கட்டுரை, அரசியல், சுற்றுச்சூழல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?

ஷிவ் சஹாய் சிங்
07 Jul 2024, 5:00 am
0

சிக்கிமில் உற்பத்தியாகும் டீஸ்டா நதி இந்திய எல்லைக்குள் ஓடி பிறகு வங்கதேசத்தை அடைகிறது. இந்த நதி நீரைப் பகிர்வது, இதில் அணைகள் கட்டுவது போன்றவை சர்வதேச நதி நீர்ப் பகிர்வுச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். வங்கதேசம் இந்த நதியைக் குடிநீருக்கும் பாசனத்துக்கும் பெரிதும் சார்ந்திருப்பதாலும் இதில் ஏற்படும் நீர் வறட்சி அல்லது வெள்ளப் பெருக்கு வெகுவாக பாதிப்பதாலும் நதி நீர்ப் பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை விரைவாக இறுதிசெய்துகொள்ள விரும்புகிறது.

இதே காரணத்துக்காக, மேற்கு வங்க மாநில அரசு, இந்த ஒப்பந்தம் தொடர்பாகத் தங்களுடைய கருத்தை இந்திய (ஒன்றிய) அரசு தெரிந்து அதன்படி நடப்பது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேற்கு வங்கத்தின் - குறிப்பாக முதல்வர் மம்தா பானர்ஜியின் - தொடர் ஆட்சேபத்தால் இறுதித் தீர்வு தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வங்கதேசத்துடன் நெருக்கமான உறவுகொள்ள விரும்பும் சீனம், வங்கதேச எல்லைக்குள் டீஸ்டா நதியைத் தூர் வாரி ஆழப்படுத்தவும் நீர்நிலை பராமரிப்பில் உதவவும் முன்வந்திருக்கிறது. இது இந்திய நலனுக்கு ஆபத்தாக முடியும் என்பதால் வங்கதேசத்துடன் சுமுகமாக இதைத் தீர்த்துக்கொள்ள ஒன்றிய அரசு முயல்கிறது. இருப்பினும் மேற்கு வங்க மாநிலத்தின் நலனை இதில் விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாக இருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த மாதம் (ஜூன்) இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்துப் பேசினார். “டீஸ்டா நதியை காப்பது, பராமரிப்பது தொடர்பாக இந்தியாவிலிருந்து தண்ணீர் தொழில்நுட்ப நிபுணர் குழு வங்கதேசத்துக்குச் சென்று ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 22இல் அறிவித்தார். 

இதையடுத்து இருதரப்பு உடன்பாட்டில் டீஸ்டா நதி விவகாரம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பிலும் அதிகமானது. கடந்த பத்தாண்டுகளாக மேற்கு வங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த உடன்பாடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காவிரிப் பங்கீட்டை உறுதிசெய்ய ஒரு வழி

இரா.செல்வம் 17 Oct 2023

இந்திய நிலை

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, “இரு நாடுகளும் பேசியது டீஸ்டா நதியைப் பகிர்ந்துகொள்வது பற்றியல்ல, நீர் அளவு குறையாமல் பராமரிப்பது, நீர்ப் பெருக்கை அதிகரிக்கும் வழிகளை ஆராய்வது பற்றித்தான்” என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா, அதற்கு விளக்கம் அளித்தார். தங்களுடைய கருத்தைக் கேட்காமல் வங்கதேசத்துடன் டீஸ்டா நதி நீர் பகிர்வு தொடர்பாக எந்த உடன்பாட்டையும் அரசு செய்யக் கூடாது என்று ஜூன் 4இல் முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறார்.

மேற்கு வங்கம் எதிர்ப்பது ஏன்?  

டீஸ்டா நதி நீரை (அதிகம்) பகிர்ந்துகொண்டால் வடக்கு வங்காளத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் மம்தா. வங்கதேசத்துடன் டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்துகொள்வதை மம்தா எதிர்ப்பது இது முதல் முறையல்ல. 

“என்னுடைய முடிவால் வங்கதேசம் மனவேதனை அடைவதை உணர்கிறேன், என்னால் நீர்ப் பெருக்கை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றால் வங்கதேசத்துக்கு உதவத் தயாராக இருக்கிறேன்” என்று 2019 ஜூலையில் வெளிப்படையாகவே அவர் அறிவித்தார். “டோர்சா, மான்ஷாய், சங்கோஷ், தன்சாய் ஆகிய ஆறுகளின் நீரை வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்ளத் தயார், டீஸ்டா ஆற்று நீர் அப்படியல்ல” என்று 2017இல் கூறியிருக்கிறார்.

