கட்டுரை, தொடர், வாழ்வியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

தான்சானியா: பார்க்க வேண்டிய இடங்கள்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
27 Aug 2023, 5:00 am
0

சுற்றுலா என்பது தான்சானியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமான ஒன்று. தேசியப் பொருளாதாரத்தில் 11% சுற்றுலா மூலம் வருகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைத் தருகிறது. தான்சானியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.

ஸெரெங்கெட்டி 

சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பட்டியலில் தவறாது இடம்பெறும் பெயர் ஸெரெங்கெட்டி. 1951ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் தலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

அதிக மக்கள் நடமாட்டமில்லாமல் இருந்த இந்த வனப்பகுதியில், 19ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மஸாய் எனப்படும் ஆயர்கள் (மாடு மேய்ப்பவர்கள்) வந்து குடியேறத் தொடங்கினார்கள் எனச் சொல்லப்படுகிறது.  அதற்கும் முன்பு, மனித இனத்தின் முன்னோடிகளான ஆஸ்ட்ரலோபிதெகஸ் ஆஃபரென்ஸி (Australopithecus afarensi) என்பவர்கள் இங்கே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே வந்து குடியேறிய மஸாய் இன மக்கள், இந்த இடத்துக்கு ஸெரெங்கெட்டி எனப் பெயரிட்டார்கள். ஸெரெங்கெட்டி என்றால், எல்லையிலாப் புல்வெளி என்று அர்த்தம். 

ஸெரெங்கெட்டி ‘சவானா’ என்னும் வனமாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகைக் காடுகளில் பெரும்பாலும் புல்வெளிகளினூடே ஆங்காங்கே மரங்கள் இருக்கும். கிட்டத்தட்ட கோயமுத்தூர் முதல் திருப்பூர், காங்கேயம், பல்லடம், தாராபுரம் திண்டுக்கல் வரையிலான நிலப்பரப்பில் மக்களே இல்லாமல் இருந்தால், அது சவானா போல இருக்கும்.

ஸெரெங்கெட்டி – மழையில்லாக் காலத்தில்

தொடக்கத்தில் 2,500 சதுர கிலோ மீட்டர் அளவுக்கே இருந்த இந்தப் பூங்கா, பின்னர் விரிவுபடுத்தப்பட்டு, இன்று அதன் பரப்பளவு 30 ஆயிரம் சதுர கிலோமீட்டராக விரிந்திருக்கிறது. இதன் 70% பரப்பளவு தான்சானியாவிலும், 30% பரப்பளவு கென்யாவிலும் உள்ளது. தான்சானியப் பகுதி ஸெரெங்கெட்டி என்றும், கென்யப் பகுதி மஸாய் மாரா என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவின் குறுக்கே மாரா என்னும் நதி ஓடுகிறது. 

ஸெரெங்கெட்டி மழைக்காலத்தில்

இந்தப் பூங்காவில் கிட்டத்தட்ட 15-20 லட்சம் மான்கள் வசிக்கின்றன. இவற்றில் முக்கியமானது வைல்ட் பீஸ்ட் (Wilde beast) என அழைக்கப்படுகிறது. முகம் மாடு போலவே இருக்கும். இதற்கு நான் மாடுமுக மான் எனப் பெயர் வைத்திருக்கிறேன். இத்துடன் வேறு சில வகை மான்களும் உள்ளன. இவைதான் ஸெரெங்கெட்டியின் பெரும்பான்மை.

இப்படி கிட்டத்தட்ட 3-4 ஆயிரம் சிங்கங்களும், 1,000க்கும் அதிகமான சிவிங்கிப் புலிகளும், 500க்கும் அதிகமான சிறுத்தைகளும், கழுதைப் புலிகளும் வசிக்கின்றன. இதை ஊனுண்ணிகளின் சொர்க்கம் எனச் சொல்கிறார்கள். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இவை போக, 6-7 ஆயிரம் யானைகள் இங்கே வசிக்கின்றன. ஒருகாலத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் வசித்தன. இந்தியா / சீனா போன்ற தந்த நுகர்வு வெறி பிடித்த நாடுகளினால், 19 ஆம் நூற்றாண்டில் இங்கே யானைகளே இல்லாமலாகின. தற்போது யானைத் தந்த வணிகம் உலகின் முக்கிய நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டதால், யானைகள் மீண்டும் பெருகியுள்ளன. இவை போக, காட்டெருமைகள், வாட்ஹாக் (லயன் கிங் படத்தில் வரும் பும்பா) போன்ற விலங்குகளும் உண்டு.

