கட்டுரை, பேட்டி, தொடர், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

தான்சானியா: வரி நிர்வாகத்தின் முன்னோடி

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
11 Jun 2023, 5:00 am
1

ன் பணியில் மூழ்குவதன் இறுதிப் பகுதி சில்லறை விற்பனை அமைப்பைப் புரிந்துகொள்வது. தான்சானியாவில் உள்ள 12 பெருநகரங்களில் எங்களுக்குக் கிளைகள் உள்ளன. டார் எஸ் ஸலாமில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்கள், இந்தக் கிளைகளில் உள்ள கிட்டங்கிகளுக்கு அனுப்பப்படும். 

இந்தக் கிளைகளின் ஒரே பணி, நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை லாரிகள் / வேன்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்துவருவதே. ஒவ்வொரு கிளையிலும், அந்த ஊர் வணிகத்துக்கு ஏற்ப வண்டிகள் இருக்கும். மொத்த வணிகச் சந்தைக்குப் பெரிய வண்டிகள், சிறிய அங்காடிகளுக்கு சேவை செய்ய ‘பஜாஜி’ என அழைக்கும் மூன்று சக்கர வண்டிகள். ஆப்பிரிக்காவில் பெரும்பாலும் மூன்று சக்கர வண்டிகள் ‘பஜாஜ்’ அல்லது ‘டிவிஎஸ்’ ஆக இருக்கும். முதன்முதலில் ஆப்பிரிக்கா வந்த வணிகச் சின்னம் பஜாஜ் என்பதால், இவை பஜாஜி என்று அழைக்கப்படுகின்றன. அதைவிடவும் சிறிய அங்காடிகளுக்கு சேவை செய்ய ‘போடா போடா’ (Boda Boda) என்னும் மோட்டார் சைக்கிள்களும் உண்டு.

இயந்திரத்திலிருந்து கணினிக்கு…

தான்சானியா சட்டப்படி, விற்பனை செய்யப்போகும் ஒவ்வொரு வண்டியிலும் விற்பனை ரசீது தரும் மின்னணு இயந்திரம் இருக்க வேண்டும். இந்த மின்னணு இயந்திரம், தான்சானியா வருவாய் துறையின் கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும்.

நாள் முழுதும் விற்பனை செய்துவிட்டு, இறுதியாக, இந்த விற்பனை இயந்திரத்தில் ‘இஸெட்’ (Z) ரிப்போர்ட் என்னும் ஓர் அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். அப்படித் தயாரித்தவுடன், அந்த விற்பனை இயந்திரம் நாள் முழுதும் செய்த விற்பனையின் மதிப்பு மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய மதிப்புக்கூட்டு வரி – இவை இரண்டையும் பற்றிய தகவல்களைத் தான்சானியா வருவாய் துறையின் கணினிக்கு அனுப்பிவிடும்.

மின்னணு பில் இயந்திரம்

இப்படி ஒவ்வொரு நாளும் எங்கள் நிறுவனத்தில் இயங்கிவரும் 160க்கும் மேற்பட்ட விற்பனை வண்டிகளில் நிகழும் விற்பனை தொடர்பான தகவல்கள் நாள் தவறாமல் தான்சானியா வருவாய் துறைக்குச் சென்றுவிடும். மாதக் கடைசியில், நாங்கள் செலுத்த வேண்டிய விற்பனை வரி எவ்வளவு என்பது அந்த மாதம் முடிந்த அடுத்த விநாடி அரசின் கையில்.

இதைக் கேட்டதும் என் முதல் எதிர்வினை. “இன்னாங்கடா... ரீல் விடறீங்க” என்பதே. ஆனால், அது உண்மைதான் என அறிந்த கணம் ஆடிப்போய்விட்டேன். மகளிர் மட்டும் திரைப்படத்தில், ஒரு பேஷண்ட் அடிக்கடி சொல்லும் டயலாக், “டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் சோ மச்சா” என்பதுதான். நானும் அப்படி வியந்துபோனேன். நன்றாக ஒட்டகம் மேய்த்து மேம்பட வாழ்த்திய நண்பரை நினைத்துக்கொண்டேன்.

