இருந்து கின்ஷாசாவுக்குப் பொருளை அனுப்ப வேண்டுமானால், கிழக்கே இந்து மகா சமுத்திரம் தொடங்கி மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் வழியே செல்ல வேண்டும். சாலைப் போக்குவரத்தைவிட அது செலவு குறைவானது.

அடுத்த நாள், வழக்கம்போல மொத்த வணிக அங்காடி வளாகத்துக்குச் சென்றோம். அங்காடியை அடைந்ததும், என் வணிகத் தொடர்பு, காரிலேயே இருங்கள், இறங்க வேண்டாம் எனச் சொல்லிச் சென்றார். சில நிமிடங்களில், அந்த மொத்த அங்காடி வளாகத்தை எங்களுக்குச் சுற்றிக்காட்ட, அந்த வளாகத்தில் இருந்த ஒரு தாதாவை அழைத்து வந்தார். அப்படிப்பட்ட காவலர் இல்லாமல் உள்ளே போனால், திரும்பி வர முடியாது என்பதே நிலை. ஒவ்வொரு அங்காடியாகச் சென்று, அங்கே என்ன பொருட்கள், என்ன விலைகள் என்றெல்லாம் விசாரித்துக்கொண்டு திரும்பினோம். திரும்ப வருகையில், சாலையில், பட்… பட்டென்று லக்‌ஷ்மி வெடி வெடிப்பதுபோல சத்தம். மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

‘என்ன சத்தம்?’ எனக் கேட்கத் திரும்பினேன். எங்களுடன் வந்த தாதா, ‘வண்டியிலேறுங்கள்…’ என எங்களை வண்டிக்குள் திணித்துவிட்டு, அவரும் அவசரமாக ஒரு சந்துக்குள் சென்று மறைந்தார். என் வணிகத் தொடர்பு, சிரித்தவாறே சொன்னார், ‘வெல்கம் டு கின்ஷாசா’ என்று. அதைவிட சுவாரஸ்யம், அது தொடர்பாக எனக்கும் என் மகனுக்கும் நிகழ்ந்த வாட்ஸப் உரையாடல்.

நான்: அருணா… இன்னிக்கு நான் மார்க்கெட்டுக்குப் போனேனா, அங்கே ஒரு துப்பாக்கிச் சண்டை, ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.
மகன்: இன்ஷ்யூர் பண்ணிருக்கையா?
நான்: அதனால எனக்கு என்ன பயன்?
மகன்: எனக்குப் பயன்படுமே!
நான்: அடப்பாவி! ஒன்னப் பெத்ததுக்குக் குழவிக்கல்லப் பெத்திருக்கலாம்!
மகன்:  கூல் டௌன் ஓல்ட் மேன்!

ஈராயிரக் குழவிகள் இப்படித்தான் தங்கள் பிரியத்தை வெளிப்படுத்துகிறார்கள். கின்ஷாசவில் இருந்து மீண்டும் லுபும்பாஷி. வழக்கம்போல விமானம் நிரம்பியிருந்தது.

லுபும்பாஷி

முதலில் பாமரத்தனமாக, இந்நகரின் பெயரை லுமும்பாஷி என உள்வாங்கியிருந்தேன். பாட்ரிஸ் லுமும்பா பெயரின் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், லுபும்பா என்னும் நதியை ஒட்டி அமைத்தன் நகரம் என்பதால், இதற்கு லுபும்பாஷி எனப் பெயர். இதன் காலனியப் பெயர், எலிசபெத்வில்லெ. 

காங்கோ நாட்டின் இந்தப் பகுதி ‘கட்டாங்கா’ என அழைக்கப்படுகிறது. உலகின் மிக அதிகமாக செம்பு கிடைக்கும் பகுதி இது. உலகின் எல்லாப் பெரும் தாது மாஃபியாக்களும் இங்கே தொழில் செய்கிறார்கள். கட்டாங்கா பகுதியின் தலைநகராக விளங்குகிறது லுபும்பாஷி. சேலம் போன்ற சிறுநகரம். ஆனால், இங்கிருந்து செம்புச் சுரங்கங்களுக்கான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பல நூறு கிலோமீட்டர்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. நகரில் மிக நவீனமான அங்காடிகளைப் பார்க்கலாம். ஃப்ரெஞ்சுதான் நவீன வணிக அங்காடிகளின் மொழி. 