இதில் வைல்ட் பீஸ்ட் என்னும் மாடுமுக மான்கள், கடிகாரச் சுற்றில், ஜூன் – ஜூலை மாதங்களில், கென்யாவின் மஸாய் மாராப் பகுதியில் இருந்தது கிளம்பி, மாரா ஆற்றைக் கடந்து, தான்சானியாவின் ஸெரெங்கெட்டிப் பகுதிக்கு வந்து அங்கே எல்லையிலாப் புல்வெளிகளில் கிடைக்கும் உணவை உண்டு, குட்டிகள் ஈன்று மீண்டும் செப்டம்பர் வாக்கில் அடர்ந்த காடுகள் உள்ள மசாய் மாராவுக்குத் திரும்புகின்றன. இந்த புலம்பெயர்வின் தூரம் கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டர்கள். இந்தப் புலம்பெயர்வின்போது மாரா நதியைக் கடக்கையில், அங்குள்ள முதலைகளால் அவை வேட்டையாடப்படுகின்றன. ஆற்றைத் தாண்டினால், ஆங்காங்கே இருக்கும் சிங்கம், சிவிங்கிப் புலி, சிறுத்தை, கழுதைப் புலி போன்றவற்றினால் வேட்டையாடப்படுகின்றன.

பூச்சிக்கடிக்குப் பயந்து மரத்தின் மீது ஓய்வெடுக்கும் ஸெரெங்கெட்டி சிங்கங்கள்

வேட்டையாடும் விலங்குகளில் இருந்து தன்னையும் தன் குட்டிகளையும் காத்துக்கொள்ள மாடுமுக மான்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொண்டிருப்பது படிக்க வியப்பாக இருக்கும். பொதுவாக, வேட்டையாடும் விலங்குகள், காலை நேரத்தில் வேட்டையாடாது. மாடுமுக மான்கள் பொதுவாக இந்த நேரத்தில்தான் குட்டிகளை ஈனும்.  பெண் மான்கள் மந்தையின் நடுவில்தான் குட்டிகளை ஈனும். பிறந்த குட்டிகள் சில நிமிடங்களில் எழுந்து நின்றுவிடும். சில மணி நேரத்தில், தாயின் பாதி வேகம் ஓட முடியும். சில நாட்களில், எல்லா மான்களைப் போல வேகமாக ஒடும் திறனை அடைந்துவிடும்.

வைல்ட் பீஸ்ட் (wild Beast) – மாடுமுக மான்

இந்த மாடுமுக மான்களின் மந்தைகளை நேரில் பார்ப்பது ஒரு பேரனுனபவம். சில மந்தைகள் 20-25 கிலோ மீட்டர் நீளம் வரை இருக்கும் என்கிறார்கள். இந்த மந்தைகள் ஓடத் தொடங்கி, இடையில் மாட்டிக்கொண்டால், எந்த விலங்கும் சட்னியாகி விடும். (லயன் கிங்-2 படத்தில், நாயகன் சிம்பாவின் தந்தை முஃபாஸா இப்படி மாட்டிக்கொண்டு இறந்துபோகும்).

பெருந்திரளாக ஆற்றின் முன் கூடும் மாடுமுக மான்கள், தயங்கித் தயங்கி நிற்கும். ஒரு அளவுக்கு அதிகமாக மந்தை பெரிதானவுடன், ஒரு தங்கக் கணத்தில், முதல் மாடுமுக மான் ஆற்றில் குதிக்கும். அதைப் பார்ப்பது ஒரு மயிர்சிலிர்க்க வைக்கும் அனுபவம் என்கிறார்கள். எனக்கு வாய்க்கவில்லை. 

சொல்ல மறந்துட்டேன். சிங்கத்தை ஸ்வாஹிலி மொழியில் ‘சிம்பா’ என அழைக்கிறார்கள். சிங்கம் என்னும் சொல்லின் வேர்ச்சொல் இதுவாக இருக்கக்கூடும். சிங்கம் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா புலம்பெயர்ந்திருக்கக்கூடும் என்னும் ஒரு யூகத்தை கானியலாளர் வால்மீகி தாப்பர் முன்வைக்கிறார்.