ஆர்வம் அதிகமாக, தான்சானியா நாட்டின் வரி நிர்வாகம் தொடர்பாகத் தகவல்களைத் திரட்டினேன். தான்சானியா 1963இல்தான் சுதந்திரம் பெற்றது. ஆனாலும், வரி நிர்வாகத்தில் மேம்பட்ட முறைகளை இந்தியாவுக்கு முன்பே கடைபிடிக்கத் தொடங்கிவிட்டது.

மதிப்புக்கூட்டு எனும் சீர்த்திருத்தம்

மறைமுக வரிகளில், முக்கியமான சீர்திருத்தம் என்பது, மதிப்புக்கூட்டு வரிமுறை என்பதே. உற்பத்தியாகும் கச்சாப்பொருள், உற்பத்தியில் பல தளங்களின் மூலமாக நுகர்வோரை அடைகிறது. எடுத்துக்காட்டாக, எண்ணெய் வித்துக்களில் இருந்தது எண்ணெய், எண்ணெயில் இருந்து உணவகத்தில் உணவு எனப் பல தளங்களைத் தாண்டி வருகையில், ஒவ்வொரு தளத்திலும், எவ்வளவு மதிப்புக் கூட்டப்படுகிறதோ, அந்த மதிப்புக்கு மட்டும்தான் வரி என்பதே இதன் உள்ளார்ந்த அர்த்தம். அடுத்துவரும் பத்தியில், ஒரு சிறிய எடுத்துக்காட்டை எண்கள் வழியே சொல்கிறேன். பெரிய குறளி வித்தை அல்ல. கொஞ்சம் கவனமாகப் படியுங்கள் புரிந்துவிடும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நுகர்பொருளை உற்பத்தி செய்ய, 1 கிலோ கச்சாப்பொருளை ரூபாய் 60க்கு வாங்குகிறோம் என வைத்துக்கொள்வோம். அதன் மீது மதிப்புக்கூட்டு வரி 10% என வைத்துக்கொண்டால், அந்தப் பொருளின் மொத்த விலை 66 ரூபாய்.  நமக்கு விற்பனை செய்தவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய விற்பனை வரி ரூபாய் 6. இப்போது அந்தப் பொருளைப் பயன்படுத்தி ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை 100 ரூபாய்க்கு விற்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதன் மீதும் மதிப்புக்கூட்டு வரி 10% எனில் பொருளின் விலை 110. நாம் உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்கையில் நாம், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 10.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

முதலில் கச்சாப்பொருளை வாங்கும்போது, அதன் மீது ஏற்கெனவே விற்பனை வரி ரூபாய் 6 செலுத்தப்பட்டுவிட்டது. எனவே, அதை நாம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், அந்தக் கச்சாப்பொருளைப் பயன்படுத்தி நாம் உற்பத்தி செய்த பொருளின் மதிப்பு ரூபாய் 100. இதன் மீது 10% வரி எனில், நாம் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 10. ஆனால், ஏற்கெனவே கச்சாப்பொருளின் மீது ரூபாய் 6 வரியாகச் செலுத்தப்பட்டுவிட்டதால், நாம் கட்ட வேண்டிய வரியாகிய ரூபாய் 10லிருந்து, ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்ட 6 ரூபாயைக் கழித்துக்கொண்டு மீதி 4 ரூபாயைக் கட்டினால் போதும்.

மதிப்புக்கூட்டு வரி என்பது கலால் மற்றும் விற்பனை வரிகளில் கொண்டுவரப்பட்ட மிக வெற்றிகரமான சீர்திருத்தம் ஆகும். இந்தியாவில் விற்பனை வரிகளில், மதிப்புக்கூட்டு முறை 2005ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தான்சானியாவில் இந்த முறை 1998ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறிந்த கணம் இந்த நாட்டின் மீதான மரியாதை அதிகரித்தது.