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குள் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 54 ஆறுகள் பாய்கின்றன. அத்தனை ஆறுகளின் தண்ணீரைப் பகிர்வதும் பிரச்சினையாகத்தான் இருக்கின்றன. கங்கை நதி மீது ஃபராக்கா என்ற இடத்தில் மிகப் பெரிய தடுப்பு அணையை இந்திய அரசு கட்டிய பிறகு, கங்கை நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக இந்தியாவும் வங்கதேசமும் 1996இல் உடன்படிக்கைச் செய்துகொண்டன. 

டீஸ்டா நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக 2010இல் பேச்சுகள் தொடங்கின. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக ஆட்சியில் தொடர்ந்தது. டீஸ்டா நதிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் கிட்டத்தட்ட ஒப்பந்தம் இறுதியாகிவிட்டது. அதை ஏற்க மறுத்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துவிட்டார், அதிலிருந்து அது முடிவுசெய்யப்படாமலேயே தொடர்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?

தங்க.ஜெயராமன் 24 Mar 2023

2011இல் பேசப்பட்டது என்ன?

டீஸ்டா நதியின் 42.5% நீரை இந்தியாவும், 37.5% நீரை வங்கதேசமும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் பெற வேண்டும் என்று 2011இல் பேசி முடிவுசெய்யப்பட்டது.

பிரம்மபுத்ரா நதியின் கிளை ஆறான டீஸ்டா நதி, சிக்கிம் மாநிலத்தின் வடக்கில் தரைமட்டத்திலிருந்து 5,280 மீட்டர் உயரத்தில் மலையில் உள்ள சோ லாமோ ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது. சிக்கிம் மாநிலத்துக்குள் 150 கிலோ மீட்டரும் மேற்கு வங்கத்தில் 123 கிலோ மீட்டரும் ஓடி, கூச் பிஹார் மாவட்டத்தின் மேக்லிகுஞ்ச் என்ற இடத்தில் வங்கதேச எல்லையை அடைகிறது. பிறகு வங்கதேசத்தில் 140 கிலோ மீட்டர் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இன்னொரு நாட்டிலிருந்து வங்கதேசத்துக்குள் பாயும் நான்காவது மிகப் பெரிய ஆறு டீஸ்டா. வங்கதேசத்தில் 2,750 சதுர கிலோ மீட்டர்கள் அதன் வெள்ள வடிநிலப் பரப்பாகும். அந்த ஆறின் 83% நீர்ப்பிடிப்பு இந்தியாவிலும் 17% வங்கதேசத்திலும் உள்ளன. வங்கதேச மக்கள்தொகையில் 8.5% பேருடைய வாழ்வாதாரத்துக்கும் உணவு தானிய உற்பத்தியில் 14% அளவுக்கும் டீஸ்டாதான் பேருதவி புரிகிறது.

இதில் அரசியல் நோக்கம் என்ன?

இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகொண்டும் டீஸ்டா நதி நீர்ப் பகிர்வு உடன்படிக்கைச் செய்துகொள்ள முடியாமல் இருப்பது ஏன், இந்திய அரசு வங்கதேச நலனை இரண்டாம் பட்சமாகத்தான் கருதுகிறது என்று, வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக் (முஜிபுர் ரெஹ்மான் தொடங்கிய கட்சி) கட்சியை எதிர்க்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன.

டீஸ்டா நதி நீர் ஒப்பந்தம் இறுதியாகாமல் இருப்பதால் சிக்கிமில் நீர் மின் உற்பத்திக்கு பல அணைகளைக் கட்டும் திட்டங்களும் மேற்கு வங்கத்தின் கசோல்டாபா என்ற இடத்தில் டீஸ்டா தடுப்பணை திட்டமும் நிறைவேறாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றன. இதனால் மழைக் காலங்களில் டீஸ்டா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வங்கதேசத்துக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் வெள்ளமும், கோடை காலங்களில் வறட்சியும் ஏற்பட்டு இருவித பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. 

சீனம் அறிவிப்பு

டீஸ்டா நதியை தூர் வாரி – ஆழப்படுத்தி, கரையோரங்களை பலப்படுத்தி, மிகை நீரைத் தேக்கிவைக்க அணைகளையும் கட்டித் தருகிறோம் என்று 2020இல் சீனம் வெளிப்படையாகவே வங்கதேசத்திடம் தெரிவித்திருக்கிறது. கடந்த 4 வருடங்களாக சீனத்துக்கு வங்கதேசம் இறுதியாக எந்த பதிலையும் கூறாமல் தள்ளிப்போட்டுக்கொண்டேவருகிறது. டீஸ்டா நதிநீர்ப் பராமரிப்பு, மேலாண்மையை மேற்கொள்வது தொடர்பாக நிபுணர் குழுவை அனுப்புகிறோம் என்று இந்தியா கூறியிருப்பதை வரவேற்பதாக, டாக்கா திரும்பிய பிரதமர் ஷேக் ஹசீனா கூறியிருக்கிறார்.