லுபும்பாஷி மொத்த வணிக அங்காடி

லுபும்பாஷியின் மொத்த வணிக அங்காடி ஒன்றில், விற்பனைக் கவுன்டருக்குப் பின்னால் பல மணி நேரம் நின்று, அங்கே பொருட்கள் வாங்க வரும் வணிகர்களை (பெரும்பாலும் பெண்கள்) அவதானித்தேன். 

சராசரி ஆப்பிரிக்கப் பெண்மணி, தன் வருமானத்தில் ஒரு முக்கியமான சதவீதத்தை, அழகுப் பொருட்கள் வாங்கச் செலவிடுகிறார்கள். சராசரி இந்தியப் பெண்ணைவிட மிக அதிகம். இங்குள்ள தட்பவெப்பம் காரணமாக, அவர்களின் தோல் விரைவில் உலர்ந்துவிடுகிறது. எனவே, தோலை பளபளவென பராமரிக்க உதவும் க்ரீம்கள் அதிகமும் விற்பனை ஆகின்றன. இதில் தோலை வெளுப்பாக்கும் என விளம்பரப்படுத்தப்படும் ப்ளீச் க்ரீம்கள் அதிகம். வளர்ந்த நாடுகளில், புற்றுநோயை உருவாக்கும் எனத் தடைசெய்யப்பட்ட பொருட்களே மிக அதிகமும் விற்பனையாகின்றன.

அதேபோல, ஆப்பிரிக்கப் பெண்களுக்குக் கூந்தல் தொடர்பான பிரச்சினைகள் மிக அதிகம். சுருள் முடியைப் பராமரித்தல் மிகக் கடினம். ஸ்ப்ரிங் போலச் சுருண்டுகொள்ளும் முடி ஓர் அளவுக்கு மேல் வளர்ந்தால் இம்சை என்கிறார்கள். பலரும் தங்கள் தலை முடியை வெட்டிவிட்டு, செயற்கையான விக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். பலர், தங்கள் முடியை இழுத்து சிறு சிறு சடைகளாப் பிண்ணிக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு, நீளமான, சுருளற்ற முடி ஓர் ஆதர்சம். ஆப்பிரிக்கப் பெண்களின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு உண்மையான தீர்வு வேண்டும் என நினைத்துக்கொள்வேன்.

இந்தியா போன்ற நாடுகளில், ஆடம்பரம் எனக் கருதப்படும், அழகுப் பொருட்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அத்தியாவசியம் போலக் கருதப்படுகின்றன. மாதத்தில் குறைந்தது, 2 முறை சலூன் சென்று தங்கள் கூந்தல் அமைப்பை மாற்றுவார்கள். அழகுப் பொருட்கள் இந்தச் சமூகத்தில் பெண்களுக்கான கண்ணியத்தை உறுதிசெய்யும் ஒன்றாக உள்ளது.

கவுன்டரின் பின்னால் நின்றுகொண்டு கவனிக்கையில், அந்தப் பொருட்களை வாங்கிச் செல்லும் பெண்களைப் பார்த்தேன். மொத்த வணிக அங்காடிகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். அழகுப் பொருட்கள் உண்மையிலேயே ஒரு ‘ப்ளேஸ்போ’ (placebo) அவ்வளவுதான். ஆனாலும், அது தரும் நம்பிக்கை அவர்களுக்கு மிக முக்கியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 50-60 பெண்களைப் பார்த்திருப்பேன். அனைத்து முகங்களிலும் இருந்தது ஒரே உணர்வுதான், அது நம்பிக்கை.  