இந்த வேட்டைகளைக் காண உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் வந்து தங்க ஸெரெங்கெட்டியின் உள்ளேயே நல்ல வசதிகள் கொண்ட விடுதிகள் உள்ளன. சீஸனில், இங்கே வாடகை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும். பட்ஜெட் ஹோட்டல்களும் உண்டு. ஆனாலும், நாளுக்கு 10 ஆயிரத்துக்குக் குறைவாக விடுதிகள் கிடைப்பது கடினம்.

தான்சானியாவில் உள்ள விடுதிகள் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளுடன் இயங்குகின்றன. விடுதிகளின் கழிவுகள், பூங்காவின் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுவிடுகின்றன.

இவ்வளவு செலவு பிடிக்கும் ஒன்றாக இருந்தாலும், உலகெங்கும் இருந்து வருடம் 4-5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். சுற்றுலா என்றால் காத தூரம் ஓடும் நானும், 2016ஆம் ஆண்டு, மே மாதம் 3 நாட்கள் குடும்பத்துடன் ஸெரெங்கெட்டி சென்று வந்தேன். அது சீஸனல்ல என்பதால் ஆளுக்கு 90 ஆயிரம் செலவாச்சு – வாகனம், தங்குமிடம், உணவு உள்பட.

இப்போதும் என்னைக் கேட்டால், ஸெரெங்கெட்டியைப் பற்றிய அற்புதமான டாக்குமெண்டரிகள் வந்துள்ளன. வீட்டில் அமர்ந்து கொண்டு ஜாலியாகப் பார்ப்பது மேல் என்றுதான் சொல்வேன். ஆனால், ஸெரெங்கெட்டியில் செலவுசெய்த அந்த மூன்று நாட்கள் மிகப் பெரும் அனுபவம் என்பதை மறுப்பதற்கில்லை.

நாங்கள் போனபோது, முதல் நாள் மான்கள் மட்டுமே காணக்கிடைத்தன. சிங்கங்களைக் காணவில்லை. ஆனால், அடுத்த நாள், எங்கள் வாகன ஓட்டிக்கு வாக்கி - டாக்கியில் வேட்டை பற்றிய செய்தி வந்தது. ஸெரெங்க்கெட்டியில் இயங்கும் வாகனங்கள், விலங்கு நடமாட்டம் பற்றிய செய்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது இயல்பாக உள்ளது.

நாங்கள் அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, பெண் சிங்கம் ஒரு மாடுமுக மானை வேட்டையாடி வீழ்த்திவிட்டு, தன் குட்டிகளையும், வீட்டுக்காரரையும் அழைத்து வரச் சென்றிருந்தது. குட்டிகளுடன் வந்துவிட்ட தாய்ச் சிங்கம், ஆண் சிங்கம் வரும்வரை காத்திருந்தது. கொஞ்சம் லேட்டாக வந்த ஆண் சிங்கம் மானுக்கு அருகில் வராமல், தொலைவிலேயே படுத்துக்கொண்டது (டாஸ்மாக்குக்குப் போய் வந்திருக்குமோ?). கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிப் பாத்த பெண் சிங்கம், போடா கூந்தலழகா என மானை சாப்பிடத் தொடங்கிவிட்டது. குட்டிகளும் தத்தக்கா பித்தக்கா எனக் கடித்து முகம் முழுதும் மான் ரத்தத்தை பூசிக்கொண்டன. ரங்கோலி விளையாடும் பிள்ளைகள்போல. சாப்பிட்டு முடித்த அம்மா சிங்கம், குட்டிகளின் முகத்தில் இருந்த ரத்தத்தை நாக்கினால் துடைத்துவிட்டது. (ஒழுங்கா சாப்பிடாம, மூஞ்சியெல்லாம் இளுக்கிக்கொண்டு என சிங்க மொழியில் திட்டியிருக்கும்!)

விலங்குகள் சாப்பிடுவதைப் பார்க்க உலகெங்கும் இருந்து ஃப்ளைட் பிடித்துக்கொண்டுவந்து வேடிக்கை பார்க்கும் மனித விசித்திரத்தை எண்ணினால், சிரிப்புதான் வரும்.