கேலிகளுக்கு உள்ளான வரிமுறை

மதிப்புக்கூட்டு வரிமுறை என்பது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அது பற்றிய புரிதல் குறைவாக இருந்ததால், அதைப் பற்றி ஏகக் கேலிகளும் கிண்டல்களும் பொதுவெளியில் உருவாகின. காமிக்ஸ் கதாநாயகனான ஆஸ்ட்ரிக்ஸின் ஒன்றுவிட்ட பெரியப்பா மகனின் பெயர் ‘வேல்யூ ஆடட் டாக்ஸ்’ (Value added tax).

வேல்யூ ஆடட் டாக்ஸ்

இதில் 1997 – 1998இல் 0.9 பில்லியன் டாலராக இருந்த தான்சானியாவின் வருடாந்திர வரி வசூல், 10 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டாலராக (320% வளர்ச்சி) உயர்ந்தது. இதனால், நிதிநிலை மேம்பட்டு அரசு தன் உள்கட்டமைப்பில் பெரும் முதலீடுகளைச் செய்தது. 1997 - 1998க்கு முந்தைய 10 ஆண்டுகளில், சராசரியாக 3.1% இருந்த பொருளாதார வளர்ச்சி, அடுத்த 10 ஆண்டுகளில் 6%க்கும் அதிகமாக உயர்ந்தது. இந்தப் பொருளாதார வளர்ச்சியில்,  மதிப்புக்கூட்டு வரி விதிப்பு எனும் சீர்திருத்தம் முக்கியப் பங்கு வகித்தது.

இதன் அடுத்தக் கட்ட மேம்பாடாக 2010ஆம் ஆண்டு, நிறுவனங்கள், அரசு வருவாய் துறையுடன் இணைக்கப்பட்ட விற்பனை இயந்திரங்கள் வழியே விற்பனை செய்வதைக் கட்டாயமாக்கியது. இதன் விளைவாக, நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வது குறைந்தது. 2010ஆம் ஆண்டு, பொருளாதார அலகில் 10.2%ஆக இருந்த வரிவசூல் விகிதம், 2017 - 2018ஆம் ஆண்டில் 12.9%ஆக உயர்ந்தது. (இந்தியாவின் வரி வசூல் விகிதம் 11%)

இதில் 80% மக்கள் வேளாண்மையை நம்பியிருக்கும் நாடு தான்சானியா. வேளாண் பொருட்களுக்கு வரிகள் கிடையாது. மிக முக்கியமான ஏற்றுமதி என்பது கனிமப்பொருட்களும் வேளாண் விளைபொருட்களும்தான். ஏற்றுமதிக்கு வரிவிலக்கு உண்டு. தொழில் துறை தான்சானியப் பொருளாதாரத்தில் 9% மட்டுமே. இந்தப் பின்ணணியில், தான்சானியாவின் இந்த வரி நிர்வாக மேம்பாடு என்பது பெரிதும் மெச்சத்தக்கதாகும்.

போலிகள் மீதான நடவடிக்கை

இந்த வரி நிர்வாகத்தில் பெரும் பிரச்சினை என்பது போலி வரி ரசீதுகளாகும். எல்லா நாடுகளிலும் இந்தப் பிரச்சினை உண்டு. அண்மையில், தான்சானியா அரசு, இந்தப் போலி ரசீதுகளின் புழக்கத்தைக் குறைக்க ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

வாட் விற்பனை ரசீதுகளில், தற்போது க்யூஆர் கோட் (QR Code) என்னும் தனித்துவமான கோட்களை அச்சிடும் வழக்கத்தை உருவாக்கியுள்ளது. அதாவது நிறுவனங்கள் அச்சிடும் ஒவ்வொரு விற்பனை ரசீதுக்கும் ஒவ்வொரு தனித்துவமான கோட் இருக்கும். அப்படி அச்சிட்ட அந்த விற்பனை ரசீதுகளின் க்யூஆர் கோட் விவரங்கள், ஒவ்வொரு நாள் மாலையில், ஒவ்வொரு விற்பனை இயந்திரத்தில் இருந்து செல்லும் விவரங்கள் வழியே தான்சானியா வருவாய் துறையின் கணினிக்குச் சென்றுவிடும். 