ஓட்டல் லுபும்பாஷி

லுபும்பாஷியில், மிகவும் பாதுகாப்பானது எனச் சொல்லப்பட்ட ஓட்டல் லுபும்பாஷியில் தங்கினோம். அங்கே இந்தியச் சமையல் நிபுணர் இருந்தார். இருந்த 3 நாட்களும் நல்ல இட்லி தோசை, சட்னி செய்து தந்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஒரு நண்பருடன் நீண்ட பயணம் சென்றிருந்தேன். அந்தக் காலத்தில், எங்கெங்கு காணினும் சீன உணவு என அவ்வளவு எளிதாகக் கிடைத்தது. அதுபோல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில், இந்திய உணவு அதிலும் இட்லி, தோசை வரை கிடைப்பது, இந்நாடுகளில் இந்தியர்களின் இருப்பைக் காண்பிக்கிறது.

ஒரு வாரப் பயணத்துக்குப் பின்னர் எனது மதிப்பீடு இதுதான்.

பாட்ரீஸ் லுமும்பா

பாட்ரீஸ் லுமும்பாவை எழுதாமல் காங்கோவைப் பற்றிய கட்டுரை முழுமையடையாது. பள்ளியிறுதி முடித்து அதன் பின்னர் ஓராண்டு தபால் தந்தி இலாகாவில் ஓராண்டு பயிற்சி பெற்றார். வால்டேர், ரூஸோ போன்ற தத்துவவாதிகளை ஆழ்ந்து பயின்றவர். கவிஞர். தன் மனதுக்குச் சரி எனப் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர் என அறியப்பட்டார்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில், காலனிய ஆதிக்கத்தை, குறிப்பாக பெல்ஜியத்தை எதிர்த்துப் பேசவும், எழுதவும் செய்தார். 1955ஆம் ஆண்டில், பெல்ஜியம் லிபரல் பார்ட்டியில் இணைந்தார். 1958ஆம் ஆண்டு பலருடன் இணைந்து காங்கோ தேசிய இயக்கத்தைத் தொடங்கினார். அது மற்ற அரசியல் இயக்கங்களைப் போல ஒரு சில இனங்களைப் பிரதிபலிப்பதாக இல்லாமல், பரந்துபட்ட ஆப்பிரிக்க இனங்களையும் இணைத்துக்கொள்வதாக இருந்தது. தனது பேச்சு மற்றும் எழுத்தாற்றலால், மிக விரைவில் காங்கோவின் மிகப் பிரபலமான தேசியத் தலைவரானார்.

1960 ஜனவரியில் விடுதலை பெற்ற காங்கோ நாட்டிற்கு, அதே ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. அதில் அவரது காங்கோ தேசிய இயக்கம் வெற்றிபெற்றது. ஆனால், பெல்ஜியம் முற்றிலும் விலகிடாமல், தலைவரை நியமிப்பதில் தலையிட்டது. தேர்தலில் போட்டியிட்ட பல எதிர்க்கட்சிகள், லுமும்பா தலைவராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதன் பின்னர் நடந்த குழப்பமான அரசியல் நிகழ்வுகளுக்கிடையே, அவர் காங்கோவின் தலைவரானார். ஆனால், ஆட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ராணுவக் கிளர்ச்சி எழுந்து, அவர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார். பின்னர் அவர் உடல், கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, ரம்பத்தால் அறுக்கப்பட்டு, சல்ஃப்யூரிக் அமிலத்தில் போடப்பட்டு முழுவதுமாக கரைக்கப்பட்டது. இதன் பின்னணியில் பெல்ஜிய அரசாங்க சக்திகள் இருந்தன. அமெரிக்க அரசாங்கமும் லுமும்பாவைக் கொல்லப் பல முயற்சிகள் செய்திருந்தது.

சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைக்கப்பட்டாலும், அவரது பல் ஒன்றை, பெல்ஜிய வீரர் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். 2020ஆம் ஆண்டு, லுமும்பாவின் மகள் ஜூலியான லுமும்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க பெல்ஜிய அரசு அதைக் காங்கோவுக்கு அனுப்பி, அவருக்கான கல்லறை மீண்டும் எழுப்பப்பட்டது. 

காங்கோ

காங்கோ உலகின் மிக முக்கியமான தாதுக்களைச் செல்வமாகக் கொண்ட நாடு. செம்பு, கோபால்ட், வைரம், தங்கம், லித்தியம் என இன்றைய உலகின் மிக விலைமதிப்புள்ள தாதுக்களைக் கொண்ட நாடு. இதன் மதிப்பு 24 ட்ரில்லியன் டாலர்கள் என்கிறார்கள். (இந்தியப் பொருளாதார உற்பத்தியின் மதிப்பு 3 ட்ரில்லியன் டாலர்கள்).