ஸெரெங்கெட்டி புல்வெளி, கடல் மட்டத்தில் இருந்தது 1,600 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. இது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலம் பெயர்ந்து மோதியதில் உருவான உயர் தளத்தில் உள்ளது. இந்த மோதலில் உருவான ஓல் டொய்ன்யோ லேங்கை (Ol Doinyo Lengai) என்னும் எரிமலை ஸெரெங்கெட்டி பூங்காவினுள் உள்ளது. இதற்கு மஸாய் மொழியில், ‘கடவுளின் மலை’, என அர்த்தம்.

ஸெரெங்கெட்டி தேசியப் பூங்காவினுள் ஸ்ரெங்கெட்டி கானுயிர் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஃப்ராங்ஃபர்ட் உயிரியல் பூங்கா போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஸெரெங்கெட்டி சூழல் மற்றும் கானுயிர் தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்துவருகிறார்கள். இந்தப் பூங்காவினுள்ளேயே 30-40 ஆண்டுகள் வாழ்ந்து ஆராய்ச்சி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் உண்டு. அது ஒரு உலகம். அங்கே சில காலம் தங்கிவிடால், அது அப்படியே தங்களை ஈர்த்துக்கொள்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பலரும் சொல்கிறார்கள்

ங்கொரொங்கொரோ

ஸெரெங்கெட்டியை ஒட்டியே அமைந்திருக்கும் இன்னொரு தேசியப்பூங்கா, ‘ங்கொரங்கொரொ’, என அழைக்கப்படுகிறது.  ஸெரெங்கெட்டிக்கு புலம்பெயர்ந்த மஸாய்கள், பின்னர் ஸெரெங்கெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு, இந்தப் பகுதிக்கு குடி வந்ததாகச் சொல்லப்படுகிறது.  அவர்கள் மாடுகளில் கட்டப்பட்ட மணி ’ங்கொர, ங்கொர’ எனச் சத்தமிட்டதால் இந்தப் பெயர் வந்தது என ஒரு கதை உலவுகிறது. எனக்கு சுத்தமாப் புரியல. காங்கேயம், வெள்ள கோவில் பகுதிகளில், மேய்ச்சல் புல்வெளி நிலத்தை, ‘கொரங்காடு’ எனச் சொல்வார்கள். அதுதான் நினைவுக்கு வந்தது.

ஒரு மிகப் பெரும் எரிமலை வெடித்து, அதன் லாவா, அந்த எரிமலை மீதே விழுந்ததால் தூர்ந்துபோன எரிமலையின் வாய்ப் பகுதிதான் ’ங்கொரங்கொரோ’. சுற்றிலும் எரிமலையின் விளிம்புகள் உயர்ந்த சுவர் போல இருக்க, தூர்ந்துபோன வாய்ப்பகுதி, 300-400 அடி ஆழத்தில் ஒரு பரந்த மைதானம்போல இருக்கிறது. இந்த மைதானத்தின் விட்டம் 32 கிலோ மீட்டர்.

 

ங்கொரொங்கொரொவில் என்ன விஷேஷம் என்றால், இங்கே மொத்தப் பள்ளத்தாக்கும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால், எல்லா விலங்குகளும் அருகருகில் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக சிங்கமும், மான்களும், காட்டெருமைகளும், யானைகளும் நம் கண்ணுக்கு முன்னே கொஞ்ச கொஞ்ச இடைவெளிகளில் வசிக்கின்றன. எடுத்துக்காட்டாக, இந்தக் காட்டின் எல்லையில் சிங்கக் குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு 100 மீட்டர் தொலைவில் மான்கள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அது ஏன் என அறிந்துகொள்ள முயன்றபோது, விடை கிடைத்தது. சிங்கத்தினால் விரைவாக ஓட முடியாது. 30-40 மீட்டர் தொலைவுக்கு மேல் இரையைத் துரத்த முடியாது.  எனவேதான், மறைந்திருந்து தாக்குகிறது.

நாங்கள் அங்கே சென்றிருந்தபோது, 4 சிங்கங்கள் ஒரு காட்டெருமையைச் சுற்றித் தாக்க முயற்சி செய்துகொண்டிருந்தன. கிட்டத்தட்ட 20-25 நிமிடம் முற்றுகைக்குப் பின்னர் காட்டெருமை மிகவும் தந்திரமாகப் பின் வாங்கிவிட சிங்கங்கள் ஏமாற்றத்துடன் திரும்பின.