எடுத்துக்காட்டாக, என் நிறுவனம் மாதத்தில் நூறு கொள்முதல்களைச் செய்திருக்கிறது எனறால், அந்த நூறு கொள்முதல் ரசீதுகளும், தனித்துவமான க்யூஆர் கோட்களுடன், தான்சானிய வருவாய் துறையின் கணினியில் இருக்கும். அந்த ரசீது எங்களிடம் வருகையில், அதை எங்களிடம் உள்ள ஒரு மென்பொருள் வழியே தான்சானியா வருவாய் துறை கணினியுடன் தொடர்புகொண்டு ‘இது உண்மையான வாட் வரி ரசீதுதானா?’ எனச் சோதித்துக்கொள்ள முடியும். இதனால் போலி வாட் ரசீதுகள் முழுவதுமாகத் தவிர்க்கப்படுகின்றன. முழுக்க முழுக்க வரிகள் கட்டி வணிகம் செய்யும் எங்கள் நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு, இது மிகவும் சாதகமான விஷயம்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில், இந்த வரி நிர்வாக முறை, தான்சானியாவில் மட்டுமே இவ்வளவு திறமையாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் வரி நிர்வாக அமைப்பும் இவ்வளவு நவீனமாக இல்லை என்பதும் சோகமான உண்மை. ஆனால், நிதி நிர்வாகத்தில் இவ்வளவு நவீனமாக இருக்கும் தான்சானியாவில் கல்வி, மருத்துவம், தொழில் துறைகள் இந்தியாவோடு ஒப்பிடுகையில் சுமார்தான். அதையும் விவாதிப்போம். 

(தொடரும்…)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தான்சானியாவின் வணிக அமைப்பு
தான்சானியாவில் என் முதல் மாதம்
ஆப்பிரிக்க டயரி குறிப்புகள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   1 year ago

இந்தியாவில் ஒருங்கிணைந்த (எக்ஸைஸ் மற்றும் விற்பனை வரி) ஜிஎஸ்டி வரி முறை அமல் வருவதற்கு முன்னால் எக்ஸர்சைஸ் வரி ஒன்றிய அரசாலும் விற்பனை வரி மாநில அரசாலும் நிர்வகிக்கப்பட்டது. மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை வரி பின்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்டாலும் எக்சைஸ் வரி விதிப்பில் மதிப்பு கூட்டப்பட்ட value added tax Rajiv ராஜீவ் காந்தி அமைச்சரவையில் விபிசிங் அவர்கள் வணிகத்துறை அமைச்சராக இருந்த பொழுதே அதாவது 1987 வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. என்னுடைய தொழிற்சாலை அதன்படி தான் வரிவிதிப்புக்குட்பட்டது .

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

தேசிய ஒட்டக ஆய்வு மையம்கர்ப்பப்பை வாய் புற்றுநோய்எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கட்டுரைஇளம் தாய்மார்கள்இந்து தமிழ் சமஸ்உலக அமைதிக்கான நோபல் பரிசு – 2022மாநிலக் கொடிஅஸ்ஸாம் கலவரம்லட்சியவாதிபிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிஜெய்சால்மர்பீமா கோரேகான் வழக்குமோடியின் சரிவுஎண்ணுப்பெயர்கள்மேகநாத் சாஹாமொழிபெயர்ப்புக் கலைபுத்தாண்டில் எப்படி இருக்கும் பொருளாதாரம்?மாநில நிதிநிலை அறிக்கைg.kuppusamyசிக்கிம் அரசுதெற்காசிய வம்சாவளிகே.சந்துரு கட்டுரைகள்நெல் கொள்முதல்மனநலம்கல்வியாளர்காங்கிரஸின் வீழ்ச்சிஇந்திரஜித் ராய் கட்டுரைபொதுப் பாஷையின் அவசியம்அஜீத் தோவல்காங்கிரஸ் தோல்வி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!