சிக்கிமில் அடுத்தடுத்து பல நீர் மின்திட்ட தடுப்பணைகளைக் கட்டியும் அதற்காக ஏராளமான மரங்களை வெட்டியும் திட்டங்களை நிறைவேற்றினால் டீஸ்டா நதியில் நீர்ப்பெருக்குக் குறைந்துவிடும், அது பருவநிலையிலும் மாறுதல் ஏற்படுத்திவிடும் என்றும் மம்தா பானர்ஜி ஆட்சேபிக்கிறார். வங்கதேசத்துடன் நதிநீர்ப் பகிர்வு தொடர்பாகப் பேசிய போதிலும் டீஸ்டா நதியை அது முன்னர் இருந்த நிலைக்கு மீட்க இந்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

சூழலியலாளர்கள் கவலை

சிக்கிமின் நீர்மின் நிலையங்களை அமைப்பதால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும் என்று பருவநிலை மாறுதல்கள் தொடர்பாக கவலைப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2023இல் இமயமலையில் மிகப் பெரிய பனிப்பாறை உருகி உடைந்து ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கால் டீஸ்டா நதி மீதான மூன்றாவது புனல்மின் நிலைய அணை உடைந்து நாசமானது.

இரு நாடுகளுக்கு இடையிலான நதி நீரை எப்படிப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1966இல் இயற்றப்பட்ட ஹெல்சிங்கி நதிநீர்ப் பகிர்வு விதிகள் வழிகாட்டுகின்றன. இந்திய நதிகள் தொடர்பாக பிற நாடுகளுடன் ஒன்றிய அரசு உடன்படிக்கைச் செய்துகொள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 253வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

கங்கை பற்றிய பேச்சு ஏன்?

வங்கதேச அரசுடன் செய்துகொள்ளப்பட்ட கங்கை நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2026இல் புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கிறது. 

“வங்கதேசத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்குப் பிறகு கங்கை நதியின் வடிவம், பாயும் பரப்பு, ஆழம், மீனளம், நீர்வரத்து ஆகிய அனைத்தும் இப்போது வெகுவாக மாறிவிட்டது. நதிக்கரையில் ஏற்பட்ட அரிப்புகளாலும் இந்த மாற்றங்களாலும் நதியில் கலக்கும் மாசுகளாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஏராளமான மக்கள் வாழ்வாதாரம் இழந்து வசிப்பிடங்களை விட்டும் வெளியேறிவிட்டனர். ஹூக்ளி பகுதியில் வண்டல் மண் படிவது குறைந்துவிட்டதால் சுந்தரவனக் காடுகளில் கங்கைக்கு ஊட்டம் குறைந்துவிட்டது” என்று கங்கை நதி நீர்ப் பகிர்வு தொடர்பாகவும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.

© தி இந்து

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காவிரிப் பங்கீட்டை உறுதிசெய்ய ஒரு வழி
காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?
இரு நாடுகள் கொள்கைக்குப் புத்துயிர்?
வங்கதேசத்தின் ஐம்பதாண்டு சாதனை எப்படி, எதனால்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

2


கட்டுரைசமஸ் ஜீவாmultiple taxation policiesரேணு கோஹ்லி கட்டுரைவேலைவாய்ப்பு குறைவுமூன்று தேர்தல் முடிவுகளும் சொல்வது என்ன?ஸ்பைவேர்அசோக் கெலாட் அருஞ்சொல்சில ஊகங்கள்குஹாஇந்திய வணிகம்ராமர் கோயில்கோபாலகிருஷ்ண காந்தி கட்டுரைdawnஏழைகள் பங்கேற்புதில்லிதொகுதிவருவாய் புலனாய்வு இயக்குநரகம்இழிவுதொழில் மற்றும் சுகாதாரம்சம்பளம் குறைவா?இடதுசாரிஎம்.ஜி.ராதாகிருஷ்ணன் கட்டுரைகட்டிட விதிமுறைகள்கிறிஸ்தவம்பஞ்சாங்கக் கணிப்புஅருஞ்சொல்லுக்கு வயது இரண்டுசைபர்கலங்கள்உத்தாலகர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!