இதுபோன்ற கானுலகில், சிங்கம் போன்ற ஊனுண்ணிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானது என்கிறார்கள். அதுவும் சிங்கங்கள், ஒரு எல்லைக்குள் வசிப்பவை. இன்னொரு சிங்கத்தின் எல்லைக்குள் நுழைந்துவிட்டால், அது பெரும்பாலும் உயிரிழப்பில் முடியும். அதேபோல, ஒரு புதிய வலிய சிங்கம் வந்துவிட்டால், பெண் சிங்கத்தின் குட்டிகள் சிறியதாக இருந்தால், அவற்றைக் கொன்றுவிடும். இதுபோன்ற விஷயங்களால் ஏற்படும் மரணமே அதிகம் என்கிறார்கள்.

சிறுத்தை போன்ற விலங்குகளின் பிரச்சினைகள் வேறு. அவை வேட்டையாடும் மான்களை, கொஞ்சம் அசந்தால், கழுதைப் புலிகள் திரண்டுவந்து மிரட்டித் திருடிக் கொண்டுசென்றுவிடும். அதனால், சிறுத்தைகள், தங்களது வேட்டையில் மாட்டிக்கொள்ளும் மான்களை மரத்தின் மீது கொண்டுசென்று உண்கின்றன.

ஒப்பீட்டில், மான் போன்ற தாவர உண்ணிகளுக்கு உணவு கிடைப்பது எளிது. தலையைக் குணிந்தால் உணவு. ஆனால், ஊனுண்ணிகளுக்கு, வடிவேலு பாஷையில் சொல்வதெனில், உணவை மிகவும் தீவிரமாகப் ப்ளான் பண்ணினாத்தான் கிடைக்கும். இயற்கைதான் எவ்வளவு விசித்திரமானது.

தான்சானியாவின் தேசியப் பூங்காக்கள்

நாட்டின் கானுயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த நைரேரே, தான்சானிய கானுயிர்ப் பூங்காக்களுக்கென்றே ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். தான்சானியாவில் இன்று மொத்தம் 22 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 1 லட்சம் சதுரக் கிலோ மீட்டர்கள். (தமிழ்நாட்டின் பரப்பளவு 1.3 லட்சம் சதுர கிலோமீட்டர்கள்). இதில் மிகப் பெரியது லிண்டிப் பகுதியில் நைரேரேவின் பெயரில் அமைந்துள்ள பூங்கா. இதன் பரப்பளவு 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள்.

ஒரு கானுயிர் ஆர்வலர் தன் வாழ்நாள் முழுதும் ஆராய்ச்சி செய்யப் போதுமான தேசியப் பூங்காக்கள் தான்சானியாவில் உள்ளன. கானுயிர் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம் எனத் தான்சானியாவை அழைக்கலாம்.

சிம்பன்சிகளின் தேவதை!

கானுயிர் ஆர்வலர்கள் பலரும் அந்தக் காணொளியைக் கண்டிருக்கக்கூடும். கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிம்பன்சியைக் காட்டுக்குள் சில வன உதவியாளர்கள் கொண்டுவருகிறார்கள். உடன் இரண்டு பெண் ஆராய்ச்சியாளர்களும் வருகிறார்கள். உடல் நலமில்லாத அந்த சிம்பன்சியை பிடித்துவந்து சிகிச்சை அளித்து, அது குணமான உடன், அதை மீண்டும் காட்டுக்குள் கொண்டுவிடும் முயற்சி. 

கூண்டு திறக்கப்பட்டவுடன், ஆர்வத்துடன் சிம்பன்சி வெளியே வந்து, காட்டை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. கொஞ்ச தூரம் சென்றவுடன், எதையோ நினைத்துக்கொண்டதுபோல, மீண்டும் கூண்டை நோக்கிவருகிறது. கூண்டின் மீது ஏறி, அதன் அருகில் நிற்கும் பெண் ஆராய்ச்சியாளரை ஆரத் தழுவி தன் நன்றியைத் தெரிவிக்கிறது. பின்னர், பிரிய மனமின்றி அந்த சிம்பன்சி பிரிந்து செல்கிறது. மிகக் குறுகிய காலத்திலேயே மனிதருக்கும் சிம்பன்சிக்கும் இப்படி ஒரு உறவு ஏற்பட முடியுமா என அனைவரும் வியக்கிறோம். அந்த ஆராய்ச்சியாளர்தான் ஜேன் குடால்.