இன்று வளர்ந்துவரும் மின் வாகனத்துக்கு மிகவும் முக்கியம் அதன் பேட்டரி. பேட்டரி தயாரிக்க லித்தியம் முக்கியமான தாது. உலகின் மிகப் பெரும் லித்திய இருப்பு காங்கோவில் உள்ளது. இன்று காங்கோ ஒரு பெரும் தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக இருந்திருந்தால், லித்தியம் பேட்டரிகளை உற்பத்தி செய்தே உலகின் செல்வந்த நாடாக மாறியிருக்கும். 

இந்தத் தாதுக்களில் பெரும்பான்மை கட்டாங்கா பகுதியில் உள்ளது. ஆனால், அதன் தலைநகரான லுபும்பாஷியின் விமான நிலையம் காயலான் கடை போல இருந்தது. ஆனால், நகரின் வணிக வளாகங்கள் மிக நவீனமாக உள்ளன. நகரின் தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்து நிலையம் விமான நிலையத்தைவிட நவீனமாக உள்ளது. உலகின் அனைத்து முதலாளித்துவ சக்திகளும், காங்கோவில் உண்மையான ஜனநாயகம் வந்துவிடக் கூடாது என நினைக்கின்றன. 200 ஆண்டுகள் இந்தியாவைக் கொள்ளையடித்த ஆங்கில ஆட்சி நினைவுக்கு வந்தது.

காங்கோ செல்வதற்கு முன்பு, நண்பர்கள் பலரும், அங்கே பாதுகாப்பில்லை. கவனம் எனத் திரும்பத் திரும்ப எச்சரித்தார்கள். கின்ஷாசாவில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்வைத் தாண்டி, நான் எங்கும் பாதுகாப்பின்மை உணர்வை அடையவில்லை. நான் எதிர்கொண்ட ஒவ்வொரு காங்கோலீஸும் மிகவும் நாகரீகமானவராகவும், கண்ணியமானவராகவுமே இருந்தார். ஒருவேளை யாரேனும் வழிமறித்து என் பொருட்களைக் கேட்டு மிரட்டியிருந்தாலும், வருத்தமின்றிக் கொடுத்துவிட்டு வந்திருப்பேன்.

நவீனம் என்றும், நாகரிகம் என்றும், உயர்கல்வி என்றும், மெரிட் என்றும் விதிகளை ஏற்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை நாம் செய்வது நவீன காலனியம் என்னும் உணர்வையே லுபும்பாஷியில் இருந்து கிளம்பும்போது அடைந்தேன்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

உகாண்டா: இடி அமின் தேசத்தில் இட்லி, தோசை!
எத்தியோப்பியா: பாப் மார்லிக்கு சிலை வைத்த நாடு
பக்கிரி பிள்ளையும் உப்புப் பருப்பும்
ருவாண்டா: நிலமெங்கும் ரத்தம்
ருவாண்டா: கல்லறையின் மீதொரு தேசம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1

1

அதிகம் வாசிக்கப்பட்டவை

மின் வாரியம்சார்புநிலைநிர்வாகத் துறைகார்கில்தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகாந்தி பேச்சுகள் தொகுப்புபிரதிக்ஞா யாத்ராபெட்டியோசிறந்த நிர்வாகிநிதிபாலியல்சிறுநீரகக் குழாய்ரஜினி சம்பளம்எதிர்காலத்தை எப்படி உருவாக்குகிறோம் ?வெள்ளரிகார்கே: காங்கிரஸின் புதிய நம்பிக்கைதீ விபத்துஅரசு மருத்துவமனைபக்கிரி பிள்ளையும்இந்துவியம்யோகி ஆதித்யநாத்அரசர்களின் ஆட்சிகம்யூனிஸ்ட்வட இந்திய கோட்டைஐந்து மாநிலத் தேர்தல்கள்அமெரிக்க உறவு மேம்பட இந்திய உழவர்களைப் பலி கொடுப்பமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்மேட்டிமைத்தனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!