ஜேன் குடால், 1934ஆம் ஆண்டு, மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ஒரு வணிகர். தாயார் ஒரு நாவலாசிரியர்.  சிறு வயதில், ஜேனின் தந்தை அவருக்கு, டெட்டி கரடி பொம்மைக்குப் பதிலாக, ஒரு சிம்பன்சி பொம்மையைப் பரிசளித்தார். ஜேனின் ஆர்வம் அதனால் தூண்டப்பட்டது.

ஜேன் குடால்

1957ஆம் ஆண்டு, கென்யாவில் உள்ள உயிரியல் ஆராய்ச்சியாளர் லூயி லிக்கேவுக்கு உதவியாளராகச் சேர்ந்தார். அவர், ஜேன் குடாலை சிம்பன்சி ஆராய்ச்சியை நோக்கித் திருப்பினார். அவரது வழிகாட்டுதலில், கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் முனைவர் பெற்ற ஜேன் குடால், 1960ஆம் ஆண்டு முதல் அடுத்த 50 ஆண்டுகளை சிம்பன்சிகளின் ஆராய்ச்சிக்காகச் செலவிட்டார்.

தான்சானியாவின் கோம்பே தேசியப் பூங்காவில் தன் ஆராய்ச்சி சாலையை ஏற்படுத்திய ஜேன் குடால், சிம்பன்சிகளைப் பற்றிய பல முக்கியமான அறிதல்களை முன்வைத்தார். சிம்பன்சிகள் சிறு சிறு கருவிகளைச் செய்ய வல்லவை, அவை ஈசல், கரையான்கள் போன்ற சிறுசிறு பூச்சிகளை உண்பவை என்பதே அவை. அது மட்டுமல்ல, தன்னிலும் சிறிய குரங்குகளை அடித்துக் கொன்று தின்ன வல்லவையும்கூட என்பதும் அவர் வழியே உலகுக்குத் தெரியவந்தது. சில சமயங்களில், பெண் சிம்பன்சிகள் ஒன்றையொன்று கொல்லவும் செய்கின்றன என்பது போன்ற பல முக்கியமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

கோம்பே தேசியப் பூங்காவில் உள்ள பல சிம்பன்சிக் குடும்பங்களுடன் பழகி, அவற்றுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். சிம்பன்சிகள் ஒன்றுடன் ஒன்று பேசும் முறைகளை ஆராய்ந்து, ஓரளவு அவைகளுடன் உரையாடவும் அவரால் முடிந்தது. 1977ஆம் ஆண்டு, ஜேன் குடால் ஆராய்ச்சி நிறுவனம் என் தன் பெயரிலேயே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை தான்சானியாவில் தொடங்கினார்.

இன்று 20க்கும் அதிகமான நாடுகளில் சிம்பன்சிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது. உலகின் மிகவும் மதிக்கப்படும் ஆய்வு நிறுவனமாக இது விளங்கிவருகிறது. ஜேன் குடால், தான்சானியாவின் பெருமிதம்.

(தொடரும்...)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தான்சானியா: அரசியலும், புவியியலும்
தான்சானியாவின் வணிக அமைப்பு
தான்சானியா: வரி நிர்வாகத்தின் முன்னோடி
தான்சானியாவை அண்மையில் அறிதல்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2

1





லட்சியவாதிகாந்தி கொலை வழக்குவ.ரங்காசாரி அருஞ்சொல்வர்ணம்ராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?மாநில வருவாய்சாவர்க்கர் சிறை அனுபவங்கள்இந்திசமூக ஒற்றுமைபழங்குடி கிராமம்போபால்தெற்காசிய வம்சாவளிஇஸ்லாமியக் குடியரசுவிற்பனைஎன்.ஐ.ஏ. அருஞ்சொல் தலையங்கம்அழிவுக்கே விழிஞ்சம் திட்டம்!தொடர்பட்ஜெட் அலசல்சர்வாதிகார நாடுஎழுபத்தைந்து ஆண்டுகள்ஜெயலலிதாஅசோக்வர்த்தன் ஷெட்டி கட்டுரைமதவியம்மூக்குஜிஎஸ்டிபிபெண்களின் அட்ராசிட்டிவடிவமைப்புநடாலி டியாஸ்சாதி உளவியல்தகவல்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!